Jul 15, 2011

பெண்ணியம் – ஓர் உரையாடலுக்கான தொடக்கம். தொடர்ச்சி


ஆணாதிக்க  சிந்தனைகளால் பணிக்குச் பெண் எதிர்கொள்ளும் மனநிலைகள்:


1. பெண்களினால் ஆண்களுக்கு வேலை வாய்ப்புக் குறைகிறது.


2. பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் குறித்தான அச்சம் அல்லது பெண்கள் கைக்கொள்ளும் பாலின அடையாள முன்னிறுத்தல், அதை வைத்துப் பெறும் சலுகைகள். 

முதலில் எல்லா சமூக நிலைகளிலும்  பெண்ணுக்கு சம உரிமை அவளது பிறப்புரிமை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டியுள்ளது. வேலை வாய்ப்பு குறைவது பெண்களால் என்பது மூடத்தனமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க பொருளாதார அணுகுமுறையின் இயந்திரமயமாக்கல் அதற்கு முக்கியக் காரணமாய் உள்ளது.  தொழில்மயமாக்கலின் தொடக்கக் காலங்களில், கடும் எடை கூடியவை, ஆபத்து நிறைந்தவை என்று சொல்லி பெண்களை தொழிற்சாலைப் பணிகளிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். இது போன்ற காரணங்களால், பெண்கள் தொழில் நிறுவனங்களில் பங்கு பெறாமல் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பின்னர் அவை நவீன இயந்திரமாக்கலின் போது எளிய தானியங்கி (automation)  யுக்திக்கு மாற்றம் பெற்று, எவரும் கையாளக்கூடிய திறனுக்கு மாறுதல் பெறுகிறது. விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம் பெண்கள் கல்வி கற்றனர், அவர்களுக்கான உரிமைகளை கோருகின்றனர். வேலையற்ற தன்மை (‘unemployment’)  என்பது அரசு தீவிரமாக ஆய்ந்து தீர்வுக் கான வேண்டிய ஒன்று, இதில் பெண்களைப் பழிப்பது ஆணாதிக்க மனநிலை. 

ஆணாதிக்க  மனநிலை பொருளாதார அதிகாரம் பெற்றிருக்கும் ஆண்களின் உளவியலை அறிந்து, பெண்களை பாலினக் கவர்ச்சிக்காக முன்நிறுத்துவதற்காக பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கிறது எனவும் சொல்லலாம். அதோடு, ஆணாதிக்க தலைமை பெண்களை தங்கள் பாலியல் இச்சைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறது, கொடுக்கும் காசுக்கு அதிக லாபம் எதிர்பார்க்கும் ஆணாதிக்க, முதலாளித்துவ மனோபாவம்.

பெண்களை ஒடுக்குவதற்காக ஆணாதிக்கம் அவள் உடலின் மேல் ஏற்றிவைத்த சிந்தனைகளே, பெண்களுக்கு நாள்தோறும் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்குக் காரணமாய் இருக்கிறது. ஒருபுறம் அவள் உடலின் மேல் புனிதங்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றிவைத்துவிட்டு, மறுபுறம் இலக்கியம், திரைப்படங்கள், மற்ற ஊடகங்கள் அவளது பாலியல் உறுப்புக்களை சந்தைப்படுத்தி காம உணர்ச்சிகளை விநியோகம் செய்கிறது. (சங்க இலக்கியம் முதல் இதே நிலைதான்). இது மேலும் மேலும் பெண் ஆணுக்கான ஒரு பாலியல் பயன்பாட்டு பண்டமே என்று அறிவுறுத்துகிறது. பெண் உறுப்புகளைக் கண்டு உணர்ச்சி எழாத ஒருவன் ஆண்மையற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, ஆதாரமற்ற உடலின்ப அச்சுறுத்தல்களையும் கற்பிக்கிறது. உடலின்பத்திற்கு சரியான வடிகாலற்ற சூழலில் காம வறட்சியோடு திகழும் ஆண்மகன் கவர்ச்சிக் காட்சிகளால் தூண்டப்பெற்று, காணும் பெண் உடலின் மீது வன்முறையை உபயோகித்தேனும் தன் வேட்கையைத் தீர்த்துக்கொள்கிறான். பணியிடங்களில் இவ்வுளவியல் அங்கிகாரம், பொருளாதார உயர்வு என்ற காரணங்களோடு செயல்படுத்தப்படுகிறது. ஆணின் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆண்மைப் பற்றிய சிந்தனைகளும், ஆணின் உள பலவீனமும் பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறது, பின்பு அவளை குற்றம் சாட்டுகிறது. மேலும் கற்பனாவாத கட்டுப்பாடுகள் அவற்றை மீறுவதில் நிலவும் சுவாரசியத்தை ஒழுக்க மீறலுக்கான வெற்றியாகவும், புரட்சிகர சிந்தனையாகவும் தவறாக புரிந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. 

பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிற்காக பாலியல் சுதந்திரத்தை பெண் சுதந்திரம், நாகரீக வளர்ச்சி என்று திரிப்பதும் ஆணாதிக்கமே. இவற்றை உணரத் தவறும் பெண்கள் இரையாகுகிறார்கள். பெண்கள் கவர்ச்சிக் காட்டி ஆண்களைப் பயன் படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பொருளற்றது. மனிதரை மனிதர் ஏய்ப்பதும், பயன்படுத்திக்கொள்வதும், சுரண்டுவதும் காலம் காலமாய் நடந்துவருகிறது. உயர் பதவியில் இருப்பவரைப் புகழ்ந்து பேசி ஆண்கள் ஆண்களைப் பயன்படுதிக்கொள்வதில்லையா? வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கி சொத்துக்களை அபகரித்துக் கொள்வது, களவாடுவது போன்ற செயல்களை அதிகமாக செய்வது எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்கள்தானே அதிகம். 

ஆணுக்குப் பெண் துணையாய்க் கிடைப்பதிலும் தடையாய் செயல்படுவது பொருளாதாரம், பணமற்றவனை எப்படி ஆணாதிக்க சமுதாயம் மதிக்க மறுக்கிறதோ, அதே போல் பெண்களும் மறுக்கின்றனர். பணம், பாதுகாப்பான வாழ்க்கை இவற்றைப் பெண் மட்டும் கோருவதில்லை, மனித சமூகமே அதைத் தான் கோருகிறது. மனித மதிப்பிற்கான சமூக அளவுகோல் மாறாதவரை இச்சிந்தனைகள் மாறுவது கடினம்.  

பெண்கள் கவர்ச்சி உடை அணிவது, குடிப்பது, புகைப் பிடிப்பது, கட்டற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதென்பது ஊடகம் கற்பிக்கும் நாகரீக வளர்ச்சி, நவீனமயமாக்கல், உலகமயமாக்கல் இவற்றின் விளைவுகளே தவிர அவைகளே பெண்களின் முழுவிருப்பல்ல. ஆண் உட்கார்ந்து மலங்கழிக்கும் கக்கூஸ்கள் முதற்கொண்டு, பல் துலக்கும் பசையிலிருந்து, அவன் ஓட்டும் வாகனத்தில் தொடங்கி, அக்குளில் அடிக்கும் வாசனைத் திரவியம் முதற்கொண்டு விற்பதற்கு பெண்களின் திறந்த மார்புகளே ஊடகத்திற்கும் முதலாளிகளுக்கும் தேவைப்படுகிறது. இதற்கும் பெண் விடுதலைப் போராட்டத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. பி.பி.ஓ நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைப் பெருகிய பின், நாகரீகத் திணிப்பு தவறான சுதந்திரக் கருத்துக்களை முன்வைத்து பெண்களை வழிநடத்துகிறது. பூர்ஷ்வா பெண்கள் இச்செயல்பாடுகளுக்கு பெண் விடுதலைச் சாயம் பூசுகின்றனர். இவ்விஷயங்களில் பெண்ணிய விமர்சனமாய்  எழுவது ஒன்றே ஒன்றுதான், பெண்கள் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று வரையறுத்தது ஆண்கள், இன்றும் அந்நிலையேத் தொடர்கிறது. அது எவ்வாறு அந்நிலைக்குச் சென்றது? பாலின அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட வேறுபாடுகளை கண்டறிவது, களைவது ஆகியவையே பெண் விடுதலைக்கான அடிநாதங்களாய் முன் வைக்கலாம்.


உழைப்பு, கூலி பற்றிய சிறு உரையாடல் மூலமும் ஆணாதிக்க பொருளாதார இயக்கவியல் மூலம் சமூக கட்டமைப்பை உரையாடலுக்குட்படுத்தலாம்.  முதலில் ஒரு சிலர் முதலாளிகளாகவும், சொத்துப்படைத்தோராகவும் எவ்வாறு முன்னிலையில் இருக்கின்றனர்? எல்லா வளங்களும் பூமியிலிருந்தே எடுக்கப்படுகிறது, அவற்றைக் கொண்டு மனிதப் பயன்பாட்டிற்கான மற்றத் துணைப் பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. மற்றொரு புறம் மனித உயிரின் பராமரிப்பிற்கான சேவைகள் என மருத்துவம், இன்னபிற சேவைகள் செயல்படுகிறது.  

