Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Jul 2, 2023

பொருளாதார விஷ ஊசி - எச்சரிக்கை


 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மிக சாமர்த்தியமாக சமூகத்தில் விஷ ஊசி ஏற்றுவார்கள். குறிப்பாக தாராளவாத (academic) அறிவுஜீவிகள்! அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்கள் அவர்கள். அவர்கள் ஏற்றுவது விஷ ஊசி என்று தெரிய நாம் மார்க்சியம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூலதனத்திற்கு அறிமுகம் என்னும் நூலையாவது படித்திருக்க வேண்டும்.

 மூலதன இருப்பையும், சுற்றோட்டத்தையும், அடுத்தவரின் உழைப்பை அபகரித்து இயங்கும் உற்பத்திமுறையை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முதலாளித்துவமானது வண்ண வண்ணமாக, புதிய புதிய சீர்திருத்தங்களை முன் வைத்து மக்களை தன் வயப்படுத்த முயலும். அதில் சிலர் நேரடியாக முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் என்று தெரியவரும், சிலரது எழுத்துக்கள் முதலாளித்துவ / மூலதன எதிர்ப்பு போலவும், மார்க்ஸை விட இவர் சிறந்த வழிமுறைகளை சொல்கிறார். பொருளாதார நிர்ணயவாதமாக இல்லாமல் ”ஜனநாயக சோஷலிசம்” பேசுகிறார் என்றெல்லாம் முன்வைப்பார்கள். மார்க்ஸைப் படிக்காதது போலவே நடிப்பார்கள். மார்க்ஸ் சொன்ன பிரச்சினைகளை இவர்கள் வேறு கலைச்சொற்கள் மூலம் வியாக்கியானம் செய்து, தீர்வை மூலதனத்திற்கு சாதகமாக வைப்பார்கள்.

கொச்சையான முதலீட்டிய எதிர்ப்பாளர்” அல்ல என்ற சொல்லாடல்களில் உள்ளது விஷம்! (இதுல தமிழ்ல terminology correction வேற)…

 மார்க்ஸ் எதிர்த்தது மூலதனத்தையல்ல… தனியுடைமை உற்பத்தி முறையை அதன் விளைவான சமூக-அரசியல்-பொருளாதார அமைப்பை. இதுவெல்லாம் புரிய கண்டிப்பாக மார்க்சியம் படிக்க வேண்டும்.

 பொதுவாக (98%) முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் பொருளாதாரம் என்பதை தனித்ததொரு entityயாக காண்பார்கள். ஆனால் மார்க்ஸ் பொருளாதாரம் என்பதை எந்த பொருளில் சொல்கிறார் என்பதில் தான் அது சமூக விஞ்ஞானமாக இருக்கிறது.

இத்தகையவர்கள் பிரச்சினைக்குரிய அல்லது அநியாயமாக கட்டி எழுப்பப்பட்ட ஆபத்தான கட்டிடத்தை தகர்ப்பதை விட்டுவிட்டு விரிசல்களுக்கு எப்படி பூச்சு வேலை பார்க்கலாம் என்று Capitalistic economic engineering வேலை பார்ப்பார்கள், அதாவது இலாபம் என்னும் தேவைக்காக உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி இயங்கும் அநியாயமான உற்பத்தி முறையை எதிர்க்காமல் விநியோகத்தை எப்படி நியாயமாக செய்யலாம் என்னும் சாமர்த்தியவாதமது.

 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் உழைப்புச் சுரண்டல் பற்றி பேச மாட்டார்கள், அல்லது அதை சரி செய்ய இதை செய்யலாம், அதை செய்யலாம் என்று நாய்க்கு எலும்புத்துண்டை எப்படி, எந்த விகிதாச்சாரத்தில் போடலாம் என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள். மார்க்ஸை முழுமையாக படிக்காமல் அல்லது படித்தாலும் வர்க்க உணர்வால் வளர்ச்சி, உயர்வு, “ஜனநாயகம்” (உண்மையில் அது போலி ஜனநாயகவாதம்) ஆகிய “இலட்சியவாத” மனம் கொண்டவர்களால் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. யாரும் இங்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, ஆனால் உழைப்புச் சுரண்டல் மிக்க பொருளாதார அமைப்பை ஏற்பதென்பது உண்மையில் மானுடத்திற்கு செய்யும் துரோகம்.

மூலதனத்திற்கு வரி போடுவது, கூலியை ஏற்றிக் கொடுப்பது, தொழிலாளர் நலத் திட்டங்களை அறிவிப்பதென்று வகை வகையாக ஆலோசனை வழங்குவார்கள்…. ஆனால் இது எதுவுமே தனியுடைமை உற்பத்தி முறையை, அடுத்தவர் உழைப்பில் நடக்கும் செல்வக் குவிப்பையும், அதன் விளைவான படிநிலை சமூக அமைப்பின் வன்முறையையும் (சாதி உள்ளிட்ட அமைப்பு) தடுக்கப் போவதில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையில் சூழலியல் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற பரிந்துரையெல்லாம் நகைச்சுவையானது.. லாபத்துக்காக மனுசங்க ரத்ததையே உறிஞ்ச தயாரா இருக்குற காட்டேறிகிட்ட உறிஞ்சுன ரத்தத்தை அப்படியே ராவா நிலத்துல துப்பாத.. மரம் செத்துப் போய்டும், சுத்திகரிச்சு துப்புன்னு சொல்ல சொல்ற மாதிரி இருக்கு!

மூலதனம் (முதலீட்டிய மண்ணாங்கட்டி) என்பது வெறும் பணம் தொடர்பானது மட்டுமல்ல அது நிலம், வளம், உற்பத்தி சாதனங்கள், உழைப்பளர்களின் உழைப்புச் சக்தி உள்ளிட்ட அனைத்தும் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதற்கு ஏற்றவாறு தான் சமூக அமைப்புகளும், அரசு இயந்திரமும், கட்டுப்பாடு அம்சங்களும் தோன்றும். இவை இரண்டையும் பிரிக்கவே இயலாது என்பதைத்தான் மார்க்ஸ் மிக அழகாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார். (லெனினின் அரசும் புரட்சியுமாச்சம் படிக்கனும்). வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்கையில் அந்த அரசிடம் மன்றாடி மன்றாடி, சீர்திருத்தங்களை முன் வைத்து என்ன கிடைக்கும்? எலும்புத் துண்டு! அது போதுமா? அந்த இத்துப் போன எலும்பை தின்ன உடம்புல உயிரும் தெம்பும் இருக்கனும்ல.. அதை ஏன் ஒரு முதலாளி விட்டு வச்சிருக்கான் தெரியுமா? மறுபடியும் அடுத்த நாள் வந்து அவனுக்கு உழைச்சுக்கொட்ட.. சீர்திருத்தவாதிகள் இதைப் பேசுகிறார்களா?

