என் கருத்துதான் உன் கருத்தாக இருக்க வேண்டும் என்ற மன நிலையே பெரும்பாலும் கமென்ட் போடுபவர்களிடம் தெரிகிறது. எழுதப்பட்ட பொருளின் மையக் கருவிலிருந்து, அக்கருவின் தீவிர தன்மையிலிருந்து விலகி தன்னை நிரூபிக்கும் ஆர்வமே கருத்துரைகளாக வடிவது போல் தோன்றுகிறது. முகப் புத்தகம் இல்லாத காலத்தில் இவர்கள் எத்தகைய விமர்சன வழிகளை கையாண்டிருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
துவக்க கட்ட எழுத்தாளருக்கு முகவரியாக இணையத்தளம் இருக்கிறது, இணையத்தில் எழுதுவதும் வாசகர்களின் கருத்துக்களை உடனே அறிவதும், கருத்துக்களை உடனே இடுவதற்கும் கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு இது. குறிப்பாக சமுதாயப் பிரச்சனைகளை எழுதுவோருக்கும், அதிகாரத்திற்கு எதிராக எழுதப்படும் எழுத்துக்களுக்கும் கத்திரி இல்லாது வெளியிடும் எழுத்துக் சுதந்திரமும் இணையம் நமக்குத் தருகிறது. அரசியல் சார்ந்து இயங்க முடியாதோருக்கு, களப்பணியில் பங்கு பெற முடியாதவர்களுக்கு தங்கள் சமூக அக்கறையை பதிவு செய்ய இணையம் வழி வகுக்கிறது. மேலும் இருந்த இடத்தில் இருந்தபடியே அநீதிகளுக்கு எதிராக போராடுவோருக்கு சார்பாக தங்கள் ஆதரவைப் பதிவு செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிந்த வரையில் ஆதரவுகளை திரட்டித் தரவும் இணையம் ஒரு சிறந்த தளம்.
ஆனால் இப்பயன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அறிவு ஜீவி முத்திரைக்கும், புறம் பேசவும், தனிமனித வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளவும், பாலியல் வேட்கையை நாகரீகமான வார்த்தைகளாய், எழுத்துக்களாய் தீர்த்துக் கொள்ளவும், தனிமையை போக்கிக்கொள்ளவுமே "கணினி வலைப் பின்னல்கள்" பயன்படுத்தப்படுகிறது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. (பொழுது போக்கிற்காக, சும்மா ஒரு ஆர்வத்திற்காக எழுதுவதும், அங்கு கிண்டல்கள் அளிப்பதும் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. )
நிறைய பேர் மேற்கொள்ளும் அர்த்தமற்ற பாய்ச்சல்கள் ஆரோக்கியமான புரிதலையும், "Discourse" என்று சொல்லப்படும் ஆய்திரன் விவாதங்களை வளர்த்து நுண் அரசியல்களை பேசக்கூடிய சாத்தியங்களை நிராகரித்து விடுகிறது. மிக மோசமான கருத்து வன்முறைத் தளமாக இணைய தளம் மாற்றப்படுகிறது. போதிய வாசிப்பில்லாததால் (அல்லது அதீத வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்ற கர்வத்தின் காரணத்தால்) விவாதத்தின் ஊடே உன்மை வெளிப்பட்டாலும் கர்வம் காரணமாக வசை மிகுந்த நாகரீகமற்ற வார்த்தைகள் வைக்கப்படுகிறது. அல்லது அவருடைய அடுத்த எழுத்துக்களுக்கு பங்களிப்புக குறைகிறது. (அதாவது ஒதுக்கிவைப்பது)
இல்லையென்றால் இவ்வளவு பேசுகிறீர்களே ஏன் நீங்கள் களத்தில் இறங்கி களைகளை வெட்டத் துவங்குவதுதானே என்று குழந்தைத் தனமான கேள்விகள் வரும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சமூகத்திற்கு தங்கள் பங்களிப்புகளை தருதல் அவசியமாகிறது. அரசியல் பின்புலம் கொண்டவர்கள், அமைப்பு சார்ந்து இயங்குபவர்கள் களப் பணிகள் செய்வது சாத்தியப்படுகிறது, மற்றவருக்கு எவ்வளவோ காரணங்களால் அது சாத்தியப் படுவதில்லை.
