Nov 17, 2022

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பா?

 


பெண் ஒடுக்கப்படுகிறாள், சமமாக நடத்தப்படவில்லை, அவள் உடலுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்பது வெளிப்படையானது என்றாலும் அது முந்தைய காலம், தற்போது இல்லை என்று சிலரும், சில ஆண்கள் கெட்டவர்கள், சைக்கோக்கள் வேண்டுமானால் அப்படி நடந்துகொள்ளலாம் என்று சிலரும், பெண்கள்தான் தற்போது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சிலரும் வாதிடுகிறார்கள். இன்னொரு சாரார் இயற்கைக்கு எதிராக பேசாதீர்கள்! ஆணும் பெண்ணும் வேறு வேறு தான், எப்படி சமமாக முடியும் என்கிறார்கள்! மாறுபட்டவர்கள் என்பதற்காக ஒடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த உலகம் மாறுபட்டவர்களுக்கானதே!

இக்கேள்விகளுக்கு 10 வருடங்களாக பதில் கூறி வந்தாலும், புதிதாக முளைத்துள்ள பெண் வெறுப்பாளர்கள் (Rightwing Misogynists / ignorants) எப்படி எதையும் படித்தறிவதில்லையோ, இதையும் படிப்பதில்லை. சமூகப் பிரச்சினைகள் பலதும் குறித்து பேசி இருந்தாலும், இத்தகைய “ஆம்பிளை” கண்களுக்கு எனது புகைப்படமும், பாலியல் ஒடுக்குமுறை குறித்த பதிவுகள் மட்டுமே தெரிகிறது! பாவம்!

விசயத்துக்கு வருகிறேன்!

சமூகத்தில் நிலவும் பல ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வு உள்ள அளவுக்கு பெண் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக பெண்களில் பலருக்கும் அது பற்றிய விழிப்புணர்வு இல்லை. நிலவும் ‘பண்பாடு’ சரியானதுதான், அதுதான் இயற்கை, நல்லது, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களும் நம்புகிறார்கள். இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் வெற்றி.  

முதலில் சில தெளிவுரைகள்:

·      பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பல்ல!

·      பெண்ணியம் என்பது பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று புனையப்படும் கட்டுக்கதை அல்ல!

·      பெண்ணியம் என்பது ‘பாலியல் சுதந்திரம்’ மட்டும் தொடர்பானது அல்ல! (அதுவும் அடக்கம். அது எதன் அடிப்படையில் என்பதற்கும் போதுமான உரையாடல்கள் உள்ளன).

·      பெண்ணியம் என்பது ஆணைப் போன்று குடிப்பது, புகை பிடிப்பது, உள்ளிட்ட ‘உரிமைகளைக்’ கோறுவதும் அல்ல!  உடல்நலன் என்று வருகையில் அது அனைவர்க்கும் தீங்கானதே!

·      மகளிரியல் என்பது ஆண்களின் நலனையும் உள்ளடக்கியதே! ஆண் பெண் சமத்துவமில்லாத துன்பகரமான வாழ்விலிருந்து ஆண்களையும் விடுவிப்பது அதன் தேவையாக உள்ளது.

பெண்ணியம் அல்லது மகளிரியல் என்பது பெண் என்னும் பாலின அடிப்படையில் விதிக்கப்படும் நடத்தை விதிகளை கேள்விக்கு உட்படுத்துவது, ஏன் அந்த பாகுபாடு உருவானது என்பதை வரலாற்றுபூர்வமாக எடுத்துரைப்பது, பாலின பாகுபாட்டை ஒழிப்பதற்காக வேலை செய்வது. மகளிரியல் சிந்தனையில் பல கண்ணோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் இடையில் ஐக்கியம், முரன்பாடுகளும் உள்ளன. பொதுவாக பெண் ஒடுக்குமுறையை அங்கீகரித்துப் பேசும் கண்ணோட்டங்கள் இருப்பினும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது சோஷலிசப் பெண்ணியம். மார்க்சிய சித்தாந்தம் அதன் வழிகாட்டி.

மிக எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஒரு பெண் முதலாளியாவதை, நாடாள்வதையெல்லாம் பெண்ணின் சாதனையாக கொண்டாடுவது பெண்ணியமாக இருந்தாலும், ஒடுக்கப்படும் பெண் இனத்தின் இந்த வளர்ச்சியை பாராட்டும் அதேவேளை, அந்த பெண்களின் வர்க்கத் தன்மையை, அவர்கள் யாரின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள் என்பதை விமர்சனத்திற்கு உட்படுத்துவது சோஷலிசப் பெண்ணியம். பெண் விடுதலை பேசுவோரில் பெரும்பாலும் இது கலவையாகவும் வெளிப்படும். அனைத்திலும் முழுமுற்றானது என்று எதுவுமில்லை. நட்புமுரண்பாடு, பகை முரண்பாடு என்பது புரிய, வாசிப்பு தேவைப்படுகிறது.

ஆண் பெண் இருவருமே வர்க்கரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள். மகளிர் விடுதலை என்பது உழைக்கும் வர்க்க விடுதலையோடு தொடர்புடையது. தனியுடைமை தகர்ப்போடு தொடர்புடையது என்று ஏற்றுக்கொள்வதுதான் சோஷலிசப் பெண்ணியம்! இதை நமக்கு வழங்குவது மார்க்சியக் கண்ணோட்டம். மார்க்சிய சித்தாந்தத்தைப் படிப்பது அதன் முன்நிபந்தனை. மூன்றாம் பாலினமோ - பாலினம், வர்க்கம், இருத்தலியல் என அனைத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்தே பேசுகிறோம்! இருமைக்குள் (நான்) எதையும் அடக்குவதில்லை!

பெண்ணியவாதிகள் பெண் விடுதலைக்காக மட்டும் போராடுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை! ஆனால் அதிலும் சாதி, வர்க்க,இன, மொழி, மத ரீதியான பிளவுகள் காரணமாக பெண் உரிமை பேசுவோரில் பலவிதமான போக்குகளைக் காண முடியும்.

நம் கண்ணுக்குத் தெரியாத நுண் உயிரிகளைக் காண எப்படி ஒரு  நுண்நோக்கி தேவைப்படுகிறதோ, அதுபோலத்தான் சமூக ஒடுக்குமுறைகளைக் காண ஒரு நுண்நோக்கி (microscope) தேவைப்படுகிறது. பல சித்தாந்தங்கள் அத்தகைய நுண்நோக்கிகளாக உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு வர்க்கத் தன்மை உண்டு.

