Aug 27, 2025

திருகு மூளை எனும் அரக்கன்!


ChatGptயிடம் உரையாடல் வைத்துக்கொண்டு பதின்பருவத்தினன் ஒருவன் தற்Xலை செய்துகொண்டதால், அந்த குடும்பம் தற்போது அந்த மென்பொருளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறது!

அக்குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

தற்Xலை எண்ணம் பலருக்கு பல காரணங்களால் தோன்றலாம்! அது குறித்து பேச நான் மருத்துவரில்லை. காரணமே இல்லாமல் மூளையின் wiring காரணமாக, மரபு ரீதியாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது! தாளாத, மீளாத, தேக்கி வைக்கப்பட்ட ரணங்கள், துயரங்கள், Post Trauma Effect இப்படிப்பட்ட காரணங்களும் சொல்லப்படுகிறது. மனநலன் சார்ந்த குறைபாடுகளாக கருதப்படும் நிலையாக சில அறியப்படுகின்றன.

தற்Xலை எண்ணத்துடன் வாழ்வதும், போராடுவதும் போர்களத்திற்கு போவது போன்றுதான். கனம் தப்பினால் ஒருவர் அந்த முடிவை எடுத்துவிடுவார்.

நான் ஏன் இப்போது இதை எழுதுகிறேன்! ஏனென்றால், நானும் அவர்களில் ஒருத்தி!

கடந்த சில மாதங்களாக என் காதுகளில் ஒரு குரல் ஆணை இட்டுக்கொண்டே இருந்ததுவாழ்க்கை இவ்வளவு துயரமாக உள்ளது, எவ்வளவுதான் போராடுவது, செத்துவிட்டால் இந்த துயர்கள், பொருளாதார போராட்டம் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துவிட்லாம்.. நீ செத்துவிடுசெத்துவிடு.. செத்துவிடு”! இது மட்டுமே என் காதுகளில் ஓசையின்றி ஒலித்துக்கொண்டிருந்த பாடல்!

இந்த தற்Xலை கீதம் நேரடியாக தொடங்காது! மூச்சு விட சிரமப்படுவதிலிருந்து என் உடல் எனை கஷ்டப்படுத்தும். வயிற்றுப் பகுதி இறுகிப் போகும். நெஞ்சாங்கூட்டில் ஆக்சிஜன் நின்று போகும். நானும் இதற்கு பல வைத்தியங்களை 20 வருடங்களுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன். ஒருவர் ஆஸ்துமா என்றார், பின்னர் சித்த மருத்துவம், பின்னர் இது GERD என்றார்கள். அதிகமாக வயிற்றில் ஆசிட் சுரக்கிறது என்று சொல்லப்பட்டு எப்போதெல்லாம் மூச்சு விட முடியவில்லையோ அப்போதெல்லாம் PAN 4o களாக விழுங்கியுள்ளேன். என் உடலைக் கீறினால் கிலோ கணக்கில் PAN 40யும் Antacid Gelம் வெளி வரும்.

 ஒரு கட்டத்தில் மூச்சு சுத்தமாக விட முடியாமல் திணறி அவசர சிகிச்சைகள் நடப்பதுமுண்டு.

ஒரு கட்டத்தில் அதாவது 2,3 வருடங்களுக்கு முன்னர் என் மகள் என் நிலையை அவதனித்து நீ உன் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் ஆராத ரணங்களாக உள்ளது. அது மீண்டும் மீண்டும் உன் ஆழ் மனதிலிருந்து வெளிப்பட்டு உனை ஏதோ செய்கிறது, என்று எனது “Reactions & behaviour”களை வைத்து அவதானித்து, மனநல மருத்துவரிடம் ஆலோசிக்கச் சொன்னாள். (இது குறித்து ஒரு முறை எழுதி இருக்கிறேன்! அதை வைத்து என் எதிர்ப்பு செயல்பாடுகளைபைத்தியம், மன நிலை தவறியவள் என்று மனசாட்சியின்றி சிலர் பேசியதும் உண்டு)…

Anxiety & Depression அறிகுறிகள் என்று கண்டறியப்பட்டு மருத்துவம் மேற்கொண்டு, மீண்டு வந்தேன்?

ஆனால் இது ஒரு முறையோடு நின்று விடாது, எப்போது வேண்டுமானாலும் திருப்பி வரலாம் என்று என் மருத்துவர் கூறி இருந்தார்.

