Jun 20, 2014

மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை (தொடர்ந்து) கொளுத்துவோம்! - ராஜன் குறை கிருஷ்ணன்


சமூக முரண்பாடுகள் உண்மையில் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டு இருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் உருவான சுதந்திரவாத, மக்களாட்சி இலட்சியங்கள் ஒவ்வொரு நிலையிலும் ஆதிக்க சக்திகளுக்கு உவப்பாக இல்லை. பெண்ணியம் என்பது கடைசியாக வீசிய மிகப்பெரிய பேரலை. பிரஞ்சுப் புரட்சிக்கு தூண்டுகோலாயிருந்த ரூஸோவின் “சமூக ஒப்பந்தம் (Social Contract) தலைப்பினை எடுத்து மேற்கத்திய அரசியல் தத்துவம் உண்மையில் “பாலியல் ஒப்பந்தம்” (The Sexual Contract) என்று வாசித்த கரோல் பாட்மெனின் நூல் மிகப்பெரிய அறிவார்த்த புரட்சி என்றால் மிகையாகாது. ஆனால் 1988-இல் கரோல் பாட்மென் மேற்கத்திய அரசியல் தத்துவ வரலாற்றை நிர்நிர்மாணம் (de-construct) செய்யும் இந்த நூலை எழுதுவதற்கு முன்பே நூறாண்டுகளாக அரசியலுக்கு வெளியிலும் சமூக கலாசார தளங்களில் பெண்களின் சமபங்கு குறித்து பெரியதொரு விழிப்புணர்வு உலகெங்கும் பரவியிருந்தது எனலாம். ஈரோட்டுப் பெரியாரும் எட்டையபுரம் சுப்பிரமணிய பாரதியும் அதன் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள்.

பெண் என்ற சமூக அடையாளத்தின் பிரச்சினை என்னவென்றால் அந்த அடையாளத்தை எந்த பெண் கையிலெடுப்பதும் அந்த பெண்ணுடன் வசிக்கும் ஆணுக்கு தொல்லையாக மாறுவதுதான். மிக ஒடுக்கப்பட்ட சமூக குழுவிலும் பெண் ஆணால் ஒடுக்கப்பட்டவளாக அல்லது அவனுக்கு வசதியான விதத்தில் கட்டமைக்கப்படவளாக இருக்கிறாள். குறியியக்கம், மொழி ஆகிய வலைப்பின்னல்கள் மூலம் மனிதன் கட்டமைத்த ஒடுக்குமுறைகளில் மிக நுட்பமானதும், சிக்கல் மிக்கதுமான ஒடுக்குமுறை பெண் உடல்களை பெண் தன்னிலைகளாக உருவாக்கும் செயல்தான். கடந்த முப்பதாண்டுகளாக உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் படிக்கும் யாரும் இந்த நுண் ஒடுக்குமுறை குறித்த ஆழமான புரிதல்களை சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் சில ஆண் உடல் கோழைகள் அங்கும் அரற்றிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கத்தான் செய்கின்றன (ஹார்வர்டு பல்கலை முன்னாள் தலைவர் உட்பட).

அதன்பிறகு இன்று ஏதோ பெண்ணிய அலை ஓய்ந்துவிட்டது என்ற ஒரு ஊடக மாய்மாலத்தை வலதுசாரி சக்திகள் செய்கின்றன. அது மிகப்பெரிய அபத்தம். அலை அலையாக பெண்ணிய சிந்தனை இன்று உலகின் ஒவ்வொரு சமூகப்பகுதியிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஏராளமான பெண்கள் எழுத முற்படுவதும்.

இங்கேதான் ஒரு பிரச்சினை வருகிறது. பெண்கள் எழுதினால் அதற்கு அதிக கவனம் கிடைக்கிறது. அது தரமாக இல்லாவிட்டாலும் முன்னிலைப் படுத்துப்படுகிறது என்று ஒரு பிரச்சினையை சில ஆண் உடல் கோழைகள் முன்வைக்கிறார்கள். மேலாக கேட்டவுடன் பெரிய நியாயம் போல இது தொனிப்பதால் பிற ஆண் உடல்களில் தங்கியுள்ள ஆணாதிக்க ஊற்றுகள் பீரிடுகின்றன. எவ்வளவு பெரிய அபத்தம் இது என்பதை சிறிது யோசித்தாலும் கூட யார் வேண்டுமானாலும் விளங்கிக்கொள்ள முடியும். தோழர்களே! ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள். இந்த ஆண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்கள் மீது இதே குற்றச்சாட்டை வைத்ததில்லையா? தகுதியில்லாவர்கள் கவனம் பெற்றுவிட்டார்கள், தகுதியுள்ளவர்கள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக கலை, இலக்கிய, சிந்தனை வெளிகளில் நிலவுவதுதானே? இதில் ஆணெண்ண, பெண்ணெண்ண? பெண்களுக்கிடையிலும் தகுதியும், கிடைக்கும் கவனமும் சரியான விகிதத்தில் இல்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. சமூக இயக்கம் எப்பவுமே பழுதுகளுக்கு உட்பட்டதுதான்.  

