Showing posts with label தாய்மை. Show all posts
Showing posts with label தாய்மை. Show all posts

Feb 10, 2023

மகளே தாயுமானவள் ❤️

 


என் வாழ்நாளில் மிக முக்கியமான, பொக்கிஷம் என்று நான் கருதும் பதிவிது.

 என் மகள் வருணா எனக்கொரு புத்தகத்தையும், ஒரு பாடலையும் இன்று பரிசளித்தாள். அந்த புத்தகத்தின் பெயர்: நச்சியல்பான பெற்றோர்! தலைமுறை தலைமுறையாக பெற்றோரால் அடைந்த பாதிப்புகளைக் கடந்து உங்கள் வாழ்வை மீட்டெடுத்தல். (ஆங்கில தலைப்பின் மொழிபெயர்ப்பாக நான் கொடுத்துள்ளது).

 பாடல்:  #londonssong today  by Matt Hartke

 என்னது! நச்சியல்பான பெற்றோரா! என்று தலைப்பைப் பார்த்து அப்படியென்றால் ”நீ ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த தாயா” என்று நினைத்துவிடாதீர்கள்!

 இல்லை! நான் என் வாழ்வை மீட்டெடுக்க என் மகள் எனக்கு உதவுகிறாள்! தன் தாயின் துன்பகரமான வாழ்விற்கான (பகுதியளவு) காரணங்களை அறிந்த ஒரு மகள் அன்பையும், காயங்கள் ஆற்றும் அருமருந்தையும் தருகிறாள். இந்த புத்தகத்தை அவள் 3 முறை படித்துவிட்டாளாம்!

 நச்சியல்பான பிள்ளை வளர்ப்பு என்பது வளையம் போன்றது! பிற்போக்குத்தனமான சமூகத்தின் விளைவான ஒரு சங்கிலித் தொடர்.. நமது பெற்றோர் அதற்கு பலியாடு! அவர்களின் பெற்றோரும் அதற்கு பலியாடு!

 எனது குழந்தைப் பருவம் ஒரு கொடுங்கனவு! குடும்ப வன்முறை, உறவினரின் பாலியல் துன்புறுத்தல் என்று கொடுமைகளால் மட்டுமே நிறைந்தது. என் தாய் எந்த வகையிலும் நச்சியல்பானவள் அல்ல! பாவம்! அவளும் ஆணாதிக்க குடும்ப (வன்முறை) அமைப்பின் பலியாடே!

 மிகவும் மோசமான குழந்தைப் பருவ காலத்து பாதிப்பினால் நாமே அறியாமல் ஏதேதோ ரணங்கள், மன அழுத்தம், கவலைகள், மனப்பதற்றம் ஆகியவை நமக்குள் தேங்கிக் கிடக்கும். உரிய நேரத்தில் அதனை ஆற்றாது தவற விட்டுவிடுகிறோம்.  எனக்குள் சமீப காலமாக அவை மேலெழத் தொடங்கியுள்ளன! ஆம் அந்த நடுக்கத்தை அவ்வப்போது உடலில் உணர்கிறேன்! ஏனென்றால் அத்தனை காயங்களையும் மனம் மட்டுமல்ல உடலும் தான் தாங்கிக் கொள்கிறது!

 இது பற்றிய பேச்சு அத்தனை எளிமையானதல்ல!

 எங்கள் வாழ்க்கை குறித்து நானும் எனது மகளும் நிறைய பேசுவோம்! மன நலன் குறித்துப் பேச நாங்கள் தயங்குவதே இல்லை! எதையுமே பேசுவதை தவிர்ப்பதுமில்லை! ஏனென்றால், காயங்கள் ஆற்றும்! தலைகோதி தேற்றும் விரல்கள் அவளுக்கும் தேவைதானே! நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தேவை! ஆனால் இதையெல்லாம் பேசினால் நம்மை என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கம் அதற்கு தடை போடும்.

 எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகத்தான் என் மகள் எனக்கு இன்று இந்த புத்தகத்தையும், பாடலையும் பரிசளித்தாள். அந்த பாடல் ஒரு தந்தை தனது மகளுக்காக எழுதியது. அதைக் கேட்ட உடன் அவள் என்னைத்தான் அதில் கண்டதாக கூறினாள். இதை விடப் பேரானந்தம் என்ன இருக்க முடியும்?