பொதுவுடமை பொருளாதார சூழல் நிலவிய தொல்பழங்குடிக் காலத்திற்குப்  பின் இப்படி பூமியிலிருந்து எடுக்கப்படும் பொருள்களின்  உரிமை, அவற்றை எடுக்கும்  உரிமை சிலரிடம் மட்டுமே இருக்கிறது [இதைப் பற்றி விரிவாக பேச வேண்டும்]. அவ்வளங்களை எடுத்துக் கொடுக்கும் பணிக்கு மனித உழைப்பு செலுத்தப்படுகிறது அதற்கு கூலி வழங்கப்படுகிறது. ஒருவர் கொடுக்கும் நிலையிலும், மற்றவர் பெறும் நிலையிலும் இருப்பதற்கான காரணங்கள் எவை?  இக்கேள்விகளை அதன் முளையிலேயே எழுப்பவியலா வண்ணம் அடிமைமுறையை தற்காத்துக்கொள்ளவே பாவம், புண்ணியம் எனும் மதக் கருத்தாக்கங்கள் இதனோடு தொடர்புப்படுத்திப் புனையப்பட்டது.

நம் நிலத்தில் நமக்குத் தேவையான  அளவு உழைத்துப் பொருளீட்டி  மனநிறைவோடு வாழ்வதென்பது நமக்காக நாம் உழைப்பதென்றாகிறது. அவ்வாறில்லாமல் எவர் பிடியிலோ இருக்கும் நிலங்களில், தொழிற்சாலைகளில் [தொழிற் சாலைகள் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பது பெரிய விளக்கங்களுக்குரியது [அந்நியமாதல்], பொதுவளங்களை ஒரு சிலர் சுரண்டிவிட்டு, அதை வளப்படுத்துவதற்கான மனித உழைப்பைக் கைக்கொள்ள, வேலை வாய்ப்புப் பெருக்கம் என்பதெல்லாம் விவாதிக்கப் படவேண்டியவை.] ஒரு சிலர் உழைத்துப் பொருளீட்டித் தருதல் என்பது மற்றவர் வளம்பெற நாம் நம் உழைப்பைச் செலுத்துதல் என்பதாகிறது.  கொள்ளை லாபம் போக, மனித உழைப்புச் சக்தியை தக்கவைத்துக் கொள்ள முதலாளித்துவமானது கூலிகளைக் கிள்ளித் தருகிறது.  தொடக்கத்தில் ஆண்கள் உழைப்புச் சக்திகளாகப் பயன்பட்டனர், அவர்களைப் பராமரிக்கவும், சந்ததியை வளர்த்து தனிச் சொத்துப் பேணவும் பெண்கள் வீட்டில் வைக்கப்பட்டனர். 

மனிதர்கள் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்பது நன்மையே. ஆனால்  பெண்களுக்கு மட்டுமே அப்பணி என்று விதிக்கப்படுவதே, ஒடுக்குமுறையாகக் காலப்போக்கில் மாறிவிடுகிறது.  இவ்வொடுக்கு முறைகளுக்கேற்ற கருத்தாக்கங்கள் பற்றுத் தன்மையை, சார்பு நிலைகளை, பிரிவினைவாத சிந்தனைகளை, அதோடு சேர்ந்து பொருளாதார, போட்டி, பொறாமைகளை விதைத்து மனித உறவுகளில் சிதைவுகளை ஏற்படுத்துகிறது. எல்லோரும் சமம் எனும் கம்யூனிச வாழ்க்கை முறையை, அதை அடைவதற்கான வழிமுறைகளை முன் வைத்தவர் ஆசான் காரல் மார்க்ஸ். இதற்காக அவர் கடும் உழைப்பை செலுத்தியிருக்கிறார். வறுமையில் உழன்று குடும்பத்திற்கென பெரிதாய் ஏதும் செய்யவியலாமல் மடிந்தார். அவரது மனைவி ஜென்னி வசதியான வாழ்க்கையப் புறந்தள்ளி குழந்தைகளை பட்டினிக்குப் பறிகொடுத்து, வறுமையிலேயே அவரும் இறந்து போனார். [இது காதலால் அவர் செய்த தியாகம். கற்பு, கடமை, பத்தினித் தன்மை ஆகிய அச்சுறுத்துல்களை ஏவி மனைவிகளை சோதித்த ரிஷிகளின் கதையாடல்கள் அவ்வுறவில் தாக்கம் செய்திருக்கவில்லை].

