Nov 15, 2012

பெண்களும் சுற்றுலாவும் – ஒரு பெண்ணியப் பார்வை.
பெண்களுக்கு வாளைக் காட்டிலும் பேனா
ஒரு முக்கிய அனுகூலத்தைக் கொண்டதாயிருக்கிறது.

                                                                           -       ரோஸ்லிண்ட் மைல்ஸ்

சுற்றுலா  என்பது மனதிற்கு மகிழ்வைத்  தரக்கூடிய ஒன்று, குடும்பத்தோடு  நண்பர்களோடு கூடிச் சுற்றி இன்புற்று களித்திருக்க ஒரு தருணமாக சுற்றுலா அமைகிறது.  சுற்றுலாக்களில் பல் வேறு வகைக்கள் உள்ளன, பண்டைய வரலாற்றுச் சின்னங்களை மட்டுமே காண்பதற்கான் பாரம்பரியச் சுற்றுலா (Heritage tour), கோயில் தளங்களுக்கு செல்லும் பக்திச் சுற்றுலா (pilgrimage tour), காடுகளுக்குள் பயணித்து விலங்குகளைக் காணும் சுற்றுலா (wild life tour), மலையேற்றம், பங்கி  ஜம்பிங் போன்ற சாகசங்களுக்கான சுற்றுலா (adventure tour) என்று மனமகிழ் சுற்றுலாக்கள் நிறைய உள்ளன.

உலகமயமாக்கலின்  விளைவாக மனமகிழ் சுற்றுலாக்களுக்கப்பால் மூன்றாம் உலக நாடுகளைக் குறி வைத்து இப்போது மருத்துவ சுற்றுலா, தொழிற்சாலை சுற்றுலா எனும் பெயரால் வணிக சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீப காலங்களில் எகோ-டூரிசம் எனும் பெயரில் இயற்கையை மாசுபடுத்தாத முறைகளில் அமைக்கப்பட்ட சுற்றுலா தளங்கள், பயண முறைகள் எனும் சுற்றுலாக்கள் தோன்றியுள்ளன.  உண்மையில் அது அப்படித்தான என்பதைப் பின்னர் பார்ப்போம். 

சுற்றுலாவுக்கும்  பெண்களுக்குமான தொடர்பு  எத்தகையது? வேலை வாய்ப்பு, மேலாண்மை, புதிய திட்டங்கள் இவைகளில் பெண்கள் இடம் பெறும் விகிதாச்சாரப் பிரச்சனையோடு இதில் பெண்களின் பங்கு  முடிந்து விடுகிறதா? மேற்சொன்னவற்றை சிறப்பாக செய்வதற்கான கல்வியை  கற்று தேர்ந்து வேலை வாய்ப்பைப் பெற்று பணி செய்து பதிவு  உயர்வுகள் பெற்று, விருதுகள்  பெற்று பரிமளிப்பதோடு அது  நிறைவடைகிறதா.

பொதுவாக, நமது கல்வி முறை நமக்கு தகவல்களை வழங்குகிறது ஆனால் அறிவை  அல்ல, சமூக பொறுப்புணர்வை  வளர்த்தெடுக்கும் அறிவை  அவை வழங்குவதில்லை, குறிப்பாக  ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் மக்கள் சமூகத்திற்கான மேம்பாடு குறித்து அவை பேசுவதேயில்லை. அது வழங்கும் சமூக சிந்தனையானது கரிசனம். இரக்கப் படுவதற்கும் பிச்சை போடுவதற்கும் சொல்லித் தரும் கல்வி என்றால் அது மிகையல்ல. அதன் விளைவு அங்கலாய்ப்பு, சமரசம். இப்படிபட்ட பொது கட்டமைப்பிலிருந்து விடுபட்டு சமூகத்தின் யதார்த்த நிலைகளை ஆய்ந்து, குறைபாடுகளைக் களைந்து மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான உண்மைக்கல்வி வழங்கும் கல்விக் கூடங்கள் வெகு சில.

