பெண்கள் மயிர் வெட்டி தான் தங்கள் முற்போக்கு அறிவின் தெளிவை மெய்ப்பிக்க வேண்டுமெனில்.. ஆணுக்கு எதை வைத்து அவர் முற்போக்குவாதி, அனைத்திலிருந்தும் விடுபட்டவர் என்று அளப்பது?
ஆம்பிளை அடையாளம் தானே மீசை, தாடி? பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின் என எல்லாரும் வைத்திருந்தார்கள்... முகப்பு படம் கூட வைக்க துணிவில்லாதவர்கள் ஆண்களை பார்த்து இக்கேள்வியை கேட்பார்களா?
முற்போக்கு ஆண்களே மீசையை மழியுங்கள்.. தாடி மயிர் வைக்காதீர்கள்.. நீங்கள் முற்போக்குவாதி... அதிலும் புரட்சிகர ஒரிஜினல் கம்யூனிஸ்ட் முதலில் மயிரை நீக்குங்கள் உலகுக்கு உங்களின் ஆணாதிக்க அடையாள துறப்பை மெய்ப்பியுங்கள் என்று கூறுவார்களா?
கண்காணிப்பு அரசியல், தூய்மைவாதம், வரட்டு வாதம் இதெல்லாம் உங்களிடமிருந்து ஒழியாதா?
********
பெரியாரை படிக்கத் தொடங்கிய நாள் முதல் “பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும்” என்றும் “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” என்று பெரியார் கேட்கிறார் என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளேன். பின்னர் மார்க்சியம் கற்ற பின்னர் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதன் அவசியத்தை பெண் உடல், உடை, உறவு ஆகியவற்றை உள்ளடக்கி எழுதியும், பேசியும் வந்துள்ளேன். அதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தத்துவப் பிழை இருக்காது என்றே நம்புகிறேன்.
இது எதுவும் தெரியாமல் புதிதாக என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வருபவர்கள் அவ்வப்போது பல பட்டங்களை வழங்கிச் செல்வார்கள்.
பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபடுதல் என்பது ஆணைப் போல செய்தலோ அல்லது ஆண் வரையறுத்திருக்கும் முற்போக்கு அளவையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மெய்ப்பித்தலோ அல்ல. அது அவசியமும் இல்லை. ஒருவர் தம் உடலை தன் அடையாளமாக கருதுவதைவிட தன் அறிவை அடையாளமாக கருத வேண்டும் என்பதே அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கான பொருள்.
தன்னை அடுத்தவருக்காக அழகுபடுத்திக்கொள்ளுதல் என்பதிலிருந்து விடுபடுதல்; அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, அழகுநிலையங்களுக்கு சென்று அழகுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பது என்று சில கொள்கைகளை பின்பற்றலாம். ஆனால் ஆணாதிக்க முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) இதை முற்றிலும் தவிர்க்க முடியுமா? Grooming என்றொரு அளவை கொண்டே இங்கு வேலை கொடுக்கப்படும். வேலைக்கு வரும் பெண்கள் ஒப்பனை அணிவது இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவராக இருந்தாலும் பொதுவெளிக்கென்று ஒரு தோற்றத்தை கொண்டிருக்கவில்லையெனில் அது சார்ந்த மதிப்பீடுகளும் இந்த ஆணாதிக்க உலகின் கேடு!
நிலைமை இப்படி இருக்க துறவு மனப்பான்மைக்கு நிகராக இங்கு சிலர் முற்போக்கு அரசியலின் பெயரால் பெண்களை எல்லா நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பது இணையவெளி அராஜகம். நீங்கள் ஏன் புகைப்படம் போடுகிறீர்கள் என்று சிலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளார்கள்.
பிரதான முரண்பாடு, இரண்டாம் முரண்பாடு என்றெல்லாம் பிரித்துக்கொண்டு வேலை செய்வதே தற்போது முக்கியம் என்பவர்கள் ஏன் இப்படி இணையவெளி கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்? (முற்போக்கு பேசுபவர்களை மட்டும்) தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
இவர்களுக்கு உண்மையில் எதிரி யார்?