 சீர்திருத்தங்களால் என்ன மிஞ்சும்? ஊறுகாய் போன்ற சமூகநீதி! இந்த காரணங்களால் தான் நாம் முதலாளித்துவ ஜனநாயகம் / சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்களை, தலைவர்களை எதிர்க்கிறோம். அதேவேளை மார்க்சியவாதிகள் ஒண்ணும் எதிர்காலத்தில் வாழ்பவர்கள் அல்ல, இன்றைய தேவைக்கு குறைந்தபட்ச சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்கிற காரணங்களால் அதன் போதாமைகள் மற்றும் ஆபத்துகள் தெரிந்தும் அதை ஆதரிக்கின்றனர். சிலர் அதோடு சமரசம் செய்துகொள்கின்றனர். இந்த புள்ளிகளில்தான் இங்கு கம்யூனிஸ்ட் முகாமகள் பிரிந்து முரண்பட்டு நிற்கின்றனர். இது புரியாம மொதல்ல உலக கம்யூனிஸ்டுகளே ஒன்று கூடுங்கள்னு அறைகூவல் விடுக்கனும்னு அடையாள அரசியல் பேராசிரிய பெருமக்கள் நக்கல் செய்வதுண்டு.

 மூலதனத்துக்கு வரி போட்டா, அதை எப்படி ஏமாத்தனும்னு முதலாளிகளுக்கு தெரியாதா என்ன? ஏற்கனவே இங்க பல வகையா நிறுவன உருவாக்க வழிமுறைகள் இருக்கு… வரி ஏய்ப்பு, வரி விதிவிலக்குன்னு எல்லாமே மூலதனத்துக்கு சாதகமானதுதான்!

ரொம்ப சிம்பிளா கேக்குறேன்.. இன்னா மயிறுக்கு நான் அடுத்தவனுக்கு உழைச்சு கொட்டனும்? எல்லாருக்கும் பொதுவா இருக்க வேண்டிய ”கச்சாப் பொருளையெல்லாம்” மூலதனங்குற பேர்ல 10 பேரு கட்டுப்பாட்டுல வச்சிருப்பாங்க, அவனுங்க முடிவு பண்ணுற அளவுக்கு நான் உழைக்கனும், அவனுங்க போடுற பிச்சைய நான் வாங்கிக்கனும், எப்ப நான் என் புருஷன் கூட படுக்கனும், என் புள்ளை குட்டிங்க கூட நேரம் செலவு பண்ணனுங்குறது…(அதையும் கூட சந்தோஷமா செய்ய போதுமான கூலியோ, ஓய்வு நேரமோ இருக்காது) வரைக்கும் அவனுங்க நிர்ணயிக்குற உழைப்பு நேரம் தான் முடிவு பண்ணும். இது இப்படித்தான இருக்கும்னு வாழ்றது ஒரு பொழைப்பா?

உன்னை யாருமா கூலி வேலைக்கு போகச் சொன்னாங்க.. உனக்கு திறமை இருந்தா நீயும் அவங்கள மாதிரி தொழில் பண்ணி பொழைச்சுக்கோன்னு வருவாங்க.. பெரு மூலதனம் இல்லாம இங்க என்னா மயிற புடுங்க முடியும்னு முடியாதுன்னு தெரிஞ்சுக்க மறுபடியும் மார்க்ஸ் தான் உதவுவாறு!

 சிறு குறு உற்பத்தியாளர்கள் நிலைமை என்ன ஆகிட்டுருக்குன்னு பார்க்கனும்!

எல்லாத்துக்கும் மேல நான் எதுக்கு அடுத்தவங்க உழைப்பை உறிஞ்சு வாழனுங்குறேன்!

 எல்லாத்தையும் பொதுவுல வை! எல்லாரும் சேர்ந்து உழைப்போம்! எல்லாத்தையும் பொதுவா பிரிச்சுப்போம்! இதுதான் மானுட நீதி… உண்மையான சமூக நீதி… மக்களாட்சி..

 மார்க்சியம் படிங்க.. மக்களாட்சி, சமூக நீதி, ஜனநாயகம், மனித உரிமைன்னு மூதலாளித்துவத்துக்கு வெண்சாமரம் வீசிக்கிட்டே, விச ஊசி ஏத்துற உள்ளூர், வெளியூர், சர்வதேச பேராசிரியர்கள் கிட்ட எச்சரிக்கையா இருங்க! அம்புட்டுதேன்!

 ஒரு உதாரணத்துக்கு இந்த கட்டுரை.. நேரம் கிடைக்கும் போது தமிழ்ல மொழிபெயர்க்கிறேன்’ 🙂

 https://newrepublic.com/article/117673/piketty-read-marx-doesnt-make-him-marx?fbclid=IwAR20mbC4Dp_tFEYz_E5ljuSKdEhTZ5ilDdoaadnpL57waVVBVQbv4vy6t7U

 உழைப்புச் சுரண்டலையும், மூலதனத்தையும் ஒழிப்போம்! படிநிலைகளை ஒழிப்போம். உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம்! அதற்காக மார்க்சியத்தை, கம்யூனிஸ்ட் அரசியலை (விமர்சனம் இருந்தாலும் அதை விவாதித்தபடியே) உயர்த்திப் பிடிப்போம் 🙂


மேலே உள்ள பதிவைப் படித்த பின் இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறலாம் 🙂

https://saavinudhadugal.blogspot.com/2018/11/blog-post.html?fbclid=IwAR0VJdPBjLxVN8gvfePb-2aVgi8lf-Z0vdrAmgpiBUFR5oaF79wm-D1MZ_E
மார்க்ஸின் மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து நாம் ‘பொருளாதார அமைப்பு’ எனும் பதத்தை கவனிக்க வேண்டும். ’உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்’ என்பதை ‘உண்மை அடித்தளம்’ என்று குறிப்பிட்டு அவர் அதை ‘பொருளாதார அமைப்பின்’ அடித்தளம் என்கிறார்.

 

Feb 13, 2020

சமூகமாக நாம் யார்?



சமூகத்தில் நம் வாழ்வாதாரத் தேவைகளை (பொருள் தேவைக்காக) பூர்த்தி செய்துகொள்வதற்கான செயல்பாடுகளில் (இயக்கத்தில்) நாம் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நமது அடையாளம். இதுவே வர்க்க அடையாளம்.

இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிலவும் அடையாளம். இந்த படிநிலையை அதிகாரப்பூர்வமாக நிலைநாட்ட அரசு, மதம், பண்பாடு, காவல்துறை, சட்டம் போன்ற ‘நிர்வாக’, ‘நம்பிக்கை’, (‘ஆன்மீகம்’) அமைப்புகள் உருவாயியன. எல்லா நாடுகளிலும் இதுவே சமூகத்தின் இயங்குமுறை. எல்லா நாடுகளிலும் மதம் என்பது ஆளும் வர்க்க நிறுவனமே.

இந்தியாவில் அது இந்து மதம் என்னும் சித்தாந்தத்தில் இயங்குகிறது. சாதி என்னும் உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான படிநிலையை அது திடப்படுத்தி வைத்துள்ளது. இப்பின்னணியில் வலதுசாரி பாசிச எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பதை நாம் மதத் தாக்குதல், மத வெறுப்பு, மத மாற்றம் என்பதோடு நிறுத்திக்கொள்வோமெனில் அது வெறும் பூச்சு சேலை மட்டுமே.

