பெண்மை உடைத்தவள்!
கடவுளர்களை கட்டவிழ்க்கும்!
பூஞ்சைகளை
எட்டி உதைக்கும் வலு கொண்டன எனது கால்கள்!
எரிமலையே அங்கே தான் ஒளிந்திருக்கிறது!
- கொற்றவை
............................................................................கொற்றவை.
15.12.2024 அன்று உலகம் மௌனத்தில் உறைந்தது. தாளங்களின் ராஜா
உஸ்தாத் ஜாகிர் உசேனின் விரல்கள் நிரந்தரமாக ஓய்வை தழுவின. கடவுள் மறுப்பு கொண்டிருந்தாலும்
இளையராஜா, உஸ்தாத் ஜாகிர் உசேன் போன்றோர் இசைக் கடவுளாக, தாள கடவுளாகவே தெரிகின்றனர்.
மெய் சிலிர்க்கும் இசையால் வாழ்வின் துயர்களை மறக்கச் செய்பவர்கள் அவர்கள். கடவுளின்
தேவையும் அதுதானே, வலி நிவாரணி!
உலகமே கொண்டாடும் ஓர் இசை மேதை எங்களுக்களித்த இடமும், பொழிந்த
அன்பும் அலாதியானது. அவரின் மறைவு உலகிற்கு பேரிழப்பு என்பதோடு தனிப்பட்ட முறையில்
எங்களுக்கு துயர் மிகுந்தது.
வருணாவின் (என் மகள்) அப்பா ஓர் ஓவியர். ஓவியர்களுக்கு இந்த
சமூகத்தில் எத்தகைய வாழ்வாதாரம் உள்ளது என்பதை நான் விளக்கத் தேவையில்லை. ஓவியம் வரைய
வர்ணங்கள் வாங்கக் கூட வழி இல்லாத நிலையில் எண்ணற்ற ஓவியர்கள் உள்ளனர். அப்படித் தன்
வாழ்வைத் தொடங்கிய ஒருவரை நான் கரம் பிடித்திருந்தேன்.
’குடும்பம்’ உருவானது. ஓவியங்களைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு
கதவாக தட்டிக் கொண்டிருந்த சமயம். மழை காலத்தில் வீட்டிற்குள் வந்தழித்த ஓவியங்கள்
போக மீதமிருப்பவற்றை எடுத்துக்கொண்டு நானும் அவரோடு ஓடுவேன். 18 வருடங்களுக்கு முன்னர்,
அப்படித்தான் ஒரு நாள் ஓடினோம். உஸ்தாத் ஜாகிர் உசேன் அவர்கள் Music Academy இல் இசை
நிகழ்ச்சிக்காக வருகிறார் என்ற செய்தியை படித்த உடன், எப்படியாவது அவரைக் காண வேண்டும்
என்று சென்றோம். வருணா அப்போது ‘குழந்தை’.
அவர் அரங்கத்திற்குள் செல்லும் பாதையில் மிகுந்த பதட்டத்தோடு
காத்திருந்தோம். சீருந்தில் வந்திறங்கினார். கூட்டம் சூழ, எங்களை அவர் காணும் வாய்ப்பில்லை.
அதையும் மீறி சத்தமாக ஒலி எழுப்பி அவரை நோக்கி ஓடினோம். ஓவியர் என்றதும் சிரித்த முகத்துடன்
வாருங்கள் என்று அழைத்தார். குழந்தை முகம் மட்டுமல்ல, குழந்தை உள்ளத்துடன், ‘நல்’ ஆத்மா
என்னும் பொலிவும், கனிவும் கண்களில் தெரியும் ஓர் உருவம் அல்லவா அவர். உஸ்தாத் அழைத்ததும்,
அவரது தாளங்கள் பின்னணியில் இசைக்கும் துள்ளலுடன் ஓடினோம். ஓவியத்தைக் கண்டு வியந்து
பாராட்டினார். அவருக்கு அந்த ஓவியத்தை பரிசளித்தோம். தனது email id ஐ பகிர்ந்து
“stay in touch” என்று வாஞ்சையோடு சொல்லி, இசை நிகழ்ச்சியை காண உள்ளே அழைத்தும் சென்றார்.
இப்படி தொடங்கிய எங்கள் அன்புறவு, அப்படியே தொடர்ந்தது. அவரோடு
மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருந்தோம். எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ தெரிவிப்பார்
(அவரது மனைவி தான் அவருடைய தொடர்பாடலை கவனிப்பார்). தாஜ் ஹோட்டல், இன்னும் இதர அரங்கங்கள்
என்று எங்கெல்லாம் அவர் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருடன் செல்லும் ‘பாக்கியம்’ எங்களுக்கு
கிடைத்தது. அதிலும் எங்கள் மகள் வருணா மீது அவர் காட்டிய பாசம் ‘பொக்கிஷம்’. அவள் அந்த
பிஞ்ச் விரல்களால் வரைந்த ஓவியங்களை மனதார ரசிப்பார், ஊக்குவிப்பார். அவள் வாங்கிய
சர்வதேச விருதுகளைக் கண்டு மகிழ்வார். என்னிடம் அதைப் பற்றி பேசி சிரிப்பார்.
