Mar 10, 2024

கொஞ்சம் மார்க்சியத் தத்துவம் படிங்க பாஸ்

 

முத்தையா படத்தில் நடித்தால் சாதி வெறி, சாதியக் கூட்டணி!

புதிய புரட்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

படத்துல நடிச்ச அத்தனை பேரோட சாதியையும்

தோண்டி எடுத்தீங்களாப்பு!

திமிரு புடிச்ச அப்பனை எதிர்க்குற அப்பன் படம்

சாதியப் பெருமை பேசுச்சாப்பு!

சரி! முத்தையா சாதியைத் தோண்டிட்டீங்க

இதுக்கு முன்னாடி சசிக்குமார வச்சி நோண்டிட்டு இருந்தீங்க

அவரோ நந்தன்னு ஒரு படத்துல நடிக்கிறாரு

அவரு எடுத்த அசுரவதம் படம் பீடோஃபீல் பத்தினது

அதுல வசு பீடோஃபிலா நடிச்சிருந்தாரு.. அதுவும் சாதி வெறியா

இல்லை அம்பேத்கரை, அயோத்திதாசரை எல்லாம் விமர்சனம் செய்றதால

நிஜத்துலையும் அவரு அப்படின்னு சொல்லுவீங்களா?

 

விருமன் படத்துல நாயகன் கார்த்தி

அப்ப அவரும் முத்தையாவோட சாதி வெறி கூட்டணியாப்பு!

சரி அவரைக் கூட விடுங்க

மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு

அப்ப அவரும் சாதி வெறியனாப்பு!

 

 உங்க வன்மத்துக்கு ஒரு அளவு வேணாமாப்பு

அம்பேத்கரைப் புகழ்ந்தா சாதிய தோண்ட மாட்டீங்க

விமரசனம் பண்ணா  ஆணாதிக்க சிந்தனை எப்படி வளர்க்கப்படுதுன்னு

பேசுற பதிவுல கூட வன்மத்துல வந்து  லந்து பண்ணுவீங்க!

 

 எல்லாம் போக ஒரு கூலி உழைப்பாளியா இருக்குற

ஒருத்தர்க்கு என்ன அதிகாரம் இருக்கும்

உச்சத்தில் இருக்கும் கதாநாயகனா இருக்குற

ஒருத்தருக்கு என்ன அதிகாரம் இருக்கும்

சமூகத்திற்கு தவறான கருத்தை சொல்லும் கதாப்பாத்திரங்களை,

கருத்துகளை சொல்லக் கூடாது என்று மறுக்கும் அதிகாரம்

யாருக்கு இருக்கும்னெல்லாம் ஒரு படிநிலை புரிதல் எல்லாம் வேணும்

அதுக்கு மார்க்சியம் படிச்சிருக்கோணும்

வாய் இருக்குன்னு பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் பேசாம

ஓரமாப் போய் மார்க்சியத்தைப் படிங்க!

 

சவீதா அம்பேத்கரின் சாதியை வைத்து அவர் தான்

அம்பேத்கரை கொன்றார் என்று பேசியவர்களுக்கும்

உங்களைப் போன்றவர்களுக்கும் ஒரு வேறுபாடுமில்ல..

அதையும் வசு ஒரு பதிவாப் போட்டாரே படிக்கலையா!

 

எல்லாத்தையும் படிச்சுப்போட்டு,

அம்பேத்கர் மீது வைத்த விம்ரசனத்துக்கு

கருத்துரீதியா அறிவார்ந்த உரையாடலை முன்வைங்க

சின்னப்புள்ளத்தனமா உருட்டாதீங்க!

 

என்னோட ப்ளாக்ல இந்த அரதப் பழசான எல்லா கேள்விகளுக்கும்

பதில் சொல்லி இருக்கேன். அதையாச்சும் தேடிப் படிங்கப்பு!