ஓர் இந்து முதலாளி இந்து தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, ஒரு கவுண்டர் (நாடார், தேவர்… இதர) முதலாளி கவுண்டர் தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, கேட்டால் அவர்கள் பார்ப்பனிய புத்தி உடையவர்கள் என்பதா பதில்? ஒரு தலித் முதலாளி தலித் உழைப்பாளியை சுரண்டாமல் இருப்பாரா? இஸ்லாமிய, கிறித்தவ முதலாளி இஸ்லாமிய, கிறித்தவ தொழிலாளியை சுரண்டுவதில்லையா (இலாபம் என்பதை அடிப்படையாக கொண்ட உற்பத்தி முறையில் - உழைப்பு ரீதியாக). ஒரு பெண் முதலாளி மற்றொரு பெண் தொழிலாளியிடம் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடமாட்டாரா? ஒரு தமிழன் நாட்டை ஆண்டால் தமிழனாகிய தொழிலாளியை சுரண்டுவதை ஒழித்துவிடுவாரா? தமிழன் முதலாளியாக இருந்தால் தமிழச்சிகளுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?

சாதி-மத ஒழிபிப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டால் ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணத்தை (உழைப்புச் சுரண்டலுக்கான), ஆணி வேரை எப்படி கண்டடைவது? இதை விளக்கியவர்கள் கார்ல் மார்க்ஸ் எங்கல்ஸைத் தவிர யாரேனும் உள்ளனரா?

அம்பேத்கரிடம் இதற்கு தீர்வு உண்டா? அல்லது காஞ்சா ஐயலய்யா மற்றும் இதர தலித்திய, தாராளவாத சமூக ஆர்வலர்களிடம் தீர்வு உண்டா? பெரியார், அம்பேத்கர் போன்றொர் சாதியப் பிரச்சினை குறித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்கள். பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மீது கவனம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்கள். முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தார்கள். குறிப்பிட்ட அளவு சட்டரீதியான சீர்திருத்தங்களை, உரிமைகளை பெற்றுத்தந்தார்கள் என்பது மறுக்கமுடியாதது. ஆனால் அவை எதுவும் உண்மையான சமத்துவத்தை அனைத்து மட்டத்திலும் எய்திட போதுமானதல்ல.

தற்போது #அம்பேத்கர், #பெரியார் பெயரைச் சொல்லி தாராளவாதிகள் சாதியை இன்னமும் பண்பாட்டு பிரச்சினையாக மட்டுமே சித்தரித்துக்கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பூர்ஷுவா அதிகாரத்தில் தங்களுக்கும் அதிகாரம் வேண்டும். தாங்களும் முதலாளிகளாக வேண்டும் என்பதைத் தவிர இவர்கள் பேசும் சமத்துவத்தில் ஏழ்மையை ஒழிக்கவும், பெண் ஒடுக்குமுறையை ஒழிக்கவும் விஞ்ஞானபூர்வ தீர்வு என்ன இருக்கிறது? குறைந்தபட்சம் இந்த ஒடுக்குமுறைகளுக்கான காரணங்களாவது சரியாக விளக்கப்படுகிறதா?

மதம், பண்பாடு என்று தொடங்கி அகவாதத்தில் முடிவதைத் தவிர வேறொன்றுமில்லை. வெறுப்புரசியல், திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம், சாதிய அணிதிரட்டல் என்னும் பாதையில் இவ்வரசியல் பயணிக்கிறது.

சமத்துவம் என்பது வெறுமனே பண்பாட்டு நிலையில் எய்தப்படுவதல்ல. அது மனிதனை மனிதன் அன்போடு நடத்த வேண்டும் என்னும் எண்ணம் தொடர்பானது மட்டுமல்ல. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் பொருளாயத அடிப்படை ஒன்றுதான். அதுவே செல்வக் குவிப்பிற்கான சுரண்டல் முறை. அதனை உணரவிடாமல், நமது பொது எதிரி யார் என்று உணரவிடாமல் செய்வதே முதலாளித்துவத்தின் கைக்கூலியான அடையாள அரசியல்வாதிகளின் நோக்கம்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சாதி ஒழிப்பு பற்றிய பேச்சுகள், ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், மத அடிப்படைவாத எதிர்ப்பு வியாக்கியானங்கள் (புலம்பல்கள்) பேசப்படுவதாலேயே ஒருவரிடம் சாதி ஒழிப்பிற்கான தீர்வு இருக்கிறது என்றாகாது. அவர் சமூக விஞ்ஞானியும் ஆகிவிட முடியாது. அவர்களை சமூக அக்கறையாளர்கள், ஆய்வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், தேவைப்பட்டால் தலைவர் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம்.

சமூக விஞ்ஞானம் என்பது வரலாற்று வளர்ச்சியோடு தொடர்புடையது. அது உற்பத்தி முறையோடு தொடர்புடையது. அது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தோடு தொடர்புடையது. அதனை சரியாக ஆய்வுசெய்து பிரச்சினைகளின் ஆணிவேரை அறிவியல்பூர்வமாக முன்வைப்பவரே சமூக விஞ்ஞானி. மற்றவர்கள் சமூக உனர்வாளர்கள் மட்டுமே.

இன்னார் இந்த தொழிலில் ஈடுபடுவதால் அவர்களுக்கு இந்த பண்பு இருக்கிறது அல்லது இல்லை என்பது மேலோட்டமான வியாக்கியானம். அவர்கள் அந்த தொழிலில் மட்டும் ஈடுபடுவதற்கான வாய்ப்பும், அதிகாரம் எப்படி தோன்றி வளர்ந்தது? மற்றவர் விலக்கிவைக்கப்பட்டதற்கான வரலாற்று காரணம் என்ன? அதன் அடிப்படை (இயங்குதளம்) என்ன? எந்த ஒன்றிலிருந்து அனுமதித்தலும், விலக்கலும் நடைபெறுகிறது? மதம், சாதி மட்டும்தான் அதை தீர்மானிக்கிறதா? அப்படியென்றால் பார்ப்பனியம் ஏன் இந்தியாவை விட்டு மற்ற நாடுகளில் அதன் அதிகாரத்தை நிலைநாட்ட முடியவில்லை. அங்கு ஏன் சாதிகளை ஏற்படுத்தவில்லை?

குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட பண்பாடு இருக்கும் என்பது சரி. ஆனால் மூடநம்பிக்கை என்பது அனைத்து மட்டத்திலும் இருக்கும். சொல்லப்போனால் நிலவுடைமை பண்பாடு என்பது பெண்களை உடைமையாக கருதும் பிற்போக்குத்தனமான அமைப்பு. கடவுள் நம்பிக்கை இருக்கும் இடத்தில் மூடநம்பிக்கை இருக்கவே செய்யும். இது ஆதிக்க சாதியானாலும் சரி, தாழ்த்தப்பட்டோர் ஆனாலும் சரி. இயற்கையை வழிபடுவதோ, அல்லது கடவுளை வழிபடுவதோ… சடங்கு சம்பிரதாயங்கள் என்பதே மூடநம்பிக்கைதான். அது அனைத்து சாதிகளிலும் உள்ளது.

குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட வேலையில் மட்டுமே ஈடுபடுகின்றனர் என்பதைத்தான் தனியுடமை அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை என்று மார்க்சியர்கள் காலம்காலமாக விளக்கியுள்ளனர். போலி சிந்தனையாளர்கள் போல் அன்றி அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர். படிநிலையில் மேலே இருப்பவர்கள் உற்பத்திச் சாதனங்கள் தொடங்கி… கல்வி வரை கீழே இருப்பவர்களுக்கு கிடைகாமல் செய்தனர். ஆகவே மேலே இருப்பவர்கள் அறிவு, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என்று சகல தளங்களிலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு அமைந்துவிட்டது. கீழே இருந்தவர்கள் பல போராட்டங்கள் நடத்தி இன்று மேலே வருகின்றனர். இப்போது அதுபற்றிய விழிப்புணர்வு மேலோங்குகிறது. போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது மேல்நிலையில் உள்ளோருக்கு ஆபத்தாக, போட்டியாக தெரிவதால் மீண்டும் முரண்பாடுகள் முற்றுகின்றன. (இது ஆண் பெண் முரன்பாடுக்கும் பொருந்தும்). அதன் விளைவாக மேல்நிலையில் இருப்பவர்கள் மீண்டும் தங்களது அடையாளங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள நினைக்கிறார்கள். அந்த படிநிலையை சாதி என்னும் ஏற்பாட்டின் மூலம் இங்கு சட்டதிட்டமாக்கி வைத்தது அவர்களுக்கு கருவியாக, பேராயுதமாகப் பயன்படுகிறது. எதிர் தரப்பினரும் அதே ஆயுதத்தை ஏந்தினால்?

மேலாதிக்க சக்திகளுக்கு அந்த ஆயுதம் கைவரப்பெற்ற நிலைமைகளை ஆய்வுசெய்யாமல், சொல்லப்போனால் அந்த ஆயுதம் எது என்பதைக்கூட ஆய்வு செய்யாமல், அதை ஆய்வு செய்வதற்கு உதவும் அறிவியல் கோட்பாட்டை படித்தறியாமல் கம்பு சுழற்றுவதால் இழப்பு யாருக்கு? எதிரி அங்கு சிரித்துக்கொண்டிருக்கிறான். தன்னை இனம் காண முடியாது என்னும் இருமாப்பில் எதிரி சிரித்துக்கொண்டிருக்கிறான். சாதி, மதம், மொழி, பாலினம், உடல்திறன், இனம் என்பதற்கப்பார்பட்டு நமக்கென்று ஓர் இருப்புநிலையை அவன் (அது) ஏற்படுத்திவைத்திருக்கிறான். அதுவே உழைப்பாளி என்னும் நிலை. உழைப்புச் சக்தியை விற்றால் மட்டுமே பிழைக்க முடியும் என்னும் நிலைமை. எந்த சாதியானாலும், எந்த பாலினமானாலும் (இன்னும் இதர..) நீ இந்த பூமியில் பிழைத்திருக்க என்ன செய்கிறாய் என்பதில்தான் உன்னுடைய சமூக பாத்திரம் அல்லது அடையாளம் இருக்கிறது. அதுவே உனது புத்தியை தீர்மானிக்கிறது. அதிலிருந்து விடுபடுவதே அரசியல் விழிப்புணர்வு - வர்க்க நீக்கம், சாதிய நீக்கம், பாலின அடையாள நீக்கம், மதப் பற்றிலிருந்து (சொல்லப்போனால் கடவுள் மறுப்பு தேவை).

பிறப்பின் அடிப்படையிலான அடையாளரீதியான உணர்விலிருந்து விடுபட்டு – உற்பத்தி உறவில் உனக்கு என்ன இடம் - வர்க்க உணர்வு பெறுவது என்றாகிறது. இதுவே கம்யூனிஸ்ட் என்னும் உணர்வு. தேடலின் வழி அல்லது கற்றலின் வழி இந்த உணர்வை பெற்றபின் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கான அடித்தளம் எது என்பதை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்த்து அதை உறுதிபட எடுத்துரைத்துக்கொண்டிருப்பது அவசியமான பணி.

உண்மையில் வலதுசாரி எழுச்சி என்பது முதலாளித்துவத்தோடு, உலக மூலதன வளர்ச்சியோடு, உலகமயமாக்கலோடு, ஏகாதிபத்தியத்தோடு தொடர்புடையது. உலகெங்கிலும் இன்றைக்கு வலதுசாரி ஆதிக்கமும், அடையாள அரசியல் பிளவுவாதமும் மேலோங்கி இருக்கிறது. இத்தகையதொரு முழுமையான பார்வையைப் பெற நமக்கு மார்க்சியம் உதவுகிறது. அதனை கற்காமலேயே வர்க்கம் என்று தட்டையாக சாதியை அனுகமுடியாது, முதலாளித்துவத்தை விட பார்ப்பனியமே பிரதான பிரச்சினை அல்லது ஆபத்தானது என்று பேசுவது அறிவுடைமை ஆகாது.

வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திப் பேசுவதால் மற்ற ஒடுக்குமுறைகளை நிராகரிப்பதாக காண்பது பார்வைக்கோளாறன்றி வேறில்லை. எல்லாவற்றிற்குமான இணைப்பு, அடித்தளம் எது என்பதை உணர்த்தும்போது மட்டுமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். பிளவுபடுத்தும் சக்திகளை அடையாளம் காட்டமுடியும். அது ஒன்றே புரட்சிகர பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
உழைக்கும் வர்க்கம் என்னும் உணர்வை பெறுக! நம் பொது எதிரி யார் – அதனது சேனைகள் யார் என்பதை என்பதை உணர்க! உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஓங்குக!

(நான் பகிர்ந்திருந்த ஒரு பதிவுக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலாக இது எழுதப்பட்டது)


Dec 1, 2019

தோழர் எஸ். பாலச்சந்திரன் கருத்துரை...

