Dec 11, 2012

ஒலிக்காத இளவேனில் – கவிதை நூல் அறிமுகம்.
இதயம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்காக ஏங்குகிறது
தொண்டையோ ஒரு கத்திக்காக ஏங்குகிறது
ஆன்மாவோ பனிச்சுவர்களிடையே நடுங்குகிறது
அது ஒருபோதும் பனியிலிருந்து தப்ப முடியாது.

-      ம்யாக்கோவ்ஸ்கி


பனியை இங்கு கொலைக்களமாக ம்யாக்கோவ்ஸ்கி ஏன் விரித்தான். தற்சாவும் விருப்பதிற்கிணங்காத முறையில் நிகழும்போது கவிக்கு சொல்ல இறுதியாக என்ன வார்த்தைகள் மிஞ்சும், கவியின் இறுதியுணர்ச்சி எதைச் சொல்லும். கையகல இருப்புகளுக்காகவா இத்தனை அழித்தொழிப்பு. இங்கு உண்மையில் கவிதைகளுக்கு என்ன இடம் இருக்கப் போகிறது. கவிதை மானுடமனத்தை இயற்கையாக ஆண்டுகொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக கவிதை மட்டுமே இருக்கிறது ஆனால் போர்க்களத்தில் கவிதை பாடிக்கொண்டிருக்க முடியாது எனச் சொன்ன லூ சூனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுவதில் பேராவலோடு இருக்கும் காலகட்டத்தில்தான் நாம் பிறந்திருக்கிறோம். வெற்றிபெற்றவர்களின் ஆங்காரக் கூச்சலிடையே தோல்வியுற்றவர்களின் கசந்த அழுகைகள் மறந்துவிடுகின்றன. அவைகள் முணுமுணுப்பது கவிதைகளின் வாயிலாகத்தான். அக்கவிதைகளை வரிகளை வைத்து எடைபோடமுடியாது என காலம் தன் இருப்பை வைத்துச் சொல்லுகிறது. அக்காலமோ அகால உணர்ச்சியை முன் வைக்கிறது. அகாலத்தின் துயர்களைச் சொல்லியபடி எனக்குத் தெரிந்து வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதிகள் என மரணத்துள் வாழ்வோம், பெயரிடாத நட்சத்திரங்கள், இப்பொழுது ஒலிக்காத இளவேனில். இம்மூன்று தொகுதிகளின் தலைப்பே வீழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவின் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கெதிரே பறிபோகும் நிலமும் உடலும், உடல் சார் உளமும் கருகும்போது சொல்லமுடியாதவர்களின் குரலாய் ஒலிக்கிறது இக்கவிதைகள். உள்ளபடியே கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் கவிதைகள் கூறும் இலக்கண அல்லது இலக்கிய விதிகளை சற்றுப் புறந்தள்ளிவிட்டுத்தான் இத்தொகுதியை வாசிக்க முடியும். வாசிக்க வேண்டும் இது வேண்டுகோளே. அஞ்சிச் சாகும் மக்கள் இறக்கும்போது எழுதவோ சொல்லவோ ஒரு வார்த்தை எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில மரணங்கள் சில மனிதர்களுக்கு வாழ்வின் ஆசுவாசத்தை ஏன் தருகிறது என்ற மானுட உளவியலையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தீராத்துயர். மனிதர்களை மனித இருப்புக்களுக்காய் கொலை செய்வதை எந்த மன அமைப்பு விரும்புகிறது.

கவிதை என்பதை மனநிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா. மனம் திறந்து நமது உணர்வுகளை வாய்மொழியாக பேசுவதற்கும் அதை அச்சில் ஏற்றுவதற்குமான எந்த இடைவெளியில் உணர்வுகள் கவிதையாகின்றன. ஓசையும் ஓசையின்மையும் அதை சாத்தியப்படுத்துகிறதா? வடிவமா அல்லது கவிதை எழுதுதல் என்பது ஒரு அறிவார்த்த வெளிப்பாடு, ரசனை, படைப்பு கலை என்கிற பூடகங்கள் ஒருவரை கவிதை எழுதத் தூண்டுகிறதா.

