May 24, 2022

அமலாபுரம் வன்முறை

 

ஆந்திராவில் உள்ள கொனசீமா என்னும் மாவட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பரிந்துரையை எதிர்த்து வன்முறை வெடித்துள்ளது!

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ராவ், ரெட்டி, ராஜு, சாயி, அன்னமைய்யா போன்ற பெயர்களைக் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் மாவட்டப் பெயர்கள் சூட்டும் போது வெடிக்காத வன்முறை அம்பேத்கர் அவர்களின் பெயரை வைக்க முடிவெடுக்கும் போது வெடிக்கிறது என்பது வெட்கக் கேடான செயல்.

இது அப்பட்டமான சாதி வெறி என்று நமக்கு கோவம் வந்தாலும். அதற்கு வழிவகுக்கும் அடித்தளத்தை சரியாக கண்டிறிய வேண்டியுள்ளது.
நான் படித்த வரையில் கீழ் உள்ள கட்டுரை அதை வர்க்கப் பார்வையோடு அனுகியுள்ளது!

//An invisible tension between a few upper class and Dalits is palpable in the region where the latter hold sway.//

//Konaseema is home to a few rich communities and entrepreneurs. The Dalits were a highly educated community and visible in all fields. The present clash over the name is not simple opposition to renaming the district after Dr Ambedkar. It is a symptom of deeply entrenched antagonism between assertive Dalits and their opponents. The renaming of the district has served as a spark.// (https://thefederal.com/states/south/andhra-pradesh/amalapuram-violence-just-a-tip-of-anti-dalit-sentiment-in-andhras-konaseema/


எந்த ஒரு ஏற்றத்தாழ்வும், படிநிலையும், அதனடிப்படையில் வெடிக்கும் வன்முறையும் ஆளும் வர்க்க நலன்களுக்காக நிகழும் அரசியல் என்பதை உணர வர்க்கப் பார்வை வேண்டும். படிநிலைகள் வெவ்வேறு வடிவங்களில் நிலைநாட்டப்படுகின்றன. வர்க்கமே அதன் அடிப்படை! வர்க்கம் என்றால் வெறும் பொருளாதாரம் என்று அவசரகதியில் கொந்தளிக்காமல்.. வர்க்கம் என்றால் என்ன என்பதை விரிவாக படிக்கவும்!

சாதி, தீண்டாமை ஆகியவை இந்திய சமூகத்தின் கொடூரமான சமூக படிநிலையமைப்பு! குறிப்பிட்ட பிரிவினரை குறிப்பிட்ட நிலையிலேயே நிலைத்திருக்க வைக்கும் ஏற்பாடு அது. மதரீதியாக அது ஒரு புனிதக் கோட்பாடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தியதில் அரசின் பங்கு என்ன? ஏன் அது நடந்தது என்பதை மார்க்சிய அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளார்கள்!

குறிப்பிட்ட நிலை என்பதில் உழைப்புப் பிரிவினையே அடித்தளம்! உழைப்பு என்னும் இடத்தில், மிகவும் குறிப்பாக எந்த நாட்டிலும் இல்லாத வகையில் சில தொழில்களை “சுத்தம்”, ”அசுத்தம்” என்று வகை பிரித்து, பிறப்பின் அடிப்படையில் இன்னார் இப்படி பிறந்தவர்… இன்ன தொழில் செய்தவர் என்கிற அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து, படிநிலைகளை உருவாக்கி;“அசுத்தம்” என்று வரையறுக்கப்பட்ட உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களை சமூக அடுக்கில் ’நிரந்தர ’அசுத்த’ உடல் உழைப்பாளர்களாக’ முடக்கிவைக்கக் கூடிய ஏற்பாடு இது! சமூக அடுக்கு என்பதில் உள்ளது வர்க்கம்!

இந்த “சாரத்தை” மனதில் வைத்துக் கொண்டு நடக்கக் கூடிய சாதிய வன்முறைகளை ஆய்வு செய்வோமெனில், தமக்கு ”கீழே” உள்ளவர்கள் முன்னேறுவதை ஆளும் வர்க்கங்கள் சகித்துக் கொள்ள முடியாமல் தாழ்த்தப்பட்டவர்களை தாக்குகின்றன. அதாவது பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் அதிகாரத்திலும் உயர் அடுக்கில் உள்ளவர்கள் - உடல் உழைப்பில் பெரிதாக ஈடுபடாமல் செல்வம் குவிக்கும் குடும்பங்கள், சாதிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று புரிந்துகொள்ளவும்!

பிறப்பால் தாம் உயர்ந்தவர் என்கின்ற “அடையாள வெறி” அனைத்து சமூகங்களிலும் காலப் போக்கில் உருவானது. அதன் மூலம் “போட்டியின்றி” பல சலுகைகளை, அதிகாரங்களை அவர்கள் நிறுவிக்கொள்ள முடியும்.

