Apr 21, 2023

12 மணி நேர வேலை பெண்களுக்கு எதிரானது!

 மீண்டும் மீண்டும் சொல்கிறேன் “வலுத்ததே வாழும்” என்கிற பொருளாதார அமைப்புக்கேற்ற அரசியலும் ஆட்சியும் என்றைக்கும் தொழிலாளர் வர்க்க நலனைப் பேணாது!

12 மணி நேர வேலை (விருப்பத்தின் பெயரில் மட்டுமே!) – பெண்களுக்கு எதிரானது!

12 மணி நேர வேலை என்கிற சட்டத் திருத்தத்தில் இன்னொரு மிகப் பெரிய ஆபத்து உள்ளது! பெண்கள் வேலையை இழக்க நேரும்! – தெம்பிருந்தா கூடுதலா வேலை செஞ்சு பொழைச்சுக்கோ, சம்பாதிச்சுக்கோ என்கிற ‘option’ ஐத் தரும் மசோதா… பெண்கள் நிலை குறித்து சிந்திக்காமல் முன் வைக்கப்படுகிறது.

ஏற்கனவே பெண்களால் தான் ஆண்கள் வேலை இழக்கிறார்கள் என்கிற பாலின வெறுப்பு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பெண்கள் வேலைக்கு வருவதற்கோ பல பண்பாட்டு போர்களை நிகழ்த்த வேண்டி உள்ளது. தேவைப்பட்டால் வேலையை விட்டு குடும்பத்தை கவனிப்பேன் என்கிற உறுதி மொழியோடு தான் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

வேலைக்கு செல்ல வேண்டுமானால் பெண்கள்  வீட்டு வேலை, வெளி வேலை என்று இரட்டை உழைப்பு செலுத்த வேண்டும். சற்றே மேல் தட்டு வர்க்கமானது வீட்டுப் பணியாளர் வைத்து சமாளிக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வகையில் வீட்டுப் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு என்பது பெண்களின் கடமையாகத்தானே இருக்கிறது! இத்தகைய ‘பொறுப்புகளை’ உடைய பெண் உழைப்பாளர்களால் 12 மணி நேர வேலையை எடுத்துக்கொள்ள இயலுமா? கட்டாயப்படுத்தவில்லையே எனலாம்!

ஆனால் முதலாளித்துவம் யாரை prefer செய்யும், 12 மணி நேர உழைப்பளரைத்தானே! உடனே இதை உடல் பலவீனமாக சித்தரிக்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பெண்களுக்குரிய வீட்டுப் பராமரிப்பு நெருக்கடியில் பெண்களால் இத்தகைய ‘தெம்பிருந்தா பொழைச்சுக்கோ’ தேர்வை எடுத்துக்கொள்ள இயலுமா என்று சிந்திக்க மாட்டார்கள்.

போட்டி பொருளாதார அமைப்பில் யாரால் 12 மணி நேர வேலையில் ஈடுபட முடியுமோ அவர்கள் ‘உயரவும்’ மற்றவர்கள் வேலை இழக்கும் சூழலும் உருவாகலாம்!  ஆணாதிக்க சமூகத்தின் பாலின விதிகளால், குடும்ப பொறுப்புகளில் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் இந்த போட்டிக்கு ஈடுகொடுக்க இயலாமல்’ பாதிக்கப்படுவார்கள் என்பதை திமுக அரசும், சமூக நீதி காவலர்களும் சிந்திக்கவில்லையா?

ஏற்கனவே பெண்களை வேலைக்கு எடுக்கும் போது “நீ கர்ப்பமா இருக்கியா, கல்யாணம் உடனே பண்ணிக்கப் போறியா” என்றெல்லாம் கேட்டு பெண்ணுக்கு பதில் ஆணை எடுத்தால் ‘செலவு’ (maternity leave, periods leave etc) மிச்சம் என்று இயங்கும் நிறுவனங்களே அதிகம். உழைக்கும் பெண்களின் விகிதாச்சாரம் என்ன? பாலின பாகுபாடு அதிகம் உள்ள சமூகத்தில் இதுபோன்ற ‘திட்டங்களைக்’ கொண்டு வருகையில் மகளிர் கண்ணோட்டம் வேண்டாமா? குறிப்பாக  அடித்தட்டு உழைக்கும் மகளிரியல் கண்ணோட்டம் வேண்டாமா?

நெகிழ்வுத் தன்மையை ஏற்காத தொழிலாளர்கள் (எந்த பாலினமானாலும்) பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் என்ன?

முதலாளித்துவம் நடைமுறைப்படுத்த விரும்பும் தொழிலாளர் சட்டங்களுக்காக மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்கின்றது. தொழிற்சங்கங்களே இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்புக்கு ஆகும் முதலீட்டை தவிர்க்க ஒப்பந்த ஊதிய அடிப்படையில் வேலை என விதிகளை மாற்றும் முயற்சிகள் தொடங்கிவிட்ட வர்க்கப் போரின் ஓர் அங்கம்தான் இந்த மசோதாவும்.

பணி நேரம், ஓய்வு நேரம், உற்பத்தி சுழற்சி எல்லாவற்றையும் உழைத்துப் பொருள் ஈட்டித்தரும் உழைப்பளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்! தொழிலாளர் உழைப்பில் வாழும் முதலாளிகளுக்கோ, அவர்களின் தேவைக்காக உருவான அரசுக்கோ தொழிலாளர்களின் பணி நேரம் குறித்து தீர்மானிக்கும் உரிமை கிடையாது!

12மணி_நேர_வேலை_மசோதா: தொழிலாளர் வர்க்கப் பார்வை!

#12மணி_நேர_வேலை_மசோதா: தொழிலாளர் வர்க்கப் பார்வை!

 ” உழைத்துத்தான் வாழ வேண்டும் - வாழ்வு, உரிமை; உழைப்பு, கடமை! ஆனால் உழைத்தும் வாழ முடியவில்லை என்றால், அது சமூகத்தில் உள்ள கொடுமையைக் காட்டுகிறது. வாழ்வதற்கு உழைக்கிறான், பிறருக்கு வாழ்வு அளிக்கவும் உழைக்கிறான். ஆனால், அந்த உழைப்பே அவனை உருக்குலையச் செய்து, வாழ்வை நுகரவே முடியாதபடி ஆக்கிவிடுமானால், அவன் உழைத்து என்ன பயன்?” - பேரறிஞர் அண்ணா

     தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அப்பட்டமான முதலாளித்துவ அராஜகம்! சமூக நீதி பேசும் திமுக அரசு இதனை மசோதாவாக நிறைவேற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கண்டனத்திற்குரியது. 8 மணி நேர வேலை என்று தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற உரிமைகளை முதலாளித்துவ காட்டேரிகளுக்காக தாரை வார்க்கிறோமே என்கிற ஆபத்து தெரியாமல் முதலமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்தாரா? ‘சமூக நீதி’ பேசக்கூடிய திமுக பொருளாதார அறிஞர்கள் இது பற்றி உழைப்புச் சுரண்டல், உபரி மதிப்பு கோணத்தில் காணவில்லையா?

