May 30, 2020

மலமறிவோம் – மலம் உருவாக்கும் பொருளாதாரமும் அரசியலும்



நூல் அறிமுகம்

மலமறிவோம் – மலம் உருவாக்கும் பொருளாதாரமும் அரசியலும்
– ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ். ரெங்கசாமி 

ஒரு நாளைக்கு ஒண்ணுக்கும், பீயும், குசுவும் வரலன்னா என்னாகும்னு யோசிச்சுப் பாருங்க… ஆனால் கழிவகற்றல் தொடர்பான மேலாண்மைப் பணியை ’அசுத்தம்’ என்று வரையறுத்து குறிப்பிட்ட சாதிகளின் வேலையாக்கி வைத்துள்ள சமூக-அரசியல்-பொருளாதாரப் படிநிலையை – அதாவது மரபார்ந்த அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையை மாற்றியே ஆக வேண்டும்.

தோழர் Kalpana Ambedkar பதிவொன்றில் இது குறித்த விவாதம் நடந்தபோது தோழர் Sureshkumar இந்த ஆவணத்தை பகிர்ந்திருந்தார். மிகவும் முக்கியமான ஆவணம். படித்துப் பாருங்கள்!

“என் கிட்ட காசிருக்கு அதனால டிசைன் டிசைனா கக்கூஸ் கட்டிக்குறேன்… தங்கம்.. வைரமெல்லாம் வச்சு அழகா கட்டிக்குறேன் (கக்கூஸ் அழகா இருந்தாலும் பேலும் போது மூஞ்சி ’அசிங்கமாத்தான’ இருக்கும்!). ’அவாள’ வாசல் பக்கம் விடாம கொல்லைப் புறமா விட்டு கழுவச் சொல்லிப்பேன், தொட மாட்டேன் அதனால நான் பாதுகாப்பா இருக்கேன்னு ஒருத்தர் நினைச்சா கேடுகெட்டத்தனம் ஒருபக்கம் என்றால் எவ்வளவு முட்டாள் தனம் என்பதை இந்த ஆவணம் சுட்டிக் காட்டுகிறது.

ஊரும் நாடும் திறந்தவெளி கக்கூஸாக இருக்கும்போது ”இசட் ப்ளஸ்” பாதுகாப்புடன் கூடிய கக்கூஸா இருந்தாலும் பொதுச் சுகாதாரக் கேட்டினால் வரும் தொற்று நோய்களிலிருந்து நமக்கு நிச்சயம் பாதுகாப்பு கிடையாது. (கரோனா காட்டிட்டாப்ல). (நம் பிரச்சினை அனைவரின் பிரச்சினை, அனைவரின் பிரச்சினையும் நமது பிரச்சினையே என்னும் கம்யூனிஸ்ட்களின் வர்க்கப் பார்வையை இதை வைத்தாவது புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்).
அதேபோல் கழிவகற்றும் பணிக்குத் தள்ளப்பட்ட சாதிகள், அத்தொழிலாளர்களின் நிலை, கட்டணக் கழிப்பறைகள் மற்றும் அதன் அரசியல் / ஊழல் (எவ்வளவு இலாபம் கிடைக்கிறது) பற்றியும் இந்த நூல் பேசுகிறது! ஆனால் இந்த படிநிலைகளை உருவாக்கி காத்து வரும் இந்துமத வர்ண/சாதி அமைப்பை #மட்டும் பொறுப்பாக்க முடியாது என்று #குறைவாக மதிப்பிட்டு இது ஒரு நிர்வாகப் பிரச்சினை என்பதாக #ஆங்காங்கே சில குறிப்புகள் தென்படுகின்றன. இது சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. (அதை வைத்து இந்நூலை எதிர்மறையாக அனுகிடலாகாது. நிர்வாகத்தில் உரியவர்களை பொறுப்பாக்கிடுங்கள் என்னும் வாதம் தான் அது).

இலாப வெறி கொண்ட பொருளாதார அமைப்பும், அரசு / அதிகார வர்க்கம் என்பதற்குரிய வழக்கமான பொறுப்பற்ற பண்பும் மறுக்க முடியாதெனினும், குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே இந்த வேலைப் பிரிவினையில் நீடிக்கின்றன என்பதற்கு இந்தியாவில் பார்ப்பனிய இந்து மத சாதிக் கோட்பாடுகள் மிகவும் முக்கியமான காரணமாகும். மார்க்சிய ஆய்வாளர்கள் இது குறித்து நிறைய எழுதியுள்ளார்கள்.

பெசவாடா வில்சன் அவர்களின் போராட்டங்கள், விளைவுகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது.

தங்கள் நிலை பற்றி தலித் அமைப்புகளுக்கு கவலை இல்லை என்ற அருந்ததியர் பிரிவு மக்களின் வருத்தங்களையும் பதிவு செய்கிறார் ஆசிரியர் எஸ் ரெங்கசாமி. இறுதியில் ஒரு சிலரின் ஆதிக்கத்திற்கும், ஆதாயத்திற்கும் மட்டும் வழிவகுக்காமல் அனைவரும் பயன்பெரும் வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றமும் வேண்டும் என்கிறார். குறிப்பாக கூலி இடைவெளி / பாகுபாடு பற்றிய கேள்விகள், துப்புறவுப் பணியாளர்கள் இழிவாக நடத்தப்படுவது பற்றிய பதிவுகள் முக்கியமானவை.

சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது என்று ECO-SAN கழிப்பறை கோப்பையை அறிமுகம் செய்கிறார். பொது இடங்களில் கட்டணக் கழிப்பறை தொழிலுக்கு எதிரான இலவச கழிப்பறையின் தேவை, அதைப் பராமரிக்க தொண்டு நிறுவங்களின் தேவையைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இங்கு நமக்கு சாதி ஒழிப்புப் பாதையில் கூட்டுச் சமூக நடவடிக்கையும் சமத்துவமான வேலைப் பகிர்வு முறையும் தேவை என்றே நான் கருதுகிறேன். அனைத்து சாதிகளும் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். குறிப்பிட்டோரின் வேலை என்றில்லாமல் சுழற்சி முறையில் ஒவ்வொரு குடிமகனும் (கட்டாய இராணுவச் சேவை போல்) தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். (ஆட்சியாளர்கள் உட்பட!) சாதி ஒழிப்பில் இது ஓரடி முன்னே என்று பரிந்துரைக்க விரும்புகிறேன்.

அதிகார வர்க்கத்தை தோலுறித்துக் காட்டும் மிகவும் முக்கியமானதொரு ஆவணம். 30 பக்கங்கள் தான் படித்துவிடுங்கள்!

ஆசிரியரின் பதில்:
படிக்கிறார்களோ இல்லையோ, நம் மனதில் பட்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுதி, நானே ஒருவகையில் மறந்து விட்ட ஆவணத்தை (அது நூல் என்ற அளவில் திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல) நீங்கள் மேற்கோள்காட்டி எழுதியிருந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
"இந்த படிநிலைகளை உருவாக்கி காத்து வரும் இந்துமத வர்ண/சாதி அமைப்பை #மட்டும் பொறுப்பாக்க முடியாது என்று #குறைவாக மதிப்பிட்டு இது ஒரு நிர்வாகப் பிரச்சினை என்பதாக #ஆங்காங்கே சில குறிப்புகள் தென்படுகின்றன. இது சற்று நெருடலை ஏற்படுத்துகிறது" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். அந்த நெருடல் எனக்கும் அப்போது இருந்தது. ஆனால் அதையும் கடந்து நான் நிர்வாகத்தை பொறுப்பாக்கியது எனக்குக் கிடைத்த அனுபவத்தால்தான்.

.ஒரு எளிய துப்புரவுத் தொழிலாளிக்கு, வர்ண அமைப்பை விட, அது போட்டிருக்கும் சிக்கலான மன முடுச்சுகளை விட, அந்தப் பணியாளரின் மேற்பார்வையாளர் சற்று நேர்மையாக, மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டால் போதுமென்ற எதிர்பார்ப்புதான், நிர்வாக அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத் தூண்டியது. வர்ண அமைப்பு சார்ந்த கருத்தாக்கங்கள், நிர்வாகம் சார்ந்த திறனின்மையை, அதிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள உதவுவதாக எனக்கு ஒரு புரிதல் ஏற்பட்டது. வர்ண அமைப்பு பற்றி நாம் அழுத்தம் கொடுக்கும் போதே, துப்பரவுப் பணியில் மலிந்துகிடக்கும் நிர்வாக அலட்சியம், முறைகேடுகள், திறனின்மை பற்றியும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கருதினேன். அதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக "அதை வைத்து இந்நூலை எதிர்மறையாக அனுகிடலாகாது. நிர்வாகத்தில் உரியவர்களை பொறுப்பாக்கிடுங்கள் என்னும் வாதம் தான் அது" என்று குறித்திருந்தது அப்படியொன்றும் பெரிய சிந்தனைத் தவறை நான் செய்துவிடவில்லை என்ற ஆறுதலைத் தந்தது.

என்னுடைய ஆவணத்தை பொதுவெளியில் பகிர்ந்தே பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்குப் பிறகு, அதைப்பற்றி தொடர்ந்து எழுதாவிட்டாலும், முன்னை விட துப்புரவுப் பணிகளுக்கு அதிக நிதி ஓதிக்கீடு செய்யப்பட்டு வருவதையும். கழிவகற்றல் தொட்ர்பான பல புது கலைச்சொல் பிதற்றொலிகள் (jargons) புழக்கத்திற்கு வந்திருந்தாலும், கழிவகற்றும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் சார்ந்த தொழில்நுட்பத்தைகூர்ந்து கவனிப்பவர்களுக்கு, அந்தப் பணியில் ஊழலும், திறனின்மையும், அதிகரித்தே வந்துள்ளதாக எளிதில் புரிந்துகொள்ளமுடியும். All our attempts failed to touch the core issue. அந்த core issue வில் வர்ண அமைப்பும் மட்டுமல்ல, இன்னும் பல காரணிகளும் உள்ளடங்கியிருக்கிறான.

இந்த பிரச்சனைகளில் அக்கறை கொண்டவன் என்றாலும், தங்களைப்போலவும், மற்றவர்களைப் போலவும் தொடர்ந்து செயல்படுபவன் என்று என்னைக் பற்றி கூறிக்கொள்ள முடியாது. தொடர்ந்த செயல்பாடுகள் சிந்தனைத் தெளிவைத் தரும் அல்லவா?. அதுமாதிரியான தெளிவை என்னைப் போன்றவர்களால் தர முடியாது என்பது நானே உணர்ந்துள்ள உண்மை. .
ஆவணத்தை மேற்கோள் காட்டியதற்காக மகிழ்ச்சியும் நன்றியும்

*******
முகநூலில் இந்த பதிவை எழுதியதும் நண்பர்கள் ஆசிரியரை டேக் செய்தார்கள். அப்போது தான் அவர் பேராசிரியர் (ஓய்வு) என்பதும் Community Development பணியில் பெரும் பங்காற்றியுள்ளார் என்பதும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூப்பணிக்கான தமிழ் அகராதியை முதன் முதலாக விலையில்லாமல் தொகுத்தும் எழுதியும் இணையத்தில் வெளியிட்டவர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த அகராதியை தரவிறக்கம் செய்யும் APP ஐயும் அவரது முன்னாள் மாணவர் ஒருவர் பகிர்ந்தார். பேராசிரியர் ரெங்கசாமி குறித்து சிலாகித்துப் பேசினார். அந்த APP ஐ நான் தரவிறக்கம் செய்தேன். வியந்து போனேன். சிறப்பான பணி. நன்றி சார்.