 மகளே தாயுமானவள் ❤️

 இந்த புத்தகம் குறித்து படிக்கப் படிக்க பகிர்வேன்!

 உங்கள் தனிப்பட்ட வாழ்வையெல்லாம் ஏன் பகிர்கிறீர்கள் என்று யாரேனும் வருவீர்கள் எனில், உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் “தனிப்பட்டது என்று எதுவுமில்லை! அனைத்தும் அரசியல்மயமானதே! சமூகமயமாக்கல் என்பது புறத்தால் நிகழ்வது! அது அக பாதிப்பை ஏற்படுத்துகிறது! எனவே தனிமனித பாதிப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதிலிருந்து மீளத் தவிக்கும் மனங்களின் துடிப்பு எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 அதோடு சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த இது ஓர் அறிவார்ந்த பகிர்வு!

 #kotravai shares love!

#momdaughterlove

Jan 26, 2019

முதன் முதலாக: நினைவில் மிதக்கும் பனிக்குடம்


12.9.1999-ல் எனக்குத் திருமணம் நடந்தது. அவர் ஓர் ஓவியர். பின்னர் திரைப்பட இயக்குநரானார். தற்போது, அருங்காட்சியகம் மற்றும் கலைத்துறையில் பரிணமித்து வருகிறார். 2010-க்குப் பிறகு, நாங்கள் அந்த உறவை நட்புறவாக்கிக் கொண்டோம். அது இன்றளவும் நட்புறவாகத் தொடர காரணமாக, வாழ்வின் பிடிப்பாக இருப்பவள் எங்கள் மகள், வருணா!

‘வருணா’ என்றால் வண்ணங்கள், மழைக்கடவுள் என்றுதான் பொதுவாகப் பொருள் கொடுக்கின்றனர். ஆனால்,  ‘வருணா’ என்றால் ‘கடவுளுக்கெல்லாம் கடவுள்’ என்ற பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் இல்லவே இல்லை எனும் எனக்கு, இப்பெயருக்கான பொருள்களில் பெரிய நாட்டமில்லை. ஆனால், தற்போது அவளுடனான 18 வருட உறவில் வருணா என்றால் தோழி, அன்பு, துணிவு, தெளிவு, புரிதல், அரவணைப்பு, தன்னம்பிக்கை, உற்சாகம், எல்லாவற்றுக்கும் மேலாக என் வாழ்வின் ஒரே காரண காரியமும் ஆகிறாள்.

என் அப்பா Xerox கடை வைத்திருந்தார். குடும்பமாக உழைத்தே நாங்கள் வாழ்ந்தோம். அதில் என் தாய், கடுமையான உழைப்பாளியாக்கப்பட்டவர். நாங்களும் (நானும் எனது தம்பியும்) 10 வயது தொடங்கி, எங்கள் கடையில் வேலைசெய்தே பிழைத்தோம். உழைத்து வாழ வேண்டும் என்பதை மட்டுமே என் தந்தை எங்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளார். (அவருக்கு மார்க்ஸியமெல்லாம் தெரியாது!) ஆண்கள் வந்துபோகும் இடங்களில், கடைகளில், பெண்கள் அமர்ந்து வேலைசெய்தால், இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளுக்குப் பல பட்டங்களை வழங்கி கௌரவிக்கும். அந்தப் பட்டங்களைப் பரம்பரைச் சொத்துமாக்கிவிடும். ஆகவே, நான் தினம் தினம் எங்கள் சாலையைக் கடந்து எங்கள் கடைக்குச் செல்லும் வழியில் பல ஆண்களின் ஆபாசப் பேச்சுகளையும் பட்டங்களையும் சுமந்தபடியே செல்வேன். அந்தச் சிறு வயது தொடங்கி, என்னுள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நான் வளர்ந்து பெரியவளாகி, ‘குடும்ப’ வாழ்வில் ஈடுபட்டு, பத்தினியாக (அடிமையாக வாழ்தல் என்பது அப்போது தெரியாதல்லவா) வாழ்ந்து, ‘சிறந்த குடும்பப் பெண்’ எனும் பெயரெடுப்பேன். அவ்வாழ்வில் கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை மட்டுமே பெற்றெடுப்பேன். இந்த உலகமே வியக்கும் அளவுக்கு அவளை ஓர் ஆளுமையாக வளர்ப்பேன் எனும் வேள்வித் தீ அது. என்மேல் திணிக்கப்பட்ட பாவங்களை மகள் என்னும் ‘திருவுரு’ கொண்டு கழுவிக் களைதல் எனும் பேதைமை மனம். இப்போது அந்த வீண் வீராப்பு வேடிக்கையாக இருந்தாலும், எங்களின் தாய் - மகள் உறவு, சுயமரியாதை, சமதர்மம் என்று வேறொரு தளத்தில் பரிணமித்து பெருவாழ்வு கண்டுள்ளது.

