May 2, 2020

வசுமித்ரவின் அடுத்த நூல் அம்பேத்கரியப் பார்ப்பனியம்



எதிர்வினைகள் பற்றிய வரலாற்று பின்னணி தெரியாதவர்களுக்கான குட்டிக் கதை:
சமூகம்/சமூக பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளும் கோட்பாட்டுருவாக்கமும் மனித அறிவு/சமூக/அரசியல்-பொருளாதார வரலாற்று வளர்ச்சியின் ஓர் அங்கம். இதனை தத்துவம் என்று எளிமையாக புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு தத்துவம் உருவாவதும், அதுபற்றிய திறனாய்வுகள்/விமர்சனங்கள் நடப்பதும் ஓர் அறிவுசார் செயல்பாடு. இது வெறும் மேதமையை பறைசாற்றுவதற்காக அல்ல, நாம் தீர்க்க நினைக்கும் பிரச்சினைகளுக்கு உரிய பதில்களை/தீர்வுகளை கண்டடைவதற்கான ஒரு தொடர்ச்சியான பயணம்.
அந்த வகையில் மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள்/செயல்திட்டங்கள் பற்றிய விமர்சனம் அதற்கு எதிர்வினைகள் என்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு.
புத்தரா கார்ல் மார்க்ஸா என்று அம்பேத்கர் தொடங்கிய விவாதம் மற்றும் அம்பேத்கரின் பெயரைச் சொல்லிக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அடையாள அரசியலுக்கு (அதுவும் ஒருவகையான பின்நோக்கிய சாதியவாதம்) எதிராக இந்திய அளவில் விவாதங்கள் நடக்கிறது. (உலக அளவில் அடையாள அரசியலுக்கெதிரான போர் நடந்து கொண்டிருக்கிறது) இதில், ரங்கநாயகம்மா அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றி குறிப்பிடத்தக்க திறனாய்வை முன் வைத்தவர்.
மார்க்சியம் கற்று சில வேலைகளில் ஈடுபட்டபோது நான் எதிர்கொண்ட சம்பவங்கள் சாதிய அடையாள (இடது) அரசியலின் ஆபத்தை உணரச் செய்தது. அவ்வேளை ஒரு தோழர் மூலம் ரங்கநாயகம்மாவின் நூல் என் கைக்கு வந்தது. படித்தபோது அது மொழிபெயர்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். அதை தமிழில் மொழிபெயர்த்தேன் ஜூன் 2016 இல் முதல் பதிப்பு வெளிவந்து அதன் பிறகு இரண்டு பதிப்புகளைக் கண்டது.
முதிர்ச்சியான சமூகங்களில் தத்துவார்த்தப் போர்/உரையாடல் (Discourse) என்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் (இணைய சகாபதத்தில்) அது மலிந்து கொண்டே வருகிறது! வாய்ப்பே இல்லை!
சிலரின் சாதிய பிழைப்புவாதம் அந்த நூலை விமர்சன நூலாக காணும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்கவில்லை. எனவே அவதூறுகளை அள்ளி வீசினார்கள். கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதவர்கள் இன்றளவும் கூட்டங்கள் நடத்திக்கொண்டு எங்களின் சாதியை மட்டுமே முன்வைத்து வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வசைகளை தொகுத்து எதிர்வினை என்னும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டு வசைபாடி புளங்காகிதம் அடைந்தனர். என் மதிப்பிற்குரிய நண்பரும், இயக்குனரும் அவர்களின் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியிருந்தார்! (சமீபத்தில் தான்!).
சில ‘இலக்கியவியாதிகள்’ வரட்டுவாதம், மொண்ணை மார்க்சியம் என்று மீண்டும் ஏதோ ஒரு சொல்லாடல் மூலம் கடக்கின்றனரே ஒழிய சாதி என்றால் என்ன? சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம் உள்ள தீர்வு என்ன என்பதற்கு பதில் அளிக்கவியலாதவர்கள். (தெரிந்தால் சொல்லிவிட மாட்டார்களா!).
வேடிக்கை என்னவெனில், தொடர்ச்சியான உரையாடல் என்னும் அடிப்படையில் நாங்கள் (நானும் வசுவும்) அதற்கடுத்து இரண்டு நூல்களைக் கொண்டுவந்தோம். சாதியப் பிரச்சினயும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூல் சாதியப் பிரச்சினை பற்றிய முக்கியமானதொரு ஆய்வை முழுமையாக முன் வைக்கும் நூல் (மொழிபெயர்ப்பு), அதனோடு சில கட்டுரைகளும், என் பதிலுரைகளும் உள்ளது. அதுகுறித்து இன்றுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. (ஏனெனில் தலைப்பில் அம்பேத்கர் பெயர் இல்லை)