பொதுவாக வலதுசாரி, இடதுசாரி என்ற பிரிவுகள் இருந்தாலும்.  உழைக்கும் வர்க்கப் பார்வையற்ற முற்போக்கு சிந்தனை என்னும் ஒரு பிரிவும் உண்டு. அதேபோல் வலதுசாரி எதிர்ப்பு / பார்ப்பன எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள், ஆனால் ஆணாதிக்கம், வர்க்கம் பற்றிய புரிதல் இவர்களுக்கு இருக்காது. அல்லது பாதி புரிதலோடு இருப்பார்கள். இவர்களில் பலர் ஒடுக்கப்படும் தரப்பின் பக்கம் இருந்து பேசினாலும், சில ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்க மாட்டார்கள். அல்லது குறிப்பிட்ட வழிமுறைகளில் அதை கையாளக் கூடாது என்று அவரவர் கண்ணோட்டத்தில் பேசுவார்கள். அதற்கும் வர்க்கத் தன்மையே காரணம்!  அல்லது அறியாமையாகவும் இருக்கலாம்.

சாதி, மதம், பாலினம், இனம், மொழி, திறன் இத்தியாதி அடிப்படையில் ஒடுக்கப்படுவதை – ஒடுக்குமுறை என்பது போல்

அதனோடு சேர்ந்து உழைப்புச் சுரண்டல் என்று ஒன்று நிலவுகிறது – அதனை சுரண்டல் என்கிறோம். வர்க்க முரண்பாடு!

பெண் / பாலின  அடிப்படையில் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கம் எனப்படுகிறது. அது தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் தோற்றத்தோடு தொடர்புடையது. அதோடு தனியுடைமை – அதாவது தனிச்சொத்து சேர்க்கும் அமைப்பும் உருவானது இரண்டும் சேர்த்தே இந்த சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் என்பதுதான் மார்க்சிய விளக்கம். வர்க்க முரண்பாடு அடித்தளம்! படிநிலைகள் அதற்கு தேவைப்படும் ஏற்பாடு. ஒடுக்குமுறை என்பது அதன் கருவி என்று இதனை புரிந்துகொள்ளலாம்.

மனிதம் போற்றுவோம் என்போர், குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் படிக்க வேண்டும். ஆனால் நிலவும் சமூக அமைப்பின் சமூகமயமாக்கலில் ஊறி, திளைத்து போனவர்கள், அதிகாரப் பசி கொண்டவர்கள், மேலாண்மை சுகம் கண்டவர்களால் இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாது. யாருடைய ஏற்பிற்காகவும் சமூக மாற்றம் காத்திருப்பதில்லை.

ஒடுக்கப்படும் எதுவும் வெடித்துக் கிளம்புவதும், முரண்பாடுகளை களைந்தெறிய மாற்று ஏற்பாடுகளை உருவாக்குவதும் அறிவியல் ரீதியான இயக்கம். மார்க்சியம் அதையும் உணர்த்துகிறது. மார்க்சியம் படிங்க.

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பும் அல்ல, பாலியல் பித்துமல்ல! அப்படி முத்திரை குத்துவதன் மூலம் பெண் விடுதலை இயக்கத்தில் பெண்கள் ஒருங்கிணைவதை தடுக்க முனையும்  வெறுப்பு அரசியல் பிரச்சாரம். Slut Shaming is its immediate weapon! but activists have seen worst than this! Nothing shall stop the movement of the oppressed. 


image courtesy: https://www.thequint.com/neon/gender/a-guide-to-feminism-for-men-everyone-anyone-can-be-a-feminist#11#read-more

related articles: https://saavinudhadugal.blogspot.com/2011/07/1.html (written in 2011!)

https://saavinudhadugal.blogspot.com/2020/06/blog-post_19.html

இந்த பொருள் தொடர்பாக பல நூல்களும், கட்டுரைகளையும் பலரும் எழுதியுள்ளனர். படித்தறியவும். 

Oct 28, 2022

தொடரும் ஆபாச தாக்குதல்கள்

 


ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் அறிவிலிகளுக்கு!

இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்று சிந்தியுங்கள். ஆணாதிக்கம் என்றால் என்ன என்று பேசிய காணொளி உள்ளது. அதையும் பாருங்கள்.

ஆணாதிக்கம் என்றால் என்ன

சிசுகொலை, வரதட்சனை, குடும்ப வன்முறை தொடங்கி பாலியல் வன்கொடுமை வரை அனைத்திற்கும் அதிகாரம் வழங்கியிருப்பது ஆணாதிக்க சமூக அமைப்பே ஆகும்!

ஆண் மேலானவன்.. பெண் கீழானவள் என்று பாலின அடிப்படையில் எழுதா விதி நிலவுகிறது. இது ஆண் பெண் மாற்றுப்பாலினம் என அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.

தற்போதைய உதாரணம் ஒன்றை சொல்கிறேன்!

சின்மயா வித்யாலயா வன்கொடுமைக்கு எதிராக நான் பேசிய காணொளி இணையத்தில் வலம் வந்த பிறகு என் மீதான பாலியல்ரீதியான  verbal abuse, slut shaming எல்லாம் அதிகரித்துவிட்டது. Nobraday பிரச்சாரத்திற்குப் பின், குறிப்பாக behindwoodsக்கு பேட்டி அளித்த அன்று மாலை இது அடுத்த கட்ட தாக்குதலுக்கு சென்றுள்ளது!

எனது அலைபேசி எண்ணை டிவிட்டரில் பகிர தொடங்கியுள்ளனர். ஒருவரா.. ஒரு கூட்டமா தெரியவில்லை! திடீரென எனக்கு தெரியாத எண்களில் இருந்து hi என்று மெசேஜ் வரத் தொடங்கியது.. அழைப்புகளும்! பொதுவாக தெரியாத எண்களை நான் எடுப்பதே இல்லை!