மானுட வரலாற்றில் தோன்றிய முதல் கவிதை எதுவாக இருக்கும். காலம் காலமாக அது குழந்தை என்ற பதிலையே கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு சிறந்த ஓவியத்தை, கண்களை ஈர்க்கும் தோற்றம், சிறந்த கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கட்டிடம், இவ்வளவு ஏன் ஒரு சிறந்த கதை, உரைநடை கூட மனம் கவரும் விதத்தில் இருந்தால் கவிதை போல் இருக்கிறது என்கிறோம்.

ஆக கவிதை என்பதற்கான விளக்கமாய் அது கொடுக்கும் அனுபவமே பிரதானமாய் இருக்கிறது வடிவமல்ல என்பது தெளிவு. அந்த அனுபவத்தை சொற்செறிவுடன், சொற்சிக்கனத்துடன் சொல்வதற்கேற்ற வடிவமாக உரைநடையல்லாத வடிவம் அமைகிறது. தற்போதைய காலகட்டத்தில் உரைநடைக் கவிதைகளும் வந்துள்ளன. கவிதை என்பது ரசனை சார்ந்த ஒன்றாக கருதப்பட்டாலும் ஒரு கவிதை உடனடியாக நம்மைக் கவர்வதும், மற்றொன்று பிடிக்காமல் போவதற்கும் அது தரும் அனுபவமே காரணமாக இருக்கிறது.

எதிலிருந்து கவிதை, அனுபவத்தைத் தருகிறது. நமது தேர்வு, விருப்பங்கள், இலட்சியத் தேடல்கள் அதன் உட்கூறுகளாக இருக்கின்றன. உ.ம் படைப்பை தூய இலக்கியம் என்று கருதுபவர்களின் பிரதானத் தேர்வாக காதல், காமம், உடலியல் இன்பம், மொழிப் பயன்பாடு ஆகியவை இருக்கிறது.  கூடுதலாக சமூகம் பற்றிய இவர்களது அக்கறை இரக்க பாவனை கொண்டதாக இருப்பதால் அத்தகைய வியாக்கியானங்களை, இரக்க பாவனைகளை சமூகக் கவிதையாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இந்த தேர்வானது அவநம்பிக்கை, அயர்ச்சி, இயலாமை, வெறுமை என்பதாக நீள்கிறது.

கலை மக்களைப் பேசவேண்டும் என்று கருதுவோரின் தேர்வாக அரசியல், சமூக மாற்றம் இவற்றை முன் வைக்கும் புரட்சிகர கவிதைகள், விடுதலை முழக்கங்கள், அழித்தொழிப்பிற்கெதிரான கலகக் குரல்கள் ஆகியவை பிரதானத் தேர்வாக இருக்கின்றது.  அதிகாரத்திற்கெதிரான விமர்சனங்கள், மாற்றம் குறித்த நம்பிக்கைகள், அணி சேர்தல் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் கவிதகள் இப்பிரிவினரை ஈர்க்கிறது. இங்கு ’நான்’ என்பது
‘நாம்’ என்பதாகவே அமைகிறது.

இந்த இரண்டு வகையினரின் கூட்டுக்கலவையாக இருக்கிறது பெண் கவிதைகள். பெண் உடல் என்பது சமூக உடலேயாகும். சமூகம் நிர்ணயித்திருக்கும் உடலையே அவள் சுமந்துகொண்டிருக்கிறாள். அவளது உடலே அவளுக்கு அந்நியமான ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சூழலில் அவள் முதலில் பிரதிகளில் இருந்து தன் உடலை மீட்பது பிரதானமாகிப் போனது. பெண் உடலை ரசிப்பதற்கான ரசனை அளவீடுகள் பெண் பற்றிய கவிதை எழுத்தலுக்கு ஒரு கோனார் உரையை கொடுத்திருக்கிறது. பெண்களுக்கு ஆண்கள் பற்றிய அத்தகைய உரைகள் வழங்கப்படவில்லை, அப்படி அவள் வர்ணிக்கும் உரிமையும் அவளுக்கு கிடையாது. அதையும் மீறி அவள் எழுதினால் அவள் ‘காம வெறி’ பிடித்தவள். சமூகம், அரசியல் வெளிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருக்க அவள் தனது பாடல்களாக, கவிதைகளாக தனது வெளியாக உடலைத் தேர்வு செய்யும் நிலையை வரலாறு ஏற்படுத்தியது. அதனோடு அவள் அன்றாட வாழ்வில் குடும்ப அமைப்பிற்குள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பொதுவெளியில் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள், தொடர் ஒடுக்குமுறைகள், போரினால் உடல் சிதைக்கப்படும் சூழல் ஆகியவை பெண் எழுதுவதற்கான தேவையை உருவாக்கியது.