முன்னோட்டங்கள் முடிந்தது, இனி வருணா பிறந்த கதைக்கு வருவோம். 15.8.2000 அன்று வருணா பிறந்தாள். அன்றுதான் என் பிறந்த நாளும் என்பதுதான் இந்தக் கதையின் ஆர்வமூட்டும் அம்சம். எப்படி அவள் அதே நாளில் பிறந்தாள்?
நான் கருவுற்றிருந்தேன் என்பது அன்றைக்கு எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்திருந்தார். என் முகத்தைக் கண்டு, “என்னம்மா உண்டாகியிருக்கியா?” என்றார். “இல்லையே... அதெல்லாம் வாய்ப்பில்லை!” என்றேன். சிரித்துவிட்டுச் சென்றார். பிறகு, மதியம் வேறொருவர் வந்தார். அவர் கேள்வியெல்லாம் கேட்கவில்லை. “நீ உண்டாகியிருக்க. அது பெண் குழந்தை. மகாலட்சுமியே உனக்கு வந்து பிறப்பாள். குழந்தை வேண்டாம் என்று கருவைக் கலைத்துவிடாதே” என்று சொல்லிச் சென்றார். எனக்கு எதுவுமே புரியவில்லை. அடுத்த நாள், நான் உணவு உண்ணும்போது,  வாந்தி வந்தது. பரிசோதித்துப் பார்த்தபோது, நான் தாயாகி இருந்தேன். அந்த நிமிடம் முதல், அது பெண் குழந்தையாக இருக்க வேண்டுமே எனும் அந்த வேள்வித்தீ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தாயோ உறவுகளோ அருகில் இல்லாத நிலையில், என் வயிற்றை வளர்த்தது, மயிலாப்பூர் கிரிஜா கார்டனில் வசித்த அன்பு உள்ளங்களே. ஒரு காலனியே என் தாயாக மாறிய அனுபவக் காலம் அது.
வாய்க்கு ருசியாக அவர்கள் எனக்கு எவ்வளவு சமைத்துப் போட்டாலும், மூன்று உணவுப் பொருள்களுக்காக என் நா ஏங்கித் தவிக்கும் (craving). சொன்னால் சிரிப்பீர்கள், பழைய சோறு, கற்பூரவல்லி வாழைப்பழம் மற்றும் ஒரு நூடுல்ஸ் (பெயர் சொல்லக் கூடாதல்லவா). எவ்வளவு பழம் தின்றேன் என்று கணக்கே இல்லை. அதேபோல் அந்த நூடுல்ஸ் அவா இருக்கிறதே ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா... சரியாக மதியம் 12 மணிக்கு வெறி பிடித்தாற்போலாகிவிடும். வயிற்றுக்குள் இருந்துகொண்டு எப்படி ஆட்டி வைத்திருக்கிறாள் பாருங்கள்!

இப்படி நூடுல்ஸை குமுக்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள், அதில் உள்ள MSG குறித்து எங்கேயோ படிக்க, தொற்றிக்கொண்டது பீதி. பயத்தில் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குன்றிவிடுமோ என்று அழுகையே வந்துவிட்டது. என் மருத்துவருக்குத் தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்லிக் கேட்டேன், கேவலமாகத் திட்டாத குறை. அதன் பிறகு, அதைக் கைவிட்டேனா என்பது  நினைவில்லை. ஏனென்றால், நாவை அடக்க முடியாதே!

