Showing posts with label Kavithaigal. Show all posts
Showing posts with label Kavithaigal. Show all posts

Apr 1, 2020

அவள் கரையட்டும்!


தனது மூளை அமெரிக்கா மற்றும் சீனா எனப் பிரிக்கப்படுவதை அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள்!
அழைக்கப்படாத விருந்தினர்களாக அவளது மண்டை ஓட்டிற்குள் நுழைந்தவர்கள் அவளது நரம்புகளையும் இரத்த நாளங்களையும் பிழிவதை அவளால் பார்க்க முடியும்!
அவள் கண்களில் இருந்து பாயும் திரவம் மூக்கிற்குள் தடுக்கப்பட்டு தொண்டையில் விழுங்கப்படுகிறது!
இல்லை அவள் அதை கண்ணீர் என்று அழைக்கப் போவதில்லை! அவள் அழமாட்டாள்!
அவளை நிறைய விருந்தினர்கள் தேடி வருகிறார்கள்! அவர்களுக்கு பல வடிவங்களும் பெயர்களும் உள்ளன!
மனநிலை மாற்றங்கள், மனப் பதட்டம், மன அழுத்தம், பி.எம்.எஸ் மற்றும் பல!
சில நேரங்களில் அவர்கள் தனியாக வருகிறார்கள்! சில நேரங்களில் அவர்கள் கலவையான பழ ஜாம் போலாகி வருகிறார்கள்!
எப்போதாவது மாதாந்திர விருந்தினர்களாக வந்தவர்கள், இப்போது நிரந்தர விருந்தினராகிவிட்டனர்!
அவள் வெளியே வர ஆசைப்படுகிறாளா?
ஊரடங்கு அவளுக்கு கதவுகளைத் திறக்கிறது!
அவளுக்கு அச்சமில்லை!
இத்தனை ஆண்டுகள் அணிந்திருந்த அதே முகமூடியை அணிவதில் அவள் திறமைசாலி!
‘இயல்பான’ முகமூடி! என்.எம் .1985!
இந்த முகமூடியை அணிவதால் அவளால் பெண்ணிய கட்டுரைகள், மார்க்சிய மொழிபெயர்ப்புகள், சமூக அக்கறை கொண்ட எழுத்துகளை உருவாக்க முடிகிறது!
ஆனால் இதில் அவள் எங்கே?
அவள் காலத்தை ஏற்கனவே டாலியின் ஓவியத்தில் மறைத்து வைத்துவிட்டாள்!
எனவே நாட்கள் கடந்து செல்கின்றன!
படுக்கையில் போர் தொடங்குகிறது! இருள் தேவதையை அவள் கண் முத்தமிடுமாறு கெஞ்சும்!
ஆனால் இருள் தேவதையோ சந்திரனின் கீழ் ஒளிந்து விளையாடுவதையே விரும்புகிறாள்!
தனது உடலை படுக்கையில் வைத்து அவள் மூளைக் கண்களின் வழியாகப் பார்க்க ஆரம்பிக்கிறாள்!
மின்சார கம்பிகளுடன் மனிதன் வருகிறார்!
செல்கள் எரிகின்றன!
துரோகிகளின் புட்டத்தை உதைக்க முடியவில்லை!
அவள் கால்கள் வெற்று இடத்தை உதைக்கின்றன!
சில உதைகள் மற்றும் வலிப்புகளுக்குப் பிறகு இருள் தேவதை அவளைக் கட்டிப்பிடிக்கிறாள்!
சூரியன் உதிக்கிறது! அவள் தன்னை ஒரு பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு உலகுக்கு கற்பிக்கத் தொடங்குகிறாள்!
அவள் தன்னை விட்டு விலகி இருக்க முயற்சிக்கிறாள்!
அவள் புத்திசாலித்தனமாக தன் காதலை அவளிடமிருந்து விலக்கி வைத்தாள், ஆனால் காதல் அவளை ஒருபோதும் விடவில்லை!
அவர் சுமார் 3000 பக்க சிவப்பு வார்த்தைகளை தயாரித்தாள்!
சில நேரங்களில் அவளுடைய பரந்த திறந்த கரங்கள் அவளை இயேசுவாக்குகின்றன!
அவளது ஆணி கைகளால் முள் கிரீடத்தை அகற்ற முடியவில்லை!
மாயமாக அவள் இரத்த ஓட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவள்!
உள்ளூர குருதி வடிவதை யாரும் பார்க்க முடியவில்லை!
இப்போது யார் வெல்வார்கள்? அவள் அல்லது அவள்?
அநேகமாக வரலாறு அவளை விடுதலை செய்யும்!