தனிப்பட்ட நபர்களை கண்காணித்து தூய்மைவாத கேள்விகளை எழுப்புவதுதான் முற்போக்கு அரசியலா? எந்த தத்துவத்தில் அது உள்ளது? தொடர்ந்து முற்போக்கு அறிவூட்டிக்கொண்டே இருப்பதும், அமைப்பில் அணிதிரட்டி பிற்போக்கான உற்பத்தி முறையை முற்போக்காக மாற்றி அமைப்பதற்கான போராட்டத்தில் மக்களை இணைப்பதும் தானே புரட்சிக்கான தேவை? அதைவிடுத்து ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவிலும் ஒருவரைப் பற்றிய முன்முடிவுகளை வைப்பதும், முத்திரை குத்துவதும், ஆதாரங்களே இன்றி எதிரி போல் சித்தரிப்பதுமே சிலரின் வேலையாக இருக்கிறது.
மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய ‘சில’ அடிப்படை கொள்கைகள் (ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் அமைப்பில் இருந்தால் மட்டுமே கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி உடையவர் என்பதையும் அறிவோம்):
1. உழைப்புச் சுரண்டலில் ஈடுபடக் கூடாது.
(ஆனால் தனியுடமையின் ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார சூழலில் - சிறு,குறு தொழில் செய்பவர்கள் தற்போதைய முறையின் கீழ் இதனை பின்பற்றுவது சவாலுக்குறியது).
(ஆனால் தனியுடமையின் ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார சூழலில் - சிறு,குறு தொழில் செய்பவர்கள் தற்போதைய முறையின் கீழ் இதனை பின்பற்றுவது சவாலுக்குறியது).
2. வாடகை, வட்டி வாங்கி பிழைக்கக் கூடாது. உழைத்து வாழ வேண்டும்.
3. எந்த வகையிலும், வடிவத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது.
4. வீட்டில் வேலைப் பிரிவினையை சமமாக வைத்திருக்க வேண்டும்.
5. அதிகாரத்திற்கு விலை போகக் கூடாது. மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
6. உழைப்புச் சுரண்டல் மூலம் சொத்து சேர்க்கக் கூடாது.
- இதில் சில தெளிவுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தம் உழைப்பில் அல்லது குடும்பத்தினர் சேர்ந்து உழைத்து சுறிதளவு நிலமோ, சொந்த வீடோ, கடையோ வைத்திருந்தால், அப்படி உழைத்து பாட்டன் முப்பாட்டன் சேர்த்த சொத்து பரம்பரையாக வந்திருந்தால் அது உழைப்புச் சுரண்டலில் – அதாவது உபரி மதிப்பில் – தனியுடைமை அபகரிப்பு செய்து ஈட்டிய சொத்து அல்ல – என்பதால் அதை பறிமுதல் செய்யச் சொல்லி வழிகாட்டுதல் இல்லை! (நீ கம்யூனிஸ்டு ஆனா சொந்த வீட்ல இருக்க, கார் வச்சிருக்க என்றெல்லாம் அறியாதவர்கள் கேள்விகள் கேட்பார்கள்! என்கிட்ட சொந்த வீடுமில்ல, காரும் இல்லீங்கோ!)
- இதில் சில தெளிவுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தம் உழைப்பில் அல்லது குடும்பத்தினர் சேர்ந்து உழைத்து சுறிதளவு நிலமோ, சொந்த வீடோ, கடையோ வைத்திருந்தால், அப்படி உழைத்து பாட்டன் முப்பாட்டன் சேர்த்த சொத்து பரம்பரையாக வந்திருந்தால் அது உழைப்புச் சுரண்டலில் – அதாவது உபரி மதிப்பில் – தனியுடைமை அபகரிப்பு செய்து ஈட்டிய சொத்து அல்ல – என்பதால் அதை பறிமுதல் செய்யச் சொல்லி வழிகாட்டுதல் இல்லை! (நீ கம்யூனிஸ்டு ஆனா சொந்த வீட்ல இருக்க, கார் வச்சிருக்க என்றெல்லாம் அறியாதவர்கள் கேள்விகள் கேட்பார்கள்! என்கிட்ட சொந்த வீடுமில்ல, காரும் இல்லீங்கோ!)
உழைப்புச் சுரண்டலில் – உபரி மதிப்பு அபகரிப்பில் ஈடுபட்டு சொத்துக் குவிப்பு, செல்வக் குவிப்பில் ஈடுபடுபவர்களின் சொத்து, அவர்களிடம் இருக்கும் உற்பத்திச் சாதனங்கள் (ஏனென்றால் அவை அவர்களின் உழைப்பால் சேர்ந்த சொத்து கிடையாது) போன்றவற்றை – அதாவது முதலாளிகள், பெருமுதலாளிகளின் சொத்துகளை, நிலவுடைமையாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அவசியத்தைப் பற்றி தான் மார்க்சியம் பேசுகிறது.