இது வெறும் ரசனை வெளிப்பாடாகவோ, அறிவார்த்த பறைசாற்றலாகவோ, அந்நியப்பட்டுப்போகும் தூய இலக்கியமாகவோ இல்லாமல் சமூகப் பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இருப்பதற்கு அவளது அனுபவமே காரணம். இங்கு தேர்வு என்பது சாத்தியமில்லாமல், அனுபவமே பெண் எழுத்தை தீர்மானிக்கிறது. ஆக பெண்கள் இயல்பிலேயே புரட்சிகர எழுத்துக்களை, சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட எழுத்துக்களை படைக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளுக்கும், தனது இருப்பிற்குமான போராட்டங்கள் நடத்தி சற்று முன்னேறிவிட்ட பிறகு மேட்டுக்குடி  பெண் உரிமை சிந்தனையானது உடலியல் இன்பங்களைப் பேசுதல், காமத் துயர்களைப் பேசுதல் விரகதாபம், பெண் சுய இன்பம் என்கிற அளவில் திசைதிருப்பப்பட்டுள்ளது. இதில் அவர்கள் காண மறுப்பதாக நான் காண்பது பெண் உடல் என்பது உடலியல் இன்பங்களில் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிறது என்பதே அது. பெண் உடல் என்பதை பெண் விடுதலை அரசியலாக மாற்றும் வல்லமை எழுத்திற்கு உண்டு.

பாலியல் பேதமின்றி அனைவரும் வர்க்க அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறோம் என்பது உண்மை, ஆனால் இனவாத அடிப்படையில் ஒரு இனமானது தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு இலக்காகிய கொடூரம் நாம் வாழும் காலத்தில் இலங்கையில் அரங்கேறியது. சிங்கள இராணுவத்தினரால் பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டது அந்த இனவாதத்தின் உச்சபட்ச காட்டுமிராண்டித்தனம். அந்த மண்ணில் பிறந்து சித்திரவதைகளை அனுபவித்து மடிந்து போனவர்கள் ஆயிரக்கணக்கானோர், சிலர் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர், சிலர் அகதி முகாம்களில் மேலும் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, துரோகங்களை பலரும் தங்களின் படைப்புகள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். அநீதிகள், துரோகங்கள் மட்டுமல்லாது அவர்களின் வாழ்வுகளிலும் பல்வேறு உணர்ச்சிகள், அனுபங்கள், நிகழ்வுகள் இருக்கும் என்பதை கவிதை வடிவில் எடுத்துரைக்கும் மற்றோர் படைப்பு ஒலிக்காத இளவேனில்.

இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு பெரும் கொடை அந்த மண் தனது மொழியை பெரும் வளத்துடன், அழித்தொழிப்புகளிடையே காத்து வந்திருக்கிறது என்பதுதான். மொழி அழிக்கப்பட்டால் இனமே அழிந்து போகும் என்பதை உலகறியும். மொழியின் அடிப்படையில் அழிக்கப்படும் தங்கள் உயிரையும், உடமையையும் காக்க நடந்துவரும் போராட்டங்கள் துயர் மிகுந்த பாடல். இந்த மொழிப்போரின் கோரப் பிடிகளிலிருந்து தப்பித்து புலம் பெயர்ந்து தங்கள் தாய் மண்ணை சுதந்திரமாகக் காவும் அந்த ஒரு கணத்திற்காக பரிதவிக்கும் உள்ளங்களின் வடிகாலாக விட்டுவைக்கப்பட்டிருப்பது எழுத்து மட்டுமே என்றால் அது மிகையல்ல.

