Mar 9, 2020

பெண்ணியம் என்றால் என்ன?



பெண்ணியம் என்றால் என்ன? – கொற்றவை

காப்டன் விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு! அதேபோல் இங்கே பலருக்கு பிடிக்காத வார்த்தை “பெண்ணியம்”. பெண்ணியம் என்றால் என்னவென்று அறியாததால் வரும் வெறுப்பென்று நாம் கடந்து செல்லலாம், ஆனால் உண்மையில் அதற்கு மறுபெயர் பெண் வெறுப்பு (misogyny).  காலம் காலமாக அடங்கிப் போன பெண்களையே பார்த்துப் பழகிப் போன சமூகத்திற்கு பெண்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்திப் பேசத் தொடங்கியதும் பயம் தொற்றிக்கொண்டது. கம்யூனிசம் என்னும் பூதத்தைக் கண்டு முதலாளிகள் நடுங்குவதைப் போல் பெண்ணியம் என்னும் பேய் கண்டு ஆணாதிக்கச் சமூகம் அஞ்சுகிறது.

இப்போதெல்லாம் எங்கே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்? பெண்கள் அடங்க மறுக்கிறார்கள். பெண்ணாதிக்கமே மேலோங்கியுள்ளது என்பன போன்ற எள்ளல்களை நாம் கேட்க முடிகிறது. வேடிக்கை என்னவெனில், இத்தகைய எள்ளல்களும் ஆணாதிக்கமே என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!
பெண்ணியம் என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்பாக “அடங்கிப் போதல்” என்னும் போதனை குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் மற்றும் படிநிலை என்ற ஒன்று உருவாகாத சமூகத்தில் அடிபணிதல் என்னும் ‘ஒழுக்கம்’ (அல்லது விதி) இருக்கவில்லை!

அதிகாரம் என்பது எப்போது உருவானது என்று காலத்தை பின்நோக்கி ஆய்வு செய்தால் செல்வக் குவிப்பு தோன்றிய போது என்கின்ற உன்மை நமக்குப் புலப்படும். அனைவரும் சமமாக இருந்த ஒரு சமூகத்தில் யாரும் யாரையும் ஆள்வதற்கான தேவை இருக்கவில்லை. யாரும் அடிபணிந்து நடக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.  ‘சமமாக இருத்தல்’ என்றால் என்ன? சமத்துவம் என்ற சொல் கூட இங்கே பலரது வயிற்றில் புளியைக் கரைக்கிறது! ஏன்?

சமத்துவம் என்று கூறுகையில், குறிப்பாக ஆணும் பெண்ணும் சமம் என்று கூறுகையில் “ஆம்பிளையும் பொம்பிளையும் எப்படி சமமாக முடியும்? சரி சமம்னே வச்சுப்போம்! எங்கள மாதிரி நீங்களும் … என்று தொடங்கி உடல் பலம் சார்ந்த வேலைகளை பட்டியலிட்டு, இதையெல்லாம் செய்ங்கன்னு தான சொல்றோம்! அப்ப மட்டும் உங்களால முடியல.  Sports Day ல பாருங்க பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பரிசு பெற்று வருகிறார்கள். நீங்களும் ஜெயிக்க வேண்டியதுதான?” என்று ‘அறிவாளித்தனமாக’ (அறிவிலிகளாக) கேள்வி கேட்கிறார்கள்.

உடலாலும் கூட பெண்களும் பலமானவர்கள் என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ஆணாதிக்க மனம் அந்த சாதனைகளை எளிதாக புறம் தள்ளிவிடுகிறது! மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போல் பிள்ளை பெறும் ஒரு வலு ஒன்றே போதும் பெண் உடலின் வலுவான தன்மையை மெய்ப்பிக்க. அப்படியென்றால் பிள்ளை பெற முடியாத பெண்கள் பலவீனமானவர்களா? இல்லை! அதற்கும் சேர்த்தே நாம் இன்று விடை காண்போம்!

சமத்துவம் என்கின்ற சொல்லை நாம் எண்ணம், சிந்தனை, நடத்தை என்கின்ற அடிப்படையில் மனித ஒழுக்க மாண்பாக முன் வைக்கின்றோம்! உடல் பலம் சார்ந்தல்ல! உடல் பலம் என்று விதண்டாவாதமாக பேச வேண்டுமெனில், பலசாலி என்று சொல்வோமானால் ஆணும் ஆணும் கூட இங்கே மாறுபட்டவர்களே. பிரச்சினைக்குரிய சூழல் வருகையில் எல்லா ஆண்களுமே அதை எதிர்க்க துணிந்துவிடுகிறார்களா? வம்புக்குப் போகாதே என்று சொல்லி ஒதுங்குபவர்களில் ஆண் என்ன பெண் என்ன? அதிலும் குறிப்பாக மிகவும் ஆபத்தான அரசு அதிகாரத்தை எதிர்ப்பதற்கு அஞ்சுபவர்களில் ஆண் பெண் வேறுபாடு உண்டா?

இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதே. எந்த இரண்டு நபர்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. மாறுபட்டு இருப்பதால் ஒருவர் மேலானவர், மற்றவர் கீழானவர் என்று வகுக்கும் அதிகாரம் இங்கு யாருக்குமில்லை. மாறுபட்டிருந்தாலும் அனைவரும் சமமே என்று வலியுறுத்துவதே சமத்துவம். மாறுபட்டு இருப்பதால்  “இன்னார் இன்னதே செய்யக் கடவர்” என்னும் விதிகளை ஒழித்து அனைவர்க்கும் அனைத்திலும் உரிமை உண்டு என்று வலியுறுத்துவதே சமத்துவ சிந்தனை.  ஆக, சமத்துவம் என்று பேசுகையில் உடல் பலம் சார்ந்த, உடலமைப்பு சார்ந்த ஒப்பீடு அல்ல. அது எண்ணம் சார்ந்தது. அது மனித உரிமை சார்ந்தது.

ஏற்றத்தாழ்வு என்பது ஆண் பெண் உறவில் மட்டும் நிலவுகின்ற ஒன்றல்ல. ஒவ்வொரு சமூகத்திலும் (நாட்டிலும்) பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில், வாழ்வாதார நிலைமைகளின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவுகின்றது. அந்த அடையாளங்களை மேலோர் - கீழோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், உயர் பிறப்பு- கீழ் பிறப்பு, பலமானவர் – பலவீனமானவர், ஏழை - பணக்காரன், வெள்ளையர் - கருப்பர் என்றெல்லாம் வகைப்படுத்தி, திடப்படுத்தி குறிப்பிட்ட பிரிவினரை குறிப்பிட்ட உடைமைகளிலிருந்து, உரிமைகளிலிருந்து, வேலைகளிலிருந்து பிரித்து வைத்தனர்.
இத்தகைய வேலைப் பிரிவினையை நிலைநாட்ட பல்வேறு விதமான கட்டுக்கதைகளும், விதிமுறைகளும், ஒழுக்கவிதிகளும், நிர்வாக அமைப்புகளும் தோன்றின. மதம் மற்றும் மத நூல்கள்  அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் பாலின அடிப்படையில் பெண் அத்தகைய ‘ஒதுக்குமுறைக்கு’ ஆளானாள். செய்தொழில் அடிப்படையில், மொழி, இனம், பண்பாடு, பொருளாதார நிலை என்னும் அடிப்படையில் ஆண் பெண் பேதமின்றி பல்வேறு பிரிவினர் இத்தகைய வேலைப் பிரிவினைக்கு ஆளானார்கள். இந்திய சமூகத்தில் கூடுதலாக சுத்தம்-அசுத்தம் என்னும் பார்ப்பனிய மதச் சிந்தனையை உட்புகுத்தி குறிப்பிட்ட பிரிவினர் குறிப்பிட்ட வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்னும் மனுவாத விதி உண்டானது. சாதியின் தோற்றுவாய் இதுவே. இந்த அசுத்தமென்னும் சிந்தனை பெண் உடல் சார்ந்தும் நிறுவப்பட்டு பெண்கள் விலக்கி வைக்கப்பட்டனர் அல்லது அடிமைபடுத்தப்பட்டனர். 

பெண்களை, சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை ஒடுக்கவும், அவர்களே விரும்பி அந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவும் மத ரீதியான கதையாடல்கள் உருவாக்கப்பட்டன. அவையே இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள். ஆதியில் ஆண் பெண் என்ற பேதமின்றி வேட்டையாடுதல் முதற்கொண்டு அனைத்து வேலைகளிலும் ஆணுக்கு நிகராக ஈடுபட்டு வந்த பெண்கள் பின்னர் வீட்டு வேலை, குழந்தைப் பேறு, குடும்ப நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் என்று ஒதுக்கப்பட்டனர். அதேபோல் இனக்குழுக்களாக அனைவரும் அனைத்து வேலைகளிலும் ஒன்றாக ஈடுபட்டு பகிர்ந்துண்டு வாழ்ந்த நிலைமையும் மாறியது.  இனக்குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு பிரிவு மற்ற பிரிவினரை அடிமையாக பிடித்து வரும் போக்கு இருந்தது. அப்படி பிடித்துவரப்பட்ட அடிமைகளை ஒடுக்க அதிகாரம் தேவைப்பட்டது. அதாவது அடக்குமுறை அமைப்பு.  தலைவர் (இன்றைய நிலையில் அரசு), ஒழுக்கக் கோட்பாடுகள் (மதம் போன்றவற்றின் மூலம்), தண்டனைகள் (சட்டம்) போன்றவை உருவானது.