     ‘விருப்பத்தின் பெயரில் மட்டுமே, சில தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே, கட்டாயப்படுத்தக் கூடாது, வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலையில் மாற்றம் இல்லை” என்று தற்போதைய மசோதா குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்! விருப்பத்தின் பெயரில் மட்டுமல்லாது, வேறு வழியின்றி – அதாவது ‘செலவுக் குறைப்பு’ என்னும் பெயரில் ஏற்கனவே குறைவான ஆட்களை வைத்து - பல்துறை வித்தகராக இருப்பதே சாதிக்கும் வழி என்னும் பெயரிகளில் எல்லாம் மூளைச்சலவை செய்து – கூடுதலாக உழைத்தே ஆக வேண்டிய சூழலை நிறுவனங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. 10 மணி நேரம் என்பது இயல்பாகி விட்டது. பின்னர் ஆள் இல்லை, எடுத்த வேலையை முடித்துவிடு, deadline, target, KRA, Appraisal என்று விதம் விதமான concepts மூலம் தொழிலாளி தானாக கூடுதல் நேரம் வேலை பார்க்கும் சூழல் வந்துவிட்டது. கணினி யுகத்தில் customer service, TAT (Turn around Time) என்கிற பெயரில் 24 மணி நேரமும் email / phone assistance / problem solving / வாடிக்கையாளரை உடனடியாக தொடர்பு கொண்டு குறை தீர்த்தல் என்னும் பெயரிகளில் எல்லாம் தொழிலாளர்கள் (குறிப்பாக Technical support, customer service professionals) அட்டைப் போல் உறிஞ்சப்படுகிறார்கள். அத்தகைய பணிச் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இங்கு பெரிய ஆய்வுகள் இருப்பதாக தெரியவில்லை. மனநலன், உடல் நலன், மனித உற்பத்தித் திறன் (fertility) என்று என்னல்லாமோ பாதிப்புகள் உண்டாகின்றன என்று ஆங்காங்கே சில எச்சரிக்கைகளைக் காண முடிகிறது.

     ஆக, விருப்பமல்லாத விருப்பத்தின் பெயரில் தொழிலாளர்கள் கூடுதலாக பணி புரிந்து வரும் சூழலில், 12 மணி நேர வேலை என்னும் சட்டத் திருத்த மசோதாவின் தேவை என்ன? விருப்பத்தின் பெயரில் நடக்கப் போகிற ஒன்றுக்கு சட்டம் எதற்கு? அதுதான் கட்டாயப்படுத்தாமல் நிறுவனங்கள் வேலை வாங்கிக் கொள்ளலாமே? ஏதாவது logic உள்ளதா?

     நிலவும் உழைப்பு நேரமே உபரி உழைப்புதான் என்று தொழிலாளர் வர்க்க நல ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. 8 மணி நேர உழைப்பு நேரத்தோடு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு, சில பகுதிகளில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டு, உழைப்பு நேரம் “நியாயமாக” இருந்தால், உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது என்றும் விளைவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன! உலக அளவில் சில நிறுவங்கள் இதனை செயல்படுத்தியும் வருகின்றன. இத்தகைய “முன்னேறும்” சூழலில் 12 மணி நேர வேலை, அதுவும் விருப்பத்தின் பெயரில் மட்டுமே என்று சொல்வது, 8 மணி நேர வேலை என்னும் நிலையை மாற்றி மெல்ல மெல்ல 12 மணி நேர வேலைதான் இயல்பு என்று நிறுவுவதற்கான “சாம்ப்ளிங்” தான் இது.

     நம்ம ஊரில் தேநீர், பீடியெல்லாம் எப்படி வந்தது என்று வாய்மொழிக் கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். “இலவச மாதிரி”, (Free Sampling) கொடுத்து கொடுத்து பழக்கப்படுத்தினார்கள்! பின் ‘அது’ இல்லாமல், இருக்க இயலாது என்கிற நிலை வந்தது! குறிப்பாக தேநீர், பீடி போன்ற ‘பண்டங்கள்’ தொழிலாளர்கள் தூங்காமல் விழித்திருந்து வேலை செய்வதற்கு உதவும் என்று சந்தைப்படுத்தப்பட்டதாம்! தூங்காமல் வைத்துக்கொள்ளும் தேவை யாருக்கு? இங்கே ஒவ்வொரு பண்டமும் மக்களுக்கான பயன்மதிப்பைக் காட்டிலும், முதலாளிகளுக்கான லாப வேட்டைக்காகவே உருவாகிறது! தேவையற்றப் பொருள்களாக இருந்தாலும் ஒன்றிற்கு ‘தேவையை’ (demand) எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சந்தைப்படுத்தும் தந்திரம் (marketing strategy).

    எல்லாவற்றையும் பண்டமாகப் பார்க்கும் முதலாளித்துவத்திற்கு மனிதர்களின் உழைப்புச் சக்தியும் ஓர் பண்டம் தான்! அந்த உழைப்புச் சக்தியை எவ்வளவு மலிவாக வாங்க முடியுமோ அவ்வளவு மலிவாக வாங்கினால் மட்டுமே அவர்களால் லாபத்தைப் பெறுக்க முடியும். உற்பத்திகான இதர அம்சங்களில் நிறுவனங்களால் பெரியளவு ‘செலவுக் குறைப்பு’ (cost cutting) செய்ய இயலாது! ஏனென்றால் அதனை இன்னொரு முதலாளி  அனுமதிக்க மாட்டான். எனவே அவர்களால் “பேரம்” பேச முடியக் கூடிய ஒரே ‘பண்டம்’ உழைப்புச் சக்தி! அதுமட்டுமின்றி உழைப்பு தானே அனைத்து செல்வங்களையும் படைக்கிறது! அதை கட்டுக்குள் வைத்திருப்பது முதலாளித்துவத்தின் அதிஅத்தியாவசியத் தேவையும் கூட.

(இதுக்குதான் மார்க்சியம் படிக்கனும்! ஆனால் மார்க்சியம் குறித்து இங்கு தவறான கருத்துகளை பரப்பி வைத்திருக்கிறது முதலாளித்துவம்).

     வேலைவாய்ப்பின்மை பெருகப் போவது 12 மணி நேர வேலையின் இன்னுமொரு ஆபத்து. இருக்கும் ஆட்களை கூடுதலாக உழைக்கச் செய்வதன் மூலம் நியாயமாக தேவைப்படும் உழைப்பாளர் சேனையை குறைப்பதற்கான ஒரு தந்திரமாகவும் இதனை நாம் காணலாம்! மேலும் தற்போது 8 மணி நேர வேலை என்பது சட்டமாக இருப்பது குறைந்தபட்ச பாதுகாப்பாக இருக்கிறது! 8 மணி நேரத்திற்கு மேல் வேலைச் செய்தால் அதற்குரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்று இருப்பதால், உறிஞ்சப்படும் உழைப்புச் சக்திக்கு நிகராக இல்லையெனிலும், ஏதோ ஒரு இழப்பீடு கிடைத்து வருகிறது. அது பணமாக இருக்கலாம், அல்லது ஓய்வு, விடுமுறை, permission என்று தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ள இயலும்! அதுவும் கூட போராடித்தான் கிடைக்கும். கேட்ட உடனே விடுமுறை, அனுமதியெல்லாம் கிடைத்துவிடுகிறதா என்ன?

     12 மணி நேர வேலை என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. அப்படி இல்லை என்று சொல்வார்கள் எனினும், உடல் நலன் சார்ந்து உழைப்பு நேரம் தீர்மானிக்கப்படுவதே அறம்.

    பொருள் உற்பத்திக்கு தேவைப்படும் அவசிய உழைப்பு நேரத்தை விட கூடுதலாக உழைக்கத் செய்து லாபம் ஈட்டுவதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறை! இல்லையெனில் மூலதன திரட்டு நடக்காது! இப்படிப்பட்ட உற்பத்தி முறை குறித்த புரிதல் உள்ள எந்த அரசும் ‘அவுக கேக்குறாக, அதனால நாங்க கொடுக்குறோம்” என்று சொல்லாது! அப்படி சொல்லக் கூடிய அரசானது சமூக நீதிக்கான அரசும் அல்ல, தொழிலாளர் வர்க்க நலன் பேணும் அரசுமல்ல.

