Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Dec 21, 2021

பாலுணர்வு, இணை தேடல் மற்றும் காதல் உணர்வில் சில அவதானிப்புகள்

 பாலியல் வறட்சி மற்றும் பாலியல் தேவைகள் குறித்து பேசுகையில் பாலியல் உணர்வுகளைப் பொதுமைப்படுத்தப்படுகிறதா?

உணர்வுகளைப் பொதுமைப்படுத்தி அதற்கொரு பண்பாட்டு வரையறை கொடுத்து பொதுமைப்படுத்தக் கூடாது என்பதே இந்த உரையாடலின் அடிப்படை.

பாலியல் / பாலுறவு உணர்வுகள் மற்றும் தேவை குறித்து பேசுகையில் அது காமம் என்கிற தேவையை மட்டுமே சுட்டுவதில்லை!

இணை தேடல் என்கிற தேவையில் பல வகையான உணர்வுகள் செயல்படும் என்பது ஒன்றும் அறிய இயலாத சூத்திரமல்ல.

Sexual Attraction, Romantic Attraction, Companionship, Loneliness & Frustrations, Various Fetishs, Sexual / Romantic Fantasies, Power Play, Imitating, Peer Pressure, Societal Pressure to Prove the Sexual Power / Fertility, Sexuality Acceptance, Identity Crisis and much more.

அதாவது பாலியல் ஈர்ப்பு, “காதல்” ஈர்ப்பு, தோழமை மற்றும் ஆறுதல் தேவை, தனிமையினால் உண்டாகும் “ஆத்திரம்” அல்லது மனச் சோர்வு, பல்வேறு விதமான கவர்ச்சிகள் / வெறித்தனங்கள், பாலியல் / காதல் கற்பனைகள், அதிகார வேட்கை, போலச் செய்தல், சக அழுத்தம், பாலியல் சக்தியை நிரூபித்தல், பாலியல் தேர்வு சார்ந்த விமர்சனங்கள், இணை கிடைப்பதில் உள்ள தட்டுப்பாடுகள்.. அடையாளச் சிக்கல் இப்படியாக… மனம் உடல் இரண்டின் தேவையையும் உள்ளடக்கியே பேசுகிறேன்.

இது இப்படித்தான் இருக்கிறதா? உறுதியாக சொல்ல முடியுமா? என்றால் இப்படியும் இருக்கிறது. அனைத்துவிதமான பாலுறவு / மன உணர்வுகளுக்கும் இந்த சமூகத்தில்  இடம் இருக்க வேண்டும். அதை கையாள்வதற்கு பயிற்சிகள் வேண்டும். வடிகாலும் வேண்டும்.

ஒரு சில நபர்கள் அதீத காம வேட்கை கொண்டவர்களாக இருக்கலாம், ஒரு சிலருக்கு காம வேட்கை அதிகமாக இருக்கும் ஆனால் அவர்களால் காதல் வயப்படாமல் அல்லது மனதளவில் ஒன்றாமல் ஒருவரோடு உடலுறவு வைத்துக் கொள்ள இயலது. ஒரு சிலருக்கு பாலியல் ஈர்பே இல்லாமல் இருக்கும். பாலியல் ஈர்ப்பே ஏற்படாதவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமின்றி இருக்கலாம். ஆனால் அத்தகையவரை ஆணாக இருந்தால் – “மேட்டர் வேலை செய்யலையா” என்பார்கள், பெண்ணாக இருந்தால் “மலடியா”, வயசுக்கு வரலையா என்பார்கள். வயதுக்கு வராமல் இருந்தாலும் அது ஒன்றும் குற்றமில்லை. அது உடல்நிலை சார்ந்தது..

உதாரணமாக இரண்டு வகையினரை எடுத்துக் கொண்டால், இருவரும் ஒருவருக்கு ஒருத்தர் என்னும் வரையறைக்குள் பொருந்தாதவர் என்றும் வைத்துக் கொள்வோம். முந்தையவர் யாரோடு வேண்டுமானாலும் உடலுறவுக்கு தயாராக இருப்பார் ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடுகளால் இணை கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். இரண்டாம் நபருக்கு எமோஷனல் தேவை அதிகமாக இருக்கிறது. தன் மனநிலைக்கு பொருந்தக் கூடிய நபரோடு மட்டுமே அவரால் மன ரீதியாக உடல் ரீதியாக ஒன்ற முடியும். அதேவேளை ஒரு நபரோடு மட்டுமே அத்தகைய எமோஷனல் பாண்டிங் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. பலரோடு எமோஷனல் பாண்டிங் ஏற்பட்ட நபர் அனைவரோடும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடியவர் என்றும் சொல்வதற்கில்லை. இரு தரப்பிற்குமே எப்போது பார்த்தாலும் “வேட்கை” கொண்டு “இரை” வேட்டையாடுபவர்களும் அல்ல! ஆனால் இவர்களின் தேவை சமூக வரையறைக்கு உட்பட்டதல்ல.

பாலியல் கற்பனைகள் அதிகமாக கொண்டவர்கள் எனில் - இணை இருப்பின் ஒருவேளை அதை புரிந்துகொள்ளும் பக்குவம் உள்ளவர்களெனில் பரஸ்பரம் பேசி, விவாதித்து ஏற்புடையவற்றை நடைமுறைப்படுத்தி விருப்பமற்றவற்றை ஒதுக்கி இன்பம் காணலாம். ஆனால் தம் பாலியல் தேவைகளை இணைகளிடம் வெளிப்படையாக பேச இடம் இருக்கிறதா? குறிப்பாக பெண்கள் தங்களுக்கு இன்பம் தரக் கூடியது எது என்று தம் காதலனிடமோ, கணவனிடமோ பேச இயலுமா? சிறு விகிதத்தினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் கூட ஆண் ஈகோ என்பது உள்ளார்ந்து இருக்கிறது. பெண்ணை நிறைவடையச் செய்ய முடியவில்லை எனில், ஒரு கட்டத்தில் அதை அந்தப் பெண் கராராக வெளிப்படுத்தி வேறு துணையை தேட விரும்புகையில் அது கோவமாக மாறி.. அதுவரை முற்போக்காக இருந்த நபர் அந்தப் பெண்ணை “உனக்கெல்லாம் எவ்ளோ செஞ்சாலும் பத்தாதா” என்பார். பாலியல் நிறைவு சார்ந்து நிராகரிக்கப்படுகையில் ஆண் மனம் எந்த “எல்லைக்கும்” செல்லும்

இது உடலுறவு விசயத்தில் மட்டுமல்ல… எமோஷனல் தேவைக்கும் பொருந்தும். ஒவ்வொருவரின் உணர்ச்சி மற்றும் உணர்வுகளும் மாறுபடும். தன் மனதிற்கு எது சந்தோஷம் தரும். எதைப் பேசினால் பரவசம் வரும். அன்பை, காதலை, காமத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஆனால் அதையெல்லாம் பேசுவதற்குரிய முதிர்ச்சி / பயிற்சி எதுவும் கற்றுத்தரப்படுவதில்லை. பேச வாய்ப்புமில்லை. 

அதேபோல் “நிராகரிப்பை” எதிர்கொள்வதற்குரிய தயாரிப்புகளும் நடைபெறுவதில்லை. உறவை முறித்துக் கொள்ள விரும்புவது என்பது Compatibility issue – பொருத்தம் சார்ந்த விசயமே ஒழிய அது எந்த வகையிலும் தோல்வியோ, தாழ்வானதோ இல்லை என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறதா? ஒரு பெண் விட்டு சென்றுவிட்டால் ஆண் எதிர்கொள்ளும் அவமானங்கள், சக அழுத்தம் ஆகியவை  சேர்ந்தே பழி வாங்கும் மனநிலைக்கு அவனை தள்ளுகிறது. அதைத் தவிர உணர்ச்சிகர சார்பு, காதல் பற்றிய புனிதங்கள்….

இப்படி ஒவ்வொறு “வகை” குறித்தும் விரிவாக பேசலாம்! ஆனால் சமூகத்தின் அறிவியல் தன்மையற்ற  “ஒழுக்க” வரையறைக்குள் வராதவர்களின் “செக்ஸ்மோ” (Sexual & Emotional needs – am jus trying to coin a term here!)  தேவைகளை வெளிப்படுத்துகையில் சமூகமோ, இணையோ எப்படி அதை எதிர்கொள்கின்றனர்? அருவருப்பு, பயம், கண்டிப்பு, அவமானப்படுத்துதல், நீ ”நார்மலா இல்ல”, ஏன் இப்படி வெறி புடிச்சு அலையுற, நீ சைக்கோ என்பதாக எதிர்கொள்ளும்..

எல்லாரையும் இஷ்டத்துக்கு விட்டா சமூகம் தாங்குமா? நாகரீகம்னு ஒண்ணு இருக்கா இல்லையா, மிருகங்க மாதிரி நடந்துக்குறது மனுஷத் தன்மையா?

மிருகங்கள் பல இணைகளோடு சேர்வது மிருகத்திற்கு இழிவானதல்ல. அது மனிதப் பார்வையில் தான் இழிவானதாக இருக்கிறது! அது இயல்பூக்கத்துடன் வாழ்கிறது.  மனிதர்கள் நாகரீகம், பண்பாடு என்று வரையறுத்துக் கொண்டு மற்றவரை “ஜட்ஜ்” செய்வதை, கட்டுப்படுத்துவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.

ஆதியில் ஒருவருக்கு ஒருத்தி என்கிற பண்பாடு நிலவியதா? ம்ம் அது காட்டுமிராண்டி காலம்.. அதே மாதிரி இப்ப வாழனுமா? ஒழுக்கவான்களே ஒருதார மணமுறை / தற்போது நிலவும் ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு உருவானது ஏன்? எப்படி என்பதை படித்தறியுங்கள்! அறிவியல் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட நூல்கள்! மானுடவியல் நூல்கள்! மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள் சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இயங்குதன்மை குறித்த தெளிவைத் தரும்.

மேலும் தற்போது மட்டும் எல்லாரும் ஒருவருக்கு ஒருத்தர் என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? திருட்டுத்தனமாக நடப்பதால் தான் பெண்களுக்கு அது ஆபத்தானதாக போய் முடிகிறது. அல்லது கொலை, தற்கொலையில் போய் முடிகிறது. பாலியலை மட்டுமல்ல குடும்ப அமைப்பையும் ஜனநாயகப்படுத்தும் தேவை உள்ளது.