இப்படியாகப் பல கலவைகளுக்கு மத்தியில் வயிற்றில் குழந்தை வளர்ந்தது.

எட்டாம் மாதம் நெருங்கும்போது, வயிறு வழக்கத்தைவிட மிகவும் பெரிதாக இருக்க, மருத்துவர் சற்று அச்சம்கொண்டார்.  ‘என்னதாம்மா பண்ற நீ’ என்பதுபோல இருந்தது அவர் பார்வை. “ஒருவேளை கர்ப்பகால நீரிழிவாக (Gestational Diabetes) இருக்குமோ என்னவோ தெரியவில்லை, பரிசோதித்துப் பார்ப்போம். அப்படியிருந்தால், பிரசவ தேதிக்குச் சில நாள்கள் முன்பே நீ மருத்துவமனையில் சேர வேண்டும்” என்றார். அச்சமும் குற்றவுணர்வும் பற்றிக்கொள்ள, மீண்டும் பதற்றம். அம்மா எங்கோ இருந்த நிலையில், மீண்டும் அக்கம் பக்கத்தவரே ஆறுதல்.

பிரசவ தேதி நெருங்கும்போது அம்மா வந்தார். ஆகஸ்ட் 22 என்று தேதி கொடுத்திருந்தார்கள். ஆனால், என் அம்மாவோ “கண்டிப்பாக அவள் உன் பிறந்த நாளன்றுதான் பிறப்பாள் பார்!” என்றார். அற்புதங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், அன்பு உள்ளங்களின் வாழ்த்தில் உண்மை இருக்குமல்லவா. ஆசையும் தொற்றிக் கொண்டது. கேட்கவா வேண்டும், சங்கு சங்கென்று சலங்கை கட்டிவிட்டதுபோல் ஆடத் தொடங்கியது மனம். 14 ஆகஸ்ட், 2000 அன்று, வலி வருவதுபோல் உள்ளது என்று சொல்லி நானே வலிந்து மருத்துவமனைக்குச் சென்றேன். உண்மையில் வலி உடலில் இருந்ததா அல்லது மனம் அதை வரவழைத்ததா என்று எனக்கு நினைவில்லை. பிரசவ அறை இல்லாத நிலையில், பொது வார்டில்தான் சேர்ப்பேன் என்றார்கள். “பரவாயில்லை டாக்டர், எனக்கு வலி அதிகரித்துவிட்டால் என்ன செய்வது? நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நாளை குழந்தை பிறந்துவிடும்” என்றேன். பின்னர் மாலையில் தனியறை கொடுத்து மாற்றினார்கள். மயிலாப்பூர் இசபெல் மருத்துவமனை, மருத்துவர் உஷா கிருஷ்ணகுமார். பெண்களின் கடவுளாக பார்க்கப்படும் மருத்துவர். இன்றைக்கு முதுமை எய்தியும், எத்தனை பிரசவங்களைப்  பார்த்துக்கொண்டிருக்கிறார் அத்தாய்.

