Dec 19, 2024

தாளங்களின் ராஜாவுக்கு இதயாஞ்சலி

 





15.12.2024 அன்று உலகம் மௌனத்தில் உறைந்தது. தாளங்களின் ராஜா உஸ்தாத் ஜாகிர் உசேனின் விரல்கள் நிரந்தரமாக ஓய்வை தழுவின. கடவுள் மறுப்பு கொண்டிருந்தாலும் இளையராஜா, உஸ்தாத் ஜாகிர் உசேன் போன்றோர் இசைக் கடவுளாக, தாள கடவுளாகவே தெரிகின்றனர். மெய் சிலிர்க்கும் இசையால் வாழ்வின் துயர்களை மறக்கச் செய்பவர்கள் அவர்கள். கடவுளின் தேவையும் அதுதானே, வலி நிவாரணி!

உலகமே கொண்டாடும் ஓர் இசை மேதை எங்களுக்களித்த இடமும், பொழிந்த அன்பும் அலாதியானது. அவரின் மறைவு உலகிற்கு பேரிழப்பு என்பதோடு தனிப்பட்ட முறையில் எங்களுக்கு துயர் மிகுந்தது.

வருணாவின் (என் மகள்) அப்பா ஓர் ஓவியர். ஓவியர்களுக்கு இந்த சமூகத்தில் எத்தகைய வாழ்வாதாரம் உள்ளது என்பதை நான் விளக்கத் தேவையில்லை. ஓவியம் வரைய வர்ணங்கள் வாங்கக் கூட வழி இல்லாத நிலையில் எண்ணற்ற ஓவியர்கள் உள்ளனர். அப்படித் தன் வாழ்வைத் தொடங்கிய ஒருவரை நான் கரம் பிடித்திருந்தேன்.

’குடும்பம்’ உருவானது. ஓவியங்களைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு கதவாக தட்டிக் கொண்டிருந்த சமயம். மழை காலத்தில் வீட்டிற்குள் வந்தழித்த ஓவியங்கள் போக மீதமிருப்பவற்றை எடுத்துக்கொண்டு நானும் அவரோடு ஓடுவேன். 18 வருடங்களுக்கு முன்னர், அப்படித்தான் ஒரு நாள் ஓடினோம். உஸ்தாத் ஜாகிர் உசேன் அவர்கள் Music Academy இல் இசை நிகழ்ச்சிக்காக வருகிறார் என்ற செய்தியை படித்த உடன், எப்படியாவது அவரைக் காண வேண்டும் என்று சென்றோம். வருணா அப்போது ‘குழந்தை’.

அவர் அரங்கத்திற்குள் செல்லும் பாதையில் மிகுந்த பதட்டத்தோடு காத்திருந்தோம். சீருந்தில் வந்திறங்கினார். கூட்டம் சூழ, எங்களை அவர் காணும் வாய்ப்பில்லை. அதையும் மீறி சத்தமாக ஒலி எழுப்பி அவரை நோக்கி ஓடினோம். ஓவியர் என்றதும் சிரித்த முகத்துடன் வாருங்கள் என்று அழைத்தார். குழந்தை முகம் மட்டுமல்ல, குழந்தை உள்ளத்துடன், ‘நல்’ ஆத்மா என்னும் பொலிவும், கனிவும் கண்களில் தெரியும் ஓர் உருவம் அல்லவா அவர். உஸ்தாத் அழைத்ததும், அவரது தாளங்கள் பின்னணியில் இசைக்கும் துள்ளலுடன் ஓடினோம். ஓவியத்தைக் கண்டு வியந்து பாராட்டினார். அவருக்கு அந்த ஓவியத்தை பரிசளித்தோம். தனது email id ஐ பகிர்ந்து “stay in touch” என்று வாஞ்சையோடு சொல்லி, இசை நிகழ்ச்சியை காண உள்ளே அழைத்தும் சென்றார்.

இப்படி தொடங்கிய எங்கள் அன்புறவு, அப்படியே தொடர்ந்தது. அவரோடு மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருந்தோம். எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ தெரிவிப்பார் (அவரது மனைவி தான் அவருடைய தொடர்பாடலை கவனிப்பார்). தாஜ் ஹோட்டல், இன்னும் இதர அரங்கங்கள் என்று எங்கெல்லாம் அவர் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருடன் செல்லும் ‘பாக்கியம்’ எங்களுக்கு கிடைத்தது. அதிலும் எங்கள் மகள் வருணா மீது அவர் காட்டிய பாசம் ‘பொக்கிஷம்’. அவள் அந்த பிஞ்ச் விரல்களால் வரைந்த ஓவியங்களை மனதார ரசிப்பார், ஊக்குவிப்பார். அவள் வாங்கிய சர்வதேச விருதுகளைக் கண்டு மகிழ்வார். என்னிடம் அதைப் பற்றி பேசி சிரிப்பார்.

ஒருமுறை கூட அவர் முகம் சுளித்தோ, அல்லது தான் உலகம் போற்றும் இசை மேதை என்ற அகந்தையுடனோ பழகியது கிடையாது! எப்போதும் அன்பும், பணிவும் மட்டுமே கண்டுள்ளேன். அப்படி ஒரு பாந்தமும், காந்தமும் அவரிடம் உள்ளது. அவரது இசைக் கச்சேரிகளை, அவர் தன் இசை வாத்தியத்தை TUNE செய்யும் கணத்திலிருந்தே காணும் ‘அதிர்ஷ்டம்’ எங்களுக்கு கிடைத்தது. சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். சக கலைஞர்கள் அவரை போற்றுவதையும் கண்டுள்ளோம். அதற்கு காரணம் இன்னார் என்றில்லை, அனைவரிடமும் அவர் கனிவுடனே நடந்துகொள்வார். தபேலாவை இசைத்தபடி அவர் பாடுகையில், இறக்கையுடன் அந்த அரங்கில் நான் பறந்து கொண்டிருப்பேன்.

வருணாவின் அப்பா அவருக்கென ஓர் ஓவியக் கண்காட்சியை அர்பணித்தார். அனைத்தும் உஸ்தாதின் ஓவியங்கள். பெருந்தன்மையுடன் கலிஃபோர்னியாவிலிருந்து வந்து அதை திறந்து வைத்தார். ஓர் ஓரத்தில் என் மகளும் அவரை கோட்டோவியமாக வரைந்து வைத்திருந்த ஓவியங்களை விரிந்த கண்களுடன் கண்டு மகிழ்ந்து பாராட்டினார். எல்லா நேரமும் புன்னகையும், அன்பும் மட்டுமே மிளிரும் ஓர் முகத்தைக் காண்பது உண்மையில் வரமே. அவரது விசாலமான இதயத்தில் எங்களுக்கும் ஓர் இடமிருந்தது.

அந்த திருமண முறிவுக்குப் பின்னர் என் வாழ்க்கைப் பாதை மாறியது, நான் அவரோடு தொடர்பில் இருக்கவில்லை. (என் துரதிஷ்டம்).

இசை மேதை மட்டுமல்லாது, ஆகச் சிறந்த மனிதரை இந்த உலகம் இழந்திருக்கிறது. கண்ணீரால் கோர்க்கப்படும் அஞ்சலி இது.

அன்பாலும், அவரது இசையாலும் உஸ்தாத் ஜாகிர் உசேன் அவர்கள் என்றென்றும், என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்வார். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.