Showing posts with label வசுமித்ர. Show all posts
Showing posts with label வசுமித்ர. Show all posts

Jul 25, 2021

மார்க்சியம் என்ன சர்வரோக நிவாரணியா?




தோழர் மார்க்சியம் என்ன சர்வரோக நிவாரணியா? அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒற்றைத் தீர்வு இருக்க முடியுமா?

யார் அப்படி சொன்னா? நாங்க சொன்னோமா? மார்க்சியம் என்ன சொல்லுது “சகல ரோகத்துக்கும்” ஒரு அடித்தளம் இருக்கு. அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கு! அதுதான் தனியுடமை. உழைக்காமல் செல்வம் சேர்க்குற பேராசை புடிச்ச கும்பல் மக்களை படிநிலைப்படுத்தி, ஒடுக்கி, அடக்கி பலவிதமா பிரிச்சு வச்சு கடுமையான உழைப்புல ஈடுபடுத்தி உழைப்பைச் சுரண்டி வாழுறதுதான் எல்லா விதமான ஏற்றத்தாழ்வுக்கும், ஒதுக்கலுக்கும், ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், பாசிசத்திற்கும், போருக்கும் இன்னும் இதர அநியாயங்களுக்கும் காரணமா இருக்குன்னு சொல்லுது! இதை புரிஞ்சுக்குறதுக்கோ, ஏத்துக்குறதுக்கோ ஒன்னும் இழப்பில்லையே. ஏத்துக்க முடியாம போறதுக்கு சில காரணங்கள் இருக்கு! அதுல முக்கியமானது வர்க்க நலன்! அதுக்கு ஏத்த பிழைப்புவாத அரசியல்! அம்புட்டுதேன்.

இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது. இங்க சாதி இருக்கு! கம்யூனிஸ்டுகள் இந்த மண்ணுக்கு ஏத்த மாதிரி மார்க்சியத்தை மாத்தனும்!

இருங்க அவசரப்படாதீங்க! இந்தியாவுல சாதி இருக்கு! ஆமாம்! அது ரொம்ப கொடுமைகளை செய்யுது! ஆமாம்! சாதியை ஒழிக்கனும் – ஆமாம்! இந்தியாவுக்கு ஏத்த மாதிரி மார்க்சியத்தை மாத்தனும் – ஆங் அதுதான் இல்ல! இங்க தான் பிரச்சினை ஆரம்பிக்குது!

மார்க்சியம் என்பது தட்டையான, திடமான  தத்துவமே இல்ல. அது இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்று பொருள்முதல்வாதம் என்னும் சிறந்த கண்ணோட்டங்களை, ஆய்வுமுறையை கொண்டது. எளிமையா சொல்லனும்னா எந்த ஒரு பொருளுக்குள்ளையும் முட்டலும், மோதலும், முரண்பாடும், ஆற்றலும் இருக்கும் அதன் இயக்கப் போக்குல தன்மைகள் முட்டி மோதி ஒண்ணு இன்னொண்ணை மறுத்து அது வேற ஒண்ணா மாறும். இயற்கைப் பொருள் மாதிரி மனுச சமூக வாழ்வும், வாழ்க்கைக்கான ஏற்பாடுகளும் இப்படியே மாறி மாறி கடைசில சமூக இயக்கம் ஒரு சமநிலையை எட்டும் போது முரண்பாடுகளற்ற ஒரு நிலையை எட்டினால் அப்ப அதுக்கேத்த நிலைமைகள் நீடிச்சு நிக்கும் என்பதுதான் மார்க்சியத்தின் சாராம்சம். (விரிவாக படித்து புரிந்துகொள்ள வேண்டும்).

மார்க்ஸ் (மார்க்சியம்) சமூக இயக்கத்தை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம்னு ரொம்ப அழகா பிரிச்சு கொடுத்திருக்காப்ல. நாம பார்க்குற மதம், அரசு, அரசியல், பண்பாடு, சட்டம், நீதி இதெல்லாம் மேற்கட்டுமானம். மனுசப்பய வாழ்க்கைக்கு கூட்டா சேர்ந்து பொருள் தயாரிச்சு வாழும் போது உருவாகுற ஏற்பாடுலருந்து (உற்பத்தி முறை) உருவாகுற மனுசப்பய உறவுகள் (உற்பத்தி உறவுகள்) தான் மேல எது எப்படி இருக்கும்னு தீர்மானிக்குதுன்னு சூப்பரா படம் போட்டு காட்டிருக்காரு. அவர் நேரடியா இந்த முடிவுக்கு வரலங்கோ! அவருக்கு முன்னாடி இருந்த அத்தனை தத்துவங்களையும், பொருளாதார அமைப்புகளையும், வரலாரையும் ஏங்கல்ஸோட சேந்து ஆய்வு பண்ணி தான் உண்மையை கண்டுபுடிச்சாரு. ஒரு கூட்டம் உழைக்காம சொத்து சேர்க்குது எப்படி தெரியுமா? அதுக்கு அந்த கூட்டம் என்னல்லாம் செய்து தெரியுமான்னு கிளிப்பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லிவச்சிருக்காங்க மார்க்ஸும் எங்கல்ஸும்.

இது ஒரு சிறந்த விஞ்ஞானபூர்வ உலக கண்ணோட்டம். ஆய்வுக் கருவி. இதை வச்சுக்கிட்டு இந்திய சமூகத்தை ஆய்வு பண்ணனும். ஆமாம் ஆய்வு பன்ணனும். ஆய்வு பண்றது வேற. மார்க்சிய அடிப்படையவே காலி பண்ணி அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானதம்னெல்லாம் ஒண்ணுமே இல்ல. அது அப்போ சொன்னது! அது ஐரோப்பிய உற்பத்தி முறைய மாதிரியா வச்சு பேசுனாங்க.. இங்க பொருந்தாது! இந்திய கம்யூனிஸ்டுங்க சாதி மேற்கட்டுமானம்னு தப்பு தப்பா பேசிட்டாங்க . அது அடிக்கட்டுமானம் தான்.. இல்ல இல்ல அது ஒரு தனி மையம்.. இப்படில்லாம் திரிக்குற வேலையத்தான் “உண்மையான” மார்க்சிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்.

அப்படிப்பட்ட உண்மையான மார்க்சியர்கள் யாரும் சாதி மேற்கட்டுமானம்னும்  சொல்லல. வர்க்கப் போராட்டம் மட்டும் தான் தொடுக்கனும். அப்ப சாதி தானா ஒழிஞ்சுடும்னும் சொல்லல. சும்மா எதையாச்சும் உளறிக் கொட்டக் கூடாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு இயக்கம் கட்டி போராடனும். ஆனா அது வர்க்கப் போராட்டப் பாதைல இனைஞ்சு இருக்கனும்னு மட்டும் தான் சொல்றாங்க.

மார்க்சியத்தை முன் வைத்து (தற்காத்து) வாதிடுபவர்கள் என்ன சொல்றோம்: எந்த ஒரு சமூகத்துல இருக்குற ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்குறதுக்கு தேவைப்படுற சமூக பகுப்பாய்வ மார்க்சியத்தைப் பயன்படுத்தி சிறப்பா திறனாய்வு செய்ய முடியும். அப்படின்னா என்ன? இந்தியாவுல என்ன மாதிரி உற்பத்தி முறை இருக்கு. அது நாடு முழுக்க ஒரே மாதிரி இருக்கா? எங்கெங்க என்ன மாதிரி உற்பத்தி நிலவுது. ஒவ்வொரு பகுதிலையும் என்ன மாதிரி உற்பத்தி உறவுகள் இருக்குன்னு (உ.ம் முதலாளி தொழிலாளி, ஆண்-பெண் உறவு, சாதிய உறவுகள், பாலின, திறன் சார்ந்த உறவுகள், மத ரீதியான உறவுகள், ஆண்டான் அடிமை உறவுகள், நிறவாத, இனவாத உறவுகள்) ஆய்வு பண்ணுங்க. ஒவ்வொரு பகுதியா.. ஒவ்வொரு குழுவா கூட ஆய்வு பண்ணுங்க. யார் கிட்ட உற்பத்தி சாதனங்கள் உடைமையா இருக்கு. அது எந்த சாதிகிட்ட பெரும்பான்மையா இருக்கு (எந்த மதம், பாலினம், இனம், மொழி, இத்யாதி)   இப்படியெல்லாம் ஆய்வு பண்ணா நமக்கு ஒரு “டேட்டா” கிடைக்கும். அந்த தரவுகள வச்சு பொது எதிரி யாரு.. தனித் தனியான எதிரி யாரு, எந்தெந்த வடிவத்துல, மாறு வேஷத்துல அந்த பயலுவ இருக்காகன்னு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க!