புராதனக் கம்யூனிச சமூகம் சிதைந்து தனிக் குடும்பங்கள் சொத்து குவிக்கும் சமூகமாக மாறியபின்னர் இந்தியாவில் - பார்ப்பனக் கூட்டமும், அன்றைய ஆளும் வர்க்கக் கூட்டமும் சேர்ந்து ஒரு படிநிலையமைப்பை மதரீதியாக நிறுவினர். அது வர்ணாசிரமக் கொள்கையாக தொடங்கி சாதியாக திடப்பட்டது. ஆணாதிக்கம், ஆண்டான் அடிமை முறை, மன்னராட்சி முறை, பண்ணையார் ஆதிக்கம், எஸ்டேட், ஆலை முதலாளிகள் ஆதிக்கம், காலனியாதிக்கம் என்பதையும் சேர்த்துக்கொள்ளவும்!

ஊழ்வினை, போன ஜென்மத்து பாவம், பிறப்பாலேயே நீங்கள் தாழ்ந்தவர்கள் உங்களின் இடம் இதுதான் (அவர்களின் இடம் இதுதான்) என்று பல்லாயிரக் கணக்காக இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை கடவுளின் சித்தம், ரத்தம், குலம், கோத்திரம் என்று மிகவும் ஆழமாக விதைத்துவிட்டனர். அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் இயல்பென நம்பவைத்து விட்டனர்!

ஒடுக்கப்படும் எதுவும் ஒருநாள் திமிறி எழும்! அது பெண் அடிமைத்தனமானாலும் சரி, சாதிய அடக்குமுறையானாலும் சரி, மதம், இனம், மொழி, உழைப்புச் சுரண்டல் என எதுவானாலும், ஒடுக்கப்படும் கூட்டம் ஒருநாள் திமிறி எழும்! இதுதான் வரலாறு.
அப்படி திமிறி எழுகையில் ஆளும் வர்க்கங்கள் அச்சம் கொள்கின்றன! பெண்கள் எதிர்க்கையில் “Slut-shaming” உள்ளிட்ட வசைகளையும், வன்முறையையும் கையிலெடுக்கும். அதே போல் தான் மதம், இனம், மொழி, தொழிலாளர் போராட்டங்கள் அனைத்தையும் பண்பாட்டு தளத்திலும், பொருளாதார தளத்திலும் ஆளும் வர்க்க அரசியலமைப்பின் துணையோடு ஒடுக்கப் பார்க்கும்!

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் திமிறி எழுகையில் நடப்பதும் இதுவே! பொது குளத்தில் நீர் எடுப்பது, பொதுவான சுடுகாட்டில் இடம் தர மறுப்பது, பொதுப் பாதையில் செல்ல மறுப்பது, சாதி ஆணவக் கொலைகள், இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, தனித் தொகுதியை எதிர்ப்பது, ஒடுக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது, அவர்களின் பெயர்களை சாலை / ஊர் / மாவட்டங்களுக்கு வைப்பதை எதிர்ப்பது வன்முறையில் ஈடுபடுவது என்பதெல்லாம் சாதி வெறி என்பதோடு வர்க்க ஒடுக்குமுறை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வியை மறுத்து, பொருளாதார மேம்பாட்டை மறுத்து ஒரு பெரும் பிரிவினரை சமூகத்தின் அடுக்கில் நிரந்தர கூலி உழைப்பாளிகளாக, மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு சேவை செய்பவர்களாக வைத்திருந்த நிலை இனி தொடராது என்கிற அச்சமும், பேராசையும் இயக்கவில் ரீதியாக அவர்களை நகர்த்துகிறது!

எங்களுக்கு கீழ இருந்த நீங்க இப்ப எங்களையே எதிர்க்குறீங்களா?” என்பது வெறும் சாதிய ரீதியான எதிர்ப்பு மட்டுமல்ல, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் என்று அனைத்திலும் நீங்க எங்க இடத்துக்கு வரப் பார்க்குறீங்களா என்பது வர்க்க ஆதிக்கமாகும்! இதைத்தான் உற்பத்தி உறவுகளில் நிலவும் வர்க்க முரண்பாட்டின் காரணமாக உண்டாகும் வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியம் வரையறுக்கிறது!

உற்பத்தி உறவுகள் என்றால் – மனிதர்கள் தங்களின் (பொருள்) தேவைகளுக்காக ஈடுபடும் “வேலைகளில்” தங்களை அறியாமலேயே ஓர் உறவு நிலையில் பிணைக்கப்படுகிறார்கள். அதில் உற்பத்தி சக்திகளைக் (means of production) கைப்பற்றிக் கொண்ட கூட்டம் இன்னாருக்கு இன்ன இடம் (உற்பத்தி உறவுகள்), இதுதான் கூலி, இதுதான் உங்களுக்கான உரிமைகள் என்று வரையறுக்கும் அதிகாரத்தைப் பெறுகிறது! அது ஆளும் வர்க்க நலன்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஆகிறது!

நிலவும் அதிகாரத்தை எதிர்த்து நடக்கும் அத்தனைப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களே. அது சாதி, மதம், பாலினம், மொழி, இனம், திறன் என்று பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் நிகழும்.

 

Ø
பெண்கள் முன்னேறுவது ஆண்களுக்கு போட்டியாக தோன்றுகிறது!