இந்த காலகட்டத்தில் தான் “அடிபணிதல்” என்னும் ஒழுக்கம் மனித சமூகத்தில் ஒரு ‘பண்பாக’ போதிக்கப்பட்டது. மூத்தோருக்கு இளையோர் அடிபணிதல், எஜமானனுக்கு அடிமை அடிபணிதல், ஆனுக்குப் பெண் அடிபணிதல், தந்தைக்கு மகன்கள் அடிபணிதல், மன்னனுக்கு குடிகள் அடிபணிதல் என்னும் இயற்கைக்கு முரணான, மனித குலத்திற்கு அவசியமில்லாத ஒரு சிந்தனை ‘நல்லொழுக்கம்’ என்னும் பெயரில் பரப்பப்பட்டது. பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆண்களைச் சார்ந்து வாழும் நிலையும் உருவானது. அதன் தொடர்ச்சியாக தர்மபத்தினியாக வாழ்தல் என்னும் கடமை பெண்ணின் ஒரே கடமை என்றானது. இதிலிருந்து விலகி எதைப் பேசினாலும் செய்தாலும் கேடுகெட்ட பெண்ணியவாதிகள், அடங்காப்பிடாரிகள் என்னும் பட்டங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

இந்த பண்பாட்டில், அதாவது காட்டுமிராண்டிகளின் காலத்தில் தோன்றிய அராஜக பண்பாட்டில் ஊரிப்போனவர்கள்  இன்றைக்கும் அதிலிருந்து மீளாமல் “உங்களை எல்லாம் (பெண்களை) யார் அடிமைபடுத்துறா?” என்பதும் “இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லைங்க.. அவங்கல்லாம் (சாதி) எங்க அடங்கி இருக்காங்க… அடிச்சா திருப்பி அடிங்குறாங்க” என்பதுமான வியாக்கியானங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.  
மனித சமூகத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு காலகட்டங்களை, நிகழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறது. மனித சமூக வரலாற்று வளர்ச்சி என்பது  ஒரு பிரிவு மற்ற பிரிவிடமிருந்து செல்வங்களை கையகப்படுத்திய போர் என்னும் நிகழ்வுகளால் ஆனது. இழந்த செல்வங்களை, உரிமைகளை மீண்டும் பெறுவதற்கான போராட்டங்களால் நிறைந்தது. 

ஆண் பெண் இடையிலான போராட்டம் என்பதும், சாதி, மத, இன, மொழி ரீதியான போராட்டம் என்பதும் அத்தகையதே. உரிமைகள் பறிக்கப்படவில்லை எனில் போராடுவதற்கும் இங்கு அவசியமில்லாமல் போயிருக்கும். ஒடுக்குமுறை இல்லையெனில் விடுதலைப் போராட்டம் இருக்கப் போவதில்லை.
தொடக்கத்தில் பெண் உடல் சார்ந்து, அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தில் பெண் ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றிய இயல்பான வேலைப் பிரிவினையானது பின்னர் குடும்பம் மற்றும் தனிச்சொத்தின் தோற்றத்தின் காரணமாக நிரந்தரமான உழைப்புப் பிரிவினையாக மாறியது. அடிபணிதல் என்பது பெண்ணின் பண்பாக அவளது இரத்த நாளங்களில் மதம், சடங்கு, பெண்மை என்னும் விஷ ஊசிகள் கொண்டு ஏற்றப்பட்டன.  பல்லாயிரம் வருடங்களாக சமூகமானது இதற்கு பழக்கப்பட்டு, மூளைச் சலவைக்கு உள்ளாகி விட்டது. பெண்களே இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதே இதில் மிகவும் துயரமான விசயம். சாதிய ரீதியாக (மற்றும் இதர) ஒடுக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்னும் உன்மை தெரிந்து உணர்வு பெற்று ஒருங்கிணைந்து போராட வந்துவிட்டார்கள். ஆனால் பெண்களில் பெரும்பான்மையினருக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரிவதில்லை.

ஆண் வலிமையானவன், ஆணே உயர்ந்தவன், ஆணே குடும்பத் தலைவன் என்கின்ற நிலைமை இயல்பானதே என்பதே இங்கு நிலவும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு பெண்கள் ஆணைச் சார்ந்து, அவன் தலைமையிலான குடும்ப அமைப்பிற்கு கட்டுப்பட்டு வாழும் நிலைமைகள் உள்ள சமூகத்தைத்தான் நாம் ஆணாதிக்கம் என்கின்றோம். இது எந்த ஒரு தனியான ஆணைக் குறிப்பதல்ல. பெண்ணியம் என்பது ஆணைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதோ, ஆண் வெறுப்பை போதிப்பதோ அல்ல. பெண்களை வேறுபடுத்தி நடத்துகிறார்கள் என்னும் புரிதல் ஆணுக்கும் இல்லை, பெண்ணுக்கும் இல்லை. ஆகவே இரண்டு பாலினங்களும் இதில் பாதிக்கப்பட்டவர்களே (பிற்கால அரசியல் சூழலால், ஆணாதிக்க பாலின ஒடுக்குமுறையின் காரணமாக மூன்றாம் பாலினத்திற்கு இந்த புரிதல் ஓரளவுக்கு வந்துவிட்டது) என்னும் சமூக நிலைமையை உணரச் செய்து அதற்கெதிராக போராட பெண்கள் மட்டுமல்லாது அனைவரையும் போராட ஒன்றிணைத்து பாலின சமத்துவத்தை நிறுவ நினைப்பதே பெண்ணியம்.

கண்டபடி பாலுறவு வைத்துக்கொள்ளவும், குடும்பத்திற்கு அடங்காமல் நடக்கவும், கணவனை வீட்டு வேலைச் செய்யச் சொல்லி சீரியல் பார்க்கவுமே பெண்கள் பெண்ணியம் பேசுகிறார்கள் என்கிற அவதூறும் நிலவுகின்றது. பாலுறவு சுதந்திரம் என்பது “மண்ணும் பொண்ணும் ஒன்னு” என்று ஆணாதிக்க சொத்துடைமை அடக்குமுறைக்கு எதிராக பேசப்படுகிறது. குடும்பம் என்னும் அமைப்பு வன்முறையாக மாறுகையில் அதற்கு அடங்கமறுப்பது அவசியமானதே. அதேபோல் ஆம்பிளையை வீட்டு வேலை செய்யச் சொல்வது என்பது சமத்துவமான வேலைப் பிரிவினையாகும். ஒருவர் உழைப்பில் மற்றவர் சுகபோகமாக வாழும் நிலையை ஆண் பெண் இடையே மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து உறவுகளிலும் ஒழித்திட வேண்டும்.

முற்காலத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்யும் நிலை இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரே இப்போது அவர்களுக்கு ஓட்டுரிமை, கல்வி, வேலை போன்ற உரிமைகள் கிடைத்துள்ளன.  ஆனாலும் பல குடும்பங்களில் பெண்கள் இன்னமும் வீட்டு வேலை, வெளி வேலை என்னும் இரட்டை உழைப்புக்கு ஆளாகி துன்புறுகிறார்கள். சில குடும்பங்களில் அன்பினால் ஆண்களும் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும் வீட்டு வேலை என்பது பெண்களின் பொறுப்பே என்னும் கருத்தியலிலிருந்து யாரும் விடுபடவில்லை. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் உண்ட எச்சில் தட்டைக் கூட எடுத்திடாது தட்டிலேயே கை கழுவும் பழக்கம் உள்ளது. இத்தகைய ஆண் அதிகாரச் செயல்பாடு இயல்பானதே என்று கருதும் சிந்தனையையே நாம் ஆணாதிக்கம் என்கிறோம். இது ஆண்களிடத்தும் உண்டு. பெண்களிடத்தும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய அளவில் பல்வேறு கட்டப் போராட்டங்கள், உயிர் தியாகங்களின் விளைவாக இன்றைக்கு பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. ஆனாலும் சமூகத்தின் கூட்டு மனநிலையில் பெண் என்பவள் இரண்டாம் நிலையிலானவள் என்னும் கருத்தியல் மாறவில்லை. பெண்ணின் உடை தொடங்கி, கல்வி, திருமணம், திருமணத்திற்குப் பின் வேலைக்கு செல்வதா கூடாதா என்னும் முடிவுகள், வேலைக்குச் சென்றால் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் போன்ற கட்டளைகள் என்று ஆணாதிக்கம் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தையை பெற்றுக்கொள்வதே சுமை, அவமானம் என்னும் நிலை இன்னமும் தொடரத்தானே செய்கிறது. கொள்ளி போடும் உரிமை ஆணுக்குத்தானே உள்ளது. இது வாரிசுரிமை, சொத்துடைமை சார்ந்த தந்தை வழிச் சமூகத்தின் விதி. இப்படியாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெண்ணியம் என்ற ஒன்று பெண்கள் மட்டும் பேசுவதல்ல. அதேபோல் பெண்கள் பேசக் கூடியதெல்லாம் பெண்ணியமும் அல்ல. பெண்கள் தினம் என்னும் பெயரில் ‘சிறந்த இல்லத்தரசி’, ‘பெண்மையை போற்றுவோம்’ என்னும் வகையிலான புகழுரைகளை பெண்ணியம் என்று முன்வைப்பது வேடிக்கையானது. இத்தகைய புகழுரைகள் ஆணாதிக்க சமூகம் வகுத்திருக்கும் கடைமைகளை செவ்வனே செய்து முடிப்பவள் என்பதற்காக கொடுக்கப்படும் லஞ்சம். அவ்வளவே. அந்த குடும்பக் கடைமைகளை மீறும் பெண்களை இந்த சமூகம் கொண்டாடுமா என்பதே கேள்வி.
ஆண்கள் தாங்கள் ஏதோ உயர்ந்தவர்கள், பலசாலிகள், ஆண்மை மிக்கவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களும் இந்த ஏற்றத்தாழ்வு மிக்க சுரண்டல் பொருளாதார அமைப்பில் பொருளாதார அடிமைகளே என்று உணராமல் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் அத்தகைய ஆண்களுக்காகவும், அதாவது வீடு, சமூகம் என்று சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கமாக சக ஆண் உழைப்பாளனின் விடுதலைக்காகவும் சேர்த்தே போராடுகிறார்கள். பாலின ரீதியாக பெண் உடல் சார்ந்தும் ஒடுக்கப்படுவதால் அவர்கள் உடல் சார்ந்த கருத்தியல்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் பெண்களோடு ஆண்களும் போராடுகிறார்கள். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களும், அவர்களை பின்பற்றுபவர்களும் கம்யூனிஸ்டுகளும் அதற்கு சான்று. ஆனால் பொதுச் சமூகமானது இத்தகையோர் குறித்து தவறான புரிதல்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளது.