#வசுமித்ர எழுதிய புத்தகங்கள் :) panuval.com/vasumithra மொத ரெண்டு புத்தகங்கள் தான் ஒரு குரூப்போட வன்மத்துக்குக் காரணம் 😂 அவர் முகநூல் பக்கமா போனீங்கன்னா இன்னும் நிறைய இருக்கு! அங்க வசை பாடிட்டு நேர்ல தோழர் உங்களை, வசுவல்லாம் மறுக்க முடியுமான்னு வந்து பேசுனவங்கல்லாம் உண்டு


விருமன் படத்துல மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு அப்ப அவரும் சாதி வெறியனாப்பு! விடுதலை நாயகன் சூரி நடிச்சிருக்காரு! தயாரிப்பு சூர்யா! அப்ப சூர்யாக்கும் சாதி வெறியாப்பு! உங்க வன்ம கக்கலை நிறுத்தித் தொலைங்க! பதில் சொல்லி அலுத்துப் போச்சு

 

 

Mar 8, 2024

விஜய் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

 வணக்கம் விஜய்,

நலமா? உங்கள் அரசியல் வருகை செய்திகளையும், உங்கள் கட்சிக் கொள்கைகளையும் படித்தேன். வாழ்த்துகள்.

சமூக நீதி, சமத்துவம், கல்வி வழங்குதல், தொழிற்சங்கம் என்று இயக்கப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைவதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். புதுச்சேரியில் சிறுமிக்கு எதிராக நடந்த கொடுமையைக் கண்டு கொந்தளித்துப் போய் இருப்பீர்கள். உங்கள் பதிவுகளைக் காண முடிகிறது!

நான் சமத்துவத்தை வலியுறுத்தியும், குறிப்பாக பெண் விடுதலை, பெண்களை ஒடுக்குவதற்குக் காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். பொதுவாகவே ஆணாதிக்கம் என்கிற சொல்லைக் கண்டால் இங்கே ‘ஆண்’ என்னும் எண்ணம் (கர்வம்) கொண்ட ஆண்களால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை! ஆணாதிக்கம் என்று பேசுகையில் அது ஆண் வெறுப்போ அல்லது ஒட்டுமொத்த ஆண்களை குறை சொல்வதோ ஆகாது என்று பல நூற்றாண்டுகளாக இங்கே விளக்கிய போதும் இது குறித்த கல்வி நம் சமூகத்தில் இல்லை! மேலும் இங்கு எல்லாமே தனி மனிதர் நடத்தை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுவதால் சமூகமயமாக்கல் விளைவாக நமக்கு உண்டாகும் அறிவு, எண்ணம், புரிதல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான ஆணி வேர் என்ன என்பது குறித்த பிரக்ஞையும் இல்லை! எனவே ஆம்பிளைங்களை ஏன் குத்தம் சொல்ற, செஞ்சவன் சைக்கோ என்கிற ரீதியில் முழுக்க முழுக்க அறியாமையில் மூழ்கிப் போய் மீசையை முறுக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு பெண்கள் தினம். ஆர்த்தி மட்டுமின்றி தினம் தினம் எங்கள் உடல்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, வன்முறை, நிலவும் கருத்தியல், ஆண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறித்து நான் பதிவு எழுதினேன்.

அதை படித்தே ஆக வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்களை நான் கையைப் பிடித்து இழுக்கவில்லை. ஆம்பிளை என்கிற சொற்களைக் கண்டதும் சிலரது ஆண்மை முறுக்கு ஏறிவிடுகிறது, மரியாதை குறைவாகப் பேசுவது, ஆபாசமாக பேசுவதுஏளனம் செய்வது என்று வந்துவிட்டார்கள்.. நான் முதலில் அதை புறம் தள்ளவே எண்ணினேன். ஆனால் தொடர்ந்து கமெண்டுகள் வரவே உள்ளே சென்று பார்த்தபோதுதான் அவர்கள் TVK ஆதரவாளர்களாக இருப்பது தெரிந்தது.

இணையத்தில் உங்கள் இயக்க ஐடியையும், உங்கள் ஐடியையும் டேக் செய்யத் தொடங்கினேன்.. இன்னும் கூடுதலாகியது. இதற்குப் பெயர் Cyber Bullying, Mob attacking. இன்றய இணையவெளியில் இது மிகவும் ஆபத்தான போக்கு, இதிலும் ஓர் ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சமத்துவம் என்னும் போது, பெண்களைப் போற்றுவது (அதுவும் ஆண்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பெண்மை வளையத்திற்குள் இருக்கும் பெண்களைப் போற்றும் நிலையே) தேவை இல்லை நண்பா, இங்கு தேவைப்படுவது மரியாதை,யும், சமத்துவமும், சுதந்திரமும்.  பெண்கள் நிலை என்ன, அவர்கள் ஏன் ஒடுக்கப்படுவதாக ”பெண்ணியவாதிகள்” எழுதுகிறார்கள், ஆணாதிக்கம் என்றால் என்ன, அதை எப்படி மாற்றுவது என்றெல்லாம் படிப்பது அதற்கு முன் நிபந்தனை. நான் படித்ததால் எழுதுகிறேன். பெண்களுக்காக மட்டுமில்லை நண்பா, கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பொருளாதார அடிமைகளாக மாறிப் போன ஆண்களுக்காகவும் சேர்த்தே இயங்குகிறேன்.