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவது ஆதிக்க சாதிகளுக்கு போட்டியாக

Ø கிறித்தவர்கள், முஸ்லீம்கள், இதர மதத்தினர் முன்னேறுவது இந்துக்களுக்கு போட்டியாக (மற்ற நாடுகளில் ஆளும் மதங்களுக்கு எதிராக சிறுபான்மை மதங்கள்)

Ø தமிழ் / திராவிட இன முன்னேற்றம் ஆரிய இனத்திற்கு போட்டியாக

Ø ஏழைகளின் முன்னேற்றம் பணக்காரர்களுக்கு போட்டியாக

Ø உழைப்பாளிகளின் முன்னேற்றம் முதலாளிகளுக்கு போட்டியாக
தோன்றுவது ஏன் என்பதை புரிந்துகொள்வது ஒன்றும் அறிவிற்கு அப்பாற்பட்டதல்ல!

ஒடுக்கப்படுவோரின் முன்னேற்றத்தை முடக்குகையில் அவர்கள் எதிர்ப்பதும், தமக்கான உரிமைகள், அங்கீகாரங்களைக் கோருவதும் உரிமைப் போராட்டமாகிறது (வர்க்கப் போராட்டம்). அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆளும் வர்க்கமானது ஒடுக்குமுறையிலும், வன்முறையிலும், அடையாள அரசியலிலும் ஈடுபடும். இந்துத்துவ அரசியல், பெண் வெறுப்பு அரசியல், தலித் எதிர்ப்பு அரசியல், இஸ்லாமிய (மத) வெறுப்பு அரசியல், மொழி ஆதிக்க அரசியல், இனவெறுப்பு அரசியல் என அனைத்திலும் அடித்தளமாக இருப்பது மேல்நிலையில் உள்ளோரின் பொருளாதார நலன்களே! அதை அரசியல்-பொருளாதார-பண்பாட்டு நலன்கள் என்று விரிவுபடுத்திக்கொள்ளலாம்! அதைத்தான் வர்க்க முரண்பாடு / வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியம் வரையறுக்கிறது! அதை முறியடிப்பதற்கான வழிமுறைகளையும் வழங்குகிறது. எத்தகைய சமூக அமைப்பில் நிரந்தரமாக இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் என்பதையும் விளக்கி, மாற்று சமூக அமைப்பையும் முன்வைக்கிறது!

ஆளும் வர்க்கங்களின் இந்த சுயநல அரசியலை தோலுறித்துக் காட்டி, ஒடுக்கப்படும் மக்களை கம்யூனிஸ்டுகள் ஒன்று திரட்டிவிடுவார்கள் என்பதால் தான் பொதுவுடைமை தத்துவத்தை எதிர்மறையாக சித்தரித்து ஒடுக்கப்பட்டோரை பிளவுபடுத்துவதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றியும் கண்டுள்ளன.

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் கூட ஒரு சிலர் இதற்கு பலியாகிவிட்டனர். ஒரு சிலர் தேர்ந்த சுயநலனோடு கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஊடுறுவி அடையாள அரசியல் மூலம் வர்க்க உணர்வை சிதைத்தும் வருகின்றனர்.

இந்துத்துவ எழுச்சி, பார்ப்பன ஆதிக்கம், இடைநிலை சாதி ஆதிக்கம், பண்பாட்டு ஒடுக்குமுறை, ஒரே சாதியாக இருந்தாலும் அந்தஸ்த்து ரீதியான வெறுப்பு, பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் சாதிய ரீதியான வெறுப்பு, ஆணாதிக்கம், மத ஆதிக்கம், பொருளாதார நலிவு, வேலையின்மை, தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்கள், தனியார்மயமாக்கல், இனவாத ஒடுக்குமுறை, மொழி ஆதிக்கம், மாநில உரிமைகள் பறிப்பு / ஒற்றை தேசியக் கொள்கைகள் என்று அதன் விளைவுகளை நாம் சமூக மட்டத்தில் எதிர்கொண்டு வருகிறோம்! இன்னமும் பார்ப்பனியம், இந்துத்துவ பாசிசம், ஆதிக்கசாதி வெறி, கம்யூனிஸ்டுகள் விலை போகி விட்டார்கள், தமிழினத் துரோகிகள் என்றே சுருக்குவோமெனில்….. (இதில் கார்ப்ரேட் பாசிசம், காவி பாசிசம் என்று பல்வேறு சொல்லாடல்கள் வேறு) ….

ஏற்றத்தாழ்வு மிக்க படிநிலை அமைப்புகளின் ஆணி வேரை சுட்டிக் காட்டினால்… இருக்கவே இருக்கிறது “முத்திரைகள்”…

ஒடுக்கப்படுபவரின் முன்னேற்றம் ஒடுக்குவோருக்கு எப்போதும் அச்சமூட்டுவதாகவே இருக்கும்! எதனால் என்பதை சரியாக புரிந்துகொள்வதில் தான் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை அடங்கியுள்ளது!

No comments:

Post a Comment