May 7, 2020

சட்டவாதம் என்னும் அறியாமை


மார்க்சியம் பயின்றவர்களுக்கு ஆளும் வர்க்க இயந்திரங்கள், அடக்குமுறை கருவிகள் குறித்த புரிதல் இருப்பதால் தான் அவர்கள் அதை அகற்றி பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்கின்றனர். முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் குடியரசு எல்லாம் போலி என்று வரலாற்று ஆதாரங்களோடு வாதிடுகின்றனர்.
சட்டவாதம் பேசுவோர், அதை பாதுகாப்பு, புனிதம் என்று கருதுவோர்... குறிப்பாக எங்கள் தலைவர் இல்லையெனில் உங்களுக்கு இது கூட கிடைத்திருக்குமா என்று உணர்ச்சிபொங்க வஞ்சப்புகழ்ச்சியில் ஊசியேற்றுவோர் மார்க்சியத்தின் இத்தகைய பகுப்பாய்வைப் படிப்பதில்லை என்னும் காரணத்தால் தான் உணர்ச்சிப் பொங்கல் மட்டுமே வைக்க முடிகிறது! (படித்தாலும் அதிகார வேட்கை அதை ஏற்றுக்கொள்ள விடுவதில்லை)
“கம்யூனுடைய அனுபவம் சொற்பமாகவே இருந்ததென்றாலும், மார்க்ஸ் இந்த அனுபவத்தை பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் உன்னிப்பாய் பகுத்தாய்ந்தார். இந்நூலின் மிக முக்கிய வாசகங்களை மேற்கோளாய்த் தருகிறோம்:
நிரந்தர சேனை, போலீஸ், அதிகார வர்க்கம், சமயகுருமார் அமைப்பு, நீதிமன்றம் ஆகிய சர்வ வியாபகச் செயலுறுப்புகளைக் கொண்ட மத்தியத்துவ அரசு அதிகாரம்’ மத்திய காலத்தில் உதித்து, பத்தொனொன்பதாம் நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்தது.
மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையே வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியுற்றதைத் தொடர்ந்து, ’மேலும் மேலும் அரசு அதிகாரமானது உழைப்பை அடக்குவதற்கான பொது சக்தியின் தன்மையை வர்க்க ஆதிக்கத்திற்குரிய பொறியமைவின் தன்மையைப் பெற்றது. வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒவ்வொரு புரட்சியையும் அடுத்து, அரசு அதிகாரத்தின் அப்பட்டமான பலவந்தத் தன்மை மேலும் மேலும் கண்கூடாகப் புலப்ப்டுகிறது.’ 1848-49 ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பிற்பாடு அரசு அதிகாரம் ‘……. உழைப்புக்கு எதிரான மூலதனத்தின் தேசியப் போர்க் கருவி’ ஆகிவிட்டது. ....
“இந்த இயந்திரத்திற்குப் பதிலாய் ‘ஆளும் வர்க்கமாய்ப் பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைய வேண்டும்’ ’ஜனநாயகத்திற்கான போரில் வெற்றி பெற வேண்டும்’ என்பதே கம்யூனிஸ்ட் அறிக்கையில் தரப்படும் பதில். – லெனின், அரசும் புரட்சியும்.
இப்படிப்பட்ட சமூக விஞ்ஞானத்தைப் படிக்காமல் “Terms" மட்டுமே வைத்துக்கொண்டு தம்மையும் இடதுசாரி என்று முன்வைப்பது உணர்வுபூர்வமானதே ஒழிய தேவைப்படும் தர்க்கத்தையோ, புரிதலையோ அல்லது application knowledge ஐயோ அது வழங்கிட இயலாது. அதனால் தான் படி! படி! படி என வலியுறுத்த வேண்டியுள்ளது.
“கற்பி ஒன்று சேர் புரட்சி செய்” என்று அம்பேத்கரும் சொல்லும் போது எதையும் படிக்காமல் (ஆழமாக) சரியானதை கற்பிக்கவோ, சமூக-அரசியல்-பொருளாதார விடுதலைக்கான பாதையையோ காட்ட இயலாது என்பதும் அதில் பொதிந்துள்ளது.

No comments:

Post a Comment