(Pic from https://themotherofallnerds.com/two-paintings-that-raise-t…/)

May 17, 2018

ஃபீனிக்ஸ் பறவையல்ல இவள்....


வீழ்தல் என்பது தவறி வீழ்தல்
பற்றியதை அற்று வீழ்தல்
பொய்த்துப் போன நா எரியும்
கற்களிடறி வீழ்தல்
எண்ணிலடங்கா வீழ்ச்சிகளின் பாரம் 
பூமி புதைந்துவிடவில்லை
சுழன்று கொண்டேயிருக்கிறது
போராட்டமே வாழ்வென்றது
தாடி வைத்த கம்யூனிச பூதம்
ஒடுக்கும் புற உலகோ
ஒடுக்கப்படும் அக உலகோ
அடங்க மறு
போர் தொடு
நிலம் செழிக்க
வா
இருவரும் உழவு செய்வோம்
ஒரு கை ஓசை
சொடுக்கும் அதிகாரம்
இரு கை சேர்கையில்
வெற்றிக் களிப்பு
காத்திருத்தலும்
மௌனித்திருத்தலும்
நிபந்தனைகளற்று முந்தானை விரித்தலுமே
காதலென்றால்
வேசை என்னும் சொல்லுகுரிய
ஆண்பால் சொல்லை
உருவாக்காத இச்சமூகத்தின்
குறிகளை அறுத்தெரியும்
வல்லமை முலைகளுக்குண்டு
பெண்
அன்பு காட்டுவதும்
அறிவு காட்டுவதும்
தேவதையாவதும்
நீலியாவதும்
ஆண் நாவின் நீளம் பொறுத்தது
வீழ்கையில்
மன் சுமக்கிறது
மண் கரைக்கிறது
மண் முத்தமிடுகிறது
கசியும் ஈரம் போதும்
விழ விழ
எழும்
ஃபீனிக்ஸ் பறவை
அல்ல இவள்
வீழும் விதை
ஒற்றை மரமோ
அடர் காடோ
(ஓவியம்: ஃப்ரீதா காலோ - https://www.fridakahlo.org/marxism-will-give-health-to-the-…)

Nov 28, 2016

வாழ்க்கையின் சொல் என்னவாக இருக்கும்


வாழ்க்கையின் சொல் என்னவாக இருக்கும்
ழ வோடு புள்ளியும் தொடர்கிறது
பறவை என உடையாமல் எழுத
ஓர் எழுதுகோல் தேவை
அதில் மைக்கு பதில்
மௌனத்தை நிரப்பித் தாருங்கள்
நான் எழுத வேண்டுவது பாறைகளில்
பாறைகளுக்குச் சொல் பிடிக்காது
குழந்தை போல் சிரிக்கும் அதன் வாயில்
வேட்டையாடிக்கு மட்டும் கதவு திறக்கிறது
டாலியின் கடிகாரம் உருகி வழிகையில்
இருளுக்குப் பசிக்கிறது
சொல்லூட்டி பழக்கப்பட்ட கைகள்
இசைப்பதோ
ஓவியம் வரைவதோ
பறவையைத் தேடுவதோ
கடவுளருக்கு மனிதர்களை அறிமுகம் செய்வது போன்றதாகும்
மனிதர்கள் மொழியைப் படைக்கிறார்கள்
கடவுளர்கள் பெருங்காதலோடு
இடுகாட்டை கட்டியெழுப்புகிறார்கள்

