Jul 21, 2014

இலக்கிய நிகழ்வு – 2


நான் தேனிக்கு இடம் பெயர்ந்த பின்னர் பங்கேற்ற இரண்டாவது இலக்கிய நிகழ்வு சக்தி ஜோதியின் கவிதை உலகம் பற்றிய திறனாய்வுக் கூட்டம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை ஏற்பாடு செய்திருந்தது.

வேலை காரணமாக சற்றுத் தாமதமாகவே செல்ல முடிந்தது. தோழர் ஜாஸ்லின் பேசிக் கொண்டிருந்த போது நுழைந்தோம். அரங்கு நிறைந்த கூட்டம். வெகு நாட்கள் கழித்து பல தோழர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அறியப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது திறனாய்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஓர் ஆரோக்கியமான நிகழ்வாக அது இருந்தது. 

நானும் வசுமித்ரவும் பங்கேற்பாளர்களாக மட்டுமே சென்றிருந்தோம், ஆனால் பேச வேண்டிய ஒரு சூழல் வந்தது. எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.

பேச வந்த தோழர் ஒருவர் “சக்தி ஜோதியின் கவிதைகள் சக்தி ஜோதி போல் அல்லாது கூடுதலாக அழகானது” (வார்த்தைகள் மாறி இருக்கலாம் ஆனால் அந்தப் பொருளில்தான் பேசினார்) என்று பேச்சைத் தொடங்கினார். ஒரு நிமிடம் நான் துணுக்குற்றேன். என்ன இது ஒரு கவிதையை விமர்சிக்க எதற்காக ஒரு படைப்பாளரின் தோற்றத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார் என்று தோன்றியது (அதுவும் அங்கு ஜெயமோகனும் இல்லையே!). சக்தி ஜோதி அருகில்தான் அமர்ந்திருந்தார். வசுமித்ர, ஆதிரன், ஸ்ரீசங்கர் ஆகியோரும் இருந்தனர்.

“என்ன சக்தி இவரு இப்படி பேசுறாரு” என்றேன். அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததால் அதைக் காதில் வாங்கவில்லை. “என்ன” என்றனர் மூவரும். “இப்படிப் பேசுகிறாரே” என்றேன். சக்தி “அப்படியா” என்றார் “இல்லை இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.. அதெப்படி உங்களின் தோற்றத்தை வைத்து ஒருவர் பேசலாம் அதிலும் அதைவிட இது கூடுதல் அழகு என்றால் என்ன அர்த்தம்… என்ன அபத்தம் இது” என்று சொல்லி ஏற்பாட்டாளர் விசாகனிடம் எனது கோபத்தைப் பதிவு செய்தேன். “பேசுறீங்களா” என்றார். நான் தயார் என்றேன் “ஆனால் இன்னொரு தடவை அவர் என்ன சொன்னாருன்னு உறுதி படுத்திக்குவோம்” என்றேன். அந்த தோழர் பேசி முடித்ததும் என்னை அழைத்தார்கள்.

அதற்கு முன்னர் சக்தி ஜோதியின் பறவை தினங்களை பரிசளிப்பவள் எனும் கவிதை நூலை ஆதிரன் வெளியிட என்னைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்லி இருந்தார்கள். வெளியீட்டின் போது கவிஞர் கொற்றவை என்று அழைத்தார்கள்.

ஆகவே அதற்கும் சேர்த்து ஒரு விளக்கத்தை கொடுக்க எண்ணி மேடை ஏறினேன்.

“எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் கொற்றவை, ஆனால் நான் கவிஞர் இல்லை.  நான் எழுதுகிறேன், மொழி பெயர்க்கிறேன். (கவிதை எழுதும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன் சொன்னேனா என்பது நினைவில்லை) மற்றபடி என்னை கவிஞர் என்று அறிமுகம் செய்தது தவறு. அதுவும் இது ஒரு கவிஞரின் படைப்புகளுக்கான அரங்கு, சக்தி ஜோதி போன்ற ஒரு கவிஞர் இருக்கையில் என்னை கவிஞர் என்று அறிமுகம் செய்வது பொருந்தாது. அதுமட்டுமல்லாமல் எப்போதும் தோழர் கொற்றவை என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்” என்றேன்.