Msg வந்த எண்ணிற்கு யார் நீங்கள் என்று கேட்டால்.. பெயரை சொல்லி நீங்க யாரு என்றார்கள். அதிர்ச்சியானது.. யாருன்னே தெரியாம எப்படி மெசேஜ் பண்றீங்க.. எனது எண் எப்படி கிடைத்தது என்று திட்டிவிட்டு ப்ளாக் செய்தேன். அலுவலகத்தில் இருக்கையில் அடுத்தடுத்து மெசேஜ்.. அழைப்புகள்.. கட் செய்தாலும் தொடர்ந்து கால் வந்தது. பின் ஒரு அழைப்பை எடுத்து “யார் நீ.. என் எண் எப்படி கிடைச்சுது என்றேன்.. எங்கு பார்த்தேன் என்று அவன் சொல்ல “ஏண்டா ஒரு பொண்ணோட நம்பர எவனாச்சும் லீக் பண்ணா உடனே அலைஞ்சுக்கிட்டு ஃபோன் பண்ணுவீங்களா.. உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா… “ என்று திட்டி வைத்து விட்டு.. இது எப்படி நடந்திருக்கும் என்று யோசித்தேன்.. ஓரிரு நண்பர்களிடம் பேசினேன்.. எப்படி எண்  பகிரப்படுகிறது என்று guess செய்தேன்… பார்ன் அல்லது பாலியல் அழைப்பிற்கான தளங்களில் எனது எண்ணை பகிர்ந்திருக்கிறார்கள்… வக்கிரம் பிடித்தவர்கள்..

 நேருக்கு நேர் மோதி அறிவால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்! ஆம்பிளை என்னும் திமிர்.. பெண்ணாகவும் இருக்கலாம்.. தெரியவில்லை! ஐடியை ரிப்போர்ட் செய்தாலும் தினம் பல ஃபேக் அகௌண்ட் தொடங்கி இதே வேலையை செய்கிறார்கள்.  ஆனால் இவர்களால் நாட்டை சீர்கெடுக்கும் அதிகார வர்க்கத்தையோ.. ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களையோ எதிர்த்து ஏதேனும் செய்ய இயலுமா?  நஞ்சு நஞ்சைத்தானே ஆராதிக்கும்! 

தொடர்ந்து எனது புகைப்படங்களின் கீழ் ஆபாச பதிவு. One night stand, night stayவா.. அடுத்து எவன் சிக்குனானோ தெரியல.. பல சைச பார்த்தவ.. இப்படியாக தினம் வெவ்வேறு ஐடிக்களில் இருந்து .. எனக்கு மன உளைச்சல் தருவதாக அவர்களுக்கு நினைப்பு! ஆனால் இது எதுவும் என்னை மசுருக்கு கூட தொந்தரவு செய்யாது!

ரிப்போர்ட் செய்துவிட்டு, ப்ளாக் செய்துவிட்டு என் வேலையை பார்க்கிறேன்!

இதன் மூலம் இவர்கள் அடையும் இன்பம் என்ன என்று தான் என் மனதில் ஓடுகிறது.. இத்தகைய மனநிலைக்கு ஒருவர் ஆளாகிறார் என்றால் இவர்கள் சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உண்மையில் நல்ல உறவுகள் அமையுமா? வாழ்வில் எதை சாதிப்பார்கள்?

இந்த வக்கிரம் பிடித்தவர்களைப் பொறுத்தவரை.. இரவு தான் நான் காமலீலையில் ஈடுபடுவேன்.. அதுவும் ஹோட்டலில் தான்! ஏனென்றால் என் புகைப்படத்திற்குப் பின் ஒரு திரைச்சீலை தெரிகிறது!  பிறகு வீக்கெண்ட் அவுட்டிங்.. ரிசார்ட் ஸ்டே.. ஆண்டி சர்வீஸ்.. இவ்வளவுதான் இவர்களின் வக்கிர அறிவு! 

பாலியல் தொழிலை சட்டமே தவறில்லை என்றபின்.. ஹோட்டலில் தான் அந்த சேவையை வழங்க வேண்டுமா என்ன?

சரக்கு, பண்டம், பெண் உடல் மீதான பாலியல் சுரண்டல்.. பெண் உடலை பணத்திற்கு விற்பனை செய்வதை சட்டபூர்வமாக்கக் கூடாது என்று எதிர்க்கும் ஒரு பெண்ணாக, சுயமரியாதை அதிகம் கொண்டவளாக என்னால் பணத்திற்காக எனது உடலை விற்பனை செய்ய இயலாது!

ஒருவேளை காதல்வயப்படலாம்… ஆனால் ஆண்வெறுப்பு மனநிலைக்கு தள்ளும் ஆண்களை கடந்து வந்த பின் காதல் மாயையில் விழுமளவுக்கு தற்போது நானில்லை!

உடல் தேவை.. நடுவிரல் உள்ளது!  என்னை விட எனக்கு இன்பம் வழங்கிட யாரால் முடியும்? அறிவுத் தேடலில், சுயத்தைக் காப்பதில் உச்சம் அடையும் என் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளுவது அத்தனை எளிதல்ல.. புரிந்துகொண்ட நபரோடு வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது!  

அதையும் மீறி ஒருவேளை என் மனதை யாரேனும் கவர்ந்தால்.. அது எனது உடல்.. எனது உரிமை! என்று செயல்படும் அறிவுத் தெளிவு எனக்கு உண்டு! யாரையும் துன்புறுத்தாமல் எனது செயல்பாடுகளை வைத்துக்கொள்ளும் அறமும் உண்டு! I am not only an intellectually independent woman but definitely a sexually independent woman!

சமூக அமைப்புருவாக்கம் மற்றும் அதன் கருத்தியல்கள் பற்றி அறிந்தவர்களை எந்த விதத்திலும் யாரும் முட்டாளாக்க இயலாது!

ஒரு பெண்ணை எல்லா நேரமும் பாலியல் ரீதியாக அவதூறு செய்வதும்.. அவளது புகைப்படத்தை  ஆபாச பக்கங்களில் போடுவதும்.. ஃபேக் ப்ரொஃபைல் மூலம் ஆண்களுக்கு அழைப்பு விடுப்பதும் எதனால் நடக்கிறது? ஆணாதிக்க வக்கிர சமூகத்தின் வளர்ப்பினால் நடக்கிறது!

ஒழுக்கமற்ற சமத்துவமற்ற சமூகம் தான் ஒழுக்கமற்ற, ஆதிக்க மனநிலை கொண்ட மனிதர்களை உருவாக்குகிறது!

