Apr 27, 2020

இலாபம் என்பதே மாபெரும் பொய்!



பல்வேறு காரணங்களால் இந்நூலை வெளிக்கொண்டு வருவதில் தாமதம். தற்போது ஊரடங்கு! இருப்பினும், முதலாளித்துவத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சுமையை தொழிலாளர்கள் மீதும், ஏழை மக்கள் மீதும் சுமத்த முன்வைக்கப்படும் முதலாளித்துவ இலாப மைய்யவாதத்தை ஒட்டி அவசியமான சிறு பகுதியை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
53. ‘மூலதனம்’ என்பது மாபெரும் பொய்! – ரங்கநாயகம்மா, குழந்தைகளுக்கான பொருளாதாரக் கல்வி: மார்க்சின் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள்.
54. இலாபம் யாருக்கு: மூலதனத்திற்கா முதலாளிக்கா?
மூலதனமே இலாபத்தை ஈட்டுகிறது என்பதுபோல் “மூலதனம் என்று ஒன்றை முதலீடு செய்தால், அது இலாபம் ஈட்ட வேண்டும்” என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் சொல்கின்றனர். ஆனால், உண்மையில், மூலதனம் இலாபத்தைப் பெறுவதில்லை, முதலாளிதான் இலாபத்தைப் பெறுகிறார்!
‘மூலதனம் என்றால் என்ன? உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பாளர்களின் பிழைப்பாதாரப் பொருட்கள். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் மூலதனம்.
ஒரு பொருளை உற்பத்தி செய்ய இரண்டு பொருட்கள் செலவாகிறது: (1) சிறிது உற்பத்திச் சாதனங்கள், (2) சிறிது புதிய உழைப்பு. யார் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் மீண்டும் அதே உழைப்பைச் செலுத்த வேண்டும், இல்லையேல் அந்தப் பொருளை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாது. யார் அந்தப் பொருட்களை வாங்குகிறார்களோ, அவர்கள் அதன் மொத்த மதிப்பையும் (மொத்த உழைப்பையும்) விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்பொழுதுதான், அதே மதிப்புடன் அந்தப் பொருளை மீண்டும் உற்பத்தி செய்ய முடியும்.
ஒரு பொருள் முதலாளியால் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால், அதன் மொத்த மதிப்பும் முதலாளிக்கே செல்கிறது. அந்த மதிப்பின் ஒரு பகுதி இலாபம். அது என்ன இலாபம்? இலாபம் என்ற ஒன்றை அவர் எடுக்கவில்லை என்றால், அந்தப் பொருளை மீண்டும் அவர் உற்பத்தி செய்ய முடியாதா?
ஒரு டன் எடையுள்ள துணியை உற்பத்தி செய்ய, 10 மதிப்பிலான ஒரு கத்தரிக்கோல் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, தேய்மானம் அடைந்து விடுகிறது.(கத்தரிக்கோல் மட்டுமல்ல, இதர கருவிகளும் பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு நாம் கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டோம். மற்ற கருவிகளுக்கும் இது பொருந்தும்.)கத்தரிக்கோலின் மதிப்பு 10. அது முழுவதும் தேய்ந்து விட்டது. அந்தக் கத்தரிக்கோலின் மதிப்பான 10 மட்டுமே சரக்கில் சேரும். அந்தச் சரக்கு விற்பனை ஆன பின்னர், கத்திரிக்கோலைப் பொறுத்தவரை, அதன் மதிப்பான 10 அப்படியே திரும்பி வந்துவிடும்.