ஒவ்வொரு ஏற்றத்தாழ்வையும் ஒழிக்க வேலைத்திட்டத்தை  முன் வச்சு, மக்கள அரசியபடுத்தி, அணிதிரட்டுங்க, உழைக்கும் மக்கள் / ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டி புரட்சி பண்ணி அதிகாரத்தை கைபத்தி சமத்துவமான ஒரு உற்பத்தி முறையை நிறுவி… அதுகூடவே தொடர்ந்து வர எல்லாவிதமான ஏற்றத்தாழ்வு, பண்பாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து புரட்சிகர அரசியல் மூலமா சரி பண்ணி இறுதியான சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டுங்கன்னு தான் சொல்லுது. இதுல என்ன தப்பிருக்கு? இது எப்படி வன்முறையாகும்? இந்த நடைமுறைல ஆளும் வர்க்கம் வன்முறையை ஏவும்.. அப்ப தவிர்க்கவியலாத வகையில சூழலுக்கேத்த முடிவை எதிர் முகாம் (உரிமைக்காக, சமத்துவத்திற்காக போராடும் மக்கள்) எடுக்க வேண்டியிருக்கும்.. அவ்ளோதான்! இதை ஒழுங்கா படிக்காம கண்டபடி பேசிக்கிட்டு மார்க்சியத்தை தப்பு தப்பா திரிச்சு, கம்யூனிச வெறுப்பை ஏற்படுத்த பலவிதமான குரூப்புகள் இருந்துச்சு, இப்பவும் இருக்கு. உலகெங்கிலும் அதுக்கெதிரான மார்க்சியப் போராட்டமும் தொடர்ந்துட்டு தான் இருக்கு.இந்தியால, குறிப்பா தமிழ்நாட்ல மட்டும் தான் இந்த மாதிரி ஆய்வைக் கண்டா பயப்படுறாங்க.. ஏன்னா பொழைப்பு போய்டுமே!

மேல சொன்ன மாதிரி இந்திய சமூகத்தை மார்க்சிய நோக்குல ஆய்வு பண்ணி பல பேர் பலவிதமான ஆய்வுகள முன் வச்சிருக்காங்க.. சிலது சரி, சிலது தவறு, சிலது பகுதியளவில் சரின்னு ஒரு நீண்ட வரலாறு இருக்கு. சிலரு மார்க்சியப் போர்வைல மார்க்சியத்தையே திரிச்சு வேலை பார்த்திருக்காங்க.. கட்சிங்க காணாம போறதுக்கு அதுவும் ஒரு காரணம். வேற சிலர் பெரியார், அம்பேத்கர், பின்நவீனத்தும், பெருங்கதையாடல், சிறுகதையாடல், ஊடறுக்கும் கோட்பாடு (இண்டர்செக்‌ஷனாலிட்டி தியரி), கீழைத்தேயம், மேலைத்தேயம், பின் அமைப்பியல், ஃபூக்கோ தெரிதா, அல்தூசர், ப்ளக்கனாவ், இன்னும் நிறைய பேரை முன் வச்சு மார்க்சியத்துல ஒண்ணுமே இல்லன்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க.. நாம மாத்திக்கனும், விரைப்பு தன்மையோட இருக்க கூடாது அப்படி இப்படின்னு நிறைய சால்ஜாப்பு பேச்சுகளை முன் வச்சு கடந்த 30 வருஷங்கள்ள மார்க்சியத்தை ஒழிச்சு கட்ற வேலைய (மறைமுகமாக கம்யூனிஸ்ட் இயக்கங்களையே) சீரும் சிறப்புமா செஞ்சு முடிச்சுட்டாங்க.

எந்த மார்க்சியரும் விரைப்புத் தன்மையோட இல்ல. நெகிழ்வுத் தன்மை என்பது மார்க்சிய அடிப்படையைவே விட்டுக் கொடுக்குறதுமில்ல. Application is different from Revisionism, Distortion and adding ‘isms’ that is dead against Proleterian class & its guiding light Marxism. மார்க்சியத்தை இந்திய சூழலுக்கு, தமிழ் சூழலுக்கு பிரயோகித்தல் என்பது வேறு, மார்க்சியத்தையே திரித்து, உருவைக் கெடுத்து, உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான, அதன் ஒளிவிளக்கான மார்க்சியத்தையே சிதைக்கும் வகையில் பல்வேறு இசங்களை சேர்க்கச் சொல்லி மார்க்சியத்திற்கு சாவு மணி அடிப்பது வேறு.

எங்களைப் போன்ற மார்க்சியர்கள் மார்க்சியத்தின் அடிப்படையை தகர்க்காமல் இந்திய சமூகத்தை, விடுதலை கருத்தியல் கோட்பாடுகளை, அதை முன் வைத்த தலைவர்களை பகுப்பாய்வு செய்து நேர்மையான வரையறையை முன் வைத்து பொது எதிரி யார் என்பதை வரையறுங்கள். அந்த பொது எதிரிக்கும் துணை நிற்கும் சக்திகள் யார், சீர்திருத்தவாதிகள் யார், ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சங்கள் என்ன, நிராகரிக்க வேண்டிய அம்சங்கள் என்னவென்று கோட்பாட்டுருவாக்கம் செய்து, வேலைத்திட்டங்களை வகுத்து செயல்படுங்கள் என்று தான் சொல்கிறோமே தவிர எந்த ஒரு தலைவரையும் இழிவுபடுத்துவதோ, அவதூறு செய்வதோ எங்கள் வேலையல்ல.

சாதி ஒழிப்பு என்று வரும் போது அதன் மாபெரும் சக்திகளாகத் திகழும் பெரியாருக்குரிய இடம் என்ன, அம்பேத்கர் அவர்களின் இடம் என்னவென்பதை கம்யூனிஸ்டுகள் வரையறுப்பது அவசியம். ஏனென்றால் அவர்களிடம் போதாமை உள்ளது. அவர்களை முன் வைத்து மார்க்சியத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் இல்லாமல் ஆக்கத் துடிக்கும் சக்திகள் இங்கே நிறைய உள்ளன. உண்மையில் அது உழைக்கும் வர்க்க விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும், பாசிச ஒழிப்பிற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் தான் நாம் இடையீடு செய்ய வேண்டியுள்ளது.

இது காலம் காலமாக நடந்து வரும் போராட்டம். 2015இல் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்கு புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூலின் விளைவாக அந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இயக்கவியல் வரலாற்றுப் போக்கில் அது தவிர்க்கவியலாதது.

இதை பலமுறை பல வழிகளில் விளக்கியாகிவிட்டது. ஆனால் பிழைப்புவாதிகள் சிலரின் அவதூறுகளால் பலர் அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டு கொந்தளிக்கும் சூழல் நிலவுகிறது. இதுவும் அப்படித்தான் இருக்கும். அதற்குரிய எதிர்வினைகளும் முரன்பாடுகளின் இருப்பிலிருந்து மேலெழும்..

இங்க என்னதான்யா நடக்குதுன்னு குழப்பமா இருக்கா… அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்க.. நம்மாளு, நம்ம தலைவர், நம்ம அமைப்பு, நம்ம தோழர்ங்குற சார்பையெல்லாம் விட்டுட்டு மார்க்சியம் படிக்கவும். பிரச்சினை புரியும்

-            நன்றி, கொற்றவை, 26.7.2021 

Jun 9, 2021

அம்பேதர் என்ன ஒரு கூட்டத்தின் தனிச் சொத்தா

 அம்பேத்கர் எழுதியதை மேற்கோள்களாக, போஸ்டர்களாக பயன்படுத்திக்கொள்ளக் கூட அவரை தொழுபவருக்கு மட்டுமே உரிமை உண்டு அப்படியிருக்கையில் அவரது சிந்தனைகளை திறனாய்வு செய்வதா! அது மகா பாவம்! அல்ல அல்ல சாதி வெறி! இதுதான் அம்பேத்கரியவாதிகளின் எழுதா விதி.