காரல் மார்க்ஸும், அவரைப் பின்பற்றி  மனித விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திச் சென்ற எண்ணற்ற  அவரது தோழர்களும் (பெண்கள் உட்பட) குடும்பத்தை பின்னுக்குத்தள்ளி, மனித குல மேம்பாட்டை முதன்மையாகக் கருதியதன் பயன்களை இன்றைய குடும்ப உறவுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. [8 மணி நேர வேலை மட்டுமே என்பதுக் கூட இதன் விளைவே] அவருக்கு உறுதுணையாக எங்கல்ஸ் செயல்பட்டதோடு, அவரும் மார்க்சியம் எனும் சமுகவிஞ்ஞானக் கருவியுடன் பல ஆய்வுகளை மேற்கொண்டார். குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் அவரது புத்தகம் அதில் முக்கியமான ஒன்று.  

சர்வதேசிய அளவில் ரோஸலிண்ட் மைல்ஸ், கிளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வார் உள்ளிட்ட பெண்ணியலாளர்களும், இந்திய அளவில் சாவித்திரி பாய் பூலே முதல் தற்போதைய பன்வாரி தேவி வரை,  தமிழகத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட சுயமரியாதை வீராங்கனைகள் ஆற்றியப் பணிகளும், அவர்களது எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போது இஸ்லாத்தில் உள்ள பெண்களுக்கான சமத்துவமின்மையை எதிர்த்து ஆஸ்ரா நொமானி எனும் இந்தோ-அமெரிக்கப் பெண்மணி எடுத்துரைக்கும் கருத்துக்களும், போராட்டங்களும்  சமீப காலங்களில் கவனம் பெற்றுவருகிறது.  (இது போன்ற கருத்தை வலியுறுத்தியதற்காக தஸ்லிமா நஸ்ரின் எத்தகைய எதிர்ப்புக்களை சந்தித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே)

பெண்களுக்கு கல்வி, ஓட்டுரிமை, சமமான கூலி, கருக்கலைப்பு உரிமை, விவாகரத்து உரிமை, தொழுகை உரிமை என எல்லாவற்றையும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே நமது முன்னோடிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 


சொலவடைகள், பழமொழிகள் என எல்லாவற்றிலும் பெண் பேச்சைக் கேட்கும் ஆண்  பின்னடைவான் என்று அச்சுறுத்தி வைத்திருக்கிறது ஆணாதிக்க முறைமை. பெண் பேச்சைக் கேட்டு நடக்கும் ஆண் மகனை ஆண்மையற்றவன், பெண்டாட்டி தாசன், அதீத காமநாட்டம் கொண்டவன் என்று ஆண்களை இழிவு படுத்துகிறது. பெண்டுகன், பெட்டை, பேடி, பேடு என்ற சொல்லாடல்கள் ஆணை மிகவும் கோபமுறச் செய்வதாக இருக்கிறது. இங்கு பெண்மைத்தன்மை என்பது ஒரு இழிவான தகுதியாக கருதப்படுகிறது,  இதனால் ஆண் அவனுக்கான, மற்றும் அவன் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிற ஆண் மையத்தின் சமூகத் தகுதியை இழந்து விடக்கூடியவனாக இருக்கிறான். இம்மனநிலை சக ஆண்களையே விலக்கும் பட்சத்தில், மூன்றாம் பாலினரை மிகக் குரூரமான பார்வையோடு அணுகி, அவர்களை மனிதர்களாக பார்க்க மறுத்து இழிபிறவிகளாக ஆண்களைப் பார்க்கவைக்கிறது. அதோடு ஆண்களால் கட்டியமைக்கப்பட்ட பெண்களின் உலகத்தில் மூன்றாம் பாலினர் பரிதாபத்திற்குரியவர்களாகவும், கடவுள்கொள்கை உடையவர்களால் கழுவ முடியா பாவம் செய்தவர்களாகவும் உற்று நோக்கப்படுகின்றனர். இம் மூன்றாம் பாலினத்தினரிடமும் ஆண்மையவாதிகள் தங்களது பாலுணர்வைத் தீர்க்கும் அடிமைகளாய் மட்டுமே அவர்களை காணுகின்றனர். அந்த வகையிலும் தங்கள் ஆண்மையை நிருபித்துக் கொள்கின்றனர்.

பேடி இலக்கணமாய் திவாகர நிகண்டு அவர்களது உடல் அசைவுகள் முதற்கொண்டு அவர்கள் நினைப்பது, அவர்களின் நோக்கம் அனைத்தையும் மிகக் கீழ்த்தரமான ஒன்றாக அவர்கள் ஆணிகளிடம் மிகுந்த இச்சை மிக்கவர்கள்,அதோடு அறுவெறுக்கத் தக்க குணங்களே அவர்களது ஆதார குணம் என்ற அளவிலேயே இலக்கணம் வகுக்கிறது. (இப்படிப்பட்ட இலக்கணங்களை பெண்கள் வகுப்பார்களா என்பது ஐயமே). 

தொடர்கிறது............

No comments:

Post a Comment