Jul 15, 2011

பெண்ணியம் – ஓர் உரையாடலுக்கான தொடக்கம். தொடர்ச்சி


பெண்களுக்கெதிரான  வன்முறைகள் சில  புள்ளி விவரங்கள்:**


32000 கொலைகள், 19000 வல்லுறவுகள், 7500 வரதட்சனை மரணங்கள், 36500 பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை பெண்களுக்கெதிரான குற்றங்களாக 2006இல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறைய குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் விடப்படுகிறது. இது இந்தியக் குற்றவியல் ஆவண நடுவர் மன்றம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

வன்புணர்ச்சிக்  குற்றம் இந்திய அளவில் அதிகரித்துவரும்  குற்றமாக இருப்பதாக தெரிவிக்கின்றது அம்மன்றம். ஒரு மணி நேரத்தில் 18 பெண்கள் ஆண்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறது. பத்திரிகைகளில் வன்புணர்ச்சி பற்றியும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனலாம். கூட்டமாக ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்வது முதல், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் கூட்டமாக சேர்ந்து அடித்தது வரை பெண்கள் மேல் ஆண்கள், ஆணாதிக்கம் கொண்டுள்ள வக்ரமான வளர்ச்சியைக் காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளாக வரும் பெண்கள் மீது கூட இத்தகைய வன்முறைகள் ஏவப்படுகிறது. இவற்றோடு காதலிக்க மறுக்கும் பெண் மீது அமிலத்தை ஊற்றுவது, கடத்திக் கொலை செய்வது, அப்பெண்ணின் பெற்றோரை அச்சுறுத்துவது என்று நாம் நாள்தோறும் செய்திகளைக் காணமுடிகிறது. நந்திக்ராம், கவுஹாத்தி போன்ற ஊர்களில் பெண்களை நிர்வாணப்படுத்தி, ஆண்கள் அடித்து உதைத்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. மாற்று சாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்ததற்காக, ஊரே சேர்ந்து அப்பெண்ணை வன்புணர்ச்சி  செய்ய தீர்ப்பு அளிப்பதிலிருந்து, கௌரவக் கொலைகள், இணையக் குற்றங்கள் [சைபர் க்ரைம்] என எல்லாம் பெண்களின் மீது ஆணாதிக்க சமூக அமைப்பால் ஆண்களால் ஏவப்பட்ட வன்முறையே.

ஆண்களால்  நிலவும் இத்தகையப் பாதுகாப்பற்ற சூழலே பெண்களை குடும்ப  உறவில் தள்ளுகிறது. அதை எப்பாடுபட்டாவது  காத்துக்கொள்ள வேண்டும் என்று அதனுள் நடக்கும் வன்முறைகளை சகித்துக் கொள்ளச் செய்கிறது. ஆண்களால் சீரழிவதை விட ஆணால் சீரழிவது மேல் என்ற எண்ணத்திலேயே இது புகுத்தப்படுகிறது. இவ்வச்சமே பெண் சிசுக் கொலை வரை நீள்கிறது. 2008இல் பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை 19,5,856 ஆக இருக்கிறது. இது 2006 ஐ விட கூடியிருப்பதை நாம் காண முடிகிறது.****

இந்தியாவில் பாலியல் தொழிலானது ஆண்டுக்கு 400000 மில்லியன் வரையிலான வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருக்கிறது. இதில் 30% தொழிலாளிகளின் குழந்தைகள். அவர்கள் ஈட்டுவது 110000 மில்லியன்கள். சுமார் 3 மில்லியன் குழந்தைகளில் 1 மில்லியன் 18 வயதுக்கு குறைவானவர்கள்.  15 சதவிகிதத்தினர் மும்பை, கல்கத்தா, டெல்லி, சென்னை, பங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களிலிருந்து வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்களைக் கடத்தும் குற்றமாக 1998இல் மட்டும் சுமார் 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய வருடத்தை விட இது 5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. 

ஐ.நா பொதுக்கூட்டம் நவம்பர் 25 ஆம் நாளை மகளிருக்கெதிரான வன்முறைகளைக் களையும் உலக தினமாக 54/134 டிசம்பர் 17,1999 தீர்மானத்தின் மூலமாக அறிவித்திருக்கிறது. இதன் பின்ணனியில் இருக்கும் வரலாறு, மிரபால் சகோதரிகள் 1960களில், டொமினிக்கன் அரசர் ரஃபேல் ட்ருஜிலோவின் ஆணையின் பெயரில், சில அரசியல் செயற்பாட்டாளர்களால் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். 1981 முதல் பெண்ணியலாளர்கள் 25 நவம்பரை பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகளுக்கெதிரான தினமாக அறிவிக்கக்கோரினர்.  20 டிசம்பர், 1993 ஐ.நா அதை ஏற்றது.