    முதலீட்டாளர்கள் flexibility கேட்கிறார்கள்.. எனவே என்கிறார் அமைச்சர்… அதுதான் ஏற்கனவே அந்த நெகிழ்வுத்தன்மை உள்ளதே, பிறகெதற்கு அது சட்டமாக வேண்டும்?

     தொழிலாளர் சட்டத் திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்று பா.ஜ.க முன்வைத்தபோதிருந்தே கம்யூனிஸ்டுகள், ஜனநாயக சக்திகள் எதிர்த்து வந்த நிலையில், அப்போது திரு. ஸ்டாலின் அவர்களும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அவர்களின ஆட்சியின் கீழ் சட்டமாக இயற்ற திருத்தம் செய்வது எத்தகைய நியாயம்?

     இது வெறுமென I.T நிறுவனங்களுக்கு, Overhead expensesஐ கட்டுப்படுத்த உதவும் என்பெதல்லாம் ஒரு வாதமா? முதலாளிகளின் நலனை மட்டுமே பேசுமளவுக்குத்தான் இங்கு மூளை உழைப்பாளர் வர்க்கம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது! அதுதான் முதலாளித்துவத்தின் வெற்றி! தன்னை ஒரு பொருளாதார அடிமையாக்கி, வெறும் உழைக்கும் இயந்திரமாக ஒரு கூட்டம் உறிஞ்சித் தள்ளுகிறது என்னும் உணர்வு (தொழிலாளர் வர்க்க உணர்வு) இன்றி, அவர்கள் லாபம் சம்பாதித்து தானே ஆக வேண்டும். அதுதானே வளர்ச்சி. முதலாளி நல்லா இருந்தாதானே தொழிலாளிங்க நாம நல்லா இருக்க முடியும் என்று வியாக்கியானம் பேச பழக்கப்பட்டுவிட்டார்கள்.

     தொழிலாளர்களே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் “உங்கள் தயவால் தான் முதலாளி வாழ்கிறான்! உங்கள் உழைப்புதான் அவர்களுக்கு செல்வத்தை உண்டாக்கித் தருகிறது! உழைப்புச் சக்தியின் பலம் தெரியாமல் முதலாளித்துவம் கற்பித்துள்ள.. அதாவது உழைப்புச் சுரண்டலாளர்கள் கற்பித்துள்ள ‘நியாயவாதம்’ பேசுவதை விடுத்து, வரலாற்று ரீதியாக இந்த தனியுடைமை உற்பத்தி முறை (அதாவது மனிதர்கள் பிழைத்திருப்பதற்காக தேவைப்படும் உற்பத்திக்கான அனைத்து பொருள்களையும் – மனிதர்களின் உழைப்புச் சக்தி உட்பட – மூலதனம் என்னும் பெயரில் ஒரு சில செலவந்தர்களின் கட்டுப்பாடில் இருப்பது) குறித்து, அதன் உழைப்புச் சுரண்டல் தன்மை குறித்து, லாபம் என்பது உண்மையான தேவையா, அதைத் தவிர மாற்று பொருளாதார அமைப்பு இல்லையா என்றெல்லாம் தொழிலாளர் வர்க்கம் படிக்க வேண்டும்.

     குறைந்தபட்சம் படித்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தாம் யார், தம்மின் பலம் என்ன, தம் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல் என்ன என்கிற தெளிவைப் பெற வேண்டும். கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும், படிப்பறிவு பெற முடியாத உழைப்பாளர் பட்டாளத்திற்கு இந்த வாய்ப்பு குறைவு, மூளை உழைப்பாளர்களுக்கு தான் இங்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது, எனவே தொழிலாளர் வக்கத்தின் பக்கம் நிற்க வேண்டிய அதிக பொறுப்பும் உள்ளது.

    ”அதான் எதுமே மாறலையே 48 மணி நேரம் தான இருக்கு என்றும், இதுதான் சாக்கு என்று கம்யூனிஸ்ட் மற்றும் யூனியன் வெறுப்பை கக்கிக் கொண்டும் இருப்பவர்களுக்கு கட்சி, சாதி, மதம், இன்னபிற அடையாளங்களால் சிந்தனையும் உணர்வும் மழுங்கிப் போய் இருப்பின், மார்க்சியம் படித்து சற்று கூர் தீட்டிக்கொள்ளலாம்! கூடுதலாக தலைவர் பாசம், கட்சிப் பாசம் கடந்து, பா.ஜ.க வந்துடும் என்கிற பூச்சாண்டிக் கதைகளை விட்டுவிட்டு எந்த ஒரு சூழலிலும் எளியோர் பக்கம், பாதிக்கப்படுவோர் பக்கம், ‘கீழ் நிலையில்’ தள்ளப்பட்டவர்கள் பக்கம் ஏன் நிற்க வேண்டும் என்கிற நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும்.

     தனியுடைமை ஒழிப்பில் தான் உண்மையான சமூக நீதி உள்ளது! இங்கே பொருளாதார அமைப்புதான் மனிதர்களின் வாழ்நிலைகளை, உணர்வுநிலைகளை தீர்மானிக்கிறது. இதனை அறிவியல்பூர்வமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை வழியொட்டி நடந்து ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் படைப்பதே கம்யூனிஸ்ட்-வர்க்க அரசியல்.

     ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்த 1% மூலதன கூட்டத்தின் நச்சுப் பிரச்சாரங்களாலும், பண்பாடு-சாதி-மதம்-இனம்-மொழி-ஊரு,தெரு, எங்காளு, உங்காளு, intersectionality, postmoderninsm என்று பல்வேறு பெயர்களால் இங்கே தொழிலாளர் வர்க்க அரசியல், மனிதர்களின் வாழ்நிலைமையை தீர்மானிக்கும் அடித்தளம் குறித்தும் பேசியும், இயங்கியும் வந்த கம்யூனிஸ்ட் அரசியல் குறித்து எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிவிட்டனர்.

    கம்யூனிஸ்டுகளையும், வர்க்கப் போராட்ட அரசியலையும் நக்கல் அடித்துக்கொண்டும், மார்க்ஸ் செர்மானில பொறந்தாரு, ‘மார்க்சியம்’ இங்க உதவாது என்று ‘தலைவர்’ பாச அரசியல் பேசிக்கொண்டு - தொழிலாளர் வர்க்க விரோத அரசியலில் ஈடுபடும் அடையாள அரசியல் எழுச்சியே முதலாளித்துவ தந்திரம் தான். அதற்கு வால் பிடிக்கும் அரசியல் கொடுக்கும் பலத்திலிருந்தே இத்தகைய தொழிலாளர் வர்க்க விரோத சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கு சாதகமான அரசுகள் ஆட்சியப் பிடிக்கின்றன. சில அரசுகள் நேரடியாக தெரிகின்றன. சில முதலாளித்துவ அரசுகள் போகப் போக வெளிப்படுகின்றன. அவ்வளவே! இந்துத்துவ எதிர்ப்போடு, முதலாளித்துவ எதிர்ப்பையும் மேற்கொள்ளாத சமூக நீதி அரசியல் என்பதன் ஆபத்து இது!

     அடையாளம் சார்ந்த எதிர்ப்புகளை விட நம் வாழ்வின் அத்தனை துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும் தனியுடைமைப் பொருளாதார அமைப்பை தகர்த்து எரியும் எதிர்ப்பு இன்னும் வீரியம் அடைய வேண்டும்.