எனக்கு வலியும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள். நான் ஹாயாக அமர்ந்துகொண்டு “வந்துடும்... வந்துடும்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில், படிகளில் இறங்கி நடப்பது (புவியீர்ப்பு விசை!), வராண்டாவில் நடப்பதென்று இயற்கைப் பிரசவத்திற்கான ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். “வலி வரவில்லை என்றால், உன்னை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். அடுத்த வாரம் நீ வந்தால் போதும்” என்றார்கள். பித்து தலைக்கேறிய பின்னர் அடங்க முடியுமா? படிகளில் ஏறி இறங்கத் தொடங்கினேன். செவிலியர்களும் கன்னியாஸ்திரீகளும் என்னைக் கண்டு நகைக்கத் தொடங்கி னார்கள். “ஏம்மா நல்லா இவ்ளோ தெம்பா நடக்குற, உனக்கு இப்பப் புள்ளை பொறக்கப் போகுதா?” என்றனர். “பிறக்கும்!” என்றேன்.
இரவு 10 மணிபோல் கன்னியாஸ்திரீ ஒருவர், என் யோனிக்குள் தன் கையைவிட்டுப் பரிசோதித்து, “குழந்தைக்கு இன்னும் தலை திரும்பவில்லை மகளே, திரும்ப வேண்டும், உனக்கு முதுகுத்தண்டு எலும்பும் விலகிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இயற்கைப் பிரசவம் நடக்கும்… பார்ப்போம்” என்றார். அறைக்குள் நடக்கத் தொடங்கினேன். வராண்டாவில் நடந்தேன். என் உயிரின் சாட்சியாக மற்றோர் உயிர் பிறப்பதற்கான அந்த வலி வரத் தொடங்கியது. உச்சத்தை அடையத் தொடங்கியபோது, “ஐயோ எனக்குக் குழந்தையே வேண்டாம், ஏன் பொம்பளைங்களுக்கு மட்டும் இந்த நிலை” என்று தொடங்கி, எல்லா வசைகளையும் பாடித் தீர்த்தேன். அப்போதும் அவர்கள் வந்து பார்த்துவிட்டு, “இது பொய் வலியாகவும் இருக்கலாம் பார்ப்போம்!” என்றார்கள். இரவு முழுவதும் வலியால் அமர முடியவில்லை, உறங்க முடியவில்லை. அழுகையும் புலம்பலும் கத்தலுமாகக் கழிந்தது. காலை ஏழு மணி, எழுந்து நின்றபோது தரை முழுதும் ஈரம். ‘பனிக்குடம்’ உடைந்துவிட்டது என்று பதற்றமடைந்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால், என்னால் நிற்கக்கூட முடியவில்லை.  உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தனர். பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்றனர். பிரசவ அறிவுறுத்தல்கள் தொடங்கின. குழந்தையை வெளியே தள்ள முக்க முக்க, மலம் வேறு வெளி வந்துகொண்டிருந்தது. ஏதோ ஊசி போட்டார்கள், எனிமா கொடுத்தார்கள். மயங்கினேனா என்பது எனக்கு நினைவில்லை. உயிர்ப் போராட்டமும் மற்றோர் உயிருக்கான போராட்டமும் உச்சத்தை அடைந்தது.

தலைக்கனம் பிடித்த ஓர் உயிர் என் வயிற்றுக்குள் கருவுற்றிருந்தது. ஆம், அதன் தலை அவ்வளவு பெரிதாக இருந்ததால் வெளிவரவில்லை. Vaccum போட்டு இழுக்கலாம் என்று ஏதோ பேசினார்கள். பின்னர் என்னமோ செய்தார்கள். சிவப்பும் கருமையும் பச்சையும் பிசுபிசுப்பான வெண்ணிற திரவமும் சுற்றியபடி ஓர் உயிர் பிறப்பெடுத்தது.

15.8.2000, செவ்வாய்க்கிழமை, காலை எட்டு மணி, ‘நூடுல்ஸும் வாழைப்பழமும் தின்று என்னைக் கொழுக்கவைத்த நாயே’ என்று என்னைத் திட்டுவதுபோன்ற ஓர் அலறல். ‘பெண் குழந்தை’ என்றனர். மயங்கி, ஓய்ந்து, விழித்து கையை நீட்டினேன் அவளைக் கேட்டு. “இரு தூய்மை செய்து கொண்டு வருவார்கள்” என்றனர். காற்றை உறிஞ்சிய பலூன்போல என் வயிற்றைக் கண்டு, “ஐயோ என் வயிற்றைக் காணோம்” என்று கத்தத் தொடங்கினேன். “எல்லாம் இங்கதாம்மா இருக்கு” என்று வலப்பக்கம் சுருங்கிய பைபோல் ஒன்றிக்கொண்டிருந்த அந்த வயிற்றுச் சதையை இழுத்துப் பிடித்துக் காட்டினார்கள். நினைத்தால் எல்லாம் கனவுபோலத்தான் உள்ளது.