ஆனால் பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே கவனம் பெற்றுவிடுகிறாரகள் என்ற ஜெயமோகனின் கூற்று ஊரே நன்கறிந்த அவருடைய அழுக்கு பாசிச மனதின் கூற்று. அவர் அடிப்படையில் அருவருக்கத்தக்க ஆணாதிக்கவாதி என்பதை அவர் புனைவெழுத்தும் சரி, புனையாத எழுத்தும் சரி ஒயாமல் நிருபித்து வந்துள்ளன, எனவே அவர் இன்றைக்கு பொதுக்களத்தில் கவனம் பெற இதை மீண்டும் எழுதியதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. ஆனால் வியப்பெல்லாம் பிற ஆணுடல்களிடையே மெல்ல, மெல்ல அதற்கு பெருகி வரும் ஆதரவுதான்; என்ன நடக்கிறது இங்கே என்ற வியப்பை எனக்கு ஏற்படுத்துகிறது.

தோழர்களே! தயவுசெய்து ஒரு விஷயத்தை கவனியுங்கள். ஒரு வேளை இதில் ஒரு நியாயமான பிரச்சினை இருக்கலாம் என எடுத்துக் கொள்வோம். ஆணாதிக்க சமூகத்திற்கு எப்படியும் பெண்களை காட்சிப்பொருளாக்க வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் பெண் பிம்பங்களை குறித்து ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசியே தீரவேண்டும். இதனால் கலை, இலக்கிய தளத்திலும் பெண்கள் சிறிது சாதித்தவுடனேயே அவர்கள் மேல் புகழ் வெளிச்சம் பாய்வதால் அவர்கள் மேலும் சிறப்பாக படைப்பாக்க செயல்பாட்டில் ஈடுபடாமல் தடைபட்டு போய்விடுகிறது என்ற ஒரு நிலை இருப்பதாகக் கொள்வோம். (இவ்வித நிலையை உருவாக்குவதும் ஆண் ஆதிக்க சமூகமும், ஊடகமும்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.) இப்போது அக்கறையுள்ள ஒரு குரல் எப்படி ஒலிக்க வேண்டும்?

“பெண்களுக்கு சுலபத்தில் அங்கீகாரம் கிடைக்கும் நிலை அவர்களது படைப்பாற்றல் விகசிப்பதற்கு தடையாக மாறிவிடக்கூடாது. அவர்கள் தங்கள் மேல் விழும் புகழ் வெளிச்சத்தை கவனமாக புறந்தள்ளி அவர்களது படைப்பாற்றலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்.” இப்படி ஒருவர் சொன்னால் அது அக்கறை.
“பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. ஆண்களுக்கு கிடைப்பதில்லை” என்பது காழ்ப்பு. ஆணாதிக்கம்.

அப்படி பெண்களை அங்கீகரிப்பது யார் ஐயா? ஆண்கள்தானே? பெண்களா எல்லா ஊடகங்களையும் நடத்துகிறார்கள்? பெண்களா பட்டியல்கள் போட்டு யார் மனம் கவர்ந்த இளம் இலக்கியவாதி, முற்றிய இலக்கியவாதி என்று கூறுகிறார்கள்? இதுவரை எந்த பிரபல பத்திரிகையாவது பாமாவிடம் உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டு பட்டியல் வெளியிட்டிருக்கிறதா? சு.தமிழ்செல்வியிடம் கேட்டிருக்கிறார்களா? அப்படியே கேட்டு வெளியிட்டாலும் அதை யாரும் பொருட்படுத்தப் போகிறார்களா? “Can the subaltern speak?” என்ற பெண்ணிய மேதை காயத்ரி ஸ்பிவாக்கின் கேள்வியின் பொருளே அதுதானே?