குற்றச் செயல்களில் ஆண்கள் ஈடுபடுவது போல் பெண்களும் ஈடுபடுகின்றனர். ஆனால் ஆண்கள் செய்கையில் அதை வீரமாக பார்க்கும் இந்த சமூகம் பெண் இப்படி நடந்துகொள்ளலாமா என்று இயற்கைக்கு மாறான பிறப்பின் அடிப்படையிலான ஒரு தூய்மைவாத கேள்வியை வைப்பதும், பெண்ணியம் பேசுவதால் தான் பெண்கள் குற்றங்கள் இழைக்கின்றனர் என்பதும் அபத்தமானது. குற்றங்கள் நிகழ்வதற்கு மோசமான பொருளாதார அமைப்பும் அதற்கு ஏற்றவாறு உருவாகி இருக்கும் பண்பாடுமே காரணம். இதற்கு ஆண் பெண் பேதமில்லை. குற்றமிழைக்கும் பெண்களுக்கு பெண்ணியவாதிகள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பதுமில்லை.
பெண்ணியத்திலும் பல வகைகள் உள்ளன.  ‘ஆணிய’ தத்துவங்களில் அராஜகவாத போக்கு நிலவுவது போல் பெண்ணிய சிந்தனைகளிலும் சில விசயங்களில் அராஜக போக்குகள் இருக்கவே செய்யும். ஆணாதிக்க அராஜகம் போல் அல்ல; இது வர்க்க ரீதியான சிக்கல். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். ஆனால் அதுவும் கூட பெண்கள் தினம் என்னும் வணிகக் கொண்டாட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர மற்றையோர் இந்நாளை பெண்கள் தினம் என்பார்களே ஒழிய உழைக்கும் மகளிர் தினம் என்று கூற மாட்டார்கள்.

பெண்ணியம் என்பது பாலின அடிப்படையில் ஒடுக்கப்படுவதை ஒழித்து குடும்பம், கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலும் சமத்துவத்தை அடைந்திடுவதற்கான ஓர் அரசியல் இயக்கம். பெண்ணியம்  பேசுவோர் பெண் விடுதலை மட்டுமல்லாது சாதி மத ஒடுக்குமுறை, பொருளாதார பிரச்சினைகள், இன ஒடுக்குமுறை, போர் எதிர்ப்பு, சூழலியல் சுரண்டல் என்று பல்வேறு பிரச்சினைகளையும் முன் வைத்து போராடுகின்றனர்.

ஆண்களே உங்களின் விடுதலைக்காகவும் சேர்த்தே பெண்ணியவாதிகள் போராடுகின்றனர். உழைக்கும் வர்க்கமான உங்களுக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

மார்ச் 8 அன்று வணக்கம் இந்தியாவில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் 

Mar 7, 2020

பெண்களைப் புகழாதீர்கள்!


தயவு செய்து எங்களை (பெண்களை) புகழாதீர்கள்!
பெண்களைப் போற்றாதீர்கள்!
பெண்களுக்கென இந்த ஆணாதிக்க தனியுடைமைச் சமூகம் வகுத்திருக்கும் பண்புகள் மற்றும் உறவுகளை நாங்கள் செவ்வனே காக்கிறோம் என்று உருகாதீர்கள்!
நாங்கள் பொருமைசாலிகள், அன்பானவர்கள் கனிவானவர்கள் என்று பெண்மைக்குள் எங்களை அடக்காதீர்கள்!

பெண்களும் சளைத்தவர்கள் அல்ல அவர்கள்
விண்வெளிக்குப் போனார்கள், இராணுவ கமாண்டோ ஆனார்கள் ஆகவே வீர மங்கைகள் என்று கொண்டாடாதீர்கள்!
நாங்கள் ஆணின் பெண்களாக இருந்தது போதும்!
எங்களுக்குத் தேவை பொருளாதார சார்பற்ற சுதந்திர வாழ்வு!
பெண்களுக்கு மட்டுமல்ல அனைவர்க்கும் அதுவே தேவை!

மானுட விடுதலைக்காகப் போராட, அறியாமையில் இருக்கும் ஆண் பாலினத்திற்காகவும் சேர்த்து எங்களை அரசியல் பேசவிடுங்கள்!
எங்களது விடுதலைப் போராட்டத்தை ஒழுக்கம் கெட்ட பெண்ணியம் என்று கொச்சைப்படுத்தாதீர்கள்!
நாங்கள் பெண்மையிலிருந்து வெளியேற விரும்புகிறோம்!
ஆண்மையை ஒழிக்க விரும்புகிறோம்!
அனைவரையும் உழைப்புரீதியாக அடிமைபப்டுத்தும் அமைப்பை வேரோடு தகர்த்து மண்ணோடு சாய்க்க விரும்புகிறோம்!

பாலினம் கடந்து நாங்கள் சமத்துவத்தை அனைத்து மட்டத்திலும் நிறுவ விரும்புகிறோம்!
எங்களை தாயுள்ளம் மிக்கவர்கள் என்று கொஞ்சாதீர்கள்!
எங்களின் தாய்மை உங்களை நெகிழச் செய்கிறது!
அது குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் அடைக்கப்படும் அரசியலை அறியாது தாய்ப் பாசம் என்று ஆராதிக்கிறீர்கள்!
உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது போல் தாய்மை என்பது வெறும் பெண்மைக்கான உணர்வு மட்டுமல்ல
தாய்மைக்குப் பேருதாரணமாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக சிந்தித்த, போராடிய ஆண்கள் ஓராயிரம் பேர் உள்ளனர்.
பெண்களின் உடல் வழியாக பிள்ளைகள் பிறக்கிறார்கள்! அவ்வளவே!

இரத்த உறவிலான தாய்மையை ஒழித்து
உலகெங்கிலும் உள்ள பிள்ளைகளுக்கு நாங்கள் தாயாக விரும்புகிறோம்!
அதற்கு நாங்கள் போராட வேண்டும்!
எங்களுக்கும் உங்களுக்கும் சமூக அரசியல் பொருளாதார விடுதலை வேண்டும்!

உழைக்கும் வர்க்கப் பெண்களாகிய நாம்
பெண்மையை ஒழிப்போம்
ஆண்மை(ய்ய) அதிகாரத்தை தகர்ப்போம்
சாதியை வேரறுப்போம்
மதத்தைச் சாய்ப்போம்
போரை எதிர்ப்போம்
தேசிய இன விடுதலையை போற்றுவோம்
பாலின சமத்துவத்தை நிலைநாட்டி
உழைக்கும் மகளிர் தினத்தை நிறுவிய
கம்யூனிஸ்டுகளோடு அணி திரண்டு
தனியுடைமையை ஒழிப்போம்!
நம் தலைமுறைகள் மகிழ்வாய் வாழ
ஒரு பொன்னுலகம் படைத்திடுவோம்!



Mar 1, 2020

அம்பேத்கரும் அவரது தம்மமும் நூல் முன்னுரை





இன்றைய சமூகம் பற்றியும், சமூகநீதி பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருக்கிற உங்களுடைய வாசிப்புக்கு இப்போது வசுமித்ரவின் இந்த நூல் தயாராக இருக்கிறது. அம்பேத்கர் மற்றும் அவருடைய புத்தர் பற்றி விமர்சிக்கின்ற சாக்கில், வளர்ந்துவரும் இந்த சமூகத்தின் கரடுமுரடுகளையும் கன பரிமாணங்களையும் தீவிரமாக ஆராய்கின்றது, இந்த நூல்; தனது நிலைப்பாடுகளை அறிவறிந்து உங்கள் முன் வைக்கிறது. சாதி சமயம் இரண்டும் இந்த நாட்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகள். ஆயிரத்தெட்டு விவாதங்கள்; ஆனாலும் தீர்ந்து போகாத சொல்லாடல்கள். தொடரும் இந்தச் சொல்லாடல்கள் தலித்துக்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தமைவுக்குள் சிக்கிக்கொண்டுள்ளன. இன்றைய சமூக அரசியலில் முக்கியமாக அம்பேத்கரின் இது பற்றிய நிலைபாடுகளும் செயல்பாடுகளும் பரிசீலனைகளுக்கும் மறுவிவாதங்களுக்கும் உரியவையாக உள்ளன. இவை அவசியமாகவும் உள்ளன. வசுமித்ர இதன் அவசியத்தை உணர்ந்துள்ளார். தீவிரமாகப் பரிசீலனை செய்கிறார். யாரும் புனிதமானவர் இல்லை. எதுவும் புனிதமானது இல்லை. விவாதங்களை மேற்கொள்ளுகிற போது, விளக்கங்கள் மேலெழுந்து வருகின்றன. சமயம் - சாதி - அரசியல் என்ற இந்த மூன்றையும் அடிமொத்தமாக ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வது என்பது தர்மசங்கடமானது. துணிச்சலுடன் இந்தக் காரியத்தைச் செய்கிறது இந்த நூல். சமூகத்தைக் கூறுபடுத்திக் குறிப்பிட்ட ஒரு சார்பு நிலையில் நின்று கொண்டு சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்ற ஒரு போக்கில் எழுந்த அம்பேத்கரின் நோக்கத்தையும், முறையியலையும் வசுமித்ரவின் இந்த நூல் மறுவாசிப்பு செய்கின்றது. விரிவாகத் தனது விமர்சனத்தை முன்வைக்கின்றது.


இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதன் அரசியல் நிர்ணய சபையில் முதல் சட்ட அமைச்சராக நியமனம் பெற்றவர் #அம்பேத்கர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்தவர். மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மூன்றுமுறை டாக்டர் பட்டம் பெற்ற அம்பேத்கர், மகாராஷ்டிராவில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர். அங்கே தலித் இயக்கம் ஒன்றை உருவாக்கியவர். அரசியல் சட்டம் இயற்றுவதற்கு முன்னும் அதன் பின்னும் இந்த இயக்கமே அவருடைய செயற்பாடுகளின் மையமாக இருந்தது. தன்னுடைய உயர்ந்த கல்விக்கும் அதன் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகளுக்கும் காரணம் மதவுணர்வுகளே என்று சொல்லிக்கொள்ளும் அம்பேத்கர், அதே சமயம் வைதீக சமயமே சாதிய உருவாக்கத்திற்குக் காரணம் என்று காணும் அம்பேத்கர், புத்த சமயத்தில் சேர்ந்தார். ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற ஒரு விரிவான நூலை எழுதினார். புத்தர் பற்றியும் அவருடைய சித்தாந்தம் பற்றியும் விளக்கமாக எழுதினார். பல தலித் மக்களை நாட்டார் மரபு வழிபாடுகளிலிருந்து மீட்டுப் பெருஞ்சமய நெறியாகிய புத்தசமயத்தில் இணைத்தார். சாதி, சமயம் அவற்றின் அரசியல் என்று மூன்றிலும் காலூன்றிய அம்பேத்கர், அதனையே தன்னுடைய அரசியலாகவும் ஆக்கிக்கொண்டார். மேலும், இவர் இன்றும் இவற்றின் கருத்தமைவுகளில் மையமாக இருக்கின்றார்.


சைவம், வைணவம் உள்ளிட்ட இந்து சமயம் மற்றும் சமண சமயம் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவின் வடக்கே, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்த சமயம், உலகின் பெரும் சமயங்களில் ஒன்றாக, மக்கள் தொகையில் ஏழு சதவீதம் அதாவது 490 மில்லியன் மக்கள் பெருக்கத்தோடு விளங்குகிறது. முக்கியமாக இது ஆசிய சமயமாகக் கருதப்படுகிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, மங்கோலியா, பூடான், ஜப்பான், சைனா, வியட்நாம் முதலிய நாடுகளில் இது ஆதிக்கம் செலுத்துகிறது.


சமயங்கள், அவற்றின் பிறப்பினடிப்படையில் பொதுவாக அன்பு, அறம், அமைதி, புனிதம் முதலியவற்றைக் கொள்கைகளாகவும், ஆதாரங்களாகவும் கொண்டவை என்று பிரகடனப்படுத்திக் கொள்கின்றன. உடல், உள்ளம், சொல், செயல் எனும் இவற்றில் நேர்மையையும், ஒன்றிணைவையும் வலியுறுத்தும் சமயம், ஆன்மீகத்தையும் அப்பாலைத் தத்துவத்தையும் வலியுறுத்துகிறது. ஆனால் பின்னர், தெளிவற்ற முரண்மை முதலியவற்றில் ஈடுபட்டு நடைமுறையில் அதிகார சக்தியாகப் பரிணமித்துள்ளது. கடவுளின் பெயர்களாலும் மற்றும் நம்பிக்கைகள் சடங்குகள் முதலியவற்றாலும் மனிதனை பேதப்படுத்துவதாகவும் அந்த பேதங்களிடையே ஆதாயங்களைத் தேடுவதாகவும், இவற்றின் பொருட்டு வன்முறைகளைத் தூண்டுவதாகவும் - இப்பொழுது என்று இல்லை - இங்கு - அல்லது அங்கு என்று இல்லை - நீண்ட காலமாகவே - பரவலாக - இது ஆகியுள்ளது. இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தும். பவுத்தத்திற்கும் இது பொருந்தும். கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உள்ள முரண்பாடுகளே இயல்பாகிவிடுகிறபோது, சமயம் அழகான போர்வைகளை இறுகப் போர்த்திக் கொள்கின்றது. சமீபத்திய உதாரணங்கள், இலங்கை, பர்மா என்ற மியான்மார். அங்கு நடந்த இனக்கலவரங்கள், அராஜகங்கள். இது பிக்குகளாலும், போதகர்களாலும், அரசு அதிகாரிகளின் கனமான நடைமுறைகளாலும் அவற்றின் துணையோடும் நிகழ்ந்திருக்கின்றது என்பதை யாவரும் அறிவர்.


வரலாற்றுப் போக்கில் எது சமயத்தை வழிநடத்துகிறது? அதனுடைய எந்த இயல்பு அல்லது நடைமுறை அதனை வழிநடத்துகிறது? அறிவு அல்ல, தர்க்கம் சார்ந்த கொள்கை அல்ல. ஆனால் உணர்ச்சிதான்; நம்பிக்கைதான். இது அறிவாளியாகிய அம்பேத்கருக்கு நன்றாகத் தெரியும். வெள்ளைக்கார நாட்டில் படித்து, இங்கு உள்நாட்டில் சமூக ஆதிக்கம் குறித்து அரசியல் பண்ணத் தெரிந்த அம்பேத்கர் எதனை ஆயுதமாகத் தரித்துக்கொண்டார்? சமயம்; அதற்கான உணர்ச்சி; அதற்கான நம்பிக்கை. இது தனக்கென ஓர் உள்ளுணர்வினை அல்லது தெளிவினை ஒழுங்குபடுத்திக்கொள்ள அல்ல; பிறரின் அத்தகைய உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் எளியதாகவும் வலியதாகவும் செயல்படவைக்கக் கூடிய குறிப்பிட்ட சில குழுவினரை இலக்காகக் கொண்டது. அவருடைய ஆங்கிலக் கல்வியும் திட்டமிட்ட செயல் திறனும் அவரை இந்தச் சமூகத்தின் மீது செயல்படவும் சிந்திக்கவும் வைத்தன. ஆனால் இதற்கான அரசியலை - அரசியல் இயக்கத்தை - அவர் கண்டறியவில்லை. அதற்கான தேடுதலில் ஈடுபடவில்லை. சமயத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்த அவர் சமூக மாற்றத்திற்குச் சமயமே ஆதாரமாக இருக்க முடியும் என்று கருதினார்; நம்பினார். ஒரு சமயத்தை இதற்கெனத் தேர்ந்தெடுக்க வேண்டியவரானார். இந்திய தேசியத்தில் பெருத்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட அவருக்கு, வெளிநாடுகளோடு சேர்ந்து பிறந்த கிறித்தவமோ, இசுலாமியமோ மாற்றுக்களாகத் தோன்றவில்லை. அதேபோது, இந்தியாவில் பிறந்த வைதீக சமயமோ பிறப்பிலேயே ஆச்சாரங்கள் மூடநம்பிக்கைகளால் அழுந்திக்கிடந்தது. ஆனால் இந்தியாவில் பிறந்த இன்னொரு சமயமாகிய புத்தசமயம் அவருக்கு ஆறுதலாக இருந்தது. மாற்றாகத் தோன்றியது. தன்னுடைய வெளிப்பாடுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாகத் தெரிந்தது. இதன் காரணமாக அம்பேத்கர் புத்த சமயத்தில் சேர்ந்தார். புத்த சமயத்தை விளக்கினார். #புத்தர் பற்றி நிறைய எழுதினார்; புத்த சமயத்தில் தன் பகுதித் தலித் மக்களை மதமாற்றம் செய்தார்.

அப்படியானால், என்ன எதிர்பார்க்கத் தோன்றுகிறது? சாதி வேறுபாடுகள் இல்லாத மனிதகுல விடுதலையை இவர்கள் முன்மொழிந்தார்கள் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. ஆனால் பேதங்களும் பிளவுகளும் சண்டைகளும் சச்சரவுகளும் வெவ்வேறு வடிவங்களில் பெருகிக் கிடக்கும் இந்தச் சமூகத்தில் அதற்கான காரணங்கள் என்னவாக, எப்படியாக இருந்தன என்றோ, அந்தக் காரணங்களை வேரோடு சாய்த்து அழிப்பது எப்படி என்றோ புத்தரோ, அம்பேத்கரோ பேசினார்களா என்ற ஒரு வினா எழுகிறது. புதிய சமூகக் கட்டுமானத்தை முன்மொழிவதற்கு, வரலாற்றியல், அறிவியல் பார்வைகள் அவசியப்படுகின்றன. அதெல்லாம் இல்லாமல் மாறி மாறிச் சமயத்தைத் தோளில் சுமந்து கொண்டு மனிதமேம்பாட்டை எப்படியாக்கும் சமைத்திடமுடியும்? எதன் மீது பேதமற்ற சமூகத்தைக் கட்ட முடியும்? மேலும் இந்தப் பேதம் என்பது - வேறுபாடு என்பது - வெறுமனே சாதி சம்பந்தப்பட்ட பிரச்சினையா? அப்படியானால் இந்து சமயத்தைச் சாதிகளற்ற சமயமாக மாற்றினால் இது தீர்ந்துவிடுமா? கருத்து அடிப்படையிலான சிந்தனைகளுக்கு மாற்றாகப் பொருள் அடிப்படையிலான ஆய்வுமுறைகளை முதன்மைப்படுத்துகின்ற போதுதான், இந்தச் சமூக முரண்பாடுகளின் உண்மைகளை உசாவ முடியும். முரண்பாடுகளின் உண்மைகளை அறிகின்ற போதுதான் அந்த முரண்பாடுகளை வேரோடு களைய முடியும். ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கவுதம புத்தருக்கு இது அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சர்வதேச தொழில் குழும முதலாளித்துவம் வளர்ந்து, தனது சாதுரியங்களையும் சாதனைகளையும் காட்டி வருகின்ற இந்த நவீன காலத்தில் வாழ்ந்து, செயல்பட்ட அம்பேத்கருக்கு இது மிகவும் அவசியமல்லவா? 