அம்பேத்கர் எழுதியதில் புரட்சிகரமாக, சாதகமாக உள்ள எழுத்துகள் மட்டுமே இதுவரை எடுத்தாளப்பட்ட நிலையில் அவரது எழுத்துகள் வாயிலாக அவரது மதப் பார்வை மற்றும் பொருளாதாரப் பார்வை எத்தகையது என்பதை ரங்கநாயகம்மா திறனாய்வு செய்தார். வழக்கம் போல் அதை சாதிய அவதூறுகளாலும், வசைகளாலும், மிரட்டல்களாலும் (வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க வேண்டும் என்று அப்போதே ஒருவர் எழுதினார் ). அதனைத் தொடர்ந்து “சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலை நான் தொகுத்தேன், மொழிபெயர்த்தேன். என்னுடைய பதிலுரைகளையும் இணைத்தேன்). ஆனால் அந்நூலை பற்றி அம்பேத்கரியர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை!

ஏனெனில் அதன் தலைப்பில் “அம்பேத்கர்” இல்லை.

அடுத்ததாக, ரங்கநாயகம்மா மறுப்பு நூல் வந்ததாக சொல்லப்பட்டது. வழக்கம் போல் சுயசாதி பற்றிலிருந்தும், அரசியலில் பிழைத்திருக்க வேண்டியும் ரங்கநாயகம்மாவின் சொற்களை திரித்து! அல்லது அவர் இதைத்தான் சொல்ல வருகிறார்! இப்படித்தான் பொருள் கொடுக்கிறார் என்று தங்கள் வசதிக்கேற்ப, தங்கள் “வட்டத்தினரை” ஆசுவாசப்படுத்த முயலும் ஒரு நூல் அது!

இதற்கிடையே அம்பேத்கரை கடவுளாக மாற்றி சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடமே தீர்வுள்ளது என்று அடையாள அரசியல் செய்யும் போக்கிற்கு (இதன் பிரதான நோக்கம் மார்க்சியத்தை ஒழிப்பது, கம்யூனிஸ்டு அரசியலை ஒழிப்பது) - எதிராக அம்பேத்கரது புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலை வசுமித்ர எழுதினான். அதை அறிவித்தவுடன் ஒரு கூட்டம் தன் சதி வேலைகளைத் தொடங்கியது. மார்க்சியம் என்றால் என்னவென்றே அறியாத “புலி எதிர்ப்பு போராளி” ஒருவர் களம் இறங்கினார். ரங்கநாயகம்மாவின் அறிவை மட்டமாக பேசியதற்கு எதிர்வினையாக வசுமித்ர ஒரு கேள்வியை வைத்தான்! அதை திரித்து இன்று இந்த நொடிவரை வசுமித்ர அம்பேத்கரை அவதூறாக பேசிவிட்டான் என்று ஒரு கூட்டம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது வசுமித்ர அதற்கு விளக்கமளிக்கிறான்.

அம்பேத்கரின் எழுத்துகளை இப்படி புரிந்து கொள்ளக் கூடாது, அப்படிப் புரிந்துகொள்ளக் கூடாது! இடையிலிருந்து பேசாதீர்கள், முழுவதுமாக படியுங்கள், அந்நூலை அம்பேத்கர் எழுதவே இல்லை, அதை தொகுத்தார்! அது அவருடைய மேற்கோள்! அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதினார்! அவர் எழுதவில்லை! இப்படி வகை வகையாக அம்பேத்கரின் “தவறான” சில வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான எழுத்துகளுக்கு விளக்கம் கொடுத்தனர்!

இப்போது நாம் விளக்கம் கொடுத்தால் ஒரே ஒரு பதில் தான் வரும் – சாதி வெறி!

யாருக்கு சாதி வெறி என்பதை இனியும் நாங்கள் விளக்க வேண்டியதில்லை!

ஆனால், மேற்சொன்ன சமாளிப்புவாதங்களை நாம் எல்லா மத நூல்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கத் தொடங்கினால் அது எத்தகைய அறிவார்ந்த சூழ்நிலையை இங்கு ஏற்படுத்தும்?

கம்யூனிசத்தைப் பன்றித் தத்துவம் என்றார், மார்க்ஸியம் பற்றி எதிர்மறையாக பேசினார்! தாழ்த்தப்பட்டவர்கள் கம்யூனிசத்தை நாடினால் நாடே அதோகதிதான் என்பார்! ஏன்? ஏனென்றால் அன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பை கண்டுகொள்ளவில்லை! அவர்கள் மேல் இருந்த கோவத்தில் அப்படி பேசினார் என்று மீண்டும் சமாளிப்புவாதம்! அப்படியெனில் மார்க்ஸையும், மார்க்சியத்தையும் ஏன் அவர் மறுக்க வேண்டும்? அது வன்முறைய்ப் பாதை என்று ஏன் முடிவுக்கு வரவேண்டும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் உள்ளிட்டோர் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அனைவரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை! ஆனால் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கையில், குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் அரசியலை மடைமாற்றம் செய்கையில், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை குலைக்க அதை முன்னெடுக்கையில் அதற்கு காரணமாக அமையும் அரசியல் சித்தாந்தத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உள்ளது.

ஆதாரம் எங்கே ஆதாரம் என்கிறார்களே அம்பேத்கர் மார்க்ஸை விமர்சிக்க எதை ஆதாரமாக கொடுத்துள்ளார்?

எல்லாவற்றுக்கும் மேலாக பொருள்முதல்வாத விஞ்ஞான சித்தாந்தத்தை கருத்துமுதல்வாத (கால் பொருள்முதல்வாத??) சித்தாந்தத்தோடு ஒப்பிட்டு மார்க்சியம் உதவாது பௌத்தமே தீர்வு என்று போதித்து சென்றார். இதை நாம் திறனாய்வு செய்யக் கூடாதா?

அம்பேத்கரது எழுத்துகள் என்ன ஒரு கூட்டத்தின் / சாதியின் தனிச்சொத்தா?

அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞர் என்னும் அடிப்படையிலும் மார்க்சியர்கள் அவரை விமர்சிக்கலாம்! விமர்சிப்போம்!

சாதியத் தலைவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸா புத்தரா என்றோ, மார்க்சியமா பௌத்தமா என்றோ ஆய்வுகள் செய்யவில்லை. சாதி ஒழிப்பிற்கு தீர்வு தம்மிடம் உள்ளது என்றும் சொல்லவில்லை! எனவே நாங்கள் அத்தகைய சாதியத் தலைவர்கள் குறித்து பேசவோ, ஆய்வு செய்யவோ ஒன்றுமே இல்லை! இதுகூட தெரியாத அறிவிலிகள் ஏதோ அறிவுபூர்வமாக கேள்வி எழுப்புவதாக நினைத்துக் கொண்டு “அவரை விமர்சிச்சியா, இவரை விமர்சிச்சியா?” என்று உளறிக்கொண்டிருக்கின்றனர்!

அவர்களது உளறல்களும் வசைகளும் அம்பேத்கருக்கே இழுக்கு சேர்க்கிறது! எங்களது ஆய்வுகள் அல்ல!

வசுமித்ரவின் விளக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்

// ஆண்குறி என்பது ஆபாசமான வார்த்தையல்ல. அது ஆணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ஒரு சொல். அவ்வளவே. ஆண்குறிக்கான வசைச் சொற்கள் என்னவென்று தெரியாதவர்கள் அல்ல நாம். விசயத்திற்கு வருகிறேன்.//

// அம்பேத்கரின் பௌத்தப் புரிதலை முன்வைத்தே அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன். அந்தக் கேள்விக்கான அடிப்படை அவசியமும் இருக்கிறது.

