Oct 7, 2016

ஆண்மை ஒழிப்போம்!


சமீப மாதங்களில் காதலின் பெயரால் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் செய்திகள், காணொளிக் காட்சிகள் நம் அனைவரையும் உரையச் செய்துள்ளது. ஒருதலைக் காதலை மறுத்ததால் கொலை, காதலித்து பின் ஏதோ ஒரு காரணத்தால் விலகினால் ஆசிட் வீச்சு அல்லது கொலை, பின் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பது பொறுக்க முடியாமல் காவல்நிலையம் சென்று புகார் அளித்ததால் கொலை என்று அந்தக் கொடூரமான கொலைகளுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பெரும்பாலும், பெண்கள் மீதான இத்தகைய வன்முறைகளை, குறிப்பாக காதல் சார்ந்து நிகழ்த்தப்படும் வன்முறையை - தீவிரக் காதல், புனிதக் காதல், வெறித்தனமானக் காதல் – அதனால் ஒருவர் தன்னிலை இழந்து கொலை செய்வதாக மட்டுமே இந்த சமூகம் அணுகுகிறது. திரைப்படங்களும் அப்படித்தான் கட்டமைக்கின்றன. இணைகளாக அன்பும், மரியாதையும், சம உரிமையும் இருக்கும் ஓர் உறவே காதல். இந்த மூன்றில் ஒன்று இல்லாது போனாலும் அது காதலாகவோ, கணவன் மனைவி உறவாகவோ இருக்க முடியாது. இரண்டு பேரில் ஒருவரின் ஆதிக்கம் நிறைந்த உறவாக – எஜமானர், அடிமை உறவாக அது மாறிவிடும். இது ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் (அதாவது ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு மற்றும் ஆணுக்கு உயர்ந்த இடம் கொடுத்திருக்கும் சமூக அமைப்பு) பெரும்பாலும் அவ்வுறவில் ஆணின் ஆதிக்கமே தலைதூக்கி இருக்கும்.

இத்தகைய ஆணாதிக்க சமூகம் உருவானதற்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. மெல்ல மெல்ல பெண்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு அவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். நிலவுடைமை சமூகத்தில் முழுமுற்றிலுமாகப் பெண்கள் ஆணின் உடைமைகளாக மாறிப்போயினர். தனிச்சொத்து (குடும்பச் சொத்து) சேர்க்கைக்காக கொடூரமான அட்டூழியங்கள், கொலைகள், ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்பட்ட, இன்றைக்கும்கூட தொடர்கின்ற ஓர் அமைப்பே நிலவுடைமையாகும். பெண் ஒடுக்குமுறை என்பது தனிச்சொத்தை பாதுகாப்பதோடு நெருங்கிய தொடர்புடையது.

பெண்ணும் நிலமும் ஒன்று அதை அடுத்தவன் வந்து ஆண்டுடாம பார்த்துக்க, பெண்ணைப் பாதுகாப்பதென்பது சொத்தைப் பாதுகாப்பது போல் என்றெல்லாம் சொல்லப்படுவதென்பது உண்மையில் பெண்கள் மீதான அக்கறையினால் அல்ல, மாறாக பெண் மூலமாக குடும்பச் சொத்து மாற்றானுக்குப் (அதாவது வேறு சாதி-குடும்பத்திற்கு) போய்விடக் கூடாது என்பதால்தான். 

இத்தகையதொரு ஆணாதிக்க சமூகத்தில் வளரும் ஆண்களின் மனமானது எப்போதும் பெண்களைத் தங்கள் உடைமையாகவே கருதும் வகையிலேயே உருவாகிறது. சிறுவயது முதலே குழந்தைகள், ஆண்கள் உயர்ந்தவர்கள், பலசாலிகள், என்று சொல்லியே வளர்க்கப்படுகின்றனர். ஆண் / தந்தை அடித்தாலும், மிதித்தாலும் தாயானவள் தந்தைக்குக் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் எனும் விதியானது - ஆண்களின் மனதில் பெண்களை அப்படி வன்முறை மூலம் ஒடுக்கலாம் எனும் - முழுக்க முழுக்க ஓர் உடைமை அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பில் எப்படி ஒரு பெண் கணவனின் உடைமையாகக் கருதப்படுகிறாளோ அதேபோல் காதலிக்கப்படும் பருவத்தில் காதலி எனும் பெண் ஆணின் உடைமையாகக் கருதப்படுகிறாள். அதேபோல் இந்த அமைப்பில் எப்படி, பெண்கள் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்ளும் உரிமை மறுக்கப்படுகிறதோ அதேபோல் தனக்கு விருப்பமில்லை என்றாலும் காதலை மறுக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது. 

ஆக மொத்தம் குடும்பத்தில் பெண் தந்தைக்கு அடிமை, பொதுவெளியில் பெண் பொதுவான ஓர் ஆணின் அடிமை. காதலித்து திருமணம் செய்துகொண்டால் குடும்பத்தார் வெட்டுவார்கள். காதலை ஏற்க மறுத்தால் பொதுவான ஓர் ஆண் (காதலன்) வெட்டுவான். ஆக, பெண் இனத்திற்கு குடும்பத்திலும் பாதுகாப்பில்லை, சமூகத்திலும் பாதுகாப்பில்லை. இதுதான் இந்த தனியுடைமை ஆணாதிக்க சமூக அமைப்பின் ‘ஆண்மை-நண்மை’! 

