Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Apr 1, 2020

அவள் கரையட்டும்!


தனது மூளை அமெரிக்கா மற்றும் சீனா எனப் பிரிக்கப்படுவதை அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள்!
அழைக்கப்படாத விருந்தினர்களாக அவளது மண்டை ஓட்டிற்குள் நுழைந்தவர்கள் அவளது நரம்புகளையும் இரத்த நாளங்களையும் பிழிவதை அவளால் பார்க்க முடியும்!
அவள் கண்களில் இருந்து பாயும் திரவம் மூக்கிற்குள் தடுக்கப்பட்டு தொண்டையில் விழுங்கப்படுகிறது!
இல்லை அவள் அதை கண்ணீர் என்று அழைக்கப் போவதில்லை! அவள் அழமாட்டாள்!
அவளை நிறைய விருந்தினர்கள் தேடி வருகிறார்கள்! அவர்களுக்கு பல வடிவங்களும் பெயர்களும் உள்ளன!
மனநிலை மாற்றங்கள், மனப் பதட்டம், மன அழுத்தம், பி.எம்.எஸ் மற்றும் பல!
சில நேரங்களில் அவர்கள் தனியாக வருகிறார்கள்! சில நேரங்களில் அவர்கள் கலவையான பழ ஜாம் போலாகி வருகிறார்கள்!
எப்போதாவது மாதாந்திர விருந்தினர்களாக வந்தவர்கள், இப்போது நிரந்தர விருந்தினராகிவிட்டனர்!
அவள் வெளியே வர ஆசைப்படுகிறாளா?
ஊரடங்கு அவளுக்கு கதவுகளைத் திறக்கிறது!
அவளுக்கு அச்சமில்லை!
இத்தனை ஆண்டுகள் அணிந்திருந்த அதே முகமூடியை அணிவதில் அவள் திறமைசாலி!
‘இயல்பான’ முகமூடி! என்.எம் .1985!
இந்த முகமூடியை அணிவதால் அவளால் பெண்ணிய கட்டுரைகள், மார்க்சிய மொழிபெயர்ப்புகள், சமூக அக்கறை கொண்ட எழுத்துகளை உருவாக்க முடிகிறது!
ஆனால் இதில் அவள் எங்கே?
அவள் காலத்தை ஏற்கனவே டாலியின் ஓவியத்தில் மறைத்து வைத்துவிட்டாள்!
எனவே நாட்கள் கடந்து செல்கின்றன!
படுக்கையில் போர் தொடங்குகிறது! இருள் தேவதையை அவள் கண் முத்தமிடுமாறு கெஞ்சும்!
ஆனால் இருள் தேவதையோ சந்திரனின் கீழ் ஒளிந்து விளையாடுவதையே விரும்புகிறாள்!
தனது உடலை படுக்கையில் வைத்து அவள் மூளைக் கண்களின் வழியாகப் பார்க்க ஆரம்பிக்கிறாள்!
மின்சார கம்பிகளுடன் மனிதன் வருகிறார்!
செல்கள் எரிகின்றன!
துரோகிகளின் புட்டத்தை உதைக்க முடியவில்லை!
அவள் கால்கள் வெற்று இடத்தை உதைக்கின்றன!
சில உதைகள் மற்றும் வலிப்புகளுக்குப் பிறகு இருள் தேவதை அவளைக் கட்டிப்பிடிக்கிறாள்!
சூரியன் உதிக்கிறது! அவள் தன்னை ஒரு பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு உலகுக்கு கற்பிக்கத் தொடங்குகிறாள்!
அவள் தன்னை விட்டு விலகி இருக்க முயற்சிக்கிறாள்!
அவள் புத்திசாலித்தனமாக தன் காதலை அவளிடமிருந்து விலக்கி வைத்தாள், ஆனால் காதல் அவளை ஒருபோதும் விடவில்லை!
அவர் சுமார் 3000 பக்க சிவப்பு வார்த்தைகளை தயாரித்தாள்!
சில நேரங்களில் அவளுடைய பரந்த திறந்த கரங்கள் அவளை இயேசுவாக்குகின்றன!
அவளது ஆணி கைகளால் முள் கிரீடத்தை அகற்ற முடியவில்லை!
மாயமாக அவள் இரத்த ஓட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவள்!
உள்ளூர குருதி வடிவதை யாரும் பார்க்க முடியவில்லை!
இப்போது யார் வெல்வார்கள்? அவள் அல்லது அவள்?
அநேகமாக வரலாறு அவளை விடுதலை செய்யும்!


(Pic from https://themotherofallnerds.com/two-paintings-that-raise-t…/)

Nov 28, 2016

வாழ்க்கையின் சொல் என்னவாக இருக்கும்


வாழ்க்கையின் சொல் என்னவாக இருக்கும்
ழ வோடு புள்ளியும் தொடர்கிறது
பறவை என உடையாமல் எழுத
ஓர் எழுதுகோல் தேவை
அதில் மைக்கு பதில்
மௌனத்தை நிரப்பித் தாருங்கள்
நான் எழுத வேண்டுவது பாறைகளில்
பாறைகளுக்குச் சொல் பிடிக்காது
குழந்தை போல் சிரிக்கும் அதன் வாயில்
வேட்டையாடிக்கு மட்டும் கதவு திறக்கிறது
டாலியின் கடிகாரம் உருகி வழிகையில்
இருளுக்குப் பசிக்கிறது
சொல்லூட்டி பழக்கப்பட்ட கைகள்
இசைப்பதோ
ஓவியம் வரைவதோ
பறவையைத் தேடுவதோ
கடவுளருக்கு மனிதர்களை அறிமுகம் செய்வது போன்றதாகும்
மனிதர்கள் மொழியைப் படைக்கிறார்கள்
கடவுளர்கள் பெருங்காதலோடு
இடுகாட்டை கட்டியெழுப்புகிறார்கள்