இன்று 18 வயதாகிவிட்டது அவளுக்கு. மகளாய் இருந்தவள், அவளின் 10 வயதில், நான் மிகப் பெரிய முடிவொன்றை எடுத்தபோது, “உனக்கு எது சந்தோசமோ அதைச் செய் மம்மி” என்று கூறி எனக்குத் தாயானாள். இப்போது, தோள் கொடுக்கும் தோழியாக…

மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமடி!
நன்றி: விகடன் தடம் 
https://www.vikatan.com/thadam/2018-dec-01/column/146274-interview-with-writer-kotravai.html

May 18, 2018

சேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்…


சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் யார் என்று கேட்க குழந்தைகள் தங்களின் அம்மாவுக்கு விருது வழங்கி, தாய் தான் தங்கமான வெற்றியாளர் என்கிறார்கள். இதன் மூலம் நாம் குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் என்ன கற்றுத் தருகிறோம். மீண்டும் மீண்டும் தாய்மையை புனிதப்படுத்துகிறோம்.
அவளின் வீட்டு வேலை செய்யும் மகத்துவத்தை வைத்தும், தன்னைப் பற்றி கவலைப்படாது 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் குடும்ப பராமரிப்பை மேற்கொள்ளும் ‘பெண்மணி’யே சிறந்த தாய் என்கிறோம். (பாவம் இதையெல்லாம் செய்தாலும் தந்தைக்கு எந்த அங்கீகாரமும் இல்லை!)
பெண்களின் மீது அளவில்லா மரியாதை கொண்டுள்ள ‘ஆண்களே’, முதலாளிகளே ஒருவர் மீது பாலின அடிப்படையில், சாதியின் அடிப்படையில் திணிக்கப்பட்ட வேலையை சேவை என்று சொல்லி காரியம் சாதிப்பதை முதலில் நிறுத்துங்கள். Service Industry என்பதே ஏமாற்று வேலை. எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு பண்டமாகத்தானே கொடுக்கிறோம்.
பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளில் இருந்து அவர்களை விடுவிக்காமல் (அசமத்துவமான உழைப்புப் பிரிவினையிலிருந்து) அவர்களின் ‘சேவையை’ புகழ்வதும், அங்கீகரிப்பதும், பரிதாபப்படுவதும், அதற்கென சில NGOக்களை உருவாக்கி அதன் மூலம் உதவிகள் செய்வதும், விருது வழங்குவதும் என்றில்லாமல் சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிலைநாட்டுவதே இங்கே அவசியத் தேவை.
ஆண், பெண், மாற்றுப்பாலினம், மாற்றுத்திறனாளி என்று அனைவரின் உழைப்பையும் சுரண்டிப் பிழைத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் அசமத்துவ வேலைப்பிரிவினையை ஒழிப்பதே நம் புரட்சிகர இலக்கு என்றபோதிலும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைப் பிரிவினையை மாற்றியமைக்க நாம் உடனடியாக ஓரடியேனும் எடுத்து வைக்க முடியும் என்றே நம்புகிறேன்.
தாய்க்காகவும், சகோதரிகளுக்காகவும், காதலிகளுக்காகவும், மனைவிக்காகவும் கண்ணீர் வடித்து அவர்களின் நிலையைக் கண்டு உருகி அழும் ஆண்கள் (அழாத ஆண்களும்) முதலில் தங்களின் சமத்துவத்தை வீட்டிலிருந்து தொடங்கலாம்.