அம்பேத்கரின் புத்தரும் தம்மமும் நூலை முன் வைத்து வசுமித்ர - அம்பேத்கரும் அவரது தம்மமும் என்னும் நூலை எழுதினார். அம்பேத்கர் முன்வைக்கும் புத்தர் மற்றும் பௌத்தம் பற்றிய திறனாய்வு நூல் அது. மேலும், பகுத்தறிவுக்கு உட்படுத்தாமல் அதனை உயர்த்திப் பிடிக்கும் தலித்தியவாதிகள்/கம்யூனிஸ்டுகள்/பின்நவீனத்துவவாதிகள் சிலரையும் கேள்விக்கு உட்படுத்தும் நூல் அது. நூலின் தலைப்பை வைத்து மீண்டும் அவதூறுகள்! நூலைப் படிக்காதீர்கள் என்று ‘காமெடி’ பிரச்சாரம் செய்தனர்.
இது மட்டுமல்லாது, ‘பெரிய இலக்கியவாதி’ என்று அறியப்படும் ஒருவர் (தமிழ்நாட்டு குடிமகன் அல்ல!) தன்னுடைய மார்க்சிய/கம்யூனிஸ்ட் வெறுப்பை தீர்த்துக்கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரங்கநாயகம்மாவையும் (என்னையும்) பகடிகள் செய்து பஞ்சாயத்து செய்வார். மார்க்சியம் என்றால் என்னவென்று கேட்டுப்பாருங்கள்! விளங்கிவிடும்!
ஒழுங்கு, அமைப்பு இதெற்கெல்லாம் கட்டுப்படவியலாத அனார்கிச அரசியலை/சீர்கேட்டை பின்நவீனத்துவத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்நபர் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு என்னவென்றால் – கட்டவிழ்ப்பு, அனைத்தையும் கட்டவிழ்த்து குலைத்துப் போட்டு, எவ்வித ஒழுங்குமின்றி அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வது! அதாவது கட்டற்ற ’நுகர்வு’ வாழ்க்கை வாழ்வது! இதில் அம்பேத்கர் மீது மட்டும் இவருக்கு ஏன் கரிசனம்? ஏனென்றால் இவருக்கு துணை நிற்கும் பதிப்பகத்தாரின் பிழைப்புவாதம் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ‘கூவுவதற்கு’ ஏதாவது தேவையல்லவா!
பொதுவுடைமை என்பது சர்வாதிகாரம் என்பார்கள்! எது சர்வாதிகாரம் என்பதற்கு போதுமான விளக்கங்கள் உள்ளன! அதையெல்லாம் படிக்கவும் மாட்டார்கள். நானும் மார்க்சிஸ்ட் தான் தல என்பார்கள்! ஆனால் எல்லா நேரமும் கம்யூனிச வெறுப்பையே உமிழ்ந்துகொண்டிருப்பார்கள்!
இதை அனைவரும் காணவோ, அறியவோ மாட்டார்கள்! அத்தகையோரின் வெறுப்பரசியலுக்கு தொடர்ந்து நானும் வசுவும் (எங்களுக்கு துணை நிற்கும் சில தோழர்களும்) எதிர்வினைகளை ஆறிக்கொண்டே இருக்கிறோம். அதன் தொடர்ச்சியான பதிவே இது.
“சங்கிகள் கை மேலோங்கி இருக்கும் இந்த நேரத்தில்… அம்பேத்கருக்கு செருப்பு மாலை அணிவித்து அவர்கள் அராஜகம் செய்யும் நேரத்தில் இது தேவையா?” என்று யாரேனும் வருவீர்கள் என்றால், வரலாற்றுப் பக்கங்களை புரட்டுங்கள். சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி இன்றுவரை உள்நாட்டு நிலவுடைமையாளர்கள் (சாதி எதிர்ப்பும் சேர்த்துதானே!), முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும்போது, பிரிவினைவாதம் செய்தவர்கள், செய்பவர்கள் யார் என்பது விளங்கும்.
அந்த நேரத்தில், இந்த நேரத்தில் ஒரு கூட்டம் மார்க்சியத்தில் எதுவுமில்லை என்று சொல்வதோடு கம்யூனிஸ்டுகளின் பங்களிப்புகளை/தியாகங்களை எல்லாம் போகிற போக்கில் அவதூறு செய்துகொண்டு, (அதேவேளை அவர்களை பயன்படுத்திக்கொண்டும்) தம் பிழைப்புவாத அடையாள அரசியலை பரப்பிக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் போக்கு இருக்கும்வரை இத்தகைய எதிர்வினைகளை தடுக்கவியலாது!
நியாயமாக நீங்கள் அவர்களைப் பார்த்து ”ஏன் இப்படி பிரிவினைவாதத்தில் ஈடுபடுகிறீர்கள்? பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை ஒரு பொது எதிரியை நோக்கி அணிதிரட்ட ஏன் முட்டுக்கட்டை வகிக்கிறீர்கள்” என்று கேள்வி கேட்கலாம்!
****
இனி வசுவின் பதிவிலிருந்து Vasu Mithra 