     தொழிலாளர்_வர்க்கம்_ஒன்றுபட்டால்_நமக்குண்டு_வாழ்வு! ’எங்க ஆளு, எங்க கட்சி, எங்க தலைவரு’ என்கிற உணர்ச்சிகர அரசியலில் மட்டுமே இருப்போமெனில் முதலாளிகளுக்கு மட்டுமே உண்டு வாழ்வு!

பி.கு.

 8 மணி நேர வேலை என்று ஏன் எப்படி உருவானது என்பதற்கு உடல் நலன் ரீதியாக வலுவான காரணங்கள் உள்ளன. தேவைப்படும் ஓய்வு, உறக்கம் எத்தனை மணி நேர இடைவெளியில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஏதோ நகைச்சுவையான விசயமல்ல.

பேரறிஞர் அண்ணாவே சொல்கிறாரே!

 ”உழைத்ததால் செலவானது போக, ஓய்வினை அனுப விக்கத்தக்க அளவுக்கு வலிவு மிச்சம் கைவசம் இருக்க வேண்டும். வாழ வழி தேடுவதிலேயே கால முழுவதும், வலிவு முழுவதும் செலவாகிப் போய்விடுமானால், உருக்குலைவு ஏற்பட்டு விடுமானால், தோகை விரித்ததும் செத்துவிடும் மயிலாவான்; அரும்பு மலர்ந்ததும் அறுந்துபடும் கொடியாவான்; பயன் காணான், பயனளித்திடவும் மாட்டான்.”...

 ”ஆகவே பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று; அடிப்படை நீதி.” - பேரறிஞர் அண்ணா http://www.annavinpadaippugal.info/.../engu_sendralum_2.htm

 #ஓய்வு_நேரம்_என்பது_முதலாளி_தீர்மானிப்பதாக_இருக்கக்_கூடாது!_தொழிலாளர்_வர்க்கம்_தீர்மானிப்பதாக_இருக்க_வேண்டும்.

 முதலாளிக்கும் சேர்த்து உழைத்துக் கொடுக்கும் பாட்டாளி சேனைதானே இதுகுறித்த முடிவை எடுக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தை, அதன் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் திமுக அரசு இப்படி ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பது பா.ஜ.கவின் பாசிசத்திற்கு நிகரானது! (நெகிழ்வுத் தன்மையுடன்!) திமுக அரசு இதனை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்.

 ”ஓய்வு நேரம் - ஒய்வின் தன்மை ஆகியவற்றினைக் கொண்டு, ஒரு சமூகத்தின் நிலையை மதிப்பிடுகிறார்கள், அறிவாளர். பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கும் "ஓய்வு' இருக்கிறதே, அதனை நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள், நல்லறிவாளர். – பேரறிஞர் அண்ணா.

 #திராவிட_மாடலின்_நாகரிக_அளவுகோல்_என்ன?_உழைப்புச்_சுரண்டலுக்குத்_துணை நிற்பதா?

 Ref what Chief Minister Stalin said before:

https://minnambalam.com/.../12-hour-work-mk-stalin.../

“முத்தமிழறிஞர் கலைஞர் கோவையில் நடைபெற்ற மே தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய போது தொழிலாளர்களின் நலனுக்காக அறிவித்த 6 முழக்கங்களில் ‘இனி பணி நேரம் 6 மணிதான் எனக் கோரிக்கை வைப்போம் என்ற முத்தான முழக்கத்தை முன் வைத்தார்!

 ????????

  

Feb 10, 2023

தீட்டுக் கருத்தியலும், தொடை அறுப்பும்!

 


நான் 9ஆவது படிக்கும் போது வயதுக்கு வந்தேன்! 14-15 வயசு! 1990ஆ இருக்கும்.

எல்லா வீட்லையும் சொல்ற மாதிரி “தீட்டு”ன்னு தான் எங்க வீட்லையும் சொன்னாங்க! சடங்கெல்லாம் வச்சுக்கல! தனியா பால்கெனில படுக்க சொல்வாங்க! பாய், தலையனை எல்லாம் தனியா! (என் தோழிகளுக்கும் இதே நிலைமைதான்!)

 மேல பட்றாத, சாமி முன்னாடி வந்துடாத, சமையல்கட்டுக்கு வந்துடாத! சாமிக்கு மாலை போட்டவங்க முன்னாடி வந்துடாத… தலைக்கு தண்ணிய ஊத்து.. குளிக்கும் போது துணியெல்லாம் நனைச்சுடு! தீட்டு தீட்டு தீட்டு!

இதையெல்லாம் விடக் கொடுமை! உதிரப்போக்கை உறிஞ்சப் பயன்படுத்தும் துணி! ஆம்! தூமைத் துணி! எங்க காலத்துல துணிதாங்க! ஸ்டேஃப்ரீன்னு ஒண்ணு இருந்துச்சு.. விஸ்பர் அப்புறம் தான் வந்துச்சு! ஆனா அதெல்லாம் வாங்கித்தர அளவுக்கு விழிப்புணர்வும் இல்ல! செலவு பண்ன மனசில்ல! பிற்காலத்தில் அதற்கு மாறினேன்!

 அயலில ப்ராவால வர காயத்தை இயக்குனர் பதிவு பண்ணி இருந்தார். அதேமாதிரி தூமைத் துணியால பட்ட அவஸ்தைகளை இப்ப நினைச்சாலும் கண்ணுல ரத்தம் வருது!

 தூமைத் துணியை துவைச்சு துவைச்சு பயன்படுத்திக்கனும்.. வெளில தெரியுற மாதிரி காயப்போடக் கூடாது (அயலியில் இதும் உள்ளது)! அந்தத் துணி ரத்தம் உறிஞ்சு உறிஞ்சி எப்படி இருக்கும்! கரடுமுரடா… கத்தி மாதிரி தொடைகளை அறுக்கும்! மாசா மாசம் இப்படித்தான்! மாதவிடாய்னாலே பயம் தான் வரும்.. ஐயோ தொடையை அறுக்கப் போகுதே! நடக்க முடியாதே! இன்னொரு பக்கம் இடுப்பு வலி!

 தொடக்ககால மாதவிடாயில் உதிரம் கெட்டி கெட்டியாகவும் போகும்! அந்த துணி எப்படித் தாங்கும்? அதுலையும் பத்தாம் வகுப்புக்கு தயாராகுற பரீட்சை நேரத்துல… ப்பா இப்ப நினைச்சாலும் ரணமா இருக்கு!

 துணி எம்புட்டு ரத்தம் தாங்கும்.. பரீட்சை எழுதிட்டு இருக்கும் போது முழுசா ஈரமாகிடும்.. எந்திரிச்சு பேப்பர் வேற கேக்கனும். நான் படிச்சது Co-Ed! ரத்தக் கறை uniform ல படிஞ்சிருச்சுன்னு தெரியும்.. என்ன செய்றதுன்னு அழுகையா வரும். வேற வழியில்லாம எந்திரிச்சு பேப்பர் கேக்குறதும், துணியை மாத்திட்டு வரேன்னு போறதுமா இருந்திருக்கேன். அதுலையும் எங்க பள்ளிக்கூட கழிப்பறை இருக்கே… உள்ள போய்ட்டு உசுரோட வெளிய வரதே அதிர்ஷ்டம்.

இதுல துணி தொடை இடுக்குகளை அறுத்து அறுத்து.. தடிச்சு.. நடக்க முடியாம நடந்து! தேங்காய் எண்ணெயா தடவி… ஒரு வழியா பொறவு நாப்கினுக்கு மாற முடிஞ்சுது.