தொடர்புடைய சுட்டி: https://www.facebook.com/Kotravai.N/posts/10156177554370575?hc_location=ufi


May 19, 2020

சமூக மாற்றத்திற்கு அவசியம் வாசிப்பு

என் (எங்கள்) பதிவுகள், நூல்கள் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒரே பதில் தான்: மனிதர்களின் உயிரியல் பரிணாமம் போன்று மனிதரக்ள் சமூகமாக வாழத் தொடங்கி தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட ஏற்பாடுகள், அமைப்புகள், சிந்தனைகள், நிறுவனங்களைப் பற்றிய பரிணாம வளர்ச்சியை – அதாவது சமூகவியல் வரலாற்று வளர்ச்சியைப் பற்றி ஆய்வு மேற்கொள்வது (நூல்களைப் படிப்பது) ஒன்றே உங்களுக்கான விடைகளை வழங்க வல்லது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் தோன்றியது எப்படி என்பது தொடங்கி மனிதர்களின் நிலை மற்றும் சமூக வாழ்வும் பிரச்சினைகளும் குறித்து எண்ணற்ற அறிஞர்கள் ஆய்வு செய்தும், விளக்கியும் உள்ளனர். அதன் துணை கொண்டு சமூகத்தில் நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் அதனால் பெரும் பயனும் கண்டுள்ளது.

சமூகத்தின் பிரச்சினைகளைத் தனித் தனியாகக் கண்டு தற்காலிக தீர்வுகளை, சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு அப்பால் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கும் அடித்தளம் எது என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து சிறப்பானதொரு தீர்வையும் முன்வைத்தவர்கள் கார்ல் மார்க்ஸ் – எங்கல்ஸ்.

மனிதர்கள் பேராசைப் பிடித்தவர்கள், சுயநலம் மிக்கவர்கள், அதிகார ஆசைப் பிடித்தவர்கள், குறிப்பிட்ட மதம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் அல்லது கெட்டவர்களே காரணம் என்று எல்லாம் எண்ணம் சார்ந்தே வியாக்கியானப்படுத்தப்பட்ட கருத்துமுதல்வாத ஆய்வுமுறை / சிந்தனைகளுக்கு அப்பால் அத்தகைய பேராசைகளும், ஆதிக்க மனநிலையும் எப்படி உருவாகிறது என்று விளக்குவது மார்க்சியம். மனிதர்கள் தங்கள் வாழ்வாதார நிலைமைகளுக்காக கண்டுபிடிக்கும் / உருவாக்கிக் கொள்ளும் / ஒழுங்கமைக்கும் பொருளாயத (பொருளாதாரம் அல்ல) நடவடிக்கைகளோடு அது தொடர்புடையது என்ற தெளிவு பெறுகையில் தனிநபர்களை, ஆதிக்க நிறுவனங்களை கண்டிக்கும், எதிர்க்கும் அதேவேளை அதை தகர்த்தெறிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் விளங்கும்.

பல்வேறு முற்போக்கு தத்துவங்களோடு மார்க்சியத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என்பதையே என் பதிலாக வழங்க முடிகிறது. சில பிரபல Terminologiesக்கு அப்பால் மார்க்சியம் கற்றுக்கொள்வதோடு அதனை ஒவ்வொரு நிலையிலும் பொருத்திப்பார்த்து விவாதிப்பதும், தீர்வை நோக்கி பயணிப்பதும் அப்போது கைவரப்பெறும்.

மார்க்சிய நோக்கில் உள்ள சமூகவியல் ஆய்வுகளைப் படித்து விளக்குபவர்களின் பதில்கள் உங்களுக்கு உவப்பானதாக இல்லையெனில் படித்து தெளிவு பெருங்கள் / மாற்றை / தீர்வை நீங்கள் முன் வையுங்கள் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. அது உங்களுக்கு வருத்ததையும், கோபத்தையும் உண்டாக்குமெனில் அந்தப் பிரச்சினைக்கு என்னிடம் மருந்தில்லை!


May 18, 2020

பெண்களை இழிவுபடுத்தும் இந்திய ஆண் மனம்


பெண்கள் இழிவானவர்கள், மயக்குபவர்கள், காம வெறி பிடித்தவர்கள்... பொன்னும் பொருளும் வாங்கிப் போட்டு வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி அவளை அடக்கி வை! பெண் மகவு வேண்டாம் ஆண் மகவே பிறக்க வேண்டும் என்னும் வகையிலான மநு சாஸ்திரம், அதர்வண வேதம் உள்ளிட்ட பார்ப்பன இந்துமத ஆணாதிக்க வேத ‘தர்மங்களை’ப் படித்து வளர்ப்வர்கள் ஒருபோதும் பெண்களை சமமாக கருத மாட்டார்கள். எஸ்.வி. சேகர். கரு. நாகராஜன் உள்ளிட்ட சங்கிகளின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு அவர்கள் தங்கள் மூதாதையர்களிடமிருந்து குடித்த ‘ஞானப் பால்’ காரணம்.. எத்தனை முறை கண்டித்தாலும் பார்ப்பனிய மண்டையில் எதுவும் ஏறாது. ஏனென்றால் இதை அவர்கள் திட்டமிட்டே செய்கிறார்கள்!

அவர்களின் மண்டைக்குள் இருப்பது வெறும் களிமண் என்றும் அந்த களிமண் எத்தகையது, அது பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை திறந்துக் காட்டி மானமும், அறிவும், சுயமரியாதையையும் போதித்து மக்களை உணர்வு பெறச் செய்வோம். அப்போது அந்த களிமண் மண்டைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்கள்.
ஜோதி மணி இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல, மனச்சோர்படைபவருமல்ல. அவர் ஒரு துணிச்சல் மிக்கப் பெண்மணி. அதனால் தான் தன் சுயமரியாதையை நிலைநாட்டி வெளிநடப்பு செய்துள்ளார் (செய்திகளின் வழி அறிகிறேன்). ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அரசியலில் களம் ஆடுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அறிவென்னும் ஆயுதம் ஏந்தப் பழகிய பெண்களை எப்படிப்பட்ட ஏச்சும் பேச்சும், ஒடுக்குமுறையும் வீழ்த்திட இயலாது… அதுவே அவர்களைப் பலப்படுத்தும்.

