Nov 11, 2014

செல்ஃபியும் சமூகமும்
சமீப காலங்களில், இணைய அத்துமீறல்கள் குறித்த செய்திகள் ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய ஒன்றுதான்.  இச்சூழலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் அவரது தோழியான நவ்யா (அமிதாப்பச்சனின் பேத்தி) என்று சொல்லப்படும் இருவர் காருக்குள் நெருக்கமாக இருக்கும் வீடியோ எம்.எம்.எஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது இப்போது தீவிரமான விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

தம்மைத் தாமே படம் அல்லது வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிரும் செல்ஃபி எனப்படும் ஒரு சுய-புகைப்படப் பரிமாற்றமானது தற்போது மிகவும் பெருகிவிட்டது. பதின்பருவ வயதினர் முதல் வயதில் முதியவர்கள் வரை கிட்டத்திட்ட இதற்கு  அடிமைகளாகி வருகின்றனர் என்றால் அது மிகையாகிவிடாது.   

அழகு பற்றிய பிரக்ஞையும், அடையாளச் சிக்கலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஒருவகையில் இந்த சமூக அமைப்பானது ‘தகுதி’ படைத்தவர்களுக்கே மரியாதை கொடுப்பது அதற்கு முக்கியக் காரணம்.  இந்த வேட்கையை வியாபார நிறுவனங்கள் பலவகைகளில் உக்குவிக்கின்றன. 

புகைப்படங்களில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பார்க்கும் வசதியை இந்த செல்ஃபிகள் வழங்குவதால், ஒவ்வொரு உடையிலும், அலங்காரத்திலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து ரசிப்பதோடு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கருத்துப் (பாராட்டுகள்) பெறுவது கிட்டத்திட்ட ஒரு  போதைப் பழக்கம் போல் ஆகிவிட்டது. (ஆக்கப்பட்டுவிட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்).

 எந்த அளவுக்கு அடிமைத்தனம் கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். 

இணைய மற்றும் தொழில்நுட்ப தாக்கங்களுக்கு பதின்பருவ வயதினர் வெகு எளிதில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் இதன் கவரிச்சித் தன்மையில் தன்வயம் இழந்து பகிரக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பல தொல்லைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாக நேர்கிறது. ஆணாதிக்கச் சமூக கட்டமைப்பின் விளைவாக, பாலியல் ரீதியாக அப்பெண்கள் பற்றிய தவறான முன்முடிவுகளுக்கு வரவும் இது வகை செய்கிறது.

பல வேளைகளில் சக தோழர்கள், காதலர்கள் என்று சொல்லிக் கொள்வோருமே பெண்களின் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் ஆபாசமாக உலவவிட்டு, சம்பந்தப்பட்டப் பெண்களை தங்கள் பாலியல்  இச்சைக்கு அடிபணியச் செய்வதும் நடந்துவருகிறது. ஆகவே எவராக இருப்பினும், புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க ஆயத்தமானால் - பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, தங்களது அந்தரங்கத் தருணங்களை எவரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது.  ஏனென்றால், என்னதான்   ‘கேட்ஜெட்’டில் இருந்து அவை அழிக்கப்பட்டாலும்கூட இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அழிக்கப்பட்டக் கோப்புகளை மீண்டும் எடுத்துவிடலாம். பெரும்பாலும் நம் கேட்ஜெட்களை விற்பதற்காகவோ அல்லது பழுதுபார்க்கவோ கொடுக்கும் இடங்களில் நமக்குத் தெரியாம்லே நமது கோப்புகள் பிரதி எடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. நண்பர்களும் இத்தகைய திருட்டு வேலைகளைச் செய்யும் சாத்தியம் உண்டு.