வக்கிரம் பிடித்த சமூகம் தான் வக்கிர மனிதர்களை உருவாக்குகிறது!

இது ஒரு வக்கிரம் பிடித்த சமூகம்! அதன் விளைவுதான் இத்தகைய மனிதர்கள்!

இன்றைக்கு எனக்கு நேர்வது நாளை இன்னொரு பெண்ணுக்கு நேரும்!

சொல்ல இயலாது! என்னை துன்புறுத்தி மகிழ நினைக்கும் அந்த நபரின் பிள்ளைக்கோ, மனைவிக்கோ, சகோதரிகளுக்கோ கூட இத்தகைய துன்புறுத்தல்கள் நிகழலாம்!

என்னை போன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு இருப்பதால் அதை நாங்கள் கடந்து செல்கிறோம்! விழிப்புணர்வு இல்லாத பெண்களின் நிலை? பென்கள் அடங்கி வீட்டிற்குள்ளே இருங்கள்! ஆணாதிக்க கட்டுப்பாட்டிற்கு அடங்கி இருங்கள், சமூக வலைதலங்களில் ஏன் இருக்கிறீர்கள்…  என்பதுதானே பெரும்பாலரின் பதிலாக இருக்க முடியும்!

10 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தாலும்.. எந்த  content கவனத்தைப் பெறுகிறது? அந்த வக்கிரவான்கள் பேசுகிறார்கள் “attention seeking” .. அந்த வக்கிர மண்டைகளுக்கு உடல் தொடர்பான பதிவுகள் தான் தென்படுகிறது! யாரிடம் பிரச்சினை உள்ளது?

பொம்பள பொம்பள என்று சொல்லி ஆண்களுக்கு அதிகாரம் வழங்கும் சமூகமே… விசத்தை பரப்புவது நீங்கள்.. களையெடுப்பது நாங்கள்.. அதில் அவ்வப்போது காயங்கள் ஏற்படத்தான் செய்கிறது. விஷச் செடியின் வீரியம் அப்படி! முடிந்தவரை  முற்போக்காளர்கள் அதை களைய முற்படுகிறார்கள். அதில் நீங்களும் கைகோர்க்கவில்லையெனில்.. நாளை உங்களின் பிள்ளைகளுக்கு இந்த சமூகம் மிகவும் ஆபத்தான, வக்கிரமான, கொடூரமான நிலைமைகளையே மீதம் வைத்திருக்கும்! ஏற்கனவே நாம் நம் மகள்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருங்கள்! பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பதைப் போல்….


Sep 11, 2022

சாதி வெறி சாதி வெறி என்று கூவிக்கொண்டு திரிபவர்களுக்கு

 ரங்கநாயகம்மா அம்பேத்கரை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் ஒரு புத்தகத்தை தான் எழுதியுள்ளாரா? கொற்றவையாகிய நானும் அதை மட்டும் தான் மொழிபெயர்த்துள்ளேனா?

இராமாயணம் விஷ விருட்சம், இதுதான் மகாபாரதம், வேதங்களில் என்ன இருக்கிறது என்று அனைத்தையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் விமர்சித்துள்ளார்.

இதுதவிர குழந்தைகளுக்கான பொருளாதாரம், மார்க்சின் மூலதனத்திற்கு அறிமுகம். இந்திய தத்துவங்கள் கபிலர் தொடர்ங்கி மார்க்ஸ் ஏங்கல்ஸ் வரை ஒவ்வொருவரின் தத்துவங்களையும் அறிமுகம் செய்கிறார். இதுதவிர நிறைய புத்தகங்கள், கட்டுரைகள்!

அம்பேத்கர் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் ஆய்வில் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கிறார். ஒரு மார்க்சியர் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். காலச் சூழலில் நான் கண்ட கள அரசியலின் விளைவாக அந்த புத்தகத்தை நான் மொழிபெயர்த்தேன். ஆனால் புத்தகம் வந்த நாள் முதல் இங்கே அரங்கேறிய அராஜகமும், தாக்குதல்களும், அவதூறுகளும், ஆபாசப் பேச்சுகளும் கொஞ்ச நஞ்சமல்ல! மனம் துவண்டு போவதும், மீண்டு எழுவதுமாக இந்த 5,6 வருடங்கள் கழிந்தன. மேலும் மேலும் பலமாகத் தான் எழுகிறேனே ஒழிய, சாய்க்க இயலாது. மார்க்சியம் அந்த அறிவுத் தெளிவையும், துணிவையும் வழங்கி உள்ளது.

ரங்கநாயகம்மாவின் இராமாயணம் ஒரு விச விருட்சம் நூலையும் நான் மொழிபெயர்த்து வருகிறேன். அக்கப்போர்களின் காரணமாக மிகவும் தாமதமாகிறது.

குழந்தைகளுக்கான பொருளாதாரக் கல்வி மொழிபெயர்ப்பு முடிந்து வடிவமைப்பு காரணமாக முடங்கி, தற்போது வெளிவரும் நிலையில் இருக்கிறது!

உரையாடல்னு போட்டுட்டு கமெண்ட்ஸ க்ளோஸ் பண்ணிடுறோமாம்! இவங்க தரப்பு மட்டும் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டிருக்காங்க போல!

5 வருடங்களாக சமூக ஊடக தளத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். அதனை தொகுத்து வந்த நூல் தான் சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் தொடரும் விவாதம்! சாதி, வர்க்கம், கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்கள் செய்த சரி என்ன, தவறு என்ன? பெரியார் அம்பேத்கர் பங்களிப்பு என்ன, சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத் திட்டம் என்று எல்லாவற்றுக்கும் பதில் உள்ளது. ஆனால் இந்த புத்தகம் பற்றி வாயே திறக்கவில்லை அந்த அராஜக கும்பல்.

தலைப்பில் அம்பேத்கர் போதாது என்று உள்ளது.

எப்படி நீ எங்க தலைவர விமர்சிக்கலாம் என்று சாதிக் கட்சிகளில் எப்படி கொந்தளிப்பார்களோ, அப்படித்தான் இவர்களும் கொந்தளித்துக் கொண்டு மிகவும் மோசமாக பேசினார்கள். பேசி வருகிறார்கள். இதையெல்லாம் எவ்வளவோ பார்த்துட்டோம்.