உலகில் உள்ள அனைத்து மதங்களும் பெண்களை தாழ்ந்தவர்களாக, இழிவானவர்களாகவே சித்திரிக்கிறது. ஆனால் பார்ப்பனிய இந்துமத வேதங்களும், தொன்மங்களும் இவற்றையெல்லாம் மிஞ்சும் விதத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரையும் கீழானவர்களாக சித்தரிப்பதோடு,மரபார்ந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் சில பிரிவினரை தங்களுக்கு சேவை செய்யும் உடனடி அடுக்கில் வைத்து (பொருளாதார காரணங்களுக்காகவும், ஆளும் அதிகாரத்திற்கு ஆதரவு இருக்க வேண்டும் என்பதற்காகவும்) பெண்களை, (பார்ப்பன சாதிப் பெண்களையும் சேர்த்தே)

உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களை, சமூகத்திற்கு அவசியமான தூய்மைப் பணி செய்பவர்களை மிகவும் கீழான நிலையில் வைத்து அவர்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று தாழ்த்தி மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நியாயப்படுத்தி அதையே இந்திய தர்மமாக வைத்திருக்கிறது.
மானமும் அறிவும் உள்ள எந்தப் பெண்ணுக்கும் இந்த தீண்டாமையை, மேலாதிக்கத்தை போதித்தக் கூட்டமே முதல் எதிரி!

பார்ப்பனிய இந்துமத ஆணாதிக்க தர்மங்கள் மற்றும் இலக்கியங்கள் வழியாகவே இந்திய பொதுபுத்தியும் உருவாகிறது. இதுதான் இந்தியக் கல்வி முறையும் கூட. பார்ப்பனியமானது தன்னையும் இழிவானவனாகவும், வேசியின் பிள்ளைகள் என்றும் கூறுவதை அறியாத பெண்களும், பார்ப்பனரல்லாதார் பிரிவும் அதுதான் நியதி, பார்ப்பான் சென்னால் அதுவே உசந்தது, உண்மையானது என்று ஏற்றுக்கொண்டு பழகிவிட்டதோடு, அவர்களோடு ஆளும் வர்க்கமாக கைக் கோர்த்துக்கொண்டு இந்து தர்ம ஆட்சியை நிலைநாட்டி சேவை செய்தும் வருகிறது.

அந்தந்த காலத்தின் உற்பத்தி முறைக்கு இந்த மேலாதிக்கக் கருத்துகள் சாதகமாக இருப்பதால், அந்தந்த காலத்து ஆதிக்க உடைமையாளர்கள் உற்பத்தி உறவுகளை அதற்கேற்ற வகையில் தகவமைத்து ஆணாதிக்கத்தையும், சாதியையும், வர்க்கத்தையும் ஒன்றின் மேல் ஒன்று மேல்குவியும்படி பார்த்துக்கொண்டு நிலம், வளம், உழைப்புச் சக்தி உள்ளிட்டவற்றை சுரண்டி பிழைத்து வருகின்றனர். அதில் எந்த தடையுமின்றி இயங்கிட ஒருபுறம் மதரீதியான பிரச்சாரங்கள் செய்து மக்கள் தாமாக அடிமையாகிப் போகும்படி செய்தும், மறுபுறம் அரசு இயந்திரங்கள், சடங்குரீதியான கருத்தியல்கள், படிநிலைகள் மூலம் ஒடுக்கவும் செய்கின்றனர். சாதியாகவும், வர்க்கமாகவும், ஆனாதிக்கமாகவும் இந்த ஒடுக்குமுறையும், சுரண்டலும் நிகழ்கிறது.

பெண் சிசுக் கொலை தொடங்கி, தண்ணீர் பிடிக்கச் சென்ற பெண் வல்லுறவு, பொதுவெளியில் மலம் கழிக்கச் சென்ற தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டது, பேருந்தில் ஒரு பெண் கூட்டுவல்லுறவால் சிதைக்கப்படுவது, வீட்டில் ஒரு பெண் கணவனின் வன்முறைக்கு உள்ளாவது உள்ளிட்ட பெண்களின் மோசமான நிலைக்கு மதங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை சமூகம் உணரச் செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள் மத நம்பிக்கையிலிருந்தும், கடவுள் நம்பிக்கையிலிருந்தும் விடுபடுவதற்கான சூழல் உருவாக வேண்டும். (சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும்).

ஒரு சிலரிடம் கைக்கட்டி வாய் பொத்தி உழைத்தால் தான் பிழைக்க முடியும் என்கிற நிலையில் நாம் ஏன் வைக்கப்பட்டிருக்கிறோம். நம் மீது அதிகாரம் செலுத்தும் இவர்கள் எல்லாம் யார்? அவர்களுக்கு அந்த அதிகாரம் எப்படி உண்டானது? அவர்களிடம் இருக்கும் அதிகார பலத்தின் அடித்தளம் எது என்பதை பொதுச் சமூகம் அறியத் தருவோம்…

அனைத்துவிதமான மேலாதிக்க சுரண்டல் நிறுவனங்களையும் தகர்த்திட சமர் புரிவோம்!

I strongly condemn not only Karu. Nagarajan, but also the Male Chauvinistic, Casteist Brahminical Literature & Ideology of the Indian Society and the political parties, religious organizations like BJP, RSS, other casteist parties and the exploitative mode of production, labour / social / class relations that are functioning in this ideology and continuously engaging in violence against women, Dalits, progressive leaders, activists & working class. Every time a person is humiliated / oppressed / exploited this resistance shall continue!