#அம்பேத்கரும்_அவரது_தம்மமும்
- written by #vasumithra

தோழர் எஸ். பாலச்சந்திரன் கருத்துரை
என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் ஓர் உரைகல்
உண்மையற்ற… அடிப்படையற்ற விஷயங்களை வசுமித்ர உரித்து தொங்கப்போட்டிருக்கிறார்… முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள்…
ஆதாரங்களோடு பதில் சொல்லுங்கள்… தனிப்பட்ட முறையில் கொச்சையாக தாக்குவது சரியல்ல
மதம் என்பது 21ஆம் நூற்றாண்டில்… ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலையை நோக்கி பயணிக்க வைக்கக் கூடிய கருவிதானா என்று கேட்கிறார்
#பௌத்தம் என்று சொல்வீர்களானால்… #புத்தர் துக்கத்தை விலக்கச் சொன்னார்…. #அம்பேத்கர் அதன் அடிப்படையில் பேசுகிறார் என்றால் இன்றைக்கு இருக்கும் துக்கம் என்ன? அதற்கு உங்கள் மார்க்கம் என்ன? அந்த மார்க்கம் இன்று ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலையை நோக்கி நகர்த்துமா?
ஆதாரம்னிறி சொல்லப்பட்ட பதில்களைத்தான் வசுமித்ர கடுமையாக விமர்சிக்கிறார்
இந்த புத்தக அட்டை (காவி) என்ன சொல்கிறதென்றால்… அடையாள அரசியலை யார் பேசுகிறார்களோ… அவர்களோடு உங்களை ஓரணியில் சேர்க்கும் என்கிறார்…
அம்பேத்கர் #பெரியார் #மார்க்ஸ்… புத்தரையும் இணைக்க வேண்டும் என்றால் எந்த புத்தரை இணைக்கச் சொல்கிறீர்கள்?
ஆதி புத்தரையா… அல்லது கடவுளாக மாற்றப்பட்டு… அவர் சொன்னதாக இவர்களாக பௌத்த தத்துவம் என்று பிரகடனப்படுத்துகிறார்களே அவரையா… அல்லது இந்து மதம் செறித்துக்கொண்ட புத்தரையா அல்லது அம்பேத்கரே முன் வைக்கிறாரே பகுத்தறிவுக்கு விரோதமான ஒரு புத்தரை அவரையா? துயரமாக இருக்கிறது..
புத்தர் ஒரு வரலாற்றுப் பாத்திரம்… அந்த புத்தர் அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூலில் வரலாற்றுப் பாத்திரமாக கொடுக்கப்பட்டிருக்கிறாரா?
இது வசுமித்ர கேட்கக் கூடிய மிக முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்… இல்லை என்பதுதான் உண்மை!
புத்தரை வேறு கோணத்தில் காட்டினார் என்று முத்துமோகன் போன்றவர்கள் எல்லாம் வளைத்துப் வளைத்துப் பேசினார்கள். அம்பேத்கரை வித்தியாசமான கோணத்தில் காட்ட முயற்சித்தார்கள்…
என்ன புத்தர் அவர்? மதத்தை போதிக்கக் கூடிய புத்தரவர். ஆன்மாவில் நம்பிக்கை உடைய… தன்னுடைய அமானுஷ்ய சக்திகளையெல்லாம் வெளிப்படுத்திக்காட்டி… அதன் மூலம் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்த உள்ளுக்குள்ளே சர்வாதிகாரியாக வெளியே ஆண்களே கண்டு மயங்கக் கூடிய அழகராக இருக்கும் புத்தரைத்தான் அம்பேத்கர் முன்வைக்கிறார்!
முதலில் புத்தரும் அவர் தம்மமும் நூலைப் படியுங்கள் தெரியும். பிறகு அம்பேத்கரும் அவரது தம்மமும் படியுங்கள்!
பொருளாயத அடிப்படைகள் தெரியாத காலகட்டத்தில் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அனுபவபூர்வமாக தீர்வுகான விரும்பிய சிலர் மக்களின் துக்கம் போக்க பேசியதை 2000 வருடம் கழித்தும் பேசினால் இன்றைக்கு எப்படி தீர்வு காண முடியும்?
இதை வைத்து தீர்வு காண முடியும் என்று அம்பேத்கர் சொல்கிறார். இதை மார்க்ஸே சொல்லியிருந்தாலும் உண்மை என்னும் உரைகல்லில் அதை உரசிப் பார்க்க வேண்டாமா?
இயக்கவியல் வழிமுறையை பின்பற்றி சுயமாக சிந்திக்க வேண்டும்… புறவயமான உலகை புறவயமாக ஆய்வு செய்ய வேண்டும்… அதுதான் மார்க்சியம்… இதை செய்யச் சொல்லித்தான் இந்த புத்தகம் சொல்கிறது. அதற்கு விரோதமாக இருக்கும் அத்தனை பேரையும் பட்டியல் போட்டு இவர்கள் இப்படித்தான் பேசினார்கள் என்று அருமையானதொரு முன்னுரை இருக்கிறது இந்த நூலில்...
அடையாள அரசியல் முன்வைக்கும் போலித்தனமான வாதங்கள்… அதில் இருக்கக் கூடிய அபாயங்களை தகர்க்க.. அதிலே இருந்து மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட விரும்புபவர்கள் இந்நூலை படிக்க வேண்டும்.
மேலும் கேட்க இக்கானொளியைப் பார்க்கவும்.

Apr 27, 2019

பா இரஞ்சித்தின் உழைப்புப் பிரிவினை பற்றிய கருத்து தொடர்பாக

 


தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு ஏற்ற உழைப்புப் பிரிவினை தான் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படை. அதுதான் உற்பத்தி உறவுகள் - வர்க்கப் பிரிவினை எனப்படுகிறது. இதை கூறினால் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு சாதியப் பிரச்சினை குறித்து புரிதல் இல்லை என்பார்கள். சரி கம்யூனிஸ்டுகளுக்கு சாதி இல்லைஅதனால அவங்க சொன்னா கேட் வேண்டாம்மார்க்ஸ் இந்தியாவில் பிறக்கவில்லை.. (அதனால் அவருக்கும் சாதி இல்லை) அதனால் அவர் சொன்னாலும் கேட்க வேண்டாம்.

இப்போது தோழர் பா. இரஞ்சித் மார்க்சியம் எடுத்துரைக்கும் உழைப்புப் பிரிவினையை அடியொட்டி ஒன்றை கூறியிருக்கிறார். (அம்பேத்கர் அவர்கள் உழைப்புப் பிரிவினையை பேசியிருந்தாலும், அவர் உழைப்பாளர் பிரிவினை என்பதை வேறுபடுத்தி பார்த்து, அது சாதிஅது வேறு என்னும் வகையில் ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை முன் வைத்ததில் சில தவறுகளும், போதாமையும் இருக்கிறது என்பதே எங்களது வாதம்இதை அவதூறு என்பவர்கள்அதற்காக எனக்கு சாதி வெறி சாயம் பூசுபவர்கள்  அறிவார்ந்த விவாதங்களில் ஈடபட அறியாதவர்கள்அவ்வளவே). இரஞ்சித் சொல்வதன் அடிப்படையை எப்படி கண்டடைவது. வியாக்கியானம் சரிவிடை எங்கே…. அதற்குதான் மார்க்சியம் அவசியத் தேவை! (நான் மொழிபெயர்த்த நூல்களை வாங்கிப் படித்து என்னை கோடீஸ்வரியாக்கி விட வேண்டாம். மற்ற மார்க்சிய நூல்களை படித்துப் பார்க்கவும்.)

வரலாறு பற்றிய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தைப் பொதுவாகவும், ஜெர்மானியின் பின்-ஹெகலிய தத்துவத்தைக் குறிப்பாகவும் விமர்சிக்கும்போது மார்க்ஸும், எங்கெல்ஸும் (1845-46: 63) இந்தியாவில் நிலவும் பக்குவற்ற உழைப்புப் பிரிவினையானது அரசு மற்றும் மத நிறுவனங்களால் சாதியமைப்பாக உருவெடுக்க வகை செய்தது என்றனர்.  சாதியமைப்புதான் பக்குவமற்ற அந்த உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது என்னும் கருத்துமுதல்வாத நம்பிக்கையை அவர்கள் விமர்சனம் செய்தனர்3 .  இவ்வாறாக மார்க்ஸைப் பொறுத்தவரை (1846:158), சாதியப் படிநிலை ஆட்சி என்பதும் குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையே4. வேறு சொற்களில் சொல்வதானால், “உழைப்புப் பிரிவினையே சாதியை உருவாக்கியது” (மார்க்ஸ் 1846-47: 114). இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை பரம்பரை உரிமை’ என்னும் வகையில் உள்ளது (மார்க்ஸ் 1853b: 497)5.