சமையலறை வேலை தொடங்கி, பிள்ளைகள் பராமரிப்பு, கழிப்பறை கழுவும் வேலை வரை அனைத்தையும் சமமாக பகிர்ந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் சுழற்சி முறையில் இப்பணிகளை மேற்கொள்ளுங்கள். வீட்டு வேலை பெண்களுக்கு, வெளி வேலை ஆண்களுக்கு…. அடுத்ததாக வெளி வேலை பெண்களுக்கு, வீட்டு வேலையும் பெண்களுக்கே என்கிற நிலையை மாற்ற முதலில் நம் வீட்டிலிருந்து தொடங்குவோம். என் அம்மா மாதிரி யாராலையும் சமைக்க முடியாது என்று சப்புக்கொட்டிக் கொண்டிருக்காமல், உங்களின் கை வண்ணத்தை உங்கள் தாயும், மனைவியும் சுவைக்கச் செய்யுங்கள். அப்போது தெரியும் உப்பும், புளியும், காரமும் குறைகிறதா, சோறு குழைகிறதா, இட்லி பூ மாதிரி வருகிறதா, தோசை பேப்பர் ரோஸ்ட் மாதிரி சுருள்கிறதா என்று.
வீட்டு வேலைகள் சிலவற்றை குழந்தைகளையும் செய்யச் சொல்லுங்கள். பெண் குழந்தை மட்டுமின்றி ஆண் குழந்தையையும் வீடு கூட்டி, துடைக்கச் சொல்லுங்கள், பாத்திரம் கழுவச் சொல்லுங்கள்.
இப்படிப்பட்ட சமத்துவமான உழைப்புப் பிரிவினை தத்துவத்தைத் தான் கம்யூனிஸ்டுகள் நடைமுறைப்பபடுத்த நினைக்கிறார்கள் (அதை மட்டுமல்ல). ஆகவே, இந்த ஆணாதிக்க சமூகத்திற்கும், முதலாளிகளுக்கும் அவர்கள் துரோகிகளாகி விடுகிறார்கள். மற்ற புரட்சிகரப் போராட்டங்களுக்குக் கைகொடுக்கவில்லை எனினும் இதற்காவது செவி மடுங்கள்.
அடுத்ததாக தலித் விடுதலை என்பது பாட்டாளி வர்க்க விடுதலையோடு தொடர்புடையது எனினும், குறிப்பிட்ட பிரிவினரின் விடுதலைக்கான விதையை நாம் தற்போது விதைக்க முடியுமாவென பார்ப்போம். சாதியப் பிரச்சினை குறித்து தொடர்ந்து எழுதி வந்துள்ளதுபோல் தலித்துகளில் ஒரு பிரிவினருக்கு ‘அசுத்தமான பணி’ என்று சொல்லப்படும் தூய்மை செய்யும் பணி ஒதுக்கப்படுகிறது. அதை ‘சேவை’ என்று சொல்லி அவர்களின் நிலைமைகளைக் கண்டு கண்ணீர் வடிப்போர் ஏராளம் பேர் உள்ளனர். இனிமேல் நாம் நம் கண்ணீரை விரையம் செய்ய வேண்டாம். நேரடியாக களத்தில் இறங்குவோம்.
தலித்துகள் / தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையில் உண்மையான அக்கறை உள்ளவர்களாக ‘கீழ்’நிலை உழைப்பாக கருதப்படும் பொது கழிப்பறையை தூய்மை செய்யும் வேலையை அனைவரும் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி அதை உடனடியாக நடைமுறைபடுத்த முயல்வோம்.
அவரவர் வசிக்கும் பகுதிகளில் வார்டு வாரி வீட்டுப் பட்டியல் தயாரித்து சுழற்சி முறையில் மால்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பள்ளிக் கூடங்கள் என எல்லா பொதுக் கழிப்பறைகளையும் நாம் அனைவருமே தூய்மை செய்யலாம். அந்தந்த தெருக்களில் இருக்கும் குப்பைகளை அகற்றலாம். இதற்குத் தேவையான உபகரணங்களை நாம் தோற்றுவிக்கும் அமைப்பு / குழுக்கள் மூலம் மாநகராட்சியிடம் கேட்டுப் பெறலாம். தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் வேலை செய்வோருக்கான சம்பளத்துடன் கூடிய விடுப்பை அந்நாட்களுக்கென கேட்டுப் பெற வேண்டும். இதை சட்டமாக்கலாம். (பெரிய வேலைதான்!)
