பெண்ணியம் என்றால் கட்டற்ற பாலுறவு சுதந்திரம், தான்தோன்றித்தனமான
போக வாழ்வு (ஆண்களுக்கு கிடைத்திருப்பதுபோல்) என்னும் தனிப்பட்ட இச்சைகளை மட்டுமே பெண்
விடுதலை என்று ஒரு சிலர் பேசுகின்றனர் (ஆண், பெண் இருபாலரும்). இத்தகைய செயல்பாடுகளால்
பெண் விடுதலையை சமூக-அரசியல்-பொருளாதார விடுதலையாக முன் வைத்து இயங்கும் பெண் உரிமைப்
போராட்டங்கள் மீது தவறான, கொச்சையான புரிதல் ஏற்படுகிறது என்னும் தோழர்களின் பதிவினை
ஒட்டி எனது பதிவும்!
பெண்ணியத்திற்கு மட்டும் ஏன் இந்த சிக்கல்? பெண்
உடல் இங்கு சம்பந்தப்பட்டிருப்பதால், அல்லவா? பெண் விடுதலை பேசும் உடல் அரசியல் என்பது
உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுதலை கோருவதாகும். அது ஆண், பெண், மாற்றுப் பாலினம்
என அனைவருக்குமானது. இதில் பெண் உடலை முன்வைத்துப் பேசுகையில் கூடுதலாக பெண் உடலுக்குரிய
இயற்கையான வடிவமைப்பின் காரணமாக, அவளின் உடலுக்கு சில சமூகக் கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது
என்று பேச வேண்டியுள்ளது. இந்த விதிமுறைகள் தனியுடைமை சமூகத்தின் விளைவாக உருவாகிய
தந்தை வழிச் சமூகம் அல்லது ஆணாதிக்க சமூகத்தின் விதிமுறைகள். அது பெண்ணை உடல் ரீதியாக
சுரண்டுகிறது. ஒடுக்குகிறது. அதேவேளை, ஆணை அது பொருளாதார அடிமையாக்கியது. பெண்ணை பாலியல்
மற்றும் பொருளாதார அடிமை ஆக்கியது என்பதே இதன் சாரம்.
பெண்ணின் மறு உற்பத்திச் சக்திக்காக (அதாவது குழந்தைப்
பேறு) அவள் பாலியல் அடிமையாக்கப்பட்டாள். அதுமட்டுமின்றி பொருள் உற்பத்திக்கு பிரதான
சக்தியாக இருக்கும் உழைப்புச் சக்தியை பெற்று, பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் அவளுடையதே.
மூன்றாவதாக சொத்துடைமை சமூகத்தில் தன் ரத்தத்திற்கு – தன் இரத்த வாரிசிற்கு சொத்து
சென்று சேர வேண்டும் என்னும் தந்தை வழிச் சமூகத்தின் தேவைக்காகவும் அவள் வீட்டிற்குள்
முடக்கப்பட்டாள். அவளுடைய கருப்பை ஆணாதிக்க கருத்தியல்களால் பூட்டப்பட்டது. இதன் காரணமாக
பெண்கள் உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டது போல் சமூக-அரசியல்-பொருளாதார பங்கெடுப்பிலிருந்தும்
விலக்கப்பட்டனர்.
இந்த வரலாற்றுப் பின்னணியை கற்றறிந்து பெண்களை உழைப்புச்
சுரண்டலிலிருந்து விடுவிப்பதும், பெண்களும் சமமாக அரசியல் உரிமை பெறுவதற்காகவும் போராடுவதே
பெண் விடுதலைப் போராட்டம். ஆனால் இந்த பெண் விடுதலை என்பது தனித்ததன்று அது சமூக விடுதலையோடு
அதாவது உழைக்கும் மக்களின் (வர்க்கத்தின்) விடுதலையோடு தொடர்புடையது என்பதை உணர்த்துவது
மார்க்சியம்.
பாட்டாளி வர்க்கப் போராட்டம் என்பது பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும்
எதிரான போராட்டக் கூறுகளைக் கொண்டது. அதில் சோஷலிசப் பெண் விடுதலைப் போராட்டம் மேற்சொன்னது
போல் பெண் உடல் மீதான ஆணாதிக்க கட்டுப்பாட்டையும், உழைப்புச் சுரண்டலையும் எதிர்ப்பதுமாக
இருக்கிறது.