மார்க்ஸைப் பொறுத்தவரை (1867:321), முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்யும்’ (இந்தியாவைப் போல்) அல்லது கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்யும் (எகிப்தைப் போல்) போக்கைக் கொண்டிருந்தன6. சாதியமைப்பின் கீழ் குறிப்பிட்ட தீர்மானகரமான சட்டதிட்டங்களுக்குஏற்ப உழைப்புப் பிரிவினை நிலவியது என்கிறார் மார்க்ஸ். இந்த சட்டங்களை சட்டம் இயற்றுபவர் நிறுவவில்லைஎன்றவர், கூடுதலாக, பொருளாயத அடிப்படையிலேயே இந்நிலைமைகள் தோன்றின என்றும், அவை சட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டன என்றும் கூறுகிறார்7.  பின்னர் அந்த சட்டமானது தொழிலை ஒரு மரபார்ந்த உரிமையாக்கி, சாதியமைப்பாக நிலைநாட்டப்படுகின்றன8. மார்க்ஸைப் பொறுத்தவரை, சமூகமானது குறிப்பிட்டளவு வளர்ச்சியை எட்டிய பின்னரே சாதிகள் மரபு வழியிலான சட்டநிலையை எட்டியது9.

https://saavinudhadugal.blogspot.com/2017/08/blog-post.html

சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*:


(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம், பக். 211)

********


சில குறிப்பிட்ட அசுத்தமான பழக்கங்களால் உறவாடுவதற்கு தகுதியற்றவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் கருதப்படுகிறார்கள். இதுவே ’மேல்’ சாதியினர் சுமத்தும் குற்றம். அதாவது அவர்கள் இறந்த விலங்கின் இறைச்சி உண்ணுகிறார்கள், அதனால் அவர்கள் அசுத்தமானவர்கள்... [ஆனால்], கொலாபா மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் ஒட்டுமொத்த மஹர் சாதியும், இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டது, ஆனால் அவர்களின் துன்பமும், சமூக ஒடுக்குமுறையும் தொடரத்தான் செய்கிறது. அதைப் பேசக்கூட முடியாது. அவர்கள் மீதுபொருளாதாரத் தடை மற்றும் சமூக ஒதுக்கலும் நிகழ்கிறது. காலம் காலமாக அவர்கள் பயிரிட்டு வந்த நிலங்கள் சாதி இந்து நிலப்பிரபுக்களால் பறிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் அசுத்தப் பணிக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான சமூக, பொருளாதார நெருக்கடிகளும் அவர்கள் மீது தொடுக்கப்படுகின்றன” (அம்பேத்கர், தொகுதி 2, பக். 484).

இந்தத் தகவல்கள் உணர்த்துவது என்ன? அது இரண்டுவிதமானச் சூழலை விளக்குகிறது:

(1) உற்பத்தி சாதனம் இல்லாததால்வறுமை’.

(2) ‘சாதிஎன்னும் வடிவத்திலானஉழைப்புப் பிரிவினையால் நிலவும்தீண்டாமை’.

இந்த இரண்டு நிலைமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இருந்தாலும் முடிந்தவரை அவற்றை நாம் தனித்தனியே புரிந்து கொள்ள வேண்டும்.

        (1) வறுமை: தீண்டப்படாதோர், நிலத்தையோ, உற்பத்தி சாதனத்தையோ உடைமையாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அது சொற்பமான அளவே. மற்ற ’கீழ்’ சாதி மக்களுக்கு, மற்றும் சில ’மேல்’ சாதி மக்களுக்கும் இந்நிலை பொருந்தும். பெருமளவிலான உற்பத்திச் சாதனம் ’மேல்’ சாதியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. துல்லியமாக, அதுவே அச்சாதியினரின் ஆயுதம்.

        (2) தீண்டாமை: விவசாயம் மட்டுமல்லாது, தெருவைச் சுத்தம் செய்தல், மலம் அள்ளுவது, இறந்த விலங்குகளைப் புதைப்பது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது ஆகிய பணிகளும் தீண்டப்படாதோரின் பணிகள். சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான மிகவும் அடிப்படைப் பணிகள் இவை. விவசாயம் தொடர்பான பணிகள் தீண்டப்படாதோர் மற்றும் சூத்திரர்களுக்கானவை. ஆனால், துப்புரவுப் பணி தீண்டப்படாதோருக்கு மட்டுமேயானது. துப்புரவுப் பணிகளால்தான் தீண்டாமை நிலவுகிறது என்று சொல்ல முடியாதென்றாலும், ‘தீண்டப்படாதோரே அசுத்தப் பணிகளைச் செய்கின்றனர்என்று சொல்லலாம். இதன் மூலம் நாம் வறுமை மற்றும் துப்புரவுப் பணி என்பதை தீண்டப்படாதோர் மத்தியில் மட்டுமே காண்கிறோம். இதற்குத் தீர்வுதான் என்ன?

        உழைப்புச் சுரண்டலால்வறுமைதோன்றுகிறது, எனவே உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே அதற்கான தீர்வு.  சமூகத்தின் ஒவ்வொரு நபரும் உழைக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாத ஒரு வர்க்கம் கூட இருக்ககூடாது என்பதே இதன் பொருள். தீண்டப்படாதோர் மட்டுமே துப்புரவுப் பணிகளைச் செய்ய நேர்வதால், கூலி முறையை ஒழிப்பதும், சுரண்டலுக்கான உறவுகளிலிருந்து எழுந்த உழைப்புப் பிரிவினையை ஒழிப்பதுமே அதற்கு தீர்வு. இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் துப்புரவுப் பணிகள் ஒதுக்கப்படக்கூடாது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதைத் தன் கடமையென்று செய்ய வேண்டும். இவ்வாறாக, நாம் பழைய உழைப்புப் பிரிவினை முறையை மாற்ற வேண்டும். 

          நாம் மற்ற ’கீழ்’சாதியினரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் இதே பிரச்சினை நிலவுகிறது: (1) வறுமை மற்றும் (2) உடல் உழைப்புக்கு மட்டுமே ஆளாதல். வறுமை என்பது உழைப்புச் சுரண்டலின் விளைவு. உடலுழைப்புக்கு மட்டுமே உள்ளாதல் என்பது பழைய உழைப்புப் பிரிவினையின் விளைவு. இங்கும், நமக்கு அதே தீர்வுதான் வழி.

          உற்பத்தி சாதனத்தின் பொருளாதாரப் பெயர்சொத்து. இது நிலம் மற்றும் இதர வளங்களைக் குறிக்கிறது.

          சாராம்சத்தில் சொத்து இரு வகைப்படும்: 1. தன் சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்ட சொத்து; 2. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சொத்து.

