Mar 6, 2013

சே கெவாரா காப்புரிமை பிரச்சனை - ஒரு கடிதம்


ஓஷன் பதிப்பகம், ஆஸ்திரேலியா

நாங்கள் இந்தியாவில் உள்ள சென்னை நகரம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதியைச் சேர்ந்த குடி உரிமை செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், இடது சாரி பதிப்பகத்தார் குழு. சமீபத்தில் வலது-சாரி நாளிதழான தினமணியின் வாரமலரில் ஒரு விளம்பரத்தைக் கண்டு (மார்ச் 3, 2013) அதிர்ச்சியடைந்தோம். சென்னையைச் சேர்ந்த பழமைவாய்ந்த தமிழ் பதிப்பகமான “கண்ணதாசன் பதிப்பகம்” அவ்விளம்பரத்தை பிரசுரித்திருந்தது. பின்வரும் படைப்புகளின் மொழிபெயர்ப்புக்கு அது காப்புரிமை கோருகிறது:

1.  மோட்டார் சைக்கிள் டைரிகள், சே கெவாரா
2.  சே: ஒரு நினைவுக் குறிப்பு, ஃபிடல் காஸ்த்ரோ
3.  பொலிவியன் டைரிகள், சே கெவாரா

அந்த பதிப்பகத்தாருக்கு சே வின் ஆளுமையோ, அவர் எவற்றுக்காக குரல் எழுப்பினார், துணிந்து நின்றார் என்பது பற்றியோ அல்லது சேவைப் பற்றியோ கூட தெரியாது. மேற்சொன்ன புத்தகங்களை சே எழுதினார் என்பது மட்டுமே அவர்கள் சொல்வது! இதுதவிர, அந்த விளம்பரத்தில் சே கெவாரா ‘கொரில்லா’ போர் முறையை பிரபலமாக்கியவர் என்று இருக்கிறது.  ‘அழுக்குகளை உண்டு வறுமைச் சேற்றில் உழலும் கரப்பான் பூச்சிகளே கம்யூனிஸ்டுகள்’ என்று எழுதிய பிரபல பாடலாசிரியர் கண்ணதாசனின் பெயரால் அப்பதிப்பகம் அழைக்கப்படுகிறது என்பதை இங்கு குறிப்பிடுவதில் தவறில்லை.

மேலும் சில புத்தகங்களுக்கும் (அந்த புத்தகங்கள் பற்றியும் குறிப்பிடவில்லை, ஒப்பந்தமும் வெளியிடப்படவில்லை) உங்களிடமிருந்து மொழிபெயர்ப்பு உரிமை பெற்றிருப்பதாக அந்த விளம்பரம் அறிவிக்கிறது, அதுமட்டுமல்லாமல் சே கெவாராவின் அனைத்து புகைப்படங்களுக்கும் அவர்களுக்கே காப்புரிமை இருப்பதாகவும், அந்த புரட்சிகர தியாகியை பற்றி தொலைக்காட்சி தொடர் எடுக்கும் உரிமை இருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.

சே கெவாராவின் படைப்புகளை மொழிபெயர்க்கும், வெளியிடும் உரிமை மேற்சொன்ன பதிப்பகத்திற்கு மட்டுமே உண்டு எனவும், வேறு எவரேனும் அதை பதிப்பித்தால் 1957 இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழும், (திருத்தப்பட்டதன்படி) இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 1800 (திருத்தப்பட்டது) இன் கீழ் தண்டனைக்குறிய குற்றமாகவும் வழக்கு தொடரப்பட்டு, நஷ்டஈடு கோரப்படும் என்று அது அறிவிக்கிறது. இதில் ஆத்திரமூட்டும் விசயம் என்னவென்றால், அந்த பதிப்பகத்தைத் தவிர வேறு எவரும் சே கெவாராவின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது எனும் அறிவிப்பு.

இந்தியாவிலும், மற்ற உலக நாடுகளிலும் காப்புரிமைச் சட்டம் எவ்வாறு இயங்குகிறது எனும் அறிவு சிறிது கூட அந்த பதிப்பகத்தாருக்கு இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் இரண்டுக்குமிடையேயான வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை (இந்த இரண்டு வேறுபட்ட சட்டங்களைக் குறிக்க அவர் பயன்படுத்தும் சொற்கள் அவரின் அறியாமையை உணர்த்துகிறது).

மற்றொருபுறத்தில், சட்டத்தின் மூலமாக பல தனிநபர், மற்றும் இடதுசாரிச் சார்புடைய  சிறிய பதிப்பகங்களை ஒடுக்கும் ஒரு முயற்சியாகவேத் தெரிகிறது.  கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சே வின் நினைவுகளையும், அவரது கியூப புரட்சியையும் எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், பிரசுரங்களாகவும், டி-ஷர்ட்டுகள், பந்தனாக்கள், புகைப்படங்கள் என்று வெளியிட்டு, இணையத்தில் இருக்கும் காட்சிகளைக் கொண்டு வீட்டுத் தயாரிப்பு குறும்படங்களாகவும் எடுத்து சே வின் நினைவுகளையும், அவரது கியூப புரட்சியையும் உயிர்ப்போடு வைத்திருந்த கூட்டம் அது.