என் பதிவுகளைப் படித்தால் தெரியும்.

உங்கள் அரசியல் பிரச்சாரத்திலும், அமைப்பு ஒழுங்கு விதிகளிலும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பெண்களிடம் எப்படிப் பேசலாம், பேசக் கூடாது என்றும், இணைய வம்பிழுத்தலில் யாரோடும் ஈடுபடக் கூடாது என்றும், சமூக மாற்றத்திற்கான பணியை மட்டும் மேற்கொள்ளதே கடமை என்றும் எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக, சமூகத்தில் எழுத்தின் மூலம் மாற்றத்தை எழுத விளைபவளாக, உங்களோடு லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த தோழி என்கிற உரிமையிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்!

நன்றி

அன்புடன்

கொற்றவை

பி.கு: இதை விளம்பரம் என்று மலினப்படுத்தவும் ஒரு கூட்டம் உள்ளது! ஆம் விளம்பரம் தேடுகிறேன் நண்பா! பெண் நிலை மேம்பாட்டிற்கான தேவை குறித்தும், பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறையை ஒழிப்பது குறித்தும் விளம்பரம் தேடுகிறேன்.

 அதேபோல் உங்களை மட்டும் குறிப்பிட்டு டேக் செய்யவில்லை. நீங்கள் அரசியல் களத்திற்கு வந்துவிட்டீர்கள், ஓர் அமைப்பாக உங்கள் ஆதரவாளர்கள் சிலர் இப்படி செய்வதால் முறையிடுகிறேன். எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை டேக் செய்து முறையிடுவேன். 










Mar 7, 2024

எத்தனை தோட்டாக்களை எடுப்பது மகளே

 பிறந்த நொடியில் கள்ளிப் பாலா தாய்ப் பாலா என்ற ஆபத்து!

நிழலையும் எவனாவது வன்புணர வந்து விடுவானோ என்னும் ஆபத்து!
காதலை ஏற்க மறுத்தால் அமிலம் தெறிக்கும் ஆபத்து!
பருவம் எய்திய பின் உடலே கருப்பையாதல்
கரண்டி பிடிக்க மறுத்தால் தாலி அறுக்கும் ஆணைகள்!
தாலி கட்டுவதே கரண்டி பிடிக்கவும்
காலை விரிக்கவும் தானே!
களைப்பில் கணவனோடு படுக்க மறுத்தால் யோனிச் சிதைவு!
அது வல்லுறவில்லை என்னும் சட்டங்கள்!
நம் உடலுக்கான விதிமுறைகளை யாரோ எழுதி இருக்க
அது பற்றிய பிரக்ஞை கூட இல்லாத
பெண்களாக நாம் வளர்க்கப்பட்டு
மூச்சு முட்டி திணறும் போது
நீ எப்படி இப்படி திணறுகிறது
என்று கூக்குரலிடலாம்
நீ பெண் வாயை மூடு வேசி
என்னும் பட்டங்கள் எல்லாம் கடந்து
பிறப்பும் வாழ்வும் போர்களமென மாறிப் போனாலும்
புன்னகை பூக்கும் பெண்களே
மகளிர் தின நல் வாழ்த்துகள் 💐
****
நமை நதி என்பார்கள்
தேவதை என்பார்கள்
தெய்வம் என்பார்கள்
நாம் படைக்கப்பட்டதே
ஆணுக்கு சேவகம் செய்ய என சொல்லி சொல்லி வளர்த்து மிருகமாக்கிய
கயவனின் கண் நம் மீது விழுகையில்
தேவடியா என்பார்கள்
நீ என்ன உடை உடுத்தி இருந்தாய் என்பார்கள்
பொம்மைக்கு உடை உடுத்தி அழகு பார்த்த சிறுமி ஆர்த்தி என்ன உடை உடுத்தி அழைப்பு விடுத்தாள் என்று கேட்டுப் பாருங்கள்
அவன் பொறுக்கி அவனை சுட்டுத் தள்ளுங்கள் என்பார்கள்!
எத்தனை தோட்டாக்களை எடுப்பது மகளே!
உலகில் உள்ள துப்பாக்கிகள்
தோட்டாக்கள் அனைத்தையும்
கொண்டு வந்து நிரப்பினாலும்
அச்சமில்லை அச்சமில்லை
என்று வலம் வரும் ஆண்களை
வளர்த்துவிடுவது ஆணாதிக்கம்
என்று கதறினால்
மீசைகளுக்கு கோவம் வருகிறது!
அந்த கோவம் தானடா ஆணாதிக்கம்
அது உங்களை மனிதனாக உருவாக்காமல்
ராஜாக்களாக
எஜமானர்களாக
பெண்ணை வெறும் முலைகளாகவும்
யோனியாகவும் பார்க்கவே கற்றுத் தருகிறது என்றால்
கேடு கெட்ட பெண்ணியவாதிகளென
சாபங்கள் வழிகின்றன!
ஒரு நொடி கணவனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும்
மனைவியின் உடலில்
ஓராயிரம் இரத்தக் கட்டுகள்
ஆம்பிளைனா அப்ப்டித்தான் இருப்பான்
விட்டுக்கொடுத்து போ
அவருக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோ
அறிவீர்கள் அல்லவா
பெண்களுக்கான
இந்த தாலாட்டு பாடல்களை
பெருமக்களே
எங்கள் உடல்கள் சிதையக்
காரணம் எவனோ ஒரு பொறுக்கியோ
அல்லது சைக்கோவோ இல்லை
ஆஆஆஆஆம்பிளை என்று ஏற்றி வளர்க்கும்
பொம்பளைதான நீ என்று தாழ்த்தி
வளர்க்கும்
நீங்கள் தான்!