சமூக  யதார்த்தங்களை பல்வேறு  கண்ணோட்டங்களிலிருந்து  ஆய்வு செய்யலாம். நிலவும்  கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு  செய்வதற்கும், பெண்ணியக்  கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு  செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள்  என்ன.  பால் அடையாளத்தின் அடிப்படையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை திறனாய்ந்து, பெண் விடுதலைச் சிந்தனைக்கு வழிவகுப்பது, பெண்களை ஒரு இயக்கமாக ஒருங்கிணைப்பது என்று பெண்ணியத்தைப் புரிநிது கொள்ளலாம். சமூக நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பெண்ணுக்கு சம உரிமை கிடைக்கிறது, அவளுக்கான பாத்திரம் என்ன, இடம் என்ன எனும் கேள்விகளின் ஊடாக ஒரு நிகழ்வினால் பெண் பயனடைகிறாளா, சுரண்டப்படுகிறாளா என்பதை கண்டறிவது மிக மிக அவசியம். ஏனென்றால் பெண்ணை ஒடுக்குவதன் மூலம், பெண்ணுக்கு உரிமையை மறுப்பதன் மூலம் பின் தங்கியிருக்கப்போவது பெண் மட்டுமல்ல, சமூகமும் தான். அந்த விடுதலைப் போராட்டத்தில் உயர்வுவாதத்தை வைக்காமல், சுதந்திரம் என்பதை தனித்த ஒரு பொருளாக காணாமல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக பங்களிக்கும் வகையில் பெண் இனத்தை மீட்டு, அவளையும் இணைத்து, சமத்துவதற்காக போராடுவதும்சாதி, மதம், பால், இனம், உடல், அறிவு என்ற பாகுபாடில்லாத  சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான  முயற்சியை எடுப்பது பெண்ணியம்.

இக்கண்ணோட்டத்தின் படி நாம் எவ்வாறு சுற்றுலாவை அணுகுவது.  சுற்றுலா என்பதில் அடிப்படையாக இருப்பது நிலம். கேளிக்கை எனும் தொழிற்முறையாக இருந்தாலும் சரி, மருத்துவ சுற்றுலாவாக இருந்தாலும் சரி. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்களின் உதவியோடு நவீன காலனியாக்க செயல் திட்டமாக மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கும் ஒரு ஏற்பாடே சுற்றுலா.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குட்டலூர்  இதற்கு சிறந்த உதாரணம். புலி பாதுகாப்பு எனும் பெயரில்  உலக வங்கியின் பெரும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இதனால் ஆதிவாசிகளும், குறு விவசாயிகளும் நிலங்களை இழந்து நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் எகோ டூரிசம்எனும் பெயரில் இந்த காடுகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 1 புலிகளின் பெயரால், பசுமை திட்டம்  எனும் பெயரால் நிலத்தின் பூர்வ குடிகளை அப்புறப்படுத்தி வாழ்வாதாரத்தை குலைக்கும் ஒரு செயலுக்கு பச்சை சாயம் பூசும் பெயர் எகோ டூரிசம்’.  இதில் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நிலத்துக்கும் பெண்ணுக்குமான தொடர்பு மிக நெருக்கமானது, ஆனால் நிலத்திற்கு இருக்கும் மதிப்பு பெண்ணுக்கு இருப்பதில்லை. விவசாயமும் அழிந்து வருகிறது. அதை கண்டுபிடித்த பெண்ணும் அழிக்கப் படுகிறாள். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். வாழ்வாதார நிலங்கள் பறிக்கப்பட்டு, வேலை வாய்ப்பும் கிடைக்காத சூழல் ஏற்படும் போது அங்கு இறையாவது பெண்கள், கூடுதலாக குழந்தைகள். ஆம் அவள் விலை மகளாகிறாள். எகோ டூரிசம் மட்டும் தான் இதை செய்கிறதென்றில்லை. ஆசியா முழுமையிலும் (உலகம் முழுமையிலும் என்று சொல்லலாம்) பாலியல் தொழில் என்பது சுற்றுலா தளங்கள் மூலம் ஊற்றி வளர்க்கப்படுகிறது. அதற்கு செக்ஸ் டூரிசம்என்றும் பெயர் இருக்கிறது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளே முதலில் இந்த சுற்றுலாவை அறிமுகப்படுத்தியது. பாலியல் தொழிலை நாம் ஒழுக்கவாதத்தின் அடிப்படையில் மறுக்கவில்லை, சுதந்திர தேர்வென்பது வேறு, தொழிற்முறை என்பது வேறு.  மனிதர் என்ற நிலையிலிருந்து தரவிறக்கம் செய்து அவர்கள் பண்டங்களாக்கப் படுகின்றனர். 2தொழில் என்று வந்தாலே அங்கு சுரண்டல், தரகு, அடிமை முறை எல்லாம் வந்து விடுகிறது.  பாலியல் தொழிலுக்காக பல்லாயிரம் கணக்கான பெண்கள் கடத்தப்படுகிறார்கள்.

