Jul 13, 2012

பெண் என்பதில் கர்வம் கொள்வோம்

பெண்கள் எத்தகைய உடை அணிய வேண்டும் என்பது அவளது சுதந்திரம் என்று சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அவளுக்கான உடை வகைமாதிரிகளை வடிவமைப்பது யார்? அதன் பின் இருக்கும் ‘பெண்மை’ எனும் கருத்தாக்கத்தின் தாக்கம் என்ன?
தொப்புள், இடுப்பு, புட்டத்தின் கீழ் பகுதிகளை வெளிக்காட்டும் விதமான உடை ஏன் ஆண்களுக்கு இல்லை?

குத்தூசி காலனிகள், மினி ஷார்ட்ஸ் போன்ற உடைகள் ஏன் காரியதரசனுக்கு இல்லை?

ஆண்கள் ஸ்லீவ்லெஸ் அணிந்து வெளிவரும் தேவை ஏன் அவர்களுக்கு இல்லை?

உடலை முழுவதுமாகப் போர்த்திக்கொண்டு (ஷார்ட்ஸைத் தவிர) ஆண்கள் வலம் வர, பெண்களைச் சுற்றி மட்டும் ஏன் உடலை வெளிக்காட்டும் வகையான உடை சுதந்திரம் பற்றிய சர்ச்சை சுழன்று கொண்டேயிருக்கிறது. இது உண்மையில் பெண் சுதந்திரமா? அத்தகைய உடைகளில் ‘பெண்மை’ எனும் ஆணின் பார்வை அழகியல் கருத்தாக்கம் ஒளிந்திருப்பது நமக்குத் தெரியவில்லையா?

திரைப்படங்களில், விளம்பரங்களில், ஊடகங்களில் பெண்களின் உடல் ஆணாதிக்க நிலைப்பாட்டின் படி வடிவமெடுப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

நான் எப்போதும் சொல்வது போல், உடலை வெளிக்காட்டுவோம், கொண்டாடுவோம் அது நமது பகுத்தறிவிலிருந்து வெளிவரவேண்டும், ஆணாதிக்க முன்மொழிதல்களின் கிளிப்பேச்சின் விளைவால் அல்ல. அரைகுறை வெளிக்காட்டுதலை விட நிர்வாணம் அதி சுதந்திரமானது, ஆனால் அது எல்லாப் பாலினத்திற்கும் பொருந்துவதாய், சமூக யதார்த்தமாய் இருக்கட்டும்…..

பெண் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகளுக்குத் தெரியாத உடல், உடை சுதந்திரமா? ஏன் அவர்கள் எப்போதும் தங்கள் உடலை முழுவதும் போர்த்தியபடி வலம் வருகிறார்கள். அவர்கள் பிற்போக்குவாதியா? சுய அறிவு பெற்றவரக்ளா? ஆணாதிக்க திரிபுவாதங்களை அடையாளம் கண்டவர்களா? உடல் என்பது பேராயுதம். போயும் போயும் அற்ப ஆணாதிக்க இச்சைக்கு இரையாவதற்காகவா நாம் அதைப் பணையம் வைக்கப் போகிறோம்…..? அப்படியென்றால் நமக்கு ஆண்களின் அங்கீகாரம் அதிஅவசியமாகத் தேவைப்படுகிறது என்பது தான் அர்த்தம்...அவர்கள் நம் அழகை அங்கீகரிக்க வேண்டும், நம்மை ரசிக்க வேண்டும், வாளிப்பான உடல் என்ற சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்கிற தவிப்பு. இதுவும் ஆணாதிக்க, முதலாளித்துவ, பூர்ஷுவா சிந்தனையின் பிடியில் நம் மூளைகள் கட்டுண்டிருப்பதின் விளைவே.

பெண்கள் அனைவரும் எங்கள் உடலை நாங்கள் இனி வெளிக்காட்டவே மாட்டோம் என்றும் ஒட்டு மொத்தமாக முழங்கினால் அப்போது ஆணாதிக்க குரூர மனம் என்னவென்று வெளிப்படும்.



பெண் உடலை கட்டுப்படுத்துவதாலும், பெண் உடலுக்கு பாலியல் சுதந்திரம் கொடுப்பதாலும் ஆதாயம் அடைவது ஆணினமே. ஒன்று மதவாதம், இன்னொன்று போலி முற்போக்குவாதம்.

பெண்கள் ஆணின் பரிந்துரைகளை அமிலச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். நான் பெண் என்பதில் கர்வம் கொள்ள வேண்டும்.