May 8, 2020

கருத்துச் சுதந்திரமும் எதிர்வினையும் எப்படி இருக்க வேண்டும்


விமர்சனத்திற்கு Vasu Mithra எந்த மொழியை கையண்டாரோ மறுப்பதற்கும் அதே மொழியை கையாள்வது தான் சரியானது. ஜனநாயகப்பூர்வமானது.
அவ்வாறில்லாமல் சாதி இந்து என்பதும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவதும், தனிப்பட்ட முறையில் மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
விமர்சனம் எவ்வளவு மோசமாகவும் இருக்கட்டும், அதற்காக ஒரு தோழர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிய முடியுமா? ஆதிக்க சாதிக்காரன், சாதி இந்து என்று பேச முடியுமா? அம்பேத்கரை இழிவுபடுத்துவிட்டார் என்கிற காரணத்தை முன்னிறுத்தி இத்தகைய மோசமானதொரு நடவடிக்கையை எப்படி சில தோழர்களால் ஆதரிக்க முடிகிறது? அல்லது கண்டிக்காமல் மவுனம் காக்க முடிகிறது?
அம்பேத்கரை விமர்சனமாக அணுகுவதில் பொதுவில் பிரச்சினையும், குறைபாடும் இருக்கிறது. உள்ளடக்க ரீதியில் விமர்சனம் எவ்வளவு சரியாக இருந்தாலும் வடிவம் என்கிற வகையில் அம்பேத்கரை இணக்கமாவும், நட்பு சக்தியாகவும் கையாள்வதில் பிரச்சினை இருக்கிறது.
தான் ஏற்றுக்கொண்டவற்றுக்கு அம்பேத்கர் இறுதி வரை நேர்மையாக இருந்தார். தனது தீர்வுகள் ஒவ்வொன்றும் தோல்வியடையும் போது அடுத்த தீர்வுக்கு சென்றார். அவற்றை தோல்வி என்றும் ஏற்றுக்கொண்டார். வரலாறு அவருக்கு அளித்த இடம் என்ன, அந்த இடத்தின் வரம்பு என்ன, அந்த வரம்பிற்குள் நின்று என்ன செய்ய முடியும், அதை நேர்மையாக செய்திருக்கிறாரா என்று பரிசீலிப்பது தான் சரியானது.
அதே நேரத்தில் விமர்சனம் என்று வந்தாலே சாதிவெறியன், சாதி இந்து என்று முத்திரை குத்துவதும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவதும் கடுமையான கண்டனத்திற்குரியது.
இத்தகைய பிரச்சினைகளில் ஆதிக்க சாதி முத்திரையுடன் பாய்ந்து வரும் இவர்கள் எல்லோரும் யார்? இவர்களுக்கும் தலித் மக்களுக்கும் என்ன உறவு?
இவர்கள் தங்களை தலித் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக கருதிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களுக்கும் தலித் மக்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதே போல் தான் அம்பேத்கருடனான இவர்களின் உறவும்.
அம்பேத்கரின் நோக்கம் வேறு இவர்களின் நோக்கம் வேறு. தன் வாழ்வை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அம்பேத்கருடைய வாழ்வின் பத்து நிமிடங்கள் கூட இவர்களின் மொத்த வாழ்விற்கும் சமமாகாது.
ஒடுக்கப்பட்ட கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வன்கொடுமைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களின் வாழ்நிலைக்கும் இவர்களின் வாழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வர்க்க அடுக்கின் பல்வேறு நிலைகளில் ஒரு உயர்தர வாழ்வை அனுபவிக்கும் இவர்கள் வேறு, அதே வர்க்க அடுக்கின் அடித்தட்டில் மிக மோசமான வாழ்வை கொடுமையாக கழிக்கும் ஆகப்பெரும்பாண்மை தலித் மக்கள் வேறு. அவர்கள் உழைக்கும் மக்கள் இவர்கள் மேட்டுக்குடிகள்.
அம்பேத்கரின் பெயராலும், சாதியின் பெயராலும் இவர்கள் செய்யும் தவறுகளின் விளைவுகள் அனைத்தும் தலித் மக்களின் தலையில் தான் விழுகிறது. அதன் விளைவுகளை அவர்கள் தான் எதிர்கொள்கிறார்கள்.
படித்து முன்னேறி சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு சென்ற பிறகு தனது மக்களின் விடுதலைக்கு உதவுவார்கள் என்று யாரை நம்பி தான் ஏமாந்ததாக அம்பேத்கர் கூறினாரே அவர்கள் தான் இவர்கள்.
இப்போது இவர்கள் செய்திருக்கும் திருப்பணியும் அத்தகையது தான்.
சட்ட வழியில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தான் தலித் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம். அதையும் எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் துடிக்கிறார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்ற இவர்கள் உதவுகிறார்கள்.
ஒருவேளை இந்த வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் விளைவுகள் எப்படியிருக்கும்? யாருக்கு எதிராக இருக்கும். நிச்சயம் வசுவுக்கு எதிராக இருக்காது. தலித் மக்களுக்கு எதிராகவும், சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும், சமூகத்தில் அம்பேத்கர் பற்றிய எதிர்மறை கருத்துக்களை உருவாக்கவும் தான் பயன்படும்.
எனவே அம்பேத்கரை விமர்சிக்கும் தோழர்கள், அவரை நட்பு முரணாக அணுகி நேர்மறை விமர்சனங்களை வையுங்கள்.
அம்பேத்கர் பற்றி பேசினால் சாதி இந்து, சாதி வெறியன் என்கிற முத்திரைகளுடன் பாய்ந்து வரும், எவ்வகையிலும் தலித் மக்களோடு தொடர்பில்லாத, அம்பேத்கரின் நோக்கங்களுக்கு நேர் எதிராக நிற்கும் தலித் மேட்டுக்குடிகளை பொருட்படுத்தாமல் புறக்கணியுங்கள்.
குறிப்பாக இப்பிரச்சினையில் தோழர்கள் என்றும், அறிவுஜீவிகள் என்றும் கூறிக்கொள்பவர்கள், தனது விமர்சனத்தை எழுத்தின் மூலம் (அந்த வடிவத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை) வைத்த வசுமித்ரவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதை கண்டிக்க முன்வர வேண்டும்.
வழக்கு தொடுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்க எதிர்வினை அல்ல. எனினும் சில தோழர்கள் அதை ஆதரிக்கிறார்கள். அத்தகைய தோழர்கள், வசு கையாண்ட அதே மொழியை அவருக்கு பதிலாகத் தரட்டும், ஆனால் எந்த வகையிலும் இத்தகைய எதிர்வினைகளை ஆதரிக்கக்கூடாது, அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனவே வசுவின் அணுகுமுறை தவறு என்றால் அதை விமர்சியுங்கள், அத்துடன் இவ்வாறு கருத்து சுதந்திரத்திற்கு சவால்விட்டு அச்சுறுத்தி மிரட்டிப்பார்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத்தையும் பதிவு செய்யுங்கள்.
- பாண்டியன்.


