Feb 9, 2018

மயிரில் பெண்மையைத் தேடாதீர்கள்


‘நவநாகரீக’ பெண்களுக்கு
பின்னல் போடத் தெரியவில்லை
சேலை உடுத்தத் தெரியவில்லை
சமைக்கத் தெரியவில்லை
இன்றைய பெண்கள்
உள்ளாடை அணிவதில்லை
நைட்டியைப் போட்டுக்கொண்டு வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்கள்.
லெக்கிங்க்ஸ் அணிந்து கொண்டு உடலைக் காட்டுகிறார்கள்
என்றெல்லாம் ‘ஆண்கள்’ நீங்கள் கவலைப்படுகையில்
உங்களுக்கு வேட்டி கூட கட்டத் தெரியாது என்று கொக்கரித்தபடி
ஒட்டு வேட்டியை தயார் செய்கிறான் முதலாளி

இன்றைய ஆண்களுக்கு துணி துவைக்கத் தெரியாது
வேட்டையாடத் தெரியாது
விவசாயம் தெரியாது
எல்லாவற்றுக்கும் மேலாக புராதன சமத்துவ சமூக வரலாறு கூட தெரியாது என்று நாங்கள்  வாயடிப்பதில்லை

ஆணாய் பெண்ணாய் மாற்றுப்பாலினமாய் உடலிருக்க
ஆண்மை பெண்மை என்பதெல்லாம் இயற்கையான பண்பல்ல
அது ஆணாதிக்க சமூகத்தின் நஞ்சு என்று
ஆண்களும், பெண்களும் முற்போக்காளர்களுமாய்
பக்கம் பக்கமாய் எழுதியும் கத்தியும் வந்துள்ளோம்
மாற்றம் என்பது சமூக இயக்கத்தின் மாற்றமுடியா அங்கம் என்று
பொருளுரைத்திருக்கிறார்கள் சமூக விஞ்ஞானிகள்

‘நவீன’ வளர்ச்சியின் காரணமாக ஆணும் மாறுகிறான்
பெண்ணும் மாறுகிறாள்
பண்பாடு மாறுகிறது
தொழில்நுட்பம் மாறுகிறது
தொழில் மாறுகிறது
இயற்கையே மாற்றப்படுகிறது
ஆயினும் மாறாதிருக்கிறது
சாதியும் ஆணாதிக்கமும்

சிலையின் பின்னலழகை
சிற்பியின் நிபுணத்துவத்தை
கலையின் உச்சத்தை ரசிக்க
அழகியலை முன் வைத்துப் பேசுவது அறிவுடைமை
பெண்மையை முன்வைத்துப் பேசுவது மடமை

ஆணென்ன பெண்ணென்ன
ஆண்மை என்ன பெண்மை என்ன
வேலைப் பிரிவினை என்றால் என்ன
என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளதை இந்நூற்றாண்டில் கூட படிக்காது
பெண்களின் நடத்தையில் பண்பைத் தேடும்
‘ஆண்களே’
முதலில் நற்பண்பை உங்கள் மூளையில் தேடுங்கள்
அது காலிக்குடமாய் தள்ளாடுவதை கண்டறிந்து
அறிவியலறிவால் நிரப்புங்கள்

நவீனத்தின் அனுகூலங்கள் ஆண்களுக்கானது மட்டுமல்ல
அது மனிதராய் பிறந்த அனைவருக்குமானது
மயிரைக் கட்டி வைத்தாலும், அவிழ்த்துவிட்டாலும்
சமூகத்திற்கு எக்கேடுமில்லை
உங்களின் முட்டாள் தனத்தால் தான் இவ்வுலகிற்கு மாபெரும் கேடு

ஓவியம்: Monikhaa
மாசெஸ் கூட்டத்தின் பயிற்சிப்பட்டறையின் போது ஓவியம் வரைந்து கொடுத்த ஓவியர்கள் அனைவருக்கும் நன்றி
(Artists Viswam, Rajan, Christy, Vasanth, Rohini Mani, Vidharthe, Ezhumalai, Suraj, Yugan, Anand, Monika )







No comments:

Post a Comment