May 19, 2020

சமூக மாற்றத்திற்கு அவசியம் வாசிப்பு

என் (எங்கள்) பதிவுகள், நூல்கள் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒரே பதில் தான்: மனிதர்களின் உயிரியல் பரிணாமம் போன்று மனிதரக்ள் சமூகமாக வாழத் தொடங்கி தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட ஏற்பாடுகள், அமைப்புகள், சிந்தனைகள், நிறுவனங்களைப் பற்றிய பரிணாம வளர்ச்சியை – அதாவது சமூகவியல் வரலாற்று வளர்ச்சியைப் பற்றி ஆய்வு மேற்கொள்வது (நூல்களைப் படிப்பது) ஒன்றே உங்களுக்கான விடைகளை வழங்க வல்லது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் தோன்றியது எப்படி என்பது தொடங்கி மனிதர்களின் நிலை மற்றும் சமூக வாழ்வும் பிரச்சினைகளும் குறித்து எண்ணற்ற அறிஞர்கள் ஆய்வு செய்தும், விளக்கியும் உள்ளனர். அதன் துணை கொண்டு சமூகத்தில் நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் அதனால் பெரும் பயனும் கண்டுள்ளது.

சமூகத்தின் பிரச்சினைகளைத் தனித் தனியாகக் கண்டு தற்காலிக தீர்வுகளை, சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு அப்பால் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கும் அடித்தளம் எது என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து சிறப்பானதொரு தீர்வையும் முன்வைத்தவர்கள் கார்ல் மார்க்ஸ் – எங்கல்ஸ்.

மனிதர்கள் பேராசைப் பிடித்தவர்கள், சுயநலம் மிக்கவர்கள், அதிகார ஆசைப் பிடித்தவர்கள், குறிப்பிட்ட மதம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் அல்லது கெட்டவர்களே காரணம் என்று எல்லாம் எண்ணம் சார்ந்தே வியாக்கியானப்படுத்தப்பட்ட கருத்துமுதல்வாத ஆய்வுமுறை / சிந்தனைகளுக்கு அப்பால் அத்தகைய பேராசைகளும், ஆதிக்க மனநிலையும் எப்படி உருவாகிறது என்று விளக்குவது மார்க்சியம். மனிதர்கள் தங்கள் வாழ்வாதார நிலைமைகளுக்காக கண்டுபிடிக்கும் / உருவாக்கிக் கொள்ளும் / ஒழுங்கமைக்கும் பொருளாயத (பொருளாதாரம் அல்ல) நடவடிக்கைகளோடு அது தொடர்புடையது என்ற தெளிவு பெறுகையில் தனிநபர்களை, ஆதிக்க நிறுவனங்களை கண்டிக்கும், எதிர்க்கும் அதேவேளை அதை தகர்த்தெறிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் விளங்கும்.

பல்வேறு முற்போக்கு தத்துவங்களோடு மார்க்சியத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என்பதையே என் பதிலாக வழங்க முடிகிறது. சில பிரபல Terminologiesக்கு அப்பால் மார்க்சியம் கற்றுக்கொள்வதோடு அதனை ஒவ்வொரு நிலையிலும் பொருத்திப்பார்த்து விவாதிப்பதும், தீர்வை நோக்கி பயணிப்பதும் அப்போது கைவரப்பெறும்.

மார்க்சிய நோக்கில் உள்ள சமூகவியல் ஆய்வுகளைப் படித்து விளக்குபவர்களின் பதில்கள் உங்களுக்கு உவப்பானதாக இல்லையெனில் படித்து தெளிவு பெருங்கள் / மாற்றை / தீர்வை நீங்கள் முன் வையுங்கள் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. அது உங்களுக்கு வருத்ததையும், கோபத்தையும் உண்டாக்குமெனில் அந்தப் பிரச்சினைக்கு என்னிடம் மருந்தில்லை!


No comments:

Post a Comment