Feb 2, 2015

கவிதைகள்

1.  மற்றொரு அறை

விழித்திருக்கும் அறையின்
இமைகள் ஒன்றுக்கொன்று
முத்தங்களைச் சொறிந்தது

பச்சை மச்சம் படர்ந்திருந்த பின்புறம்
அடர்பச்சையாக்கும்
மெல்லிய முடிகள்
வானை நோக்கி உயர்த்தியபடி
மிதிவண்டி ஓட்டும் தோரணையில்
முன்னும் பின்னும் ஆட்டி
கட்டளை இடும் கால்கள்
கால்களின் தாளத்திற்கிசைந்த
அழுகையொலி

வாரியெடுத்து
நெஞ்சுக்குழியில்
படுக்க வைத்து
நிறுத்தம் வந்தவுடன்
வேகத்தை குறைத்து ஓடும்
ரெயில் வண்டியின் அசைவையொத்த
ஆட்டம் கொடுத்து
காதை வருடி
நெற்கதிரென வளர்ந்திருக்கும் முடிகளின்
நடுவே விரல்களால் வருடிக் கொடுத்து
கருவறையை மெத்தையாக்கி
உறங்க வைத்திருந்தாள் அவள்

மற்றொரு
தனிமைத் துயர்கூடிய
அறை
இமைகள்
முத்தம் கொடுத்துக் கொள்வதே இல்லை

இப்போது

வயிற்றில்
எரியூட்டிய கடலொன்று
அனுமதியின்றி உட்புகுந்ததை
உணர்ந்தாள்

இரைச்சலற்ற பேரலை
பனிக்குடத்தை
பிடுங்கிச் சென்றது

நெஞ்சுக்குழியிலிருந்து நீண்டு விரியும்
விரல்கள்
அருகில் இருந்த அவளைத் தேடி
கரைகிறது செங்காகமென


2. எழுதுகிறாள் அவள்

பூமத்திய ரேகைகள்
அழிக்கப்படாமல் இருக்க
தன்
வெளியை
எழுதுகிறாள் பெண்

உறங்கவைத்து
தசைக்குள் நுழைந்த
லிங்க எழுதுகோல்கள்
இறுக இட்டுவைத்திருக்கும்
முடிச்சுகளை
கட்டவிழ்க்க

அவிழ்க்கப்பட்ட லிபிகள் வழி
ஓடித் திரியும் நாணமற்ற
பெண் நதிகளை
சிவப்பு கம்பளம்
பரவியணைக்கிறது
நாற்காலிகளற்ற வெளி

உன்மத்தம்  தீண்டாதிருக்க
பெயரற்ற சமாதியில்
தானற்ற உடலாய்
சேர்க்கப்படாமலிருக்க

கடவுளின் மொழிகளில்
அரித்த உப்பில்
ஊறித் துளைக்கும் இந்திரிய சொற்களின்
கூர்மையை மழுங்கடிக்க
புறப்பட்டிருக்கும்
செம்பறவை
எழுதுகிறாள்

 நன்றி: கொம்பு இதழ்

May 11, 2013

அவர்களால் வளர்க்கப்பட்ட அந்த மிருகம்




அவர்கள் மிருகங்களை உற்பத்தி
செய்யும் கூடாரங்களை
செவ்வனே நடத்துகிறார்கள்
அவர்களால் வளர்க்கப்பட்ட
அந்த மிருகம்
அவள்
சிறுமியாய் இருக்கும் பொழுது
சோற்று பருக்கைக்கு கணக்கு எழுதியது
அவள்
பருவம் எய்தியவுடன்
தந்தமை உடை துறந்து
எஜமானருடை அணிந்தது

விலா எலும்பும்
வயிற்றுப் பகுதியும்
கன்னங்களும்
நாளும் சிவக்கத் தவறியதேயில்லை

இளமையை முதலீடாக்க பாடம் நடத்திய
அதன் பேராண்மை மிக்க உதடுகள்
எண்ணிக்கையைத் தவிர வேறெதுவும் உச்சரித்ததில்லை

உறக்கத்தை
கனவுகளில் மட்டும் வருமாறு
உத்தரவிட்டாள்
விழித்திருக்கும் வேளைகளில்
உலக வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
எல்லைக் கோடுகளை
அழிக்கும் ஒரு கருவியை செய்யத் தொடங்கினாள்