குறிப்பாக பால் பேதம், பொருளாதார சூழல் இவை போன்றவை. துவக்கத்தில் சமூகப் பிரச்சனைகளை எழுதுவோர் பிற்காலத்தில் குறைந்தபட்ச களப் பணிகளையாவது மேற்கொள்வர் என்று நம்பலாம், அல்லது அப்பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதும், உதவிகள் செய்வதும் நடக்கும். ஆனால் வெறும் நகையாடுவோர் சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்தும் வியர்வையில் குளிர் காய்வோராக இருப்பது மட்டுமே நடந்து வருகிறது. செயல் முழக்கப் போராட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு அப்போரட்ட வரலாற்றை, சமூக வரலாற்றை, திரிபு வரலாற்றுக்களை எழுத்து மூலம் எடுத்துச் செல்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படி எழுத்து மூலம் பரவும் எதிர் வினைகள், எதிர்காலத்தில் எழுத்துலகில், வரலாற்றில் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க எச்சரிக்கை மணியாக செயல்படும் தன்மை வாய்ந்தது என்பதை ஆர்வ மிகுதியாளர்கள் புரிந்து கொள்வதில்லை.
கருத்துரைகளை இடுவதும் லைக்குகள் போடுவதும் பெரும் அரசியலாக மாறி வருகிறது. எவ்வித தேர்வும் இன்றி கிடைத்ததற்கெல்லாம் லைக் போடுபவர்களை போட்டி போட்டுக் கொண்டு மற்றவர் ஆதிரிப்பதும், தொடர்ந்து கருத்துரைகளை இட்டு, விரும்பிக் குழுக்களாக சேர்ந்துக் கொண்டு எதை எழுதினாலும் லைக்குகளை போடுவதும், சம்பந்தமில்லாத கருத்துக்களை அறிவுஜீவித்தனமாக இடுவதும் (மார்க்சியம் முகப் புத்தகத்தில் படாத பாடு படுகிறது, குறிப்பாக தோழர் எனும் அழைப்புபதம்), அநாகரிகமான தனிமனித தாக்குதல்களை மேற்கொள்வதும், அவதூறுகளை பரப்புவதும் நடந்து வருகிறது. ஒருவர் என்னவிதமான தேர்வுடன் செயல்படுகிறார், எவ்வித கருத்துக்களை முன் வைக்கிறார் என்ற புரிதலுக்கு முன்னேயே முகப்புத்தகம் நண்பர்கள் என்ற பட்டியலின் கீழ் எல்லோரையும் சேர்த்துவைக்கிறது. பட்டியலில் சேர்ந்துவிட்ட ஒரே காரணத்திற்காக ஆதரவும், எதிர்ப்பும், கருத்துரைகளும் இடவேண்டும் என்ற கட்டாயத்தை அது ஏற்படுத்தி தருகிறது.
சமூகத்தில் விதைக்கப்பட்ட நச்சுகள் பற்றிய எந்த புரிதலும் இன்றி, அது பற்றிய அக்கறையும், கவலையும் இல்லாது சமூக பொறுப்பற்ற விவாதங்களை மேற்கொள்ளும் நபர்கள் கருத்துக் சுதந்திரம் எனும் பெயரால் உபயோகமற்ற உரையாடல்களை மேற்கொள்வதும் நடக்கிறது. இந்த பரந்த மனபான்மையானது சுயநலம் கருதியே என்று சொல்வது தவறாகாது. (ஆம் இன்று நான் உனக்கு ஆதரவு தருகிறேன், நாளை நீ எனக்கு ஆதரவு தரவேண்டும் சரியா என்பதே அது).
மேலும் ஒரு இடத்தில் மிகவும் பொறுப்புடன் சித்தாந்தங்களை கருத்துரையாக முன் வைப்போர், வேறொரு இடத்தில் போகிற போக்கில் “சூரியன் குளிர்கிறது...எனக்கு மட்டும்” என்கிற ரீதியில் status களை, கழிவிரக்கங்களை இடுவோரிடத்தில் light weight comments என்று கிண்டல் கேலிகள் செய்வதும் முரணாக உள்ளது.
நான் கிண்டலோ கேலியோ செய்யக்கூடாது, மனம் விட்டுச் சிரிக்கக் கூடாது என்ற அளவில் இதைச் சொல்லவில்லை. நான் தொடர்ச்சியாக முகப்புத்தகத்தைக் கவனித்து வந்த வரையில் இந்த கேலி கிண்டல்கள் சமுதாயப்பார்வையை முன் வைத்தே வருகிறது. ஒருவரின் அறியாமை மற்றவருக்குக் கிண்டல். அந்த வகையிலேயே இது நடக்கிறது. அதிலிருந்து காழ்ப்பு கிளம்பி திட்டுகளையும் வசைகளையும், வதந்திகளையும் அது பரப்புகிறது. முகம் தெரிந்து பழகிய நபர்களிடமே சில சமயம் நகைச்சுவையாக பேசும் பேச்சு அவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியிருக்க முகம் தெரியாதவர்களைக் கிண்டல் செய்யும் போது அவர்களின் மனதில் கோபமும் எரிச்சலும் தோன்றுவதை என்னால் குறையாகச் சொல்லமுடியவில்லை. அதே சமயம் அவர்கள் களத்தில் இறங்குகிறேன் பேர்வழி என்று தானும் பதிலுக்கு வசைகளை வைப்பதே நடக்கிறது. திறந்த மனதுடன் அவர்கள் பேசுகிறார்கள் என்று நம்புவது இதில் அதைவிட வேடிக்கை. எத்தனை பேர் முகம் தெரிந்த நண்பர்களிடம் இயல்பாய் தொடர்ந்து இருக்கமுடிகிறது. ஏதாவது ஒரு கணம் அவர்களை நன்கு தெரிந்திருந்தாலும் காயப்படுத்தும் சூழலே நிகழ்கிறது. அப்படி இருக்கையில் முகப்புத்தகம்.....