ஒருமுறை கூட அவர் முகம் சுளித்தோ, அல்லது தான் உலகம் போற்றும்
இசை மேதை என்ற அகந்தையுடனோ பழகியது கிடையாது! எப்போதும் அன்பும், பணிவும் மட்டுமே கண்டுள்ளேன்.
அப்படி ஒரு பாந்தமும், காந்தமும் அவரிடம் உள்ளது. அவரது இசைக் கச்சேரிகளை, அவர் தன்
இசை வாத்தியத்தை TUNE செய்யும் கணத்திலிருந்தே காணும் ‘அதிர்ஷ்டம்’ எங்களுக்கு கிடைத்தது.
சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். சக கலைஞர்கள் அவரை போற்றுவதையும் கண்டுள்ளோம். அதற்கு
காரணம் இன்னார் என்றில்லை, அனைவரிடமும் அவர் கனிவுடனே நடந்துகொள்வார். தபேலாவை இசைத்தபடி
அவர் பாடுகையில், இறக்கையுடன் அந்த அரங்கில் நான் பறந்து கொண்டிருப்பேன்.
வருணாவின் அப்பா அவருக்கென ஓர் ஓவியக் கண்காட்சியை அர்பணித்தார்.
அனைத்தும் உஸ்தாதின் ஓவியங்கள். பெருந்தன்மையுடன் கலிஃபோர்னியாவிலிருந்து வந்து அதை
திறந்து வைத்தார். ஓர் ஓரத்தில் என் மகளும் அவரை கோட்டோவியமாக வரைந்து வைத்திருந்த
ஓவியங்களை விரிந்த கண்களுடன் கண்டு மகிழ்ந்து பாராட்டினார். எல்லா நேரமும் புன்னகையும்,
அன்பும் மட்டுமே மிளிரும் ஓர் முகத்தைக் காண்பது உண்மையில் வரமே. அவரது விசாலமான இதயத்தில்
எங்களுக்கும் ஓர் இடமிருந்தது.
அந்த திருமண முறிவுக்குப் பின்னர் என் வாழ்க்கைப் பாதை மாறியது,
நான் அவரோடு தொடர்பில் இருக்கவில்லை. (என் துரதிஷ்டம்).
இசை மேதை மட்டுமல்லாது, ஆகச் சிறந்த மனிதரை இந்த உலகம் இழந்திருக்கிறது.
கண்ணீரால் கோர்க்கப்படும் அஞ்சலி இது.
அன்பாலும், அவரது இசையாலும் உஸ்தாத் ஜாகிர் உசேன் அவர்கள்
என்றென்றும், என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்வார். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும்,
உலகெங்கிலுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
தங்கலான் தமிழ் சினிமாவின் ஜொலிக்கும் தங்கமே!
விடுதலை அரசியலை கலை நயத்துடன் படைப்பாக்கியதில் மின்னும் தங்கலான்!
முத்தையா படத்தில் நடித்தால்
சாதி வெறி, சாதியக் கூட்டணி!
புதிய புரட்சியாளர்கள்
கண்டுபிடிப்பு!
படத்துல நடிச்ச அத்தனை
பேரோட சாதியையும்
தோண்டி எடுத்தீங்களாப்பு!
திமிரு புடிச்ச அப்பனை
எதிர்க்குற அப்பன் படம்
சாதியப் பெருமை பேசுச்சாப்பு!
சரி! முத்தையா சாதியைத்
தோண்டிட்டீங்க
இதுக்கு முன்னாடி சசிக்குமார
வச்சி நோண்டிட்டு இருந்தீங்க
அவரோ நந்தன்னு ஒரு படத்துல
நடிக்கிறாரு
அவரு எடுத்த அசுரவதம்
படம் பீடோஃபீல் பத்தினது
அதுல வசு பீடோஃபிலா
நடிச்சிருந்தாரு.. அதுவும் சாதி வெறியா
இல்லை அம்பேத்கரை, அயோத்திதாசரை
எல்லாம் விமர்சனம் செய்றதால
நிஜத்துலையும் அவரு
அப்படின்னு சொல்லுவீங்களா?
விருமன் படத்துல நாயகன்
கார்த்தி
அப்ப அவரும் முத்தையாவோட
சாதி வெறி கூட்டணியாப்பு!
சரி அவரைக் கூட விடுங்க
மோடிஜிய போட்டு வாங்குற
பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு
அப்ப அவரும் சாதி வெறியனாப்பு!