சமூக அமைப்பினைக் கூறுபடுத்திச் சாதியப் பிரச்சினையை மட்டும் தனிமைப்படுத்தி அதனைத் தனித்துவமான பிரச்சினையாகப் பார்க்க முடியாது. சமூக மாற்றம் என்பது, ஒன்றிணைந்த ஒரு ஒட்டுமொத்தமான செயல்பாடு ஆகும். அப்படியென்றால் சமூகத்தை கூறுபடுத்திச் சாதியப் பிரச்சினையை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு கருதுகோளை உருவாக்குவது என்பது சொல்லாடலின் நோக்கத்தைப் பிறழ்பட்டதாக ஆக்கிவிடும். அதுவும் பொருளாதார உறவுகள் அடித்தளமாக இருக்கின்றபோது சட்டம், சாதி, சமயம் முதலியவை மேல்தளங்கள் என்ற நிலையில் அடித்தளத்தின் செயல்பாட்டையும் உறவுகளையும் சார்ந்தே அமைகின்றன. இதனைப் பிறழ்பட விளக்க முற்படுகிறபோது விவாதத்தின் நோக்கம் வேறுபட்டதாக - பிழைபட்டதாகவே - அமையும். சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இதனைச் செய்தாலும், அவருடைய நோக்கம் அப்படிப் பிழைபட்டதாகத்தான் அமையும். இப்படியிருக்கின்ற போது மக்களின் வேதனைகள் பற்றியும், சாதிப் பிரச்சினைகளின் வன்கொடுமைகள் பற்றியும் தீர்வு கண்டிட முடியுமா? எனவே சாதியத்தை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அம்பேத்கரியத்தில் இல்லை; பொருளியல் சார்ந்த உறவுகளையும் அவற்றிற்கிடையேயுள்ள, தர்க்க ரீதியான முரண்பாடுகளையும் பற்றிப் பேசுகிற விஞ்ஞானத்தில் அதாவது மார்க்சியத்தில்தான் இருக்கிறது. இதனுடைய அவசியத்தை, வகை தொகைபட விளக்குகின்றார், மார்க்சிய அறிஞர் ரங்கநாயகம்மா. (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை; தமிழ் மொழிபெயர்ப்பு, கொற்றவை) ரங்கநாயகம்மாவின் விளக்கமும் விமர்சனமும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கு தேசம் மாநிலங்களில் பிரசித்தமானவை. 

அம்பேத்கரையும், புத்தர் அவரால் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார், எவ்வாறு வழிபடப்படுகிறார் என்பதையும் ரங்கநாயகம்மாவின் வழி நின்று தமிழ்ச் சூழலில் வைத்து விளக்கிப் பேசுகின்றார் வசுமித்ர.


இப்படி உரையாடலின் அவசியத்தை தமிழ் உலகம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நம்மோடு அண்மையில் வாழ்ந்த அம்பேத்கர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவுதம புத்தரைத் தன்னோடு அரவணைத்துக்கொண்டு பேசுகிறார். புத்தரை ஒரு வரலாற்று நாயகர் என்று பார்ப்பது ஒருவகை. இது ஒரு முக்கியமான இயல்பு. அப்படிப் பார்ப்போமானால், வரலாற்று மெய்மைகளோடும் தேவைகளோடும் தாக்கங்களோடும், தர்க்கங்களோடும் பார்த்தும் பேச வேண்டும். அப்படியில்லாமல் வழிபடு பொருளாகப் பார்ப்பது என்பது, அதுவும் குறிப்பாகப், பெரும்பாலும் ஒரு பகுத்தறிவாளராகவே தன்னை முன்னிறுத்திய ஒரு பெரும் சிந்தனையாளரைப் பார்ப்பது என்பது, தங்கக் கூண்டுக்கள் அவரை அடைப்பது போன்றது. கர்ப்பகிருகத்துக்குள் பூட்டிவைத்து பூசிப்பது போன்றது. இந்திய அரசாங்கத்துக்கு அரசியல் சட்டநிர்ணயம் செய்திட்ட அம்பேத்கர், புத்தரை இப்படிக் கொண்டு வருகிறார். மேலும், இங்கே காவிய நாயகனாக வருணிக்கிறார்; இறுதியில் ஆகப் பெரும் கடவுளாக உருமாற்றுகிறார், வழிபடுகிறார்.


புத்தரை அழகுடையவராக ஆராதனை செய்கிறார் அம்பேத்கர். உடலின் குறிகள் என அழகின் அம்சங்களைச் சித்தரிக்கின்றார். அவருடைய உயரம், கம்பீரமான தோற்றம் எல்லாமே வருணிக்கப்படுகின்றது. புத்தரைக் கண்ட யாரும் அவருடைய கால்களைக் கழுவிவிட வேண்டும், பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் காட்டுகிறார். பெண்ணோ, ஆணோ யார் பார்த்தாலும் புத்தரிடம் மறுயோசனையின்றி மயங்குவர், சேவிப்பர் என்று அம்பேத்கர் சொல்லுகிறார். இவரை மயக்குவதற்காக அழகிய பெண்களை ஏவினாலும் கொஞ்சமும் அசையாதவர் புத்தர். அவரை அணுகும் யாரும் அவருடைய பவுத்த நெறிக்கு மாறிவிடுவர். அவருடைய உருவத்தைச் சுற்றி எப்போதும் ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. இவ்வாறு மீமனிதராக அவரைக் காட்டுகிறார் அம்பேத்கர். புத்தருடைய பேச்சைக் கேட்டு அடிமைகள் ஒவ்வொருவரும் சுதந்திர மனிதர்களாகிறார்கள். மன்னர்கள் பிரபுக்கள் எல்லோரும் புத்தருடைய நெறிக்கு மாறிவிடுகிறார்கள் புத்தர் பல அற்புதங்கள் நிகழ்த்துகிறார். இப்படிப்பட்ட சொல்லாடல்கள் மூலம் அம்பேத்கர் புத்தரை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு அவருடைய நியாயங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.


இதற்காக, வரலாற்றியல், அறிவியல் வழிப்பட்ட முறையியல்களை அவர் ஒதுக்கி வைத்து விடுகிறார். அகவயப்பட்ட - உணர்ச்சிவயப்பட்ட - பக்திவயப்பட்ட - வழிலியே அவர் பயணிக்கிறார். நாட்டார் வழிப்பட்ட மரபுகளையும், வழிபாடுகளையும் சார்ந்திருந்த தலித் இனமக்களை ஈர்ப்பதற்குரிய ஒரு திட்ட வழிபட்ட சமயப் பனுவலாக ஆக்குவதற்கே ‘புத்தரின் தம்மம்’ பற்றிய அம்பேத்கரின் விளக்கம் அமைந்துள்ளது என்று சொல்ல வேண்டும். பெருஞ் சமயங்கள் பேசப்படுகின்ற வெளியில், கடவுள்கள் பெயராலும் மகான்கள் பெயராலும், அவ்வப்போது கட்டமைக்கப்பட்ட புராணிக மரபுக் கதைகள் மூலமாகவும், வரலாற்றுத் துளிகள் மூலமாகவும், போதனைகள் மூலமாகவும் புனிதங்கள் கற்பிப்பது தொடர்ந்து காணப்படுகின்றது. நம்மிடம் வார்த்தைகளுக்கோ பஞ்சம்? 

வார்த்தைகள் வக்கிரம் தெரியாமல் வெளிப்படுகின்றபோது, வக்கணைகள் வரலாறுகளை மறைத்துவிடுகின்றன. மினுமினுப்புகள் மேதாவிலாசங்களின் முகவரிகள் ஆகின்றபோது, செயல்பாடுகளின் திசைகள் சிதறிப்போகின்றன. அம்பேத்கர், புத்தரின் கதைகளையும், போதனைகளையும், அவருடைய வாழ்க்கைப் பயணங்களையும் அவை தந்துவிட்டுப் போன செய்திகளையும் மறுயோசனையின்றிப் - பரிசீலனை எதுவுமின்றி - ஜோடனையுடன் அழகுபடுத்தித் தருகிறார்.


உங்கள் கையிலே இருக்கும் இந்த நூலில், ஆசிரியர் வசுமித்ரவின் சொல்லாடல், அம்பேத்கர் பற்றியும் புத்தர் பற்றியும் திட்டவட்டத்தோடு மறுவாசிப்புச் செய்யத் தூண்டுகிறது. யாரும் எதுவும் புனிதமில்லை என்று ஆகிப்போகிறபோது, வழிமறித்து மறுபரிசீலனை செய்வதும், தொடர்ந்து விவாதமின்றி பேசப்பட்டு வருகின்றவற்றை வம்புக்கு இழுப்பதும், அதன் மூலம் மறுகட்டமைவுக்குத் தூண்டுவதும் தவிர்க்க முடியாதவை. தேவையானவை, ஆசிரியர் வசுமித்ரவின் வார்த்தைகள், யோசிக்க வைக்கும் வார்த்தைகள். அம்பேத்கரின் பார்வையிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றும் புத்தரின் முகம் பார்த்துப் பேசுவது ஆசிரியரின் இலக்கு. தமிழ்ச்சூழலில் இதற்கான ஒரு தேவையிருக்கின்றது என்பதாக உணர்த்திக்கொண்டு போகிறார் ஆசிரியர்.