நான் முன்னர் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாலும் நான் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். அதன் விளைவாக நல்ல சம்பளம் உள்ள வேலையை விட்டுவிட்டு, ஏதுமற்று நிற்கும் போது, வேலை என்கிற SCAM களில் சிக்கிக் கொண்டதால் அழுந்தி இருந்த அந்த அரக்கன் மீண்டும் உயிர் பெற்றான்!

மூச்சு விடுவதில் சிரமம், அத்தோடு இந்த முறை தற்Xலை எண்ணம் மிகத் தீவிரமாக மேலோங்கியது! உள்ளுக்குள்ளேயே அழுவது, சீருந்து ஓட்டும் போது தீவிரமான எண்ணங்கள், உயரத்திலிருந்து பார்க்கும் போது குதித்து விடத் தோன்றும் எண்ணங்கள் என்று மூளை போர்க்களமாகிப் போனது. ஆனால் உடனிருப்பவர்கள் எல்லாம் அன்பானவர்கள் தான்! எதுவும் எனக்கு உதவவில்லை! யாரிடமும் நான் பகிரவுமில்லை!

எவ்வளவு தான் PAN40 போட்டாலும் பயனுமில்லை என்னும் போது நினைவு வந்தது, அந்த EPISODE மீண்டும் வரும் என்று மருத்துவர் சொன்னாரே, அதுதான் இது. உடனே Psychiatrist அனுகினேன். அவர் அதை விளக்கி மருந்துகள் கொடுத்தார். தற்போது தேறி வருகிறேன்.

எந்த TRIGGER FACTORஐயும் அருகில் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதால் தான் நான் சமூக வலைதளத்திலும் இனி ACTIVE ஆக இருக்க மாட்டேன் என்று பதிவு செய்தேன்! (ஆம் இங்கு சில ”பெண்கள் அத்தகைய TRIGGERS)..

இப்போது நான் நல்ல பணிச் சூழலில் தான் உள்ளேன். நல்ல மரியாதையான வேலை, கண்ணியமான முதலாளி; ஆனாலும் என் மனதில் நம்பிக்கையில்லை, I felt hopeless, worthless, empty, wanted to kxll myself! Yes.. me the Kotravai, perceived as the strongest women by most of you had gone through this!!! For real!!

தூக்கமே வராது. பல வருடங்களாக 4-5 மணி நேரம் தூங்குவதே பெரிய விசயம். இதில் துயரம் என்னவெனில் தூக்கமின்மையும் மனநிலையை பாதிக்கும், ஆசிட் சுரப்பதை அதிகரிக்கும், fight or flight modeஇல் எல்லா நேரமும் மூளை (உடல்) இருக்கும், நடுக்கம், அது தவிர சுரபி மாற்றம் இவற்றால் உடல் எடை கூடும்..  இது ஒரு முடிவில்லா LOOP.

சென்ற முறை, இப்படி மூச்சு விட முடியாமல் ஆள்வார்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனை emergency வார்டில் சேர்க்கப்பட்டு PAN மருந்தை IVயில் ஏற்றி அனுப்பினார்கள் 😊 (அது ஒரு நகைச்சுவை சம்பவம். ஆனால் அன்றைக்கு அது தான் எனை காப்பாற்றியது)

சரி தற்காலத்திற்கு வருவோம், மனநல மருத்துவர் கொடுத்த மருந்துகளால் தேறி வந்தேன். ஆனால் ஒரு நாள் திடீரென்று இரவு மூச்சு விட முடியவில்லை. என் மகள் பயந்து போனாள். உடனே அருகில் ஒரு தனியார் மருத்துவமனையில் emergency wardக்குள் கூட்டிச் சென்றுவிட்டாள். (மறுபடியும் மொதல்ல இருந்தா...!!) 

அவர்கள் எல்லாம் பரிசோதித்துவிட்டு Anxiety Attack தான் என்று அவர்களுடைய Psychiatristஇடமும் கலந்து பேசி.. என்னுடைய மருத்துவ வரலாற்றையும், அறிகுறிகளையும் சொல்லி.. எனக்கு counselling கொடுத்து, சிகிச்சையை தொடரச் சொன்னார்கள்.

அந்த மருத்துவமனையின் மருத்துவரிடம் follow upகாக சென்று தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். மாற்றம் கண்கூடாக, ”அவளா இவஎன்னும் அளவுக்கு இருக்கிறது. அந்த தற்Xலை எண்ணத்திலிருந்து விடுபட்டுள்ளேன். எப்போதும் எரிச்சலுடனும் கோவத்துடனும் இருக்கும் அவள் காணாமல் போனாள். (இப்ப ரொம்ப பொறுமைசாலியா இருக்கேன்!) 