உறவுத் தேவைகளில் மேலும் சில அவதானிப்புகளை குறிப்பிடுகிறேன். பேச்சுத் துணை (குறிப்பிட்ட நபர் மீது ஈர்பு ஏற்பட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தால் போதும் என்கிற உணர்வு – அதிலும் கூட நேரில் பார்க்க தயக்கம் இருப்பது, ஃபோனில் மட்டுமே பேசினால் போதும் என்பது, ஃபோன் பேச பிடிக்காது “டெக்ஸ்டிங்க்” மட்டுமே வேண்டுவது என்று வகைகள் உண்டு), ஹேங் அவுட் – அதாவது ஊர் சுற்ற தோழமை, உணர்ச்சிகர பிடிப்பற்ற வகையில் கம்பானியன்ஷிப் தேவைப்படுதல், குரலால் ஈர்க்கப்படுதல், உடல் வாசனையால் ஈர்க்கப்படுதல், சிரிப்பால், நிறத்தால், முடியின் தன்மையால் (உ.ம். சுருட்டை முடி அல்லது நீண்ட கூந்தல்), உடல் வடிவத்தால் ஈர்க்கப்படுதல், அறிவால் ஈர்க்கப்படுதல் (SapioSexual) என்று மனித செக்ஸ்மோ தேவைகள் மாறுபடுகின்றன.

கூடுதலாக தாய் மீது, தந்தை மீது காமுறுதல் (மகன், மகள் மீது) – எனக்கு என் அம்மாவப் பார்த்தா ஆசை வருது என்று சொல்கிற மகன்கள், எனக்கு என் மகள பார்த்தா ஆசை வருது என்று சொல்லக் கூடிய அப்பாக்களை நான் கண்டிருக்கிறேன். பாலியல் தேவை சார்ந்த ஒரு பதிவிற்கு டிவிட்டரில் ஒருவர் – Pls voice to Normalize Incest அதாவது இரத்த உறவில் சகோதர சகோதரி காதல் / காமம் கொள்வது! என்று தொடர்ந்து வேண்டுதல் வைத்துக் கொண்டே இருந்தார்.

கூடுதலாக ஃபீடோஃபீல் என்று சொல்லத்தக்க குழந்தைகள் மீதான ஈர்ப்பு (இது ஒரு மனப் பிறழ்வு என்றும், போதை வஸ்துகள் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம், முறிந்த குடும்பங்களில் வளர்ந்திருக்கலாம், சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று காரணங்கள் சொல்லப்படுகிறது). எதுவாக இருந்தாலும் இது மிகப் பெரிய பிரச்சினை. குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது. எதுவாகினும் இவர்களுக்கான “மன நல மருத்துவம்” தேவைப்படுகிறதல்லவா? அதை விடுத்து அவர்களை “வெறியர்கள்” என்று வகைப்படுத்தி அடித்துக் கொல்ல வேண்டும், தூக்கில் தொங்க விட வேண்டும் என்று சொல்வது பயனளிக்குமா? இவர்களுக்கு உரிய கவனிப்பை கொடுக்கவில்லை எனில் இவர்கள் வெளியேத் தெரியாத வேட்டையாடிகளாகிப் போவார்கள்  அல்லவா?

இதையெல்லாம் பேசினால் “ச்சே இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க” என்கிற எதிர்வினைகள் தான் வரும்.

இது சரியா தவறா என்கிற “ஒற்றை” நிலைப்பாட்டிற்குள் வருவது தான் ஆபத்து! டைவர்சிட்டி என்பதை உணர்வுகளுக்கும் கொடுக்க வேண்டும். “மாறுபட்ட” உணர்வுகளை குறைந்தபட்சம் பேசும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அதன் பிறகு அதற்கு வடிகால் அமைத்துக் கொடுத்தல் என்பது “அறிவியல்பூர்வமாக” இருக்க வேண்டுமே ஒழிய “ஒற்றை அதிகாரக் கட்டமைப்பில்” இருந்து ஒதுக்குதலாக, மறுத்தலாக இருக்கக் கூடாது!

உளவியல்  ஆலோசனைகளைப் பெறச் சொல்கிறோம்! ஆனால் அது அனைவர்க்கும் வாய்க்கப் பெறுகிறதா? பொருளாதார சூழலும், இரத்தம் உறிஞ்சும் உழைப்பு நேரமும் அதற்கு இடம் கொடுக்கிறதா? எத்தனை உளவியல் மையங்கள் உள்ளன? உளவியல் துறையில் “வலதுசாரி பிற்போக்குத்தனங்கள்” இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

பாலியல் துன்புறுத்தல்கள், பாலுறவு வன்முறை என்பது பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை!

சமீபத்தில் ஒரு ஆண் இன்னொரு ஆணால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை பகிர்ந்து கொண்டார். செக்ஸ் டாய்ஸ் புகைப்படங்களை அனுப்புவது. நிர்வாணப் புகைப்படங்கள் அனுப்புவது, தனியாக இருக்கையில் பாலுறுப்பில் கை வைத்தது ஆகியவை தன்னை பாதித்ததாக சொல்கிறார். அந்த நபர் பல ஆண்களிடம் மட்டுமின்றி சிறுவர்களிடமும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் பேசத் தயங்குவதாகவும் கூறினார்.  

சட்டத்தில் சில “சுதந்திரங்கள்” வழங்கப்பட்டிருக்கலாம், ஆனால் சமூக அளவில் பண்பாடு என்னும் பெயரில் நிலவும் அடக்குமுறையால் சமூகம் கடுமையான பாலியல் சிக்கலில், பாலியல் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. மற்ற அடக்குமுறைகளைப் போல் பாலியல் அடக்குமுறை என்பதும் மிகப் பெரிய பிரச்சினை என்பதை சமூகமும், அரசும் உணர வேண்டும். அதை கையாள்வதற்கான அறிவியல்பூர்வ நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும்.

மனிதர்களின் தேவைகள் பற்றிய உளவியலாளர்கள் வரையரையில்

1.   Biological and physiological needs - air, food, drink, shelter, warmth, sex, sleep, etc.

2.       Love and belongingness needs - friendship, intimacy, trust, and acceptance, receiving and giving affection and love. Affiliating, being part of a group (family, friends, work).

மற்ற தேவைகளோடு மேற்சொன்னவற்றையும் விவரிக்கிறார்கள். ஆனால் இதில் காதல், காமம், அன்பு மற்றும் உறவுத் தேவை என்பதற்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. சொல்லப் போனால் மனிதர்களின் எந்தத் தேவையும் ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நிலைத்திருப்பவையே! ஆளும் வர்க்கம் என்றால் தனிச் சொத்து சேர்த்து / சேர்க்க அதிகாரத்தில் இருக்கும் வர்க்கம். அந்த வர்க்கம் வரையறுத்துள்ளதே நாகரீகம்!

ஏற்றத்தாழ்வு, ஆணாதிக்கம், உழைப்புச் சுரண்டல் மற்றும் உணர்ச்சி சுரண்டல், பண்பாட்டு அதிகாரம், அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆகியவை அதன் அடித்தளம். பன்மைத்துவத்தை மறுத்து ஒடுபடித்தாக்குதல், அதிகாரக் குவிப்பு ஆகியவை அதன் குணாம்சங்கள். நாம் வளர்த்துக் கொண்டுள்ள சிந்தனைகள், கருத்துகள் அனைத்தும் அத்தகையதொரு ஆதிக்க கூட்டத்தின் போதனைகள். சொத்துடைமை வர்க்கத்தின் இருத்தலியல் தேவை மற்றும் பொருளாதாரத் தேவைகளில் இருந்தே நமது உணர்வுநிலைகள் கட்டமைக்கப்படுகின்றன. மதத்தின் பெயரால் அது பண்பாடு என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. அது அறிவியலுக்குப் புறம்பானது.

கூடுதலாக சொல்ல வேண்டுமெனில் பாலியல் “மனப் பிறழ்வுகள்”, “வக்கிரங்கள்”, பாலியல் குற்றங்கள் நடக்க அதுவே காரணம்… சுரண்டல் மிக்க  வாழ்வாதாரச் சூழ்நிலைகள்  எப்படி மற்ற குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறதோ, பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. இது குறித்து பேசுவோர் “சமூகத்தை சீர் கெடுப்பவர்கள்”…

மீண்டும் சொல்கிறேன் பாலியலை ஜனநாயகப்படுத்துங்கள், வடிகால், அனுமதி ஆகிய பேச்சுகள் “பாலியல் அத்துமீறலை”, “கட்டாயப்படுத்தலை” ஆதரிக்கவில்லை..  

கலாச்சாரக் காவல் ஒழிப்பு மற்றும் பாலியலை ஜனநாயகப்படுத்துதல் என்றால் என்ன என்பது குறித்து .. தொடரும்…

 

#democratize_sex #GetScientific #sexualpoverty #பெண்களை_காத்திடுங்கள்

 

Dec 18, 2021

பாலியலை ஜனநாயகப்படுத்துங்கள்! Democratize Sex!


 

#justiceforme என்று கேட்கும் நிலையில் தான் சமூகத்தில் ஒவ்வொரு உழைக்கும் மனிதரும் உள்ளனர்.

 கூடுதலாக பெண்கள், குழந்தைகள் தங்கள் உடல்களை ஆண்களிடம் இருந்து காத்துக் கொள்ள போராடி மடிய வேண்டி உள்ளது!

 மீண்டும் மீண்டும் தண்டனைகள் குறித்த ஆவேசப் பேச்சுகள்... சோர்வைத் தருகின்றன! உங்கள் மகளுக்கு நேர்ந்தாலும் இதே போல் பேசுவீர்களா என்கிற குரூரமான கேள்வியையும் நான் எதிர்கொண்டுள்ளேன்.

 சமத்துவமான உழைப்பு உறவுகள் தோன்றாமல் மனிதர்களிடையே சமத்துவம் சாத்தியமில்லை. எனினும், #பெண்களை_காத்திடுங்கள் அச்சமின்றி நாங்கள் நடமாட வழி வகை செய்திடுங்கள் 🙏🏾

 பெண்கள், ஆண்மை பெண்மை பற்றிய கருத்தியலை களைய அரசுகள் உடனடி வேலைத் திட்டத்தை தொடங்க வேண்டும். "பொம்பள" தான என்ற எண்ணத்தை ஒழித்துட வேண்டும். பெண்களுக்கான கல்வி தொடங்கி பொருளாதார சுதந்திரம் வரை நீண்ட நெடிய மாற்றங்கள் தேவை.

போலியான, அறிவியலுக்குப் புறம்பான ஆணாதிக்க தனியடைமை கண்ணோட்டத்தில் இருந்து பாலியல் தேவைகளை அணுகாமல் இயல்பூக்க அடிப்படையில் - அது மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்கிற புரிதலை ஏற்படுத்துங்கள்.

 பசி என்பது எவ்வளவு இயல்பானதோ, அவரவருக்கு விருப்பங்களும், தேர்வுகளும் உள்ளதோ பாலியல் தேவையும் அப்படியே. அதை போலியான ஒழுக்கவாத அடிப்படையில் கொச்சைப்படுத்தாதீர்கள்! அதீத பாலுறவு வேட்கை கொண்டவர்களை ஏளனம் செய்யாதீர்கள்! எந்தப் பாலினமாக இருந்தாலும்!

 பாலியல் வறட்சி என்பது பசிக்கு நிகரான ஒன்றே. Free the society from Sexual poverty 🙄பசி முற்றினால் ஒருவன் கொள்ளை அடிப்பான், கொலையும் செய்வான் என்று சொல்லப்படும் "கதைகளை" கண்ணீருடன் பார்த்துவிட்டு பாலியல் பசி பற்றி பேசினால் காறி உமிழ்தல் பாசாங்கு... முட்டாள்தனம்.

ஆணுக்கு மட்டுமல்ல பெண், மாற்றுப் பாலினம் என அனைவருக்கும் பசியும் உண்டு, பாலியல் தேவைகளும் உண்டு. சிலருக்கு குறைவு, சிலருக்கு அதிகம். அதை சரி தவறு என்று வாதிட யாருக்கும் உரிமை இல்லை.

 பாலியல் உணர்வுகளைக் கையாள்வது குறித்த அறிவியல் பூர்வ கல்வி தேவை! ஒழுக்கவாத போதனைகள் உதவாது! விருப்பத்தை தெரிவிப்பது, 18 வயது நிரம்பியோர் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் "காதல்" என்கிற பாசாங்கு இன்றி "உடலுறவு" வைத்துக்கொள்வதை இயல்பாக்குதல்... உரிய வயதில் Access to Sex (உடலுறவுக்கு வாய்ப்பளித்தல்).. தனி மனிதர்களின் பாலியல் செயல்பாடுகளை கண்காணிக்கும் கலாச்சார காவலை ஒழித்தல்.. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான உடலுறவு பற்றிய கல்வி, வழிமுறை, சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் என சமூகம் நகர வேண்டி உள்ளது!

 சிறுவர், சிறுமியரை, பெண்களை பாலியல் வறட்சிக்கும், பாலியல் வக்கிரங்களுக்கும் பலி கொடுக்கமல் இருக்க பாலியலை (உடலுறவை) ஜனநாயகப்படுத்துங்கள் !

 

fucking #democratize_SEX! (not liberalize!)

stop #Sexual_Exploitation inculcate #Sexual_Respect

 

Feb 29, 2020

பாலியல் காணொளி


22.2.20 அன்று மாலை 6 மணியளவில் நான் வடபழனியிலிருந்து அடையாருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். பேருந்து பயணம் என்பது உண்மையில் நல்ல அனுபவம். சுவரற்ற வெளியும், பலவிதமான மனிதர்களும் காணக் கிடைப்பார்கள். ஆனால் நம் ஊரில் பொதுத்துறை அவலங்கள் பொதுப் போக்குவரத்தையும் விட்டு வைக்காததால். அரிதாகவே பேருந்தில் பயணிக்க முடிகிறது. அதுவும் நான் வசிக்கும் பகுதியிலிருந்து எங்கு செல்ல வேண்டுமென்றால் 2 அல்லது 3 பேருந்துகள் எடுக்க வேண்டும். வேறு வழியின்றி ஓலா, ஊபர் என்று தனியார் போக்குவரத்துக்கே சொத்தை இழக்க வேண்டியுள்ளது. அன்றைய தினம் திடீரென்று இந்த உண்மை சுட, பேருந்தில் பயணித்தேன்.
காணாததைக் கண்டது போல் வேடிக்கை பார்த்து வந்தபோது திடீரென்று முன் இருக்கையில் காணக் கூடாத ஒன்றை கண்டுவிட்டேன்.
ஓர் இளைஞர் தன் கைபேசியில் பாலியல் காணொளியை (‘போர்ன் வீடியோ’) மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த கைபேசிக்கு ஒரு மூடி இருந்ததால், அதை சற்று தூக்கிப் பிடித்தபடி அருகில் இருந்தவருக்கு தெரியாத வண்ணம் பார்த்தவாரு இருந்தார். ஆனால் பக்கவாட்டில் பின்னால் இருப்பவருக்கு அது தெரியும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். எதேச்சையாக நான் திரும்புகையில் என் கண்ணில் பட்டுவிட்டது. அந்த இளைஞனுக்கு 23-25 வயது இருக்கும். சுற்றி இருக்கும் உலகம் பற்றிய எந்த பிரக்ஞையுமின்றி பார்த்துக்கொண்டிருந்த அவர் நிறுத்தம் வந்ததும் எதுவுமே நடக்காததுபோல் கைபேசியை மூடிவிட்டு இறங்கிவிட்டார்.
ஒரு சிலர் இப்படி பொது இடத்தில் ‘ஆபாச’ படம் பார்க்கிறானே அவனெல்லாம் ஒரு மனிதனா என்று ஒழுக்கவாதிகளாக கல் எறிவார்கள். பெரும்பாலும் இவர்கள் பெண் என்பவள் வீட்டு வேலைக்கானவள் என்று சொல்லும் ஆபாசவாதிகளாக இருப்பார்கள்! எந்த ஒரு செயலையும் மதிப்பிடுவதை நிறுத்திக்கொண்டால் மட்டுமே நாம் பிரச்சினைகளை சரிவர ஆய்வு செய்ய முடியும்.
பாலியல் காணொளி என்பதை பாலியல் கல்வி என்கிற நோக்கோடு தயாரிப்பது குறித்து எனக்கு எந்த மறுப்புமில்லை. அதை ஒரு முறைசார்ந்து உருவாக்க வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த ஆணாதிக்க சமூகத்தில் பாலியல் காணொளிகள் ஆண் பெண் உடல்களை, காமத்தை ஒரு சரக்காக, வணிகமாகக் கையாள்வதால் ‘ஆபாச’ காணொளிகள் ஆபத்தானவையாக மாறிவிடுகின்றன. காமம் என்றால் என்னவென்றே அறியாதவருக்கும், குறிப்பாக பெண்ணை நிறைவடையச் செய்யும் நுணுக்கங்கள் அறியாதவருக்கும் இந்த ‘ஆபாச’ காணொளி கோணார் வழிகாட்டியாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை அதில் காண்பனவற்றையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்கிற தீவிர உணர்ச்சியும் பிரச்சினைக்குரியது. நான் இப்போது பேச விழைவது அதுவல்ல.
‘ஆபாச’ காணொளி காண்பது சரியா தவறா என்பதைக் காட்டிலும் அதை காண வேண்டிய வேட்கையை ஏற்படுத்தும் சமூக நிலைமையை நான் யோசிக்கிறேன். இந்தியா பாலியல் வறட்சி கொண்ட நாடு. பசி, பட்டினி ஏழ்மை போன்று காமப் பசிக்கு தீனியற்ற நாடு.
விவரம் தெரிந்த வயதிலிருந்து மனிதர்களுக்கு பாலுணர்வு ஏற்பட்டு அது பதின்பருவ வயதில் கிளர்ச்சியாக உருவெடுத்து 20 வயதிலெல்லாம் தீவிர வேட்கையாக மாறுகிறது. 18, வயது 21 வயது திருமண வயது என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்டாலும் திருமணத்தை சாத்தியப்படுத்துவது ஒருவரின் பொருளாதார நிலைமையே ஆகும். போதாக்குறைக்கு இந்துத்துவ மூட நம்பிக்கைகளின் காரணமாக சாதி, சோதிடம் என்று சில பல தடைகளை வேறு கடக்க வேண்டும். வேலையில்லாத இளைஞருக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். சிலர் மாப்பிள்ளைக்கு அரசு உத்தியோகம் இருக்க வேண்டும் என்பார்கள். இப்படியாக சராசரி திருமண வயது 30; (இல்லை 35 என்று கூட சொல்லலாம்) என்று வந்து நிற்கிறது. அதுவரை காமத்த்தில் உண்டான உடல்களுக்கு காமம் மறுக்கப்படுகிறது.
இதற்கிடையில் காதல், காதலற்ற தோழமை, சாட்டிங், டேட்டிங் என்று ஏதேதோ வகையில் பாலியல் தேவையை சிலர் நிறைவேற்றிக் கொள்கின்றனர். பணம் படைத்தவர்களுக்கு நல் வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. பணமற்றவர்கள் மற்றும் சமூகத்தின் ஒழுக்கவாத கண்காணிப்புகளுக்கு அஞ்சுவோருக்கு வடிகால்?
வல்லுறவுகளுக்கு பாலியல் வரட்சி என்பது முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. குழந்தைகள் இதன் இலகுவான இலக்காகின்றனர்.
காமம் பற்றிய ஆணாதிக்க கருத்தியலையும், கட்டுப்பாடுகளையும் மதவாத அதிகாரத்தையும் கட்டுடைக்க வேண்டிய தேவை இருக்கிறது. தறிகெட்ட அல்லது முறையற்ற சுதந்திர பாலுறவு வேண்டுமென்பதல்ல வாதம். உரிய வயதில் இயல்பூக்க தேவைகளை ஒருவர் பெற வேண்டும் என்னும் புரிதலை வளர்ப்பதே நோக்கம். புரிதலோடு பாதுகாப்பான, பாலியல் சுரண்டலற்ற வழிமுறையையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. நம் குழந்தைகளை, பெண்களை பாலியல் வன்முறையிலிருந்தும், இளைஞர்களை பாலியல் மனநோயிலிருந்தும் காக்க இது அவசியம்.

நன்றி Vanakkam India News 

Feb 13, 2018

நீ... நான்... உடையும் அதிகாரம்


அன்பே
வானின் நீலமாய் நீயும்
பூமியின் சிவப்பாய் நானும்
சேர்கையில் மெய்யாகிறது தொடுவானம்
தொலைகிறது நீ நான் என்னும் அதிகாரம்

சூரியனாய் நீ எழுகையில்
விடியலாய் நான் மலர்கிறேன்
தூரிகையாய் எனை வடித்து
ஓவிமாகிறாய் நீ

இசை நானாக இன்பமாய் நீ
நதி நீயாக ஓட்டமாய் நான்
அலையென மாறி 
உன் பாதங்களை முத்தமிட ஓடி வருகிறேன்
சிப்பியாய் ஓடி ஒளிகிறாய்

உன்னில் நான் ஆவியாக
தென்றலும் மழையும் ஆனோம்
யாப்பும் இலக்கணமும் ஆகி
பாடலும் வரியுமாய் இசைந்தோம்

காதல் நானாக சாரம் நீயாக
காமம் நானாக லீலை நீயாக
இரவு பகலை விழுங்க
முடியாத தேடலில் நம் காதல்

Oct 6, 2013

உடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:

முந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக  கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை உழைப்பதற்கான கருவி, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றென்பது உலகாயத பார்வையாக இருக்க, கடவுள் நம்பிக்கையோ உடல் என்பது கர்ம வினை, பாவத்தின் விளைச்சல், பிரம்மத்தின் திருவிளையாடல் என்ற பேச்சை முன்வைப்பதோடு, உடலை அசுத்தமானதாக பறைசாற்றுகிறது.  சுத்தம் எனும் கருத்து உடலின் வெளிப்புற தன்மையை சுட்டுகிறது. மேலும் அது ’அகம்’ என்ற ஒன்றாகவும் பிரிக்கப்பட்டு ‘அகச் சுத்தம்’ என்பதை வலியுறுத்தித்  திணிக்கிறது.  இது மேலும் தீவிரமடைந்து உடலிலிருந்து உழைப்பைப் பிரித்து அதை ஈனமாக சித்தரித்து, அதை பெண்ணுடலாக, சாதியுடலாக மாற்றி உடல் பற்றிய வரையரையை உருவாக்கியது. 

குரங்கிலிருந்து மனித இனம் பரிணமிக்க உழைப்பே அடிப்படை. இயற்கையை மனிதன் தன்வயப்படுத்தியது உடலுழைப்பைக் கொண்டே. இயற்கையோடு மானுட உடலும் ஒன்றோடொன்று உறவாடியபடி உழைத்த பொழுதிருந்த செழுமையும், ஆரோக்கியமும் பறிக்கப்பட்டுவிட்டது.நவீன கண்டுபிடிப்புகளால் மூளை உழைப்பு அதிகரித்து வரும் சூழலில், உடல் என்பது இயந்திரத்தனமாக மாறிவருகிறது. அப்போதும் இப்போதும் பெண் உடலும், ஒடுக்கப்பட்ட இன மக்களின் உடலுமே ’உற்பத்தி’, ’லாபம்’, ’அதிகாரம்’ எனும் காரணங்களுக்காக சுரண்டப்படும் ஒன்றாய் இருந்து வருகிறது.

மூளையை பயன்படுத்தி, மூடிய அறைக்குள் இருந்து கொண்டு பணி புரிபவர்களின் வருவாய் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் இருக்க, தட்ப வெட்ப சூழல்களுக்கப்பால் தன் உடலை கருவியாகக் கொண்டு உழைக்கும் ஒருவருக்கு கிடைக்கும் தின வருவாய் அதிக பட்சம் முன்னூறு ரூபாய். உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் உழைப்பு என்பதைத் தாண்டி உழைப்பதற்காகவே உடலை சுமக்கும் நிலை. இந்நிலையில் விரும்பிய உழைப்பை செலுத்தி, விரும்பிய வகையில் உடலை பராமரிக்கவும், கொண்டாடவும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.

தனி மனித சுதந்திரம் என்பது அதிகார வர்க்கத்தின் அகராதிக்கு உட்பட்ட ஒன்றாகவும், அவர்கள் பரப்பும் கருத்துரைகளாகவும் தான் இருக்கிறது. உடல் சுதந்திரம் என்று பேசும்பொழுது, குறிப்பாக ஒரு பெண் பேசும் பொழுது அது பாலியல் சுதந்திரம் என்பதாகத்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. (பெண்) உடலுக்கு உடலுறவு ஒன்றே இன்பம் தரக்கூடியது எனும் திணிக்கப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவே இது. அதிகார வர்க்கமானது உடலை இரண்டு முரண்களுக்குள் வைத்து கட்டுப்படுத்துகிறது. ஒன்று உழைப்பை சுரண்டுவதற்கான உடல் பற்றிய இழிவான சிந்தனைகள்.  இது எல்லோருக்குமானது. மற்றொன்று இழிவென்று சொல்லப்பட்டதையே இன்பம் என்று சுதந்திரத்தின் பெயரால் வியாபாரமாக்கப்பட்ட சுதந்திரம். இது ஒரு குறிப்பிட்ட சிலருக்கானது.  இந்த முரண்களிலிருந்து எழும் தாழ்வு மனப்பானமை, போட்டி மனப்பன்மை உடலோடு உடலை மோதவிடுகிறது. உணவு உண்ண, மலம் கழிக்க, உடலுறவு கொள்ள உடலுழைப்பை செலுத்தியே ஆகவேண்டும். எத்தனை அதிநவீன இயந்திரங்களை கண்டுபிடித்தாலும் இம்மூன்று செயலுக்காக மனிதர் உழைத்தே ஆகவேண்டும்.  நிலைமை பொதுவாயிருக்க அரசும் மதமும் மனித உடல்களை பாலினம், வர்க்கம், சாதி, மதம், இனம் எனும் அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. எந்த உடலை எவர் ஆள்வது, எவர் சுரண்டுவது என்பதற்கான திட்டங்களை அது வடிவமைக்கிறது.

உடல் உழைப்பு மற்றும் உழைப்புச் சக்தியை கைப்பற்றி, அவ்வுடல்களை பணப்பரிமாற்றமாக மாற்றுகிறது. பரிமாற்றத்திற்கு அடிப்படையாய் ஒழுக்கவாத கருத்தாக்கங்கள மூலதனமாகக் கொண்டு முதலாளித்துவத்துவமும், மதவாத கோட்பாடுகளும் உடலை, புலன்களை அடக்கி ஆள்கிறது.  அவ்வகையில் புலன்களின் இயல்பான உணர்ச்சிகள் கூட மறுத்தலிக்கப்பட்டு, சுய அனுபவத்தை தாண்டிய ஒரு அறிவு நிலைக்குள் வைத்து கண்காணிக்கப்படுகிறது. கண்காணிக்கப்படும் உணர்ச்சிகளில் முதன்மையாக இருப்பது காதல் மற்றும் காமம். 

காதலும் (ஈர்ப்பு), காமமும் உயிரியற்கை. ஆனால் பண்டைய காலம் தொட்டு பல்வேறு வகையான கருத்தியல்கள் இவ்விரண்டை சுற்றி ஏற்றிவைக்கப்பட்டிருக்கின்றன. காதல் என்பதற்கான விளக்கத்திலிருந்து உடல் உறவுக்கான விளக்கப்படங்கள் வரை இறையியலுக்கு நிகராக ஒரு மாயை கலந்த மிகையுணர்ச்சியுடன் கையாளப்படுகிறது.  ’காதல்’ என்ற பதம் ஒரு குறிப்பிட்ட வகையான ஈர்ப்பு உணர்ச்சி. இவ்வுணர்ச்சியை உயர்த்திப் பிடிக்கவும், நியாயப்படுத்தவும் கொடுக்கப்பட்ட ஒரு சொல்ஆண் பெண் அல்லது ஒரே பாலினத்தவர் இப்படி யாராக இருந்தாலும் ஒருவருக்கு மற்றொருவர் மீது ஓர் விருப்பம், ஈர்ப்பு என்பது பல்வேறு காரணங்களால் தோன்றுகிறது. குறிப்பாக, பதின் பருவ வயதில் இது தொடங்கி விடுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆண், பெண் நட்பு கண்காணிக்கப்படுவதில்லை. எல்லாவகையான தொடுதல் சுதந்திரத்தோடும் அந்த உறவு சாத்தியப்படுகிறது. அந்த பருவத்தில் பால் உறுப்பில் காணபப்டும் வேறுபாடுகளை குழந்தைகள் பேசிக்கொள்வதில்லை என்று நாம் உறுதிபடக் கூறிவிட முடியாது.  குழந்தைப் பருவத்தில் தொடுதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்துக் கொள்ளுதல் என்பதை, அன்பின் வெளிப்பாடாகவே பெற்றோரும், இச்சமூகமம் கருதுகிறது. பெண் பருவம் எய்திய பின்னர் சில விதிமுறைகள் அவளுக்கு விதிக்கப்படுகிறது, பெண்ணுடல் சார்ந்த தன்மையிலிருந்து இவ்விதி எழுகிறது. விளைவுகளைக் கருதி வைக்கப்படும் இவ்விதியில் உடல் சார்ந்த கல்வியோ, அறிவுரைகளோ வழங்கப்படாமல் ‘புனிதம்’, ‘அகத் தூய்மை’, ‘கற்பு’ எனும் கருத்தாக்கத்தால் முன்வைக்கப்படுகிறது. 

புனைவு, இலக்கியங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை பருவ மாற்ற உணர்வுகளை, எதிர் பால் ஈர்ப்பை சுவாரசியமான, வியாபாரப் பொருளாக கையாண்டிருப்பதின் விளைவாக உடலின் வெளிப்பாடான இருவகை உணர்ச்சியில் ஒன்றான ‘ஈர்ப்பு’ காதல் என்று புனிதப்படுத்தப்பட்டும், ’செயல்முறை’ என்பது முறையற்ற காமம் என்றும் இழிவு படுத்தப்பட்டும் கையாளப்படுகிறது.  தொடுதல் என்பது உயிரினத்தின் இன்றியமையாத வெளிப்பாட்டுக் கருவி. மனித உயிரினத்தில் குறிபிட்ட வயதிற்கு பின்னர் அது விதிகளுக்குள்ளாகிறது.  அதுவரை அனுபவித்து வந்த மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு அனுபவம் உடலுக்கு மறுத்தலிக்கப்படுகிறது.  தொடுதல், அரவணைத்தல், ஆகிய வெளிப்பாடுகள் மகிழ்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்புணர்வை, உறவின் வெம்மையை வெளிப்படுத்தக்ககூடியது. இது போன்ற சமிக்ஞைகளை புறம் தள்ளிவிட்டு எதிர்பால் உடல்களின் பௌதிக செயல்பாடுகளை (மதவாதிகள், ஊடகங்கள் பயன்படுத்தும் சொல் ‘கேவலம் உடல் இச்சை) மட்டும் கணக்கில் கொள்கிறது கண்காணிப்பு அரசியல்.  பருவம் எய்திய இரு எதிர்பால் உடல்களின் (சமீப காலங்களில் ஓர்பால் உறவு கொள்பவர்களாக இருக்கக்கூடும் எனும் கண்காணிப்பும் இப்பொழுது நடக்கிறது) எல்லாவிதமான உடல் மொழியையும் காமம் என்பதற்குள் சுருக்கிக் காண்பதை ஆணாதிக்க தாக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட இரு உடல்களுக்கு ஒருவித சமூக அங்கீகாரம் பெற்ற உறவுமுறை தேவைப்படுகிறது. உடல்களுக்கு அவ்வங்கிகாரம் வேண்டி ‘காதல்’ என்ற ஒன்றை பற்றிக்கொள்வதைத் தவிர வேறு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.  ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பு, அதன் தொடர்ச்சியான பேச்சு, பழக்கம், தோழமை என்பது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது, அவரோடு தொடர்ந்து பேசுவது, கூடவே இருப்பது, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது ஒரு மகிழ்வைத் தருவதாக உணரும்பொழுது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது. அவ்வப்போது தொட்டுக் கொள்வது, கட்டி அணைத்துக் கொள்வது என்று அன்பை வெளிப்படுத்த துவங்கும்போது, கூடவே ஒரு குற்ற உணர்வு தலைதூக்குவதை பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடும். சமூகம் விதித்திருக்கும்  ‘கற்பு’ சார்ந்த விதிமுறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் பெற்றோர்கள் மகன் மகள்களைக் கண்காணிப்பதும், சமூகம் என்கிற ஒரு அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பும், அதன் விளைவுகளால் வரும் குற்ற உணர்வும் அடுத்த கட்டம் நோக்கி தள்ளும் பொழுது அவர்களின் ‘உறவைத் தக்கவைத்துக் கொள்ளும்’ போராட்டத்தில் ‘காதல்’ என்ற அடையாளம் உள் நுழைந்துவிடுகிறது.

