பாலியல்
சுரண்டல் மற்றும் பாலுறவு சுதந்திரம் சார்ந்த தத்துவார்த்த புரிதலை ஏற்படுத்த வேண்டியதன்
அவசியம் கருதியே நான் அது சார்ந்த பதிவுகளை எழுத முற்பட்டேன். பெண் விடுதலை மற்றும்
சமூக விடுதலை போராட்டத்தில் தத்துவார்த்த தெளிவு என்பது முக்கியப் பங்கு வகிக்கின்றது.
அதீத பாலுறவுவாதமானது புரட்சியை மழுங்கடிக்கும் தன்மை கொண்டது என்னும் அரசியல் காரணமும்
அதற்கு உண்டு.
தனி
மனிதர்கள் தங்கள் வேட்கைக்கு நியாயம் கற்பிக்க முற்போக்கு தத்துவங்களை பயன்படுத்துவது
தவறு என்று கருத்தியல் போர் மூலம் உணர்த்த வேண்டியுள்ளது. நான் களமிறங்கியது அந்த நோக்கத்தினால்
மட்டுமே.
ஆனால்
தற்போது இந்த பாலியல் சுரண்டல் சார்ந்த விவாதங்கள் கருத்தியல் போர் என்பதை தாண்டி தனிநபர்
அம்பலப்படுத்துதல் மற்றும் தன் முனைப்பு சார்ந்த தரமற்ற பகிர்வுகளாக சென்றுகொண்டிருக்கிறது.
தனிநபர்வாத போக்குகள், மற்றும் கண்காணிப்பு அரசியலில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.
குறிப்பாக பெண்களின் பெயர்களை குறிப்பிட்டு ‘அம்பலப்படுத்துவதில்’ எனக்கு துளியும்
உடன்பாடில்லை.
இதுபோன்ற
குழுக்களில் இடம்பெறும் ஆண்கள் முற்போக்கு வலை வீசி பெண்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்
என்பது பற்றி நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினோம். அதோடு இதுபோன்ற தனிப்பட்ட
குழுவினை நடத்தும் பெண்கள், அதில் ஈடுபடும் பெண்கள் அறியாமை நிறைந்த தங்களது தனி மனித
சுதந்திரவாதத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உணர்த்த விரும்பினோம். அதை
பொதுப்படையாக மட்டுமே செய்ய வேண்டும். தேவைப்படுமாயின் பெண்களை காக்கும் பொருட்டு ஆண்களை
நேரடியாக அம்பலப்படுத்தலாம். அதேபோல் நம் விழிப்புணர்வு பதிவுகளைக் கண்டு பாதிக்கப்பட்ட
பெண்கள் தாமாக முன் வந்து தமது பிரச்சினைகளை பொதுவில் வைத்து பேசலாம். நிச்சயமாக அவர்களுக்கு
நியாயம் பெற்று தர வேண்டும்.
அதேவேளை
தவறுகள் செய்வோர் தம்மை சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நமது அணுகுமுறை
மிகவும் முதிர்ச்சியுடனும், கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்பதே எனது அணுகுமுறை.
முதலாளிகளுக்காகவும்
சேர்த்துதான் நாம் போராடுகிறோம் என்பதே மார்க்சின் வழிகாட்டுதல். தனிமனித சுதந்திரம்,
பாலுறவு சுதந்திரம் என்பது ஏதோ சரியான வாழ்வுமுறைதான் என்று நம்பும், வழிநடத்தும் பெண்களுக்காகவும்
சேர்த்து போராட வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் தம் தவறை உணர வேண்டுமெனில் தொடர்ந்து
நாம் தத்துவார்த்த முறையில் தான் போராடி இருக்க வேண்டும். அறிவூட்டலை நிகழ்த்தியிருக்க
வேண்டும்.
அதைவிடுத்து
தனிநபர் அம்பலப்படுத்தல் என்னும் போக்கை சிலர் கையிலெடுப்பதால் நான் மிகுந்த மன வருத்ததிற்கு
உள்ளாகி இருக்கிறேன். வக்கிரம் பிடித்த சமூகத்தில் இது கிசுகிசுப்பு சார் கிளர்ச்சிக்கு
மட்டுமே தீனி போடும். தரம் தாழ்ந்த சொற்பகிர்வுகள் நிகழத் தொடங்கிவிட்டன. அப்படிப்பட்ட
கள சுத்திகரிப்பில் ஈடுபட நான் தயாராக இல்லை.
எனவே
என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நான் தற்காலிகமாக முகநூலில் இருந்து வெளியேறிவிட்டேன்.
நான்
பின்வாங்கிவிட்டேன். நான் அவளில்லை என்று கை தூக்கிவிட்டேன். முதிர்ச்சியில்லை, ஒற்றுமையில்லை, நான் அஞ்சிவிட்டேன், அவர்களின் மிரட்டலுக்கு பணிந்துவிட்டேன். அல்லது அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு கண்டு ஓடிவிட்டேன், இது மார்க்சிய வழிமுறை இல்லை… எப்படி வேண்டுமானாலும் சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்துகொள்ளட்டும்
எனக்கு கவலை இல்லை.
நான்
களமிறங்கியது இந்த தனிநபர் ‘சுத்திகரிப்பு’ பாணி செயல்பாடுகளுக்காக அல்ல.
வன்புணர்வில்
ஈடுபட்டவனுக்குக் கூட தூக்கு தண்டனை தரக்கூடாது என்று மனித உரிமை பேசும் அரசியல் தெளிவு
கொண்ட நபராய் இருக்கிறோம். எதற்காக? ஆணாதிக்க மற்றும் தனியுடைமை சமூக கட்டமைப்பு சார்ந்த
புரிதல் நமக்கு இருப்பதால். இன்று அதையே கேலிக்கு உள்ளாக்கி விட்டோமோ என்னும் கேள்வி
மேலோங்க விடைபெறுகிறேன்.
நன்றி,
கொற்றவை
No comments:
Post a Comment