வெறும் கட்டுப்பாடுகள் மூலம் நம் பிள்ளைகளை இதிலிருந்து நாம் காத்துவிட முடியாது. புறச் சூழலின் தாக்கம் அதி தீவிரமாக இருக்கையில் என்னதான் பெற்றோர்கள் கண்காணித்து வந்தாலும், எச்சரித்து வந்தாலும் பதின்பருவ வயதின் கோளாறு காரணமாக அது சர்வாதிகாரம் போல் அவர்களுக்குத் தோன்றி விடுகிறது. பல நேரங்களில் அவர்கள் மூர்க்கமாக எதிர்வினையாற்றும் அளவுக்கும் சென்று விடுகின்றனர்.

இச்சூழலில் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்: 
முதலில் அவர்களே இந்தச் சமூக வலைதளங்களை சிலக் கட்டுப்பாடுகளோடு கையாள வேண்டும்.

 குழந்தைகளுக்கு அரசியல் பொருளாதார அறிவூட்ட வேண்டும். அதாவது வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள், நுகர்வு கலாச்சாரம் இவற்றைப் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றியும் குடும்பமாகச் சேர்ந்து ஒரு விமர்சன உரையாடலை நிகழ்த்தலாம். அதில் வலியுறுத்தப்படும் அழகு, சிவப்பு நிறம், அந்தஸ்து, ஆடம்பரங்கள் என எல்லாமே போலியானது என்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்யலாம்.

நேரடியாக விமர்சிக்கப்படும் போது தம்மைக் குற்றவாளிகளாகப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள் என்று குழந்தைகள் கருதுவார்கள். ஆனால் இது ஒரு வணிகரீதியான மூளைச் சலவை, அதனால் ஏற்பட்டிருக்கும் சில ஆபத்தான நிகழ்வுகள் இவற்றைப் பற்றி குடும்பமாகப் பேசுவதும், அதுபற்றி குழந்தைகளின் கருத்தைக் கேட்பதும், அவர்களுக்குத் தங்களது பொறுப்பை உணர்த்துவதும் பயன் தரும்.

இரண்டாவதாக, ஒருவேளை ஒரு உணர்ச்சி வேகத்தில் படங்களைப் பகிர்ந்து எவரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைகள் கொடுத்தால், அதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்துவதுடன், பிரச்சினையை நிதானமாகக் கையாள வேண்டும். மானம் அவமானம் என்று அச்சுறுத்தாமல் அந்த நிலையிலாவது அத்தளங்களைப் பயன்படுத்துவதை சிலக் கட்டுபாடுகளோடு பயன்படுத்தச் சொல்லி வழி நடத்தலாம். 

தம் மகனோ அல்லது மகளோ பதின்பருவத்திலேயே காதல்வயப்பட்டு அவர்கள் தனிமையில் இருக்கும் தருணங்களைப் பதிவு செய்து அதைப் பொதுவெளியில் காண நேர்ந்தால் ஆணாதிக்க ஒழுக்க விதிகளை மனதில் கொண்டு இச்சூழலைக் கையாளக் கூடாது. அதேவேளை எந்த ஒரு தவறான சீண்டல்களையும் மனத் துணிவுடன், தேவைப்பட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் துணிவைப் போதிப்பதே நல்லது. மகனைப் பெற்றவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகளை, சினிமாக்கள் ஏற்றிவைக்கும் பாலியல் கவர்ச்சி பற்றிய கருத்துகளை மாற்றியமைக்கத் தேவையான அறிவை அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வறிவு கல்விக் கூடங்களுக்கு வெளியில்தான் கிடைக்கும்.

மற்றபடி இதில் ஒழுக்கரீதியான சரி தவறுகளுக்கு இடமில்லை. உண்மையில் இந்த தொழில்நுட்பங்கள் வரவேற்கத் தக்கவையே, குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்கள், நண்பர்களோடு மகிழ்ச்சிகரமானத் தருணங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே. 

கவனமாகக் கையாண்டால் மகிழ்ச்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். 

நன்றி, உயிரோசை மாத இதழ்.No comments:

Post a Comment