 அதேமாதிரி ஒரு கட்டத்துக்கு மேல! கல்லூரி படிக்க ஆரம்பிச்சப்புறம்.. அப்ப நான் பகுதி நேர வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டேன்… ”என்னா இது நம்ம உடம்பை தீட்டு தீட்டுன்னு சொல்றாங்கன்னு ஒரு கோவம் வந்துச்சு! பெரியார்லாம் அப்ப தெரியாதுங்க! நான் தனியால்லாம் படுக்க முடியாது. என் படுக்கைல தான் படுப்பேன்னு “உள்ள வர ஆரம்பிச்சேன்”! ஆரம்பத்துல தனியா பாய்ல படுத்துக்கன்னு விட்டாங்க.. அப்புறம் அவங்களும் மொத்தமா விட்டுட்டாங்க! பாவம்! வீட்டாளுங்கள சொல்லி என்ன இருக்கு! அவங்களை அப்படித்தான மிரட்டி வச்சுருக்காங்க..

 பொம்பளைங்க உடம்பாலையும், மனசாலையும் எத்தனை வலியையும், அவமானங்களையும், கட்டுப்பாடுகளையும், பாகுபாட்டையும் தாங்கிக்கிட்டு இருக்கோம்! அதை உணர்ந்தப்புறம் வெளிய வந்து பேசுனா... முட்டாள் கூட்டமும், ஆணாதிக்கம், சாதி, மத வெறி புடிச்ச கூட்டமும் “நீ ஊர் பொறுக்கத்தான இப்படி பேசிட்டு திரியுறன்னும்”! அதுக்கும் ஆப்பு வைக்குற அளவுக்கு நம்ம தலைவருங்க நமக்கு கத்துக்கொடுத்திருக்காங்க!

 பார்ப்பன வெறுப்பு, கடவுள் மறுப்பு, ஆணாதிக்க சமூகம் ஒழியனுங்குற கோவம்லாம் இந்த மாதிரி “ஒதுக்கல்ல.. அவமானத்தால.. பாகுபாட்டுல” இருந்துதான் வந்துச்சு.. என் உடம்பை தீட்டு, அழுக்கு.. நீ வேறன்னு சொல்லி சொல்லி… உள்ள தேங்கிக் கிடந்த கோவம், கேள்விகளுக்கும், சமூகம் ஏன் இப்படி இருக்குங்குற காரணம் என்னங்குறதையும் பின்னாடி தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு நான் வசுமித்ரவுக்கு தான் நன்றி சொல்லனும்…

 பொம்பளையும், தலித்தும் ஒண்ணுதான்.. அதுலையும் உழைக்குற கூட்டம்தான் எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்குதுங்குற புரிதல் மார்க்சியம் படிச்சு வந்துச்சு.. அந்த புரிதல்ல நாம இயங்குனாலும் இங்க ஒரு சிலர் தங்களோட பிழைப்புக்காக நமக்கு பல முத்திரைகளை குத்துவாங்க! இன்னார் வலி இன்னாருக்கு தான் தெரியும்னு! ஆனா பாருங்க பொம்பளைங்க வலிய பெருசா பேசுனவங்கல்லாம் (பெரும்பாலும்) ஆம்பிளைங்க! அதே மாதிரி தான் எந்த ஒடுக்குமுறை குறித்தும் யாரும் உணர்ந்து empathize செய்ய முடியும்… உழைக்குற வர்க்கமா இருக்குறதால! இதுலையும் கூட வர்க்க உணர்வும் தானா வந்துடுறதுல்ல! அதுக்கும் இங்க அரசியல்மயப்படுத்த வேண்டி இருக்கு!

 கேள்விகளும்.. விழிப்புணர்வும் தான் ஒருத்தருக்கு அடையாளமா இருக்குமே ஒழிய.. (தங்களுக்கு புடிச்சவங்கள விமர்சனம் பண்றதாலையே) பொறப்பை வச்சு ஒருத்தரை ஓரம் கட்ட நினைக்குறதும் பார்ப்பனியம்தேன்!

 அயலி பலவிதமான உரையாடல்களை நிகழ்த்த வைக்கிறது!

 இணையத் தொடர்கள் வரிசையில் #அயலி நிச்சயம் ஒரு மைல்கல்!

 #ayaliwebseries #Ayali effect on society is hopeful ❤️

 

மகளே தாயுமானவள் ❤️

 


என் வாழ்நாளில் மிக முக்கியமான, பொக்கிஷம் என்று நான் கருதும் பதிவிது.

 என் மகள் வருணா எனக்கொரு புத்தகத்தையும், ஒரு பாடலையும் இன்று பரிசளித்தாள். அந்த புத்தகத்தின் பெயர்: நச்சியல்பான பெற்றோர்! தலைமுறை தலைமுறையாக பெற்றோரால் அடைந்த பாதிப்புகளைக் கடந்து உங்கள் வாழ்வை மீட்டெடுத்தல். (ஆங்கில தலைப்பின் மொழிபெயர்ப்பாக நான் கொடுத்துள்ளது).

 பாடல்:  #londonssong today  by Matt Hartke

 என்னது! நச்சியல்பான பெற்றோரா! என்று தலைப்பைப் பார்த்து அப்படியென்றால் ”நீ ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த தாயா” என்று நினைத்துவிடாதீர்கள்!

 இல்லை! நான் என் வாழ்வை மீட்டெடுக்க என் மகள் எனக்கு உதவுகிறாள்! தன் தாயின் துன்பகரமான வாழ்விற்கான (பகுதியளவு) காரணங்களை அறிந்த ஒரு மகள் அன்பையும், காயங்கள் ஆற்றும் அருமருந்தையும் தருகிறாள். இந்த புத்தகத்தை அவள் 3 முறை படித்துவிட்டாளாம்!

 நச்சியல்பான பிள்ளை வளர்ப்பு என்பது வளையம் போன்றது! பிற்போக்குத்தனமான சமூகத்தின் விளைவான ஒரு சங்கிலித் தொடர்.. நமது பெற்றோர் அதற்கு பலியாடு! அவர்களின் பெற்றோரும் அதற்கு பலியாடு!

 எனது குழந்தைப் பருவம் ஒரு கொடுங்கனவு! குடும்ப வன்முறை, உறவினரின் பாலியல் துன்புறுத்தல் என்று கொடுமைகளால் மட்டுமே நிறைந்தது. என் தாய் எந்த வகையிலும் நச்சியல்பானவள் அல்ல! பாவம்! அவளும் ஆணாதிக்க குடும்ப (வன்முறை) அமைப்பின் பலியாடே!

 மிகவும் மோசமான குழந்தைப் பருவ காலத்து பாதிப்பினால் நாமே அறியாமல் ஏதேதோ ரணங்கள், மன அழுத்தம், கவலைகள், மனப்பதற்றம் ஆகியவை நமக்குள் தேங்கிக் கிடக்கும். உரிய நேரத்தில் அதனை ஆற்றாது தவற விட்டுவிடுகிறோம்.  எனக்குள் சமீப காலமாக அவை மேலெழத் தொடங்கியுள்ளன! ஆம் அந்த நடுக்கத்தை அவ்வப்போது உடலில் உணர்கிறேன்! ஏனென்றால் அத்தனை காயங்களையும் மனம் மட்டுமல்ல உடலும் தான் தாங்கிக் கொள்கிறது!

 இது பற்றிய பேச்சு அத்தனை எளிமையானதல்ல!