விசாகன் தலையாட்டினார்.

“நான் இங்கு மேடை ஏறியது ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்ட. எனக்கு முன்னால் பேசிய தோழர் தனது திறனாய்வைத் தொடங்கும் முன் ஒரு சிறு குறிப்பைக் பகிர்ந்து கொண்டார், தோழர் அதை மறுபடியும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்”

//சில நேரங்கள்ல இப்படித்தான் ஏதாவது ஒண்ணு சொல்லி மாட்டிக்குவோம். அதுவும் வசுபாரிதி அங்க இருந்து எட்டி எட்டி பார்க்கும்போதே ஏதோ பிரச்சினைன்னு நினைச்சேன் என்பதாகத் தொடங்கி “சக்தி ஜோதியின் கவிதைகள் சக்தி ஜோதி போல் அல்லாது கூடுதலாக அழகானது ன்னு சொன்னேன்” // என்றார்

“நன்றி” என்று மைக்கை வாங்கினேன். இந்த ஒப்பீடு எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எதற்காக ஒருவரின் அழகோடு ஒப்பிட்டு அவரின் கவிதையைப் பேச வேண்டும். இது அவர் பெண் என்பதாலேயே செய்யப்பட்ட ஒப்பீடு… அழகு என்றால் என்ன எனும் கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. வெள்ளைத் தோலும், ஜொலி ஜொலிப்பும்தான் அழகா. எதுவாக இருந்தாலும் எதற்காக அவரை விட அவர் கவிதை கூடுதலாக அழகானது என்று சொல்ல வேண்டும்.  ஒருவேளை சக்தி ஜோதிக்கு அது மகிழ்ச்சியை அளிக்கும் என்றுகூட அப்படி அவர் சொல்லி இருக்கலாம் (உபயம் ஸ்ரீசங்கர்) ஆனால் அது சரியான பேச்சா. ஒரு பெண் என்பதாலேயே அவள் சார்ந்த விஷயத்தை இப்படி அழகிலிருந்து தொடங்கும் இந்த போக்கு எனக்கு வருத்தத்தைத் தருகிறது.  அதுவும் நிறைய வாசிப்பவர்களாக, நிறைய உரையாடுபவர்களாக இருக்கும் ஒரு அரங்கில் இப்படி ஒரு ஒப்பீடு வருவது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது. தயவு செய்து இதுபோன்ற ஒப்பீடுகளை தோழர்கள் கைவிட வேண்டும், தவிர்க்க வேண்டும். இதைச் சுட்டிக்காட்டவே நான் இந்த மேடை ஏறினேன்.

என்று சொல்லி முடித்தேன். அந்த தோழர் விளக்கம் கொடுத்தார். அதாவது, தான் அப்படி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆளில்லை என்றும் எனது புரிதலில்தான் சிக்கல் உள்ளது! என்றும் இருப்பினும் அது  ‘தவறாகப் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில் அச்சொற்களைத் திரும்பப் பெறுவதில் தனக்குப் பெருமை’! என்றும் சொல்லி முடித்தார்.

அதற்கும் என்னிடம் பதில் இருந்தது. ஆனால் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பாதிக்கப்படும் என்று அமைதியாக எனது இடத்தில் வந்து அமர்ந்தேன். ஆனால் ஒரு விஷயத்தை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது வசுபாரதியை (வசுமித்ர) வைத்து என்னை மதிப்பிடுவது எனக்கு சற்று எரிச்சலூட்டுவதாக இருக்கிறது, எனக்கும் சுயபுத்தி உள்ளது. மேலும் ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிப்பதாலேயே ஒருவரை ‘வம்பு’ செய்பவர் என்று எப்போதும் முத்திரை குத்துவது முதிர்ச்சியின்மை. (வசுவுக்கு தேனியில் அப்படி ஒரு ‘இமேஜ்’ – தேனியில் மட்டுமா!!!)

அடுத்து தோழர் பொன்முடி பேசினார். என்னுடைய கருத்டோடு சற்று உடன்படுவதாகச் சொல்லி அவர் சில கருத்துக்களைப் பதிவு செய்தார். பின்னர் கூட்டம் திறனாய்வுக் கூட்டமாகத் தொடர்ந்தது. மிகவும் ஆர்வமூட்டும்… சில இடங்களில் சலிப்பு தட்டும் விமர்சனங்கள் என்றிருந்தாலும் அவர்கள் பேசியதை கட்டுரையாக வாங்கி விசாகன் பதிவு செய்ய வேண்டும்.