அம்பேத்கரைப் புகழ்ந்தா
சாதிய தோண்ட மாட்டீங்க
விமரசனம் பண்ணா ஆணாதிக்க சிந்தனை எப்படி வளர்க்கப்படுதுன்னு
பேசுற பதிவுல கூட வன்மத்துல
வந்து லந்து பண்ணுவீங்க!
ஒருத்தர்க்கு என்ன அதிகாரம்
இருக்கும்
உச்சத்தில் இருக்கும்
கதாநாயகனா இருக்குற
ஒருத்தருக்கு என்ன அதிகாரம்
இருக்கும்
சமூகத்திற்கு தவறான
கருத்தை சொல்லும் கதாப்பாத்திரங்களை,
கருத்துகளை சொல்லக்
கூடாது என்று மறுக்கும் அதிகாரம்
யாருக்கு இருக்கும்னெல்லாம்
ஒரு படிநிலை புரிதல் எல்லாம் வேணும்
அதுக்கு மார்க்சியம்
படிச்சிருக்கோணும்
வாய் இருக்குன்னு பொலிட்டிகல்
கரெக்ட்னெஸ் பேசாம
ஓரமாப் போய் மார்க்சியத்தைப்
படிங்க!
சவீதா அம்பேத்கரின்
சாதியை வைத்து அவர் தான்
அம்பேத்கரை கொன்றார்
என்று பேசியவர்களுக்கும்
உங்களைப் போன்றவர்களுக்கும்
ஒரு வேறுபாடுமில்ல..
அதையும் வசு ஒரு பதிவாப்
போட்டாரே படிக்கலையா!
எல்லாத்தையும் படிச்சுப்போட்டு,
அம்பேத்கர் மீது வைத்த
விம்ரசனத்துக்கு
கருத்துரீதியா அறிவார்ந்த
உரையாடலை முன்வைங்க
சின்னப்புள்ளத்தனமா
உருட்டாதீங்க!
என்னோட ப்ளாக்ல இந்த
அரதப் பழசான எல்லா கேள்விகளுக்கும்
பதில் சொல்லி இருக்கேன்.
அதையாச்சும் தேடிப் படிங்கப்பு!
#வசுமித்ர எழுதிய புத்தகங்கள் :)
https://panuval.com/vasumithra
மொத ரெண்டு புத்தகங்கள் தான் ஒரு குரூப்போட வன்மத்துக்குக் காரணம்
அவர் முகநூல் பக்கமா போனீங்கன்னா இன்னும் நிறைய இருக்கு! அங்க வசை பாடிட்டு நேர்ல தோழர் உங்களை, வசுவல்லாம் மறுக்க முடியுமான்னு வந்து பேசுனவங்கல்லாம் உண்டு
விருமன் படத்துல மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு அப்ப அவரும் சாதி வெறியனாப்பு! விடுதலை நாயகன் சூரி நடிச்சிருக்காரு! தயாரிப்பு சூர்யா! அப்ப சூர்யாக்கும் சாதி வெறியாப்பு! உங்க வன்ம கக்கலை நிறுத்தித் தொலைங்க! பதில் சொல்லி அலுத்துப் போச்சு
வணக்கம் விஜய்,
நலமா? உங்கள் அரசியல் வருகை செய்திகளையும், உங்கள் கட்சிக் கொள்கைகளையும் படித்தேன். வாழ்த்துகள்.
சமூக நீதி, சமத்துவம், கல்வி வழங்குதல், தொழிற்சங்கம் என்று இயக்கப் பணிகள்
நடைபெறுவதைக் காண முடிகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைவதில்
நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். புதுச்சேரியில் சிறுமிக்கு
எதிராக நடந்த கொடுமையைக் கண்டு கொந்தளித்துப் போய் இருப்பீர்கள். உங்கள்
பதிவுகளைக் காண முடிகிறது!
நான் சமத்துவத்தை வலியுறுத்தியும், குறிப்பாக பெண் விடுதலை, பெண்களை ஒடுக்குவதற்குக்
காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன்.
பொதுவாகவே ஆணாதிக்கம் என்கிற சொல்லைக் கண்டால் இங்கே ‘ஆண்’ என்னும் எண்ணம்
(கர்வம்) கொண்ட ஆண்களால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை! ஆணாதிக்கம் என்று
பேசுகையில் அது ஆண் வெறுப்போ அல்லது ஒட்டுமொத்த ஆண்களை குறை சொல்வதோ ஆகாது என்று
பல நூற்றாண்டுகளாக இங்கே விளக்கிய போதும் இது குறித்த கல்வி நம் சமூகத்தில் இல்லை!