நம்படியாத தகவல் ஒன்று உள்ளது. சுற்றுலா பயணி சற்று நீண்ட காலம்  தங்குபவராய் இருந்தால்  ’திருமணம்எனும் பெயரில்  இந்த சதை வியாபாரத்தை குறைந்த  விலைக்கு பேசி முடிக்கின்றனர். அத்தகைய ஆண்களுக்கு அவர் ஊரிலேயே திருமணம் முடிந்திருக்கும். எத்தனையோ பெண்கள் இதனால் கருவுற்று கணவனோடு செல்லவும்  முடியாமல் , துன்புறுகின்றனர். 3

இதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது  குழந்தைகள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் சிறுவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் கோவளம், கோவா பகுதிகள் இப்பாதக செயல்களில் ஈடுபடுகின்றன. ஃபீடோஃபில்  க்ளப்புகள்’ அமைத்து சர்வதேச  இணைப்பு இதில் தீவிரமாக ஈடுபடுகிறது.  4

அதேபோல் சுற்றுலாத் தளங்களில் சூதாட்டம், கஞ்சா, குடி ஆகியவை கோலோச்சுகிறது. இப்பழக்கங்களாலும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள், குழந்தைகள். பாலியல் நோய் தொற்று ஏற்படுகிறது. சில வேளைகளில் அது உயிர் பறிக்கும் ஒன்றாக வடிவம் எடுக்கிறது.  ஒவ்வொரு நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுற்றுலா தளங்களில் பாலியல் தொழிலின் வடிவங்கள் மாறுபடுகின்றன நடன பார்கள், நடன காட்சிகள், நிர்வாண கிளப்புகள், பாலியல் உறவு கொள்வதை கன்னாடி வழியாக காண்பதற்கான இடங்கள் என்று செயல்பட்டு வருகின்றன. பாலே நடனம், பெல்லி நடனம் எனும் பெயரால் பெண்கள் பாலியல் பண்டமாக்கப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் பணம் கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் அதிகம். 

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல்  சுரண்டல் மட்டுமல்லாது உழைப்பு  சுரண்டலும் சுற்றுலா சுற்றுலாத்தளப் பணிகளில் நடைபெறுகிறது. இத்துறையில் பெண்களே அதிகம் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் பெரும்பாலும் உடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. அதில் ஒரு வகை அவளது வெளித் தோற்றத்தைக் கொண்டு ஆண் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது, மகிழ்விப்பது என்பதாகும். இரண்டாவது சுத்தம் செய்யும் பணி. இந்த சுத்தம் செய்யும் பணியில் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்களையே ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தலும் நடைபெறுகிறது. ஆண்களை விட பெண்கள் இப்பணிகளில் 10 முதல் 15 சதவிகிதம் குறைவான சம்பளத்தையே பெருவதாக சுற்றுலாவில் பெண்கள் எனும் உலக அறிக்கைச் சொல்கிறது.  லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளுக்கான ஐ.நா பெண் இயக்குனர் கிளாடிஸ் அக்கோஸ்டா சுற்றுலாத் துறையில் பெண்களின் பங்களிப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது என்கிறார். மேலும் கரிபியன் தீவில், 84% சம்பளமற்ற குடும்ப உழைப்பு பெண்களால் மட்டுமே செலுத்தப்படுகிறது. சுற்றுலாவில் பாலியல் சமத்துவத்தை ஊக்குவிக்க இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.என்கிறார்.

பாலியல் சுரண்டல்கள், உழைப்புச் சுரண்டல்கள் ஒருபுறம் இருக்க நாம் ஏற்கணவே சொன்னது போல் சுற்றுலாவின் பெயரால் நிலச் சுரண்டல் குறித்து காண்போம்.