பேசியவர்களில் பெரும்பாலும் பெண் மனம், ஆண் மனம் எனும் ஒரு ஒப்பீட்டை வைத்தார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு அப்பேச்சுக்கள் சலிப்பூடியது.  பெண் மனம், ஆண் மனம் என்று ஒன்று இயல்பிலேயே இருக்கிறதா? அதிலும் இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்து வாசிப்பவர்கள், எழுதுபவர்கள்கூட ஏன் இந்த சலிப்பூட்டும் பகுப்பாய்வை முன் வைக்கிறார்கள் என்று தோன்றியது. மனம் என்பதே புறச் சூழலின் மூலமாக பெறும் அனுபவங்களின் தொகுப்புத்தானே. அதிலும் மனம் என்பது மூளைதான். மூளையில் தேங்கும் அனுபவங்கள் அதன் விளைவாக நமக்குள் நிகழும் உரையாடல்கள், எழும் கேள்விகள், ஒடுக்கப்படும் உணர்வுகள் (suppressed emotions), எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், லட்சியம், வேட்கை என எல்லாம் விளைவுகள். அந்த விளைவுகளை பகிர நினைக்கும் போது நமக்கு பயன்படும் கருவி மொழி. அம்மொழி பல வடிவங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. சொற்கள், மௌனம், உடல் வெளிப்பாடு என்பதாக… சொற்கள் எனும் வடிவத்தை எடுத்துக் கொண்டோமேயானால் அதில் - உரைநடை, கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், அபுனைவு (கட்டுரை) என்று துணை வடிவங்கள் இருக்கிறது (உருவனது). சமூகத்தோடு உரையாட விரும்பும் நபர் ஒருவர் அவருக்கு விருப்பமான அல்லது அவருக்கு கைவரக்கூடிய ஒரு வடிவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

தனக்கு ஏற்படும் அனுபவங்கள், தான் பார்க்கும்-வாழும் உலகம், சமூகப் பிரச்சினைகள், இன்னபிற உணர்வுகளை ஒருவர் பதிவு செய்கிறார். எல்லாம் அனுபவத்திலிருந்தும் அவதானிப்பிலுருந்தும் எழுபவை. இது இப்படி இருக்க ஏன் ஒரு படைப்பில் ஆண் மனம் பெண் மனம் என்று எழுதுபவரின் பால் சார்ந்து இங்கு திறனாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன? ஆணும் அக உணர்வை எழுதுகிறார், பெண்ணும் அக உணர்வை எழுதுகிறார். ஆண் அரசியலையும் எழுதுகிறார், எழுதாமலும் இருக்கிறார். அதுபோலவே பெண்களில் சிலர் அரசியலை கருப்பொருளாகக் கொண்டு எழுதுகின்றனர், சிலர் எழுதுவதில்லை. ஆனால் பெண் எழுதுவதே ஒரு அரசியல் செயல்பாடு என்பதே எனது கருத்தும்.  அதிலும் கௌரவக் கொலைகளும் கலாச்சார காவல் அராஜகங்களும் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் (எக்காலத்திலும் இது இப்படியாகத்தான் இருந்திருக்கிறது என்பது வேறு விஷயம்) ஒரு பெண் தன் அக உணர்வை, காதலை, தன் எதிர்பார்ப்புகளைப் பதிவு செய்வதே ஒரு துணிவு மிக்கச் செயலே. ஆனால் அதை மட்டுமே பெண்கள் எழுதிக் கொண்டிருந்தால் போதுமா எனும் கேள்வி அவசியம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே; அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது எழுதுபவரின் தேர்வு. அதற்கும் அப்பால், அவரின் வரம்புகள் சார்ந்தது. அதேபோல் இக்கேள்வி ஆண்களை நோக்கியும் வைக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை ஒருவர் எழுதாமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். திறனாய்வு என்று வரும்போது பாடுபொருள் சார்ந்தும் ஆய்வை முன் வைப்பது ஒரு பாடதிட்டம் போன்றதே, அதை கவனத்தில் கொள்வதில் தவறில்லை. ஆனால் அதை அவதானிப்பாக வைப்பதே சரியாக இருக்கும். நீங்கள் ஏன் இதை எழுதவில்லை என்று கேள்வி கேட்பது சரியாக இருக்காது என்பது என் கருத்து. (இதையொட்டிய கருத்துக்கள் நிகழ்ச்சியிலேயே பகிரப்பட்டது.)