கண்டபடி பேசியும் பொருமையாகவே பதில் சொல்லி வந்தும், ஏதோ ஒரு கணத்தில் அவர்கள் பாணியில் இறங்கி பதில் சொன்ன உடன் வழக்கும் தொடுத்தார்கள். ஒரு stationல மட்டும் இல்ல, பல ஊர்களில் புகார் கொடுத்தார்கள் வசுமித்ர மீது. இதுதான் இவர்கள் உரையாடல் நடத்தும் இலட்சணம்.

சிபிஎம்மை வைத்தே வழக்கு போட வைத்தது தான் இவர்கள் சாமர்த்தியம் ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே இவங்கள ஏத்துக்கல என்ற உணர்வை ஏற்படுத்துவது. அதன் மூலம் எங்களை போலிகள் என்று கட்டமைப்பது! இந்த அரசியல் எல்லாம் சாதாரண மக்களுக்கு புரியாது!  ஆனால் அது தவறு என்று இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்பு அறிக்கை வெளியிட்டது!  கருத்துச் சுதந்திரம், உரையாடல் என்று பேச இந்த பிரிவுக்கு தகுதி இருக்கிறத?

உணர்ச்சிகரமான பேச்சுகள் மூலம் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் ரசிகர்களும் ரசிக மனோபாவத்தில் வன்மத்தைக் கொட்டிக் கொண்டிருப்பார்கள். சாதிக்கட்சி தொண்டர்கள் போல்!

இவர்களை தூண்டி விட்டவர்களுக்கெல்லாம் அப்பவே பதில் சொல்லியாச்சு! அந்த தூண்டுகோல்கள் யாரும் நேரில் பார்த்தால் உரையாட வருவதே இல்லை! அடுத்தடுத்து வசுமித்ரவும் 2 புத்தகங்கள் போட்டு உரையாடிக் கொண்டே தான் இருக்கிறார். அவர் முகநூலில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார். ஆபாசமாக பேசுபவர்களையும் பொருட்படுத்தி.. நானாவது முடக்கிவிட்டு போய்விடுவேன்.

ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், உரையாடல்னு பேசுனா மட்டும் போதாது, அதை கடைபிடிக்கனும்! “அடையாளச் சிக்கல்” அனுமதிக்காது! அதிலிருந்து மீள்வதற்கு வர்க்க உணர்வைப் பெற வேண்டும். அதற்கு மார்க்சியம் அவசியம் தேவை!

ஒண்ணு மார்க்சியத்த படிங்க.. இல்லையா 5 வருஷமா எழுதிப் போட்டிருக்குறதை எல்லாம் தேடிப் படிங்க..

அடுத்தும் புத்தகங்கள் வந்துட்டே தான் இருக்கும்! என்ன முத்திரை வேணா குத்துங்க.. வழக்கு கூட தொடுத்துக்கோங்க.. முதலாளித்துவ அடையாள அரசியலுக்கு எதிரான எங்கள் போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

டிவிட்டர்ல உக்காந்த நக்கல் அடிச்சுட்டிருக்கவங்களையெல்லாம் பொருட்படுத்தி பதில் சொன்னாதான் உரையாடல்னு எந்த சட்டம் சொல்லுது. உங்க தலைவர்கள் அப்படிதான் எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்காங்களா? உங்க immaturityku ஒரு அளவே இல்லையா.

அம்பேத்கர் விமர்சனம் மட்டும் தான் நான் எழுதியும், பேசியும் உள்ளேனா? பெண்கள் விடுதலை, இஸ்லாமியர் மீதான அடக்குமுறை, சிஏஏ, அரசின், முதலாளித்துவத்தின், சாதி ஆதிக்கம், ஆணவக்கொலை என்று  எத்தனையோ பிரச்சினைகள் குறித்துப் பேசிக் கொண்டு தான இருக்கேன். அப்ப சாதிவெறியரா தெரியல போல!

முத்தையா படத்த  பாராட்டுறனாம், உயர்த்திப் பிடிக்குறனாம். எங்க உயர்த்திப் பிடிச்சிருக்கேன். வசு நடிச்சதுக்கு வாழ்த்து சொல்லி ஒரு டிவீட் .. பிறக்கு அப்பா மகன் பகைய பேசிருக்குன்னு ஒரு டீவீட் பண்ணதுக்கு இம்புட்டு குதிப்பு! ஆனா சு.வெங்கடேசன் அதே மேடைல, ஆடியோ ரிலீஸ்ல கலந்துகிட்டாரு. சூர்யா அடுத்து அவரோடு ஏதோ படம் பண்ணப் போறதா சொல்றாரு… அப்ப சு. வெங்கடேசனும் சாதி வெறியரா?

முத்தையா படத்த மட்டும் தான் பாராட்டுறேனா? உங்க அல்பத்தனத்துக்கு அளவே இல்லையா? ஊரே பாராட்டிய சுழல் பற்றிய எனது பார்வை வேறாக இருந்தது. ஏன் இன்னைக்கு ரஞ்சித்துக்கு ஆதரவா பேசிட்டு இருக்குற லெனின் பாரதியோட மேற்குத் தொடர்ச்சி மலைய எப்படி தூக்கிட்டு சுத்துனோம். கம்யூனிஸ்ட்களை தப்பா காட்டிருக்க என்று அவரை எதிர்த்தபோது, “சுயவிமர்சனமா” எடுத்துக்குவோம் தோழர்னு சொன்னதும் இந்த கொற்றவை தான்! வரலாறு தெரியாம எதையாச்சும் உருட்டிட்டு திரியுறது!

காலா படம் வந்த போது தாக்குதல் தொடுத்தவர்களுக்கு எதிராக பேசியவர்களில் நானும் ஒருவர். அதற்காக ரஞ்சித்தின் அரசியல் மற்றும் இடதுசாரி அரசியல் பார்வை பற்றிய விமரசனத்தை வைக்கவே கூடாது என்பது என்ன மாதிரியான கருத்து சுதந்திரம்? பாராட்டும் போது நாங்க நட்பு, விமர்சனம் பண்ணா சாதி வெறியர்! காமெடியா இல்ல! ரஞ்சித் தான் ஒட்டுமொத்த தலித்துகளின் பிரதிநிதியா என்ன?