திருமண வயது நாற்பது
என்று தீர்மானம் இயற்றியதந்த மிருகம்
இருபது வருடங்களுக்கான
தண்டனையை உறுதி செய்துக் கொண்டாள்
அது மரண தண்டனையாகாமல் போனது

நாடோடி வாழ்க்கை
அச்சுறுத்தியபோது
அவள்
பெண்
என்பதை உறுதி செய்து கொண்டாள்

சரணடைய வைத்தது
எதிரொலிக்கும் குரல்கள்

மிருகம்
குறிகள் கொண்ட மிருகங்களாய் மாறி
குழந்தமையை
சிரிப்பை
சுயமரியாதையை
அறிவுநிலையை
காதலை
வாழ்க்கையை
இறுதியில்
ஆம் இறுதியில்
பரித்துக் கொண்டது
அந்தத் தங்கக் கோதுமையை

பூசியங்களுக்கிடையில்
அரைத்து விழுங்கியது
அவளது தாய்மையை


Sep 15, 2012

ஒரு குற்றவாளியின் வாக்குமூலம் கவிதையாகிற தருணத்தில்




ஒரு குற்றவாளியின் வாக்குமூலம்
கவிதையாகிற தருணத்தில்
கல்லறையில் இவ்வாசகம் பொறிக்கபப்டுகிறது
”நல்லவர்களை அடையாளம் காட்ட
குற்றங்களை உருவாக்கிய
கடவுளுக்கு நன்றி”

பெயரற்ற அந்த நபர்
செய்ததெல்லாம்
கண்காணிப்பு நிறுவனங்களுக்கு
முழு விசுவாசமாய் இருந்தது
வரி கட்டுவது
ஊழலுக்கெதிரான உண்ணாவிரதங்களில்
கலந்துக் கொள்வது
தேர்தல் நேரத்தில்
ஓட்டுப் போடுவது
உடலை நிராகரித்து
மனதிற்கு கோயில் எழுப்புவது
கொன்றுவிட்ட மனதோடு புதைந்து போவது

மற்றொருவர்
கடவுளுக்கு சாத்தானை அறிமுகம் செய்வதோடு
சாத்தானுக்கு பிள்ளைகளும்
பெற்றுத் தருகிறார்
வறுமையிலிருந்து சொற்களை உருவி
மறைகளை உருவாக்கினர்

குப்பைத் தொட்டிக்கருகில்
ஈக்களுக்கு கொடுத்தது போக
தானும் உண்கிறார்
தனக்கு மட்டும் விசுவாசமாய் இருக்கும்
நம்மைப் போல் அல்லாத
வேறொருவர்

இப்போது புனித மறையில்
ஒரு புதிய குற்றம்

 (இம்மாத புதிய கோடங்கி இதழில் வெளிவந்துள்ளது)

மரணிக்காத ஒரு சொல்லைத் தேடி….




சொல்லை விதைப்பதென்பது மரணத்தை அறியச்செய்யாமல் இருப்பதாகும்
மரணத்திடமிருந்து தப்பிக்கவே நான் எழுதுகிறேன்
மரணம் பற்றிய பயத்திலிருந்து என் கவனத்தை திசைதிருப்பவல்லது மரணிக்காத ஒரு சொல்
அச்சொல்லை என் நாவிலிருந்து நான் உச்சரிக்கும் முன்போ அல்லது நடுங்கும் என் விரல்கள் கொண்டு நான் எழுதிவிடும் முன்போ
எவரோ ஒருவர் மரணிக்கிறார்
மரணித்த அவரது உடல் நிச்சயமாக மனித உடலே.
அவரிடமும் ஒரு சொல் இருந்தது
சோற்றுப்பானை கவிழ்த்து வைக்கப்பட்ட இரவன்று அவர் அதை விழுங்கிவிட்டார்
அவர் விழுங்கிய அச்சொல்லின் ஒலி மட்டும் உள்ளது என்னிடம்
இரவு வேளைகளில் சோற்றுப் பானையை உருட்டிச் செல்கிறது அவ்வொலி
கண்விழித்து காணும் வேளையில் வீடெங்கும் பச்சை குத்தப்பட்ட உடல்கள்
இருக்கும் அவ்வொலியை ஒவ்வொரு உடலிலும் திணித்துப் பார்த்தேன் 
உயிர்பெறவில்லை எவ்வுடலும்
உயிற்பிக்கும் ஒரு சொல்லை தேடிக்கொண்டிருக்கிறேன்
சொற்கள் கொல்லும் உடல்களை
சொற்கள் மீட்டுத்தருவதில்லை
தருவதேயில்லை