யுனிசெஃபின் உலக குழந்தைகளின் நிலை – 2009” இன் அறிக்கைப்படி 20-24 வயதில் உள்ள 47 சதவிகித பெண்கள் 18 வயதிற்கு முன்னறே திருமணம் செய்துக்கொண்டவர்கள். 40 சதவிகித குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடப்பதாக அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது. 1994இல் ஹையிஸ் என்பவரால் செய்யப்பட்ட ஆய்வில் ஐந்து நிமிடத்திற்கொருமுறை பெண்களுக்கெதிரான குற்றங்கள் நேர்வதாக பதிவாகியிருக்கிறது. 


உலகளவில்  பெண்கள் நிலைப் பற்றிய சிலத்  தகவல்கள் 1

    * வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் தொகையான 1.2 பில்லியனில், 70 சதவிகிதம் பெண்கள்.
    * உலக உழைப்பின் அளவில் 67 சதவிகிதத்திற்குமான உழைப்பு பெண்களுடையது, ஆனால் 10 சதவிகிதம் மட்டுமே அவர்களின் வருவாய் அதோடு 1 சதவிகிதம் மட்டுமே அவர்களின் சொத்து.
    * கூலிப் பெறாத உழைப்பின் மதிப்பீடான 16 பில்லியன் டாலரின் 11 பில்லியன் டாலர் பெண்களின் காணாப் பங்களிப்பிற்கானது.
    * 30 முதல் 40 சதவிகிதம் வரை பெண்களின் கூலி ஆண்களைவிடக் குறைவானது.
    * 60 முதல் 80 சதவிகித உணவு, முன்னேறும் நாடுகளில் பெண்கள் உற்பத்தி செய்வது.
    * 10 முதல் 20 சதவிகிதமே மேலாண்மைப் பணிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை
    * 5 சதவிகிதம் மட்டுமே அரசுத் தலைமைப் பதவியில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை.


பெண்களும் கல்வியும்

    * 130 மில்லியன் கொண்ட  6 முதல் 11 60 சதவிகித பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளில்  60 சதவிகிதம் பெண் குழந்தைகள் ஆவர்.
    * தோராயமாக கல்வியறிவில்லாத 875 மில்லியன் இளைஞர்களில் 67 சதவிகிதம் பெண்கள், அதில் தெற்காசியாவில் 5 இல் 3 பெண்களும், ஆப்ரிக்க, அரேப்ய நாடுகளில் 50 சதவிகித பெண்களும் கல்வியறிவற்றவர்கள்.

இந்தியாவில் பெண்கள் நிலை:

    * விவசாயமற்ற  கூலித் தொழிலில் பெண்களுக்கான பங்கு வெறும் 17 சதவிகிதமே.
    * பணியாட்கள் எண்ணிக்கையில் நகரங்களில் பெண்களின் பங்கு 13.9 சதவிகிதம், கிராமங்களில் 29.9 சதவிகிதம்.
    * பெண்களின் கூலி ஆண்களின் கூலியில் 25 சதவிகிதம் குறைவாக உள்ளது, அது 25 சதவிகித குடும்ப வருமானத்திற்கு பங்களிக்கிறது.
    * இந்தியாவில் விவசாயக் கூலியில் எங்கும் சரிசமக் கூலி பெண்களுக்குக் கிடைப்பதில்லை.
    * நீதிமன்றப் பணிகளில் 4 சதவிகிதமும், மேலாண்மைப் பணியில் 3 சதவிகிதமும் மட்டுமேப் பெண்கள்.
    * 245 மில்லியன் பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.

பெண்களும் ஆரோக்கியமும்:

    * பெண்கள் உட்கொள்ளும் காலரிகள் 1440 மட்டுமே, அவர்களுக்குத் தேவை 2200 காலரிகள்.
    * சென்சஸ் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் பெண்கள் பிரசவக் காலத்தில் இறக்கின்றனர்.

 2011 ஆம்  ஆண்டு சென்சஸும் வெளிவந்துவிட்டது, குழந்தைப் பாலின விகுதியில் (0-6 yrs) ஆயிரம் ஆண்குழந்தைகளுக்கு 914 பெண்குழந்தைகளே இருக்கின்றனர், இது 2001இல் 927 என்ற விகிதத்தைவிட குறைவு. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 830,846 என்று இருக்கிறது. பெண் சிசுக் கொலைகள் இதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வியறிவு விகிதமும் ஆண்களைவிட பெண்களில் குறைவாகவே முன்னேற்றம் கண்டிருக்கிறது. 