// அம்பேத்கரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்கு தள்ளியதும். அவர் குறித்து ஆக்கப்பூர்வமான கட்டுரைகளோ புத்தகங்களோ தமிழில் வராததற்குக் காரணம், அம்பேத்கர் கூறியதனைத்தும் சரி என்பதாலோ, அம்பேத்கரின் ஆய்வுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்றோ, தத்துவ ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றா அர்த்தம் அல்ல. மாறாக அம்பேத்கரை திறனாய்வு செய்தால், செய்தவரின் சாதி பார்க்கப்படும். எந்த யோசனையும் இல்லாமல் அவர்மீது சாதிய வன்மத்தைக் கக்க முடியும். இதன் விளைவாக அம்பேத்கர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவராக உருமாற்றமடைந்தார். விமர்சிக்க நினைத்தவர்களும் நமக்கு எதுக்கு வம்பு, நாமும் ஜெய்பீம் சொல்லி வைப்போம் என்று அம்பேத்கரியர்களான சோகக் கதை இதுதான்.
உதாரணத்திற்கு, இந்தியா தனக்கான சட்டத்தை எழுத வக்கற்றுப் போயிருந்த காலத்தில், அம்பேத்கர் தனது அரசியல் அறிவை முன்வைத்தார், சட்டங்களை தனியாக எழுதினார், அவர் இல்லையென்றால் அரசியல் சாசனமே இல்லை என்று அவருக்குப் புழகாராம் சூட்டப்படும், ஆனால், நான் கூலிக்கு எழுதுபவனாக இருந்தேன் என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே என்று கேள்விகளை முன்வைத்தால், உடனே அந்த சட்டத்தை எரிப்பேன் என அம்பேத்கரே சொல்லிவிட்டாரே என்று குரல் வரும். நாம் இப்பொழுது நடுவில் குழம்பி நிற்க வேண்டி வரும். அரசியல் சட்ட நிர்ணயகர்த்தா அனைத்தும் தெரிந்தவர் என்ற பாத்திரத்தை ஏற்பதா, இல்லை சட்டத்தை எரிப்பேன் என்ற பாத்திரத்தை ஏற்பதா.?//

மேலும் வாசிக்க: https://www.facebook.com/makalneya/posts/4061604773857497 

No comments:

Post a Comment