தலித் உடலும், பெண் உடலும் ஒன்று என்பார்கள். ஆனால் போர்களினால் அலைகழிக்கப்படும் உடல்கள் மீது நிகழும் ஒடுக்குமுறை மற்ற எல்லாவற்றையும் விட முற்றிலும் மாறுபட்டது.  குறிப்பாக பெண் உடல்கள். சிறுவர்களின் உடல்கள். எல்லாப் போர்களிலும் முதலில் சிதைவுறுவது பெண் உடல்களே. ஏகாதிபத்திய பீரங்கிகள் நிலங்களைக் குறிவைத்து தொடுக்கும் குண்டுகளையும் விட மிகவும் கொடூரமான குண்டுகள் இராணுவத்தினரின் குறிகள். அவைகள் ப்ளாஸ்டிக் குறிகள். அந்தக் குறிகள் துளைப்பது யோனிகளை அல்ல, ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் தன்மானத்தை. ஒவ்வொரு போரும் இதையே உணர்த்துகிறது.

ஒலிக்காத இளவேனில் 17 புலம்பெயர் இலங்கைத் தமிழ் பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு. தான்யா, பிரதீபா கனகா, தில்லைநாதன் ஆகியோர் கவிதைகளை தொகுத்துள்ளனர். வடலி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு படைப்பும் ஆதரமாய் ஒரு தேவையைக் கொண்டிருக்கிறது. ஒலிக்காத இளவேனிலுக்கு தம்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துன்பியலையும், தம் மண்ணில் நசுக்கப்படும் குரல்வளைகளுக்கு பதில் குரலாகவும் இருப்பதே அத்தேவை.

ஒலிக்காத இளவேனில் என தலைப்பு தொடங்கி உள்ளே கவிகள் எழுதியிருக்கும் கவிதைகளின் பெரும்பாலான தலைப்புகள் அனைத்தும் நிச்சயமற்ற வாழ்வின் அலைச்சல்களைக் கதறியபடியே சொல்கிறது,

 நிச்சயமற்ற வாழ்விற்கு பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை
என்று ரேவதி பேசுகையில்
எவருக்காகவும் காத்திருப்பதில்லை- காலம்
விரைந்துகொண்டேயிருக்கிறது

என தன் வரிகளை கனத்த இயலாமையுடன் முன் வைக்கிறார் நிவேதா

கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல என தன்னையே முன் வைத்து நகர்ந்து
ஏதோ ஒரு
காய்கறிக் கடையில்
எங்கேனும் ஒரு
வீதி மருங்கில்
எப்போதாவது தொலைபேசியில்
முடிவற்ற
துர்வாடையாய்
நம் தலைக்கு மேல்
நிரம்பி வழியும்
நரகங்கள்
பற்றிப் பேசலாம்


இத்தகைய எளிய வரிகள் விதிக்கப்படாத சாவைத் தலைக்குமேல் சுமந்து கொண்டு அன்றாட நரகத்தைப் பேச அழைக்கின்றன. சாவைப் போலொரு பேச்சென இக்கவிதையைச் சொல்லலாம்.

திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி

என உலகியங்கும் கொடூரத்தை முன்வைத்து நகர்ந்திருக்கிறார். ஆழியாளின் கவிதை தொடர்ந்து பிணங்களின் தோற்றவுருக்களை விவரித்து அவைகள் பலிதீர்க்கப்பட்டதற்கான கருத்தியல்களை எழுதிச் செல்லுகிறார். முக்கியமாய்

மரணவெளியில் மறைக்கப்பட்டு
வாழ்விக்கப்படும் பெண்கள் நாங்கள்
எனும் இரு வரிகள் தரும் துயரம் மீளமுடியாத உணர்ச்சியைத் தருகிறது.

இத்தொகுதியில் எழுதியிருக்கும் தமிழினி, சரண்யா,வசந்தி கவிதைகள் இத்தொகுதிக்குள் ஒலிக்கும் துர்மரணத்தை முன் வைத்தே பேசுகின்றன. புலம்பல்கள் கவிதையா எனக் கேட்டால் அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காலத்தையே சுட்டிக்காட்டுப் பேசுகிறது என்பேன். சரண்யா எழுதியபடி..