பெண் உடல் மீதான பாலியல் கட்டுப்பாட்டிற்கு எதிரான
போராட்டம் என்பது குடும்பம் என்னும் அமைப்பின் வாயிலாக அவள் எப்படி பிள்ளை பெறும் இயந்திரமாக
மாற்றப்படுகிறாள், வெறும் பராமரிப்பு தாதியாக மாற்றப்படுகிறாள் என்பதை உணர்த்துவதாக
இருக்கிறது. அதேபோல் கற்பு ஒழுக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் கற்பின் பெயரால் பெண்
உடல் எப்படி குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் சுயநலமாக முடக்கப்படுகிறது என்பதை
உணர்த்தி கற்பின் பெயரால் பெண் உடல் மீது ஆண் உடல் செலுத்தும் உடல்ரீதியான வன்முறை
மற்றும் கருத்தியல் ரீதியான வன்முறையை எதிர்க்கிறது.
எந்த வகையிலும் பெரியாரியமோ, மார்க்சியமோ கட்டற்ற
பாலுறவை போதிக்கவில்லை.
பெண் விடுதலை பேசுவோர் பெண் உடல் மீதான தவறான கருத்தியல்களை
முறியடிக்கப் பேசுகையில் விழிப்புணர்விற்காக பெண் உடல் மற்றும் காமம் சார்ந்த பல்வேறு
உரையாடல்களை நிகழ்த்துகின்றனர். ஆணாதிக்க பண்பாட்டுக் கல்வியின் காரணமாக ஆண்கள் பெண்
உடலைப் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள இயலவில்லை என்பதால் பெண்கள் தங்கள் உடல் மற்றும்
மனத் தேவைகளைப் பற்றி பேச வேண்டியுள்ளது. இந்த பாலியல் / காமம் பற்றிய கல்வி என்பது
பெண் விடுதலையின் ஒரு பகுதி. பாலியல் / பாலுறவு சாகசப் பேச்சு மட்டுமே பெண்ணியமாகிவிடாது.
ஆணாதிக்க அறியாமையிலிருந்து சமூகத்தை விடுவித்து
ஆண் பெண் உறவை மேம்படுத்தி குடும்பம் அல்லது காதல் அல்லது இணைகளுக்கிடையில் மகிழ்ச்சிகரமான
வாழ்வை ஏற்படுத்தி வன்முறையற்ற உறவை மலரச் செய்வதே இதன் நோக்கம்.
கட்டற்ற பால் உறவு, அயல் உறவு போன்றவற்றை நியாயப்படுத்துவதோ,
அதனை போதிப்பதோ பெண்ணியமல்ல!
ஆனால் பாலுறவு என்பது நிச்சயமாக தனிப்பட்ட விசயம்
என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எந்த உறவிலும் அன்பும், முழுமையான மனநிறைவும் கண்டிப்பாக
அவசியம். அதுவல்லாத உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு ஆணோ பெண்ணோ அயல் உறவை நாடுவது நேர்ந்துவிடுகிறது!
அது சரியா தவறா என்று பேசுவது நிலவும் வன்முறையான சமூகத்தில் பாசாங்கில் மட்டுமே போய்
முடியும். பிடிக்காத உறவிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இங்கு நடந்துவிடுவதில்லை.
ஆகவே அந்த சிக்கலைக் களையாமல் அயல் உறவை ‘கள்ள உறவு’, ‘அரிப்பு’ என்று ஒழுக்கவாதமாக
பேசித் திரிவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆணாதிக்க குடும்ப அமைப்பில் பெண் உடலின் தேவை
என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. குறிப்பாக தங்களுக்கும் தேவை என்று
ஒன்று இருக்கலாம் என்பது கூட பெண்களுக்கு தெரியாத வகையில் தான் இருக்கிறார்கள். இந்த
அறியாமையைப் போக்க பெண்ணியக் கல்வி அவசியமாகிறது! இதன் மூலம் பெண்கள் தங்களின் உரிமைகளுக்காகப்
போராடுவதோடு, சமூக விடுதலைக்காகப் போராட ஊக்குவிக்கப்படுகிறனர். அதோடு பாலியல் சுரண்டலிலிருந்து
தம்மை தற்காத்துக்கொள்ளும் அறிவினையும் பெறுகின்றனர்.
இந்தப் போக்கில், இந்த அரசியல் போராட்டத்தை கைகாட்டி
பெண்ணியத்தை தம் தனிப்பட்ட போக இச்சைகளுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களும் இருக்கத்தான்
செய்வார்கள். இவர்கள் தனிப்பட்ட அளவில் தம் வாழ்வில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்
போகட்டும், ஆனால் அதுதான் முற்போக்கு, அதுதான் பெண்ணியம், அதுதான் கம்யூனிசம் என்று
பேசி அடுத்தவரை மயக்கி தம்மின் பாலியல் சாகச வாழ்வினை முன்வைப்பதும், அதற்குள் அப்பாவிப்
பெண்களை இழுத்து ‘செக்ஸ் லாபி’ செய்து பிழைப்பதும் தவறானது. கண்டிக்கத்தக்கது. (பெண்ணியம்
என்னும் சொல்லையே நாம் தவிர்க்க வேண்டும்! சோஷலிசம் என்றும் தேவைப்பட்டால் சோஷலிசப்
பென்ணியம்).