Social Network ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பயன் பாட்டுக்குரியது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே ஆனால் அதை நான் சமூக பிரச்சனைகளைப் பேசுவதற்காக பயன் படுத்துகிறேன் என்று தங்கள் முகங்களை முன் நிறுத்துவோர் அதே நிலைப்பாட்டில் நிற்காமல் சமயங்களுக்கு ஏற்றார்போல், நபருக்கேற்றார்போல், தேவைக்கேற்றார்போல் மாற்றிக் கொண்டு எழுதுவது என்ன விதமான புரிதல் என அறியமுடியவில்லை.
அப்படிப் பட்டவர்கள் சமூகப் பார்வை மட்டுமே குறியாக எடுத்துக் கொண்டு மற்ற பொழுது போக்குகளில் ஆர்வமில்லாமல் செயல்படுபவர்களை கருத்துரைகள் என்ற பெயரில் மன உளைச்சல்களுக்கு ஆளாக்காமல் இருப்பது நன்று என்று எனக்குத் தோன்றுகிறது. முகப் புத்தகத்தில் இருப்பவர்களை நண்பர்கள் என்று அடையாளப் படுத்துவதே இந்த உரிமை மீறல்களுக்கு காரணமாய் இருக்கிறது. தொடர்பாளர்கள் (contacts) என்று இருந்திருந்தால் இவ்வளவு உரிமைகளை ஒருவர் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
சமூக அக்கறைக்கான பங்களிப்பை உண்மையான நோக்கமாக கொண்டவர்கள் கருத்துரைகளையும், லைக்குகளையும், அங்கீகாரங்களையும், பரிசுகளையும் நம்பி எழுதுவதில்லை.
//சமூக அக்கறைக்கான பங்களிப்பை உண்மையான நோக்கமாக கொண்டவர்கள் கருத்துரைகளையும், லைக்குகளையும், அங்கீகாரங்களையும், பரிசுகளையும் நம்பி எழுதுவதில்லை.//
ReplyDeleteபன்ச்!!!
///தன்னை நிரூபிக்கும் ஆர்வமே கருத்துரைகளாக வடிவது போல் தோன்றுகிறது////
ReplyDeleteம்..
@Paarkkadal sakthi - முன்வாக்கியம்.////எழுதப்பட்ட பொருளின் மையக் கருவிலிருந்து, அக்கருவின் தீவிர தன்மையிலிருந்து விலகி தன்னை நிரூபிக்கும் ஆர்வமே கருத்துரைகளாக வடிவது போல் தோன்றுகிறது// - விதியாசம் இருக்கிறது..எல்லாக் கருத்துரைகளும் அல்ல!
ReplyDelete/// Social Networking ஐ சமூக பிரச்சனைகளைப் பேசுவதற்காக பயன் படுத்துகிறேன் என்று தங்கள் முகங்களை முன் நிறுத்துவோர் அதே நிலைப்பாட்டில் நிற்காமல் சமயங்களுக்கு ஏற்றார்போல்,நபருக்கேற்றார்போல், தேவைக்கேற்றார்போல் மாற்றிக் கொண்டு எழுதுவது என்ன விதமான புரிதல் என அறியமுடியவில்லை. ///
ReplyDeleteசமூக பிரச்சனைகளுக்காக தனது கருத்தை பதிவு செய்யும் போது , அதற்குரிய seriousness உடன் அல்லது பொறுப்புடன் கருத்துக்களை பதிவு செய்வது சரி. அதற்காக தன்னுடைய நகைச்சுவை உணர்வை , தோழமையை , light weightedness ஐ ஒருவர் கண்டிப்பாக இழக்க வேண்டுமா என்ன ?
மற்றபடி Facebook இல் இணைந்திருப்பவர்களை எல்லாம் நண்பர்கள் என்பதை விட contacts என்று கூறுவதே சரி என்பதில் எனக்கும் உடன்பாடே ....
நன்றி விஜய், இழக்க வேண்டும் என்பது என் பரிந்துரையல்ல, அது எனக்கான நிலைப்பாடு.
ReplyDeleteஇணையத்தில் விவாதம் செய்யலாமா...
ReplyDeletehttp://www.chinthan.com/2010/07/blog-post_22.html