தலித் மக்களுக்கு எதிராக எங்கே பதிவு செய்திருக்கிறோம். தத்துவார்த்த விவாத தளத்தில் அறிவுஜீவியான அம்பேத்கரை அறிவுத் தளத்தில் அவரது கண்ணோட்டங்கள், ஆய்வுகளைத் தானே விமர்சிக்கிறோம்! தத்துவார்த்த விவாதங்கள் எப்படி நடக்கும் என்று ஒன்று தெரிந்திருந்தால் அதை எப்படி அனுக வேண்டும் என்று தெரியும். உலகாயதம் என்கிற நூலையாவது வாங்கிப் படியுங்கள். மேலும் அம்பேத்கரை நாங்கள் மட்டும் தான் விமர்சித்துள்ளோமா? இதுகாரும் வந்துள்ள நூல்களைத் தேடிப் படியுங்கள்.

அவ்வளவு ஏன், என்னோட ரெண்டாவது புக்கையாச்சும் படிச்சுட்டு பதில் சொல்லுங்களேன்!

சீதா ராமம் படத்த பாராட்டிட்டேனாம், உடனே நான் ஆர்.எஸ்.எஸ், சாதிவெறி! அந்த போஸ்டுக்கு கீழையே ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஷேர் பண்ணிருக்கேன் அதை தேடிப் பாருங்க.. நான் ஒரு படத்துல  சில விசயங்களை வேற மாதிரி பார்க்குறேன். ஒருவேளை சில விசயங்கள நான் பார்க்கத் தவறி இருந்தா சுட்டிக் காட்டுனா கத்துக்கப் போறேன்.. உடனே ஓடி வரது ஒரு ரப்பர் ஸ்டாம்ப தூக்கிட்டு! ஏன்னா இவங்களுக்கு இவங்க அடையாளத்த நிறுவிட்டே இருக்க யாரையாச்சும் திட்டிட்டே இருக்கனும்! குறிப்பா இவங்க அரசியல அம்பலப்படுத்துறவங்கள துடைத்தழிக்கனும்.. சாதிவெறி கட்சிகள் போல், இந்தப் பக்கமும் ஒரு கூட்டம் அப்படித்தான் இருக்கு!

தோழர் திருமா கேட்ட மாதிரி “அப்ப யாரோட தான்யா வேலை செய்யப் போறீங்க”

-            

 அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாமல் சாதியரீதியாக தாக்குதல் தொடுக்கும் நபர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் சாதியபுத்தி இருக்கிறது என்கிறார். இதை Reverse Casteism என்பார்கள். நீங்கள் செய்வதும் இதுதான்! ஆனால் அது காலாவதியாகிப் போன எதிர்வினைகீறல் விழுந்த ரெக்கார்ட்! – 5 வருஷ பதிவுகள தேடிப் படிங்க!

 ஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை

http://saavinudhadugal.blogspot.com/2016/08/blog-post.html

புத்தகத்தின் கருத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ஆராயந்தார்கள்https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02z69rxUURAK5rcvfKUsiwHx4ummXCxH1Aa92fEM8iAEvw8MpVjx4g87hkVsyc2gicl

 இராமாயணம் ஒரு விஷ விருட்சம் - ரங்கநாயகம்மா

 http://saavinudhadugal.blogspot.com/2020/03/blog-post_28.html

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02itVyaLVrSDhrb4Tihe5WRxZy2U5MSvd44Bz2vdEKin7PPiMgd4gHAUg791DiQXrFl

 

 

Sep 9, 2022

வன்மத்தை ஊட்டி வளர்க்கப்பட்ட தோழமைகளின் கேள்வியும்! எனது பதில்களும்

கேள்வி  1“என்ன இருந்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மேல கோவம் இருக்கதான் செய்துல்ல தோழர்

5,6 வருஷமா பதில் சொல்லிட்டுதான் இருக்கோம்! மறுபடியும் சொல்றேன்!

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பாசிசத் தனமாக வசுமித்ர மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்  கீழ் புகார் கொடுத்திருந்தாலும், தலித் மக்களுக்கான பாதுகாப்பிற்கான ஒரு சட்டத்தை ஒரு அடையாள அரசியல் கூட்டம் தங்களுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்ள தவறாக பயன்படுத்தி இருந்தாலும், நானும் வசுவும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ஆதரவாளர்களே! அன்றும், இன்றும்! சாதி ஒழியும் வரை ஆதரவாளர்களாகவே இருப்போம்! அதன் கீழ் நாங்கள் சிறைபட வேண்டிய சூழல் வந்தாலும் சிறையில் இருந்தபடி அதற்கு ஆதரவாகவே இருப்போம்! தலித் உழைக்கும் மக்கள் விடுதலைக்கும் சேர்த்து வழி வகுக்கும் மார்க்சியத்தின் தேவை குறித்து எழுதிக் கொண்டே தான் இருப்போம்!

கேள்வி 2: அம்பேத்கரிஸ்ட்கள் மேல ஏன் இவ்ளோ வெறுப்பு!

பதில்: அம்பேத்கரியம் என்றால் என்ன?

உங்களை அடையாள அரசியலில் மூளை சலவை செய்து வழிநடத்தும் அறிவுஜீவிகளை நோக்கி வைத்த கேள்விகளுக்கு  இன்னும் பதில் வரவில்லை! மேலும் இந்த கேள்விக்கு எனது இரண்டு நூல்களில், பல முகநூல் பதிவுகளில் பதில் உள்ளது!

அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட், தமிழ்தேசியம் என்கிற பெயரில் பரப்பப்படும் அடையாள அரசியலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! அம்பேத்கரை அல்ல, பெரியாரை அல்ல, தமிழ் தேசிய உணர்வு உள்ளிட்ட தேசிய இன விடுதலைப் போராட்டங்களை அல்ல  என்பதற்கு போதுமான விளக்கங்கள் கொடுத்தாயிற்று! விமர்சனம் இன்றி ஏற்றுக்கொண்டால் தான் ஞானஸ்தானம் கிடைக்குமெனில், அது தேவையே இல்லை!

3.  உங்களுக்கு தனிப்பட்ட வன்மம்!

உங்களுக்கு இருப்பதை ஏன் எங்களுக்கு இருப்பதாக சொல்கிறீர்கள்!