May 7, 2020

சட்டவாதம் என்னும் அறியாமை


மார்க்சியம் பயின்றவர்களுக்கு ஆளும் வர்க்க இயந்திரங்கள், அடக்குமுறை கருவிகள் குறித்த புரிதல் இருப்பதால் தான் அவர்கள் அதை அகற்றி பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்கின்றனர். முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் குடியரசு எல்லாம் போலி என்று வரலாற்று ஆதாரங்களோடு வாதிடுகின்றனர்.
சட்டவாதம் பேசுவோர், அதை பாதுகாப்பு, புனிதம் என்று கருதுவோர்... குறிப்பாக எங்கள் தலைவர் இல்லையெனில் உங்களுக்கு இது கூட கிடைத்திருக்குமா என்று உணர்ச்சிபொங்க வஞ்சப்புகழ்ச்சியில் ஊசியேற்றுவோர் மார்க்சியத்தின் இத்தகைய பகுப்பாய்வைப் படிப்பதில்லை என்னும் காரணத்தால் தான் உணர்ச்சிப் பொங்கல் மட்டுமே வைக்க முடிகிறது! (படித்தாலும் அதிகார வேட்கை அதை ஏற்றுக்கொள்ள விடுவதில்லை)
“கம்யூனுடைய அனுபவம் சொற்பமாகவே இருந்ததென்றாலும், மார்க்ஸ் இந்த அனுபவத்தை பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் உன்னிப்பாய் பகுத்தாய்ந்தார். இந்நூலின் மிக முக்கிய வாசகங்களை மேற்கோளாய்த் தருகிறோம்:
நிரந்தர சேனை, போலீஸ், அதிகார வர்க்கம், சமயகுருமார் அமைப்பு, நீதிமன்றம் ஆகிய சர்வ வியாபகச் செயலுறுப்புகளைக் கொண்ட மத்தியத்துவ அரசு அதிகாரம்’ மத்திய காலத்தில் உதித்து, பத்தொனொன்பதாம் நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்தது.
மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையே வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியுற்றதைத் தொடர்ந்து, ’மேலும் மேலும் அரசு அதிகாரமானது உழைப்பை அடக்குவதற்கான பொது சக்தியின் தன்மையை வர்க்க ஆதிக்கத்திற்குரிய பொறியமைவின் தன்மையைப் பெற்றது. வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒவ்வொரு புரட்சியையும் அடுத்து, அரசு அதிகாரத்தின் அப்பட்டமான பலவந்தத் தன்மை மேலும் மேலும் கண்கூடாகப் புலப்ப்டுகிறது.’ 1848-49 ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பிற்பாடு அரசு அதிகாரம் ‘……. உழைப்புக்கு எதிரான மூலதனத்தின் தேசியப் போர்க் கருவி’ ஆகிவிட்டது. ....
“இந்த இயந்திரத்திற்குப் பதிலாய் ‘ஆளும் வர்க்கமாய்ப் பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைய வேண்டும்’ ’ஜனநாயகத்திற்கான போரில் வெற்றி பெற வேண்டும்’ என்பதே கம்யூனிஸ்ட் அறிக்கையில் தரப்படும் பதில். – லெனின், அரசும் புரட்சியும்.
இப்படிப்பட்ட சமூக விஞ்ஞானத்தைப் படிக்காமல் “Terms" மட்டுமே வைத்துக்கொண்டு தம்மையும் இடதுசாரி என்று முன்வைப்பது உணர்வுபூர்வமானதே ஒழிய தேவைப்படும் தர்க்கத்தையோ, புரிதலையோ அல்லது application knowledge ஐயோ அது வழங்கிட இயலாது. அதனால் தான் படி! படி! படி என வலியுறுத்த வேண்டியுள்ளது.
“கற்பி ஒன்று சேர் புரட்சி செய்” என்று அம்பேத்கரும் சொல்லும் போது எதையும் படிக்காமல் (ஆழமாக) சரியானதை கற்பிக்கவோ, சமூக-அரசியல்-பொருளாதார விடுதலைக்கான பாதையையோ காட்ட இயலாது என்பதும் அதில் பொதிந்துள்ளது.