மிகவும் சமீபத்திய உதாரணம் –  முல்லைப் பெரியார் அணை பிரச்சனை: அணை பலவீனமாகிவிட்டது, நில  அதிர்வு ஏற்பட்டால் இடிந்து விழும் என்று கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்களுக்குப் பின் இருப்பது நிலச் சுரண்டல், தொழிற்முறை முதலீடுகள். அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில முதலாளிகள் ரிசார்ட்அமைப்பதற்காக நிலங்களை வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதின் மூலம் இரண்டு விதமான ஆதாயங்கள் குறிவைக்கப்படுகின்றன. 1. ரிசார்ட்டுகளைக் கட்டித் தொழில் செய்வது. [ரிசார்ட்டுகள் பாலியல் தொழிற்கூடமே). 2. வருடம் பூராவும் தொடர்ந்து வர்த்தக ரீதியில், மானியத்துடன் மின்சாரம் தயாரித்து லாபமடைவது. தமிழ்நாட்டிற்கு அப்பாலும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

பெரும்பாலும்  சுற்றுலாத் தளங்கள் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. நகர வாழ்வில் தன்னைத் தொலைத்தவர்களுக்கு, நீர் என்பதை குப்பிகளில் காண்பவர்களுக்கு அமைதியான, நீர் பொழியும் தளங்கள் கவர்ச்சிக்குறியவை. ஆகையால் இவ்விடங்களைக் குறி வைத்து கடலோரப் பகுதிகள் சூறையாடப்படுகின்றன. கடலோரப் பகுதியில் வாழும் மீனவ மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். படகு சுற்றுலா எனும் பெயரில் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் படகு உலா நடைபெறுகிறது. இதிலிருந்து வெளியேறும் டீசல் மாசு கடல் வளத்தை, நீர் வளத்தை, காடுகளின் வளத்தை சிதைப்பதை நாம் கவனத்தில் கொள்கிறோமா. ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் தொங்கும், ஆனால் இவ்விடங்களில் வீசப்படும் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் தானே செல்கிறது. கடல் வளம் பாதிக்கும் போது மீன் பிடி தொழிலும் பாதிக்கப்படுகிறது.

மனமகிழ் சுற்றுலா மட்டுமல்லாது, தொழிற்முறை சுற்றுலா திட்டங்களும் கடல் பகுதியையே மையமாகக் கொள்கின்றன. அந்நிய பெருமுதலாளிகளுக்காக  இங்கு சிறப்பு பொருளாதார  மண்டலங்கள் அமைக்கப்படுகிறது.  பெருமுதலாளிகளின் மூலதனத்திற்கு  எந்த சிக்கலும் ஏற்படாதிருக்க  உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ் காட் ஒப்பந்தம் , எஃப்.டி.ஏ  ஒப்பந்தங்கள் போடப்பட்டு பூர்வகுடிகளின் நிலங்கள், தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகள் தாரைவார்க்கப்படுகிறது. இந்த SEZ களில் இந்திய சட்டங்கள் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது, பாலியல் அத்துமீறல் நடந்தால் கூட அதை விசாரிக்கும் உரிமை இங்கிருக்கும் நீதி மன்றங்களுக்கு இல்லை. அதுமட்டுமல்லாது பொது சொத்தான மின்சாரம், நீர் எல்லாம் இலவசமாக அல்லது மானியமாக வழங்கப்படுகிறது. இதன் தேவைக்காகத்தான் கூடங்குளம் போன்ற ஆபத்து நிறைந்த உற்பத்தி முறைகளை அரசு நிறுவுகிறது.  இன்று நாடு முழுவதும் நடந்து வரும் பூர்வகுடிகளின் போராட்டம் நிலத்திற்காகவே, அதில் பெண்களின்  பங்கு அளப்பறியது. 