Feb 2, 2015

கவிதைகள்

1.  மற்றொரு அறை

விழித்திருக்கும் அறையின்
இமைகள் ஒன்றுக்கொன்று
முத்தங்களைச் சொறிந்தது

பச்சை மச்சம் படர்ந்திருந்த பின்புறம்
அடர்பச்சையாக்கும்
மெல்லிய முடிகள்
வானை நோக்கி உயர்த்தியபடி
மிதிவண்டி ஓட்டும் தோரணையில்
முன்னும் பின்னும் ஆட்டி
கட்டளை இடும் கால்கள்
கால்களின் தாளத்திற்கிசைந்த
அழுகையொலி

வாரியெடுத்து
நெஞ்சுக்குழியில்
படுக்க வைத்து
நிறுத்தம் வந்தவுடன்
வேகத்தை குறைத்து ஓடும்
ரெயில் வண்டியின் அசைவையொத்த
ஆட்டம் கொடுத்து
காதை வருடி
நெற்கதிரென வளர்ந்திருக்கும் முடிகளின்
நடுவே விரல்களால் வருடிக் கொடுத்து
கருவறையை மெத்தையாக்கி
உறங்க வைத்திருந்தாள் அவள்

மற்றொரு
தனிமைத் துயர்கூடிய
அறை
இமைகள்
முத்தம் கொடுத்துக் கொள்வதே இல்லை

இப்போது

வயிற்றில்
எரியூட்டிய கடலொன்று
அனுமதியின்றி உட்புகுந்ததை
உணர்ந்தாள்

இரைச்சலற்ற பேரலை
பனிக்குடத்தை
பிடுங்கிச் சென்றது

நெஞ்சுக்குழியிலிருந்து நீண்டு விரியும்
விரல்கள்
அருகில் இருந்த அவளைத் தேடி
கரைகிறது செங்காகமென


2. எழுதுகிறாள் அவள்

பூமத்திய ரேகைகள்
அழிக்கப்படாமல் இருக்க
தன்
வெளியை
எழுதுகிறாள் பெண்

உறங்கவைத்து
தசைக்குள் நுழைந்த
லிங்க எழுதுகோல்கள்
இறுக இட்டுவைத்திருக்கும்
முடிச்சுகளை
கட்டவிழ்க்க

அவிழ்க்கப்பட்ட லிபிகள் வழி
ஓடித் திரியும் நாணமற்ற
பெண் நதிகளை
சிவப்பு கம்பளம்
பரவியணைக்கிறது
நாற்காலிகளற்ற வெளி

உன்மத்தம்  தீண்டாதிருக்க
பெயரற்ற சமாதியில்
தானற்ற உடலாய்
சேர்க்கப்படாமலிருக்க

கடவுளின் மொழிகளில்
அரித்த உப்பில்
ஊறித் துளைக்கும் இந்திரிய சொற்களின்
கூர்மையை மழுங்கடிக்க
புறப்பட்டிருக்கும்
செம்பறவை
எழுதுகிறாள்

 நன்றி: கொம்பு இதழ்

Aug 25, 2010

வெளியேற அனுமதித்தல்.





வெளியேற்றவேண்டும்
அந்தக் காதுகளிலிருந்து இசையை
விழிகளிலிருந்து
பாவையை
வானிலிருந்து மேகத்தை
சூரியனிலிருந்து
வெப்பத்தை

வெளியேற்றுவோம்

காமத்தின் வாயதனைப் பிளந்து
காதலை உடலிலிருந்து உருவி
இப்படியாக
புனையப்பட்ட
பெண்மையை பெண்ணிலிருந்தே

நட்சத்திரங்கள் தாங்கி வந்தாலும்
இரவெனப்படுவது இருளே

வௌவாலின் பார்வையில்
விலங்குகள்
தலைகீழ்

சுழற்சி
காலத்தின் சிசு
முளைத்திடும் வேர்களில் பதிகிறது
ஓட்டுகளற்ற தராசு
ஒன்றின் நிழல்

Jul 2, 2010

கல்லெறியும் குளம்.



கரையான்கள் தீண்டாத கதவுகளுக்கு பின்னால்
புனிதம் காத்திருந்தது
உதடுகள் தொங்க முத்தம் கேட்டு

காத்திருக்கிறது
புனிதம்
வியர்வை பொங்கும் கரங்களை
பிசைந்தவாறு
முத்தத்தின் வாசனை
முத்த
வாசனை
புனிதத்தின் துர்மணம்
முத்தம்
வருந்தி விலக

புனிதம் அறிவித்தது

உங்களில் எவர் புனிதர் இல்லையோ
அவர்களுக்கே என் உதடுகள்...

மதத் தரகர்
தூபமிசைப்போர்
கடவுளின் காவற்காரர்
துரோகத்தை மந்திரமாய் ஈணுபவர்
கொலையாளி
வரலாற்று விற்பனன்
ஜனநாயகவாதி
கொள்கை பரப்பாளன்
அரசியல்வாதி
கலைக் காப்பாளர்கள்
ஒழுக்கம் செய்து விற்பனைக்கு வைப்போர்
தசைக்கு கீழ் ஆடை அணிவோர்
கைகளில்
அரிதாரம் வழி வழியும் பாவைகள்
மிதக்கிறது மறைக்கப்பட்ட வரலாற்று பக்கஙகளில்
துர்மணம் சூழும் பெயரற்ற கண்ணீர்

எல்லோருக்கும் சாத்தியமாயிற்று
ஒரே வானம்
ஒரே மௌனம்
ஒரே சொல்