May 2, 2020

வசுமித்ரவின் அடுத்த நூல் அம்பேத்கரியப் பார்ப்பனியம்



எதிர்வினைகள் பற்றிய வரலாற்று பின்னணி தெரியாதவர்களுக்கான குட்டிக் கதை:
சமூகம்/சமூக பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளும் கோட்பாட்டுருவாக்கமும் மனித அறிவு/சமூக/அரசியல்-பொருளாதார வரலாற்று வளர்ச்சியின் ஓர் அங்கம். இதனை தத்துவம் என்று எளிமையாக புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு தத்துவம் உருவாவதும், அதுபற்றிய திறனாய்வுகள்/விமர்சனங்கள் நடப்பதும் ஓர் அறிவுசார் செயல்பாடு. இது வெறும் மேதமையை பறைசாற்றுவதற்காக அல்ல, நாம் தீர்க்க நினைக்கும் பிரச்சினைகளுக்கு உரிய பதில்களை/தீர்வுகளை கண்டடைவதற்கான ஒரு தொடர்ச்சியான பயணம்.
அந்த வகையில் மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள்/செயல்திட்டங்கள் பற்றிய விமர்சனம் அதற்கு எதிர்வினைகள் என்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு.
புத்தரா கார்ல் மார்க்ஸா என்று அம்பேத்கர் தொடங்கிய விவாதம் மற்றும் அம்பேத்கரின் பெயரைச் சொல்லிக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அடையாள அரசியலுக்கு (அதுவும் ஒருவகையான பின்நோக்கிய சாதியவாதம்) எதிராக இந்திய அளவில் விவாதங்கள் நடக்கிறது. (உலக அளவில் அடையாள அரசியலுக்கெதிரான போர் நடந்து கொண்டிருக்கிறது) இதில், ரங்கநாயகம்மா அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றி குறிப்பிடத்தக்க திறனாய்வை முன் வைத்தவர்.
மார்க்சியம் கற்று சில வேலைகளில் ஈடுபட்டபோது நான் எதிர்கொண்ட சம்பவங்கள் சாதிய அடையாள (இடது) அரசியலின் ஆபத்தை உணரச் செய்தது. அவ்வேளை ஒரு தோழர் மூலம் ரங்கநாயகம்மாவின் நூல் என் கைக்கு வந்தது. படித்தபோது அது மொழிபெயர்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். அதை தமிழில் மொழிபெயர்த்தேன் ஜூன் 2016 இல் முதல் பதிப்பு வெளிவந்து அதன் பிறகு இரண்டு பதிப்புகளைக் கண்டது.
முதிர்ச்சியான சமூகங்களில் தத்துவார்த்தப் போர்/உரையாடல் (Discourse) என்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் (இணைய சகாபதத்தில்) அது மலிந்து கொண்டே வருகிறது! வாய்ப்பே இல்லை!
சிலரின் சாதிய பிழைப்புவாதம் அந்த நூலை விமர்சன நூலாக காணும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்கவில்லை. எனவே அவதூறுகளை அள்ளி வீசினார்கள். கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதவர்கள் இன்றளவும் கூட்டங்கள் நடத்திக்கொண்டு எங்களின் சாதியை மட்டுமே முன்வைத்து வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வசைகளை தொகுத்து எதிர்வினை என்னும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டு வசைபாடி புளங்காகிதம் அடைந்தனர். என் மதிப்பிற்குரிய நண்பரும், இயக்குனரும் அவர்களின் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியிருந்தார்! (சமீபத்தில் தான்!).
சில ‘இலக்கியவியாதிகள்’ வரட்டுவாதம், மொண்ணை மார்க்சியம் என்று மீண்டும் ஏதோ ஒரு சொல்லாடல் மூலம் கடக்கின்றனரே ஒழிய சாதி என்றால் என்ன? சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம் உள்ள தீர்வு என்ன என்பதற்கு பதில் அளிக்கவியலாதவர்கள். (தெரிந்தால் சொல்லிவிட மாட்டார்களா!).
வேடிக்கை என்னவெனில், தொடர்ச்சியான உரையாடல் என்னும் அடிப்படையில் நாங்கள் (நானும் வசுவும்) அதற்கடுத்து இரண்டு நூல்களைக் கொண்டுவந்தோம். சாதியப் பிரச்சினயும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூல் சாதியப் பிரச்சினை பற்றிய முக்கியமானதொரு ஆய்வை முழுமையாக முன் வைக்கும் நூல் (மொழிபெயர்ப்பு), அதனோடு சில கட்டுரைகளும், என் பதிலுரைகளும் உள்ளது. அதுகுறித்து இன்றுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. (ஏனெனில் தலைப்பில் அம்பேத்கர் பெயர் இல்லை)
அம்பேத்கரின் புத்தரும் தம்மமும் நூலை முன் வைத்து வசுமித்ர - அம்பேத்கரும் அவரது தம்மமும் என்னும் நூலை எழுதினார். அம்பேத்கர் முன்வைக்கும் புத்தர் மற்றும் பௌத்தம் பற்றிய திறனாய்வு நூல் அது. மேலும், பகுத்தறிவுக்கு உட்படுத்தாமல் அதனை உயர்த்திப் பிடிக்கும் தலித்தியவாதிகள்/கம்யூனிஸ்டுகள்/பின்நவீனத்துவவாதிகள் சிலரையும் கேள்விக்கு உட்படுத்தும் நூல் அது. நூலின் தலைப்பை வைத்து மீண்டும் அவதூறுகள்! நூலைப் படிக்காதீர்கள் என்று ‘காமெடி’ பிரச்சாரம் செய்தனர்.
இது மட்டுமல்லாது, ‘பெரிய இலக்கியவாதி’ என்று அறியப்படும் ஒருவர் (தமிழ்நாட்டு குடிமகன் அல்ல!) தன்னுடைய மார்க்சிய/கம்யூனிஸ்ட் வெறுப்பை தீர்த்துக்கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரங்கநாயகம்மாவையும் (என்னையும்) பகடிகள் செய்து பஞ்சாயத்து செய்வார். மார்க்சியம் என்றால் என்னவென்று கேட்டுப்பாருங்கள்! விளங்கிவிடும்!
ஒழுங்கு, அமைப்பு இதெற்கெல்லாம் கட்டுப்படவியலாத அனார்கிச அரசியலை/சீர்கேட்டை பின்நவீனத்துவத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்நபர் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு என்னவென்றால் – கட்டவிழ்ப்பு, அனைத்தையும் கட்டவிழ்த்து குலைத்துப் போட்டு, எவ்வித ஒழுங்குமின்றி அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வது! அதாவது கட்டற்ற ’நுகர்வு’ வாழ்க்கை வாழ்வது! இதில் அம்பேத்கர் மீது மட்டும் இவருக்கு ஏன் கரிசனம்? ஏனென்றால் இவருக்கு துணை நிற்கும் பதிப்பகத்தாரின் பிழைப்புவாதம் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ‘கூவுவதற்கு’ ஏதாவது தேவையல்லவா!
பொதுவுடைமை என்பது சர்வாதிகாரம் என்பார்கள்! எது சர்வாதிகாரம் என்பதற்கு போதுமான விளக்கங்கள் உள்ளன! அதையெல்லாம் படிக்கவும் மாட்டார்கள். நானும் மார்க்சிஸ்ட் தான் தல என்பார்கள்! ஆனால் எல்லா நேரமும் கம்யூனிச வெறுப்பையே உமிழ்ந்துகொண்டிருப்பார்கள்!
இதை அனைவரும் காணவோ, அறியவோ மாட்டார்கள்! அத்தகையோரின் வெறுப்பரசியலுக்கு தொடர்ந்து நானும் வசுவும் (எங்களுக்கு துணை நிற்கும் சில தோழர்களும்) எதிர்வினைகளை ஆறிக்கொண்டே இருக்கிறோம். அதன் தொடர்ச்சியான பதிவே இது.
“சங்கிகள் கை மேலோங்கி இருக்கும் இந்த நேரத்தில்… அம்பேத்கருக்கு செருப்பு மாலை அணிவித்து அவர்கள் அராஜகம் செய்யும் நேரத்தில் இது தேவையா?” என்று யாரேனும் வருவீர்கள் என்றால், வரலாற்றுப் பக்கங்களை புரட்டுங்கள். சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி இன்றுவரை உள்நாட்டு நிலவுடைமையாளர்கள் (சாதி எதிர்ப்பும் சேர்த்துதானே!), முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும்போது, பிரிவினைவாதம் செய்தவர்கள், செய்பவர்கள் யார் என்பது விளங்கும்.
அந்த நேரத்தில், இந்த நேரத்தில் ஒரு கூட்டம் மார்க்சியத்தில் எதுவுமில்லை என்று சொல்வதோடு கம்யூனிஸ்டுகளின் பங்களிப்புகளை/தியாகங்களை எல்லாம் போகிற போக்கில் அவதூறு செய்துகொண்டு, (அதேவேளை அவர்களை பயன்படுத்திக்கொண்டும்) தம் பிழைப்புவாத அடையாள அரசியலை பரப்பிக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் போக்கு இருக்கும்வரை இத்தகைய எதிர்வினைகளை தடுக்கவியலாது!
நியாயமாக நீங்கள் அவர்களைப் பார்த்து ”ஏன் இப்படி பிரிவினைவாதத்தில் ஈடுபடுகிறீர்கள்? பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை ஒரு பொது எதிரியை நோக்கி அணிதிரட்ட ஏன் முட்டுக்கட்டை வகிக்கிறீர்கள்” என்று கேள்வி கேட்கலாம்!
****
இனி வசுவின் பதிவிலிருந்து Vasu Mithra 