புரட்சிகர உற்பத்தி முறை / உற்பத்தி உறவுகளுக்கு மாறுகையில் அதாவது பொதுவுடைமை சமூகத்திற்கு மாறுகையில் படிப்படியாக மாற்றங்கள் நடைபெறும்.
(இந்த பட்டியலில் விரிவாக இன்னும் நிறைய சேர்க்கலாம். நான் இங்கு சுட்டிக்காட்டுவது தனி நபராக ஒருவர் குறைந்தபட்சம் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள். இதுவும் மார்க்சியத்தை கற்று அதிலிருந்து சாரமாக முன்வைப்பது…)
7. அதேபோல் #கம்யூனிஸ்டுகள் இந்த வேலைதான் செய்யவேண்டும். இது நல்ல வேலை, அது கெட்ட வேலை என்றெல்லாம் எந்த ‘அறவாதமும்’ தத்துவத்தில் இல்லை. ஓர் அரசு ஊழியர் அரசிடம் வேலை செய்துகொண்டே எப்படி சங்கம் அமைத்து தம் உரிமைக்காகவும், மாற்று அமைப்பிற்காகவும் இந்த அமைப்பிற்குள் இருந்துகொண்டே போராடுகிறாரோ, அதேபோல் தான் தனியார் நிறுவனங்களில் தம் உழைப்புச் சக்தியை விற்று வாழும் நிலையில் உள்ள உழைப்பாளிகளின் நிலையும். கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு சீரியல்ல வேலை பார்க்குற, சினிமால வேலை பார்க்குற, நடிக்குற என்றெல்லாம் கேட்பவர்கள் தத்துவத்தை தவறாக முன்வைக்கிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என்றே பொருள். (அறிவார்ந்த வகையில் உரையாட இயலாதவர்கள் வசுவிடம் வைத்த கேள்விகள் இவை).
நிலவும் அமைப்பில் இருந்துகொண்டே தான் மாற்று அமைப்பிற்கான போராட்டங்கள், அறிவூட்டலில் ஈடுபட முடியும். துறவு மனப்பான்மையில் செயல்பட்டால் அது கருத்துமுதல்வாதம் அல்லது பொறாமை.
அமைப்பில் முழுநேரம் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும் தோழர்கள் நிச்சயமாக தியாகிகளே. அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. அதற்காக அமைப்பில் இல்லாதவர்களை எல்லா நேரமும் மட்டம் தட்டும் மனநிலையில் இருப்பதென்பது ஓர் அதிகார மனோபாவம். இது முற்போக்கு பண்பாகாது! முற்போக்குவாதி என்பவர் எப்போதும் உரையாடலில் ஈடுபடுவார், குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் அல்ல!
புரட்சிக்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதும், சமூக இயக்கம் ஒரு பொருளாதார அமைப்பின் கீழ் நடப்பதும் சமகாலத்தில் நடைபெறுவதுதான். கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு அவரவர் சமூகத்திற்கு பங்களிப்பு செய்வது என்பதும் நடப்பதுதான்.
அதேபோல் பெண்கள் விசயத்திற்கு வருவோம். ஜென்னி, க்ளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வா உட்பட அனைத்து முற்போக்கு பெண்களும் கூந்தல் மயிர் வைத்திருந்தவர்கள், பொதுவெளிக்கேற்ற வகையில் தங்களை ‘அலங்கரித்து’க் கொண்டவர்கள் தானே! அவர்களை முன்வைத்து இந்த முற்போக்கு காவல்கர்கள் கேள்வி கேட்பார்களா?
மதவாதிகளுக்கும் சில #முற்போக்கு ஆர்வக் கோளாறுகளுக்கும் வித்தியாசமில்லை. அதுவும் பெண்களையே தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இவர்கள் முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்கிவிட்டது.
மக்களிடம் #மார்க்சியம், முற்போக்கு #அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்தரப்பட்ட பிரிவினர் நமக்கு தேவைப்படுகிறார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களை குத்திக்கொண்டே இருந்தால், ஓடத்தான் வேண்டும். நாற்காலியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு போட்டி போட இங்கு யாரும் வரவில்லை.
அமைப்பில் இல்லாதவர்கள் தம்மால் இயன்றதை செய்ய முற்படுகிறார்கள். யாருக்காக? தம் சொந்த நலனுக்காகவா? (விளம்பரப் பிரியை என்றால் வலது பக்கம் போனா இன்னும் சிறப்பான வாய்ப்பும், பணமும், புகழும் கிடைக்கும்).
நட்பு சக்திகளை குடைந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
No comments:
Post a Comment