அம்பேத்கரது பௌத்தமானது புத்தரின் ஆண்குறி உள்ளிட்ட அங்க இலட்சணங்களை எப்படிப் பதிவு செய்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாகப் பார்க்கலாம். அதற்கு முன்னதாக சிவனின் ஆண்குறி குறித்து அம்பேத்கரின் வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்.

//

https://www.facebook.com/makalneya/posts/5980320278652594

 

Jun 4, 2021

நான் ஒரு பகவானைப் படைக்கிறேன்.

நான் ஒரு பகவானைப் (இறைத் தூதரை / புனிதாத்மாவை / புரட்சியாளரை) படைக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் (மத நூல்கள்) அடிப்படையில் நானே எழுதுகிறேன் (தொகுக்கிறேன்).

என்ன நோக்கமாக இருக்க முடியும்? - அவர் இப்படியெல்லாம் வாழ்ந்தார்… இந்தந்த கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனவே நான் அவரை என் விடிவெள்ளியாக கருதுகிறேன். அவரின் போதனைகளை விடுதலைத் தத்துவமாக, புரட்சிகர சிந்தனையாக முன் வைக்கிறேன்.என்’ மக்களின் விடுதலைக்கான பாதையாக அதை வழிமொழிகிறேன் என்பது தானே நோக்கமாக இருக்க முடியும்?

நிற்க!

இப்படி நான் தொகுக்கையில் அந்த பகவான் ஏன் துறவறம் எய்தினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது வாய்ப்பில்லை (முற்போக்கானதாக இல்லை) என்று எனக்கு தோன்ற நான் அக்காரணங்களை மாற்றி எழுதி புரட்சிகரமாக மாற்றுகிறேன்!

பின்னர் ஓரிடத்தில் அந்த புனிதாத்மாவின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்த பண்பு நலன்களை எழுதுகிறேன். அப்போது, ” தன் மகன் துறவறம் சென்றால் இராஜ்ஜியத்தை யார் ஆள்வது என்னும் கவலையில் அவரை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் “இறக்கி” அந்த ‘ஆண்’ மகனை மயக்கி ‘சிற்றின்பத்தில்’ ஆழ்துமாறு பணித்தார்” என்று எழுதி… அந்த பெண்களும் மிகுந்த ஈடுபாட்டோட்டு அதனை செய்தனர்…

ஆண்டுக்கணக்கில் இந்த ‘வசிய’ வேட்டை நடந்தது என்று எழுதுகிறேன் (சாரி தொகுக்கிறேன்). எழுதி விட்டு இறுதியில் குலகுருவோ அல்லது யாரோ வந்து கேட்கிறார்கள் “பெண்களை நாடுதல் இயற்கையானது தானே என்கிறார். .அதற்கு அந்த புனிதாத்மா " தாங்கள் பெண்களை நேயத்துடன் அணுக வேண்டும் என்பீர்களாயின் , பண்பான நேயம் பற்றி நானறிவேன்" என்று பதிலடி கொடுத்தார் என்று எழுதி “ஆஹா எப்படிப்பட்ட பண்பாளன்’ இவனல்லவோ ஒழுக்கவாதி! பாருங்கள் இவன் பெண்களை எப்படி மதிக்கிறான் என்றெல்லாம் புகழ்ந்துரைத்து அவரை வரலாற்று நாயகனாக முன்னிறுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மற்ற மத நூல்களில் உள்ள ஆணாதிக்க நரித்தனங்களை கட்டுடைக்கும் ஒருவர் எனது புனிதாத்மா குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது மேற்சொன்ன வர்ண்ணனைகளைப் படித்து விட்டு அவருக்கு ஒரு கேள்வி எழுகிறது “ஏதேதோ துயரங்களை, அநீதிகளைக் கண்டு பொறுக்க முடியாமல் துறவறம் மேற்கொண்ட அந்த புனிதாத்மா அடிமைப் பெண்களை இப்படி பாலியல் பண்டமாக ஏவியது குறித்து ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை?” சரி அதை “தொகுத்த” எம் தலைவி! ஏன் அதை அந்த கதாப்பாத்திரம் வழியாக போதிக்கவில்லை?

ஆண்டுக்கணக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அமைச்சர் வந்து கேட்கையில் “எனக்கு பண்புடன் நேசிக்கத் தெரியும்” என்கிறாரே? அதற்கும் மேல அந்த பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? இளமை போய்விட்டால் பெண்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதாக வருந்தினார் என்றும் எழுதினால் எப்படி இருக்கும்?

உண்மையில் அந்த புனிதாத்மா சமத்துவவாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணியவாதி / மார்க்சியவாதி எதிர்பார்ப்பார்? குறைந்தபட்சம் அந்நூலை கட்டுடைப்பார்.

ஆணைப் புனிதவானாக காட்டுவதற்காக பெண்களை பாலியல் பண்டமாக்கி நடமாட விட்டு, அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.. ஏனென்றால் என்னுடய ‘நாயகன்’ ஒழுக்கவான். மனதைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் என்று நிறுவும் ஆணாதிக்க மனம் என்று திறனாய்வு செய்யக் கூடாதா?

கண்டிப்பாக முற்போக்கு மனங்கள் இதை வரவேற்கும். ஆஹா என்னவொரு ஆய்வு என்று மெய்சிலிர்க்கும்… அத்தகைய விமர்சனத்தை வைப்பது யார் என்பதைப் பொறுத்து! விமர்சிக்கப்படுபவர் யார் என்பதைப் பொறுத்தும்! 😉

சுயசாதி பற்றுடன் தம் தலைவரை அனுகுபவர்களுக்கு தம் தலைவர் இப்படி தூய்மைவாதப் பார்வையோடு தம் புனிதாத்மாவைப் படைத்திருக்கிறாரே… அதற்குள் இப்படி ஒரு “மதவாத”, “பார்ப்பனியத்திற்கு நிகரான புனிதவாத”, “ஆணாதிக்க” மனம் செயல்பட்டிருக்கிறதா என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாகத் தான் இருக்கும்… என்ன செய்வது!

கூடுதலாக பெண்கள் அப்படி உலவ விடப்படுவது குறித்த வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்சியம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். தாய்வழிச் சமூகம் உடையத் தொடங்கும் காலம், இனக் குழுக்கள் மெல்ல அழியும் காலம். ஆணாதிக்கம் மேலோங்கும் காலம், அரசு உருவாகும் காலம், பார்ப்பனிய ஒழுக்கவாத, மதவாத குலகுருக்கள் உள் நுழைதல், மன்னருக்கு அவர்கள் “முக்கியமானவர்களாக” மாறுதல், அதிகாரம் செலுத்துதல் என்று எவ்வளவோ விசயங்களை நாம் ஒரு தொன்ம நூலில் / புனிதாத்மாக்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து திறனாய்வு செய்ய முடியும்.

அதற்கு மார்க்சியம் வழிகாட்டும்!

இல்லையெனில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் செய்யப்படும் ஆய்வுகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். சுயசாதி பற்றும், ரசிக மனோபாவமும், பரிதாப உணர்வும் அதை தடுக்குமே ஆனால் அது அறிவு மறுப்புவாதம். மதம் அப்படித்தான் நகர்த்தும். முற்போக்கு சாயம் பூசப்பட்ட மதமானாலும் அது கருத்துமுதல்வாதமே. அதனை முன்மொழியும் ‘தலைவர் / தலைவி’களின் எழுத்துகளில் (தொகுப்புகளில்) உள்ள கோளாறும் அதுவே.

மதத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளார்ந்த கேடு என்ன என்பதை அறியவும் மார்க்சியம் வழிகாட்டும். எல்லா மதங்களும் ஏதோ ஒரு நாட்டில் வன்முறையையும், அழித்தொழிப்பும் மேற்கொள்கிறது என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

இந்த அடிப்படையில் தான் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியான ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு விடுதலை தத்துவம் என்று போதிக்கப்படும் தொகுப்பு எழுத்துகளும் விமர்சிக்கப்படுகின்றன. எழுதியவரும் விமர்சிக்கப்படுகிறார்!

அவரை விமர்சிச்சீங்களா இவரை விமர்சிச்சீங்களாங்குற கேள்விக்கு 5 வருஷமா பதில் சொல்லியாச்சு... போய் அதையாச்சும் படிங்க!

 

Oct 24, 2020

தேனி மாவட்ட தமுஎகச குறித்து


இன்றைக்கு இந்துத்துவ கும்பல் தோழர் திருமாவளவனுக்கு என்ன செய்கிறதோ அதைத்தான் ‘தலித்தியவாதிகள்’ சிலர் எங்களுக்கு 4 வருடங்களாக செய்து வருகின்றனர். பா.ஜ.க கல்யாணுக்கு நிகராக ஆபாசமாகப் பேசியுள்ளனர்!

 தமுஎகச, சிபிஎம் போன்ற ‘கம்யூனிஸ்ட் அமைப்புகள்’ ‘பிரபலங்கள்’ என்றால் ஒரு நிலைப்பாடு மார்க்சியத்திற்காக வாதிடும் தோழர்கள் என்றால் வேறொரு நிலைப்பாடு எடுப்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. எப்படி, பெரியார், அம்பேத்கர், தற்போது தோழர் திருமா உட்பட சாதிய அதிகாரத்திற்கு அடங்கமறுத்து சீறி எழுகிறார்களோ அதேபோல் அடையாள அரசியல் கும்பல்களுக்கு எதிராக, மார்க்சியத்தை வீழ்த்த நினைக்கும் சீர்குலைவு முயற்சிகளுக்கு எதிராக நாங்களும் கிளர்ந்தெழுவோம் :)

 கீழுள்ள பதிவை எழுதியவர் Vasu Mithra

தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு,
அன்புடன் வசுமித்ர எழுதிக்கொள்வது.....

வணக்கம்.

தமுஎகசவின் மீதும் ஆதவன் தீட்சண்யா மீதும் ஜெயமோகன் வைத்த குற்றச்சாட்டுக்களும், அவ்வமைப்பின் மதிப்புறு தலைவராக நீங்கள் எழுதியதையும், படித்தேன். உங்கள் இருவரின் கடிதங்களிலும் எனது பெயர் இருப்பதால் இந்த விளக்கத்தைக் கொடுக்க நினைக்கிறேன். ஜெயமோகனுக்கு என்னைக் கவிஞர் என்று. தெரிந்திருக்கிறது நல்ல விசயம்தான். ஆனால் தாங்களோ என்னை முன்பின் தெரியாதவன், பார்த்திராதவன் போல் வசுமித்ர ‘என்பவர்’ என்று சுட்டும்போது உங்கள் மனம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

தமுஎகச என் மீது வழக்குத் தொடுத்தது என்று ஜெயமோகன் கேள்விப்பட்டது தவறுதான். ஆனால் அது குறித்து நீங்கள் எழுதியது இன்னமும் சிக்கலாக மாறுகிறது. தங்கள் அமைப்பு வழக்குத் தொடுக்கவில்லை என்பதைக் கம்பீரமாக அறிவிக்கும் நீங்கள், உங்களது கட்சியின் வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்குத் தொடுத்ததை ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். ஏதோ ஒரு அமைப்பு தொடுத்த வழக்கு போல் ஏன் கடந்து செல்ல நினைக்கிறீர்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு உங்கள் கட்சியின் வெகுஜன அமைப்பு மட்டும் விதிவிலக்கா?

நீங்கள் அவ்வமைப்பில் இருந்த 25 ஆண்டுகாலமாக தமுஎகச மட்டுமல்ல, சிபிஎம் கட்சியும் யார் மீதாவது தனிப்பட்ட வழக்கை, அதுவும் வன்கொடுமை வழக்கை பதிவு செய்திருக்கிறதா என்ன? பிள்ளை கொடுத்தாள் விளை கதைக்குப் பிறகு ஆதவன் அத்தகைய மிரட்டலை எங்கும் வைத்ததில்லை என்பதை எந்த வகையில் உறுதி செய்துகொண்டீர்கள். அப்படியெனில் அந்தக் கதை மீது அவர் வைத்த வன்கொடுமை வழக்கு மிரட்டல் சரியானதுதான் என்கிற தோற்றத்தையே உங்களது கடிதத்தில் பார்க்கமுடிகிறது. அவரது விமர்சனம் குறித்து இன்றைய தினம் கூட உங்கள் விமர்சனங்களை வைக்கத் தடுப்பது எது தமுஎகசவின் மதிப்புறு தலைவர் என்கிற பதவியா?

ரங்கநாயகம்மா புத்தகம் வந்ததும் ஆதவன் தீட்சண்யா அவதூறைத் தொடங்கி வைத்தார். மார்க்ஸ் அவசியம் என்கிற நூலை பீயிக்கு ஒப்பாகச் சொன்னதுடன். கொற்றவை மீது வன்கொடுமை வழக்கு என்கிற மிரட்டலையும் மறைமுகமாக விடுத்தார். அதன்பின் அவரது வகையாறக்கள் என்னையும், கொற்றவையையும் முகநூலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கீழாக வசைகளாலும் ஏளனங்களாலும் எதிர்கொண்டனர். அந்த வகையறாக்கள் யார் என்று நீங்கள் கேட்டால் பெயர்களோடு, அவர்கள் வைத்த வார்த்தைகளையும் ஆதாரமாக முன்வைக்க நான் தயாராக இருக்கிறேன். தமுஎகசவின் மதிப்புறு தலைவராக நீங்கள் அந்த வார்த்தைகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்வீர்களா. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அத்தனை வார்த்தைகளையும் முன்வைத்தே நான் உரையாடத் தயார்.

பாரதி புத்தகாலயப் பொறுப்பாளர்கள் முதல்கொண்டு 'ஏன் வாப்பா ஒரு ரௌடி இல்லை' என்பது போன்ற வார்த்தைகளால்தான் தங்களது மார்க்சிய அறிவை முன்வைத்தார்கள். இதில் தமுஎகச போராளிகள் சிலர் ‘வக்காலி’ என்றெல்லாம் எழுதி தமுஎகசவின் அறிவை பறைசாற்றினார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆதவன் தீட்சண்யா தனது சாதி அடையாள அரசியலைத்தான் தலித்தியம் என முன்வைப்பார். அதை அம்பேத்கரியமாக சித்தரித்து, அதனடிப்படையில் எவரின் மீதும் வசைகளையும் அவதூறுகளையும் எழுதுவார். வன்கொடுமை வழக்கு போட்டுவிடுவோம் என்கிற பயத்தில்தான் கொற்றவை கவனமாக எழுதியதாக சித்தரிக்கும் அளவுக்கு அவரது சாதிய வன்மம் தலைகாட்டியிருக்கிறது. இது கிட்டத்தட்ட வன்கொடுமை வழக்கை வைத்து மிரட்டுவோம் என்கிற மறைமுக மிரட்டலன்றி வேறென்ன. மார்க்ஸை முன்வைத்து அம்பேத்கரை விமர்சித்ததை, சாதியப் புரிதலின் அடிப்படையில் அவர் திரித்துப் பேசியதை எல்லாம் தாங்கள் அறியவில்லையா என்ன?

பிள்ளை கொடுத்தாள் விளை கதையில் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் பார்வையை முன்வைத்துத்தான் ரவிக்குமார் “தலித்துக்களுக்கு இலக்கியத்தை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது, அவர்கள் சாதியைச் சொல்லி ‘பிளாக் மெயில்’ செய்யக் கூடியவர்கள்” என்பது போன்ற தவறான கருத்துக்கள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.” என்று எழுதினார். ஆனால் ஆதவன் தீட்சண்யா அதை இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் கொற்றவை நோக்கி அவர் வைத்த கருத்தும் அதுதான். ஆதவன் அப்படிப் பேசியதில்லை என்று உறுதியாகக் கூறும் நீங்களே இதற்கும் விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஏன்? மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதெல்லாம் கூட பொதுவெளியில் அவர் வைத்த விமர்சனங்கள்தான். இதனடிப்படையில் சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சி என்ற அவதூறுக்கு வலுச் சேர்க்கிறது. இதற்குக் கூட நீங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தமுஎகசவில் இருப்பதால் ஒரு மார்க்சிஸ்ட் கட்சியை சாதிக் கட்சி எனச் சித்தரிக்கும் அவதூறுகளையெல்லாம் நீங்கள் ஏன் கடந்து செல்ல விளைகிறீர்கள் என்பதும் புரியவில்லை. தமுஎகசவை ஜெயமோகன் குறைச் சொல்லும்போது மட்டும் மதிப்புறு தலைவராக முன் வருகிறீர்களே ஏன்?

மேலாக ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியவர் தேனியில் நடந்த கூட்டத்தில் எஸ்வி.ராஜதுரையை நான் அவதூறு செய்ததாக தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அப்படி அவதூறு செய்தால் ராஜதுரை சும்மா இருப்பாரா என்று அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கூட்டத்தில் நான் பேசியதற்கு வீடியோ ஆதாரம் எனது முகநூல் பக்கத்திலேயே உள்ளது. ராஜதுரையை மார்க்சிய அறிஞர் இல்லை எனச் சொல்வது தமுஎகசவுக்கு அவதூறாகத் தெரிந்தால் அது அவர்களது மார்க்சிய அறிவு அவ்வளவே. அவதூறுக்கும், வசைக்கும், அறிவார்ந்த விமர்சனத்துக்கும் தமுஎகசவில் இடமில்லை என்பதை அந்தக் கூட்டத்திலேயே உணர்ந்துகொண்டேன்.

இவ்வளவு ஏன், ராஜதுரை முன்னிலையில் நான் வைத்த விமர்சனத்தை அதே மேடையில் ராஜதுரை திரித்துத்தான் பேசினார். ‘ராஜதுரை மார்க்சிய அறிஞர் அல்ல’ என்ற எனது விமர்சனத்தை ‘நான் ராஜதுரையை மார்க்சிஸ்ட் அல்ல என்று சொன்னதாக தனது மனம் போக்கில் பேசினார். விளைவு ஆதவனது வகையாறாக்கள் முகநூலில் என் மீதும் கொற்றவை மீதும் வசைகளை வைத்தனர்.

மேடையிலையே என்னை மனநோயாளி என்றெல்லாம் பேசும் ஆதவன் தீட்சண்யா தமுஎகசவின் தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவை ஆய்வு வார்த்தைகள் என்று மதிக்கப்படுமா? இதுகுறித்து தாங்கள் இன்று வரை பேசியதே இல்லையே ஏன்? இப்பொழுதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போட்ட வழக்கை தமுஎகச போட்டது என்று ஜெயமோகன் எழுதியதும், ஆகா! கிடைத்தது ஒரு பாயிண்ட் என்றுதான் எழுத வந்திருக்கிறீர்களே தவிர இதுவரை ஆதவன் தீட்சண்யா வைத்த அவதூறுகளுக்கும், வசைகளுக்கும் நீங்கள் எந்த இடத்திலும் பதில் சொல்லியதில்லை. உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் எது சொன்னாலும் வேதவாக்கு என்று நம்புவதெல்லாம் எதன் அடிப்படையில்?

சம்பந்தப்பட்ட தேனிக் கூட்டத்தில், நீங்கள் என்னிடம் சொன்னது ‘தம்பி இங்க உன் கருத்துக்கும் சப்போர்ட் இருக்குப்பா நீ சொன்ன கருத்தைத்தான் தி.சு.நடராசனும் சொன்னார் என்று என்னிடம் சொன்னீர்களே. அப்படியென்றால் தோழர் நடராசன் ராஜதுரை மீது வைத்தது அவதூறா? தோழர் தி.சு.நடராஜனிடம் இதைக் குறித்து நான் பேசினேன்.

எல்லாம் போக கூட்டம் முடிந்து அவர் வெளியே வந்த போது கூட ராஜதுரையிடம் நான் பல விசயங்கள் குறித்துப் பேசினேன். அவரை அவதூறு செய்திருந்தால் அத்தகைய உரையாடல் எங்களுக்குள் சாத்தியமாயிருக்காது. எனக்கு அவர் முத்தமும் கொடுத்திருக்க மாட்டார். அந்த முத்தமும் அவதூறு முத்தமாகத்தான் ஆதவனது வகையாறாக்களால் ஏசப்பட்டது.

கூட்டம் முடிந்தபின் தோழர் சீருடையானிடம் கூட பேசினேன். ராஜதுரையை எந்தவகையில் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் செம்மலரின் ஒரு கட்டுரை படித்தேன் அதன் மூலம் அவரை மார்க்சிய அறிஞர் என்று சொன்னோம் என்றார். அதே செம்மலரில்தானே தோழர் தோதாத்ரி அவரை திரிபுவாதி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்று கூற அதற்குப் பதில் அவரிடம் எதுவும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக கூட்டம் தொடங்கும் முன்பாகவே எனது கேள்விகளைக் குறித்து தோழர் சு.வெங்கடேசனிடம் சொன்னேன். அவரும் பேசுங்கள் என்றார். ஆனால் ராஜதுரையை லோக குருவாக நினைத்து அந்த மண்டபத்தில் ஆதவன் தீட்சண்யா செய்த ஆர்ப்பாட்டங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஆதவன் மேடையில் ரங்கநாயகம்மா குறித்தும் என்னைக் குறித்தும் பேசியபோது, பேசுனதையே எதுக்குப்பா பேசிக்கிட்டு என்று நீங்கள் அங்கு எரிச்சல் அடைந்ததாக சக தோழர்களும் சொன்னார்கள்.

ஆதவன் தீட்சண்யா சாதி அடையாள அரசியலையே தனது முற்போக்கு முகமாக காட்டுபவர். அவரது எழுத்துக்களை வாசிக்கும் யாரும் இதை உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இலக்கியவாதி வேறு. “அடித்தால் திருப்பியடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்து தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத்தொடங்குவது என்பது பற்றி மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்கள்” என்றெல்லாம் எழுதுவது அவரது வாடிக்கை. இது ஒரு உதாரணத்துக்குத்தான். அவரது சாதி அடையாள அரசியலின் வார்த்தைகளையும் வசவுகளையும் தொகுத்தால் அதுவே தனித் தொகுப்பாக மாறும்.

தீண்டமை ஒழிப்பு முன்னணி குறித்து உங்களுக்கு தெரியாதென்றே எடுத்துக்கொண்டு இந்தக் கடிதத்தின் வாயிலாக ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். கருத்துச் சுதந்திரம் குறித்தான வரையறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனது வார்த்தைகளைத் திரித்து என்னை மிரட்டுவதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பே என் மேல் சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் என்னைக் கைது செய்யுமாறு புகார் தொடுத்தது ஏன்? வழக்கிற்கான முகாந்திரமாக நான் என்ன சொல்லி உள்ளேன் அவர்கள் என்னவிதமாகத் திரித்துள்ளனர் என்பதை உங்கள் அமைப்பில் உள்ளவர்களோடு கேட்டு நீங்கள் விவாதிக்கத் தயாரா?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றம் அவ்வழக்குக்கு எதிரான தங்களது கருத்தை முன்வைத்ததையும் நீங்கள் அறியவில்லை அப்படித்தானே? உங்கள் கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனோடு முடிந்து விட்டது என்றால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். எனக்கு அப்படி அல்ல.

அம்பேத்கரும் அவரது தம்மமும் நூல் வெளியான ஓரிரு நாட்களிலேயே எனக்கு முகநூலில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது குறித்தான எதிர்வினையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முன்வைத்தும் பேசியது.

மிரட்டல்களுக்கு இணையான வசைகளையும், அவதூறுகளையும் ஆதவன் தீட்சண்யா வகையறாக்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கும் மேலாக என் மீது, சிபிஎம்மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எனது கருத்தையே திரித்து வன்கொடுமை வழக்குச் சட்டத்தின் மூலமாக என்னைக் கைது செய்யத் துடிக்கிறது. கருத்துச் சுதந்திரமென்றால் என்ன என்று நீங்கள் பொதுவெளியில் மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முன் தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

என் மீதான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கை எதிர்கொள்வதற்கான அறிவை எனக்கு மார்க்சியம் வழங்கியுள்ளது. அதை எதிர்கொள்வேன். அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என் மீது போட்ட வழக்கு குறித்தான உங்களது கருத்துச் சுதந்திர வியாக்கியானங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவ்வளவே.

சிறுகுறிப்பு;

ஆதவன் தீட்சண்யா வகையாறா என்பது தவறாக இருந்தால் எஸ்.வி.ராஜதுரை வகையறாக்கள் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் எஸ்.வி.இராஜதுரை ‘ சிபிஎம் கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அனைத்திற்கும் மேலாக அம்பேத்கருக்கு ஏபிசிடி மார்க்சியம்தான் தெரியும் என்றவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், உங்களது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தது. இது குறித்து சிபிஎம் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கமாக கடிதம் கூட எழுதியுள்ளேன். அதையும் அறிந்திருக்க மாட்டீர்கள். இணைப்பைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

https://makalneya.blogspot.com/2017/10/blog-post_29.html?m=0

மேலதிக குறிப்பு:

தேனி மாவட்ட தமுஎகச குறித்து அதன் மதிப்புறு தலைவராக இருக்கும் உங்களை விட நான் கொஞ்சம் நன்கறிவேன் என்பதைப் பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

தேனி மாவட்ட தமுஎகசவில் தலைவர்களாக, செயலாளர்களாக, உறுப்பினர்களாக இருப்பவர்கள், இருந்தவர்களில் பெரும்பாலோர் அவரவர்கள் சார்ந்த சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நீங்களோ முற்போக்கு என்ற பெயரில் சாதியை ஒழிப்போம் என்பதை அமைப்பின் விதியாக வைக்க, உங்களது உறுப்பினர்களோ அதை வெற்றுக்கோஷமாக புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

தேனி மாவட்ட தமுஎகசவின் இலக்கியப் பெருந்தூண்களாக நீங்கள் கருதும் தோழர்! ம.காமுத்துரை உட்பட சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? தேனி மாவட்ட சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கூட சாதிச் சங்க உறுப்பினராக இருக்கிறார். இது தகவல் அல்ல. உண்மையை உள்ளபடியே இலக்கியவாதிக்குரிய மனநிலையோடு காமுத்துரைதான் தெரியப்படுத்தினார்.

சாதிச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது குறித்து அவரது மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. அத்தகைய குற்றவுணர்ச்சிக்கும், சாதிச் சங்கத்தில் இருப்பது அவமானம் என்பதற்குமான அந்த குற்றவுணர்ச்சியை மிக மோசமாக வளர்த்துவிட்டது அடியேன்தான். அதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சாதிச் சங்கத்தில் இருந்துகொண்டே தமுஎகசவை வளர்க்கும் நபர்களின் நீண்ட பட்டியல் வெளிவரும். அதில் உங்கள் அமைப்பின் விருதுபெற்றவர்கள் கூட இருக்கலாம்.

அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது’ என்ற மார்க்சின் வார்த்தைகள், தேனி மாவட்ட தமுஎகசவைப் பொறுத்தவரை ‘அடைவதற்கோர் சாதிச் சங்கம் இருக்கிறது’ என்பதாகத்தான் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் எப்படியோ? நீங்களோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியோ, அல்லது சிபிஎம் கட்சியோ இதை உடனடியாக கவனத்தில் கொண்டு, பேரிடர் பணியாக கருதி இதை முடித்து வையுங்கள். மத அமைப்புகளிலும் உங்களது உறுப்பினர்கள் இருக்கலாம். கவனியுங்கள்.

தமுஎகசவின் முற்போக்குப் போர் எப்பவும் முன்னணியில் நிற்க வேண்டும். அதன் இலக்கிய வளம்! தமிழகத்துக்கு அவசியம். அன்றாடத் தேவைகளில் ஒன்று. இதுநாள் வரை இலக்கியத்தில் அது ஆற்றிய பணிகளை இது போன்ற செயல்கள் பின்னுக்கு இழுத்துவிடக் கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமுஎகச வாழ்க! வளர்க! தமுஎகச நாமம் வாழ்க.

சாதியை ஒழிப்போம், தீண்டாமையை ஒழிப்போம் என்ற கோஷங்களுக்கு, குறைந்தபட்ச முன்நிபந்தனை சாதிச் சங்கத்தில் இருந்து வெளியேறுவதே. செய்யுமா தமுஎகச? செய்யுமா தீண்டாமை ஒழிப்பு முன்னணி? செய்வீர்களா தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே...செய்வீர்களா!

பிரியத்திற்குரிய தம்பியும் தோழனுமாகிய
வசுமித்ர

 

 

Jun 13, 2020

மத மாற்றமும் தூய்மைவாதச் சிக்கலும்
















//நம்முடைய நல்வாழ்வை விழைந்து, நம் இன்பத்தை நாடி, கருணையுடன் எவ்வகையான கணவர்க்கு நம்மை நம் பெற்றோர் மணமுடித்துக் கொடுப்பினும், அவர்பால் அன்புடைமையின் விளைவாய், முன் எழுந்து, பின் உறங்குவோராய், விரும்பி உழைப்போராய், கோருபவற்றை இன்சொற்களால் இனிமையாய் கோருபவராய் இருத்தல் வேண்டும். குழந்தைகளே! இவ்வாறு உம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.// - அம்பேத்கரின் புத்தர்!

#வசுமித்ர எழுதிய அம்பேத்கரறிதல் கவிதைகளும், #அம்பேத்கரும்_அவரது_தம்மமும் நூல் முன்னுரையும் எப்படி அம்பேத்கரின் துயரை, அவரின் மதிப்பை, அம்பேத்கர் மீதான சாதிய சமூக வன்மத்தை பதிவு செய்கிறதோ அதே போல் தான் வசுவின் நூல் அம்பேத்கரின் மத நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது. சாதி ஒழிப்பிற்கான தீர்வாக பௌத்தத்தை முன்வைக்கும் போக்கில் அம்பேத்கர் புத்தரை கடவுளாக்கும் நிலைக்கு சென்று பகுத்தறிவை கைவிட்டு தூய்மைவாதப் பிடியில், சொல்லப்போனால் பார்ப்பனியத்திற்கு நிகரான தூய்மைவாதப் பிடியில் சிக்கிக் கொண்டார் என்பதை முன் வைக்கிறது. மதவாத ஒழுக்கவாதமும் ஆணாதிக்கமும் பிரிக்கவியலாதவை! அதன் விளைவாக அம்பேத்கரின் புத்தர் மூலமாக நமக்கு அதுவும் தென்படுகிறது..

இதைக் கண்டு கோபப்படுவதை விட வருந்த வேண்டியுள்ளது! சாதியமைப்பால் அவமதிப்பிற்கும், விலக்கலுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகும் ஆன்மா தன்னை “அழுக்கானவன்’, “தீண்டத்தகாதவன்” என்று ஒதுக்கி அவன் வாழ்நிலையையே கேள்விக்கு உள்ளாக்கும் போது, உன்னைவிட நான் தூய்மையானவன் தான் என்று மெய்ப்பிக்கும் கொந்தளிப்பு ஏற்படும்… அது தன்னை அவமதிக்கும் மதத்திற்கு எதிரான ஒரு புதியதோர் தூய்மையான மதத்தை கலகமாக, தீர்வாக முன்வைக்க முற்படும். அம்பேத்கர் கைக் கொண்டதும் அதுவே!

ஆணாதிக்கத்திற்கு ஆண் வெறுப்பு எப்படி தீர்வாகாதோ அதேபோல் ஒரு மத வெறுப்பிற்கு (மதப் பிரச்சினைக்கு) இன்னொரு மதம் மாற்றாகாது! ஏனென்றால் வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாததன் விளைவாக எப்படி அரசு தோன்றுகிறதோ, அதேபோல் அவர்களுக்குரிய கருத்தியல் பிரச்சாரக் கருவியாக, ஒடுக்குமுறை கருவியாக மதங்கள் தோன்றுகின்றன. மதம் என்பது என்றைக்கும் ஆளும் வர்க்க உருவாக்கமே! ஆளும் வர்க்கத் தேவையே! உழைக்கும் வர்கத் தேவையன்று!

மேலும், சாதியை ஒழிக்க மதமாற்றம் தீர்வல்ல! அது கலகமும் அல்ல! புரட்சியும் அல்ல என்னும் கசக்கும் உண்மையை நாம் சீரணித்தே ஆக வேண்டும்! மதம் பற்றிய மார்க்சியப் பார்வை மட்டுமின்றி யதார்த்ததில் மதங்கள் என்ன செய்கின்றன என்பதை கணக்கில் கொண்டாவது பௌத்த அம்பேத்கரியர்கள் இதை உனர முற்பட வேண்டும். பௌத்தம் தோன்றிய அன்றைய காலச் சூழல், அதன் வர்க்கச் சார்பு, அது இயங்கிய விதம் அனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் தெளிவு ஏற்படும்…



Jun 1, 2020

FAQs - Frequently Asked (stupid) Questions: However!



FAQs - Frequently Asked (stupid) Questions: However!
1. அம்பேத்கரை விமசித்தால் தலித்துகள் நம் (கம்யூனிஸ்ட்கள்) பக்கம் வர மாட்டார்கள் தோழர்! எனவே, கொஞ்சம் “விட்டுக்கொடுங்கள்” என்போருக்கு:

• கடவுளை / இந்து மதத்தை / பார்ப்பனியத்தை விமர்சித்தால் இந்துக்கள் / பிராமணர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.
• காந்தியை விமர்சித்தால் காந்தியவாதிகள் வரமாட்டார்கள்.
• முத்துராமலிங்கத்தை விமசித்தால் ‘முக்குலத்தோர்’ நம் பக்கம் வரமாட்டார்கள்.
• தனியரசுவை விமர்சித்தால் கவுண்டர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.
• பா.மா.க தலைவர் இராமதாசை விமர்சித்தால் வன்னியர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.

• காமராஜரை விமர்சித்தால் நாடார்கள் நம் பக்கம் வர மாட்டார்கள்.
• திமுகவை / அதிமுகவை விமர்சித்தால் – அவர்களின் ஆதரவாளர்கள் / தொழிற்சங்க உறுப்பினர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.
• விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விமர்சித்தால் புலி ஆதரவாளர்கள், தமிழ் தேசியப் பற்றாளர்கள் நம்முடன் வர மாட்டார்கள்.
• சீமானை விமர்சித்தால் நாம் தமிழர் தோழர்கள் வர மாட்டார்கள்....

இப்படியே பட்டியலை சாதிவாரி, அமைப்புவாரி, தலைவர்களின் ஆதரவாளர்கள் வாரியாக அடிக்கிக் கொண்டே போகலாம்! யார் மனமும் புன்படாமல் வருடிக் கொடுத்தபடியே இருப்பதற்குத்தான் மார்க்சியம் என்னும் ஒரு சமூக விஞ்ஞானத் தத்துவத்தைப் பயின்றோம். எனவே கம்யூனிஸ்டுகளும் அடையாள அரசியலை, தலைகீழ் சாதிய அரசியலை கையிலெடுப்போமா?????

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! உழைக்கும் வர்க்கமானது தனக்கான விடுதலையை அளிக்கவல்ல பாட்டாளி வர்க்க அரசியல்/தத்துவத்தோடு சேர்வதை எந்த கொம்பனாலும் தடுக்கவியலாது. என்.ஜி.ஓ பண்பாட்டு மைய முதலாளிகள், பின்நவீனத்துவப் போலிகள் , அடையாள அரசியலின் ஆபத்தைப் புரியாத “கருணையாளர்கள்” அந்த நடைமுறையை கொஞ்சம் பின்னுக்கு இழுக்கலாம். ஆனால், உற்பத்தி உறவுகளில் உள்ள முரண்பாடுகளும், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிப் போக்குமே உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர ஒருங்கிணைப்பைத் தீர்மானிக்கவல்ல சக்தி (நிலைமை).

*****
2. இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை தோழர். அம்பேத்கர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல (அப்படி சொல்லிப்போம். ஆனால் விமர்சிச்சா ரவுண்டு கட்டி அடிப்போம்!) ஆனால் நீங்கள் ஏன் முத்துராமலிங்க தேவரை விமர்சிப்பதில்லை? இந்து மதத்தை இவ்வளவு தீவிரமாக விமர்சிப்பதில்லை.

மார்க்சிய தர்க்கத்தோடு விவாதிப்பவர்களுக்கு இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகள் கூட அல்வா சாப்பிடுற மாதிரிதான்! இப்படி சாதியைத் தோண்டி கேட்கும் அற்பவாதிகளுக்கெல்லாம் பதிலைச் சொல்ல வேண்டுமா என்று தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம்! ஆனால் முட்டாள்தனம் எல்லை மீறுகையில், சமூகத்தின் நன்மை கருதி….

• இந்துமதத்தை, பார்ப்பனியத்தை, ஃபாசிச மோடி அரசை எல்லாம் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கூடவே எல்லா மதங்களையும்! குறிப்பாக சாதி ஒழிப்பிற்கான தீர்வு என்று பௌத்த மத மாற்றத்தை முன்வைப்பதை!
• தத்துவார்த்த மட்டத்தில் இப்படி போர் தொடுத்தாலும் நடைமுறையில் தலித்துகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதற்கு எங்களது எழுத்துகளும் செயல்பாடுகளுமே சாட்சியாக இருக்கையில், இதுபோன்ற அவதூறுகள் வரலாற்றில் நிற்காது.

• அடுத்து முத்துராமலிங்கத் தேவர் பற்றிய ஜுஜுபி கேள்விக்கு #வசுமித்ரவின் பதில்:
o சாதி ஒழிப்பிற்குத் தீர்வு தன்னிடத்தில் உள்ளது / தேவரிடத்தில் உள்ளது என்று தேவரோ அல்லது யாரேனும் ஆய்வு செய்திருந்தாலோ…

o கந்தப் பெருமானா கார்ல் மார்க்ஸா, தெய்வீகமா, தேசியமா மார்க்சியமா என்று தேவர் எழுதி, அதில் மார்க்சியத்தைப் பன்றித் தத்துவம் என்றும் சர்வாதிகாரம் என்றும் கூறியிருந்தாலோ, அதனை வைத்து சாதி ஒழிப்பிற்கான தலைவர் அவர் ஒருவரே என்று அமைப்புகள், NGOக்கள் உருவாகி மார்க்சியத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தாலோ அவரையும் கண்டிப்பாக விமர்சிப்போம்.
கொசுறு: சி.பி.எம் உறுப்பினர்கள் சிலரைப் போல் முத்துராமலிங்கத்திற்கு மாலை எல்லாம் போட்டு அவரை எப்படி புரிந்துகொள்வது என்று இப்போதில்லை, எப்போதும் வருடிக்கொடுக்கும் வேலையை செய்ய மாட்டோம்.

• இந்து மதம், பார்ப்பனியம், சாதி இந்துக் கட்சிகள், சாதியத் தலைவர்களிடம் சமூக விடுதலைக்கான தீர்வு இல்லை என்பது ஊரறிந்ததே. அதனால் தான் அந்தப் பக்கம் இருப்பவர்களை இந்தப்பக்கம் இழுக்க அனைவருக்கும் பொதுவான, தவிர்க்கவியலாத சமூக உறவிலிருந்து ஏற்படும் அடையாளமான #வர்க்க #அடையாளத்தை முன் எடுக்க வேண்டும் என்கிறோம். ஒவ்வொரு பிரச்சினையின் போதும் அதற்குரிய எதிர்வினைகள் மூலம் நாங்களும் சாதியத்தை, சாதி ஆதிக்க அரசியலை விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம். (So, STFU).

எங்களுக்குத் தலைவர்கள் என்று யாருமில்லை! கார்ல் மார்க்ஸ் உட்பட! நாங்கள் ஏற்றுகொண்ட தத்துவம், அல்லது எங்களது உலகக் கண்னோட்டம் மார்க்சிய தத்துவ-சமூக விஞ்ஞான-அரசியல் பொருளாதார அடிப்படையிலானது. அவ்வளவே!

எனவே கொஞ்சம் தர்க்கப் பூர்வமாக, புத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்பவாவது மார்க்சியம் கற்கவும் ’தோழர்களே’!