சமீபத்தில், ஒரு இளம் பதிப்பகத்தார், பொலிவியன் டைரியின் முன் பதிப்பை மறுபதிப்பு செய்தார். அதை மொழி பெயர்த்த பெண்மணி இந்தோ-கியூப மக்கள் நண்பர்கள் கழகத்தின் உறுப்பினர். அந்த பதிப்பகத்தாருக்கு கண்ணதாசன் பதிப்பகம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சட்ட அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

கீழ்வரும் காரணங்களுக்காக நாங்கள் இந்த கடிதம் எழுதுகிறோம்:

·        நாங்கள் உங்கள் இணையதளத்தைப் படித்தோம் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழியில்). உங்கள் படைப்புகளின் பட்டியலில் பல கியூப படைப்புகள், குறிப்பாக சே கெவாராவின்படைப்புகள் மற்றும் லத்தீன் அமெரிக்கவின் இதர பகுதிகளைச் சார்ந்த கவிதைகள், கலை மற்றும் புனைவு படைப்புகள் அடங்கியுள்ளது.  ஒரு பரம-வலதுசாரி தமிழ் பதிப்பகம் ஒன்று சே வின் படைப்புகளுக்காக உங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது பொருந்தாமல் உள்ளது.
·        சர்வதேச இடது-சாரிகளின் காட்சிக் குறியீடாக உள்ள சே (தமிழ் நாட்டில் அவர் வெறும் இடது சாரிகளால் மட்டும் ஆராதிக்கப்படுவதில்லை, சாதி மறுப்பு இயக்க இளைஞர்களாலும் குறிப்பாக ‘தீண்டாமை சாதியைச்’ சேர்ந்த எண்ணற்ற இளைஞர்களாலும் ஆராதிக்கப்படுகிறார்) ஒரு குறிப்பிட்ட தனி நபர் / தனி பதிப்பகம் ஒன்றின் தனிச் சொத்தாக மாறுகிறார் என்பது எங்களுக்கு குழப்பமாக உள்ளது. சேவின் அம்சங்களை ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு, இடத்திற்கு, நிகழ்விற்கு இணைக்கப்பார்க்கும் முட்டாள்தனமான ஒரு முயற்சியை அடையாளப்படுத்திய செவொல்யூஷன் எனும் திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.
·        “அரசியல் மற்றும் வரலாற்றின் உலகப் பார்வையை, குறிப்பாக லத்தின் அமெரிக்கா பற்றிய பார்வையை வழங்கும் தனிச்சிறப்பு மிக்க புத்தகங்களை வெளியிடும் ஒரு தனிநபர் பதிப்பகம்.  அமைதி மற்றும் நியாயம் நிறைந்த உலகம் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நபர்களின் கற்பனையைக் கைபற்றும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று உங்களைப் பற்றி உங்கள் இணையதளம் குறிப்பிடுகிறது. அவ்வாறு இருக்க, இதற்கு நேரெதிரான கொள்கைகளும், நடைமுறைகளையும் கொண்டு ஒரு பதிப்பகத்திற்கு எவ்வாறு அனுமதியளித்தீர்கள்?
·        சே எதற்காக போராடினார், எதற்காக தன்னையே தியாகம் செய்தார் என்று ஏதுமறியாமல், இலாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு பதிப்பகம் உரிமை கொண்டாடும் வகையிலான ஒரு ‘காப்புரிமையை’ கொடுக்கக்கூடிய முறையல்ல சே பற்றிய உரிமை. சர்வதேசம் எனும் உணர்வோடு அத்தனை தாராளமாக, கனிவுள்ளத்தோடு செயல்பட்ட சேவின் எழுத்துக்கள் இப்படி சுருக்கப்படுவது சரியல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

உண்மையில் நீங்கள் கண்ணதாசன் பதிப்பகத்தோடு ஒப்பந்தமிட்டிருந்தீர்களேயானால், சே கெவாராவின் படைப்புகள், அவரது புகைப்படப் பயன்பாடு மற்றும் காட்சிப் பதிவு பயன்பாட்டு உரிமை ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தும் உரிமையை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள். அவர்களுக்கு இடது-சாரி அரசியல் மீதோ, லத்தீன் அமெரிக்கா மீதோ ஏன் பரந்த முற்போக்கு சிந்தனைகள் மீதோ எந்த நாட்டமும் இல்லை. இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறை இளைய புரட்சியாளர்கள் மத்தியில் சேவுக்கு இருக்கும் ஆராதனையைக் கண்டு அவர்கள் ‘பணம் ’ பண்ண எண்ணுகிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.

பெயர்                             பணி                               முகசரி             மின் முகவரி

இந்த கடிதத்தின் ஆங்கில மூலம் http://saavinudhadugal.blogspot.in/2013/03/che-guevera-works-copy-right-issue.html     இந்த சுட்டியில் உள்ளது. ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே பிரதி எடுத்து rights@oceanbooks.com.au எனும் மின் முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.

2 comments:

  1. நானும் கடிதத்தை அனுப்பிவிட்டேன்...
    நன்றி...

    ReplyDelete