அடுத்ததாக, பெண் கவிதை பற்றிய திறனாய்வில் (நேற்றைய கூட்டத்திலும்)  பென் – இயற்கையின் பிரதி, இயற்கையை சார்ந்திருப்பவள், அவள் இயற்கையோடு ஒன்றி இருப்பவள், அவள் அன்பு மிக்கவள், அன்பே உருவானவள், அவளுள் அன்பு ஊற்றெடுப்பவள்…. இயற்கை…. இயற்கை… - கொஞ்சம் சலிப்பு தட்டி விட்டது.

எல்லாமே இயற்கைதானப்பா ஏன் இப்படி உயிரை வாங்குறீங்க என்று கத்தத் தோன்றியது.  ஆணும் இயற்கைதான் பெண்ணும் இயற்கைதான் இதில் என்ன பிரச்சினை. ஆண் வன்முறையாளனாகிவிட்டான், அவன் குடித்து விட்டு வருகிறான், பெண் காத்திருப்பவளாக இருக்கிறாள், காத்திருத்தலும், சகித்துக்கொள்வதுமே அவள் பிழைப்பு. ஆண் இயற்கையை விட்டு வெகு தூரம் சென்று விட்டான், பெண் இயற்கைக்கு நெருக்கமாக இருக்கிறாள்… இயற்கை போல் பெண்ணும் உயிரை உற்பத்தி செய்கிறாள்… (குழந்தை பெற இயலாத ஒரு பெண்ணிடம் அன்பு இருக்காதா – விரிவாகப் பேச வேண்டும்)… பெண் அன்பானவள்… இயற்கை இயற்கை….இயற்கை

ஆண் பெண் எதிர்நிலைகள், கணவன் மனைவி முரண்பாடுகள், ஒடுக்கப்படும் காமம்…. அக மனம்…. முத்தம் முத்தம் முத்தம்….  ஆண் ஒடுக்குபவனாக இருக்கிறான்… பெண் ஒடுக்கப்படுகிறாள்… அவள் மனம் அன்புக்காக ஏங்குகிறது… இயற்கை இயற்கை இயற்கை…

எல்லாம் சரிதான் இதிலிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதே என்னை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி. ஆண் பெண் எதிரிடைகள்தானே – ஆமாம்! அவர்கள் எப்போதும் சண்டை போடுபவர்கள்தானே – ஆமாம்! யார் இல்லை என்று சொன்னது?

பெண்ணை அதீதமாக இயற்கை இயற்கை என்று சொல்வதில் மீண்டும் அவள் அழகுக்குள்ளும், ஆண்களுக்கான ரசனைப் பொருளாகவும் அடைக்கப்படுகிறாள் என்பதே எனது கோபம். மேலும் அன்பானவள் என்ற ஒரு பொது புத்தி சார்ந்த பேச்சானது மீண்டும் பெண்ணை ‘பெண்மைக்குள்’ சுருக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது என்பதே எனது கவலை. மேலும் ஆண் பெண் எனும் எதிரிடைகளில் அவர்களின் சிந்தனைகளுக்கு ஆனாதிக்கச் சமூகக் கட்டமைப்பே பெரும் காரணியாக இருக்கிறது. இதை நம் தோழர்களும் நன்றாகவே அறிவார்கள். இருப்பினும் அந்த எதிரிடைகளின் ‘சண்டைகளை’ சுவாரசியம் கருதி நையாண்டி செய்வதாலோ அல்லது பெண்ணின் பாடுகளைப் புரிய வைக்கும் முயற்சியினாலோ அவர்களின் பேச்சு நூலிழையில் பிசகி விடுகிறது.

