Feb 20, 2014

நான் வேர்களைத் தின்பவள்

நான் வேர்களைத் தின்பவள்
என் போல் அல்லாத எந்த மரமும்
இப்புண்ணிய பாரத பூமியில்
வானம் பார்க்கக்கூடாது
அழிப்பேன்
கருவனத்தை

தன் மேலாடையில் சூட்டிய
ரோஜா மலரை என் அப்பா
எனக்கு வழங்கினார்
அதை நான் என் மகனிடம்
வழங்கினேன்
சேரிப் பகுதிகளில்
அனைத்து ரோஜா மொட்டுக்களையும்
அழிக்கச் சொன்னேன்
புதிய ரோஜா மொட்டுகள்
பிறக்காமல் இருக்க
வெண்மை நிழல் கை கொண்டு
ஆண் வாசல் அடைத்தான்
என் மகன்

தலைப்பாக்களை எனக்குப்
பிடிப்பதில்லை
தாடியை எனக்குப் பிடிப்பதில்லை
நீல நட்சத்திரங்களை
பொற்கோவிலுக்குள் அனுப்பினேன்
கோதுமைப் பூமியில்
மர ரோஜாக்களை வேவு பார்க்க
ஏவினேன்
அம்மர ரோஜாக்களில் ஒன்று
என் மார்பைத் துளைத்தது

எங்கள் வீட்டில் ஒரு பெரிய மரம்
வீழும்போதெல்லாம்
இந்தப் பூமி அதிரும்
வன்மத்தால் செய்த
ரிமோட் எங்களிடம் உள்ளது

எனக்கு கோதுமையும்
பிடிப்பதில்லை
அரிசியும் பிடிப்பதில்லை
மைதாக் குழாய்களையே
நான் விரும்பி உண்கிறேன்

என் குடும்பத்தைக் காக்கும்
பச்சைப் புற்களுக்கு
உரமாக
பீரங்கிகளை வாங்குவது
எனக்குப் பிடித்தமானது
பேரம் படிந்தது
இந்த தீபகற்பத்தின் மண்ணுக்கு
நல்ல விலை உண்டு

இராவணத்தேசத்திற்குள் புகுந்த
சிங்கமொன்று
எனக்கு ஓநாய்களைப் பரிசளித்தது
யாழின் நரம்புகளை
அதன் கூடுகளிலிருந்து
அறுத்தழிக்கும் பயிற்சி வேண்டியது

பயிற்சி பெற்ற ஓநாய்கள்
யாழின் பெண் நரம்புகளில்
தம் விரைப்புக் குறிகளை
அழுத்திச் செலுத்தியது
வடிந்தது தமிழ்குருதி
  
இங்கும் ரோஜா மொட்டுகள்
தன் கருக்குழியில் பதுக்கி
வைத்திருந்தாள் பூமிதாய்
மோப்பம் பிடித்துச் சென்றன
பயிற்சி பெற்ற
மூவர்ண பூதங்கள்
எனக்கு லில்லி மலர்களையேப் பிடிக்கும்

அழிப்பது என் குலத்தொழில்
நான் மட்டுமே ஆயுதமேந்துவேன்
கொத்து கொத்தாக அழிப்பேன்
பதிலுக்கு
என் வீட்டில் ஒரு மரம்
வீழ்ந்தால்
தென் திசைக் காற்றையும்
சிறையில் அடைப்பேன்

அதுவே என் நீதி
அதுவே என் அரசாங்கம்
அதுவே என் குலத்தொழில்

காற்று மாசற்றது
என்று நீங்கள் கதறுவீர்களேயானால்
உங்கள் குரல்வளைகள்
நசுக்கப்படும்
உங்கள் வீடுகளிலும்
ரோஜா மொட்டுகள்
அறுத்தெரியப்படும்
உங்கள் தலை மேல்
தூக்குக் கயிறு தொங்கும்

வஞ்சகமாய் அடைத்து வைத்த
மாசற்ற காற்றை
நீவிர் விடுவிக்க
முடியாமல் செய்யும்
நாற்காலி எம்மிடம் உண்டு
குலம் உண்டு
கோத்திரம் உண்டு
எம் அந்தப்புரத்தில் ஓடும்
வன்ம ஆற்றில் தினம் குளிப்பவள்
நான்
வற்றும் ஆறு
உங்கள் கண்ணிரால் நிரப்பப்படும்

இத்தாலியப் பீரங்கித் தரகன்
தூய ஆத்மா
இது அந்தப் பரிசுத்த
ஆவிமேல் ஆணை
அவனை எப்பாடு பட்டும்
விடுவிப்பேன்
தமிழ் மைந்தர்களாகிய
உங்கள் எழுவரை
எப்பாடு பட்டும் தூக்கிலேற்றுவேன்

அனைத்தும் அறிந்தவள்
நான்
என் காதுகளில்
நீங்கள் என்ன ஓதுகிறீர்கள்
நீங்கள் ஏதும் செய்யவில்லை என்றா

என் காதுகளை வந்தடையாது
என் இதயத்தை நான்
பீரங்கிக்குள் பதுக்கிவைத்துவிட்டேன்
மேலும் நீங்கள் பேசுவது
தமிழ்
அது போதும்
உங்கள் தலைகள்
தூக்குக் கயிற்றுக்கு
சொந்தமாக

சிங்கபுத்தனே நீ கண்விழிக்காதே
கலக்கம் கொள்ளாதே
அவர்களை
நான் பார்த்துக்கொள்கிறேன்

அழிப்பது என் குலத்தொழில்
நான் மட்டுமே ஆயுதமேந்துவேன்
கொத்து கொத்தாக அழிப்பேன்
அதுவே என் நீதி
அதுவே என் அரசாங்கம்



No comments:

Post a Comment