ஆண்களால் கொல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு

இவ்வரிகள் அதற்கு சாட்சியாக்குகின்றன.

மொனிக்கா, துர்க்கா, மைதிலி இவர்களும் தங்களது இயலாமைகளை கவிதைகளென முன்வைத்திருக்கிறார்கள்.


நீங்கள் எச்சரித்தது போலவும் இல்லாமலும்
ஆனாலும் வாழ்வேன்!
என் எல்லாக்
காயங்களிலிருந்தும்
உடைவுகளிலிருந்தும்
நோவுகளிலிருந்தும்
ஆத்திரங்களிலிருந்தும்
ஏமாற்றங்களிலிருந்தும்…

என வரும் வரிகள் நேரடியாக ஆள்வோரின் ஆணைகளுக்கு தங்கள் பதில்களைத் தந்துவிடுகின்றன. இந்திரா, தர்சினி, தான்யா, பிரதீபா,கற்பகம் யசோதரா,ரெஜி,ஆகியோரின் கவிதைகளும் சாவின் விரும்பவியலா மணத்தைக் கடத்துகின்றன.

கவிதை புரியாமல் போய்விடுமோ என்கிற ஒரு அகப் போராட்டத்தை கவிஞர்கள் நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். அதனால் கவிதை முடிந்த பின்பு சில பின் வரிகளை உடைத்து போட்டு அதை விளக்கு முயற்சி நடைபெறும். அதற்கு ஒரு உதாரணம்:

அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் நிவேதிதாவின் கவிதை

.............
.................

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........
கழுத்தை நெரிக்கும்
“ஆம்பிளை’த்தனங்களைப் பற்றி
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி...
இன்னமும்,அந்தரத்தில் அலைவு7ண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி....

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........

நிவேதாவின் இந்த வரிகளைலேயே கவிதை முடிந்து விடுவதாக நான் கருதுகிறேன். முலைகள் என்ன பேச வேண்டுமோ அதை வாசகர் மனம் உணரும், பின்வரும் விளக்கங்கள் கவிதை அனுபவத்தை சற்று தொந்தரவு செய்கிறது. வாசகர் அடையக்கூடிய இதுபோன்ற சிறு அனுபவக் குறிப்புகளுக்கப்பால் ஆணாதிக்கத்தை கூறு போட்டு எடுத்துரைப்பதில் இத்தொகுதியின்  அனைத்து கவிஞர்களின் கவிதை மொழியும், படிமங்களும் குறிப்பிடத்தக்கவை.

தொகுதி முழுக்க இறைஞ்சும் வார்த்தைகள், தசைகளை இறுக்கும் வார்த்தைகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. தொகுதியிலுள்ள பெயர்களை எடுத்துவிட்டால் அனைத்தும் ஒரே கவிஞருடையதோ எனத் தோன்றும் அளவிற்கு அது நம்மைக் கொண்டுவிடுகிறது. போரின் வாதையைச் சொல்ல வந்த கவிதைகளில் இலக்கிய நயம் தேடிப் பயணிப்பதில் எனக்கு எப்பொழுதும் உவப்பில்லை. எல்லோருக்கும் இழப்பில் சொல்ல இருக்கும் ஒரு சொல்லை கவிஞர்கள் மட்டும்தான் எழுதவேண்டுமென்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு ஆன்மாவுக்கு கல்வியால் ஆகப்போவது ஏதுமில்லை. ஏனெனில் அனைத்தும் பட்டித்தவர்களே ஆயுதத்தைத் தூக்குவதோடு அதற்குப் போதுமான கருத்தியலையும் எழுதுகிறார்கள். ஈவிரக்கமற்ற முதலாளிக்கு கவிதைகளால் ஒரு பயனும் இல்லை. பணத்தையும் பேரத்தையும் தவிர ஆள்வோர்களுக்கு கவிதையால் என்ன பயன். அவர்கள் நம்மை எழுத வைக்கிறார்கள். எழுத்து மாற்றத்தைக் கொண்டுவரும். அதற்கு கவிதைகள் சாட்சி. அல்லற்றபட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ..............

(இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை)

1 comment: