Showing posts with label nirmala kotravai. Show all posts
Showing posts with label nirmala kotravai. Show all posts

Apr 26, 2020

பெண்கள் தங்கள் முற்போக்கு அறிவை யாரிடம் மெய்ப்பிக்க வேண்டும்?

பெண்கள் மயிர் வெட்டி தான் தங்கள் முற்போக்கு அறிவின் தெளிவை மெய்ப்பிக்க வேண்டுமெனில்.. ஆணுக்கு எதை வைத்து அவர் முற்போக்குவாதி, அனைத்திலிருந்தும் விடுபட்டவர் என்று அளப்பது?
ஆம்பிளை அடையாளம் தானே மீசை, தாடி? பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின் என எல்லாரும் வைத்திருந்தார்கள்... முகப்பு படம் கூட வைக்க துணிவில்லாதவர்கள் ஆண்களை பார்த்து இக்கேள்வியை கேட்பார்களா?
முற்போக்கு ஆண்களே மீசையை மழியுங்கள்.. தாடி மயிர் வைக்காதீர்கள்.. நீங்கள் முற்போக்குவாதி... அதிலும் புரட்சிகர ஒரிஜினல் கம்யூனிஸ்ட் முதலில் மயிரை நீக்குங்கள் உலகுக்கு உங்களின் ஆணாதிக்க அடையாள துறப்பை மெய்ப்பியுங்கள் என்று கூறுவார்களா? 
கண்காணிப்பு அரசியல், தூய்மைவாதம், வரட்டு வாதம் இதெல்லாம் உங்களிடமிருந்து ஒழியாதா?
******** 
பெரியாரை படிக்கத் தொடங்கிய நாள் முதல் “பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும்” என்றும் “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” என்று பெரியார் கேட்கிறார் என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளேன். பின்னர் மார்க்சியம் கற்ற பின்னர் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதன் அவசியத்தை பெண் உடல், உடை, உறவு ஆகியவற்றை உள்ளடக்கி எழுதியும், பேசியும் வந்துள்ளேன். அதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தத்துவப் பிழை இருக்காது என்றே நம்புகிறேன்.
இது எதுவும் தெரியாமல் புதிதாக என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வருபவர்கள் அவ்வப்போது பல பட்டங்களை வழங்கிச் செல்வார்கள்.
பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபடுதல் என்பது ஆணைப் போல செய்தலோ அல்லது ஆண் வரையறுத்திருக்கும் முற்போக்கு அளவையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மெய்ப்பித்தலோ அல்ல. அது அவசியமும் இல்லை. ஒருவர் தம் உடலை தன் அடையாளமாக கருதுவதைவிட தன் அறிவை அடையாளமாக கருத வேண்டும் என்பதே அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கான பொருள்.
தன்னை அடுத்தவருக்காக அழகுபடுத்திக்கொள்ளுதல் என்பதிலிருந்து விடுபடுதல்; அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, அழகுநிலையங்களுக்கு சென்று அழகுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பது என்று சில கொள்கைகளை பின்பற்றலாம். ஆனால் ஆணாதிக்க முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) இதை முற்றிலும் தவிர்க்க முடியுமா? Grooming என்றொரு அளவை கொண்டே இங்கு வேலை கொடுக்கப்படும். வேலைக்கு வரும் பெண்கள் ஒப்பனை அணிவது இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவராக இருந்தாலும் பொதுவெளிக்கென்று ஒரு தோற்றத்தை கொண்டிருக்கவில்லையெனில் அது சார்ந்த மதிப்பீடுகளும் இந்த ஆணாதிக்க உலகின் கேடு!
நிலைமை இப்படி இருக்க துறவு மனப்பான்மைக்கு நிகராக இங்கு சிலர் முற்போக்கு அரசியலின் பெயரால் பெண்களை எல்லா நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பது இணையவெளி அராஜகம். நீங்கள் ஏன் புகைப்படம் போடுகிறீர்கள் என்று சிலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளார்கள்.
பிரதான முரண்பாடு, இரண்டாம் முரண்பாடு என்றெல்லாம் பிரித்துக்கொண்டு வேலை செய்வதே தற்போது முக்கியம் என்பவர்கள் ஏன் இப்படி இணையவெளி கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்? (முற்போக்கு பேசுபவர்களை மட்டும்) தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
இவர்களுக்கு உண்மையில் எதிரி யார்?
தனிப்பட்ட நபர்களை கண்காணித்து தூய்மைவாத கேள்விகளை எழுப்புவதுதான் முற்போக்கு அரசியலா? எந்த தத்துவத்தில் அது உள்ளது? தொடர்ந்து முற்போக்கு அறிவூட்டிக்கொண்டே இருப்பதும், அமைப்பில் அணிதிரட்டி பிற்போக்கான உற்பத்தி முறையை முற்போக்காக மாற்றி அமைப்பதற்கான போராட்டத்தில் மக்களை இணைப்பதும் தானே புரட்சிக்கான தேவை? அதைவிடுத்து ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவிலும் ஒருவரைப் பற்றிய முன்முடிவுகளை வைப்பதும், முத்திரை குத்துவதும், ஆதாரங்களே இன்றி எதிரி போல் சித்தரிப்பதுமே சிலரின் வேலையாக இருக்கிறது.
மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய ‘சில’ அடிப்படை கொள்கைகள் (ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் அமைப்பில் இருந்தால் மட்டுமே கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி உடையவர் என்பதையும் அறிவோம்):
1. உழைப்புச் சுரண்டலில் ஈடுபடக் கூடாது.
(ஆனால் தனியுடமையின் ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார சூழலில் - சிறு,குறு தொழில் செய்பவர்கள் தற்போதைய முறையின் கீழ் இதனை பின்பற்றுவது சவாலுக்குறியது).
2. வாடகை, வட்டி வாங்கி பிழைக்கக் கூடாது. உழைத்து வாழ வேண்டும்.
3. எந்த வகையிலும், வடிவத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது.
4. வீட்டில் வேலைப் பிரிவினையை சமமாக வைத்திருக்க வேண்டும்.
5. அதிகாரத்திற்கு விலை போகக் கூடாது. மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
6. உழைப்புச் சுரண்டல் மூலம் சொத்து சேர்க்கக் கூடாது.
- இதில் சில தெளிவுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தம் உழைப்பில் அல்லது குடும்பத்தினர் சேர்ந்து உழைத்து சுறிதளவு நிலமோ, சொந்த வீடோ, கடையோ வைத்திருந்தால், அப்படி உழைத்து பாட்டன் முப்பாட்டன் சேர்த்த சொத்து பரம்பரையாக வந்திருந்தால் அது உழைப்புச் சுரண்டலில் – அதாவது உபரி மதிப்பில் – தனியுடைமை அபகரிப்பு செய்து ஈட்டிய சொத்து அல்ல – என்பதால் அதை பறிமுதல் செய்யச் சொல்லி வழிகாட்டுதல் இல்லை! (நீ கம்யூனிஸ்டு ஆனா சொந்த வீட்ல இருக்க, கார் வச்சிருக்க என்றெல்லாம் அறியாதவர்கள் கேள்விகள் கேட்பார்கள்! என்கிட்ட சொந்த வீடுமில்ல, காரும் இல்லீங்கோ!)
உழைப்புச் சுரண்டலில் – உபரி மதிப்பு அபகரிப்பில் ஈடுபட்டு சொத்துக் குவிப்பு, செல்வக் குவிப்பில் ஈடுபடுபவர்களின் சொத்து, அவர்களிடம் இருக்கும் உற்பத்திச் சாதனங்கள் (ஏனென்றால் அவை அவர்களின் உழைப்பால் சேர்ந்த சொத்து கிடையாது) போன்றவற்றை – அதாவது முதலாளிகள், பெருமுதலாளிகளின் சொத்துகளை, நிலவுடைமையாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அவசியத்தைப் பற்றி தான் மார்க்சியம் பேசுகிறது.
புரட்சிகர உற்பத்தி முறை / உற்பத்தி உறவுகளுக்கு மாறுகையில் அதாவது பொதுவுடைமை சமூகத்திற்கு மாறுகையில் படிப்படியாக மாற்றங்கள் நடைபெறும்.
(இந்த பட்டியலில் விரிவாக இன்னும் நிறைய சேர்க்கலாம். நான் இங்கு சுட்டிக்காட்டுவது தனி நபராக ஒருவர் குறைந்தபட்சம் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள். இதுவும் மார்க்சியத்தை கற்று அதிலிருந்து சாரமாக முன்வைப்பது…)
7. அதேபோல் #கம்யூனிஸ்டுகள் இந்த வேலைதான் செய்யவேண்டும். இது நல்ல வேலை, அது கெட்ட வேலை என்றெல்லாம் எந்த ‘அறவாதமும்’ தத்துவத்தில் இல்லை. ஓர் அரசு ஊழியர் அரசிடம் வேலை செய்துகொண்டே எப்படி சங்கம் அமைத்து தம் உரிமைக்காகவும், மாற்று அமைப்பிற்காகவும் இந்த அமைப்பிற்குள் இருந்துகொண்டே போராடுகிறாரோ, அதேபோல் தான் தனியார் நிறுவனங்களில் தம் உழைப்புச் சக்தியை விற்று வாழும் நிலையில் உள்ள உழைப்பாளிகளின் நிலையும். கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு சீரியல்ல வேலை பார்க்குற, சினிமால வேலை பார்க்குற, நடிக்குற என்றெல்லாம் கேட்பவர்கள் தத்துவத்தை தவறாக முன்வைக்கிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என்றே பொருள். (அறிவார்ந்த வகையில் உரையாட இயலாதவர்கள் வசுவிடம் வைத்த கேள்விகள் இவை).
நிலவும் அமைப்பில் இருந்துகொண்டே தான் மாற்று அமைப்பிற்கான போராட்டங்கள், அறிவூட்டலில் ஈடுபட முடியும். துறவு மனப்பான்மையில் செயல்பட்டால் அது கருத்துமுதல்வாதம் அல்லது பொறாமை.
அமைப்பில் முழுநேரம் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும் தோழர்கள் நிச்சயமாக தியாகிகளே. அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. அதற்காக அமைப்பில் இல்லாதவர்களை எல்லா நேரமும் மட்டம் தட்டும் மனநிலையில் இருப்பதென்பது ஓர் அதிகார மனோபாவம். இது முற்போக்கு பண்பாகாது! முற்போக்குவாதி என்பவர் எப்போதும் உரையாடலில் ஈடுபடுவார், குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் அல்ல!
புரட்சிக்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதும், சமூக இயக்கம் ஒரு பொருளாதார அமைப்பின் கீழ் நடப்பதும் சமகாலத்தில் நடைபெறுவதுதான். கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு அவரவர் சமூகத்திற்கு பங்களிப்பு செய்வது என்பதும் நடப்பதுதான்.
அதேபோல் பெண்கள் விசயத்திற்கு வருவோம். ஜென்னி, க்ளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வா உட்பட அனைத்து முற்போக்கு பெண்களும் கூந்தல் மயிர் வைத்திருந்தவர்கள், பொதுவெளிக்கேற்ற வகையில் தங்களை ‘அலங்கரித்து’க் கொண்டவர்கள் தானே! அவர்களை முன்வைத்து இந்த முற்போக்கு காவல்கர்கள் கேள்வி கேட்பார்களா?
மதவாதிகளுக்கும் சில #முற்போக்கு ஆர்வக் கோளாறுகளுக்கும் வித்தியாசமில்லை. அதுவும் பெண்களையே தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இவர்கள் முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்கிவிட்டது.
மக்களிடம் #மார்க்சியம், முற்போக்கு #அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்தரப்பட்ட பிரிவினர் நமக்கு தேவைப்படுகிறார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களை குத்திக்கொண்டே இருந்தால், ஓடத்தான் வேண்டும். நாற்காலியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு போட்டி போட இங்கு யாரும் வரவில்லை.
அமைப்பில் இல்லாதவர்கள் தம்மால் இயன்றதை செய்ய முற்படுகிறார்கள். யாருக்காக? தம் சொந்த நலனுக்காகவா? (விளம்பரப் பிரியை என்றால் வலது பக்கம் போனா இன்னும் சிறப்பான வாய்ப்பும், பணமும், புகழும் கிடைக்கும்).
நட்பு சக்திகளை குடைந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?


Apr 18, 2020

கண்காணிப்பு அரசியல் என்பது இடதுசாரி அரசியல் அல்ல


இனி நான் யாருக்கும் 'தோழர்' இல்லை! இனி எமக்கும் யாரும் 'தோழர்கள்' இல்லை! Simplifying life amidst uncultured, mean-spirited so called 'leftists'. Better to stay away (self-Isolation) than feeling traumatized by certain left-let downs! This is to do with people and not left politics!

ஒரு பெண்ணின் கவிதை தொகுப்பிற்கு எதிரான அடக்குமுறை பாணி ஆணாதிக்க தாக்குதல்கள், அம்பேத்கரை விமர்சித்த எனது மொழிப்யெயர்ப்புக்கு எதிரான ‘தலித்திய-கம்யூனிஸ்ட்’ தாக்குதல்கள் என தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் ‘பல இடதுசாரி’களின் வன்மம் நிறைந்த எதிர்வினைகள் என்னை மன அதிர்ச்சிக்கே உள்ளாக்கியிருக்கிறது. அத்தகையோர் இணைய வன்முறையில் (cyber bullying / cyber harassment) வலதுசாரிகளுகு சற்றும் குறைந்தோர் அல்லர் என்பது என்வரையிலான அனுபவம்.

ஓர் இடதுசாரி அமைப்பு மற்றும் தனிநபர்கள் சிலர் ஒரு கவிதை தொகுப்பிற்கு எதிராக நடந்துகொண்ட விதம் எந்த வகையிலும் இடதுசாரி பண்புடைய செயலாகாது என்று கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக எழுதியதற்கு என் மீது ‘கண்ட’ முத்திரைகளை குத்தினார்கள். ஆனால் ஒரு போராட்டம் என்று வரும்போது ஆதரவு வேண்டி அழைப்பார்கள்! கூட்டத்திற்கு கூப்பிட்டு அவமானப்படுத்துவார்கள்! “இதெல்லாம் யாரு? இவங்களை எதுக்கு மேடைக்கு ஏத்துறீங்க? நம்மாளுங்கள மேடைக்கு ஏத்து” என்று ஒரு சிவப்பு சட்டை - கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னபோது நான் அவர் பின்னால் தான் நின்று கேட்டுக்கொண்டிருந்தேன்! ஆரம்பகாலத்தில் இது போல் பல மோசமான அனுபவங்கள்!

இருப்பினும் கம்யூனிஸ்டுகள் என்றால், மார்க்சியம் என்றால் எனக்கு உயிர்! அவர்கள் மீது பெரும் மரியாதை எனக்கு எப்போதும் உண்டு. கம்யூனிஸ்டுகளின் தியாகமின்றி, போராட்டமின்றி இன்று நாம் இந்த வாழ்வை இப்படி அனுபவிக்க முடியாது என்கிற நன்றி கடன் எனக்கு எப்போதும் உண்டு.

பறையர் ஆதிக்க அரசியல் சூழலில் அருந்ததியருக்கு நியாயம் வேண்டி செல்ல ‘கம்யூனிஸ்ட்’ என்கிற அடிப்படையில் அழைப்பார்கள் அம்பேத்கரை விமர்சித்ததும் சாதிவெறி பிடித்தவர் என்று பண்பற்ற ஆணாதிக்க வசைகளை, வன்மம் நிறைந்த சாதிய வசைகளை வைப்பார்கள். அவர்களும் தங்களை இடதுசாரிகள் / முற்போக்காளர்கள்/ சமூக போராளிகள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி ஒவ்வொன்றையும் தனியாகவும், வசுவோடும் இணைந்துமே எதிர்கொண்டு 10 வருட காலங்கள் மார்க்சிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளேன். விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் 5,6 ‘நபர்கள்’ அப்போது ‘மனிதர்களாக’ ஆதரவு தெரிவித்தார்கள். அவ்வளவே! இங்கு மற்ற ‘லாபியிஸ்டுகளுக்கு’ சாதாரண வெட்டிப் பேச்சுகளுக்கு கிடைக்கும் ஆதரவு கூட நான் மேற்கொண்ட மார்க்சிய அறிவூட்டலுக்கான விமர்சன போராட்டங்களுக்கு பெற்றதில்லை என்பதே உண்மை!

ஆதரவுகளை எதிர்பார்த்ததுமில்லை! நான் சிலரிடம் சொல்வதுண்டு ‘நான் அரசியல் தீண்டாமைக்கு உள்ளான ஆள்! தலைக் கணக்கு தேவையென்றால் நம்மை உடன் சேர்த்துக்கொள்வார்கள் (கொச்சையாக சொல்வதெனில் பயன்படுத்திக் கொள்வார்கள்) அதன் பிறகு தாக்கப்படுகையில் வேடிக்கை பார்ப்பார்கள் (வெகு சில தோழர்கள் தவிர), மார்க்சிய எதிர்ப்பாளர்கள் பெண்ணான என்னையும், இன்னொரு பெண்ணான ரங்கநாயகம்மாவையும் கொச்சை கொச்சையாக திட்டி புக்கு போட்டு கூட்டம் நடத்தி தங்கள் அடையாள அரசியலை அரங்கேற்றுவார்கள்! அப்போதும் வேடிக்கை பார்ப்பார்கள். கண்டும் காணாதது போல் இருப்பார்கள். ஏன்னா அது சாதிய பிரச்சினை என்னும் சென்சிட்டிவ் இஷ்யூ… எனக்கு ஆதரவு தெரிவிச்சா அப்புறம் அடுத்த டார்கெட் அவங்கதான்… அப்ப எங்க போச்சு பெண் ஒற்றுமை, கம்யூனிஸ்ட் ஒற்றுமைன்னு கேட்றாதீங்க? இது சுயபச்சாதாபமல்ல. இந்த வெளியை சரியாக புரிந்து கொண்ட வரையறுப்பு அவ்வளவே!

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் துணிந்து நின்று என் எழுத்துகளின் வாயிலாக, செயல்பாடுகளின் வாயிலாக நான் யார் என்பதை தூற்றியவர்களே நாணும் அளவுக்கு மெய்ப்பித்து காட்டினேன். ஒரு கட்டத்தில் ‘ஆதெண்டிக் நபர்களின்’ ஆதரவும், ‘சான்றிதழும்’ கிடைத்தது. நன்றிகள்.

தனிப்பட்ட வாழ்விலும், சமூக வெளியிலும் பெரும் இழப்புகளை சந்தித்துக்கொண்டு தான் இங்கு இந்த இடதுசாரி அரசியல் களத்தில் இயங்க வேண்டியுள்ளது. எல்லாரும் அப்படித்தான் இயங்குகிறார்கள். எனவே ஒருபோதும் அதற்காக நான் துவண்டதில்லை!

ஆனால் தற்போது ’பாலுறவுவாதம் / பாலியல் சுரண்டல்’ என்னும் பெயரில் நடந்து வரும் இணைய வழி பகிர்வுகள் அறமற்ற வகையில் செல்கிறது. எடுத்துக்கொண்ட பிரச்சினை மற்றும் நோக்கத்திற்கு மாறான திசையில் சென்று விட்டது. அது ‘மார்க்சியத்தின்’ பெயரால் நடக்கிறது! இதைவிட கேவலம் ஏதும் இருக்க முடியாது!
என் மனதின் அறம் வீழ்த்தப்பட்டதாக உணர்ந்ததால் நான் என் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தற்காலிகமாக முகநூலில் இருந்து வெளியேறினேன். தற்போது அரசியல் பேசுவதில் இருந்தும் விலகி இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.

என்ன நியாயங்கள் சொன்னாலும் கண்காணிப்பு அரசியல் மற்றும் பெண்களின் அந்தரங்கங்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வக்கிரம் பிடித்த இந்த ஆணாதிக்க சமூகத்தின் பத்தினி vs வேசி என்னும் வியாக்கியானங்களுக்கு இடதுசாரி அரசியலின் பெயரால் தீனி போடப்படுகிறது. அதை கண்டு சகித்துக் கொள்ளும் கல் மனம் எனக்கில்லை. இப்படி செய்துதான் இந்த சமூகத்தையும், மார்க்சிய தத்துவத்தையும், பெண்ணியத்தையும், பெண்களையும் காக்க வேண்டுமெனில், நான் அவளில்லை! மார்க்சியத்தை போதிக்கும் அவசியமும் எனக்கில்லை என்னும் மனநிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்!

I am traumatized because of certain incidents and let me do it my own way. Thanks in advance for any of your advises! I have had enough! I am always a leftist! But choosing to stop talking about it! That’s it. And most importantly please do not tag me in any posts!

யாரும் எனக்கு எந்தவித ஆறுதலையோ, ஆலோசனைகளையோ வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் உள்பெட்டியில் உரையாட வர வேண்டாம். நான் என்னோடு உரையாட வரும் ஒவ்வொருவரையும் எப்போதும் பொருட்படுத்தி பதில் அளிப்பேன். அது மனிதர்களுக்கு அளிக்கும் மரியாதை. ஆனால் இது விசயமாக யார் பேச வந்தாலும் என்னால் அதற்கு இடமளிக்க முடியாது என்பதை மிகுந்த மரியாதையுடனும், வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஏதோ பெரிய ஊடக பிரபலமில்லை ஊடகத்தின் வாயிலாக அறிக்கை விட. ஒரு சில்லறை இந்த சில்லறை ஊடகத்தில் தான் தனக்கான தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். எனவே ‘மீண்டு’ வந்து இதை இங்கு பதிவு செய்கிறேன்.
இறுதியாக, ‘scams & exposures’ என்னும் பாணியிலான செயல்பாடுகளில், அதிலும் குறிப்பாக ஆணாதிக்க வக்கிர சமூகம் நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு அலையும் காமம் சார்ந்த விசயங்களை அம்பலப்படுத்துவது, கேள்விக்கு உட்பத்துவது பெரிய சமூக சேவை, மனித உரிமை காக்கும் செயல் என்று செயல்படும் நபர்கள் இனி எக்காரணம் கொண்டும் தயவு செய்து என்னை தொடர்புகொள்ளாதீர்கள். பாலியல் சுரண்டலில் இருந்து ஒரு பெண்ணை காக்க வேண்டும், தவறான வழிநடத்தல் செய்யும் ‘குழு’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட மீட்பர்(கள்) சட்டத்தை நாடியிருக்க வேண்டும். தேவைப்படும் ஆதாரங்களை திரட்ட சட்டத்தின் ஆணைபடி காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கும். அதைவிடுத்து தனிநபராக களம் இறங்க, அதிலும் அதை இணையத்தின் வழி அரங்கேற்ற யார் அதிகாரம் வழங்கியது? கண்காணிப்பு அரசியலில் ஈடுபடும் அதிகாரம் தனிநபருக்கு உள்ளதா? எந்த அமைப்பில் இருந்தாலும் தனிநபருக்கு அந்த அதிகாரமில்லை. ஒருவேளை ஏதோ ஒரு வகையில் ‘சமூக அக்கறை’ சார்ந்து சில ‘அமைப்புகளுக்கு’ அந்த அதிகாரம் வழங்கப்படுமாயின் அது மிகவும் ஆபத்தானது. மனித உரிமையின் அடிப்படியில் அது எதிர்க்கப்பட வேண்டும்.

காவல்துறையோ, சட்டமோ புகார்களை எடுத்துக்கொள்ள மறுத்திருப்பின் அதற்கெதிரான போராட்டத்தை தொடுக்கலாம் என்னும் அரசியல் அறியாதவரா நாம்?

பாடம் புகட்டுங்கள்! பாடம் புகட்டுங்கள் என்று சிலர் கூப்பாடு போடுவதும். கானொளி வெளியிட்டதில் உடன்பாடில்லை… உடன்பாடிருக்கு.. பலவித கருத்துகள் மோதட்டும் அப்போதுதான் ஒரு தெளிவு ஏற்படும் என்று மாறி மாறி பேசுவோரும் என்ன சாதிக்க விரும்புகிறார்கள்? இதுவும் ஒருவித அதிகார மனோபாவமே. வலுவுள்ளோர் வலுவற்றோரை மிரட்டுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை.

இதுவரை நடந்திருக்கும் காமக் களியாட்ட எக்ஸ்போஷர்களால் இந்த சமூகத்தில் ஏதேனும் மாறியிருக்கிறதா? பிட்டு படம் பார்க்க விரும்பும் வக்கிரம் பிடித்தவர்களுக்கு விருந்தளித்ததை தவிர இங்கு என்ன மாறியிருக்கிறது? இதுபோன்ற பாலியல் எக்ஸ்போஷர்கள் உண்மையில் முதலாளித்துவ / குட்டிபூர்ஷுவா வக்கிரம் பிடித்த தன்முனைப்புவாதமன்றி எந்த வகையிலும் அறமார்ந்த செயலாகாது. எந்த வகையிலும் அது சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது. அதிகாரம் படைத்தோர் கைலாசா அமைத்து தங்கள் காமக் களியாட்டங்களை தொடர்வார்கள். எளியோரும் வரியோரும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வார்கள். அவ்வளவே! (தப்பு செய்யும் போது தைரியமா செஞ்சீங்கல்ல… அப்ப இதையும் தைரியமா எதிர்கொள்ளுங்கன்னு தங்கள் அரைகுறை அகவாத ஒழுக்கவாத பிட் நோட்டீசை எடுத்துக்கிட்டு சிலர் வருவாங்க!)

மார்க்சியம் என்பது புறவயமாக சமூகத்தை அணுக கற்றுக்கொடுக்கிறது. அது பெருங்கருணை! அதை இன்று கேலிக் கூத்தாக்கிவிட்டார்கள்! அதன் வழியில் நின்று பார்த்தால் எப்போதும் கருத்தியல் போர் தொடுக்க வேண்டுமே அல்லாது தனிமனித எக்ஸ்போஷர்களை மூன்றாம் நபராக தனிமனிதர்கள் செய்வது அறமாகாது!

அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தாமல், குடும்ப உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் மறுக்கப்படும் பெண் உரிமை சார்ந்த சிக்கல்களை களையாமல் சில மிரட்டல்கள் மூலம் தனிநபர் மாற்றங்களை எதிர்பார்ப்பது எத்தனை அபத்தமானது, அராஜகமானது! This is a one-sided stand! மார்க்சிய தத்துவார்த்த அறிவூட்டல் மற்றும் கருத்தியல் விவாதங்கள் மூலமாக முதலில் சமூகத்தின் அறிவுநிலையையேனும் மாற்றியுள்ளோமா? ஆணாதிக்க சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்பது இப்படித்தானே முன்னெடுக்க வேண்டும்! அதேபோல் தனிமனித சுதந்திரம் என்று பாலுறவு விசயத்தில் பேசுவோருக்கும் அதன் சாதக பாதகங்களை விளக்கி உரையாடலாம். ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதுஅவரவர் சுதந்திரம்! அதனால் யாரேனும் பாதிக்கப்படுகையில் அவரவர் அதை எதிர்கொள்ளட்டும். சட்டத்தை நாடட்டும்! சமூக சீரழிவு நேர்கிறதென்றால் அதையும் சட்டத்தின் முன் வைத்து முறையிடுங்கள். Moral Policing is not the solution for this!

அதுவரை பாதிக்கப்படுவோரை கைவிட்டுவிட வேண்டுமா என்றால்… சட்டத்தை நாட வழிவகை செய்யுங்கள்! அவ்வளவே! போராட கற்றுக்கொடுங்கள். நீங்கள் நாட்டாமையாகி பஞ்சாயத்து செய்யாதீர்கள். இது ஒருவகை இணையதள கப்-பஞ்சாயத்து! இதுவும் ஆணாதிக்கமே!

பாதிக்கப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட பெண் என்றால் அந்த பெண் தன் அடையாளங்களை மறைத்து தனக்கு நேர்ந்த துன்பங்களை பொதுவெளியில் பகிர, சட்டத்தை நாட, காவல்துறையை நாட, ஊடகத்தை நாட இங்கு ஆயிரம் வழியுள்ளது மீட்பர்கள் ஏன் அப்படி வழிநடத்தவில்லை? பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏன் பொதுவெளிக்கு வர அஞ்சுகிறார்? சமூகத்தை காக்கும் அக்கறை அவருக்கு இல்லையா? அதற்காக போராட வரமாட்டாரா? அப்படியென்றால் தவறு செய்து தன் அடையாளத்தை மறைத்துக்கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது, ஏனென்றால் வெளியில் வந்துவிட்டார்… மற்ற பெண்கள் இந்த மிரட்டலாளர்களின் ஆணைக்கு இணங்காமல் இன்னும் அந்த குழுவிலே இருக்கிறார்கள், எனவே அசிங்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்… அல்லவா?

இதுபோல் எனக்கு ஆயிரம் கேள்விகள் உள்ளன.

இப்போது இதன் பொருட்டு வன்மம் கொண்டு என்னையும் கண்காணிக்க தொடங்குங்கள்! நாம் அதற்காகத் தான் ‘முற்போக்கு’ அரசியல் கற்றோம்!

வாழ்க உங்கள் சமூக சேவை!

இனி என்னுடைய இந்த முகநூல் பக்கமானது வெறும் தனிப்பட்ட விளம்பரப் பலகையாக மட்டுமே இருக்கும். Just a personal page for fun and some light hearted ‘talks’. ஆமாம்! இனிமேல் ஜாலியா பேசுவோம்! தனியாதாங்க! குழுவா இல்ல https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;)

You wana call me ‘opportunist’, ‘weak’, ‘emotional’, ‘stupid’, ‘anti-revolutionary’, ‘individualistic approach’ blah blah blah… pl go ahead! I have had enough branding from ‘many leftists’ already! Ofcourse I have seen enough as well! When the left movements (individuals here and there are condemning) are silent about an Individual’s Moral Policing sort of Sexual scam exposures happening in the name of Marxism or lefitism (infact one movement had encouraged it and justified such activities in the past) and not willing to condemn it – not even women’s movement are coming forward to condemn this! Then let me stay away from left politics!

I did write about Free-Sex and the ill effects of hyper-sexualization from Marxist point of view after few people tagged me in their posts! But that was pure theoretical! That is education and not slandering. But I was always against personal defamation, moral policing, taking 'proofs' in an unauthorized manner and requested the ‘good shepherd’ in polite manner not to do such things and also informed that incase such things happen I will not be a part of it. Hence when it happened, I quit!

Thank you Friends! No more ‘comradeship’! am sure you have got nothing to loose in this! But I have much to loose! But that’s ok… I am used to loses! Authentic and Committed leftists may unfriend me https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4c/1/16/1f642.png:)

Always love to Marxism and Proletarian revolution ❤️


Mar 9, 2020

பெண்ணியம் என்றால் என்ன?



பெண்ணியம் என்றால் என்ன? – கொற்றவை

காப்டன் விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு! அதேபோல் இங்கே பலருக்கு பிடிக்காத வார்த்தை “பெண்ணியம்”. பெண்ணியம் என்றால் என்னவென்று அறியாததால் வரும் வெறுப்பென்று நாம் கடந்து செல்லலாம், ஆனால் உண்மையில் அதற்கு மறுபெயர் பெண் வெறுப்பு (misogyny).  காலம் காலமாக அடங்கிப் போன பெண்களையே பார்த்துப் பழகிப் போன சமூகத்திற்கு பெண்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்திப் பேசத் தொடங்கியதும் பயம் தொற்றிக்கொண்டது. கம்யூனிசம் என்னும் பூதத்தைக் கண்டு முதலாளிகள் நடுங்குவதைப் போல் பெண்ணியம் என்னும் பேய் கண்டு ஆணாதிக்கச் சமூகம் அஞ்சுகிறது.

இப்போதெல்லாம் எங்கே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்? பெண்கள் அடங்க மறுக்கிறார்கள். பெண்ணாதிக்கமே மேலோங்கியுள்ளது என்பன போன்ற எள்ளல்களை நாம் கேட்க முடிகிறது. வேடிக்கை என்னவெனில், இத்தகைய எள்ளல்களும் ஆணாதிக்கமே என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!
பெண்ணியம் என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்பாக “அடங்கிப் போதல்” என்னும் போதனை குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் மற்றும் படிநிலை என்ற ஒன்று உருவாகாத சமூகத்தில் அடிபணிதல் என்னும் ‘ஒழுக்கம்’ (அல்லது விதி) இருக்கவில்லை!

அதிகாரம் என்பது எப்போது உருவானது என்று காலத்தை பின்நோக்கி ஆய்வு செய்தால் செல்வக் குவிப்பு தோன்றிய போது என்கின்ற உன்மை நமக்குப் புலப்படும். அனைவரும் சமமாக இருந்த ஒரு சமூகத்தில் யாரும் யாரையும் ஆள்வதற்கான தேவை இருக்கவில்லை. யாரும் அடிபணிந்து நடக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.  ‘சமமாக இருத்தல்’ என்றால் என்ன? சமத்துவம் என்ற சொல் கூட இங்கே பலரது வயிற்றில் புளியைக் கரைக்கிறது! ஏன்?

சமத்துவம் என்று கூறுகையில், குறிப்பாக ஆணும் பெண்ணும் சமம் என்று கூறுகையில் “ஆம்பிளையும் பொம்பிளையும் எப்படி சமமாக முடியும்? சரி சமம்னே வச்சுப்போம்! எங்கள மாதிரி நீங்களும் … என்று தொடங்கி உடல் பலம் சார்ந்த வேலைகளை பட்டியலிட்டு, இதையெல்லாம் செய்ங்கன்னு தான சொல்றோம்! அப்ப மட்டும் உங்களால முடியல.  Sports Day ல பாருங்க பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பரிசு பெற்று வருகிறார்கள். நீங்களும் ஜெயிக்க வேண்டியதுதான?” என்று ‘அறிவாளித்தனமாக’ (அறிவிலிகளாக) கேள்வி கேட்கிறார்கள்.

உடலாலும் கூட பெண்களும் பலமானவர்கள் என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ஆணாதிக்க மனம் அந்த சாதனைகளை எளிதாக புறம் தள்ளிவிடுகிறது! மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போல் பிள்ளை பெறும் ஒரு வலு ஒன்றே போதும் பெண் உடலின் வலுவான தன்மையை மெய்ப்பிக்க. அப்படியென்றால் பிள்ளை பெற முடியாத பெண்கள் பலவீனமானவர்களா? இல்லை! அதற்கும் சேர்த்தே நாம் இன்று விடை காண்போம்!

சமத்துவம் என்கின்ற சொல்லை நாம் எண்ணம், சிந்தனை, நடத்தை என்கின்ற அடிப்படையில் மனித ஒழுக்க மாண்பாக முன் வைக்கின்றோம்! உடல் பலம் சார்ந்தல்ல! உடல் பலம் என்று விதண்டாவாதமாக பேச வேண்டுமெனில், பலசாலி என்று சொல்வோமானால் ஆணும் ஆணும் கூட இங்கே மாறுபட்டவர்களே. பிரச்சினைக்குரிய சூழல் வருகையில் எல்லா ஆண்களுமே அதை எதிர்க்க துணிந்துவிடுகிறார்களா? வம்புக்குப் போகாதே என்று சொல்லி ஒதுங்குபவர்களில் ஆண் என்ன பெண் என்ன? அதிலும் குறிப்பாக மிகவும் ஆபத்தான அரசு அதிகாரத்தை எதிர்ப்பதற்கு அஞ்சுபவர்களில் ஆண் பெண் வேறுபாடு உண்டா?

இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதே. எந்த இரண்டு நபர்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. மாறுபட்டு இருப்பதால் ஒருவர் மேலானவர், மற்றவர் கீழானவர் என்று வகுக்கும் அதிகாரம் இங்கு யாருக்குமில்லை. மாறுபட்டிருந்தாலும் அனைவரும் சமமே என்று வலியுறுத்துவதே சமத்துவம். மாறுபட்டு இருப்பதால்  இன்னார் இன்னதே செய்யக் கடவர்” என்னும் விதிகளை ஒழித்து அனைவர்க்கும் அனைத்திலும் உரிமை உண்டு என்று வலியுறுத்துவதே சமத்துவ சிந்தனை.  ஆக, சமத்துவம் என்று பேசுகையில் உடல் பலம் சார்ந்த, உடலமைப்பு சார்ந்த ஒப்பீடு அல்ல. அது எண்ணம் சார்ந்தது. அது மனித உரிமை சார்ந்தது.

ஏற்றத்தாழ்வு என்பது ஆண் பெண் உறவில் மட்டும் நிலவுகின்ற ஒன்றல்ல. ஒவ்வொரு சமூகத்திலும் (நாட்டிலும்) பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில், வாழ்வாதார நிலைமைகளின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவுகின்றது. அந்த அடையாளங்களை மேலோர் - கீழோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், உயர் பிறப்பு- கீழ் பிறப்பு, பலமானவர் – பலவீனமானவர், ஏழை - பணக்காரன், வெள்ளையர் - கருப்பர் என்றெல்லாம் வகைப்படுத்தி, திடப்படுத்தி குறிப்பிட்ட பிரிவினரை குறிப்பிட்ட உடைமைகளிலிருந்து, உரிமைகளிலிருந்து, வேலைகளிலிருந்து பிரித்து வைத்தனர்.
இத்தகைய வேலைப் பிரிவினையை நிலைநாட்ட பல்வேறு விதமான கட்டுக்கதைகளும், விதிமுறைகளும், ஒழுக்கவிதிகளும், நிர்வாக அமைப்புகளும் தோன்றின. மதம் மற்றும் மத நூல்கள்  அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் பாலின அடிப்படையில் பெண் அத்தகைய ‘ஒதுக்குமுறைக்கு’ ஆளானாள். செய்தொழில் அடிப்படையில், மொழி, இனம், பண்பாடு, பொருளாதார நிலை என்னும் அடிப்படையில் ஆண் பெண் பேதமின்றி பல்வேறு பிரிவினர் இத்தகைய வேலைப் பிரிவினைக்கு ஆளானார்கள். இந்திய சமூகத்தில் கூடுதலாக சுத்தம்-அசுத்தம் என்னும் பார்ப்பனிய மதச் சிந்தனையை உட்புகுத்தி குறிப்பிட்ட பிரிவினர் குறிப்பிட்ட வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்னும் மனுவாத விதி உண்டானது. சாதியின் தோற்றுவாய் இதுவே. இந்த அசுத்தமென்னும் சிந்தனை பெண் உடல் சார்ந்தும் நிறுவப்பட்டு பெண்கள் விலக்கி வைக்கப்பட்டனர் அல்லது அடிமைபடுத்தப்பட்டனர். 

பெண்களை, சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை ஒடுக்கவும், அவர்களே விரும்பி அந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவும் மத ரீதியான கதையாடல்கள் உருவாக்கப்பட்டன. அவையே இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள். ஆதியில் ஆண் பெண் என்ற பேதமின்றி வேட்டையாடுதல் முதற்கொண்டு அனைத்து வேலைகளிலும் ஆணுக்கு நிகராக ஈடுபட்டு வந்த பெண்கள் பின்னர் வீட்டு வேலை, குழந்தைப் பேறு, குடும்ப நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் என்று ஒதுக்கப்பட்டனர். அதேபோல் இனக்குழுக்களாக அனைவரும் அனைத்து வேலைகளிலும் ஒன்றாக ஈடுபட்டு பகிர்ந்துண்டு வாழ்ந்த நிலைமையும் மாறியது.  இனக்குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு பிரிவு மற்ற பிரிவினரை அடிமையாக பிடித்து வரும் போக்கு இருந்தது. அப்படி பிடித்துவரப்பட்ட அடிமைகளை ஒடுக்க அதிகாரம் தேவைப்பட்டது. அதாவது அடக்குமுறை அமைப்பு.  தலைவர் (இன்றைய நிலையில் அரசு), ஒழுக்கக் கோட்பாடுகள் (மதம் போன்றவற்றின் மூலம்), தண்டனைகள் (சட்டம்) போன்றவை உருவானது.

இந்த காலகட்டத்தில் தான் “அடிபணிதல்” என்னும் ஒழுக்கம் மனித சமூகத்தில் ஒரு ‘பண்பாக’ போதிக்கப்பட்டது. மூத்தோருக்கு இளையோர் அடிபணிதல், எஜமானனுக்கு அடிமை அடிபணிதல், ஆனுக்குப் பெண் அடிபணிதல், தந்தைக்கு மகன்கள் அடிபணிதல், மன்னனுக்கு குடிகள் அடிபணிதல் என்னும் இயற்கைக்கு முரணான, மனித குலத்திற்கு அவசியமில்லாத ஒரு சிந்தனை ‘நல்லொழுக்கம்’ என்னும் பெயரில் பரப்பப்பட்டது. பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆண்களைச் சார்ந்து வாழும் நிலையும் உருவானது. அதன் தொடர்ச்சியாக தர்மபத்தினியாக வாழ்தல் என்னும் கடமை பெண்ணின் ஒரே கடமை என்றானது. இதிலிருந்து விலகி எதைப் பேசினாலும் செய்தாலும் கேடுகெட்ட பெண்ணியவாதிகள், அடங்காப்பிடாரிகள் என்னும் பட்டங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

இந்த பண்பாட்டில், அதாவது காட்டுமிராண்டிகளின் காலத்தில் தோன்றிய அராஜக பண்பாட்டில் ஊரிப்போனவர்கள்  இன்றைக்கும் அதிலிருந்து மீளாமல் “உங்களை எல்லாம் (பெண்களை) யார் அடிமைபடுத்துறா?” என்பதும் “இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லைங்க.. அவங்கல்லாம் (சாதி) எங்க அடங்கி இருக்காங்க… அடிச்சா திருப்பி அடிங்குறாங்க” என்பதுமான வியாக்கியானங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.  
மனித சமூகத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு காலகட்டங்களை, நிகழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறது. மனித சமூக வரலாற்று வளர்ச்சி என்பது  ஒரு பிரிவு மற்ற பிரிவிடமிருந்து செல்வங்களை கையகப்படுத்திய போர் என்னும் நிகழ்வுகளால் ஆனது. இழந்த செல்வங்களை, உரிமைகளை மீண்டும் பெறுவதற்கான போராட்டங்களால் நிறைந்தது. 

ஆண் பெண் இடையிலான போராட்டம் என்பதும், சாதி, மத, இன, மொழி ரீதியான போராட்டம் என்பதும் அத்தகையதே. உரிமைகள் பறிக்கப்படவில்லை எனில் போராடுவதற்கும் இங்கு அவசியமில்லாமல் போயிருக்கும். ஒடுக்குமுறை இல்லையெனில் விடுதலைப் போராட்டம் இருக்கப் போவதில்லை.
தொடக்கத்தில் பெண் உடல் சார்ந்து, அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தில் பெண் ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றிய இயல்பான வேலைப் பிரிவினையானது பின்னர் குடும்பம் மற்றும் தனிச்சொத்தின் தோற்றத்தின் காரணமாக நிரந்தரமான உழைப்புப் பிரிவினையாக மாறியது. அடிபணிதல் என்பது பெண்ணின் பண்பாக அவளது இரத்த நாளங்களில் மதம், சடங்கு, பெண்மை என்னும் விஷ ஊசிகள் கொண்டு ஏற்றப்பட்டன.  பல்லாயிரம் வருடங்களாக சமூகமானது இதற்கு பழக்கப்பட்டு, மூளைச் சலவைக்கு உள்ளாகி விட்டது. பெண்களே இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதே இதில் மிகவும் துயரமான விசயம். சாதிய ரீதியாக (மற்றும் இதர) ஒடுக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்னும் உன்மை தெரிந்து உணர்வு பெற்று ஒருங்கிணைந்து போராட வந்துவிட்டார்கள். ஆனால் பெண்களில் பெரும்பான்மையினருக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரிவதில்லை.

ஆண் வலிமையானவன், ஆணே உயர்ந்தவன், ஆணே குடும்பத் தலைவன் என்கின்ற நிலைமை இயல்பானதே என்பதே இங்கு நிலவும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு பெண்கள் ஆணைச் சார்ந்து, அவன் தலைமையிலான குடும்ப அமைப்பிற்கு கட்டுப்பட்டு வாழும் நிலைமைகள் உள்ள சமூகத்தைத்தான் நாம் ஆணாதிக்கம் என்கின்றோம். இது எந்த ஒரு தனியான ஆணைக் குறிப்பதல்ல. பெண்ணியம் என்பது ஆணைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதோ, ஆண் வெறுப்பை போதிப்பதோ அல்ல. பெண்களை வேறுபடுத்தி நடத்துகிறார்கள் என்னும் புரிதல் ஆணுக்கும் இல்லை, பெண்ணுக்கும் இல்லை. ஆகவே இரண்டு பாலினங்களும் இதில் பாதிக்கப்பட்டவர்களே (பிற்கால அரசியல் சூழலால், ஆணாதிக்க பாலின ஒடுக்குமுறையின் காரணமாக மூன்றாம் பாலினத்திற்கு இந்த புரிதல் ஓரளவுக்கு வந்துவிட்டது) என்னும் சமூக நிலைமையை உணரச் செய்து அதற்கெதிராக போராட பெண்கள் மட்டுமல்லாது அனைவரையும் போராட ஒன்றிணைத்து பாலின சமத்துவத்தை நிறுவ நினைப்பதே பெண்ணியம்.

கண்டபடி பாலுறவு வைத்துக்கொள்ளவும், குடும்பத்திற்கு அடங்காமல் நடக்கவும், கணவனை வீட்டு வேலைச் செய்யச் சொல்லி சீரியல் பார்க்கவுமே பெண்கள் பெண்ணியம் பேசுகிறார்கள் என்கிற அவதூறும் நிலவுகின்றது. பாலுறவு சுதந்திரம் என்பது “மண்ணும் பொண்ணும் ஒன்னு” என்று ஆணாதிக்க சொத்துடைமை அடக்குமுறைக்கு எதிராக பேசப்படுகிறது. குடும்பம் என்னும் அமைப்பு வன்முறையாக மாறுகையில் அதற்கு அடங்கமறுப்பது அவசியமானதே. அதேபோல் ஆம்பிளையை வீட்டு வேலை செய்யச் சொல்வது என்பது சமத்துவமான வேலைப் பிரிவினையாகும். ஒருவர் உழைப்பில் மற்றவர் சுகபோகமாக வாழும் நிலையை ஆண் பெண் இடையே மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து உறவுகளிலும் ஒழித்திட வேண்டும்.

முற்காலத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்யும் நிலை இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரே இப்போது அவர்களுக்கு ஓட்டுரிமை, கல்வி, வேலை போன்ற உரிமைகள் கிடைத்துள்ளன.  ஆனாலும் பல குடும்பங்களில் பெண்கள் இன்னமும் வீட்டு வேலை, வெளி வேலை என்னும் இரட்டை உழைப்புக்கு ஆளாகி துன்புறுகிறார்கள். சில குடும்பங்களில் அன்பினால் ஆண்களும் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும் வீட்டு வேலை என்பது பெண்களின் பொறுப்பே என்னும் கருத்தியலிலிருந்து யாரும் விடுபடவில்லை. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் உண்ட எச்சில் தட்டைக் கூட எடுத்திடாது தட்டிலேயே கை கழுவும் பழக்கம் உள்ளது. இத்தகைய ஆண் அதிகாரச் செயல்பாடு இயல்பானதே என்று கருதும் சிந்தனையையே நாம் ஆணாதிக்கம் என்கிறோம். இது ஆண்களிடத்தும் உண்டு. பெண்களிடத்தும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய அளவில் பல்வேறு கட்டப் போராட்டங்கள், உயிர் தியாகங்களின் விளைவாக இன்றைக்கு பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. ஆனாலும் சமூகத்தின் கூட்டு மனநிலையில் பெண் என்பவள் இரண்டாம் நிலையிலானவள் என்னும் கருத்தியல் மாறவில்லை. பெண்ணின் உடை தொடங்கி, கல்வி, திருமணம், திருமணத்திற்குப் பின் வேலைக்கு செல்வதா கூடாதா என்னும் முடிவுகள், வேலைக்குச் சென்றால் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் போன்ற கட்டளைகள் என்று ஆணாதிக்கம் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தையை பெற்றுக்கொள்வதே சுமை, அவமானம் என்னும் நிலை இன்னமும் தொடரத்தானே செய்கிறது. கொள்ளி போடும் உரிமை ஆணுக்குத்தானே உள்ளது. இது வாரிசுரிமை, சொத்துடைமை சார்ந்த தந்தை வழிச் சமூகத்தின் விதி. இப்படியாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெண்ணியம் என்ற ஒன்று பெண்கள் மட்டும் பேசுவதல்ல. அதேபோல் பெண்கள் பேசக் கூடியதெல்லாம் பெண்ணியமும் அல்ல. பெண்கள் தினம் என்னும் பெயரில் ‘சிறந்த இல்லத்தரசி’, ‘பெண்மையை போற்றுவோம்’ என்னும் வகையிலான புகழுரைகளை பெண்ணியம் என்று முன்வைப்பது வேடிக்கையானது. இத்தகைய புகழுரைகள் ஆணாதிக்க சமூகம் வகுத்திருக்கும் கடைமைகளை செவ்வனே செய்து முடிப்பவள் என்பதற்காக கொடுக்கப்படும் லஞ்சம். அவ்வளவே. அந்த குடும்பக் கடைமைகளை மீறும் பெண்களை இந்த சமூகம் கொண்டாடுமா என்பதே கேள்வி.
ஆண்கள் தாங்கள் ஏதோ உயர்ந்தவர்கள், பலசாலிகள், ஆண்மை மிக்கவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களும் இந்த ஏற்றத்தாழ்வு மிக்க சுரண்டல் பொருளாதார அமைப்பில் பொருளாதார அடிமைகளே என்று உணராமல் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் அத்தகைய ஆண்களுக்காகவும், அதாவது வீடு, சமூகம் என்று சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கமாக சக ஆண் உழைப்பாளனின் விடுதலைக்காகவும் சேர்த்தே போராடுகிறார்கள். பாலின ரீதியாக பெண் உடல் சார்ந்தும் ஒடுக்கப்படுவதால் அவர்கள் உடல் சார்ந்த கருத்தியல்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் பெண்களோடு ஆண்களும் போராடுகிறார்கள். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களும், அவர்களை பின்பற்றுபவர்களும் கம்யூனிஸ்டுகளும் அதற்கு சான்று. ஆனால் பொதுச் சமூகமானது இத்தகையோர் குறித்து தவறான புரிதல்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளது.

குற்றச் செயல்களில் ஆண்கள் ஈடுபடுவது போல் பெண்களும் ஈடுபடுகின்றனர். ஆனால் ஆண்கள் செய்கையில் அதை வீரமாக பார்க்கும் இந்த சமூகம் பெண் இப்படி நடந்துகொள்ளலாமா என்று இயற்கைக்கு மாறான பிறப்பின் அடிப்படையிலான ஒரு தூய்மைவாத கேள்வியை வைப்பதும், பெண்ணியம் பேசுவதால் தான் பெண்கள் குற்றங்கள் இழைக்கின்றனர் என்பதும் அபத்தமானது. குற்றங்கள் நிகழ்வதற்கு மோசமான பொருளாதார அமைப்பும் அதற்கு ஏற்றவாறு உருவாகி இருக்கும் பண்பாடுமே காரணம். இதற்கு ஆண் பெண் பேதமில்லை. குற்றமிழைக்கும் பெண்களுக்கு பெண்ணியவாதிகள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பதுமில்லை.
பெண்ணியத்திலும் பல வகைகள் உள்ளன.  ‘ஆணிய’ தத்துவங்களில் அராஜகவாத போக்கு நிலவுவது போல் பெண்ணிய சிந்தனைகளிலும் சில விசயங்களில் அராஜக போக்குகள் இருக்கவே செய்யும். ஆணாதிக்க அராஜகம் போல் அல்ல; இது வர்க்க ரீதியான சிக்கல். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். ஆனால் அதுவும் கூட பெண்கள் தினம் என்னும் வணிகக் கொண்டாட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர மற்றையோர் இந்நாளை பெண்கள் தினம் என்பார்களே ஒழிய உழைக்கும் மகளிர் தினம் என்று கூற மாட்டார்கள்.

பெண்ணியம் என்பது பாலின அடிப்படையில் ஒடுக்கப்படுவதை ஒழித்து குடும்பம், கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலும் சமத்துவத்தை அடைந்திடுவதற்கான ஓர் அரசியல் இயக்கம். பெண்ணியம்  பேசுவோர் பெண் விடுதலை மட்டுமல்லாது சாதி மத ஒடுக்குமுறை, பொருளாதார பிரச்சினைகள், இன ஒடுக்குமுறை, போர் எதிர்ப்பு, சூழலியல் சுரண்டல் என்று பல்வேறு பிரச்சினைகளையும் முன் வைத்து போராடுகின்றனர்.

ஆண்களே உங்களின் விடுதலைக்காகவும் சேர்த்தே பெண்ணியவாதிகள் போராடுகின்றனர். உழைக்கும் வர்க்கமான உங்களுக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

மார்ச் 8 அன்று வணக்கம் இந்தியாவில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் 

Apr 6, 2018

தனிமை என்னும் துணை



தனிமை - அதன் பன்முகத்தைக் கண்டுகொண்டால், தனிமை என்பது எப்போதும் துயராகாது.  
தனிமை குறித்து என்னைச் சுற்றியுள்ளவர்கள் துயரோடு பேசுகையில், அவர்களுக்காக இதை எழுத விழைகிறேன்.

தனிமை என்பது துணையின்றி வாழ்வதாகக் கருதப்படுகிறது. துணையோடு வாழ்வதே பெரும்பாலும் தனிமையாக உருமாறுகிறது என்பதே இச்சமூகத்தின் நகை முரண். சுயநலம், அதிலிருந்து விளைந்த சமூக மதிப்பீடுகள், அதற்கேற்ற சமூக உறவுகள், அதிலிருந்து எழும் நெருக்கடிகள் இதுவே வாழ்க்கை வட்டமாகிவிடுகிறது. குடும்ப உறவுகளும், காதல் உறவுகளும் அதன் ஒரு சிறிய அமைப்பு வடிவம். அவ்வளவே! இதில் பெறுவதற்கு நிறைய இருப்பினும், இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே எனது கண்டறிதல். அப்படியே ‘இழப்பு’ ஏற்படினும், அங்கு ஒரு புதியதற்கான இடம் பிறக்கிறது. இழப்பு அனுபவமாக மாறுகிறது. அது பல தத்துவங்களை உருவாக்கவல்லது. தேவைப்படுவதெல்லாம் அகவய மூழ்குதலுக்குப் பதிலாக புறவய எதிர்நீச்சல்.

சமூக உறவுகள் பற்றிய அறிவுத் தேடல் எதிர்நீச்சல் போடும் சக்தியை வழங்கும். கைக்கொண்டு பாருங்கள். மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பரிணமித்து வந்துள்ளன. உறவும் கூட பண்டமயமாகிவிட்ட இக்காலகட்டத்தில் பொருள்களின் (நுகர்வுப் பொருள்/பணம்) இருப்பும் அளவுமே ஒருவரின் வாழ்வை, சிந்தனையை, தேவையை, உறவுகளை, தேடலை வடிவமைக்கிறது. இந்த உண்மை விளங்குகையில், நம்மைக் கட்டுப்படுத்தும் எதுவொன்றும் - உணர்ச்சிகள் – உணர்வுகள் உட்பட எதுவும் இயற்கையானதல்ல என்னும் உண்மையும் விளங்கும். அந்த உண்மையே நல் துணையாக மாறி நம் வாழ்வை இன்பமயமாக்க வல்லது.

ஆனால், இத்தேடலை மேற்கொள்ளக்கூட நமக்கு ஒரு மனநிலை தேவைப்படுகிறது. தனிமைத் துயர் என்னும் மூடநம்பிக்கை அதற்குள் நம்மை மூழ்கடித்துவிடுகிறது. துன்பப்படாமல் இருக்க முடியாது எனினும், அதற்கொரு சிறப்பிடம் கொடுத்துவிடாதீர்கள். ஏனென்றால் பிறகு அதனை சுவைக்கத் தொடங்கி, அதுவே ஒரு போதையாகி விடக்கூடும்.

தனிமை என்பது அதிகாரமளித்தல். நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ளவும், சுதந்திரமாக இயங்குவதற்குமான அதிகாரத்தை அது நமக்கு வழங்குகிறது. தனிமை என்பது நேரம். அது முழுக்க முழுக்க நமக்கானதாய் அமைகிறது. அதனை திகட்ட திகட்ட பருகலாம்.  

துணை என்று ஒன்றிருந்தால் இவற்றையெல்லாம் சரிசமமாக பகிர்ந்துகொள்ளலாம். இல்லையேல் அதுவும் நமகே நமக்காய்… கொண்டாடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தனிமை என்பது வீடு / குடும்பம் என்னும் அமைப்பிற்குள் நம்மை அடைத்துக்கொண்டு நாம் கற்பனை செய்வதாகும். அந்த சிறைக்குள்ளிருந்து நாம் தான் நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். அதற்கு நூல்களும், வாசிப்பும் சிறந்த ஊக்கமருந்து. வாசிக்க வாசிக்க சிறகு முளைப்பதை உணர முடியும். அடுத்ததாக இசை எந்த முயற்சியுமின்றி நம்மை தளர்த்தக்கூடியது. பயணம். தனியாக வாழ்பவர்கள் பெற்றிருக்கும் சிறந்ததொரு அதிகாரமிது.

“இதற்கெல்லாம் பணம் தேவையில்லையா. சாப்பாட்டிற்கே வழியில்லாத போது எங்கிருந்து புத்தகம் வாங்க, பயணம் போக…”    

இப்போது நான் சொல்லப்போவது சற்று காட்டமாக இருக்கலாம். உண்மையில், கடின உடல் உழைப்பாளிகளுக்கும். கொடிய வறுமையில் வாடுவோருக்கும் தனிமைத் துயர் பற்றி எண்ணக் கூட நேரமிருக்குமா தெரியவில்லை. இந்தத் தனிமை துயரில் வாடுவோரும் பெரும்பாலும் குறிப்பிட்ட வர்க்கத்தினராக (பெரும்பாலும் மூளை உழைப்பாளிகளாக) இருக்க வாய்ப்புள்ளதோ என்று நான் எண்ணுவதுண்டு. வறுமைக்கோட்டில் வாழ்வோருக்கு வாழ்வதே போராட்டமாக இருக்கையில் உழைத்து களைத்து உறங்கச் சென்றுவிடுகிறார்கள் போலும். அதையும் மீறி துணை சார்ந்த விஷயங்களில், ‘அழகான வாழ்க்கை’ பற்றிய அவர்களுடைய எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஆகவே உறவமைதல் எளிதாகி விடுகிறது. அந்நிலையிலிருந்து சற்றே மேல் நிலையில் இருப்பவர்களுக்கே சமூக அழுத்தத்தின் காரணமாக இந்த மனச்சிக்கல் ஏற்படுகிறது. (அதற்கும் மேல் நிலையில் இருப்பவர்களின் நிலை வேறு).
இன்பமென்றும், காதலென்றும், சிறந்ததொரு வாழ்வென்றும் நமக்குப் போதிக்கப்படுவதை கற்பனை செய்துகொண்டிருக்க நிறைய நேரமிருப்பதாலும், பகுத்தறியாமல் அவற்றை அப்படியே உள்வாங்குவதாலும் கூட தனிமை என்பது துயர் மிகுந்ததாகிவிடுகிறது.

இந்தத் தனிமை என்னும் ‘சாத்தானை’ பிறக்க விடுவதே ஆபத்து. கருவிலேயே அழித்துவிடுங்கள். இல்லையேல் அது சாத்தானை விடக் கொடிய ‘கடவுளாய்’ வளர்ந்து நம்மை அழிக்க அவதாரம் எடுத்துவிடும்.

தனிமையிடமிருந்து விடுபட மற்றொரு உயிர்தான் துணையாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஓருயிர் என்பதை விடுத்து பல்லுயிர்களை நாடிப்பாருங்கள். மனிதனிடமிருந்து விலகி, சமூகத்தை நெருங்குங்கள். நமக்கு இன்பம் தரும் நிலையில் இங்கு எந்த மனிதருமில்லை. நமக்கான இன்பத்தை நாம் தான் உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கு நமக்கான இன்பம் என்ன என்பதை முதலில் நாம் வரையறுக்க வேண்டும்.  அப்படி வரையறுக்க பகுத்தறிவே வழிகாட்டி. சமூக உறவுகள் (மனித சாரம்) பற்றிய சமூக விஞ்ஞான நூல்கள் (எழுத்துகள்) அதற்கான கலங்கரை விளக்கம்.

மேற்சொன்னவை நம்மை மனதளவில் விடுவிக்க உதவலாம். உடல் ரீதியான தேவைக்கு என்ன செய்வது என்றொரு கேள்வி எழலாம். துணை இருப்பதால் மட்டுமே யாரும் உடலின்பத்தில் திளைத்து மகிழ்ந்து வாழ்ந்துவிடுவதில்லை. அது வேறொரு புதிய சிக்கலாக மாறிவிடுவதும் உண்டு. குறைந்தபட்சம் தனியாக வாழ்வோருக்கு இத்துன்பம் வாய்க்காது. இயற்கை அதற்கும் நமக்குள் சில இயல்பூக்க வழிகளை வகுத்துள்ளது. அதன் மூலம் அவ்வேட்கையை சற்று தணித்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக பாலுறவு மற்றும் காமம் சார்ந்த இழிவான ஆணாதிக்க சமூக கட்டமைப்பால் உடலுறவு என்னும் இயற்கைத் தேவையை நாம் ‘முறைபடுத்தப்பட்ட உறவுக்குள்’ மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அதுபற்றிய அரசியல் அறிவை பெற்றுவிட்டால், இச்சக்கலிலிருந்து விடுபடவும், தேவையான தீர்வை வகுத்துக்கொள்ளவும் நாமே கற்றுக்கொள்வோம்.

நம் (மன) மகிழ்ச்சிக்காக நாம் எவரையும் சார்ந்திருக்கும் வரை மகிழ்ச்சி என்பது எட்டாக் கனியே.

சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என்று எண்ணிவிடாதீர்கள். இது அனுபவப் பகிர்தலும் கூட J

தனிமை வாய்ப்பு!
தனிமை திறப்பு
தனிமை புதுமை!
தனிமை விடியல்!
தனிமை புத்துணர்ச்சி
தனிமை செல்வம்
தனிமை இன்பம்
தனிமை கொண்டாட்டம்
தனிமை புதுமொழி
தனிமை காதல்
தனிமை பேரறிவு
தனிமை மெய்யறிவு
தனிமை விடுதலை


Mar 19, 2016

என் கருத்திலிருந்து அஞ்சி நான் எப்போதும் பின்வாங்கியதில்லை


நிர்மலா கொற்றவையின் விளக்கம்: ”நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளை எதிர்ப்பவள்” என்கிற இந்தப் பிரகடன பரப்புரையின் முழுமையான தன்மை தெரியாமல் இதில் இணைவதற்கு ஒப்புக்கொண்டு விட்டேன்; நான் சாதி மறுப்பாளர்; ஆகவே சாதி ஆணவக்கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

என் விளக்கத்தைப் பதிவு செய்த ippodhu.com க்கு நன்றி http://tinyurl.com/zc9mdzh


Mar 18, 2016

என்னுடைய இறுதி எழுத்து - கொற்றவை


வணக்கம் தோழர்களே,

இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அதை துணிவுடன் ஒற்றை ஆளாக நின்றே எதிர்கொண்டும் உள்ளேன். நான் சொன்ன எந்த கருத்திலிருந்தும் - அது என்னுடைய அறிவிற்கும் - சமூக மாற்றத்திற்கும் சரியானதே என்று கருதிய எந்த கருத்திலிருந்தும் நான் பின்வாங்கியதில்லை. ஆனால் விமர்சனம் என்பது வேறு அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய மனோபாவம் கொண்டவள் எனும் அவதூறு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. ஏனென்றால் இந்த முற்போக்கு மற்றும் மார்க்சிய தத்துவார்த்த அறிவு கிடைப்பதற்கு முன்னரே கூட சாதி என்றால் என்னவென்று தெரியாத ஒரு சூழலில்தான் நான் வளர்ந்தேன்.  ஆனால் இன்று, அதாவது நிர்மாலா என்ற பெண் கொற்றவையாக மாறிய பின்னர் – இந்த சமூகம் எத்தனை அநீதிகள் நிறைந்ததாக இருக்கிறது எனும் உண்மையை உணர்ந்த பின்னர் மனம் பொறுக்காமல் சமூக மாற்றத்திற்காகப் பங்களிக்க வேண்டும் எனும் உறுதிப்பாட்டோடு எழுதத் தொடங்கினேன். அதன் பின்னர் சில களப்பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

ஆனால் வன்மம் பிடித்த அடையாள அரசியலின் முன் எதுவும் பயனற்று போய்விட்டது.

இனி கொற்றவையாகிய நான் முகநூலில் மட்டுமின்றி. வேறு எந்தத் தளங்களிலும் எழுதப் போவதில்லை. செயல்படப் போவதில்லை.

என்னுடைய இந்த முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படும் என்பதை நான் அறிவேன். (அதற்கும் சேர்த்து) சொல்ல எதுவுமில்லை என்னிடம்... 

என் முடிவு தவறானது, உணர்ச்சிவயப்பட்ட முடிவு என்றெல்லாம் கருதி என் மீது அன்பு கொண்டவர்கள் என்னிடம் ஏதும் பேசவோ, தொடர்புகொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ஆதரவாக இருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

வாழ்க போலி தலித் அடையாள அரசியல்!

சாதி… இது தாழ்த்தப்பட்டோரை மட்டும் ஒடுக்குவதில்லை.



Mar 17, 2016

“நான் உயர்சாதி பெண்’ என சொன்னேனா?”: கொற்றவை மறுப்பு! - Heronewsonine

“நான் உயர்சாதி பெண்’ என சொன்னேனா?”: கொற்றவை மறுப்பு!

உடுமலை சாதிய ஆணவக் கொலையையொட்டி சில பெண்ணியவாதிகள் உள்ளிட்ட சில பிரபலமான பெண்கள், இணைய இதழ் ஒன்றிடம் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “நான் உயர்சாதிப் பெண். ஆணவக்கொலையை கண்டிக்கிறேன்” என்று குட்டி ரேவதியும், “நான் உயர்சாதிப் பெண். ஆணவக்கொலைகள் என்னை பெருமையடையச் செய்யாது” என்று நிர்மலா கொற்றவையும், “நான் சீர்திருத்த மரபினள். நான் ஆணவக்கொலைகளை எதிர்க்கிறேன்” என்று சுமதி தங்கப்பாண்டியனும், “நான் ஆதிக்க சாதி. ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்” என்று ஜோதிமணியும், இதுபோல் வேறு சில பெண்களும் கருத்துக் கூறியதாக அந்த இணைய இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பான காணொலி:- (காணொலியை நீக்கி விட்டேன்)
இவர்கள் தங்களை உயர்சாதி மற்றும் ஆதிக்க சாதி என சொல்லியிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பதிவிட்டு வருகிறார்கள். உதாரணமாக, ஜெயராணி மயில்வாகனன் தனது பதிவில், “வன்மையான கண்டனங்கள். நாம் யாரும் இவர்களை ஆதிக்க சாதியினராகப் பார்க்கவில்லை. இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கையில் இவர்கள் தம்மை சாதியற்றவர்களாக அடையாளப்படுத்தவே முயன்றிருக்க வேண்டும். இந்த கட்டுரையின் மூலம் தங்களது ஆதிக்க சாதி லேபிளை ஏன் பறைசாற்றுகிறார்கள்? மிக மிக அருவருப்பாக உணர்கிறேன். இதில் சிலர் தம்மை உயர்சாதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று விளக்குங்கள். தமது ஆதிக்க சாதி அடையாளத்தை பறைசாற்றும் ஒருவருக்கு ஆணவக் கொலைகளை எதிர்க்க என்ன தகுதி இருக்கிறது என எனக்கு நிஜமாகவே புரியவில்லை. ஓர் எழுத்தாளராக, பெண்ணியவாதிகளாக, டி.வி பர்சனாலிட்டிகளாக நீங்கள் சமூகத்தில் ஒரு பொறுப்பான இடத்தை வகிக்கிறீர்கள். உங்கள் செயல்பாடுகள் வழியே நீங்கள் யாரென இந்த சமூகம் அறிந்து வைத்திருந்த அனைத்தையும் இன்றைய தினம் இந்த ஒற்றை பிரகடனத்தில் அழித்துவிட்டீர்கள். உங்களின் சாதி அடையாளத்தை அறிந்து கொள்ளாமல் உங்கள் செயல்பாடுகளுக்காகவும் அறிவாற்றலுக்காகவும் உங்களை மதிப்பவர்கள் இருக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தாழ்த்தப்பட்டவரில்லை என்று சொல்ல வருகிறீர்களா? இது இச்சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? உங்கள் தனிப்பட்ட வாழ்வில் இதனால் விளையக்கூடிய ஆதாயம் என்ன? சுயசாதி அடையாளத்தை இத்தனை மலர்ச்சியோடு வெளிப்படுத்தும் உங்கள் சமூக அக்கறை நாசமாய் போகட்டும். இந்த பிரகடனத்திற்கு பதில் ஓர் ஆணவக் கொலையையே நிகழ்த்தி இருக்கலாம்” என்று கூறியுள்ளார். இதுபோல், இவரைப்போல், பல, பலர்.
ஆனால், உண்மையில் இவர்கள் யாரும் தங்களை “உயர்சாதிப் பெண்” என்றோ, “ஆதிக்கசாதிப் பெண்” என்றோ கூறவே இல்லையாம். இது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் கொற்றவை. அவரது விளக்கம்:-
Ippodhu.com எனும் தளத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு பிரச்சாரம் நடத்தவிருப்பதாகவும், அதில் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளலாமா என்றும் பீர் முகமது அவர்கள் காலையில் இன்பாக்சில் ஒரு செய்தி வைத்தார்.
எப்போதும் எல்லாவிதமான வன்முறைக்கும், மனித உரிமைப் பிரச்சினைகளுக்கும், அதிகாரத்திற்கும் எதிரான பிரச்சாரங்களுக்கும் கேட்பவரோடு இருக்கும் அறிமுகத்தை வைத்து இதுபோன்ற முயற்சிகளில் எங்களுடைய பெயரை சேர்த்துக்கொள்ளச் சொல்வது வழக்கம்.
அந்த அடிப்படையில் பீர் முகமது அவர்கள் வைத்த தகவலில் உள்ள செய்தியை மட்டுமே, அதாவது சாதி ஆணவக் கொலையை எதிர்க்கிறோம் எனும் கருத்தை வலியுறுத்தும் எனும் நோக்கத்தில்தான் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளவும் என்று சொல்லி இருந்தேன். அதிலும் கூட, இது வழக்கமாக தயாரிக்கப்படும் ஒரு கடிதமாகவோ அல்லது ஒரு அறிக்கையாகவோ இருக்கும் என்றே எண்ணினேன்.
இந்த உரையாடல்கள் நான் அலுவலகப் பணியில் இருக்கும்பொழுது நடைபெற்றது. கேட்பவர் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே பெயரைக் கொடுத்ததற்கான காரணம்.
இந்தப் பிரச்சாரம் எப்படி மேற்கொள்ளப்படும், என்ன வகையில் மேற்கொள்ளப்படும் என்று எதையுமே கேட்டறியவில்லை.
மாலை வசுமித்ர தொடர்பு கொண்டு “நான் உயர் சாதிப் பெண்” என்று நீ சொல்லி இருக்கிறாயா என்று கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகே அந்த தளத்தை சென்று பார்த்தேன். இடையில் நந்தினி வெள்ளைச்சாமி என்பவர் என் பெயரை டேக் செய்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அப்போதுதான் எனக்கு இந்தப் பிரச்சாரத்தின் ‘ஊடகத் தன்மை’ புரிந்தது.
அதன் வெளிப்பாட்டு தன்மை குறித்த விவாதத்தில் நானும் வசுவும் ஈடுபட்டிருந்தபோது இப்பிரச்சாரத்தில் உள்ள ‘Tonality’ & ‘Message’ எத்தனை ஆபத்தானது என்றும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்கிறது என்பதையும் உணர நேர்ந்தது. உடனே பீர் முகமதுக்கு தகவலும் வைத்தேன். ஆனால் அவர்கள் தங்கள் நோக்கத்தை விளக்குவதற்குள் Damage is already Done என்பதுபோல் எம் நோக்கத்திற்கே களங்கம் கற்பிப்பதாக சென்றுகொண்டிருக்கிறது.
ஆகவே, இந்தப் பிரச்சாரத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். என்னுடைய புகைப்படத்தையும், நான் சொல்வதாக அவர்கள் சொல்லியிருக்கும் செய்தியையும் நீக்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நல்ல நோக்கத்திற்காக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்போது, பெயர் சேர்த்துக்கொள்ளலாமா என்று எவரேனும் கேட்டால் அதில் கேள்விகள் கேட்பது அகந்தை நிறைந்த செயலாக இருக்குமோ என்றெண்ணி நபரைப் பொறுத்து ஒப்புதல் அளித்துவிடுவதுண்டு. அது மாபெரும் தவறு என்பதை இந்த பிரச்சினை உணர்த்தியிருக்கிறது.
சாதியை அல்லது இன்னபிற அடையாளங்களைச் சொல்லி வன்முறையை கண்டிப்பதன் மூலம் ஒருவரின் கவனத்தை ஈர்த்து விட முடியும் எனும் இந்த அணுகுமுறை தவறானது. அதற்கு நான் துணை நிற்க விரும்பவில்லை. முழுமையாக கேட்டறியாமல் பெயர் கொடுத்தமைக்கு வருந்துகிறேன்.
அதே சமயம் பீர்முகம்மது மற்றும் நந்தினி அவர்களின் செயல்பாடுகள் எப்போதும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவே இருக்கும் என்பதையும் நான் நம்புகிறேன். அவர்களும் இந்த பிரச்சாரம் குறித்த பல்வேறு கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கொற்றவை கூறியுள்ளார்.
சுமதி தங்கப்பாண்டியன் விளக்கம்: “ஆணவக் கொலைக்கு கண்டனங்கள் என்று மட்டுமே இருக்க வேண்டும் என நான் மிகத் தெளிவாக இதற்காக என்னைத் தொடர்பு கொண்ட Peer Mohamedஇடம் கூறினேன். அந்த முதல் வாக்கியத்தில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.”
சம்பந்தப்பட்ட மற்ற பெண்களின் விளக்கமும் இதுவாகத் தான் இருக்கும் என்பதால், இவர்களின் விளக்கத்தை ஏற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அறிவுடைமை.
ஊடகவியலாளன் என்ற முறையில் நாம் “பீர் முகமது’களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், முற்போக்காளர்கள் மீது “சாதிப்பெருமிதம்” என்ற கேவலமான ஸ்டிக்கரை நீங்களாக ஒட்டி தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள். மிகுந்த பொறுப்புணர்வுடன் பணியாற்றுங்கள்.
Source: http://heronewsonline.com/kotravai-denial/