Feb 26, 2017

நெடுவாசல் போராட்டம்

புதுக்கோட்டை – #நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு நானும் வசுமித்ரவும் எங்களது ஆதரவை பதிவு செய்து கொள்கிறோம்.
வளர்ச்சியின் பெயரால் அரசாங்கமும், முதலாளித்துவ நிறுவனங்களும் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதனை சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் உணர்த்துகின்றன.
ஹைட்ரோ கார்பன் (மீத்தேன் உள்ளிட்ட வாயு) எடுக்கும் திட்டம் எவ்வளவு தீங்கானது என்றும், 6500 அடி ஆழம் வரை தோண்டுவதால் விவசாயமும், நிலத்தடி நீரும் எப்படி பாழ்பட்டுப் போகும் என்றும் அறிஞர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் நிராகரித்து, மக்களையும், சமூக ஆர்வலர்களையும் எப்போதும் நக்சலைட்டுகள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி மக்களை அரசு கொச்சைப்படுத்துகிறது. மக்களின் அரசியல் உணர்வை, குறிப்பாக மாற்று அரசியல் சக்திகளோடு மக்கள் ஒன்றுபடுவதை கண்டு அஞ்சி அரசு (மத்திய-மாநில) பிளவுபடுத்த முனைகிறது.. ஆட்சியதிகாரத்தில் அமர்பவர்களுக்குத் தான் அறிவு பற்றாக்குரை இருக்கிறதே ஒழிய மக்களுக்கு அல்ல. குறிப்பாக விவசாயம், நீர்வளம், இயற்கை வளங்கள் குறித்த அறிவு இருப்பதால் தான் மக்கள் தம் நிலங்களையும், வளங்களையும் காக்கப் போராடுகிறார்கள். நிலமும் வளமும் எவருடைய தனியுடமையும் அல்ல. தனியுடைமை பொருளாதார அமைப்பின் கீழ் அது அரசுக்கும் சொந்தமாக முடியாது. பொது சொத்து பொதுவானது. அதன் மீது மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் உரிமைகள், கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவமோ அல்லது முதலாளித்துவ ஆதரவு அரசோ “இலாப” நோக்கோடு மட்டுமே எந்தவொரு “தொழிலிலும்” ஈடுபடும். உழைப்புச் சுரண்டல், இயற்கை வளச் சுரண்டல் ஆகியவை அதன் உள்ளார்ந்த பண்புகள். வேலை வாய்ப்பு என்னும் பெயரால் சொற்பளவிலான நபர்களுக்கு கூலியை விட்டெறிந்து கொழுத்த இலாபம் பார்ப்பதற்குப் பெயர் வளர்ச்சியல்ல. இதற்குப் பெயர் உழைப்புச் சுரண்டல். முதலாளித்துவ அமைப்பின் இந்த உள்ளார்ந்த பண்பை மக்கள் நன்கு உணர வேண்டும். ஆபத்தான திட்டங்களை, ஒடுக்குமுறைகளை ஆங்காங்கே எதிர்ப்பதோடு, ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பை தகர்ப்பதற்கான தேவையையும் மக்கள் உணர வேண்டும். தனி மனித உரிமை பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைதல் ஆகியவற்றை உண்மையாக வலியுறுத்தி மக்களுக்காக களமாடும் அரசியல் சக்திகளோடும், அமைப்புகளின் பின்னாலும் அணிதிரளும் காலம் நெருங்கிவிட்டது. இந்த சக்திகளைத் தான் அரசு வேலையற்ற கம்யூனிஸ்டுகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறது. வலதுசாரி அரசியல்வாதிகளைக் காட்டிலும் இவர்கள் ஆபத்தானவர்கள் இல்லை!
முதலாளித்துவ வளர்ச்சி என்பது சொற்ப அளவிலான நபர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளாக செயல்படும் அரசாங்க பிரதிநிதிகளுக்கும் மட்டுமே பயனளிக்கக் கூடியதே அன்றி மக்களுக்கு எந்தவிதத்திலும் அது பயனளிக்கப் போவதில்லை.
நாம் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல! ஆனால் அந்த அறிவியல் ஒருசிலரின் ஆதாயத்திற்காக சுரண்டல்வாத தன்மையோடு செயல்படுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். இயற்கை வளங்களை கொள்ளை அடிக்காமல், நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல், விவசாயத்தை அழித்திடாமால் அறிவியல்பூர்வமாக திட்டங்களை கொண்டுவர அரசு முயற்சிக்க வேண்டும். அந்த அறிவை நிலத்தோடு உறவாடி வாழும் மக்களிடமிருந்து பெற முடியுமே ஒழிய ”சுயநலவாத அறிஞர்களிடம்” இருந்தல்ல.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டு உரிமையை காத்து, தமிழக மக்களின் உணர்வை மதித்து இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் சொல்லி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
- கொற்றவை

No comments:

Post a Comment