மேலும் இங்கு எல்லாமே தனி மனிதர் நடத்தை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே
பார்க்கப்படுவதால் சமூகமயமாக்கல் விளைவாக நமக்கு உண்டாகும் அறிவு, எண்ணம், புரிதல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான ஆணி வேர் என்ன என்பது குறித்த பிரக்ஞையும்
இல்லை! எனவே ஆம்பிளைங்களை ஏன் குத்தம் சொல்ற, செஞ்சவன்
சைக்கோ என்கிற ரீதியில் முழுக்க முழுக்க அறியாமையில் மூழ்கிப் போய் மீசையை
முறுக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
இன்றைக்கு பெண்கள் தினம். ஆர்த்தி மட்டுமின்றி தினம் தினம்
எங்கள் உடல்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, வன்முறை,
நிலவும் கருத்தியல், ஆண்களுக்கு
அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறித்து நான் பதிவு எழுதினேன்.
அதை படித்தே ஆக வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்களை நான்
கையைப் பிடித்து இழுக்கவில்லை. ஆம்பிளை என்கிற சொற்களைக் கண்டதும் சிலரது ஆண்மை
முறுக்கு ஏறிவிடுகிறது, மரியாதை குறைவாகப் பேசுவது, ஆபாசமாக பேசுவது, ஏளனம் செய்வது என்று
வந்துவிட்டார்கள்.. நான் முதலில் அதை புறம் தள்ளவே எண்ணினேன். ஆனால் தொடர்ந்து
கமெண்டுகள் வரவே உள்ளே சென்று பார்த்தபோதுதான் அவர்கள் TVK ஆதரவாளர்களாக இருப்பது தெரிந்தது.
இணையத்தில் உங்கள் இயக்க ஐடியையும், உங்கள் ஐடியையும் டேக் செய்யத் தொடங்கினேன்.. இன்னும் கூடுதலாகியது.
இதற்குப் பெயர் Cyber Bullying, Mob attacking. இன்றய
இணையவெளியில் இது மிகவும் ஆபத்தான போக்கு, இதிலும் ஓர்
ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
சமத்துவம் என்னும் போது, பெண்களைப்
போற்றுவது (அதுவும் ஆண்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பெண்மை வளையத்திற்குள்
இருக்கும் பெண்களைப் போற்றும் நிலையே) தேவை இல்லை நண்பா, இங்கு
தேவைப்படுவது மரியாதை,யும், சமத்துவமும்,
சுதந்திரமும். பெண்கள் நிலை என்ன,
அவர்கள் ஏன் ஒடுக்கப்படுவதாக ”பெண்ணியவாதிகள்” எழுதுகிறார்கள்,
ஆணாதிக்கம் என்றால் என்ன, அதை எப்படி
மாற்றுவது என்றெல்லாம் படிப்பது அதற்கு முன் நிபந்தனை. நான் படித்ததால்
எழுதுகிறேன். பெண்களுக்காக மட்டுமில்லை நண்பா, கடுமையாக
உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பொருளாதார அடிமைகளாக மாறிப் போன ஆண்களுக்காகவும்
சேர்த்தே இயங்குகிறேன்.
என் பதிவுகளைப் படித்தால் தெரியும்.
உங்கள் அரசியல் பிரச்சாரத்திலும், அமைப்பு ஒழுங்கு விதிகளிலும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பெண்களிடம் எப்படிப் பேசலாம், பேசக்
கூடாது என்றும், இணைய வம்பிழுத்தலில் யாரோடும் ஈடுபடக்
கூடாது என்றும், சமூக மாற்றத்திற்கான பணியை மட்டும்
மேற்கொள்ளதே கடமை என்றும் எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பாதிக்கப்பட்ட பெண்ணாக, சமூகத்தில்
எழுத்தின் மூலம் மாற்றத்தை எழுத விளைபவளாக, உங்களோடு லயோலா
கல்லூரியில் விஸ்காம் படித்த தோழி என்கிற உரிமையிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்!
நன்றி
அன்புடன்
கொற்றவை
பி.கு: இதை விளம்பரம் என்று மலினப்படுத்தவும் ஒரு கூட்டம்
உள்ளது! ஆம் விளம்பரம் தேடுகிறேன் நண்பா! பெண் நிலை மேம்பாட்டிற்கான தேவை
குறித்தும், பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறையை
ஒழிப்பது குறித்தும் விளம்பரம் தேடுகிறேன்.
அதேபோல் உங்களை மட்டும் குறிப்பிட்டு டேக் செய்யவில்லை. நீங்கள் அரசியல் களத்திற்கு வந்துவிட்டீர்கள், ஓர் அமைப்பாக உங்கள் ஆதரவாளர்கள் சிலர் இப்படி செய்வதால் முறையிடுகிறேன். எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை டேக் செய்து முறையிடுவேன்.
பிறந்த நொடியில் கள்ளிப் பாலா தாய்ப் பாலா என்ற ஆபத்து!