இதுமட்டுமல்லாது இன்னும் சில உளவியல் கூறுகளை ஆண், பெண் உறவில் அவதானிக்க முடியும். உடல் உறவு என்பது வேட்கையாக இல்லாமல் இருந்தாலும், சிறு சிறு உடல் மொழி வெளிப்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்க வேண்டி, அதற்கு ஒரு ‘புனிதத் தன்மை’ வேண்டி ‘காதல்’ எனும் அடையாளம் தேவைப்படுகிறது.  ’அழகு’ அதற்கான அங்கிகாரம், பாராட்டு இவைகளுக்காக ஏங்கும் அல்லது அது கிடைக்கும் பொழுது மகிழும் மனமானது, அவ்வயதில் ‘காதல்’ என்பதை ஓர் கிடைத்தற்கரிய பேறாக, சாதனையாக, வாழ்வின் அத்தியாவசியப் பொருளாக கருதும் வகையில் மனங்களில் ஊடுருவுகிறது. பெண்ணாய் இருந்தால் தன்னால் ஒரு ஆணை கவர முடியுமா முடியாதா என்று தத்தளிக்கிறது, ஆணாய் இருந்தால் பெண்ணின் கவனத்தை நாடுகிறது. ஈர்ப்பு கொண்ட ஒருவரை தக்கவைத்துக் கொள்ள நினைப்பதை ஒருவகையில் கிடைத்த அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் செயலாக எடுத்துக்கொள்ளலாம். பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் நபர்களுக்கு, ’சமூகம் வரையறுத்திருக்கும் நிறம், உடல் அளவு, அழகு, தகுதி’ எனும் இத்தகைய ’அளவுரு’க்களில் குறைபாடுடையவராக தன்னைப் பொறுத்திப்பார்க்கும் நபர்களுக்கு ‘எதிர் பால்’ உறவு அல்லது தனக்கென ஒரு ‘உறவு’ அமைவது ’தன்முனைப்பாற்றலை’ (egoism) ஆற்றுப்படுத்துகிறது.  அதன் தொடர்ச்சியாக ஏற்படும் மனவெழுச்சியை, தற்பெருமையை இழக்க அந்நபர்கள் தயாராயிருப்பதில்லை, குறிப்பாக ஆண். அதன் தொடர்ச்சியாக ஏற்படும் உடமை உணர்வு அவ்வுறவில் தாக்கம் செலுத்தத் துவங்குகிறது.

ஏற்கனவே ஆண் பெண் உறவு பற்றிய கருத்தாடல்கள், கண்காணிப்புகள், ‘கற்பு’ சிந்தனைகள் ஆகியவை ’தயார் ஆயுதமாக’ கிடைக்க, இயற்கை வெளிப்பாடான ஈர்ப்பு உணர்வு, அதை ஆற்றுப்படுத்தும் உடல் மொழி வெளிப்பாடுகள் இறுகி இறுகி ’காதல்’ என்று உருவெடுத்து ஒரு ‘புனிதத் தன்மை’க்குள் பொய்மையாகச் சுருங்கிவிடுகிறது.  பெண்ணுக்கு இது கிட்டத்தட்ட ‘பால்ய விவாக’த்திற்கு நிகரான விலங்காக அமைந்து விடுகிறது.  ஆணுக்கு அது தன் ‘ஆண்மை’ சார்ந்த சவாலாகிவிடுகிறது. தன் ‘காதலை’ ஏற்க மறுக்கும் பெண்ணை அமிலம் ஊற்றி மிரட்டும் அளவுக்கு இந்த ஆண்மை உணர்வு ஆட்கொள்கிறது. (தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டில் நவீன ஒட்டுக் கேட்கும் கருவிகளைப் பொறுத்தி அப்பெண்ணுக்கும், அவளது பெற்றோருக்கும் அச்சுறுத்தல் விடுத்த நிகழ்வுகளும் இப்பொழுது நடந்தேறிவருகிறது.இதில் உள்ள கண்காணிப்பு அம்சத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.)

பெண்கள் மத்தியில் இது வேறு விதமாக செயல்படுகிறது, சிறுவயதிலிருந்தே அவள் ‘பெண்மையுடன்’ ஆணை சார்ந்திருக்குமாறே வளர்க்கப்படுவதால், ’காதல்’ கொள்ளும் பருவத்திலும் அவள் மனதளவில் ‘மனைவி’ என்ற பாத்திரத்தை கடைபிடிக்கத் துவங்குகிறாள், ஆண் ‘கணவனாக’ அவளை வெளியில் அழைத்துச் செல்வது, அவளுக்காக செலவு செய்வது என்று ‘ஆண்மையை’ கட்டிக் காத்துக் கொள்கிறான். (அவ்வளவும் பெற்றோரின் பணத்தில் நடந்தாலும்). அப்படி செலவு செய்யக்கூடிய ஒருவனையே சில பெண்கள் நாடுவதென்பதும் சமூகத்தில் ஒரு உயர்வு நிலையில் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் மதிப்பின் விளைவே. தனக்கு கிடைத்திருக்கும் ‘ஆள்’ ’பணம் படைத்தவன்’ என்று மார்தட்டிக்கொள்ளும் தற்பெருமை உணர்வு. அது தொடர்ச்சியாக நடக்கும்பொழுது அவனது ‘அன்பிற்கு’ ஈடாக தன் உடலை கொடுப்பது எனும் முடிவுக்குப் பெண் வந்துவிடுகிறாள். மேட்டுக்குடி பெண்ணாய் இருப்பின் தற்காலத்திய குழப்பவாத ’முற்போக்கு’ சிந்தனைகள் அவள் உதவிக்கு வந்துவிடும்.  சமூகத்தின் ’அழகு’ வரையரைகளினால் தாழ்வு  மனப்பான்மையில் உழலும் ஆண் ‘அழகான’ பெண்ணைக் கவர, தக்கவைத்துக்கொள்ள பணத்தை பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.  சாதாரண உடல் ஈர்ப்பும் அதற்குத் தேவைப்படும் வழிகாட்டலும், மறுக்கப்படும் சுதந்திரமும் இரு உடல்களை இத்தகைய சிக்கல்களில் கொண்டுவந்து விடுகிறது. 

மறுபுறம் சமூக வரையரையினால் ‘காதல்’ பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் அது முறிந்துவிடும் பொழுது தற்கொலையை நாடுகின்றனர். அங்கு தனது உடலுக்கு நேரும் தோல்வியை உடல் கொண்டே பழிதீர்த்துக்கொள்ளும் மனநிலை ஓங்குகிறது. ‘உறவு முறிவு’ என்பது பெறும் அவமானத்துக்குரிய விசயமாக கருதும் அளவுக்கு ‘காதல்’ மிகையுணர்ச்சி நிறைந்ததாக உருவேற்றப்பட்டிருக்கிறது. திரைப்படங்கள், மற்றும் எண்ணற்ற ஊடகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.  திருமண முறிவைக் காட்டிலும் ‘காதல்’ முறிவுகள் பெரும் ‘புனித’ அளவீடுகளால் அளக்கப்படுகின்றன. அதனால் நிகழும் தற்கொலைகளும் அதிகமாக இருக்கின்றது. ( அந்தத் தற்கொலையும் புனிதமான ஒன்றாக இங்கு கற்பிக்கப் படுவதை வைத்து இதன் தன்மையை உணரலாம்)

மனதில் ஒருவனை நினைத்துவிட்டால் அம்மனதில் மற்றொருவனை நினைப்பதென்பது வேசைத்தனம் என்று மீண்டும் மீண்டும் ஓதப்படும் கருத்தானது, அச்சிறு வயதிலேயே ஆணின் எத்தககைய வன்முறைகளையும், விதிமுறைகளையும் சகித்துக் கொள்ள வேண்டும் எனும் கருத்தை பெண்கள் மீது திணிக்கிறது.  ஆண்களுக்கு இது கற்பு சார்ந்த விசயமாக இருப்பதைக் காட்டிலும் ‘ஆண்மை’ சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. தற்காலத்தில் இதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது என்று சொல்வது சில மேட்டுக்குடிக் ‘காதல்’களை மட்டும் கணக்கில் கொள்வதாகும். 
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் ஒருவருக்கு மற்றொருவர் உறவு தேவைப்படுகிறது. இது தவிர்க்கவியலாத ஒன்றாக இருப்பதை பெற்றோர் நினைவில் கொண்டு தங்கள் பிள்ளைகளை கையாள்வதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும் அவசியமாகிறது. நிச்சயம் அவர்களும் அத்தகைய உணர்வுகளை கடந்து வந்திருப்பர். உடல் தேவைகளை இயற்கையான உணர்வுகளாக புரிந்து கொண்டால் மட்டுமே பிள்ளைகளுக்கு சரியாக வழிகாட்ட முடியும். மத கருத்தாடல்களை போற்றி ‘கற்பு’, ‘தூய்மை’, ‘புனிதம்’, ‘பெண்மை’ ‘பெண்’ என்று பரிதவிப்பார்களானால் அதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து வென்று விடுவதொன்றும் சிரமமல்ல.   

காதலுக்கும், காமத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக கருதுவது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதாகக்கூடும். அது மனம் என்று கற்பிக்கப்பட்ட ஒன்றை தர்க்கம் செய்து ஏமாற்ற உதவுமே அன்றி உயிரியல் பூர்வ உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.  ’பாலியல் செயல்பாடுகளுக்கு உரிமம் அளிக்கப்பட்ட’ ஒன்றாக காதலை கருதுவது தவறாகிவிடாது. (It’s just license to touch & feed the desire to sex).  இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்று தோன்றலாம், கண்டிப்பாக இருக்கிறது. ‘காதல்’ என்பது ஒரு அதிசயப் பொருளாக, புனிதப் பொருளாக, ‘திரைப்பட விற்பனைப் பொருளாக’ இருப்பதால் அது பற்றிய கட்டுடைப்புகள் தொடர்ந்து அவசியமாகிறது.
 