 எங்கள் வாழ்க்கை குறித்து நானும் எனது மகளும் நிறைய பேசுவோம்! மன நலன் குறித்துப் பேச நாங்கள் தயங்குவதே இல்லை! எதையுமே பேசுவதை தவிர்ப்பதுமில்லை! ஏனென்றால், காயங்கள் ஆற்றும்! தலைகோதி தேற்றும் விரல்கள் அவளுக்கும் தேவைதானே! நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தேவை! ஆனால் இதையெல்லாம் பேசினால் நம்மை என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கம் அதற்கு தடை போடும்.

 எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகத்தான் என் மகள் எனக்கு இன்று இந்த புத்தகத்தையும், பாடலையும் பரிசளித்தாள். அந்த பாடல் ஒரு தந்தை தனது மகளுக்காக எழுதியது. அதைக் கேட்ட உடன் அவள் என்னைத்தான் அதில் கண்டதாக கூறினாள். இதை விடப் பேரானந்தம் என்ன இருக்க முடியும்?

 மகளே தாயுமானவள் ❤️

 இந்த புத்தகம் குறித்து படிக்கப் படிக்க பகிர்வேன்!

 உங்கள் தனிப்பட்ட வாழ்வையெல்லாம் ஏன் பகிர்கிறீர்கள் என்று யாரேனும் வருவீர்கள் எனில், உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் “தனிப்பட்டது என்று எதுவுமில்லை! அனைத்தும் அரசியல்மயமானதே! சமூகமயமாக்கல் என்பது புறத்தால் நிகழ்வது! அது அக பாதிப்பை ஏற்படுத்துகிறது! எனவே தனிமனித பாதிப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதிலிருந்து மீளத் தவிக்கும் மனங்களின் துடிப்பு எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 அதோடு சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த இது ஓர் அறிவார்ந்த பகிர்வு!

 #kotravai shares love!

#momdaughterlove

Feb 8, 2023

வலுத்ததே வாழும் என்பது மனிதர்களுக்குப் பொருந்தாது

 


”வலுத்ததே வாழும் என்பது மனிதர்களுக்குப் பொருந்தாது” – கொற்றவை

ஒன்றை ஒன்று அடித்து வாழ்வது இயற்கையே என்று விலங்குகளை உதாரணமாகக் காட்டி மனிதர்கள் மற்ற மனிதர்களை ஏய்த்தும், சுரண்டியும் பிழைத்து வாழ்வதை பலர் நியாயபடுத்துகிறார்கள்.  இது மிகவும் தவறான ஒப்பீடு! தவறான நியாயவாதம்!

இயற்கையில் ஒவ்வொன்றும் மாறுபட்டது! மனிதர்கள் விலங்கினின்று மாறுபட்டவர்கள். விலங்கு போல் நடந்துகொள்ளாதே என்றும், விலங்கே அப்படித்தானே அடித்து வாழ்கிறது என்றும் தேவைக்கேற்ப மனிதர்கள் நியாயங்களை கற்பித்துக்கொள்கிறார்கள்.

ஆம்! விலங்கு அடித்து உண்டு வாழ்கிறது ஏனென்றால் அதற்கு உழைக்கத் தெரியாது! சிந்திக்கத் தெரியாது! உழைப்பும், இயற்கையை தன் வயப்படுத்திக்கொள்ள பொருள் தேவையின் அடிப்படையிலான மனித சமூக சிந்தனை இயக்கமும், அதன் விளைவாக அவர்கள் உண்டாக்கும் உழைப்புக் கருவி உள்ளிட்ட பொருட்களும், ஒழுங்கமைக்கும் ஏற்பாடுகளும் தான் அனைத்து உயிரினங்களில் இருந்தும் மனிதனை வேறுபடுத்துகிறது.

ஆக! மனிதர்கள் உழைக்கத் தெரிந்தவர்கள்! அந்த உழைப்பு என்பது இயற்கையை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நிகழ்கிறது. இயற்கை என்பது பொதுச் சொத்து! அதை சில தனி மனிதர்கள் ”மூலதனம்” என்னும் பெயரில் கையகப்படுத்திக்கொண்டு மற்ற மனிதர்களை உழைக்கச் செய்து, அந்த உழைப்பின் பலனை அபகரித்து வாழ்கின்றனர். விலங்குகள் தம் பசிக்கு இயற்கையை சார்ந்திருக்கும் முறையிலிருந்து மாறி மனிதர்கள் உழைப்பு மற்றும் சிந்தனை மூலம் வெகுவாக முன்னேறிவிட்டார்கள்.

உழைப்பு என்பது கூட்டுச் சமூக செயல்பாடு. அதன் பலன்களும் கூட்டாகத்தான் பிரித்தாளப்பட வேண்டுமே ஒழிய “இருக்குறவன் ஆள்றான்! அனுபவிக்குறான்” என்று வியாக்கியானம் செய்து நம்மை அத்தகைய சுரண்டலை ஏற்றுக்கொள்ள பழக்கிவிட்டார்கள்!

“ஒருத்தண்ட இருக்குறது ஏன் அடுத்தவன் கிட்ட இல்ல” என்று சிந்திப்பதில் தான் சமூக நீதியின் தொடக்கப்புள்ளி அடங்கியுள்ளது! சொத்து / வளம் / மூலதனம் / உற்பத்திக் கருவிகள் அதன் மீதான அதிகாரம் எப்படி ஒரு சிலருக்கு வாய்க்கப் பெற்றது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள #மார்க்சியம் படிங்க.

புலினா மானை வேட்டையாடத்தாம்லே செய்யும்” னு எவனாச்சும் / எவளாச்சும் சொன்னா – “எலே அது புலிலே… நீ மனுசன்… உனக்குத்தான் உழைச்சு சாப்புட கை, கால் இருக்குல” என்பதே பதில்…

”கடுமையா உழைச்சு தான வாழ்றோம், ஆனா என்னத்தக் கண்டோம்! அடிச்சு புடுங்கித் திங்குறவனெல்லாம் நல்லாருக்கான்!” என்று நொந்துகொள்வோமெனில்… அந்த அநியாயத்தை நிறுத்த வேண்டுமே அல்லாது, விலங்கோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.

இதுல வேற பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கும் புலி, மானுன்னு கிளம்பி வராய்ங்க! “புலிக்கும் உனக்கும் என்னவே சம்பந்தம்”! புலி வாழ்ற மாதிரியா நீ வாழ்ற?

இதெல்லாம் விளங்கனும்னா குறைந்தபட்சம் இந்த புத்தகத்தையாச்சும் வாசிக்கவும்: "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" - எங்கெல்ஸ்

அதிகாரம், வல்லுறவு, சுரண்டல் இவற்றையெல்லாம் எதிர்க்கத்தான் மனிதனுக்கு அறிவு தேவை, மேற்சொன்ன முட்டாள் உதாரணங்களை சொல்லி அநீதிகளை நியாயப்படுத்துபவர்கள் மனிதர்களே அல்ல!

 

Jan 26, 2023

சங்கிகளின் உளறல்களுக்கு பதில் 1

 


1.    கலைஞர் இப்படி பேசியது உண்மையா என்று எனக்கு தெரியாது! உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது தவறு! ஆணாதிக்கப் பேச்சுதான். அரசியலில் எதிரிகளை தாக்குகிறேன் என்று ஆணாதிக்கத் திமிரோடு பேசறதுதான கெத்துன்னு எல்லா ”மைய” கட்சிகளும் நினைக்குறாங்க! முதலில் நான் திமுக ஆளுமில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளவும்!