நிலவுமொழி, ஆனந்தி, தமிழச்சி, மோகன தர்ஷினி மற்றும்
சில தோழர்கள் இதைத்தான் கவனப்படுத்த விரும்புகிறார்கள்! எவரின் தனிப்பட்ட பாலுறவு வாழ்க்கைக்குள்ளும்
நாம் எட்டிப்பார்க்க விரும்பவில்லை. ஆனால் அதனை ஏதோ பெரிய அரசியல் செயல்பாடென பிரச்சாரம்
செய்வதும், அது தன் வாழ்வின் பாணி, தனி மனித சுதந்திரம் என்று பொதுவெளியில் தம்பட்டம்
அடிப்பதும் ஆரோக்கியமானதல்ல. முதிர்ச்சியற்ற சமூகத்தில் இது மீண்டும் ஆணாதிக்க சுரண்டலுக்கே
பயன்படும். பெண் விடுதலையில் அக்கறையில்லாத ஆண்கள் பெண்களை தங்கள் இச்சைகளுக்காக பயன்படுத்திக்
கொண்டு சக்கையென தூக்கி எரிந்துவிட்டுப் போக ஊக்குவிக்கும். “நீ விரும்பித்தான வந்த…
இப்ப என்ன ஒப்பாரி வைக்குற” என்பதாக ஒரு கட்டத்தில் ஆண் பெண்ணை அவமானபப்டுத்தி விட்டு
செல்லும் சலுகையை வழங்கிவிடும். மூளைச்சலைவுக்கு உள்ளாகி அரசியல் விழிப்புணர்வின்றி
பாலுறவு சாகசத்திற்குள் (சுதந்திரம் என்பது வேறு) ஈடுபடும் பெண்கள் பின்நாளில் கடும்
மன உளச்சலுக்கு உள்ளாகி விடுவார்கள். குடும்ப அளவிலும் இது பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சரியான நோக்கமும், சரியான அரசியல் தத்துவார்த்த பார்வையுமற்ற
தனிமனித பாலுறவு சாகச செயல்பாடுகள் பற்றிய பகிர்வுகளை சமூகப் பொறுப்புணர்வு கருதி சம்பந்தப்பட்டவர்கள்
கைவிடுவது நல்லது. (சரியான அரசியல் தத்துவார்த்த புரிதலுடன் காமம், பாலுறவு பற்றிய
கல்வி மற்றும் உரையாடல் என்பது வேறு).
பாலுறவு சாகசங்களில் ஈடுபடுவோர் அதனை தமது தனிப்பட்ட
விசயமாக வைத்துக்கொள்ளுங்கள்! பெண் விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் ஏதும் பங்களிக்காவிட்டாலும்
பரவாயில்லை, ஆணாதிக்க பாலியல் சுரண்டலுக்குப் பெண்களை பலியாக்காதீர்கள். பெண் விடுதலைப்
போராட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள்!
பெண் விடுதலைப் போராட்டம் என்பது உயிர் காக்கும்
போராட்டம்! மானுடம் காக்கும் போராட்டம்! அரசியல் பொருளாதார விடுதலைக்கான போராட்டம்!
ஆணாதிக்க சமூகத்தின் தாக்கத்தினால் இங்கு பெண் அடிமைத்தனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்
ஏற்கனவே பெரும் சவால்கள் நிலவுகின்றது. பெண்களுக்கு எதிராக எரியும் ஆணாதிக்க நெருப்பில்
மேலும் எண்ணெய் ஊற்றுவதென்பது பெண்களுக்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை
கருத்தில் கொண்டு உங்களின் தனிப்பட்ட பாலுறவு சாகங்கள் பற்றிய பிரச்சாரங்களை நிறுத்திக்
கொள்ளுங்கள்.
வாசிக்க வேண்டிய நூல்கள் சில
·
பெண்களும் சோஷலிசமும்: அகஸ்ட் பெபெல்
·
ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற
முத்தங்களும், ஆசிரியர்: மகாராசன்
·
உழைக்கும் மகளிர் – க்ரூப்ஸ்கயா, தமிழில்
கொற்றவை
No comments:
Post a Comment