“அம்பேத்கரும் அவரது தம்மமும்” என்னும் இந்நூலின் மூலமாக, ஆசிரியர் வசுமித்ர இந்தத் தேவையை சமரசமின்றி அறியப்படுத்துகிறார். விரிவான, விளக்கமான விவாதப் பொருட்களுடன் தன்னுடைய கருத்தாடலை முன்வைக்கிறார். இது நிச்சயமாக சாதி, சமயம் உள்ளிட்ட வெளிப்படையானதொரு உரையாடலை இங்கு நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கிறார். இது நியாயமான எதிர்பார்ப்பு.


- தோழர் தி.சு. நடராசன், கல்வித்துறையாளார், ஆய்வறிஞர்


Feb 29, 2020

பாலியல் காணொளி


22.2.20 அன்று மாலை 6 மணியளவில் நான் வடபழனியிலிருந்து அடையாருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். பேருந்து பயணம் என்பது உண்மையில் நல்ல அனுபவம். சுவரற்ற வெளியும், பலவிதமான மனிதர்களும் காணக் கிடைப்பார்கள். ஆனால் நம் ஊரில் பொதுத்துறை அவலங்கள் பொதுப் போக்குவரத்தையும் விட்டு வைக்காததால். அரிதாகவே பேருந்தில் பயணிக்க முடிகிறது. அதுவும் நான் வசிக்கும் பகுதியிலிருந்து எங்கு செல்ல வேண்டுமென்றால் 2 அல்லது 3 பேருந்துகள் எடுக்க வேண்டும். வேறு வழியின்றி ஓலா, ஊபர் என்று தனியார் போக்குவரத்துக்கே சொத்தை இழக்க வேண்டியுள்ளது. அன்றைய தினம் திடீரென்று இந்த உண்மை சுட, பேருந்தில் பயணித்தேன்.
காணாததைக் கண்டது போல் வேடிக்கை பார்த்து வந்தபோது திடீரென்று முன் இருக்கையில் காணக் கூடாத ஒன்றை கண்டுவிட்டேன்.
ஓர் இளைஞர் தன் கைபேசியில் பாலியல் காணொளியை (‘போர்ன் வீடியோ’) மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த கைபேசிக்கு ஒரு மூடி இருந்ததால், அதை சற்று தூக்கிப் பிடித்தபடி அருகில் இருந்தவருக்கு தெரியாத வண்ணம் பார்த்தவாரு இருந்தார். ஆனால் பக்கவாட்டில் பின்னால் இருப்பவருக்கு அது தெரியும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். எதேச்சையாக நான் திரும்புகையில் என் கண்ணில் பட்டுவிட்டது. அந்த இளைஞனுக்கு 23-25 வயது இருக்கும். சுற்றி இருக்கும் உலகம் பற்றிய எந்த பிரக்ஞையுமின்றி பார்த்துக்கொண்டிருந்த அவர் நிறுத்தம் வந்ததும் எதுவுமே நடக்காததுபோல் கைபேசியை மூடிவிட்டு இறங்கிவிட்டார்.
ஒரு சிலர் இப்படி பொது இடத்தில் ‘ஆபாச’ படம் பார்க்கிறானே அவனெல்லாம் ஒரு மனிதனா என்று ஒழுக்கவாதிகளாக கல் எறிவார்கள். பெரும்பாலும் இவர்கள் பெண் என்பவள் வீட்டு வேலைக்கானவள் என்று சொல்லும் ஆபாசவாதிகளாக இருப்பார்கள்! எந்த ஒரு செயலையும் மதிப்பிடுவதை நிறுத்திக்கொண்டால் மட்டுமே நாம் பிரச்சினைகளை சரிவர ஆய்வு செய்ய முடியும்.
பாலியல் காணொளி என்பதை பாலியல் கல்வி என்கிற நோக்கோடு தயாரிப்பது குறித்து எனக்கு எந்த மறுப்புமில்லை. அதை ஒரு முறைசார்ந்து உருவாக்க வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த ஆணாதிக்க சமூகத்தில் பாலியல் காணொளிகள் ஆண் பெண் உடல்களை, காமத்தை ஒரு சரக்காக, வணிகமாகக் கையாள்வதால் ‘ஆபாச’ காணொளிகள் ஆபத்தானவையாக மாறிவிடுகின்றன. காமம் என்றால் என்னவென்றே அறியாதவருக்கும், குறிப்பாக பெண்ணை நிறைவடையச் செய்யும் நுணுக்கங்கள் அறியாதவருக்கும் இந்த ‘ஆபாச’ காணொளி கோணார் வழிகாட்டியாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை அதில் காண்பனவற்றையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்கிற தீவிர உணர்ச்சியும் பிரச்சினைக்குரியது. நான் இப்போது பேச விழைவது அதுவல்ல.
‘ஆபாச’ காணொளி காண்பது சரியா தவறா என்பதைக் காட்டிலும் அதை காண வேண்டிய வேட்கையை ஏற்படுத்தும் சமூக நிலைமையை நான் யோசிக்கிறேன். இந்தியா பாலியல் வறட்சி கொண்ட நாடு. பசி, பட்டினி ஏழ்மை போன்று காமப் பசிக்கு தீனியற்ற நாடு.
விவரம் தெரிந்த வயதிலிருந்து மனிதர்களுக்கு பாலுணர்வு ஏற்பட்டு அது பதின்பருவ வயதில் கிளர்ச்சியாக உருவெடுத்து 20 வயதிலெல்லாம் தீவிர வேட்கையாக மாறுகிறது. 18, வயது 21 வயது திருமண வயது என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்டாலும் திருமணத்தை சாத்தியப்படுத்துவது ஒருவரின் பொருளாதார நிலைமையே ஆகும். போதாக்குறைக்கு இந்துத்துவ மூட நம்பிக்கைகளின் காரணமாக சாதி, சோதிடம் என்று சில பல தடைகளை வேறு கடக்க வேண்டும். வேலையில்லாத இளைஞருக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். சிலர் மாப்பிள்ளைக்கு அரசு உத்தியோகம் இருக்க வேண்டும் என்பார்கள். இப்படியாக சராசரி திருமண வயது 30; (இல்லை 35 என்று கூட சொல்லலாம்) என்று வந்து நிற்கிறது. அதுவரை காமத்த்தில் உண்டான உடல்களுக்கு காமம் மறுக்கப்படுகிறது.
இதற்கிடையில் காதல், காதலற்ற தோழமை, சாட்டிங், டேட்டிங் என்று ஏதேதோ வகையில் பாலியல் தேவையை சிலர் நிறைவேற்றிக் கொள்கின்றனர். பணம் படைத்தவர்களுக்கு நல் வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. பணமற்றவர்கள் மற்றும் சமூகத்தின் ஒழுக்கவாத கண்காணிப்புகளுக்கு அஞ்சுவோருக்கு வடிகால்?
வல்லுறவுகளுக்கு பாலியல் வரட்சி என்பது முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. குழந்தைகள் இதன் இலகுவான இலக்காகின்றனர்.
காமம் பற்றிய ஆணாதிக்க கருத்தியலையும், கட்டுப்பாடுகளையும் மதவாத அதிகாரத்தையும் கட்டுடைக்க வேண்டிய தேவை இருக்கிறது. தறிகெட்ட அல்லது முறையற்ற சுதந்திர பாலுறவு வேண்டுமென்பதல்ல வாதம். உரிய வயதில் இயல்பூக்க தேவைகளை ஒருவர் பெற வேண்டும் என்னும் புரிதலை வளர்ப்பதே நோக்கம். புரிதலோடு பாதுகாப்பான, பாலியல் சுரண்டலற்ற வழிமுறையையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. நம் குழந்தைகளை, பெண்களை பாலியல் வன்முறையிலிருந்தும், இளைஞர்களை பாலியல் மனநோயிலிருந்தும் காக்க இது அவசியம்.

நன்றி Vanakkam India News 

Feb 20, 2020

உலக தாய்மொழி தினம்





“Workers of the world unite” – யேன் கொங்கனிந்து கெஸ்ஸி சங்கூக்கா?

“அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பதை என் தாய்மொழியில் சொல்லக் கூட தெரியாத தமிழச்சியாக இந்த அறைகூவலை என் உறவினர் ஒருவருக்கு தகவல் அனுப்பிவிட்டு மொழிபெயர்ப்புக்காக காத்திருக்கிறேன்
#உலக_தாய்மொழி_தினம் 

காலனியாக்கத்தின் கோரப் பிடியில் சிக்கி கோவா போர்ச்சுகீசிய ஆக்கிரமப்பிற்கு உள்ளானபோது கோவாவிலிருந்து நிறைய கொங்கனியர் (மற்றும் மராட்டியர்கள் – இந்துக்கள்) கோவாவை விட்டு வெளியேறினார்கள். அப்போது எங்களது பூர்வீகக் குடிகளும் சொந்த மண்ணிலிருந்து வெளியேறி கேரளா, மங்களூரு, ஆந்திர எல்லை, ஆந்திரா போன்ற பகுதிகளில் குடியேறியதாக என் அம்மா சொல்லக் கேட்டது மட்டுமே நான் என் பூர்வீகம் குறித்து அறிந்த வரலாறு. (நான் இன்னும் கோவாவுக்கு சென்றது கூட இல்லை!)

அம்மாவின் குடும்பம் திருத்தனி அருகே பள்ளிப்பட்டு என்னும் ஊரிலும், அப்பாவின் குடும்பம் கேரளாவிலும் குடியேறியது. என் பாட்டி பிழைப்பிற்காக சென்னை வந்தவர். இப்படியாக நாங்கள் நாடோடி கூட்டமானோம். (இதை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன்).
அம்மாவின் அப்பா அம்மா பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் ஹோட்டல் வைத்து பிழைத்தார்கள் (பின்னர் அதையும் அரசாங்கம் பிடுங்கிக் கொண்டது). அம்மா படித்தது தெலுங்கு வழிக் கல்வி!

