Jan 28, 2024

ப்ளூ ஸ்டார் - திரைப்பட விமர்சனம்

 ப்ளூ ஸ்டார்! வெற்றி பெரும் அணிதான்! மக்களை அரசியல்படுத்த, குறிப்பாக ஒன்றுபடுத்த இதுவரை நான் கண்ட திரைப்படங்களில் தனித்து ஒளிர்கிறது இந்த நீல நட்சத்திரம்.

மிகவும் திறம்பட எழுதப்பட்டதொரு பிரதி. கணக்கிட்டு எழுதுதல் என்பார்கள். அப்படியொரு திரைக்கதை வடிவமைப்பு. திரையரங்கில் பார்வையாளர்கள் ஆரவாரமிட்ட தருணங்களே அதற்கு சாட்சி. வாழ்த்துகள் ப்ளூ ஸ்டார் அணி!
சமூகத்திற்கு இன்றைக்குத் தேவையான ஒரு செய்தி ‘ஒன்றுபடுதல்’, எதிரி யார் என்று உணர்ந்துகொண்டு ஒன்றுபடுதல், அதை ஒரு விளையாட்டின் வாயிலாக தொய்வில்லாமல், (ஜனரஞ்சகமாக) பொழுதுபோக்கு அம்சங்களுடன், விறுவிறுப்பாகவும் சொல்ல இயலும் என்பதை நிரூபித்திருக்கும் எழுத்து மற்றும் திரையாக்கம். எஸ். ஜெயக்குமார் & தமிழ்ப் பிரபா!
அரசியலே ஒரு விளையாட்டு என்பார்கள், ஆனால் ப்ளூ ஸ்டாரில் விளையாட்டின் வாயிலாக மிகந்த கூருணர்வுடன், நிலவும் படிநிலை பிரிவுகளையும் அதில் வாழும் மனிதர்களின் மனநிலை எப்படியெல்லாம் இயங்கும் என்பதையும் சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.
“உனக்கு கீழ ஒருத்தர் இருக்கான்னு நீ நினைச்சா, உன்னை கீழன்னு நினைக்க ஒருத்தர் வருவார்” ஒவ்வொருவரும் இதை உணர்ந்து விட்டால், சக மனிதனை கீழ்த்தரமாக நடத்துவதோ, வெறுப்பு பாராட்டுவதோ நடைபெறாது. ஆனால் இந்த உணர்வு ஏற்படாத வகையில்தான் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளத்தைக் கொடுத்து பெருமைக்குள் சிக்க வைத்து ஆட்டம் காட்டுகிறது சமூக அரசியல். (அந்த பெருமைல எருமை வந்து மூத்திரம் பெய்ய!) சாதி, மதம், பாலினம், வர்க்கம், திறன் என்று பல வகையான அந்த பெருமை எருமைகள் நம்மூர்களில் திரிகின்றன. எருமைகள் பாவம், அவற்றை எள்ளல் செய்யவில்லை.
அந்த பெருமைகளை ஏவி விடுபவர்கள் யார், எதற்காக என்று உணர்வதில் தான் நம்முடைய விடுதலை அடங்கியுள்ளது! அதாவது பொது எதிரி யார் என்று கண்டடைவது.
க்ரிக்கெட் விளையாட்டின் மூலம் அந்த படிநிலைகளை – ஊருக்குள் – ஊர், காலனி என்றும் (சாதி), பின்னர் நகரத்துக்கு செல்கையில் அங்கே கிராமம், நகரம், மேலடுக்கில் உள்ள சாதியாதிக்கம், பணக்கார வர்க்கத் திமிர், அரசியல் லாபி என்று அதன் விரியும் தன்மைகளையும் நாற்காலி நுனியில் உட்கார வைக்கும் தன்மையுடன் வழங்கி இருப்பது இந்த படத்தின் சிறப்பு. அந்த தமிழ் தேசிய டச்.. டாப்பு! அதுதான் உண்மையான வர்க்கப் புரிதல்..
நிறைய உள்ளது பாராட்ட.. சலிப்பு ஏற்படுத்தாத வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு நீண்ட பதிவை எழுதி சலிப்பூட்ட விரும்பவில்லை!
நிறைய “குறியீடுகள்” படத்தில்! ரயில்வே ஸ்டேஷனில் கீர்த்தி பாண்டியன் பின்னால் CAPITAL உட்பட!
ருஷ்ய புரட்சி தோத்துச்சு, சீனாவுல என்ன நடக்குது, கியூபாலாம் ஒரு சோஷலிச நாடா, அங்க மட்டும் புரட்சி வாழுதா என்றெல்லாம் கேட்பவர்களுக்கும் இந்த படத்தையே பார்க்க சொல்லலாம்! நல்லா வரும் போதும், ஒற்றுமை ஏற்படும்போதும் அதை விரும்பாத கும்பல்கள் என்னல்லாம் செய்யும் என்று காட்டியிருக்கிறார்கள். ஒரு புரட்சி நடைபெறவும், நிலைத்திருக்கவும் தேவைப்படுவதும் அதுதான் ‘ஒற்றுமை”. ஆனால் அந்த ஒற்றுமையை வெறும் அக உணர்வில் மட்டும் ஏற்படுத்திவிட இயலாது, பொருளாயத நிலைமைகளும் மாறினால் தான் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த இயலும். இந்த (பொருளாயத மாற்ற) வர்க்க அரசியல் பார்வை அதில் முன்வைக்கப்படவில்லை எனினும், “யப்போய் உங்கள ஒண்ணு சேர விட மாட்றாங்கப்போய்.. உஷாரா இருங்க” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வண்ணம் சொல்வது வரவேற்கத்தக்கது.
சிறந்த எழுத்து, இயக்கம், நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை. படத்தொகுப்பு எனை வெகுவாக கவர்ந்தது.
புத்தரா கார்ல் மார்க்ஸா என்று ஆய்வு செய்து சிவப்பின் மீது (சற்று) வெறுப்பை ஏற்படுத்திய நீல நட்சத்திரம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவருமெனில் மகிழ்ச்சியே!
“காலு மேல காலு போடு உழைக்குற குலமே
மேல ஏறும் காலமாச்சு ஏறியாகனுமே
ஏறும்போது இழுக்குறதாரு எம்புட தங்கமே
சேரும்போது பிரிக்குறதாரு தெரிஞ்சு நிக்கனுமே”
நட்சத்திரங்கள் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன, அவை வெப்பநிலையின் குறிகாட்டிகள். வெப்பமான நட்சத்திரங்கள் நீலம் அல்லது நீல-வெள்ளை நிறத்தில் தோன்றும், அதே சமயம் குளிர்ந்த நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது! மனிதர்களுக்கு இரண்டுமே தேவைதான்! சமநிலையில்!
- கொற்றவை
28.1.24