          (1) தன் சொந்த உழைப்பினால் கிட்டிய சொத்து: உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்திடம் 4 ஏக்கர் விவசாய நிலமிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிலமிருப்பதாலேயே பயிர் விளைவதில்லை. அதற்குப் பல வகையான உழைப்பைச் செலுத்த வேண்டும். நிலத்தில் பயிர்விளைவிக்க அக்குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பலவிதமான உழைப்பைச் செலுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் கிடைத்த பயிரின் ஒரு பகுதியை விற்று, மற்றவர்களிடமிருந்து தமது வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்கி வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறார்கள் என்று பொருள்.  இங்கு, மற்றஉழைப்பாளிகளைபணிக்கமர்த்தும் அவசியம் வரவில்லை. அதனால் இங்குஎஜமானர், உழைப்பாளிஉறவு இல்லை. இந்தக் குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பின், தங்களுடைய சொந்த உழைப்பைக் கொண்டு ஒட்டு மொத்த நிலத்தையும் அக்குடும்பத்தால் உழ முடியாது. வேறு சொற்களில் சொல்வதானல், ஒவ்வொரு குடும்பமும் தம்மால் உழைக்கக்கூடிய அளவுக்கான உற்பத்தி சாதனங்களை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய உழைப்பின் ஒரு பகுதி மற்றவற்களுக்குச் செல்லவில்லையென்றால், ஒருவர்ஏழ்மையில்வாழும் நிலை ஏற்படாது. அதேபோல், மற்றவரின் உழைப்பின் பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றால் ஒருவர்செல்வத்தைப்பெற முடியாது. ஒவ்வொரு மனிதரும் தமது சொந்த உழைப்பால் வாழும் அமைப்பில் ஏழ்மையோ, செல்வமோ நிலவாது என்பதே இதன் பொருள். அத்தகையச் சூழலில், வாழ்க்கை இயல்பாக இருக்கும் ஏனென்றால், வாழ்வின் தேவைகள் நிறைவேறப்பட்டு அங்கு தட்டுப்பாடோ, கூடுதலோ இருக்காது. எல்லாக் குடும்பங்களும் இதேபோல் வாழ்கின்றன என்று எடுத்துக் கொண்டால், எவரும் எஜமானரும் இல்லை, உழைப்பாளரும் இல்லை. எல்லா மனிதர்களும்சமஉழைப்பு உறவில் வாழ்வர். ஒவ்வொரு மனிதரும் / குடும்பமும் தனித்தனியாக வாழும் சமூகம்தனிநபர் உற்பத்தியாளர்களின் சமூகம்’. அது, ‘தனி நபர் உற்பத்தியாளர்களின் சொத்துடைமை அமைப்புஎன்றாகும். 

          இந்த எல்லாத் தனிநபர்களும் தங்களுடைய தனிச்சொத்துக்களை ஒன்றிணைத்து, முன்னர் போலவே உழைத்தால் அதுகூட்டு உற்பத்தியாளர்களின்சமூகமாகும். வேறு சொற்களில் சொல்வதானால், அது கூட்டு உற்பத்தியாளர்களின் அமைப்பு.

          எல்லா நபர்களும் உழைப்பதால்தனிநபர் உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ அல்லது, கூட்டு உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ உழைப்புச் சுரண்டல் இருக்காது. ஒரு தனிநபர்கூட ஏழ்மையில் வாழும் நிலை ஏற்படாது. எஜமானர், உழைப்பாளி என்னும் சமமற்ற உழைப்புசார் உறவு (உற்பத்தி உறவு) நிலவாது. (அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடிய உற்பத்தி உறவுகள் நிலவாது).

          (2) உழைப்புச் சுரண்டலினால் நிலவும் சொத்துடமை அமைப்பு:  இது முதலில் சொன்ன அமைப்பிலிருந்து முற்றிலும் மாறானது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் சொன்ன அமைப்பைத் தலைகீழாகப் போட்டால் போதுமானது. இந்த சொத்துடைமை அமைப்பில், ஒரு சிறுபான்மைக் கூட்டம் சொத்துடைமையின் பெயரால் நிலத்தையும், மற்ற உற்பத்தி சாதனங்களையும் கொண்டிருக்கும். பெரும்பான்மை நபர்களுக்கு சொத்திருக்காது. உற்பத்தி சாதனங்கள் தாமாக பொருளை உற்பத்தி செய்யாது. அந்த உற்பத்தி சாதனத்தைக் கொண்டு பலவிதமான உழைப்பைச் செலுத்தினாலே வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்ட முடியும். ஆனால் இந்த அமைப்பில், உற்பத்திச் சாதனங்களைக் கொண்டிருப்போர் உழைப்பைச் செலுத்துவதில்லை. அவர்கள் எஜமானர்களாகி, உற்பத்தி சாதனங்களற்றோரை, உழைப்பாளிகளாகப் பணிக்கமர்த்துகின்றனர். அதன் பிறகு நடப்பதென்ன என்பது வெட்டவெளிச்சம். உழைப்பாளிகளின் பெருமளவிலான உழைப்பு எஜமானர் வர்க்கத்திற்கு செல்கிறது. இப்படித்தான் அந்த வர்க்கம் வாழ்கிறது. இது உழைப்புச் சுரண்டலின்றி வேறில்லை. இது பலவித அடையாளங்களின் கீழ் நடக்கிறது: ‘நிலத்திற்கு வாடகை’, ‘சொத்துக்கு’ ‘வட்டிமற்றும்இலாபம்’. ஒட்டுமொத்த சுரண்டலின் இரகசியமும், இந்த மூன்று வருவாயில் ஒளிந்திருக்கிறது: வாடகை, வட்டி மற்றும் இலாபம்.  இந்த வருவாய் மூலங்கள் ஒருவருடைய சொந்த உழைப்பால் கிட்டுவதில்லை. இந்த சொத்துடைமை முறையில், உழைக்கும் வர்க்கத்திற்கு வறுமையும், எஜமானர் வர்க்கத்திற்குச் செல்வமும் வாழ்க்கை நிலைமைகளின் அங்கங்களாகின்றன.

          இந்தச் சொத்துக்கள் அடிமை உடைமையாளர்களின் சொத்து என்பதாகவோ, முதலாளிகளின் சொத்து என்பதாகவோ, அல்லது இதே பண்புகளோடு வேறு பெயர்களைக் கொண்டதாலோ நிலவுகின்றது.

          மனித சமூகத்தின் பண்டையக் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால், இன்றுவரை நிலவும் வரலாறு முழுக்க சுரண்டல் உறவின் பல வடிவங்களையே கொண்டிருக்கிறது.

          சாதியமைப்பைஎடுத்துக் கொண்டாலும், தீண்டப்படாதோரும், சூத்திரர்களும் ’மேல்’ சாதியினருக்குப் பணி செய்யும் உழைப்பாளிகள். இந்தப் பிரிவு செலுத்தும் உழைப்பு முழுவதும் உடலுழைப்பே. ’மேல்’ சாதியின் ஒரு பிரிவு உடலுழைப்பைச் செலுத்தாமல், மூளை உழைப்பைச் செலுத்துகிறது. ’கீழ்’ சாதியினருக்கு மூளை உழைப்பைச் செலுத்தி பிழைக்கும் வாய்பு இல்லை.

          இதுவே அவர்களின் நிலைமை. இந்த நிலைமைகளை நாம்வறுமை’, ‘சாதிப் பாகுபாடுஎன்று பகுத்துக் காண வேண்டும்.

          வறுமைக்கானத் தீர்வுஉழைப்புச் சுரண்டலைஒழிப்பது. எல்லா மனிதரும் உழைத்து வாழ வேண்டும். சுரண்டலின் விளைவால் ஈட்டும் சொத்துடைமை அமைப்பை ஒழிக்க வேண்டும். ‘சாதியப் பாகுபாட்டிற்கானதீர்வு, சுரண்டல் நிறைந்த உழைப்புப் பிரிவினையை மாற்றி அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட அளவு உடலுழைப்பையும் (அசுத்தப் பணிகள் உட்பட), குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பையும் செலுத்தி வாழ வேண்டும். சாதிக் கலப்புத் திருமணம் போன்ற சில மேல்மட்ட மாற்றங்களும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியே.

          தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் அம்பேத்கர் விவாதித்தார். மேலும், ‘மதம்என்பதை மனித சமூகத்தின் ஒரு இலக்காக அவர் சேர்த்துக் கொண்டார். இனி வரும் அத்தியாயங்களில் இந்தப் பிரச்சினைகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

…. (சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 152 – 155)

இந்தச் சொற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கும் இரண்டு பொருள் உள்ளது. உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வதற்கான எல்லாவிதமான பொருளாதார உரிமைகளையும், ஒத்த உறவுகளையும் அங்கீகரிப்பதே முதல் வகையான பொருளாதாரம். அதுவே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்லது பூர்ஷுவா பொருளாதாரம். அதற்கு எதிரான பொருளாதாரமே இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்க்கிறது, பூர்ஷுவா பொருளாதாரத்தை நிராகரிக்கிறது. அதுவே மார்க்ஸியப் பொருளாதாரம் அல்லது கம்யூனிசப் பொருளாதாரம். 

          உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதற்கும், சமத்துவத்தை ஈட்டவும் மார்க்ஸியப் பொருளாதாரம் மூன்று விசயங்களை முதன்மையாகத் தருகிறது.

1)       ஆண் பெண் உள்ளிட்ட அனைத்து நபர்களும் உழைக்க வேண்டும். அவர்களுடைய உழைப்பே அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பொருள் ஈட்டித்தர வேண்டும்.
          2)       வருமானத்தை ஈட்டித்தரும் வாடகை, வட்டி, இலாபம் மற்றும் சுரண்டல்வாதச் சொத்துரிமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
          3)       ஒரு நபர் உடல் உழைப்பையும், மற்றவர் மூளை உழைப்பையும் செலுத்தும் சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையை ஒழிக்க வேண்டும். எல்லா ஆண்களும், பெண்களும் குறிப்பிட்ட அளவு உடல் உழைப்பு, குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பு செலுத்தும் புதிய வகை உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும்.

          இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே, உழைப்புசார் சுரண்டல்வாத உறவுகள் சமமான உழைப்புசார் உறவுகளாகும் (உற்பத்தி உறவுகளாகும்). சுரண்டல்வாதச் சமூகம் ஒரு புதிய தன்மை கொண்ட சமூகமாக மாறும்.

          மார்க்சியம் குறித்த அறைகுறை ஞானம் உடையவர்களே அது முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறவு பற்றி மட்டும் பேசுகிறது, பெண்கள் உட்பட சமூகத்தின் மற்ற பிரிவுகள் குறித்துப் பேசவில்லை என்று கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது.

          அடிமைச் சமூகக் காலத்திலிருந்து வரலாற்றில் நாம் எந்தக் காலத்தை எடுத்துக் கொண்டாலும், சமூகம் பல வர்க்கங்களாக, உட்பிரிவுகளாக பிளவுபட்டிருப்பதைக் காண முடியும்.  ஆனால் அந்த வர்க்கங்களும், உட்பிரிவுகளும் அடிப்படையில் இரண்டு வர்க்கங்களாகச் சுருங்கி நிற்கும், அவை: உழைக்கும் வர்க்கம், உழைக்காத வர்க்கம். மூன்றாவதாக ஒரு வர்க்கம் ஒரு பகுதி தனது உழைப்பிலும், ஒரு பகுதி சுரண்டலிலும் வாழ்ந்தாலும், அந்த உட்-பிரிவுகளில் ஒரு பகுதியை நாம் உழைக்கும் வர்க்கமெனவும், ஒரு பகுதியை உழைக்காத வர்க்கம் எனவும் வகுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் - ஆண், பெண் மற்றும் முதியவர் அனைவரும் இந்த இரண்டு வர்க்கத்தின் கீழ் வருபவரே. இந்த இரண்டு வர்க்கம் பற்றிய குறிப்பு ஒட்டு மொத்த சமூகத்தையும் குறிப்பதாகும்.

          எஜமானர் என்ற சொல்லை நாம் பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். உழைப்பாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். இந்த இரண்டும் சேர்ந்து முழுச் சமூகமாகிறது.

           உற்பத்தி ஈட்டும் உழைப்பு, உற்பத்தி ஈட்டாத உழைப்பு மற்றும் குடும்ப உழைப்பு என்று வெவ்வேறு வகையான உழைப்புசார் உறவுகள் இந்த சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

          ஆண், பெண், இளைஞர் என எல்லாரும் ஏதோ ஒரு வர்க்கம் அல்லது ஒரு வர்க்கப் பிரிவின் கீழே வருவர். உழைப்புசார் உறவில் ஒருவர் பெறும் இடமும், வாழ்வாதாரத்திற்கான அவரது பொருளீட்டும் முறையும் வர்க்கத்தில் அல்லது பிரிவில் அவரது இடத்தைத் தீர்மானிக்கிறது.

          பிச்சைக்காரர்கள், சிறைக் கைதிகள், அனாதை ஆசிரமத்தில் வசிப்போர், மத நிறுவன ஊழியர்கள், ரௌடிகள் போன்றோரும் தங்களது வருமான ஆதாரத்தைப் பொறுத்து ஒரு ஏதோ ஒரு வர்க்கத்தின் கீழ் வருவர். இந்த உதாரணங்களில், மத நிறுவனங்களில் வாழ்வோர் தவிர மற்ற அனைவரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். விலை மாதர்களும் ஒரு தொழில் செய்து வாழ்கின்றனர் என்றாலும், அதை உழைப்பு என்று சொல்ல முடியாது. விலைமாதர்கள், ரௌடிகள் உழைப்பாளிகள் அல்லர்.

          இந்த உழைப்புசார் உறவுகள் (உற்பத்தி உறவுகள்) அனைத்தையும் நாம் புரிந்து கொண்டால், சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் குறித்தும் மார்க்சியம் பேசுகிறது என்பது விளங்கும். 

(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 189 – 190)

சிறு குறிப்பு: இந்நூல் தான் நான் மொழிபெயர்த்த முதல் நூல். ஆகவே மொழிபெயர்ப்புக்கு நேர்மையாக இருப்பது என்னும் புரிதலின் காரணமாக lower, upper என்பதை அப்படியே மேல், கீழ் என்று மொழிபெயர்த்திருந்தேன் (Oppressed, Depressed என்றால் மட்டுமே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளை மொழிபெயர்த்திருப்பவர்களும் இத்தகைய தவறுகளை செய்துள்ளனர்). பின்னர் தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள் அது தவறு என்பதை சுட்டிக்காட்டி, குறைந்தபட்சம் அடைப்புகுறிகளுக்குள் நீங்கள் போட்டிருக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் நூல் வெளி வந்துவிட்டது.

ஆகவே இப்போது நான் அதையே மேற்கோள் காட்டியிருப்பதால் மொழிபெயர்ப்பை மாற்றுவது நேர்மையாக இருக்காது. ஆனால் அது அதிகாரச் சொற்கள் என்பதால் அடைப்புக்குறியை மட்டும் சேர்த்துள்ளேன்.

மொழிபெயர்ப்பு தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.