அப்பாவின் அம்மா கணவால் ஏமாற்றப்பட்டு (11 வயதில் திருமணம், 16க்குள் 3 பிள்ளைகள்) சென்னைக்கு பிழைக்க வந்தவர். 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். மலையாள வழிக் கல்வி! சமையல் வேலை செய்து 3 பிள்ளைகளை ஆளாக்கியவர். வறுமை என் தந்தையை கோபக்காரனாகவும், (குடும்ப) வன்முறையாளனாகவும் மாற்றியது. (இன்றைக்கு அதை நினைத்து வருந்துகிறார்). பிழைக்க வந்த இடத்தில் கொங்கனி பேசினால் நம்மை அந்நியர்கள் (உண்மையை சொல்ல வேண்டுமெனில் முஸ்லீம்கள் என்று சொல்வார்கள்) என்று சொல்லி விரட்டிவிடுவார்கள். தொழில் நடக்காது என்ற என் அப்பாவின் அச்சம் காரணமாக தாய்மொழியை பேச நாங்கள் தடை செய்யப்பட்டோம். எழுத்துரு இல்லாத மொழியை படிக்கும் வாய்ப்புமில்லாமல் போனது! அப்பாவின் அச்சத்திற்கான காரணம் அன்று புரியவில்லை. சாதி, மத, இனம், மொழி, பாலினம், பொருளாதார நிலைமை (வர்க்கம்) காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறோம் என்பது பற்றிய அரசியல் தெரியாத காலத்தில்… இதுதான் இயல்பு என்று வாழ்ந்து, உழைத்து வளர்ந்தோம். பள்ளிப் படிப்பின் போது நான் தோற்காத ஒரே பாடம் தமிழ்!

என் தாய் மொழியை ‘கற்றுக்கொள்ள’ என்னால் செய்ய முடிந்ததெல்லாம் கொங்கனி அகராதி வாங்கி வைத்து வேடிக்கைப் பார்ப்பது மட்டுமே! இன்று #உலக_சிவப்புப்_புத்தக_நாளும் கூட

கால தாமதமாக அரசியல் கற்றேன். மார்க்சியம் என்னை விடுவித்தது. இங்கு நிலவும் ஒடுக்குமுறைகளுக்கான காரணம் தெரிகிறது. அதை உரக்கச் சொல்வதால் அவ்வப்போது மனதை பாதிக்கும் அச்சங்களும், வலிகளும்:

1. சாதிய அடிப்படையில் அரசியல் தீண்டாமை

2. மார்க்சியத் தத்துவப் பிடிப்பினால் அரசியல் தீண்டாமை

3. தாய்மொழி அடிப்படையில் இனவாத வெறுப்பு

4. பாலின அடிப்படையில் ஆணாதிக்க வெறுப்பு மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு.

5. ஒரு சில அமைப்புகளின் தமிழ் இனவாத அரசியல் பேச்சு மற்றும் பார்ப்பனிய இந்துத்துவ குடியுரிமை திருத்தச் சட்டம் இவற்றால் நாடற்றவர்களாக ஆகப்படுவோமோ என்னும் பேரச்சம். (CAA, NCR, NPR).

6. மிக முக்கியமாக - பிறப்பின் அடிப்படையில் ’ஆதிக்க’ அடையாளம் இருந்தபோதிலும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வேலையில்லா பட்டதாரி! (தத்துவப் பிடிப்பு, அரசியல் பேச்சு மற்றும் வயது காரணமாக)

அரசியல் விழிப்புணர்வு ஒருவரை விடுவிக்கும் என்பது போய் அச்சம் குடிகொண்டு வாழும் நிலைக்கு தள்ளும் வர்க்க உணர்வற்ற ‘பிறப்பின் அடிப்படையிலான’ வெறுப்புவாத அரசியல் தீண்டாமை ஒழிக!
உழைக்கும் வர்க்க தத்துவமாம் மார்க்சியத்தின் துணை கொண்டு அதை ஒழிப்போம்!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அறியாமை இருளில் மூழ்கி அரசியல் தீண்டாமை பேசி
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நேற்றைய கூட்டத்தில் தோழர் ஒருவர் பேசியது “உழைப்பாளிகளுக்கு ஏதய்யா நாடு?”

உழைத்தால் மட்டுமே சோறு… தமிழன் என்பதாலோ, ஒரே சாதி என்பதாலோ இங்கே யாரும் யாரையும் காக்கப் போவதில்லை. ஆளும் வர்க்கமாக சுரண்டுபவனும், அதனால் மூளைச் சலவை செய்யப்பட்டோரும் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கியும் சுரண்டியுமே பிழைக்கப் போகிறார்கள். உழைப்பாளியாக நீயும் அடிமை, நானும் அடிமை! பொருளாதார அடிமை!

உழைக்கும் தமிழா! வா தமிழா! உனக்கும் எனக்கும் விடுதலை தேவை! உன்னையும் என்னையும் இணைப்பது மொழியல்ல, சாதியல்ல, மதம் உள்ளிட்டவை அல்ல… நம் வர்க்க நிலைமை!

தமிழ் மட்டுமே தெரிவதால் என் தாய்மொழி மறந்த தமிழச்சியாக மீண்டும் சொல்கிறேன் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”

Feb 13, 2020

சமூகமாக நாம் யார்?



சமூகத்தில் நம் வாழ்வாதாரத் தேவைகளை (பொருள் தேவைக்காக) பூர்த்தி செய்துகொள்வதற்கான செயல்பாடுகளில் (இயக்கத்தில்) நாம் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நமது அடையாளம். இதுவே வர்க்க அடையாளம்.

இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிலவும் அடையாளம். இந்த படிநிலையை அதிகாரப்பூர்வமாக நிலைநாட்ட அரசு, மதம், பண்பாடு, காவல்துறை, சட்டம் போன்ற ‘நிர்வாக’, ‘நம்பிக்கை’, (‘ஆன்மீகம்’) அமைப்புகள் உருவாயியன. எல்லா நாடுகளிலும் இதுவே சமூகத்தின் இயங்குமுறை. எல்லா நாடுகளிலும் மதம் என்பது ஆளும் வர்க்க நிறுவனமே.

இந்தியாவில் அது இந்து மதம் என்னும் சித்தாந்தத்தில் இயங்குகிறது. சாதி என்னும் உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான படிநிலையை அது திடப்படுத்தி வைத்துள்ளது. இப்பின்னணியில் வலதுசாரி பாசிச எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பதை நாம் மதத் தாக்குதல், மத வெறுப்பு, மத மாற்றம் என்பதோடு நிறுத்திக்கொள்வோமெனில் அது வெறும் பூச்சு சேலை மட்டுமே.

ஓர் இந்து முதலாளி இந்து தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, ஒரு கவுண்டர் (நாடார், தேவர்… இதர) முதலாளி கவுண்டர் தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, கேட்டால் அவர்கள் பார்ப்பனிய புத்தி உடையவர்கள் என்பதா பதில்? ஒரு தலித் முதலாளி தலித் உழைப்பாளியை சுரண்டாமல் இருப்பாரா? இஸ்லாமிய, கிறித்தவ முதலாளி இஸ்லாமிய, கிறித்தவ தொழிலாளியை சுரண்டுவதில்லையா (இலாபம் என்பதை அடிப்படையாக கொண்ட உற்பத்தி முறையில் - உழைப்பு ரீதியாக). ஒரு பெண் முதலாளி மற்றொரு பெண் தொழிலாளியிடம் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடமாட்டாரா? ஒரு தமிழன் நாட்டை ஆண்டால் தமிழனாகிய தொழிலாளியை சுரண்டுவதை ஒழித்துவிடுவாரா? தமிழன் முதலாளியாக இருந்தால் தமிழச்சிகளுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?

சாதி-மத ஒழிபிப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டால் ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணத்தை (உழைப்புச் சுரண்டலுக்கான), ஆணி வேரை எப்படி கண்டடைவது? இதை விளக்கியவர்கள் கார்ல் மார்க்ஸ் எங்கல்ஸைத் தவிர யாரேனும் உள்ளனரா?

அம்பேத்கரிடம் இதற்கு தீர்வு உண்டா? அல்லது காஞ்சா ஐயலய்யா மற்றும் இதர தலித்திய, தாராளவாத சமூக ஆர்வலர்களிடம் தீர்வு உண்டா? பெரியார், அம்பேத்கர் போன்றொர் சாதியப் பிரச்சினை குறித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்கள். பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மீது கவனம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்கள். முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தார்கள். குறிப்பிட்ட அளவு சட்டரீதியான சீர்திருத்தங்களை, உரிமைகளை பெற்றுத்தந்தார்கள் என்பது மறுக்கமுடியாதது. ஆனால் அவை எதுவும் உண்மையான சமத்துவத்தை அனைத்து மட்டத்திலும் எய்திட போதுமானதல்ல.

தற்போது #அம்பேத்கர், #பெரியார் பெயரைச் சொல்லி தாராளவாதிகள் சாதியை இன்னமும் பண்பாட்டு பிரச்சினையாக மட்டுமே சித்தரித்துக்கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பூர்ஷுவா அதிகாரத்தில் தங்களுக்கும் அதிகாரம் வேண்டும். தாங்களும் முதலாளிகளாக வேண்டும் என்பதைத் தவிர இவர்கள் பேசும் சமத்துவத்தில் ஏழ்மையை ஒழிக்கவும், பெண் ஒடுக்குமுறையை ஒழிக்கவும் விஞ்ஞானபூர்வ தீர்வு என்ன இருக்கிறது? குறைந்தபட்சம் இந்த ஒடுக்குமுறைகளுக்கான காரணங்களாவது சரியாக விளக்கப்படுகிறதா?