(இம்மாத புதிய கோடங்கி இதழில் வெளிவந்துள்ளது)

Jul 10, 2012

பழஞ்சொல், அல்லது உதிரபலி, அல்லது பழங்குடி அல்லது பிணங்களின் வெள்ளை அறிக்கை, அல்லது உங்களது சாவுப் பத்திரம், இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமேயில்லை.....




கோமான்களே
கனவான்களே
கைவிடப்பட்ட
எம் மக்களின்
கனவுகளை தோட்டாக்களாக்கும் பேராற்றலில் திளைத்தவர்கள் 
நினைவூட்டத் தவறுவதேயில்லை

எங்கள் மூத்திரம் மரங்களின் வேர்களில் கலந்திருந்தது
பூக்களில் நாற்றம் வீசியதில்லை
மணக்கும் அப்பூக்களை கொன்றறுத்துச் சூடியதில்லை
பசியென்ற சொல் சதையானபிறகே
தோளிலேறும் வில்
எளிய வேட்டை

இப்படியாகத்தான்..........
சில
காலம் முன்பு வரை

இப்போது
நாங்கள் புதிய வாடைகளை நுகர்கிறோம்
உடல்களில் சாம்பல் நிறம் தேமலெனப் பரவுகிறது
நாசி கந்தக வாசத்தில் கருகி எரிகிறது
தொப்புள் துவள்கிறது
எம் வியர்வையில் வாசம் இல்லை

அடர்த்தியான வனங்களின் ஊடே
நிர்வாணமாய் இருந்த பாறைகள்
பிணங்களை உடுத்தத் துவங்கி வெகு காலமாயிற்று
எங்கள் மண் நிறமிழந்து இருக்கிறது
சிதறி விழும் நிழல்கள் சிவப்பைக் கக்குகின்றது

பிள்ளைகள்
மணல்களை, பாறைகளை, மரங்களை
மற்றும்
இதுவரை கேள்விப்பட்டிராத
மரணத்தின் விழிகளை
வரைந்து பார்த்து மகிழ்கின்றனர்
அதில்
அழித்தொழிப்பின் இளிநகை செங்கோடுகளாக நெளிகிறது

சொல்லியிருக்கிறோம்
எங்கள் சிறார்களுக்கு
இயற்கையின் பிதாமகர்கள்...

(அப்படித்தான் எக்கணமும் உங்களை எங்கள் முன் உச்சரித்து, அனுபவித்து, எங்கள் உடல் பதறுமளவுக்குச் சொல்வீர்கள். முட்டாள்களே... இவ்வார்த்தைகளை நீங்கள் எமக்கெதிராக உச்சரிக்கையில் எமது பற்கள் இறுகி உதிர்வதை எப்போதும் கண்டதில்லை நீங்கள். )

மாசற்ற ரப்பர் பொம்மைகளை அனுப்பி வைப்பார்களென்று
உறுதி அளித்திருக்கிறோம்

எங்கள் உடல் சூட்டின் உரிமைகள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது

ஒளிக்கற்றைகள் பேராசைமிக்க விழிகளைக் கொண்டு
பதுங்கு குழிகளுக்குள்  இருக்கும்
சிறார்களின்
புன்னகைகளைப் பிடுங்கிச் செல்கிறது
அவை
எம் குடியினருக்கான அருங்காட்சியகத்திற்காக சேர்க்கப்பட்டுவருவதாக 
அரசின் சமாதானத் தூதுவர் புன்னகையுடன்
எம் சிறுமிகளின் இளமுலைகளை கண்டுணர்ந்து
சொல்லிச் செல்கிறார்