Jan 28, 2024

ப்ளூ ஸ்டார் - திரைப்பட விமர்சனம்

 ப்ளூ ஸ்டார்! வெற்றி பெரும் அணிதான்! மக்களை அரசியல்படுத்த, குறிப்பாக ஒன்றுபடுத்த இதுவரை நான் கண்ட திரைப்படங்களில் தனித்து ஒளிர்கிறது இந்த நீல நட்சத்திரம்.

மிகவும் திறம்பட எழுதப்பட்டதொரு பிரதி. கணக்கிட்டு எழுதுதல் என்பார்கள். அப்படியொரு திரைக்கதை வடிவமைப்பு. திரையரங்கில் பார்வையாளர்கள் ஆரவாரமிட்ட தருணங்களே அதற்கு சாட்சி. வாழ்த்துகள் ப்ளூ ஸ்டார் அணி!
சமூகத்திற்கு இன்றைக்குத் தேவையான ஒரு செய்தி ‘ஒன்றுபடுதல்’, எதிரி யார் என்று உணர்ந்துகொண்டு ஒன்றுபடுதல், அதை ஒரு விளையாட்டின் வாயிலாக தொய்வில்லாமல், (ஜனரஞ்சகமாக) பொழுதுபோக்கு அம்சங்களுடன், விறுவிறுப்பாகவும் சொல்ல இயலும் என்பதை நிரூபித்திருக்கும் எழுத்து மற்றும் திரையாக்கம். எஸ். ஜெயக்குமார் & தமிழ்ப் பிரபா!
அரசியலே ஒரு விளையாட்டு என்பார்கள், ஆனால் ப்ளூ ஸ்டாரில் விளையாட்டின் வாயிலாக மிகந்த கூருணர்வுடன், நிலவும் படிநிலை பிரிவுகளையும் அதில் வாழும் மனிதர்களின் மனநிலை எப்படியெல்லாம் இயங்கும் என்பதையும் சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.
“உனக்கு கீழ ஒருத்தர் இருக்கான்னு நீ நினைச்சா, உன்னை கீழன்னு நினைக்க ஒருத்தர் வருவார்” ஒவ்வொருவரும் இதை உணர்ந்து விட்டால், சக மனிதனை கீழ்த்தரமாக நடத்துவதோ, வெறுப்பு பாராட்டுவதோ நடைபெறாது. ஆனால் இந்த உணர்வு ஏற்படாத வகையில்தான் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளத்தைக் கொடுத்து பெருமைக்குள் சிக்க வைத்து ஆட்டம் காட்டுகிறது சமூக அரசியல். (அந்த பெருமைல எருமை வந்து மூத்திரம் பெய்ய!) சாதி, மதம், பாலினம், வர்க்கம், திறன் என்று பல வகையான அந்த பெருமை எருமைகள் நம்மூர்களில் திரிகின்றன. எருமைகள் பாவம், அவற்றை எள்ளல் செய்யவில்லை.
அந்த பெருமைகளை ஏவி விடுபவர்கள் யார், எதற்காக என்று உணர்வதில் தான் நம்முடைய விடுதலை அடங்கியுள்ளது! அதாவது பொது எதிரி யார் என்று கண்டடைவது.
க்ரிக்கெட் விளையாட்டின் மூலம் அந்த படிநிலைகளை – ஊருக்குள் – ஊர், காலனி என்றும் (சாதி), பின்னர் நகரத்துக்கு செல்கையில் அங்கே கிராமம், நகரம், மேலடுக்கில் உள்ள சாதியாதிக்கம், பணக்கார வர்க்கத் திமிர், அரசியல் லாபி என்று அதன் விரியும் தன்மைகளையும் நாற்காலி நுனியில் உட்கார வைக்கும் தன்மையுடன் வழங்கி இருப்பது இந்த படத்தின் சிறப்பு. அந்த தமிழ் தேசிய டச்.. டாப்பு! அதுதான் உண்மையான வர்க்கப் புரிதல்..
