May 8, 2020

கருத்துச் சுதந்திரமும் எதிர்வினையும் எப்படி இருக்க வேண்டும்


விமர்சனத்திற்கு Vasu Mithra எந்த மொழியை கையண்டாரோ மறுப்பதற்கும் அதே மொழியை கையாள்வது தான் சரியானது. ஜனநாயகப்பூர்வமானது.
அவ்வாறில்லாமல் சாதி இந்து என்பதும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவதும், தனிப்பட்ட முறையில் மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
விமர்சனம் எவ்வளவு மோசமாகவும் இருக்கட்டும், அதற்காக ஒரு தோழர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிய முடியுமா? ஆதிக்க சாதிக்காரன், சாதி இந்து என்று பேச முடியுமா? அம்பேத்கரை இழிவுபடுத்துவிட்டார் என்கிற காரணத்தை முன்னிறுத்தி இத்தகைய மோசமானதொரு நடவடிக்கையை எப்படி சில தோழர்களால் ஆதரிக்க முடிகிறது? அல்லது கண்டிக்காமல் மவுனம் காக்க முடிகிறது?
அம்பேத்கரை விமர்சனமாக அணுகுவதில் பொதுவில் பிரச்சினையும், குறைபாடும் இருக்கிறது. உள்ளடக்க ரீதியில் விமர்சனம் எவ்வளவு சரியாக இருந்தாலும் வடிவம் என்கிற வகையில் அம்பேத்கரை இணக்கமாவும், நட்பு சக்தியாகவும் கையாள்வதில் பிரச்சினை இருக்கிறது.
தான் ஏற்றுக்கொண்டவற்றுக்கு அம்பேத்கர் இறுதி வரை நேர்மையாக இருந்தார். தனது தீர்வுகள் ஒவ்வொன்றும் தோல்வியடையும் போது அடுத்த தீர்வுக்கு சென்றார். அவற்றை தோல்வி என்றும் ஏற்றுக்கொண்டார். வரலாறு அவருக்கு அளித்த இடம் என்ன, அந்த இடத்தின் வரம்பு என்ன, அந்த வரம்பிற்குள் நின்று என்ன செய்ய முடியும், அதை நேர்மையாக செய்திருக்கிறாரா என்று பரிசீலிப்பது தான் சரியானது.
அதே நேரத்தில் விமர்சனம் என்று வந்தாலே சாதிவெறியன், சாதி இந்து என்று முத்திரை குத்துவதும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவதும் கடுமையான கண்டனத்திற்குரியது.
இத்தகைய பிரச்சினைகளில் ஆதிக்க சாதி முத்திரையுடன் பாய்ந்து வரும் இவர்கள் எல்லோரும் யார்? இவர்களுக்கும் தலித் மக்களுக்கும் என்ன உறவு?
இவர்கள் தங்களை தலித் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக கருதிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களுக்கும் தலித் மக்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதே போல் தான் அம்பேத்கருடனான இவர்களின் உறவும்.
அம்பேத்கரின் நோக்கம் வேறு இவர்களின் நோக்கம் வேறு. தன் வாழ்வை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அம்பேத்கருடைய வாழ்வின் பத்து நிமிடங்கள் கூட இவர்களின் மொத்த வாழ்விற்கும் சமமாகாது.
ஒடுக்கப்பட்ட கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வன்கொடுமைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களின் வாழ்நிலைக்கும் இவர்களின் வாழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வர்க்க அடுக்கின் பல்வேறு நிலைகளில் ஒரு உயர்தர வாழ்வை அனுபவிக்கும் இவர்கள் வேறு, அதே வர்க்க அடுக்கின் அடித்தட்டில் மிக மோசமான வாழ்வை கொடுமையாக கழிக்கும் ஆகப்பெரும்பாண்மை தலித் மக்கள் வேறு. அவர்கள் உழைக்கும் மக்கள் இவர்கள் மேட்டுக்குடிகள்.
அம்பேத்கரின் பெயராலும், சாதியின் பெயராலும் இவர்கள் செய்யும் தவறுகளின் விளைவுகள் அனைத்தும் தலித் மக்களின் தலையில் தான் விழுகிறது. அதன் விளைவுகளை அவர்கள் தான் எதிர்கொள்கிறார்கள்.
படித்து முன்னேறி சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு சென்ற பிறகு தனது மக்களின் விடுதலைக்கு உதவுவார்கள் என்று யாரை நம்பி தான் ஏமாந்ததாக அம்பேத்கர் கூறினாரே அவர்கள் தான் இவர்கள்.
இப்போது இவர்கள் செய்திருக்கும் திருப்பணியும் அத்தகையது தான்.
சட்ட வழியில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தான் தலித் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம். அதையும் எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் துடிக்கிறார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்ற இவர்கள் உதவுகிறார்கள்.
ஒருவேளை இந்த வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் விளைவுகள் எப்படியிருக்கும்? யாருக்கு எதிராக இருக்கும். நிச்சயம் வசுவுக்கு எதிராக இருக்காது. தலித் மக்களுக்கு எதிராகவும், சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும், சமூகத்தில் அம்பேத்கர் பற்றிய எதிர்மறை கருத்துக்களை உருவாக்கவும் தான் பயன்படும்.
எனவே அம்பேத்கரை விமர்சிக்கும் தோழர்கள், அவரை நட்பு முரணாக அணுகி நேர்மறை விமர்சனங்களை வையுங்கள்.
அம்பேத்கர் பற்றி பேசினால் சாதி இந்து, சாதி வெறியன் என்கிற முத்திரைகளுடன் பாய்ந்து வரும், எவ்வகையிலும் தலித் மக்களோடு தொடர்பில்லாத, அம்பேத்கரின் நோக்கங்களுக்கு நேர் எதிராக நிற்கும் தலித் மேட்டுக்குடிகளை பொருட்படுத்தாமல் புறக்கணியுங்கள்.
குறிப்பாக இப்பிரச்சினையில் தோழர்கள் என்றும், அறிவுஜீவிகள் என்றும் கூறிக்கொள்பவர்கள், தனது விமர்சனத்தை எழுத்தின் மூலம் (அந்த வடிவத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை) வைத்த வசுமித்ரவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதை கண்டிக்க முன்வர வேண்டும்.
வழக்கு தொடுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்க எதிர்வினை அல்ல. எனினும் சில தோழர்கள் அதை ஆதரிக்கிறார்கள். அத்தகைய தோழர்கள், வசு கையாண்ட அதே மொழியை அவருக்கு பதிலாகத் தரட்டும், ஆனால் எந்த வகையிலும் இத்தகைய எதிர்வினைகளை ஆதரிக்கக்கூடாது, அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனவே வசுவின் அணுகுமுறை தவறு என்றால் அதை விமர்சியுங்கள், அத்துடன் இவ்வாறு கருத்து சுதந்திரத்திற்கு சவால்விட்டு அச்சுறுத்தி மிரட்டிப்பார்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத்தையும் பதிவு செய்யுங்கள்.
- பாண்டியன்.


No comments:

Post a Comment