 

திமுக ஆதரவு என்பது தற்போதைய மதவாத ஃபாசிச பா.ஜ.க. / அதிமுக கூட்டணிக்கு எதிராக தேவைப்படும் சமூக ஜனநாயக ஆதரவு என்னும் அளவில்தான்! இதுதான் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை! கூட்டணிக்கு காரணமும் அதுவே!

 

2.    கலைஞர் மட்டுமில்லை கார்ல் மார்க்ஸே தவறாக பேசினால் தவறு என்று விமர்சிக்கும் #துணிவும் #நேர்மையும் எங்க கிட்ட இருக்கு! உங்க தலைவர் அண்னாமலை தொடங்கி மோடிஜியின் தவறுகளை விமர்சிக்கும் துணிவும் நேர்மையும் உங்க கிட்ட இருக்கா?  


        மேற்சொன்ன துணுக்கை பற்றி விசாரித்த போது அது பொய் செய்தி என்றும் இந்திரா காந்திக்கு அன்று அடிபடவே இல்லை என்றும் தோழர் அருண் தெளிவுபடுத்தியுள்ளார்.


 


Now Sanghis have to provide the proof

nn

       பெரியார், அம்பேத்கர் போதாமைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில அணுகுமுறைகள் குறித்த விமர்சனப் பேச்செல்லாம் பார்க்குறதில்ல போல! என்னை தற்காக்கும் பேச்சல்ல இது! மார்க்சியம் என்பதே விமர்சனத்தின் மூலம் இயங்குவதுதான்! அதுபற்றி தெரியாமல் வடை சுடக் கூடாது!

 அவ்வளவு அரசியல் நேர்மை உள்ளவங்க நீங்கன்னா முதல்ல உங்க தலைவரை விமர்சனம் பண்ணி எழுதுங்க!

 

3.    காயத்ரி மேடம் சக்தி யாத்திரை போய் நீதி கேக்குற அளவுக்குல்ல இருக்கு உங்க கட்சில பெண்களோட நிலைமை! ஐஸ்வர்யா ஒரு பெண்ணாக அவர் கருத்தை கூறினால் அதற்கு எப்பேற்பட்ட ஆபாச பேச்சுகளை பேசுகிறீர்கள்? அவரது தொழிலை கூத்தாடி, நடிக்குற வேலைய மட்டும் பாரு, எங்களுக்கு ஆலோசனை சொல்லாத என்று பேசுமளவுக்கு உங்கள் ஆதரவாளர்கள் திமிர் பிடித்து இருக்கிறார்கள் என்றால், உங்கள் கட்சி நடிகர் நடிகைகளை ஏன் பிரச்சாரத்திற்கு அழைக்கிறது?  ஸ்மிருதி இரானி நடிகை தானே? அவர் ஏன் பதிவியில் இருக்கிறார் என்று கேட்கலாமா?

 4.    ஒரு குறிப்பிட்ட தொழிலை கேவலமாக பேசுவதென்பது பார்ப்பனிய புத்தி! அந்த வழி வந்தவர்கள் அப்படித்தானே இருப்பீர்கள்!

 5.    அடுத்ததாக, மசூதில பெண்களை உள்ள விடல இதை ஏன் கேக்க மாட்றீங்க? இதுவும அரதப் பழசான கேள்வி! பல முறை பதில் சொல்லியாச்சு இந்துமத வெறியர்களே!

 ஜனநாயக சக்திகளின் முதல் எதிர்ப்பென்பது அந்தந்த நாட்டின் ஆளும் வர்க்க அதிகார மையங்களை நோக்கித்தான்! இந்த நாட்டில் அது இந்து மதம், பார்ப்பனியம் என்று இருக்கிறது! இஸ்லாமிய, கிறித்தவ, யூத நாடுகளில் அந்தந்த மதங்கள் அதிகார்த்தில் இருக்கையில், அந்தந்த மதங்களில் ‘பிறந்ததாக’ இருப்பவர்கள் முதலில் தங்கள் மத அதிகாரத்தை தான் கேள்வி கேட்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்! ஏனென்றால் அந்தந்த நாடுகளில் ஆட்சியில் இருக்கும் மதங்களைத் தவிர மற்றவை ‘சிறுபான்மையினர்’ அவர்கள் மீதான ஒடுக்குமுறையை கேள்வி கேட்பது தான் சமூக நீதி!

 ஆளும் வர்க்க ஒடுக்குமுறையை எதிர்ப்பதே அறம்!  

 அதேவேளை மதம் என்று வரும்போது ஒரு மதத்தினர் இன்னோர் மதத்தை தாக்கிப் பேசுவது மதக் கலவரத்திற்கே வழிவகுக்கும். சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், சமூக நீதி அரசியல் ரீதியாகவும் அதை செய்வது தவறு மட்டுமின்றி… சமத்துவ அரசியல் புரிதலற்ற ஆர்வக்கோளாறு நடுநிலைவாதம்!  கடவுள் மறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக மதம் என்பதே ஒடுக்குமுறை கருவிதான் என்று பேசுவதையும் சேர்த்து படிங்க!

 அந்தந்த மதங்களில் நிலவும் ஒடுக்குமுறையை அந்தந்த மதத்தினரே எதிர்த்து வருவதை படிப்பதில்லையா நீங்கள்? நாட்டு நடப்பு தெரியாதா?

 

சட்டை போடாம வெளிய வருவேன், ஜட்டி போடாம வெளிய வருவேன் என்று வாய் சவடால் விடும் நேரம்…. ஹிஜாப் தொடங்கி கல்வி கற்க தடை என்பது வரை இஸ்லாமியப் பெண்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து தேடிப் படிங்கள்!  கார் ஓட்டக் கூடாது என்று சவுதியில் நிலவிய தடைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் குறித்து படிக்கவும்!

 

அதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள் குறித்துப் படிக்கவும்.

 

சமூக ஜனநாயகம் என்பது மானுட நேசம்! ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பதே நீதி! மத வெறி, சாதி வெறி, ஆணாதிக்க வெறி, பண வெறி, அதிகார வெறி உள்ளவர்களுக்கு அவை தம் கட்சியை, அரசியலை இருப்பை வளர்க்கத் தேவைப்படும் “கொள்கைகள்”!

 

உன் வீட்ல குப்பைய வச்சிருக்கியேன்னு கேட்டா! பக்கத்து வீடு கூட தான் நாறுதுன்னு பேச எதுக்கு அறிவு?

கம்யூனிஸ்ட் அமைப்புகள்ல விமர்சனம், சுய விமர்சனம் என்னும் அணுகுமுறை, ஜனநாயகம் எல்லாம் உண்டு! கட்சித் தலைவராக இருந்தாலும் உட்கட்சி கூட்டங்களில் / அல்லது கட்சியில் இல்லை என்றால் தோழர் நீங்கள் இந்த விசயத்தில் இப்படி பேசியது தவறு என்று தோழமையோடு விவாதிக்கும் ஜனநாயக போக்கு உண்டு! சக கம்யூனிஸ்ட் அமைப்பு குறித்து இன்னொரு கம்யுனிஸ்ட் அமைப்பு எழுதும் விமர்சன நூல்களும் உண்டு! மீண்டும் கேட்கிறேன் உங்கள் தலைவரை, அமைப்பை விமர்சிக்கும் துணிவு உங்க கிட்ட இருக்கா? 

விமர்சிக்கும் அளவுக்கு எந்த தவறுமே உங்கள் தரப்பில் இல்லை என்பீர்கள் எனில் இனிமேல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்குமில்லை! 