பெண் பற்றிய ‘பெண்மை’க் கருத்தியலை தூக்கிப் பிடிப்பதிலும், பெண்கள் மீதான வன்முறையை காதலின் பெயரால் நியாயப்படுத்துவதிலும் திரைப்படங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளைப் பின் தொடர்ந்து செல்வது, பாட்டு பாடி வம்பிழுப்பது, காதல்-துறத்தல் என்கிற பெயரில் வரும் பாடல்களில் பெண்ணின் அனுமதியின்றியே அவளை தொட்டுத் துன்புறுத்துவது என்பதெல்லாம் காலம் காலமாக திரைப்படங்களில் காட்டப்பட்டு வருகின்றன. விருப்பமில்லாத பெண்ணையும் துரத்தி துரத்தி, கட்டாயப்படுத்தியாவது காதலிக்கச் செய்வதே ‘ஆண்மை’ என்று இதுபோன்ற திரைப்படங்கள் கற்றுத்தருகின்றன. அதேபோல் காதலுக்காக (இன்னபிற காரணங்களுக்காகவும்) வெட்டுவதும், குத்துவதும்தான் ஆண்மை, வீரம் என்று வன்முறையையே போதிக்கின்றன. 

ஆணாதிக்க சமூகத்தின் ஆண்மை கருத்தியலானது ஆண்களுக்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்கியுள்ளது. அந்த ஆண்மை ஏற்றப்பட்ட ஆண் மனமானது எந்த வகையிலும் நிராகரிப்பை, மறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அப்படி ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், தான் ஆண் மகனே இல்லை என்பதாக ஆண் மனம் உடைகிறது. ஆண்மை இழந்தவனாக அது அவனை ஓர் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது. ஆணைச் சுற்றியுள்ளவர்களும் அப்படித்தான்  அவனை ஏளனம் செய்வார்கள். 

உடைமை மனநிலையும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமாகி கொலை வெறியனாக ஆண் மாறிவிடுகிறான். பாதிக்கபப்டும் பெண்ணோ, குடும்பமோ காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டால் அதையும் தன் ஆண்மைக்கும், வீரத்திற்கும் இழுக்கானதாகவே ஆண் கருதுகிறான். ஆகவே, கொலை செய்தேனும் தன் ‘வீரத்தை’ பறைசாற்ற எண்ணும் மனநிலை உருவாகிறது; அதுமட்டுமின்றி தனக்குக் கிடைக்காதப் பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது எனும் தனியுடைமை மனநிலையும் அதில் மேலோங்கி நிற்கிறது. 

இந்த சமூகமும், பெற்றோர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், பெண்களை ஒடுக்கி ஒடுக்கி ஆண்களுக்கு எல்லையற்ற அதிகாரத்தை கொடுத்தாயிற்று;. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தியாயிற்று. அதனால் மீண்டும் பெண்ணை வீட்டுக்குள் ஒடுக்கி வைப்பதோ, ஆண்களுடன் பழகுவதைத் தடுப்பதோ, காதலை எதிர்ப்பதோ இதற்கு தீர்வாகிவிடாது. முதலில் குடும்ப அளவில் ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். பெண்கள் மீது அதிகாரத்தையும், வன்முறையையும் செலுத்துவதைக் கைவிட வேண்டும். பெண்ணைத் தாழ்த்தியும், ஆணை உயர்த்தியும் பேசுவதை, வளர்ப்பதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தம் பெண் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பெண் இனமும் இந்த வன்முறையிலிருந்து விடுதலைப் பெருவதற்காக சமூகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். 

அரசாங்கமானது சட்டங்களையும், தண்டனைகளையும் மட்டும் கணக்குக் காட்டிக் கொண்டிருப்பதை விடுத்து பெண்களின் நிலையை எல்லா மட்டங்களிலும் மாற்றியமைப்பதற்கான முற்போக்கான செயல்திட்டங்களை வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்-பெண்மை, ஆண்-ஆண்மை பற்றிய கருத்தியல்களை அடிப்படைக்கூறு சார்ந்தே மாற்றியமைத்திடுவதற்கான சமத்துவக் கல்வியை, அதானது பாலினக் கல்வி (பாலியல் கல்வி மட்டுமல்ல) சிறுவயது முதலே ஒரு பாடமாக வழங்க வேண்டும். பெண்களுக்குக் கல்வி, பொருளாதாரம், திருமண உரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.

குற்றங்களுக்கு சமூக அமைப்புக் காரணம் என்று சொல்வதால் குற்றவாளிகளைக் கருணையோடு அனுக வேண்டும் என்பதல்ல. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு ஆதாரபூர்வமாக ஒருவர் குற்றவாளி எனும் பட்சத்தில் கொடூரக் கொலைகள் மற்றும் வன்முறைக்கான தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட வேண்டும். அதேவேளை எதிர்காலத்தில் குற்றங்கள் நடைபெறா வண்ணம் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சமூக மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எடுக்க வேண்டும். 


பெண்களைப் புனிதப்படுத்துவது, காதலைப் புனிதப்படுத்துவது, சாதித் தூய்மை பேசுவது, பெண்மையை வலியுறுத்துவது, ஆண்மை, வீரம் போன்ற வன்முறைக்குரிய வடிவங்களை, அதிகாரங்களைத் தூக்கிப் பிடிப்பது இது எல்லாமே பெண்களுக்கு எதிரான கருத்தியலே. குடும்பம், அரசு, திரைப்படங்கள் ஆகிய மூன்று சமூக நிறுவனங்களுக்கும் இதை மாற்றியமைப்பதில் பங்கு இருக்கிறது.


செப்டம்பர் மாத இனிய உதயம் இதழில் வெளிவந்த எனது கருத்துரையை உள்ளடக்கிய விரிவான கட்டுரை

No comments:

Post a Comment