Sep 28, 2018

பரியனும் ஜோவும்



மனிதத்தை கொன்று புதைக்கக் கூடிய வல்லமையை மனிதர்கள் (இந்தியர்கள்) கடவுளுக்கும் சாதிக்கும் கொடுத்திருக்கிறார்கள்

பரியேறும் பெருமாள் ஒன்றும் புதிய கதையல்லஇந்தப் பேச்சு வராமலிருக்கப் போவதில்லை. சாதியும் புதிதல்ல. அது பல்லாயிர வருட சீக்கு. அந்த மன நோய் இருக்கும் வரை அதுபற்றிய பேச்சு அவசியமே. அது பேசப்படும் விதம்தான் ஒன்று, நம்மை அசைத்துப் பார்க்கும் அல்லது கடந்து போக செய்யும்.

பரியேறும் பெருமாள் வழியாக மாரி செல்வராஜ் முன்வைக்கும் சாதிய சமூக அவலங்களை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. கருப்பியை பரிகொடுப்பது தொடங்கி தாழ்த்தப்பட்ட சாதியில் பிறக்கும் ஒருவரின் உடமைக்கும் உடலுக்கும் காதலுக்கும் நேர்வதென்னவென்று பாருங்கள் என்கிறார்.

நான் யார் என்னும் கேள்வியை பரியேறும் பெருமாள் முன் வைப்பதாக விளம்பரங்கள் கண்டோம். உண்மையில்நீங்கள் யார்என்று தெரிகிறதா என்னும் கேள்வியைத் தான் பரியன் எழுப்புகிறான்.

செய்திகளாக படித்து கடந்து செல்லும் சாதிய அவலங்களை, கொலைகளை, துன்புறுத்தல்களை ஒரு கதையாக சொல்லும் போது அது செய்தி என்பதைக் காட்டிலும் உரையாடலாகி நம் மனசாட்சியை தட்டியெழுப்புகிறது. காட்சி ஊடகத்திற்கு அத்தகைய வல்லமை உண்டு. ஆனால் இந்த ஊடகமானது ஆளும் வர்க்கத்தினரின் சதுரங்க வேட்டைக் களமாகிப் போனது.

சகதிக்குள் வீழ்ந்த அந்த தேரினை இழுத்து சரியான பாதையில் கொண்டு செல்ல அவ்வப்போது சில தேரோட்டிகள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள், அத்தகைய தேரோட்டிகளின் எண்ணிக்கை தற்போது கூடி வருகிறதென்பது முன்னெப்போதையும் விட மகிழ்ச்சியளிக்கிறதுஇதுவரை ஆளும் வர்க்கத்தின் கைகளில் இருந்த சினிமா இப்போது மெல்ல மெல்ல இடது சிந்தனையாளார்களின், அதிலும் குறிப்பாக இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சமூக மாற்றத்திற்காக கலையை ஊடகமாக பயன்படுத்த விழையும் உண்மையான கலைஞர்களின் (பட்டியல் நீளமானது) ஆடுகளமாக மாறி வருகிறது.

தமிழ் திரையுலகில், இதற்கு முன்பு ஆங்காங்கே நல்ல படம் என்று தனி நபர் முயற்சியாக இருந்த ஒன்று தற்போது தோழர் பா. இரஞ்சித்தின் வரவால் ஓர் இயக்கமாக மாறி வருகிறது.



ஒடுக்குமுறையை ஆளும் வர்க்க கருனையாளர் ஒருவர் பேசுவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. முந்தையது கதை, பிந்தையது அரசியல். கதையை கடந்து செல்லலாம், அரசியல் உங்களை உள்ளிழுக்கும்

பரியேறும் பெருமாளும் அவ்வாறே. கண்டும் காணாமலும் போகும் ஒடுக்குமுறைகளை முன்வைத்து நம்முன் உரையாடுகிறார் மாரி. அந்த உரையாடல் தொனி எதிர் தரப்பில் இருப்போரையும் ஒரு நிமிடம் அசைத்துப் பார்க்கும்.

திரைப்படங்களில் எத்தனையோ விதமான காதல்கள் சொல்லப்பட்டிருந்தாலும் ஜோ-பரியனின் அன்பு மாறுபட்டது, அலாதியானது. அந்த அன்பிற்காக பரியன் கொடுக்க விழைவது பேரன்பு. ஆனால் இந்த சமூகத்திற்கு எல்லாமே கருப்பு வெள்ளை தானே. 