நம்மோடு நட்பு அல்லது உறவு கொள்ள விரும்பும் ஆணுக்கு நம் உடலைத் துய்க்கும் கருத்தியல் ரீதியான தெளிவு இருக்கிறதா என்பதை பகுத்தாறாயமல் நம்மை அவருக்கு கொடுப்போமானால், அந்நபரும் தன் வட்டங்களில் தன் ஆண்மை சாகசம் குறித்து தம்பட்டம் அடிப்பார். பெண்ணின் அந்த விட்டுக்கொடுத்தலை, அரவணைத்தலை அவரும் தேவைப்படும் இடத்தில் வேசைத்தனம் என்றே சுட்டுவார். அதேபோல் பெண்ணும் அந்த ஆணை இளக்காரமாக, என்னைத் துய்த்த உனக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்கு (நாயே) என்று தான் நிணைப்பாள். ஆக நாம் இங்கு இழப்பது ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் மரியாதையை. பெண்கள் தம் உடல் மீது தாமே கட்டுப்பாட்டை விதிப்பதென்பது சுதந்திரக் கேடோ பிற்போக்குவாதமோ அல்ல, அது சுயமரியாதை.



ஏன் ஆண்களுக்கு புருவம் திருத்தும், உதட்டுச் சாயம் பூசும், ஐ லைனர் போடும் தேவை, கை-கால் முடிகளை மழிக்கும் அவசியம், பார்ட்டிகளுக்குப் போவதற்கு அரிதரம் போட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. பெண்களே நீங்கள் உண்மையில் பெண் என்பதில் கர்வம் கொள்வீர்களானால், முதலில் மேற்சொன்னவற்றை செய்வதில்லை என்று மறுத்தலியுங்கள்.

(ஆண் நடிகர்கள், மாடல்கள் நிலை வேறு, அது கட்டுடைப்புக்கு அவசியமற்றது).




  • 57 minutes ago · 

  • AD Bala 
    பெண் உடைகுறித்தும், உடல் குறித்தும் உங்களது பார்வை பெண்ணியவாதிகளாய் அறியப்படும் பலரை விடவும் நுட்பமானதும், ஆணாதிக்க மாயையை ஊடறுத்து புரிந்துகொள்வதுமாக இருக்கிறது. பெண் தமது உடலை மூடிமறைக்கும் வழக்கம் பிற்போக்காகவும், உடலை வெளிக்காட்டுவது முற்போக்காகவும் தெரிவதற்கு வேறு காரணம் உள்ளது. நிலக்கிழாரிய சமூக அமைப்பில் பெண் குடும்ப அடிமை, அவளது பாலுணர்வும் உடலும் கணவனுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து. ஆனால், முதலாளியம் பெண் உடலை பண்டமாக்கியுள்ளது. அந்த பண்டத்தை வைத்து பிராண்டுகளைக் கட்டமைக்கிறது. சினிமாக்களை, கலை-பண்பாட்டு-வணிக சேவைகளை உற்பத்தி செய்கிறது. அதையொட்டி அலங்காரப் பொருள், அழகு படுத்தல், உடை வணிகங்களும் நடக்கின்றன. நிலக்கிழாரிய குடும்பப் பிற்போக்குத் தனங்களில் கட்டுண்டு கிடந்த பெண்ணுக்கு இந்த பண்டமாக்கல், அதில் தமக்குள்ள தேர்வுச் சுதந்திரம் விடுதலையோ என்னும் மயக்கத்தை தருகிறது. நிகழ்ந்துள்ளது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையை நோக்கிய நகர்வு அல்ல. ஒரு அடிமைத் தனத்தில் இருந்து வேறு விதமான அடிமைத் தனத்தை நோக்கிய நகர்வு.
    உங்கள் பதிவின் கடைசி பாராவைத் தவிர மற்றெல்லாம் ஏற்புடையதே. //பெண்கள் அனைவரும் எங்கள் உடலை நாங்கள் இனி வெளிக்காட்டவே மாட்டோம் என்றும் ஒட்டு மொத்தமாக முழங்கினால் அப்போது ஆணாதிக்க குரூர மனம் என்னவென்று வெளிப்படும்.// இது யதார்த்தத்துக்கு முரணாக உள்ளது.

    7 minutes ago · Edited ·  · 1

  • Nirmala Kotravai AD Bala நன்றி. அவ்வரியில் வணிகச் சுரண்டலுக்கு துணை நிற்கும் விதமாக என்று சேர்த்துக் கொண்டால் சொல்லவந்து கருத்து சரியாகப் புரிந்திருக்கும். அது தனிப்பட்ட உறுவுகளுக்குப் பொருந்தாது.



(முகப்புத்தகத் துளிகள்)

1 comment:

  1. இதை நீங்கள் சொன்னதால் சரியென்று சொல்லும் ஜனம்...ஆண் சொல்லியிருந்தால் ஆதிக்கம் செலுத்துகிறான் என்றே சொல்வார்கள்.உண்மையான சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு தர வேண்டிய வெகு ஜன ஊடகங்கள் வியாபாரமாக மாறியதை அவசியம் சுட்டி காட்ட வேண்டும்.

    ReplyDelete