’ஈர்ப்பு’ உணர்ச்சி உயிரியர்க்கை என்று புரிந்து கொள்வதும், அதை திறம்பட கையாள்வது பற்றிய பாலியல் கல்வியும், பெண்ணுள் ஆளுமையை வளர்க்கும் பெண்ணியக் கல்வியும் தேவைப்படுகிறது. சில பள்ளிகள் பாலியல் கல்வி அளிக்கப்படுகிறது என்றாலும், இன்னும் முழுவீச்சில் அது முன்னெடுக்கபப்டவில்லை.  உயிரியர்க்கை என்று பேசுவதால், விருப்பம் போன்று காமத்தை துய்க்கும் சுதந்திரம் வேண்டியோ அல்லது அதைக் கட்டுப்படுத்த வேண்டியோ இக்கட்டுரை எழுதப்படவில்லை. உயிரியர்க்கையை எப்படி கையாள்வது எனும் அறிவும், அதற்குப் பின்னணியில் செயல்படும் ஆணாதிக்க சமூகம் திணித்திருக்கும் உளவியலை அறிந்துகொள்ளமுற்படுவதும் தேவை என்று வலியுறுத்துவதே இதன் நோக்கம்.  அதன் மூலம் காதலின் பரிசாக கிட்டும் கலப்பு திருமணங்களை எதிர்த்து ‘காதலர்களை’ எரிக்கும் அளவுக்கு செல்லும் வெறியர்களை ’புனிதக் கேடு’, ‘ஊருக்கு அழிவு’, ‘சாதிக் கேடு’ என்று கருதி சமூகம் சகித்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

’காதல்’ உறவில் ஏற்படும் பாலுணர்வு வேட்கை எவ்வாறு கையாளப்படுகிறது என்று பார்க்கையில் பெரும்பாலும் அதற்கு வடிகால் தேடி ‘காதலர்கள்’ தங்கள் வசதிக்கேற்ப இடங்களை நாடிச் செல்கின்றனர். ‘புனிதமாக’ துவங்கும் காதலில் சில நாட்களிலேயே உடல் தேவைகள் ஊடுருவிடுவதை ‘புனிதவான்கள்’ எப்படி பகுப்பாராய்கின்றனர். அதற்கு மத ரீதியான கட்டுப்பாடுகளை ‘அகம்’ ‘புறம்’ என்று பேசி பூசி மெழுகுகின்றனரே ஒழிய அதை இயல்பூக்க அடிப்படையில் பகுத்தாராய்வதில்லை.  மனதை அடக்கியாள்வதைப் பற்றிய பிதற்றல்கள் நடைமுறையில் எத்தகைய பயனையும் அளிப்பதில்லை மாறாக மன உளைச்சல்களையே அதிகரிக்கிறது.  இயல்பூக்கம் என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளுக்கு அத்தகைய உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதல்ல வாதம், ஆனால் குறைந்தபட்சம் அத்தகைய உணர்வுகள் இயற்கையான ஒன்று என்று விளக்கும் பொழுது தனக்கு ஏற்படும் பரவச உணர்வை கையாளவும், அப்பரவசம் கிட்டாத போது மனமுடைவதற்கு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள உதவும். ‘புனிதக் கேடு, கற்புக் கேடு’ என்று எதுவுமில்லை என்ற புரிதல் எழும்போது ஆண், பெண் உறவு இன்னும் ஆரோக்கியமாக வளரும் வாய்ப்பிருக்கிறது. தோழமையோடு பழகும் இருவர் தங்களை சமூகத்தின் பார்வைக்காக ‘காதலர்கள்’ என்று அறிவித்துக் கொள்வதும், உடைமைப் பொருளாக ஒருவரை ஒருவர் கருதிக் கொள்வதும் நேராமல் தவிர்க்கலாம். பாலியல் கல்வி மூலம் ‘சுய இன்பம்’ பற்றிய குற்ற உணர்வு போக்கப்பட்டுவிட்டால் பாலியல் தேவைக்காக எதிர்பாலை சுரண்டும், ஏமாற்றும் போக்கு குறையலாம்.  மேலும் குழந்தைகள், பெண்கள் வன்புணர்வு, உடல் சிதைப்பு, கொலை ஆகியவை இந்த குற்றவுணர்வை போக்குவதன் மூலம் குறையலாம்.  அத்தோடு, ஒரு முதிர்ச்சியான மனநிலையில் தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேடும் நிதானமும் கிட்டும்.

பெற்றோரும், சமூகமும் ‘இராணுவ அதிகாரிகளாக’ செயல்படுவது ஒரு எல்லை என்றால் ’சுதந்திரம்’ என்ற பெயரில் எல்லாவற்றையும் கேள்வியின்றி அனுமதிக்கும் மனநிலை மற்றொருபுறம். கேள்வியின்றி அனுமதிக்கும் ‘சுதந்திர’ உறவைக் காட்டிலும் கேள்வி கேட்டாலும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் உறவே இன்று அவசியமாகிறது. அது முற்றிலும் வெளிப்படைத்தனமையை அறிவுபூர்வமாக அனுமதிக்கும் உறவாக இருப்பது பயனளிக்கும். இது பெற்றோர் பிள்ளை உறவுகளில் மட்டுமின்றி, சமூகத்தின் எல்லா வகை உறவுகளுக்கும் பொருந்தும். சமூகமே காமம் என்ற உணர்வை கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றாக பார்ப்பதில் இருந்து ‘கையாளப் படவேண்டிய’ உணர்வாக பார்ப்பது அவசியம்.  

உடல் வேட்கைக்கு வடிகால் தேடிச் செல்வதைப் பற்றி மேற்சொன்னப் பத்தியில் குறிப்பிட்டதை சற்று விரிவுபடுத்திப் பார்ப்போம்.  ‘காதலர்கள்’ தங்களது உணர்வுகளை பொதுவெளியில் வெளிப்படுத்துவது பற்றி  பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது ஒரு சாராரின் குற்றச் சாட்டு, அது அவர்களது சுதந்திரம் என்பது மற்றொரு சாராரின் கருத்து. இரண்டையும் உரையாடலுக்கு உட்படுத்துவோம்:

எவ்வகையில் உயிரியற்கை செயல்பாடுகள் ஆபாசம் எனப்படுகிறது. எவருக்கு அது ஆபாசம். நாய்களைப் போல் நடந்து கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.  நாய்களை நாம் கண்காணிப்பது நாய்களுக்குத் தெரியாது, அது அதைப் பற்றி அவைக் கவலைப்படுவதும் இல்லை. ஒரு அறிவு கூட இருப்பதால் பகுத்தாராய வேண்டும், பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்போர் இந்த பகுத்தாராயும் திறனை பெரும்பாலும் உடலுறவு, பெண் நடத்தை சார்ந்த விசயங்களுக்குப் பொருத்திப் பார்ப்பதோடு நிறுத்திவிடுகின்றனர். தனிச்சொத்து பேணுதல், பொருள் சேர்ப்பதற்காக செய்து கொள்ளும் சமரசம், சமூகத்தில் நிலவும் படிநிலை பாகுபாடு, சாதிய பாகுபாடு, லஞ்ச லாவண்யம், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றில் எத்தகைய பண்பையும், பகுத்தறிதலையும் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ‘உடலை’ விற்பனைப் பொருளாக பயன்படுத்தும் திரைத் துறை, ஊடகத் துறையினருக்கு ஏன் அத்தகைய ‘பண்பு’ பொருந்துவதில்லை. முறையற்ற உடலுறவு ‘புனிதக் கேடு’ என்போர் முறையுடன் உறவு கொள்ளும் முறையை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்னர் இருந்த சமூக அமைப்பை அறிந்திருக்கவில்லையோ எனும் ஐயம் ஏற்படுகிறது. 

ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும், தந்தை வழிச் சமூகத்திற்கும் மாறும் காலகட்டத்திலிருந்துதான் ’உறவு’ பற்றிய பல்வேறு வகையான சமூக கருத்தாக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருவகையில் ஒடுக்குமுறை மாற்றங்கள் என்று சொல்லலாம்.  ஆடையின் தோற்றம் நிர்வானத்தை ஆபாசமாக்கியது போல், தந்தைக் கடவுள் கோட்பாடு உயிரியர்க்கை உணர்வுகளை ஆபாசம் என்கிறது.  அவ்வளவே. காலத்திற்கேற்ப ஏற்படுத்திக் கொள்ளும் சமூக முறைமைகள் ஒரு வசதிக்காகவேயன்றி அதுவே காலம் முழுமைக்குமான சட்டமாகி விடமுடியாது. மேலும் அப்படி அமைக்கப்படும் முறைமைகள் குறித்தான குறை நிறைகளை உரையாடலுக்கு உட்படுத்துவது தர்க்கபூர்வமான அனுகுமுறையாகக் கருதாமல் ‘புனிதக் கேடு’, ‘சீர் கேடு’ எனக் கருதுவது ஆணாதிக்க மதக் கருத்தாக்கத்தில் ஊறிப் போனதன் விளைவு.

காதலின் வரலாற்றோடு காதல் எனும் உணர்வில் வேதியலின் செயல் மற்றும் உடற்கூறியல் ஆகியவற்றை டயன் அக்கர்மென் விளக்குகிறார்.  காதல் இயற்கையானது, மனவெழுச்சி தரக்கூடியது என்கிறார். அப்படி இயற்கையான காதலுணர்வு மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் காயத்தினால் வேதியல் மாற்றத்திற்கு ஆளாவதைக் குறிப்பிடுவதோடு, பொருளாதாரச் செழுமை அல்லது இன்மை எப்படி காதல் உணர்வில் தாக்கம் செலுத்துகிறது என்றும் விளக்குகிறார். ஜான் எனும் 35 வயது நபருக்கு மூளையில் தீங்கு விளைவிக்கும் கட்டி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அவருடைய ஆளுமைப் பண்பு முற்றிலும் மாறிவிடுகிறது.  மீண்டும் அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவருடைய மூளையின் மேற்புறப் பகுதியில் முன்புறம் உள்ள சாம்பல் நிறப் பகுதி சிதைந்திருப்பதை கண்டறிந்தனர்.  அது ஒரு மனவெழுச்சித் தொழிற்சாலையாக இருந்திருக்கவேண்டும்.  மனவெழுச்சி கொடுக்ககூடிய பாலியல் சார்ந்த ஸ்லைடுகள், வன்முறை நிகழ்வுகள், இதர நிகழ்வுகள் என எவற்றுக்கும் ஜான் எவ்வித சைகையையும் வெளிப்படுத்தவில்லை. பூந்தோட்டமும், கொலைக்களமும் அவருக்கு ஒன்றுபோல் தோன்றியிருக்கிறது.  மனிதத்தன்மையற்று போனார். அதாவது மனிதத்தன்மையுடன் இருப்பது என்பது மனவெழுச்சியுடன் இருப்பதாகும், ஒழுங்காக காதல் உள்ளிட்ட பல வகையான மனவெழுச்சிகளால் தாக்கப்படும் ஒரு உடலைப் பெற்றிருப்பது என்பதாகும்.