எந்த இளம் பெண் எழுத வந்தாலும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உங்கள் எழுத்தை நான் கவனித்துவருகிறேன்; பிரமாதம் என்று வழிந்து நிற்பது ஆண்களின் குற்றமா? அல்லது அந்த பெண்களின் குற்றமா? பின்னர் அந்த பெண் யாரோடு நெருக்கமாக இருக்கிறாள் என்று புறம்பேசி கதை வளர்த்து திரிவது ஆண் எழுத்தாளர்களா? பெண் எழுத்தாளர்களா? பெண்ணை எந்த நிலையிலும் பெண்ணாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று ஆணாதிக்க திமிர் பிடித்து அலையும் எழுத்தாளர்கள் மத்தியிலிருந்து ஒருவர் சொல்கிறார்: “பெண்கள் அவர்களாக இருப்பதாலேயே கவனம் கிடைத்துவிடுகிறது”. அந்தக் “கவனத்தை” “அவர்கள் அவர்களாக இருப்பதற்கு” நீங்கள் ஏன் சார் தருகிறீர்கள்? எந்த ஆண் எழுத்தாளராவது ஒரு பெண்ணை சந்தித்தவுடன் “உன் எழுத்து சரியில்லை; நிறைய படி; பயிற்சி செய்” என்று சொல்லியிருப்பார் என்று என்னால் நம்பக்கூட முடியவில்லை. ஏன் என்று கேட்டால் அப்போது சொல்வார்கள்: “அவர்கள் இப்போதுதான் எழுத வருகிறார்கள்” என்று. ஒரு புறம் வக்கிரத்துடன் ஆசீர்வாதம் (vulgar patronization); இன்னொருபுறம் தகுதியில்லாமல் கவனம் பெறுவதாக தார்மீக ஆவேசம் (punitive anger). ஆணாதிக்கத்தின் டபுள் ஆக்டு சூப்பர் இல்லையா?

கடைசியாக ஒன்று. இந்த “தரம்” என்ற கேடுகெட்ட வார்த்தை ஒன்று உண்டு. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் கையாளும் அதே தகுதி தரம்தான் இதுவும். முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தரம் என்பதற்கு பிரபஞ்ச அளவுகோல் எதுவும் கிடையாது என்று அறிவுடையோர் சிலர் உணரத்தொடங்கி பல பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்று சொல்லலாம். தரம் என்பது சமூக இயக்கத்தில் முகிழ்வது. சினாய் மலைகளில் நெருப்புத்தூண்கள் உருவாக்கும் விதிகளின்படி உருவாவதல்ல. இலக்கிய விமர்சனம் என்பது தொடர்ந்து தரம் குறித்த விவாதத்தை நிகழ்த்துவது அவசியம். ஆனால் அதன் அடிப்படை விதி பெரியோரை வியந்தாலும் சிறியோரை இகழாததாகவே ஜனநாயகப் பொதுமன்றத்தில் இருக்க முடியும.

இந்த விவகாரத்தில் அடிபட்ட பெயர்களில் மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்று மறைந்த ஆர்.சூடாமணி. இவரது இலக்கிய மேதமையை புரிந்துகொள்ளாத  பொறுப்பற்ற பேச்சுகள் இலக்கிய விமர்சனம் என்பதோ திறனாய்வு என்பதோ இன்னம் தமிழில் எவ்வளவு கேவலமான இடத்தில் இருக்கிறது என்பதையே சுட்டுகின்றன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று சில உரத்த குரல்கள் எவ்வளவு சுலபமாக அபத்தத்தை உண்மையாக அலங்கரித்து வைத்துவிடுகின்றன என்று பார்த்தால் இந்த மொழியில் எழுதுவதற்கே அச்சமாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு பொறுப்பான மனிதன் ஜனநாயகப் பொதுமன்றத்தில் பெண்கள் என்ற அடையாளத்தை ஒட்டுமொத்தமாக சீண்டிப்பார்பானேயானால் அதன் பொருள் அவன் சமூகத்தின் அறவுணர்வினை சீண்டிப்பார்க்கிறான் என்பதேயாகும், தகுதியில்லாத பெண் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஒருவர் பொதுக்களத்தில் சொன்னவுடன், எத்தனை குரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. எவ்வளவு கேவலமான கேலிகளும், கிண்டல்களும் உருவாகின்றன என்று பார்த்தால் நீறுபூத்த நெருப்பாக பரவி நிற்கும் ஆணாதிக்க வெறி தெரியும்.

அதற்குத்தான் அன்றே சொன்னான் மகாகவி: “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று. தொடர்ந்து கொளுத்திக்கொண்டே இருக்க வேண்டும். சென்னை வீடுகளில் தினமும் கொசுக்கொல்லிகளை கொளுத்துவது போல. நிறுத்திவிடக் கூடாது.

நன்றி - ராஜன் குறை கிருஷ்ணன்
மூலம் - http://tinyurl.com/nex2ukp


No comments:

Post a Comment