வளங்களைச் சுரண்டுவதோடு தனியார் மய சுற்றுலாக்கள் மனிதர்களை காட்சிப் பொருளாக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது. இதுவும் ஆதிவாசிகளை குறிவைத்து நிகழ்கின்றன. அந்தமான் நிகோபாரில் ஜாரவாஸ் ஆதிவாசிகளைக் காட்சிப் பொருளாக்கியதைக் கண்டித்து உச்ச நீதி மன்றம் அவர்கள் வாழும் சுற்றுப் பகுதியில் வணிக செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. ஜாரவா பூர்வகுடிகள் இனம் அழிந்து வருகின்றது. 300 மட்டுமே எஞ்சியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது  சூழலியல் மாற்றம், உலக வெப்பமாதல் சுற்றுலா தளங்களில்  எறியப்படும் கழிவுகளிலிருந்து வெளியேறும் மாசு சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. எகோ டூரிசம் என்பதே கட்டுக்  கதை, ஏனென்றால் அந்த பகுதிகளுக்குச் செல்வதற்கும் விமானத்தில்  தான் செல்கின்றனர். அதிலிருந்து  வெளியேறும் கார்பன் டையாக்ஸைட் ஓசோன் மண்டலத்தை தாக்குவதை இல்லை என்று சொல்ல முடியுமாஅந்த தளங்களில் எரியப்படும் கழிவு, பயன்படுத்தப்படும் அளவுக்கதிகமான தண்ணிர், இயற்கையின் பெயரால் விற்கப்படும் பொருட்களின் விலை என்று எத்தனை சுரண்டல்கள் நிகழ்கின்றன. அந்த பொருட்களை தயாரிப்பதில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள்ளப்பட்டது என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியுமா? 34 டிகிரி செல்சியசுக்கு மேலாக ஏறும் ஒவ்வொரு செல்சியஸ் வெப்பத்தினாலும் அரிசி, சோளம், கோதுமை போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் விளையும் பயிர்களின் அளவில் 10% வீழ்ச்சியடைகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம். சுற்றுலாத் தளங்களின் பெருக்கத்தால் நிலங்கள் அழிவதோடு, அறிய மிருகங்கள் பறவைகள் அழிகின்றன.  கடற்கரை மாசுபடுவதால் 58% பவழப்பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளது. பவளப்பாறை என்பது பூகம்பத்திலிருந்து காக்கும் தன்மை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . எகோ டூரிசப் பகுதிகளில் புவி வெப்பமடைவதில்லையா? கடற்கரையை மக்கள் மாசுபடுத்துவதில்லையா?
அத்தளங்களில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டப் பொருட்களைக் கொண்டு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது தவிர சிறு சிறு விசயங்கள் அழகியல் ஊட்டப்பட்டு பசுமையாக காட்சியளிக்கும். ஆனால் இதுவும் ஒரு வியாபார உத்தியே அன்றி, உண்மையான அக்கறை என்று சொல்லிவிட முடியாது.

இப்படி சுற்றுலாத் துறை என்பது பெண்களை நேரடியாகப் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், அவளது உழைப்பிற்கு குறைந்த கூலி தருகிறது, உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் அதிகமாக அவளைச் சுரண்டுகிறது என்பதோடு வாழ்வாதாரங்களைப் பறித்து அங்கும் பெண்களைக், குழந்தைகளை மறைமுறகமாகச் சுரண்டுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண்கள், குழந்தைகள் கல்வி கற்பது இயலாத ஒன்றாகும். கல்வியில் முன்னேறாத போது உயரிய பணிகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு உழைக்கும் கூலிகளாக மீண்டும் முதலாளிகளுக்கே பயன்படுகின்றனர்.

குறிப்பு:

1, 2, 3, 4 - கே.பி சசி அவர்கள் எழுதி இன்னும் வெளிவராத கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

(புதிய கோடங்கி இம்மாத இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. உலக சுற்றுலா தினத்தன்று அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் ஆற்றிய உரையின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்.)


4 comments:

 1. அகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012 @ http://newsigaram.blogspot.com/2012/11/ilangai-blogger-ondru-koodal-2012-46-10.html#.UKUVWORfEkk

  ReplyDelete
 2. கொடுமைகள்... மாற வேண்டும்...

  ReplyDelete
 3. கட்டுரையை இன்னும் கொஞ்சம் கருத்துக்களோடும் ஆதாரங்களோடும் செறிவூட்டி இருந்திருக்காலம் என்று தோன்றுகிறது கொற்றவை..

  ReplyDelete
 4. இது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காக தயாரிக்கப்பட்ட உரை...நேரத்தை கணக்கில் கொண்டு ஒரு பரந்த கருத்துக்களை பகிர்ந்தேன்....உங்கள் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று தான்...வேறொரு கட்டுரையில் விரிவாக எழுதலாம். நன்றி.

  ReplyDelete