இங்கு பிரச்சினை என்ன ஆணாய் இருப்பதும் பெண்ணாய் இருப்பதுமா? 
ஏன்? எப்படி? ஒரு நபர் ஆணாகவும்(ஆண்மையோடும்) பெண்ணாகவும் (பெண்மையோடும்) இருக்கிறார் என்பதுதானே?

சமூகமயமாக்கலின் விளைவாக ஆண் மனம், பெண் மனம் எப்படி உருவாக்கப்படுகிறது. அந்தக் கட்டமைப்புக்குள்ளான மனம் படைப்புகளில் எப்படி பிரதிபலிக்கிறது? அதே போல் அந்தக் கட்டமைப்பை தகர்த்து ஒரு தேடலை மேற்கொண்ட மனம் எப்படி பயணிக்கிறது. ஆண் - பென் எனும் பால் அடையாளங்கள் ஒரு சமூகப்பாத்திரமாக எப்படி வார்ப்பு செய்யப்படுகிறது? போன்ற சமூகக் காரணிகளை சிறு குறிப்பாகவேனும் குறிப்பிட்டு பேசாமல் ஆண் பெண் என்று எதிர்நிலைகளை ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்க முடியுமா? எழுத்தாளர்களாக இருந்துக்கொண்டு அதை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது ஆபத்தானதும் கூட. ஏனென்றால் பொது புத்தியில் ஏற்கனவே ஊறிப் போயிருக்கும் ‘ஆண்’ ‘பெண்’ பற்றிய ஒரு அங்கலாய்ப்பை அப்படியே நாம் வழிமொழிவதாகி விடுகுறது. சக்தி ஜோதியின் கவிதைகளை வெறும் ஒரு படைப்பாக மட்டுமே முன் வைத்து பேசி இருந்தால் நான் இந்த அவதானிப்பை இங்கு பதிவு செய்திருக்க மாட்டேன்.

பெண் பெண் பெண், பெண் மனம், பெண் மனம்…என்று ஏதோ புரோகிதர்கள் மந்திரம் ஓதுவது போல் ஒரே இரைச்சல். சக்தி ஜோதி ஒரு பெண் தான் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் பெண்ணாக இருப்பதால் மட்டுமே அந்தக் கவிதைகளை அப்பொருளில் எழுதியுள்ளாரா அல்லது அவருக்கு வாய்க்கப் பெற்ற உலகத்திலிருந்து அவற்றை எழுதியுள்ளாரா? அவரின் உலகத்திற்கும், புறச் சூழலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? இது போன்ற அக உணர்வை, காமத்தை, முத்தத்தை… இன்ன பிற ‘அந்தரங்க உணர்வை’ ஒரு ஆண் கவிஞன் எப்படி பதிவு செய்துள்ளான், அதை சக்தி ஜோதி எவ்வாறு பதிவு செய்துள்ளார் அதில் ஏதும் மாறுபாடுகள் இருக்கிறதா? ஒரு ‘ஆண்’  ‘பெண்ணின்’ ’குரலில்’ அத்தகைய ‘அக’ உணர்வை பதிவு செய்துள்ளாரா…. இவ்வாறான ஒப்பீடுகள் செய்யப்பட்டிருக்குமாயின் அவர்களின் ஆண் x பெண் ‘திறனாய்வு’ கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி இருக்கும். 