தானியங்கிகள் கூட
இரும்புக்குறிகளை ஈணித்தள்ளுகிறது
எம்
பெண் மக்களைக் காணும் பொழுது
திக்கம் தனது கொடிய சங்கை ஊதிப் பிளிறுகிறது
வனம் தனது தூக்கத்தை இழக்கிறது
போர் தொடங்குகிறது
சதை, நிணம், உங்களது அரிய பார்வையில்
ஊளையாகி சீழ் வீசும் எமது மண் மிதக்கும் கைப்பிடி இதயம்
வழியும் குருதி
கைதூக்கிய சொற்கள்
அனைத்தும் களைத்து விழுகிறது

உடல்களுக்கு  தாக்குதல் ஓரிருமுறை
யோனிகளின் சிதைவு எண்ணிக்கைக்குள் அடங்குவதில்லை

(எப்பொழுதும் பேரழிவுக்கு முன்னும் பின்னும் யோனிகள் கருகி எரிவது ஏனென்று தெரியவில்லை. கற்பழிப்புக்கு முன்னும் பின்னும் அன்னையின் முகமும் தெரிவதில்லை. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் ஆண்களே)

உங்களது வரைபடத்தில் சுழல்கிறது புவி
உங்களின் கரங்களுக்கு
சிலுவைகளில் இடமில்லை

ஆதிக்கம் அவ்வாறே என்பதற்கு எங்களிடம்
பிணத்தை
பிணச்சூட்டை
கருகிய மரத்தை
கந்தக நிலத்தை

இப்படியாக....
கிழிக்கப்பட்ட
நைய்யப்பட்ட
குருதியோடிய

இன்னும்......
துப்பாக்கிகள் நுழைக்கப்பட்ட
பார்த்து மகிழ்ந்த
வெந்து தணிந்த
சிதைந்த
சிறிய
பெரிய
முதிர்ந்த
விழிகள்
கரங்கள்
சதைகள்

மற்றும் இறுதியின் இறுதியாக
எல்லாச் சிதைவுகளுக்கும் சாட்சியாக இருக்கும்
மரத்த யோனிகளைத் தவிர
யெது வுமில்லை
எங்களுக்கு

எதுவுமில்லை
எதுவுமே........................யில்லை.

கற்களையெரித்து சாம்பலாக்கும் ஆற்றலை
மின் தகனங்கள் கொண்டிருக்கவில்லை

துரதிருஷ்டம்
சாபத்திற்கு உண்டந்த பலம்

தங்களது மேன்மை பொருந்திய
இருதய அளவிலும் சிறிதாய்ப் போனது
எம்மக்கள் வயிறு

குடல்கள் தின்னத் துவங்கிய எங்கள் வயிற்றின் தசை நார்களில் 
வெளிப்படுகிறது உறைந்துபோன
எங்கள் கவுகள்
கண்ணீர்
இழந்த எமது
இளமை

வரலாற்றின் பக்கங்கள்
நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது

இயற்கை எல்லாவற்றையும்
எப்பொழுதும்
சகித்துக்கொள்வதில்லை
அது
கணிக்கும்
கண்காணிக்கும்
அழிவின் தும்மலை அறிவித்து
வாரிக்குடிக்கும்

எம்மக்களின் கையில் திணிக்கப்பட்ட
உங்களது
ரப்பர் பொம்மைகளும்
வாசலில் சிரிக்கும்
சுத்தமான நறுமணம் கமழும் உங்களின் பிணங்களின் இளித்த 
புன்னகை கண்டு
நிறையட்டும்
உங்கள் வயிறு
இயற்கையைச் செரிக்க
இம்மண்ணில் பெருவயிறு
எவருக்கும்
இல்லை
இல்லை
இல்லை


இனி இடம்பெயர
யெதுவுமே
இப்படி எதுவுமே
இனி
எப்பொழுதுமே
எதுவுமே
இருக்கப்போவதில்லை.


(குறளி இதழில் வெளிவந்துள்ள கவிதை)