அடுத்தவரின் அன்பை கண்காணிப்பதும், அதன் மீது அதிகாரம் செலுத்துவதும், அதை வீழ்த்த நினைப்பதும் எத்தனை பெரிய வன்முறை. ஒடுக்கப்பட்டோர் என்ன செய்து பிழைக்க வேண்டும் என்று தொடங்கிய ஆளும் வர்க்க சாதிய அதிகாரமானது, அவர்கள் எம்மொழியில் கல்வி கற்க வேண்டும், யார் யாரோடு பழக வேண்டும், எங்கு புழங்க வேண்டும், எந்த குவளையில் பருக வேண்டும் என்று அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு அசைவின் மீதும் எப்படி அதிகாரம் செலுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள வகை செய்கிறார் மாரி செல்வராஜ்.

இவ்வளவு வலிகளை அனுபவிக்கும் மனிதர்களின் வாழ்வில் தான் எத்தனை கொண்டாட்டங்கள் நிலவுகின்றன. நாம் அறியாத வாழ்வியல், முற்றிலும் புதிதான கதாப்பாத்திரங்கள், திருப்பங்கள், மனிதர்கள் என பல புதுமைகளை பரியேறும் பெருமாளில் காண முடியும். அத்தனை நெகிழ்ச்சி. அத்தனை நம்பிக்கை.

பொழுது போக்கின் பெயரால் மலினங்களை ரசனையாக ஊட்டி வளர்ப்பதோ, பொய்மையான ஒரு மகிழ்ச்சியை திரையில் நிகழ்த்திக் காட்டுவதோ அல்ல கலை. சமூக நீதியற்ற சமூகத்தில் அறியாமையில் மூழ்கியிருப்போரிடையெ அறிவொளி ஏற்றி நிஜ வாழ்வில் அம்மகிழ்ச்சியை அனைவருக்கும் உறுதி செய்ய உரையாடல் நிகழ்த்துவதே கலை.

இடதுசாரி சிந்தனையாளர்களின் பெருக்கத்தால் தற்போது தமிழ் சினிமாவும் மலினங்களிலிருந்து விடுபட்டு நல் திசையில் பயணிக்கும் என்கிற நம்பிக்கை துளிர் விடுகிறது. ஆனால் இது நீடித்திருக்கவும், பொருளாதார ரீதியாக வெற்றிபெறவும் ஒரு கூட்டியக்கமாக மாற வேண்டும். Pa. Ranjith & Neelam Productions போல் இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் தோன்ற வேண்டும். பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்கக் கூடிய உத்திகளை வகுத்து ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து சமூக நீதி பேசும் கலைஞர்கள் உய்த்திருக்கவும், வெற்றி பெறவும் வழிவகை செய்ய வேண்டும்.

மக்களின் ரசனையை வளர்த்தெடுத்துவிட்டால் பின்னர் உலக அரங்கில் தமிழ் சினிமா ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும். இது சாத்தியமே.  

அதேவேளை, வணிகச் சந்தையில் ஆங்காங்கே சில திரைக் கலைஞர்கள் இத்தகைய துணிவான முயற்சிகளை மேற்கொள்கையில் எந்த வித முன் முடிவுகளுமின்றி திரைக்கு சென்று பார்த்து ஊக்குவிப்பது மக்களின் கடமை. ஏனென்றால் அவர்கள் நமக்காக பேசுகிறார்கள்.

மக்களே, உங்களுக்கான பொழுதுபோக்கு எது என்று யாரோ தீர்மானிக்க இனியும் அனுமதிக்காதீர்கள். பொழுதை போக்குமளவுக்கு உழைப்புச் சுரண்டலில் வாழும் முதலாளித்துவ மேட்டுக்குடி வர்க்கத்திற்கு மட்டுமே நேரமும், தினவும் இருக்கிறது.  உழைக்கும் வர்க்கமாகிய நமக்கோ அடிமைத் தளைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கான கடமை காத்திருக்கிறது. அதற்கு நாம் நம்மைச் சுற்றி நடப்பது என்ன, நம்மைப் போன்ற சக மனிதர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் அவசியமும் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்நிலை துயருக்கும் பொறுப்பேற்று, துயர் துடைப்தற்கு கை கோர்ப்போம் வாருங்கள். அப்போது தான் நாம் மனிதர்கள்.

பரியேறும் பெருமாள் உங்களுக்குள் இருக்கும் மனிதத்தை அன்போடு உங்களுக்கு திறந்து காட்டுவான்.. திரை சென்று கண்டுஅன்போடு புன்னகையுங்கள் சக மனிதனைக் கண்டு…. வா… ரயில் விடப் போகலாம் என்று தானே அழைக்கிறார்கள்!