// அம்பேத்கரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்கு தள்ளியதும். அவர் குறித்து ஆக்கப்பூர்வமான கட்டுரைகளோ புத்தகங்களோ தமிழில் வராததற்குக் காரணம், அம்பேத்கர் கூறியதனைத்தும் சரி என்பதாலோ, அம்பேத்கரின் ஆய்வுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்றோ, தத்துவ ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றா அர்த்தம் அல்ல. மாறாக அம்பேத்கரை திறனாய்வு செய்தால், செய்தவரின் சாதி பார்க்கப்படும். எந்த யோசனையும் இல்லாமல் அவர்மீது சாதிய வன்மத்தைக் கக்க முடியும். இதன் விளைவாக அம்பேத்கர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவராக உருமாற்றமடைந்தார். விமர்சிக்க நினைத்தவர்களும் நமக்கு எதுக்கு வம்பு, நாமும் ஜெய்பீம் சொல்லி வைப்போம் என்று அம்பேத்கரியர்களான சோகக் கதை இதுதான்.
உதாரணத்திற்கு, இந்தியா தனக்கான சட்டத்தை எழுத வக்கற்றுப் போயிருந்த காலத்தில், அம்பேத்கர் தனது அரசியல் அறிவை முன்வைத்தார், சட்டங்களை தனியாக எழுதினார், அவர் இல்லையென்றால் அரசியல் சாசனமே இல்லை என்று அவருக்குப் புழகாராம் சூட்டப்படும், ஆனால், நான் கூலிக்கு எழுதுபவனாக இருந்தேன் என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே என்று கேள்விகளை முன்வைத்தால், உடனே அந்த சட்டத்தை எரிப்பேன் என அம்பேத்கரே சொல்லிவிட்டாரே என்று குரல் வரும். நாம் இப்பொழுது நடுவில் குழம்பி நிற்க வேண்டி வரும். அரசியல் சட்ட நிர்ணயகர்த்தா அனைத்தும் தெரிந்தவர் என்ற பாத்திரத்தை ஏற்பதா, இல்லை சட்டத்தை எரிப்பேன் என்ற பாத்திரத்தை ஏற்பதா.?//

மேலும் வாசிக்க: https://www.facebook.com/makalneya/posts/4061604773857497