மதம், பண்பாடு என்று தொடங்கி அகவாதத்தில் முடிவதைத் தவிர வேறொன்றுமில்லை. வெறுப்புரசியல், திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம், சாதிய அணிதிரட்டல் என்னும் பாதையில் இவ்வரசியல் பயணிக்கிறது.

சமத்துவம் என்பது வெறுமனே பண்பாட்டு நிலையில் எய்தப்படுவதல்ல. அது மனிதனை மனிதன் அன்போடு நடத்த வேண்டும் என்னும் எண்ணம் தொடர்பானது மட்டுமல்ல. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் பொருளாயத அடிப்படை ஒன்றுதான். அதுவே செல்வக் குவிப்பிற்கான சுரண்டல் முறை. அதனை உணரவிடாமல், நமது பொது எதிரி யார் என்று உணரவிடாமல் செய்வதே முதலாளித்துவத்தின் கைக்கூலியான அடையாள அரசியல்வாதிகளின் நோக்கம்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சாதி ஒழிப்பு பற்றிய பேச்சுகள், ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், மத அடிப்படைவாத எதிர்ப்பு வியாக்கியானங்கள் (புலம்பல்கள்) பேசப்படுவதாலேயே ஒருவரிடம் சாதி ஒழிப்பிற்கான தீர்வு இருக்கிறது என்றாகாது. அவர் சமூக விஞ்ஞானியும் ஆகிவிட முடியாது. அவர்களை சமூக அக்கறையாளர்கள், ஆய்வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், தேவைப்பட்டால் தலைவர் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம்.

சமூக விஞ்ஞானம் என்பது வரலாற்று வளர்ச்சியோடு தொடர்புடையது. அது உற்பத்தி முறையோடு தொடர்புடையது. அது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தோடு தொடர்புடையது. அதனை சரியாக ஆய்வுசெய்து பிரச்சினைகளின் ஆணிவேரை அறிவியல்பூர்வமாக முன்வைப்பவரே சமூக விஞ்ஞானி. மற்றவர்கள் சமூக உனர்வாளர்கள் மட்டுமே.

இன்னார் இந்த தொழிலில் ஈடுபடுவதால் அவர்களுக்கு இந்த பண்பு இருக்கிறது அல்லது இல்லை என்பது மேலோட்டமான வியாக்கியானம். அவர்கள் அந்த தொழிலில் மட்டும் ஈடுபடுவதற்கான வாய்ப்பும், அதிகாரம் எப்படி தோன்றி வளர்ந்தது? மற்றவர் விலக்கிவைக்கப்பட்டதற்கான வரலாற்று காரணம் என்ன? அதன் அடிப்படை (இயங்குதளம்) என்ன? எந்த ஒன்றிலிருந்து அனுமதித்தலும், விலக்கலும் நடைபெறுகிறது? மதம், சாதி மட்டும்தான் அதை தீர்மானிக்கிறதா? அப்படியென்றால் பார்ப்பனியம் ஏன் இந்தியாவை விட்டு மற்ற நாடுகளில் அதன் அதிகாரத்தை நிலைநாட்ட முடியவில்லை. அங்கு ஏன் சாதிகளை ஏற்படுத்தவில்லை?

குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட பண்பாடு இருக்கும் என்பது சரி. ஆனால் மூடநம்பிக்கை என்பது அனைத்து மட்டத்திலும் இருக்கும். சொல்லப்போனால் நிலவுடைமை பண்பாடு என்பது பெண்களை உடைமையாக கருதும் பிற்போக்குத்தனமான அமைப்பு. கடவுள் நம்பிக்கை இருக்கும் இடத்தில் மூடநம்பிக்கை இருக்கவே செய்யும். இது ஆதிக்க சாதியானாலும் சரி, தாழ்த்தப்பட்டோர் ஆனாலும் சரி. இயற்கையை வழிபடுவதோ, அல்லது கடவுளை வழிபடுவதோ… சடங்கு சம்பிரதாயங்கள் என்பதே மூடநம்பிக்கைதான். அது அனைத்து சாதிகளிலும் உள்ளது.

குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட வேலையில் மட்டுமே ஈடுபடுகின்றனர் என்பதைத்தான் தனியுடமை அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை என்று மார்க்சியர்கள் காலம்காலமாக விளக்கியுள்ளனர். போலி சிந்தனையாளர்கள் போல் அன்றி அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர். படிநிலையில் மேலே இருப்பவர்கள் உற்பத்திச் சாதனங்கள் தொடங்கி… கல்வி வரை கீழே இருப்பவர்களுக்கு கிடைகாமல் செய்தனர். ஆகவே மேலே இருப்பவர்கள் அறிவு, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என்று சகல தளங்களிலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு அமைந்துவிட்டது. கீழே இருந்தவர்கள் பல போராட்டங்கள் நடத்தி இன்று மேலே வருகின்றனர். இப்போது அதுபற்றிய விழிப்புணர்வு மேலோங்குகிறது. போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது மேல்நிலையில் உள்ளோருக்கு ஆபத்தாக, போட்டியாக தெரிவதால் மீண்டும் முரண்பாடுகள் முற்றுகின்றன. (இது ஆண் பெண் முரன்பாடுக்கும் பொருந்தும்). அதன் விளைவாக மேல்நிலையில் இருப்பவர்கள் மீண்டும் தங்களது அடையாளங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள நினைக்கிறார்கள். அந்த படிநிலையை சாதி என்னும் ஏற்பாட்டின் மூலம் இங்கு சட்டதிட்டமாக்கி வைத்தது அவர்களுக்கு கருவியாக, பேராயுதமாகப் பயன்படுகிறது. எதிர் தரப்பினரும் அதே ஆயுதத்தை ஏந்தினால்?

மேலாதிக்க சக்திகளுக்கு அந்த ஆயுதம் கைவரப்பெற்ற நிலைமைகளை ஆய்வுசெய்யாமல், சொல்லப்போனால் அந்த ஆயுதம் எது என்பதைக்கூட ஆய்வு செய்யாமல், அதை ஆய்வு செய்வதற்கு உதவும் அறிவியல் கோட்பாட்டை படித்தறியாமல் கம்பு சுழற்றுவதால் இழப்பு யாருக்கு? எதிரி அங்கு சிரித்துக்கொண்டிருக்கிறான். தன்னை இனம் காண முடியாது என்னும் இருமாப்பில் எதிரி சிரித்துக்கொண்டிருக்கிறான். சாதி, மதம், மொழி, பாலினம், உடல்திறன், இனம் என்பதற்கப்பார்பட்டு நமக்கென்று ஓர் இருப்புநிலையை அவன் (அது) ஏற்படுத்திவைத்திருக்கிறான். அதுவே உழைப்பாளி என்னும் நிலை. உழைப்புச் சக்தியை விற்றால் மட்டுமே பிழைக்க முடியும் என்னும் நிலைமை. எந்த சாதியானாலும், எந்த பாலினமானாலும் (இன்னும் இதர..) நீ இந்த பூமியில் பிழைத்திருக்க என்ன செய்கிறாய் என்பதில்தான் உன்னுடைய சமூக பாத்திரம் அல்லது அடையாளம் இருக்கிறது. அதுவே உனது புத்தியை தீர்மானிக்கிறது. அதிலிருந்து விடுபடுவதே அரசியல் விழிப்புணர்வு - வர்க்க நீக்கம், சாதிய நீக்கம், பாலின அடையாள நீக்கம், மதப் பற்றிலிருந்து (சொல்லப்போனால் கடவுள் மறுப்பு தேவை).

பிறப்பின் அடிப்படையிலான அடையாளரீதியான உணர்விலிருந்து விடுபட்டு – உற்பத்தி உறவில் உனக்கு என்ன இடம் - வர்க்க உணர்வு பெறுவது என்றாகிறது. இதுவே கம்யூனிஸ்ட் என்னும் உணர்வு. தேடலின் வழி அல்லது கற்றலின் வழி இந்த உணர்வை பெற்றபின் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கான அடித்தளம் எது என்பதை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்த்து அதை உறுதிபட எடுத்துரைத்துக்கொண்டிருப்பது அவசியமான பணி.

உண்மையில் வலதுசாரி எழுச்சி என்பது முதலாளித்துவத்தோடு, உலக மூலதன வளர்ச்சியோடு, உலகமயமாக்கலோடு, ஏகாதிபத்தியத்தோடு தொடர்புடையது. உலகெங்கிலும் இன்றைக்கு வலதுசாரி ஆதிக்கமும், அடையாள அரசியல் பிளவுவாதமும் மேலோங்கி இருக்கிறது. இத்தகையதொரு முழுமையான பார்வையைப் பெற நமக்கு மார்க்சியம் உதவுகிறது. அதனை கற்காமலேயே வர்க்கம் என்று தட்டையாக சாதியை அனுகமுடியாது, முதலாளித்துவத்தை விட பார்ப்பனியமே பிரதான பிரச்சினை அல்லது ஆபத்தானது என்று பேசுவது அறிவுடைமை ஆகாது.

வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திப் பேசுவதால் மற்ற ஒடுக்குமுறைகளை நிராகரிப்பதாக காண்பது பார்வைக்கோளாறன்றி வேறில்லை. எல்லாவற்றிற்குமான இணைப்பு, அடித்தளம் எது என்பதை உணர்த்தும்போது மட்டுமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். பிளவுபடுத்தும் சக்திகளை அடையாளம் காட்டமுடியும். அது ஒன்றே புரட்சிகர பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
உழைக்கும் வர்க்கம் என்னும் உணர்வை பெறுக! நம் பொது எதிரி யார் – அதனது சேனைகள் யார் என்பதை என்பதை உணர்க! உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஓங்குக!

(நான் பகிர்ந்திருந்த ஒரு பதிவுக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலாக இது எழுதப்பட்டது)