நிறைய உள்ளது பாராட்ட.. சலிப்பு ஏற்படுத்தாத வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு நீண்ட பதிவை எழுதி சலிப்பூட்ட விரும்பவில்லை!
நிறைய “குறியீடுகள்” படத்தில்! ரயில்வே ஸ்டேஷனில் கீர்த்தி பாண்டியன் பின்னால் CAPITAL உட்பட!
ருஷ்ய புரட்சி தோத்துச்சு, சீனாவுல என்ன நடக்குது, கியூபாலாம் ஒரு சோஷலிச நாடா, அங்க மட்டும் புரட்சி வாழுதா என்றெல்லாம் கேட்பவர்களுக்கும் இந்த படத்தையே பார்க்க சொல்லலாம்! நல்லா வரும் போதும், ஒற்றுமை ஏற்படும்போதும் அதை விரும்பாத கும்பல்கள் என்னல்லாம் செய்யும் என்று காட்டியிருக்கிறார்கள். ஒரு புரட்சி நடைபெறவும், நிலைத்திருக்கவும் தேவைப்படுவதும் அதுதான் ‘ஒற்றுமை”. ஆனால் அந்த ஒற்றுமையை வெறும் அக உணர்வில் மட்டும் ஏற்படுத்திவிட இயலாது, பொருளாயத நிலைமைகளும் மாறினால் தான் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த இயலும். இந்த (பொருளாயத மாற்ற) வர்க்க அரசியல் பார்வை அதில் முன்வைக்கப்படவில்லை எனினும், “யப்போய் உங்கள ஒண்ணு சேர விட மாட்றாங்கப்போய்.. உஷாரா இருங்க” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வண்ணம் சொல்வது வரவேற்கத்தக்கது.
சிறந்த எழுத்து, இயக்கம், நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை. படத்தொகுப்பு எனை வெகுவாக கவர்ந்தது.
புத்தரா கார்ல் மார்க்ஸா என்று ஆய்வு செய்து சிவப்பின் மீது (சற்று) வெறுப்பை ஏற்படுத்திய நீல நட்சத்திரம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவருமெனில் மகிழ்ச்சியே!
“காலு மேல காலு போடு உழைக்குற குலமே
மேல ஏறும் காலமாச்சு ஏறியாகனுமே
ஏறும்போது இழுக்குறதாரு எம்புட தங்கமே
சேரும்போது பிரிக்குறதாரு தெரிஞ்சு நிக்கனுமே”
நட்சத்திரங்கள் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன, அவை வெப்பநிலையின் குறிகாட்டிகள். வெப்பமான நட்சத்திரங்கள் நீலம் அல்லது நீல-வெள்ளை நிறத்தில் தோன்றும், அதே சமயம் குளிர்ந்த நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது! மனிதர்களுக்கு இரண்டுமே தேவைதான்! சமநிலையில்!
- கொற்றவை
28.1.24