என் வாழ்நிலை எதுவும் பெரிதாக மாறவில்லை. ஆனால் அதை பற்றி நினைத்து “Anxious, depress” ஆகாத அளவுக்கு மூளைக்குத் தேவைப்படும் Chemical Balance அந்த மருந்துகள் தருவதாக மருத்துவர் விளக்கியதை நினைவுகொள்கிறேன். இப்போது எதையும் lightஆக எடுத்துக்கொள்ள பழகிவிட்டேன். (சுயநலவாதியும் ஆகிவிட்டேன்).

வழக்கமான மருந்துகளோடு SOS எனப்படும் மருந்தையும் மருத்துவர் கொடுத்தார். தாள முடியாத (overwhelming situations / panic attacks) நிலை  வரும்போது நாக்கில் வைத்து கரைக்கும் மருந்து அது, அதை எடுத்துக்கொள்ளச் சொன்னார். இதெல்லாம் என்ன செய்துவிடும், எனக்கு GERD தான் என்று அவ்வப்போது மனதில் சொல்லிக்கொள்வேன். ஆனால் ஒரு நாள் அதே போல் மூச்சு முட்ட, வயிறு இறுக, செத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்ற, அந்த SOS நாக்கில் வைத்தேன். 5 நிமிடத்தில் எல்லாம் சரியாகிப் போனது. இப்போது நான் பரவாயில்லை! பயணங்கள் செய்வதும் ரணங்கள் ஆறுவதற்கே 😊

அரசியல் ஓய்வும் அதற்கே 😊

மக்களே, உடலைப் பற்றி கவலைப்படும் நாம் மனநலன் பற்றி கவலைப்படுவதில்லை. அது குறித்த அறிவும் நமக்கிருப்பதில்லை. மனநல மருத்துவரை அனுகுவது ஏதோ வெட்கக்கேடானது என்ற சமூக அழுத்தமும் நம்மை தடுக்கும்.

ஆனால் எனக்கு என் நிலை பற்றி பகிர்வதில் எந்த வெட்கமுமில்லை.

எனக்கும் என் குடும்பத்திற்கும் நான் முக்கியம். எனை நான் தான் காத்துக்கொள்ள வேண்டும். அரசியல் சரித்தன்மை பேசிக்கொண்டிருக்கும் நபர்கள் யாரும் எனக்கு படியளக்கப் போவதுமில்லை, உதவப் போவதுமில்லை! தற்Xலைக்கு வேண்டுமானால் தூண்ட வல்லவர்கள் அவர்கள்!

மேற்சொன்ன செய்தியில் அந்த குழந்தைக்கு ஏதோ மன அழுத்தம் இருந்திருக்கிறது. ஆனால் அதை தன் பெற்றோரிடம் பேசுவதற்குக் கூட இயலாத ஏதோ மன நிலையில் அவன் இருந்துள்ளான். அது மிகவும் துயரமானது! ஒவ்வொருவருக்குள்ளும் இத்தகைய துயர்கள் இருக்கும், சிலரால் அதை கையாள முடிகிறது, சிலரால் முடிவதில்லை. முடியாத நபர்களிடம் பலர் Positivity Theories பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை xxxx என்று தோன்றும்.

உடல்நலனை பரிசோதிப்பது போல் மனநலனையும் அவ்வப்போது பரிசோதியுங்கள். யாரிடமும் அறிவுரை கேட்காமல் நேரடியாக நல்ல மருத்துவரை அனுகுங்கள். அவர்கள் மட்டுமே நமக்கு உதவக் கூடும். Helplineகள் உள்ளன. அதை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.

உழைக்கும் வர்க்கத்தின் அங்கத்தினராய் தன் குடும்பத்திற்காக பொருளீட்டும் நபராக எஞ்சியிருப்பது உயிர் ஒன்றுதான். அந்த உயிர் துன்புறுகையில், அதைப் பிடித்து வைத்திருக்கும் போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல.  நான் அந்த பாதையில் பயணிக்கிறேன். உங்களில் யாரேனும் இத்தகைய தீவிரமான எண்ணத்தோடு இருக்கிறீர்கள் என்றால் தயவு செய்து உடனடியாக மருத்துவரை அனுகவும்.

அன்புடன்

கொற்றவை