கத்தரிக்கோலின் மதிப்பில் கூடுதலாக ஏதுமில்லை என்பதால், சரக்கு விற்றபின் கூடுதலாக ஏதும் வராது. 10 மதிப்பிலான மதிப்பைக் கொண்ட கத்தரிக்கோலைப் பயன்படுத்தி செய்த ஒரு பொருளில், அதற்கும் கூடுதலான மதிப்பு கிடைத்தால், அது கத்தரிக்கோலிலிருந்து வந்ததாகக் கருத முடியாது. ஒரு புதிய கத்தரிக்கோலை வாங்க, அந்தக் கூடுதல் மதிப்பு தேவையில்லை. பழைய மதிப்பிலேயே அதை மறு உற்பத்தி செய்ய முடியும். அதாவது, ஒரு புதிய கத்தரிக்கோலை செய்ய, பழைய கத்தரிக்கோலின் மதிப்பு அப்படியே திரும்பி வந்தால் போதும். ஒரு புதிய கத்தரிக்கோலில், பழையதைக் காட்டிலும் கூடுதல் மதிப்பு சேர்வதில்லை.
ஒரு சரக்கில் சேர்த்திருக்கும் கூடுதல் மதிப்பை இலாபம் என்று எடுத்துக் கொண்டால், கத்தரிக்கோலுக்கு அந்த இலாபம் தேவையில்லை. இலாபம் என்பது அதனுள் பொதிந்தில்லை. இலாபத்தை அது தன் தேவைக்காகப் பயன்படுத்துவதுமில்லை.
எந்தவொரு உற்பத்தி சாதனங்களுக்கும் இது பொருந்தும். அதன் உண்மை மதிப்பைக் காட்டிலும் கூடுதலான மதிப்பு உற்பத்தி சாதனங்களில் சேரவில்லை என்றாலும், அதை மறு உற்பத்தி செய்யப் பிரச்சினை ஏதும் இருக்கப் போவதில்லை. ஆக, ஒரு சரக்கிலிருந்து வரும் இலாபம் என்பது உற்பத்திச் சாதனங்களின் பொருட்டு ஈட்டப்படுவதில்லை. உற்பத்தி சாதனங்களுக்கு இலாபம் தேவையில்லை.
மூலதனம் 100இல் 80 உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு என்றும் 20 தொழிலாளர்களின் பராமரிப்புக்கான மதிப்பு (கூலி) என்றும் வைத்துக் கொள்வோம்.
ஒரு சரக்கு உற்பத்தி ஆன பின்னர், முதலீடு செய்த மூலதனம் 100ஐக் காட்டிலும் கூடுதலாக 20 கிடைக்கிறது என்றால், அந்தக் கூடுதல் மதிப்பானது உற்பத்தி சாதனங்களாலோ அல்லது தொழிலாளர்களின் பராமரிப்பு மதிப்பிலிருந்தோ கிடைக்கும் ஒன்றல்ல. உற்பத்தி சாதனங்களை மீண்டும் வாங்க, அதற்காகக் கொடுத்த 80 மதிப்பு கிடைத்தாலே போதும். அதேபோல் தொழிலாளிக்குக் கொடுத்த பராமரிப்புப் பொருட்களைத் திரும்பப் பெற, அதே 20 மதிப்பு போதும். மூலதனத்தின் எந்த அம்சத்திற்கும் அந்தக் கூடுதல் மதிப்பான 20 தேவை இல்லை. போட்ட முதலீடான 100ஐ மீண்டும் எடுத்துவிட முடியும். அதற்குக் கூடுதல் மதிப்பு ஏதும் தேவையில்லை.
இவ்வாறாக, மூலதனம் கொண்டு ஈட்டப்பட்ட இலாபம் என்பது மூலதனத்திற்கானது அல்ல. ஆனால், “மூலதனம் போட்டால் இலாபம் வேண்டாமா?” என்கின்றனர். ஆனால், மூலதனத்திற்கு இலாபம் தேவையில்லை.

அப்படியென்றால், இலாபம் என்பது யாருடைய தேவை?அது முதலாளியின் தேவை! எதற்காக அவருக்கு இலாபம் தேவை? உழைக்காமல் வாழ்வதற்கு.
*******
முதலாளிகளின் மூளைத் திறன் தான் தொழில் வளர்ச்சிக்கு காரணம் என்போர், முதலாளியின் மூளையை கழட்டி ஓர் இயந்திரத்தின் அருகில் வைக்கவும், இயந்திரம் வேலை செய்கிறதா என்று பார்ப்போம். இது மாதிரி கேனைத்தனமான வாதத்திற்கெல்லாம் காலம் காலமாக பதில் சொல்லியாகிவிட்டது. இந்த நூல் முழுமையாக வெளிவரும் வரை இந்த ஊடகத்தில் விவாதிக்க இயலாது. இனி எல்லா பதில்களும் நூல்களின் வாயிலாக மட்டுமே. நன்றி, கொற்றவை.


No comments:

Post a Comment