மற்றொரு உதாரணத்தில் அவர் ஆப்பிரிக்க ஈக் இன மக்களைப் பற்றிய டெர்ன்புல்லின் கள ஆய்வுத் தகவல்களைக் கொண்டு பொருளாதார சூழல் மனிதர்களில் காதல் உணர்வை, நற்பண்புகளை பறித்துக் கொண்டுவிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். எல்லாப் பழங்குடி இனத்தவரைப் போல் களித்து வாழ்ந்திருந்த ஈக் இன மக்களின் மனங்கள் காதல் உணர்வை இழந்து நின்ற காலம் உருவெடுத்திருந்தது. உகாண்டா அரசு அவர்கள் வேட்டையாடிய ஒரு பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை விதித்த பின்னர் அம்மகளுடைய பொருளாதார நிலைமை சிதைவுறுகிறது.  மூன்று தலைமுறைகள் கடும் வறட்சிக்கும், பட்டினிக்கும் பிறகு ஈக் இனத்தவர்கள் எதிர்ப்பு மனப்பான்மை உள்ளவர்களாகவும், சுய நலமுள்ளவர்களாகவும், அற்பத்தனம் உள்ளவர்களாகவும் ஆனார்கள் என்கிறார். மேலும், “அவர்கள் காதலையும் (*இங்கு காதல் எனப்படுவது உடலுறவு கொள்வதைக் குறிக்கிறது), மற்ற நற்பண்பியல்களுடன் தொலைத்து விட்டனர்.  ஏனெனில் அதை அவர்கள் வழங்க இயலாத நிலையில் இருந்தனர்.  அது பொருளாதாரம் சார்ந்ததாக இருந்தது. அவர்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு விநாடியையும் அவர்களது கழிவறையில் உட்கார்ந்து கொண்டும், பாலியில் உறவு கொண்டும் (மிகவும் அரிதான செய்கை) உணவுக்கு வானத்தை உற்றுநோக்கிக் கொண்டும் செலவிட்டனர்”.  ஒருவருக்கொருவர் கைமைதுனம் செய்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கூட அதில் முழுமுற்றான இன்பத்தை பெறமுடியாமல் இருப்பதை கண்ட அவர் சொல்வது “அவர்கள் உணவு கிடைக்க அடையாளங்கள் உள்ளனவா என்று வேறு வேறு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்” என்கிறார்.

மேற்கூறிய உதாரணங்களில் ஒன்று புறச் சூழலால் நிகழ்ந்த விளைவு, மற்றொன்று நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட காயத்தினால் வந்த விளைவு. இதோடு ஊட்டச்சத்துக் குறைவும் மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு காதல் உணர்வு எத்தகைய மனவெழுச்சியை ஏற்படுத்தும் என்பது இங்கு கேள்விக்குறியதாய் இருக்கிறது. சோமாலிய மக்களுக்கு காதலை அனுபவிக்கும் அகச் சூழலும் இல்லை, புறச் சூழலும் இல்லை என்பதை நாம் நினைவு கூறலாம்.   “ஒரு பழங்குடி இனத்தவரிடையே காதல் இவ்வளவு சீக்கிரம் அழிந்து போகும் என்றால் அது அத்தியாவசியமானது அல்ல” என்கிறார் அக்கர்மென். இச்சூழலில் புனிதத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. “பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற ஔவையார் கூற்று இங்கு ஆராயத்தக்கது. இந்தியாவில் இந்த புனிதப் பித்து சகித்துக் கொள்ள முடியாத நிலையை எட்டியதில் சாதியத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. பசு மூத்திரத்தைக் கூட புனிதம் என்று சொல்லி நம்மை அருந்தச் செய்யும் திறன் மிக்க ‘புரோகிதர்கள்’ நம்மிடையே இருக்கின்றனர்.

“காதல் என்பதும் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமே. காதல் உணர்வு (மனவெழுச்சி) மேலெழும்போது உயிர் மறு-உற்பத்திக்கான அடித்தளமாய் உடலுறவுக்கான இச்சை தூண்டப்படுகிறது. சந்ததிகள் பெருகுவதை உணர்ந்த ஆதிகால மனிதர்கள் அதை ஓர் உயிரியல் கட்டளையாக உணர்திருக்கின்றனர்.  ”அந்த வழித்தோன்றல்கள் காதலிக்கும் ஆற்றலை மரபு வழியில்  பெறுகிறார்கள்.  காலப்போக்கில் காதலிக்கும் எண்ணம் நம்முடைய மரபணுத்திரள் அமைப்பு முறையின் ஒரு பாகமாகிவிடுகிறது. அதன் பிறகு அது எண்ணம், நாட்டம் அல்லது வெகுமதி என்ற அளவில் இல்லாமல் மிகவும் ஆழமாகப் பதிக்கப்பட்டு, வாழ்க்கையில் நம்முடைய ஒவ்வொரு முயற்சிக்கும் துணைபுரிவதாய் அமைகிறது. மனிதர்கள் மனவெழுச்சியுடன் துணிகர முயற்சிகளை மேற்கொள்ளும் முதலாளிகளாக ஆகிறார்கள்” எனும் அக்கர்மென் மேலும் சொல்வது தனக்கு பிடித்தமான ஒருவரை காணும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது என்றும் அதனால் தான் இதயத்தை காதலின் இடமாக கருதத்தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.

காமம் என்பது இழிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது, அதே வேளை காதல் இதயத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால் இரண்டும் ஒரே உடலின் மூலமே உணரப்படுகிறது.  “மனம் மூளையை மட்டும் இடமாகக் கொண்டிருக்கவில்லை, அது உடலெங்கும் முடிவில்லாத நாளமில்லா சுரப்பிகள், நொதியங்கள் கொண்ட குழுவுடன் பயணிக்கிறது. இதயத்தை அறுவை சிகிச்சை செய்துப் பார்த்தால் காதல் எங்கிருக்கிறது என்பதற்கான தடயம் ஏதும் இருப்பதில்லை”. (அக்கர்மென்)
காதலில் எழுவதும் மனவெழுச்சிதான், காமத்தில் ஏற்படுவதும் மனவெழுச்சிதான். இவ்வுச்சம் (Orgasm) சிலருக்கு பிடித்த உணவை சாப்பிட்டவுடன் ஏற்படுகிறது, சிலருக்கு பிடித்த இசையைக் கேட்டவுடன் ஏற்படுகிறது. தொலைபேசியில் எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்பதில் என்று பல்வேறு நிலையில் உச்சத்தை ஒருவர் அடையக்கூடும்.  இவையெல்லாம் புறசுழலின் உதவியோடு ஒரு உடலில் ஏற்படும் மனவெழுச்சி. இதையெல்லாம் ஆபாசம் என்று கருதாத சமூகம் உடலுறவு கொள்ளும்பொழுது அங்கு இரு உடல்கள் உறவு கொள்வதை ஆபாசம் என்கிறது. சாதீய (இனக்) கலப்பு நேர்ந்து விடக்கூடாது, சொத்து கை மாறிவிடக்கூடாது என்பதன்றி இதற்கு வலு சேர்க்கும் காரணம் எதுவுமில்லை.

சுரண்டல்வாத அதிகார மையமாக உருவான மதம் எனும் நிறுவனம் சதா சர்வ காலமும் காமத்தைப் புனிதக் கேடு என்கிறது. அந்நிறுவனமானது முதலாளி வர்க்கத்திற்கும், (முன்னர் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு) அரசுக்கும், மக்களுக்கும் இணக்கம் காண முடியாத ஏற்பாடுகளை செவ்வனே செய்கிறது. இம்மூன்று அதிகார வர்க்கத்தினருக்கும் உழைப்பதற்கும், விசுவாசத்திற்கும் மனித உடல் தேவைப்படுகிறது, அது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை மட்டுமே அவர்கள் அதிகார வர்க்கமாய் இருக்க முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றனர். அதை உழைக்கும் மக்கள் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவர்கள் அறிவு நிலைகள் மழுங்கடிக்கப்படுகின்றது.

எதுவும் பலிக்கவில்லையென்றால் துறவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். ’துறவை’ புனிதமாக எவ்வளவு பேசினாலும், அத்தகைய துறவை மேற்கொள்ளும் உடல், உடல் உறவிலிருந்துதான் பிறந்தது என்பதை மறுக்க முடியுமா. குழந்தையாக இருக்கும் போது ஆராதிக்கப்படும் உடலானது, பருவ வயதெட்டியவுடன், பொருள் ஈட்டும் வயது வந்தவுடன் பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. அந்த உடலைக் குறிவைத்து பலரும் தங்களது கருத்தாக்க அம்புகளைத் தொடுக்கின்றனர். ஒவ்வொரு உடலும் சமூக உற்பத்தித் தேவையின் மூலதனம் என்பதே இதற்கு காரணம்.

தாய் வழிச் சமூக மரபில், உலகயாத மரபில் துறவு எனும் கருத்தாக்கம் இருந்திருக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது. தந்தைக் கடவுள் கோட்பாடு வந்த பின்னரே இக்கருத்து தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. பெண்களின் பல்முனைத் திறனால், மறு-உற்பத்தி திறனால் பொறாமை கொண்ட ஆண் சமூகமானது தாழ்வு மனப்பான்மையிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ளவும், பெண்களிடமிருந்த அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும், சமூகத்தில் தங்களது அதிகாரங்களை நிலை நிறுத்திக் கொள்ளவுமாக ‘துறவை’ தோற்றுவித்திருக்கிறது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இது இரு பலன்களை அவர்களுக்கு கொடுத்தது. ஒன்று பெண்களின் மீது ஆண்களுக்கான கட்டுப்பாடில்லாத அதிகாரம். மற்றொன்று சமூகத்தின் மீதான அதிகாரம். பெண்களின் மீதான அதிகாரம் அவர்களின் மறு-உற்பத்தி சக்தி, அத்தோடு தொடர்புடைய உழைப்புச் சக்தியைக் கட்டுக்குள் வைப்பதாக அமைகிறது. மற்றொன்று சமூகத்தின் மீது அதிகாரம் செய்யும் பலத்தை அவர்களுக்களித்தது.

ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் அவசியம் என்று ஆய்வுகள் சொல்கின்றன, அது ஒரு பாதுகாப்புணர்வை தரக்கூடியது, அதனால் குழந்தை மகிழ்ச்சியுடன் வளர்கிறது, அத்தகைய தொடுதல் இன்றி வளரும் குழந்தைகள் பல்வேறு குறைபாடுகளுடன் வளர்கிறது. எலிகள், குரங்குகள் மற்றும் மனிதர்களிடம் நடத்திய ஆய்வில் தடவிக் கொடுக்கப்பட்டு காதலிக்கப்பட்டவை இயற்கையான வளர்ச்சியைப் பெறுகின்றன அல்லாதவை முடக்கப்பட்டவர்களாக இருக்கின்றன என்று அக்கர்மென் குறிப்பிடுகிறார். 

விலங்குகளும் தங்களுக்குள் ஈர்ப்பு கொள்வதை காமம் என்று விளிக்கும் மனிதச் சொற்கள், மனிதனின் ஈர்ப்பை காதல் என்கிறது. மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்கள் தெய்வீகத் தன்மை, புனிதத் தன்மை நிறைந்ததாக கற்பனை செய்துகொள்வதன் மூலம் தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருப்பதாக கருதிக்கொள்ள போராடுகின்றனர். இது இருப்பு சார் பிரச்சனை, அந்த அடையாளச் சிக்கலிலிருந்தே அறிவின் வீழ்ச்சி துவங்குகிறது.  இந்த அடையாளச் சிக்கலைப் பூர்த்தி செய்ய அதிகார வர்க்கம் பல்வேறு சிந்தனைகளை உட்புகுத்துகிறது. அதில் முதன்மை பெறுவதே காதலும், காமமும். 
காதலின் வேதியல்தன்மையில் பங்களிக்கும் சில சுரபிகள் பற்றி இப்போது காண்போம்.  துத்தநாகம் ஒருவகையான பாலுணர்வூக்கி எனக் கண்டறியப்பட்டிருக்கிறது அதேபோல் ஜின் செங். துத்தநாக குறைபாட்டால், குறைவான விந்தணுவின் எண்ணிக்கை குறைபாடு ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர்கள் ‘மடி, ஆச்சாரம், பத்து’ என்று வெறுத்து ஒதுக்கும் வெங்காயத்திலும், பூண்டிலும் அதிக பாலுணர்வூக்கிகள் இருக்கிறது.

“சுவிப்ட்ஸ்’ எனப்படும் பறவை உணவு, யுனாகி என்னும் விலாங்கு மீன், சாக்லேட்ட்கள், வாசனைப்பொருட்கள், இசை, எக்ஸ்ப்ரஸோ காபி, ஒட்டகத்தின் பால், ஆண்குறி வடிவிலான பழங்கள், தண்ணீர் விட்டான் கொடி, கறுப்பு அவரை, ஆர்ட்டிசோக்ஸ் எனப்படும் முள் நிறைந்த தண்டுச் செடி, முதலையின் விந்து இப்படி எண்ணற்ற பொருள்கள் பாலுணர்வூக்கிகளாக கண்டறியப்பட்டிருக்கிறது. காதலுக்கு மிக நெருக்கமான ஒன்று ‘சாக்லேட்’, சாக்லேட்டுகள், மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் மென்மையான, நாம் காதல் வயப்பட்டிருக்கும்போது உடல் இயற்கையாக உற்பத்தி செய்யும் “ஆம்பிட்டமைன்” போன்ற மருந்துப் பொருள்களைக் கொண்டிருக்கின்றன. மோண்ட்சுமா என்னும் அரசன் அறுநூறு பெண்களைக் கொண்ட அவனது அந்தப்புரத்திற்குப் போவதற்கு முன், அவனுடைய வீரியத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக ஐம்பது கோப்பைகள் சாக்லேட்டை அருந்தினான் என்று ஒரு தகவலைப் பகிர்கிறார் அக்கர்மென். பெண்களுக்கான ஒரு விருப்புப் பொருளாய் சாக்க்லேட் சந்தைப்படுத்தப்படுவதன் காரணத்தை தொடர்ப்புபடுத்திப் பார்ப்போமானால் ஒரு பெண்ணை காதல் வயப்படுத்த, அல்லது உறவு கொள்ளும் மனவெழுச்சியை தூண்ட அது வசிய  மருந்து போல் செயல்படுகிறது என்றால் அது மிகையல்ல.

ஆர்வமூட்டும் மற்றொரு தகவலையும் அவர் பகிர்கிறார் “பாலுணர்வு தூண்டும் பொருள் வளர்ப்போர் இருவார இதழில்” (The Aphrodisiac Growers Quarterly) வந்த கட்டுரையொன்றில் இலக்கியங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட வன்புணர்வுக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 98 விழுக்காடு அவை நிகழ்வதற்கு முன்னல் பாலுணர்வினைத் தூண்டும் உணவுகளை உண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
“இரண்டு தனிஆளுமைத் திறன் வாய்ந்த நபர்கள் சந்திப்பது இரண்டு வேதியல் பொருள்கள் தொடர்பு கொள்வது போன்றது” என்று காரல் யுங் கூறியுள்ளார். இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் கவர்ச்சியாக இருக்கக்கண்டால், அவர்களுடைய உடல்கள் திடீரென வழியும் PEA (பினிலெத்தாலமைன்) என்னும் நரம்பு திசுக்களுக்கிடையே செய்தியனுப்பும் நுண்துகள்களால் நடுங்குகின்றன.  ஆம்பிட்டாமைன் போன்ற ஒரு வேதியல் பொருளான பினிலெத்தாலமைன் மூளையை சொடுக்கி மயக்கமான ஒரு ஆர்வ நிலைக்கு உட்படுத்துவதால், காதலர்கள் ஒரு நல்ல நிலையை உணரவும், புத்துணர்ச்சி பெறவும், நம்பிக்கை உள்ளவர்களாகவும், சக்தியூட்டப்பட்டவர்களாகவும், இரவு முழுவதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சியும் அல்லது முடிவில்லாது பல மணி நேரங்கள் காதல் உறவில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில் உடலின் இயல்பான வேகமும்கூட அதற்கு அடிமையாக்கக்கூடிய ஒரு பழக்கமாக இருக்கிறது.  (மருத்துவர் ஷாலினி)

சிலவேளைகளில் வேதியல் பசியால் தூண்டப்பட்டு மனித மனம் பொருத்தமில்லாத துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாகிறது. அதைத் தொடரும் ஏமாற்றமானது உறவு முறிவுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் அதை எதிர்கொள்ளத் தெரியாமல் காதல் பற்றிய புனித வசனங்களை திரைப்படங்களின் பாதிப்பினால், சமூக நெருக்கடியால் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் அழிக்கும் செயலுக்கோ அல்லது சுய அழிப்புக்கோ செல்லும் நிலை ஏற்படுகிறது.  முதல் ஈர்ப்பு எனும் கவர்ச்சி பதின்பருவ வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது, அது தன் ஆளுமை பற்றிய ஒரு மாயையில் உழல உதவுகிறது.  ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள நிறைய செய்திகள், அனுபவங்கள் இருக்கையில் அருகாமை என்பது ஒரு ஆர்வமூட்டும் உணர்வை ஏற்படுத்துகிறது (இங்கு எண்டார்பின் எனும் சுரபி வேலை செய்கிறது), அதைத் தொடர்ந்து ஒரு நம்பிக்கை வளர்ந்து தனது பிற்பகுதி வாழ்க்கைக்கான துணையாக அவரைக் கருதும் உணர்வு மேலோங்குகிறது. அதன் பிறகு அதற்கேயுறிய சோதனை முயற்சிகள், உறவின் மீது கட்டளைகள் என்று வளர்கிறது. நடைமுறையில் சில நடவடிக்கைகள் நெருடல்களை ஏற்படுத்தும்போது அது தன் ஆளுமைக்கான வீழ்ச்சியாக கருதப்படுகிறதே ஒழிய இரண்டு உயிர்கள், இரண்டு அனுபவங்கள், இரண்டு சிந்தனை சக்திகள் ஏதோ சில காரணங்களால் இணையமுடியாத நிலையாக கருதப்படுவதில்லை.  மாயாவாத புனித கதையாடல்கள், தன்முனைப்பாற்றல்கள் குறுக்கிட்டுவிடுகின்றன.  (எப்படிப்பட்ட வேதியல் பசி இருப்பினும் மூளையானது தனக்கான உடல் தேர்வில் கவனத்துடன் இருக்கிறது. கருப்பு உடல்கள், ‘அழகற்றது’ என்று சொல்லபப்டும் குறியீட்டின் கீழ் வரும் உடல்கள், ஏழையின் உடல்கள், மாற்றுச் சாதி உடல்கள் இவற்றுக்கு சமூகத்தில் கிடைக்கும் வரவேற்பு எத்தகையது. )

ஒரு காதல் உறவு முறிந்து மற்றொரு காதல் உறவு துவங்குவதும் இத்தகைய வேதியல் சுழற்சியே. இழந்த பரவசங்களை, மனவெழுச்சிகளை கண்டடையும் வேட்கை. அதைத் தேடி செல்லவில்லையென்றாலும், அத்தகைய ஒரு நபரை காணும்போது இயல்பூக்கமாக அது அமைந்துவிடுகிறது. மனவெழுச்சி சார்ந்த இவ்வுணர்வில், ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுவதற்குமான ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ள, உண்மையான ஒரு காதலைத் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.  காதலில் ஈடுபடும் இருவரும் ஒருவரை ஒருவர் உடமையாக்கிக் கொள்ள முயல்கிறார்களே ஒழிய தோழமையோடு சம உரிமைகளை பகிர்ந்து கொள்வதில்லை. காதல் என்று சொன்னாலும் அங்கும் செயல்படுவது குடும்ப உறவின் கணவன் மனைவி தாக்கமே. ஆண் மேலானவன், பொருளீட்டி பென்ணை பராமரிப்பவன் எனும் அதிகாரப்போக்கே காதல் உறவிலும் செயல்படுகிறது.  ஆண்களும் பெண்களும் ஒரே வாக்கியத்தைப் பேசும்போதுகூட, அவர்கள் முற்றிலும் வேறுபட்ட பொருளை அதன் மூலம் குறிப்பிடுகிறார்கள் என்று டிபோரா டேனன் “நீ புரிந்து கொள்ளவில்லை” (You Just Don’t Understand) என்ற தனது நூலில் கேளிக்கையாக கூறியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் டயன் அக்கர்மென். 

சுருக்கமாக சொல்வதானால் காதல் என்பது தனியே தோன்றும் ஒரு உணர்ச்சியல்ல. அது ஒரு வகையான இயல்பூக்கம் சார்ந்த உயிரியல் கட்டளை என்ற அறிவியல் பூர்வ அனுகுமுறை உறவுகளை கையாள்வதில் அவசியமாகிறது.  ஊடகங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் எடுத்துரைக்கும் ‘காதல் மாயை’யிலிருந்து விடுபட்டு நமக்கான உணர்வை, உறவுத் தேடலில் நமக்கான விதிமுறைகளை நம் சொந்த அனுபவத்திலிருந்து வகுத்துக்கொள்வதன் மூலம் உறவுகளை செழுமைப் படுத்திக் கொள்ள முடியும்.


இங்கு ஒரு விசயத்தை அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டியுள்ளது. இப்போது நாம் துய்க்கும் காதலானது, நுகர்வுக் காதல்.  இலக்கியம், முதலாளிகள், திரைப்படங்கள், வெகுஜன ஊடகங்கள், இவைகள் கற்றுக் கொடுக்கும் காதலை சுரணையற்ற பண்டங்களாக அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஒரு பெண்ணை எங்கு தொட வேண்டும், என்ன வார்த்தைகளைச் சொல்லிக் கவர வேண்டும், என்ன பரிசுப் பொருள் கொடுக்க வேண்டும், எப்படி உடல் உறவை தொடங்க வேண்டும் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். சுதந்திரம் எனும் சொல்லை கொச்சை சொல்லாக, பொறுப்பற்ற செயல்பாடுகளாக மாற்றுவதில் இந்த ஆணாதிக்க அதிகார மையங்கள் வெற்றி பெற்றுள்ளன.  இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பெண் உடல் மீதும் கட்டுப்பாடு செலுத்துவது, அவளை நுகர்வது அவளது காதலரோ, கணவரோ அல்ல  முதலாளிகள், ஊடகங்கள்.


நன்றி: குறளி