எப்படி ஒருவர் தன் நிழலைத் தாண்டவியலாதோ, அதேபபோல் நாம் வரலாற்றைத் தாண்டிச்செல்லவியலாது, அதே வேளையில் அவ்வளர்ச்சியை திருகிவிடவோ அல்லது முடக்கவோ செய்யவியலும் என்கிறார் ஷோசலிசப் புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். மேலும் அவர் சொல்வது, மனிதர்கள் (ஆண்) அவர்கள் வரலாற்றை அவர்களே படைக்கின்றனர். ஆதலால் வரலாற்றின் முன் உழைப்பாளிகளுக்கும், (பெண்ணும் அடங்கிய), உழைப்பளிகளின் கட்சிக்கும் அவர்களின் சொந்த விதியை நிணைவூட்டவும், இயந்திர வளர்ச்சியின் ஆதாரமற்ற வெற்றியை நம்பிக்கையுடன் வலியுறுத்தும் போக்கையும், அதன் விளைவான சோம்பலும், மனநிறைவையும் எதிர்த்தல் அவசியமாகிறது என்கிறார்.  

வரலாற்றில்  சமூக அமைப்பானது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது தடுக்கவியலாதது. அம்மாறுதலின் போது அதிகாரம் கைமாறுவது, உரிமைகள் பறிக்கப்படுவதும் நடந்தேறுகிறது. பெண்களின் சமூக வரலாற்றைப் பொறுத்தவரை குலக்குறிச் சமூகத்திலிருந்து தனிச்சொத்தை மையமாகக் கொண்டு எழுந்த சமுதாய அமைப்பு, அவளை இரண்டாந்தர நிலையிலேயே வைத்திருக்கிறது. இனவிருத்திக்கும், குடும்ப மேலாண்மைக்குமான பிறப்பாய் மட்டுமானவள் பெண் என்ற நிலையைத் திணித்தது ஆண் தலைமையிலான தந்தைவழிப் பொருளாதார சமூக அமைப்பே. 

பண்டையப்  பலதார மணமுறையில் பிள்ளைகளின்  மேல் பெற்றவனுக்குப் பெரிய  உரிமைகள் இருந்திருக்கவில்லை என்று தொல்பழங்கால ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு ஆண் ஈட்டும் பொருளை, பெண் மற்ற ஆணுக்குப் பிறந்த வாரிசுகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பதிலிருந்து, தன் சொத்து தனக்கான இரத்த உறவுக்கு மட்டுமே செல்லவேண்டும் என்ற நோக்கோடும், அக்காலக் கட்டத்தில் நிலவிய தொழிற்முறைப் போட்டிக்கேற்பவும், பொருளாதார வாய்ப்புகள், அரசியல் அதிகாரம், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகிய சூழலுக்கேற்பவும் ஒருதார மணமுறைக்கு மாற்றம் ஏற்பட்டது எனும் தகவல்களை அவ்வாயுகள் மூலம் கண்டுக்கொள்ளலாம்.  இது பொருட்படுத்தக்கூடிய ஏற்பாடு என்பதில் ஐயமில்லை, ஆனால் இருவர் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு முறையில் ஒருவருக்கு மட்டும் விதிகளாக ஒடுக்குமுறை, பொருளாதார அச்சுறுத்தல் (வரதட்சனை), உடல் வதை வன்முறைகள் நிலவக் காரணமாய் இருப்பது களையப்படவேண்டும். உறவுகள் அன்பினால் தீர்மானிக்கப்படவேண்டுமே அன்றி சமுதாயம் கட்டமைக்கும் நலம் பயக்கும் அமைப்பு என்றோ கடமை உணர்சிகளினாலோ  அல்ல.

நிலங்களின்  மீது தனிமனித அதிகாரம், அதற்கேற்ற  ஆட்சிமுறை, அதிகாரப் பகிர்வுகள்  என சமூகம் மாறுதல் பெற்றது. பொதுவாக உழைத்துப் பொதுவாகப் பகிர்ந்து உண்ட நிலைமை மாறி, ஒருவர் உழைக்க மற்றவர் அவ்வுழைப்பின் பலனை அனுபவித்தல் என்ற ஏற்றத்தாழ்வுக் கூடிய சுரண்டல் நிலைத் தோன்றியது. இத்தனிச் சொத்து முறையானது ஆண்களுக்கு கவுரவத்தைப் பெற்றுக் கொடுத்தாலும், நாட்டின் பொருளாதார நிலவரத்திற்கேற்ப தலைமகனுக்கு கடும் நெருக்கடிகளைத் தருகிறது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்ளுதல் உதவும். பெண்களும் பொருளீட்டுவதன் மூலம் அந்நெருக்கடிகளை பகிர்ந்துக் கொள்கின்றனர். ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்கள் பொருள் ஈட்டுவது இரண்டாம்தர விமர்சனங்களுக்குள்ளாகிறது.

தொடர்கிறது...........

No comments:

Post a Comment