உண்மையில் வசு மீது வழக்கு தொடுத்தது சிபிஎம் என்னும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி! இதற்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்பது உலகறிந்ததே. கம்யூனிஸ்ட் கட்சியை வைத்து வழக்கு தொடுக்கும் முதலாளித்துவ பலமும், புத்திசாலித்தனமும் படைத்தவர்கள் அவர்கள்!

ஆனால் இதற்காக நாங்கள் கம்யூனிச அரசியல் மீதோ, மார்க்சியத்தின் மீதோ வன்மத்தை வளர்த்துக்கொள்ளவில்லை, சிபிஎம்மையும் வெறுக்கவில்லை.

இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் அவர்கள் கருத்துச் சுதந்திரத்தைக் கைவிட்ட ஜனநாயகமற்ற போக்கை கடுமையாக விமர்சிக்கிறோம். விமர்சித்துக் கொண்டே இருப்போம்! சிபிஎம் மட்டுமல்ல, எந்த ஒரு இயக்கத்தோடும் குறிப்பிட்ட விசயத்தில் உடன்பட இயலாத அம்சங்களை விமர்சித்துக் கொண்டுதான் இருப்போம். இருக்கிறார்கள்!

சிபிஎம் தோழர்களும், மற்ற கம்யூனிஸ்ட் தோழர்களும், பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட்களில் சிலரும் அதே அரசியல் முதிர்ச்சியோடு உரையாடுபவர்களாக இருக்கிறார்கள். முதிர்ச்சியற்று பேசுபவர்களை முடக்கிவிடுகிறேன்.

ஒவ்வொரு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும், தோழர்களிடையேயும் கூட பல கருத்து முரண்பாடுகள் இருக்கும். அதை உள்ளேயும் வெளியேயும்உரையாடிக் கொண்டே இருப்பார்கள்”. அதற்கு விமர்சனம் சுய விமர்சனம் என்று பெயர்! ஆனால் முதன்மை எதிரி யார், இலக்கு என்ன அதை புரிந்துகொள்ள மார்க்சியம் என்னும் வழிகாட்டியின் வளமை, உழைக்கும் வர்க்க ஒற்றுமை, பொதுவுடைமை சமுதாயம் படைத்தல் என்பதில் தான் அனைவரும் ஐக்கியப்படுகிறோம்!

விமர்சனம், முரண்பாடு என்பதற்கு இடதுசாரிகளிடையே உள்ள அனுகுமுறையை அறிந்தால் வன்மம், சாதி வெறி, நீங்களே பிரிஞ்சு இருக்கீங்க மொத நீங்க ஒண்ணு சேருங்க என்கிற உளறல்கள் வராது!

4.  EWS ஆதரவாளர்கள் தான நீங்க?

நான் எப்ப ஆதரிச்சேன்! ஆதரிச்சது ஒரு குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் கட்சி. அதற்கு சாதிச் சாயம் பூசுவதுதான் அபத்தம்!

இடஒதுக்கீட்டை எப்படி பார்க்க வேண்டும் என்று மார்க்சிய அனுகுமுறை உள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் சில திட்டங்களை முன் வைக்கும்! அதில் நமக்கு உடன்பாடு இருக்கலாம், மறுப்பும் இருக்கலாம்! ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு பிரச்சினையும் எப்படி அனுகுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள் என்பது புரிய வேண்டுமெனில் முதலில் மார்க்சியம் படிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் குறைந்தபட்சம் உரையாட வேண்டும்!

சரி.. நான் EWS ஆதரவாளரா? என்றால் பிஜேபி அரசு  பிரித்தாளும் சூழ்ச்சியுடன் கொண்டுவந்த இந்த திட்டத்தை நான் எதிர்க்கிறேன்! ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அதை ஆதரித்ததை நான் ஏற்கவில்லை!

இதை கட்சியில் இருந்தாலும் சொல்வதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கும் இயக்கம் தான் கம்யூனிஸ்ட் இயக்கம்!

இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களும் நாங்கள் அல்ல! இடஒதுக்கீடும், அதை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொள்ளும் சாதுர்யம் குறித்தும் முன்வைக்கப்படும் உரையாடலை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்! எனது இரண்டாம் நூலில்! அதற்காக இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்று பொருள் அல்ல! இடஒதுக்கீடு ஒரு தர்காலிக நிவாரணிதான் என்று அம்பேத்கர் சொன்னதை எப்படி புரிந்துகொள்வீர்கள்? முதலில் மார்க்சியத்தை, அரசியல் பொருளாதாரத்தை படிங்க! அதை படித்தால் இதையெல்லாம் எப்படி அனுக வேண்டும் என்கிற புரிதல் ஏற்படும்! ஒவ்வொன்றிலும் உள்ள சாதகம் என்ன பாதகம் என்ன என்று ஆய்ந்தறிய முடியும்! அதை முன் வைத்துத் தான் விவாதிக்க வேண்டுமே ஒழிய, இடதுசாரிகளுக்கு சாதியச் சாயம் பூசுவது அறிவார்ந்த செயல்பாடு கிடையாது!

ஒரு குறிப்பிட்ட திட்டத்தை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கின்றன, மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வாசிப்பும், அவர்களோடு உரையாடல் அனுபவமும் இருந்தால் மட்டுமே புரியும்!

கம்யூனிஸ்ட்கள் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்கள் எது செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

கண்டிப்பாக எந்த கம்யூனிஸ்டும் அப்படி சொல்ல மாட்டார். ஆனால் தத்துவார்த்த அனுகுமுறை சிக்கலை, சாதி, ஆணாதிக்கம், சுயநலம், தரகர்கள் என்பது போல் அவதூறு செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! சாதி அடிப்படையில் கம்யூனிஸ்ட்களை அனுகுவது மிகவும் மோசமான சாதியவாதம்! அவர்களின் ஆய்வுமுறையில் உள்ள போதாமை என்று பேசுவதே அறிவார்ந்த செயல்பாடு! ஆனால் அது பற்றியும் கட்சிக்குள்ளேயே தோழமைகள் விவாதிதுக் கொண்டுதான் இருப்பார்கள். மறுபரிசீலனை செய்து அறிக்கைகள் வெளியிடுவார்கள். இப்படி ஒரு தொடர் செயல்பாடு கம்யூனிஸ்ட்களிடம் உண்டு! (இது எனது புரிதல்). 

கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்திரிப்பது மற்ற சாதி வாரிக் கட்சிகளின் பிரிவினை போல் அல்ல! அது தத்துவார்த்த அடிப்படையில்! இந்திய சமூகம், உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய ஆய்வுமுறை தொடங்கி, புரட்சிக்கான செயல்திட்டத்தை வகுப்பதில் உள்ள நட்பு முரன்பாடு அது!

மார்க்சியம் தரும் வளமைதான் இது! ஒரு சமூக அறிவியல் ஆய்வுக் கருவியை ஒவ்வொருவரும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி, கண்டுபிடிப்பினை முன் வைத்து, வேலைத்திட்டத்தை வழங்க முடியும்! அதற்கு சாதிச் சாயம் பூசுவது அறியாமை அல்லது வன்மம்! சொல்லப் போனால் அதற்கொரு வர்க்கத் தன்மை உண்டு - அதுதான் முதலாளித்துவ சார்பு!

அனைத்து கம்யூனிஸ்டுகளின் இலக்கும் உழைப்புச் சுரண்டல் அற்ற, ஒடுக்குமுறைக் இல்லாத, படிநிலை அமைப்புகள் இல்லாத ஒரு பொன்னுலகை படைப்பதுதான்! அதற்கான வழிமுறைகளில் பாதைகள் வேறுபடலாம், இலக்கு ஒன்று தான்! தவறுகள் இழைக்கலாம்! அந்த தவறுகளை சரியாக விமர்சிக்க குறைந்தபட்ச மார்க்சிய வாசிப்பு வேண்டும்.

அப்ப ஆளுக்கு ஒண்ணு சொல்லிட்டிருக்கீங்க, உங்களுக்கே புரிதல் இல்லன்னு தான அர்த்தம்! இதை சொன்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது. அப்படி இல்லை! இதற்கு விளக்கம் எழுதினால் இன்னும் நீளும்!

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலில் ஒரு விளக்கம் உள்ளது. பிறகு அதனை பகிர்கிறேன்.

இறுதியாக அம்பேத்கரியம், பெரியாரியம் என்பது குறித்த மார்க்சிய அனுகுமுறை புரிய வேண்டுமெனில் முதலில் மார்க்சியத்தைப் படியுங்கள். அவற்றின் போதாமை குறித்த மார்க்சிய விமர்சனங்களை படியுங்கள்! எங்களுக்கு முன்பே எழுதிய ஆசான்கள் உள்ளனர்!

 5.  ஆமா இத்தனை வருஷமா என்னத்த சாதிச்சுட்டீங்க, உங்களால புரட்சி வந்துடுச்சா? சாதி ஒழிஞ்சுடுச்சா?

புரட்சி என்றால் என்ன, சாதி என்றால் என்ன? வர்க்கம் என்றால் என்ன? வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? சாதியும் வர்க்கமும் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது. அதற்காக கம்யூனிஸ்டுகள் செய்தது என்ன, செய்வது என்ன, செய்யப் போவது என்ன எல்லாவற்றுக்கும் பதில்கள் உண்டு. புத்தகங்களை தேடிப் படிங்க! ஒவ்வொரு படிநிலையும் எப்போது, எப்படி ஒழியும் என்பதற்கு எல்லாம் விளக்கங்கள் உள்ளன!

படிக்காமையே மயக்க ஊசி போட்டுட்டு இருக்குற ஒரு சிலரின் அவதூறு பிரச்சாரங்களை வைத்து பேசாதீர்கள்!

நம்மையெல்லாம் பிரித்தாளக் கூடிய சூட்சமங்களை அடையாளங்கள் வழி அரங்கேற்றுவது முதலாளித்துவம்! அதற்கு சிலர் துணை போகின்றனர். அது புரிய மார்க்சியம் படிங்க. கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு உரையாடுங்க! தலித்தியம் மட்டுமில்லை பெண்ணியம் என்று சொல்லப்படும் ‘இயத்தையும்’ நான் ஏற்பதில்லை! அப்ப இது என்ன வெறி! ஆணாதிக்க வெறியா? அடையாள அரசியல் என்றால் என்னவென்று வாசிக்கவும். 

பி.கு: உழைக்கும் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட எந்த ஒரு பாதுகாப்பு திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! இன்னும் சொல்லப் போனால் அம்பேத்கரை விமர்சனமின்றி புகழ்ந்து கொண்டே இருந்தால் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகம்!

அனுகூலங்களை விட உன்னதமானது உழைக்கும் வர்க்க விடுதலை!  ஏனென்றால் என் விடுதலையும் அதில் தான் அடங்கியுள்ளது! ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தரும் அனுகூலங்களைப் பெற்றுக் கொண்டால் நான் வெறும் அடிமை! உழைக்கும் வர்க்கம் புரட்சியின் வழியில் உண்டாக்கப் போகும் பொதுவுடைமை சமூகத்தில் நான் (நான் இல்லையெனில் அடுத்த தலைமுறை) ஒரு சுதந்திர மனுஷியாக, சுய மரியாதையுடன் வாழ முடியும்! அது தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இருக்க இயலாது! அதற்கு வழி காட்டும் மார்க்சிய சித்தாந்த்ததையும், கம்யூனிஸ்ட் அரசியலையும் என்றென்றும் உயர்த்திப் பிடிப்பேன். கம்யூனிஸ்ட் அமைப்புகளில் உள்ள ஒரு சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு முடக்கப் பார்த்தாலும்!  

அப்படின்னா எங்களுக்கு அதெல்லாம் அக்கறை இல்லன்னு சொல்றீங்களா என்று பொங்காமல், உழைக்கும் வர்க்கம், வர்க்கப் போராட்டம்  என்பதன் பொருள் புரிய மார்க்சியம் படிங்க!

அன்புடன்

கொற்றவை, 10.9.2022


அனுகூலம் என்பது - கிடைக்கக் கூடிய ஆதரவு, புகழ்ச்சி, அரவணைப்பு, சாதி மறுப்பாளர் என்கிற அக்மார்க் சான்றிதழ் என்னும் பொருளில்! அதுக்கும் எதாச்சும் ஒரு வன்மமான பொருளை எடுத்துட்டு வராதீங்க! இப்படி வெறுப்பையும், வழக்கையும் எதிர்கொள்ள வேண்டி இருக்காது என்னும் பொருள்