Apr 30, 2021

மே தின வாழ்த்து!



இன்று உலகத் தொழிலாளர்கள் தினம்!

 உழைத்து வாழும் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் நாள்! உழைப்பாளர்களை சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளையும், மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவத்தையும் அழித்தொழிக்க சூளுரைக்கும் நாள்!

 எல்லாரும் ஒருவருக்காக! ஒருவர் எல்லாருக்காகவும்” - தன்னலமின்றி அடுத்தவருக்காக வாழும் வாழ்வை வெறும் அக போதனையாக அன்றி, பொருளாதார கட்டமைப்பிலேயே கொண்டுள்ளதுதான் பொதுவுடைமை தத்துவம்.

 போகும் போது என்னத்தையா கொண்டு போகப் போறீய… எதுக்கு இப்படி பணம் பணம்னு அலையுறீய” என்று போலியான “அகவாத நற்குணங்களை” பேசி உழைப்பாளர்களை அடிமையாகவும், உழைப்புச் சுரண்டலாளர்கள் சொத்து சேர்த்துக்கொண்டு சுக போகமாக வாழ வைக்கும் சுரண்டல் மிக்க தனியுடமை பொருளாதார அமைப்பைப் போல் அல்லாது தனிச் சொத்து சேர்க்கும் தேவையிலிருந்து மனிதர்களை விடுவித்து பொருளாசையற்ற மனிதர்களாக மேம்பட்டவர்களாக உருவாக்கக் கூடியது பொதுவுடைமை தத்துவம்.

 ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற உற்பத்தி, ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப பகிர்தல்” – இதைவிட சிறப்பானதொரு தன்னலமற்ற, சுரண்டலற்ற பொருளாதரக் கொள்கையும், நன்னெறி மிக்க அமைப்பும், தத்துவமும் இருந்துவிட முடியுமா?

 மனித குல தேவைக்கான அத்தனை செல்வங்களையும் படைக்கும் உழைப்பாளர்கள் பசியாலும், பட்டினியாலும் வாடி, துன்புற்று மடியும் அவலத்தைக் கண்டு எங்கே தவறு நடக்கிறது என்பதை ஆராய்ந்து விஞ்ஞானபூர்வமாக ஒரு மாற்று அரசியல்-பொருளாதார அமைப்பை கார்ல் மார்க்சும்- எங்கல்ஸும் முன்வைத்தார்கள். அவர்களுக்கு முன்பே “சோசலிசம்” என்னும் பொருளாதாரப் பார்வைகள் இருந்தாலும்… சுரண்டலின் வேரான லாபம், உபரி உற்பத்தி, உழைப்புச் சுரண்டலை “கணிதவியல் கணக்கீடுகளுடன்” நிறுவினார் மார்க்ஸ்.

 விஞ்ஞான பூர்வ சோஷலிசம் என்பது ஏதோ நன்னெறியோ, அறம் சார் கொள்கையோ அல்ல. அது சமூக அறிவியல்!

 எல்லாரும் இன்புற்று வாழக்கூடிய பொருளாதார அமைப்பை நிறுவும் இலட்சியத்துடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல தோன்றின. உழைத்து வாழ்! அதேநேரம் உழைப்பைச் சுரண்டி வாழ்பவர்களை விட்டு வைக்காதே! என்று போதித்து, உழைப்பாளர்களை அரசியல்படுத்தியதன் விளைவாக இலட்சக்கணக்கான உழைப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உழைப்பாளர்களின் உரிமைகளை பெற்றுத் தந்துள்ளனர். மே தினம் அதில் முக்கியமானதொரு நாள். 8 மணி நேர வேலை கிடைத்தது கூட உழைப்பாளர்களின் போராட்டங்களின் விளைவாகவே (ஆனால் இந்தியாவில் அரசியலமைப்பில் அதை சேர்தத்தால் ஒரு சிலர் வரலாற்றையே மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!).

 மதங்கள் போதிக்கும் நன்னெறிகள் அனைத்தும் செல்வந்தர்களும் அவர்களின் கூட்டாளிகளான அரசியல்வாதிகள் / சாமியார்கள் / தரகர்கள் போன்றோர் அடுத்தவரை நசித்து, உழைப்பை உறிஞ்சி சொத்து சேர்த்துக்கொள்ள அனுமதித்து விட்டு… உழைத்து உழைத்து பட்டினியால் மாயும் உழைப்பாளர்களுக்கு “அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதே” என்று போதித்துக் கொண்டிருக்கின்றன. (மறைமுகமாக!).

 உழைப்பாளர்களாகிய நாம் அதை மாற்றி எழுதுவோம்! “ஏய்! முதலாளியே அடுத்தவர் உழைப்பிற்கு ஆசைப்படாதே” என்று ஓங்கி முழங்குவோம்! உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பவர்களின் அதிகார்த்தை வீழ்த்துவோம்! அவர்களின் தனியுடமை அமைப்பை வீழ்த்துவோம்!

 நன்னெறியோ, நீதியோ, செல்வமோ, உழைப்போ, அதிகாரமோ, உற்பத்தியோ, பகிர்தலோ எதுவாக இருந்தாலும் இங்கே அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்…. இருப்பவருக்கு ஒரு நீதி, இல்லாதவருக்கு (உண்மையில் இல்லாதவராக்கப்பட்டவர்களுக்கு) அநீதி என்னும் நிலையை ஒழிக்க பொதுவுடைமை தத்துவத்தைப் பயில்வோம். நம்மை சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்.

 உலகத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்!

 - கொற்றவை