உங்கள் அரசியல் பிழைப்பிற்காக நீங்கள் உளறுவதை உளறுங்கள், காலமும் மக்களும் தீர்ப்பளிப்பார்கள்! அறமற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! 

 


Dec 7, 2022

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு ...

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு:

நீ எப்படி அந்த படத்துல  நடிச்ச

இந்த படத்தோட போஸ்டர ஷேர் பண்ற

மாலுக்கு போய் காஸ்ட்லி ஷாப்பிங் பண்றியே

(இவைங்க தான் கவுண்டர்ல பில் பண்ணாய்ங்க)

எப்படி அந்த ”blah blah blah”

மார்க்ஸ் மனசு வருத்தப்படுவாராம்!

மார்க்ஸைப் படிச்சிருந்தா இப்படி பொறணி பேச மாட்டீங்க! கேக்குற எவனாச்சும் கம்யூனிஸ்டான்னா அதுவும் இல்ல! கேக்குறவைங்க என்ன வேலை செய்றானுங்கன்னு பார்த்தா அவனுங்களும் ஒண்ணு அரசு நிறுவனத்துல இருப்பாய்ங்க, முதலாளித்துவ நிறுவனம் அல்லது சுய தொழில் செய்வாங்க, அல்லது NGO, அரசியல் கட்சி ;) 

”அந்த படத்துல  ஹீரோயின அப்டி காட்டுனாங்க.. நீ எப்படி அதை ஷேர் பண்ற”... டேய் மாய்ங்காய்களா.. அந்த நாயகன்  lustfullaa ஒரு பொண்ணை பார்க்குறான்னா. அவன் கண்ணோட்டத்துல அப்படித்தான காட்டுவாங்க! அதுக்கும் மேல படத்தை  பத்தி விமர்சனம் இருந்தா பொதுவெளில எழுது! அடுத்தவங்க படிச்சு தெரிஞ்சுக்கட்டும்!

நான் நடிச்ச படத்துல என் நடிப்பை பத்தி வேணா விமர்சிக்கலாம்! grrrrrr

கூலிக்கு வேலை செய்றவங்க கிட்ட நீ ஏன் அந்த வேலைக்கு போன  இந்த வேலைக்கு போனன்னு கேக்குற உரிமை எந்த பயலுக்கும் இல்ல! (மார்க்சியம் தரும் தெளவுப்போய்!). 

ஏற்கனவே பதில் சொல்லிருக்கேன்.. அரசாங்கத்துல வேலை பார்த்துக்கிட்டே தான் தொழிற்சங்கம் அமைச்சு போராடுறோம்! முதலாளிகிட்ட கூலி வாங்கிட்டே தான் முதலாளித்துவத்துக்கு எதிரா போராடுறோம்!

நான் மட்டும் தனியா ஒரு கிரகத்த கட்டிக்கிட்டு வாழமுடியாது! கம்யூனிஸ்டுங்குறதால எவனும் எனக்கு ஓசில எதும் தரப் போறதும் கிடையாது.. சொல்லப்போனா கம்யூனிஸ்ட்னு இவ்ளோ தீவிரமா பேசுறதால வேலை கிடைக்காம போறதுதான் மிச்சம்! அப்ப கிடைக்குற வேலைய செஞ்சுதாண்டா பொழைக்கனும் என் சிப்ஸு! அதுலையும் சீக்காகிப்படுத்தா ஆஸ்பத்ரி செலவு மட்டும் அம்புட்டு ஆகுது! கடன் வேற கழுத்தை நெறிக்குது! 

 மார்க்சியம் படிச்சிருந்தா கூலி உழைப்புனா என்ன, கூலி உழைப்பாளர்களின் உரிமைனா என்ன, மார்க்சியத்தின் அடைப்படை என்ன, அமைப்புக்குள்ள இருந்துக்கிட்டே போராடுறதுன்னா என்ன … சமூக அமைப்புனா என்ன.. புரட்சினா என்ன.. அதுக்கு முன் நிபந்தனைனா என்னன்னு தெரியும்!

தனிமனித சாகசத்துக்கும் மார்க்சியத்துக்கும் சம்பந்தம் இல்ல ஓய்! இருக்குற சமூக அமைப்புல (உற்பத்தி முறை, உழைப்பு உறவு) இதுல எல்லாம் என்ன பிரச்சினை, அதிகார ஒடுக்குமுறைனா என்ன, சுரண்டல்னா என்னன்னு மக்களுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி… அநீதிய அவங்களுக்கு புரியவச்சு… மக்கள ஒண்ணு திரட்டி உற்பத்தி முறைய மாத்த களம் இறங்க வைக்குறதுதான் ஒரு கம்யூனிஸ்டோட வேலை! அதை செய்றதுக்கு தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கு…. அந்த சித்தாந்த பரப்புரை செய்றதும் மற்றும் கம்யூனிஸ்ட்களோட ஏன் சேரனும்னு சொல்ற ஒரு சின்ன வேலைய நான் எடுத்துக்கிட்டேன்… அதுவும் எனக்கு அதுல தீர்வு இருக்குன்னு தோணுறதால… நான் அதை உயர்த்திப் பிடிக்குறேன்.  தங்களுடைய வாழ்க்கைய, உயிரை பணையம் வச்சு களத்துல உழைக்குற கம்யூனிஸ்டுங்க பணியளவுக்கு இது இல்லைன்னு நானே சொல்லுவேன்! ஆனா அவங்க செய்ற களப்பணிக்கு பின்னாடி இருக்குற நண்மையை புரிய வச்சு, ஆதரவு திரட்டித் தர முடியுமான்னு பார்க்குறேன்! காவி வேட்டி கட்டிக்கிட்டு ’பஞ்சப் பராரி’ மாதிரி திரியுறவனெல்லாம் உண்மையா சமூகத்துக்கு உழைக்கிறாங்கன்னு நினைக்குறதே மதவாத பார்வை! அதனால தான் அவைங்க காவிய உடுத்திக்கிட்டு ஊரை கொள்ளையடிச்சுட்டு திரியுறானுங்க! மார்க்சியங்குறது அது இல்ல!  It is not self-deprivation! 

லாபத்தை அடிப்படையாகக் கொண்ட  உழைப்புச் சுரண்டல் கூடிய தனியுடமை உற்பத்தி முறை ஒழிக்கப்படனும், பொதுவுடைமை உற்பத்தி முறைய நிறுவனும் அதுதான் எல்லா பிரச்சினைக்கும் தீர்வுன்னு பேசுறதுக்காக … துறவு வாழ்க்கை வாழ சொல்லி மார்க்ஸ் எங்கல்ஸ் சொல்லல…. போய் மார்க்சியம் படிங்க! புள்ள குட்டிங்கள படிக்க வைங்க!

”ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு” என்று கேட்கும் எல்லார் கிட்டையும் எவ்வளவு அறச்சீற்றம்! Political correctness! ப்பா என்ன ஒரு சித்தாந்த தெளிவு! நாளைய விடுதலை இவங்களால தான் சாத்தியப்படப் போகுது! அவ்ளோ தூய ஆத்மாக்கள்! நமக்கு காவி கட்டிப் பார்க்காம ஓய மாட்டாங்க!

என் திமிர் தான் என்னை வாழ வைக்குதுன்னு சொல்லிருக்கேன்ல!

என் உழைப்புல நான் வாழ்றேங்குற திமிரும் அதில் அடக்கம்!

உழைப்புத் தத்துவத்த மதவாத ஒழுக்கக் கோட்பாடா நீங்க வேணா பாருங்க! எனக்கு அந்த அவஸ்தை இல்ல!