Aug 10, 2017

நித்ரா.... வசுமித்ர

நித்ரா
சொல்லத் திணறுகிறதெனக்கு
நீ
என் பேரரசி
பேரழகி
மார்க்ஸைக் காதலிப்பது போல்
உன்னைக் காதலிக்கிறேன்
உன்னை காதலிப்பேன்
இதில் உண்மை கொஞ்சம் அதிகமென்று மார்க்ஸுக்கும் தெரியும்
காதல் விவகாரத்தில் மார்க்ஸ் பொய்களை அனுமதிப்பாரில்லையா
நீயும் அப்படியே
என் கண்ணே…
நிச்சயம் நான் ஆணல்ல
நீ பெண்ணுமல்ல
இருபத்தியொன்றாம் நூற்றாண்டின்
சிம்மாசனத்திம் அமர்ந்திருக்கும்
முதலாளித்துவத்தின் கீழ்
அடிமை ஜீவிதத்தில் பிழைத்திருக்கும் இரு உடல்கள்
மார்க்ஸ்க்குத் தெரியும்
முதலாளித்துவமானது உணர்ச்சிகரமான
குடும்பத்தின் முகத்திரையை கிழித்தெறியுமென
நாம் அறிவோம்
வா…
மார்க்ஸைக் காதலிப்பதென்பது
நம்மை நாமே மனிதர்களாய் உணர்வதுதான்
காதலிப்போம்
மார்க்சின் பெயரால்
நிபந்தனையற்று
செல்லமே
நாம் காதலிப்போம்
ரோக் டால்டன் சொன்னது உனக்குத் தெரியும்
கம்யூனிசம் என்பது தலைவலி
குணப்படுத்த ஆஸ்பிரின் மாத்திரை போதும்
சூரியன் அளவான ஆஸ்பிரின்
தலைவலிகளுக்கு மருந்து தயாரிக்கும் மார்க்ஸைப் பார்
வைத்தியனைப் போலவா இருக்கிறான்
நிச்சயம் இல்லை
யுத்தக் களத்தில்
எந்த அச்சமும் இல்லாது
நம்முடன் கைகோர்த்து நிற்கும் அவன் முகத்தைப் பார்
நம் குழந்தையும்
தகப்பனும் அவன்தான்
புன்னகைக்கும் அவனது முகத்தில் நான் இக்கணம் ஜென்னியைப் பார்க்கிறேன்
தாய்மை
அவனது ஆண் மார்பில் முலைகளைக் கொணருகிறது
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.

No comments:

Post a Comment