அதுமட்டுமல்லாது ஒரு எழுத்தாளருக்கென்று அறிவூட்டும் சமூகக் கடமை என்று ஒன்றிருப்பதாக நான் கருதுகிறேன். குறிப்பாக பாலின ‘மூட நம்பிக்கைகளை’ துடைத்தெறிவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு அருமையான வாய்ப்பாக இது போன்ற நிகழ்வுகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதற்காக கோட்பாடுகளை வந்திருப்பவர்களின் முகத்தில் வீச வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒரு எளிய அறிமுகம்… ஒரு சிறிய முயற்சி… எதை எதையோ தொட்டுப் பேசி எங்கெங்கோ தாவிச் சென்று… சங்க இலக்கியம்… வெள்ளி வீதியார் என்றெல்லாம் பேசி சினிமாப் பாடல் வரை மேற்கோள் காட்டி பேச முடியும்போது ஏன் சமூகத்திற்கு இன்று அவசியமாகத் தேவைப்படும் ஓர் அறிவூட்டும் அல்லது அதை உரையாடலுக்கு உட்படுத்தும் ஓர் முயற்சியை ‘எழுத்தாளர்கள்’ மேற்கொள்ளக்கூடாது என்பதே என் கேள்வி. அதிலும் கவிதை பற்றிய திறனாய்வில் அதற்கு கூடுதல் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன்.
இந்தக் குறை ஒருபுறமிருந்தாலும் தோழர்களின் பேச்சில் கற்றுக் கொள்ளவும் சங்கதிகள் இருக்கத்தான் செய்தது. பெண்களுக்காகப் பேசுகிறோம் எனும் ஓர் அதீத அக்கறையில் சில நேரங்களில் முற்போக்குச் சிந்தனை கொண்ட  நம் தோழர்கள் இப்படி carry over ஆகிவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேல், பால் அடையாளம் என்பதும் வெளிப்பாடுகளும் பிரச்சினை அல்ல, பால் அடையாளம் சார்ந்த சமூகமயமாக்கலே பிரச்சினை. அப்படி இருக்கும் போது இரண்டு ஆணாக இருந்தாலும் சண்டைகள் நிகழத்தான் செய்கிறது, இரண்டு பெண்ணாக இருந்தாலும் சண்டைகள் நிகழத்தான் செய்கிறது, தன் பால் உறவு கொள்பவர்கள், பல பால் உறவு கொள்பவர்கள் என அனைவருக்குள்ளும் சண்டைகள் இருக்கிறது முரண்பாடுகள் இருக்கிறது.  இரண்டு பேர் என்றால் இரண்டு மூளைகள், இரண்டு அனுபவங்கள், இரண்டு சிந்தனைகள், இரண்டு எதிர்பார்ப்புகள், சில வேளைகளில் இணக்கம் பல வேளைகளில் முரண்பாடு – இது வெகு இயல்பானது.

ஆனால் ஒரு ஆண் ஏன் ஆணாக சிந்திக்கிறான், ஒரு பெண் ஏன் பெண்ணாக சிந்திக்கிறாள், சில பெண்களும் ஏன் ஆணாக சிந்திக்கிறார்கள் என்பதை உள்ளடக்கிய திறனாய்வும், பேச்சும் அவசியமாகிறது. சமூக மாற்றத்திற்கும், அறிவுத் தேடலுக்கும் தூவப்படும் விதையாக அது அமையும்.

இறுதியாக,

சக்தி ஜோதி ஏற்புரை வழங்கினார். சக்தி ஜோதி எனும் நபரை அவர் எழுத வந்த பின்னணியை, அவரது வாசிப்பின் தீவரத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.  கூட்டத்தின் நடுவே சக்தி ஜோதியின் கவிதைகள் சிலவற்றை வாசித்துப் பார்த்தேன். இத்தனை நாள் இதை வாசிக்காமல் போனோமே எனும் ஓர் உணர்வை அது ஏற்படுத்தியது. சக்தி ஜோதியிடம் ஓர் வளமான சொல்லாட்சி இருக்கிறது. வித்தியாசமான படிமங்களை அவர் காட்சிக்கு வைக்கிறார். வியக்கக்கூடிய, சில நேரம் காதல் கொள்ளக்கூடிய படிமங்களாகவும் அவை இருக்கின்றன. (உ.ம் – தானியக் காளி, சொல் எனும் தானியம்).  மொழியும் கவிதை படைக்கும் திறனும் அவருக்கு வெகு அனாயசமாகக் கைகூடி இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. எந்த செயற்கையான முனைப்புகளும், செப்படு வித்தைகளும், சுய திணிப்புமின்றி கவிதை தானாக நிகழ்வது போலவே இருக்கிறது. கவிதை கவிதையாக இருக்கிறது. தலைப்புகளிலேயே அது வெளிப்படுகிறது.

வாழ்த்துக்கள் சக்தி ஜோதி. மீதமுள்ள கவிதைகளையும் விரைவில் படிக்கும் ஆர்வத்தை அவரின் பேச்சும் கவிதையும் ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர் விசாகனுக்கும் வாழ்த்துக்கள். 

தேனி எனது வாழ்வை மேலும் உற்சாகப்படுத்துகிறது.....No comments:

Post a Comment