உற்பத்தி முறை மாறாமல்… உடைமை வடிவம் மாறாமல், சோஷலிசப் புரட்சி நடைபெறாமல் முழுவதுமாக குறிப்பிட்ட வேலையை ‘குறிப்பிட்ட உழைக்கும் மக்கள் பிரிவிடமிருந்து’ மாற்றியமைப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், அல்லவா? அதற்காக நாம் செய்யக்கூடியது என்னவெனில், இதுவரை அவர்கள் நம்மை பராமரித்து வந்தார்கள் அல்லவா, அதற்கு ஈடாக (ஈடு செய்ய முடியாதெனினும்) நாம் சுழற்சி முறையில் அந்த வேலை செய்து ஈட்டக்கூடிய ‘கூலியை’ அம்மக்களுக்கே சென்று சேருமாறு செய்ய வேண்டும். (தலித் மக்கள் கல்வி பெற்று ‘குலத்’ தொழிலில் இருந்து விடுபட்டு அதிக்க சாதியினர் போல் மற்ற வேலைகள் பெறும் வகையிலான முயற்சிகள், போராட்டங்கள் தொடர வேண்டும்).
அலுவலகங்களிலும், ஹோட்டல்களிலும் கூட House Keeping என்றொரு துறையை வைத்திருக்கிறார்கள். அதிலும் கழிப்பறைகளை தூய்மை செய்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினராகத் தான் இருக்கிறார்கள்.
ஆதிக்க சாதிகள் (முதலாளிகள் உட்பட) இந்த வேலைகள் செய்ய நிர்பந்திக்கப்பட்டால் ஒழிய சாதிய ரீதியான உழைப்புப் பிரிவினை மாறாது, சமத்துவமும் மலராது.
இயந்திரங்களே வந்தாலும் அப்பணியை குறிப்பிட்ட பிரிவினரே செய்யும் நிலை தான் இருக்குமெனில் அது சாதியமே. ஆகவே இதை அனைவரும் பகிர்ந்துகொள்வதே சமத்துவத்தை நோக்கி நகரும் வழி.
குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட பிரிவினருக்கே என்றிருக்கும் நிலையை மாற்றாமல் நாம் சாதியை ஒழிக்க முடியாது, பெண் விடுதலையை எட்டவும் முடியாது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, இதர மா.லெ கட்சிகள், தலித்திய கட்சிகள் இணைந்து இப்படி ஏதேனும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முடியாதா? இல்லை இது ஏற்கனவே முயன்று தோற்ற விஷயமா? இது சிக்கலானதாக, ஆர்வக்கோளாறு பேச்சாகக் கூட தோன்றலாம், ஆனால் இதுபோன்று உழைப்புப் பிரிவினையை நிலைநாட்டவில்லை எனில் நாம் வேண்டும் சமத்துவம் என்பது என்ன?
ஒருவேளை இது முட்டாள் தனமான வாதமாக இருக்குமெனில், மாற்று வேலைத்திட்டத்தை யாரேனும் விரிவாக எழுதி அறிவூட்டலாம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைக் கோருகிறோம், ஏன் அனைத்து சாதியினரும் கழிப்பறை தூய்மை செய்வோம், தூய்மைப் பணிகளை மேற்கொள்வோம் என்னும் குரல் எழுப்ப மறுக்கிறோம்?
(வழிகாட்டிய கட்டுரை -http://saavinudhadugal.blogspot.in/2017/08/blog-post.html )

May 13, 2018

அன்னையர் தின கட்டவிழ்ப்பு





இந்த அன்னையர் தினத்தில் (எனக்கு) அவசியமானதோர் கட்டவிழ்ப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். இக்கட்டவிழ்ப்பு என் நலம் விரும்பிகளுக்கு சற்று அதிர்ச்சிகரமானதாகவும் என்னைத் தங்களின் எதிரிகளாக கட்டமைத்துக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாட்டம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

எவ்வகையிலேனும் இச்சமூகத்திற்கும்… ‘எதிரிகளுக்கும்’ என்னால் மகிழ்ச்சியளிக்க முடியுமெனில் எனக்கு அது பெரும் மகிழ்ச்சியே.
என்னுடைய முகநூல் செயல்பாடுகளில் சமீப காலங்களில் சில மாற்றங்கள் தென்படுவதை ஒட்டி, ஒரு சில நண்பர்களுக்கு குழப்பம், வெறுப்பு… நீங்களுமா இப்படி போன்ற கேள்விகள்…

அந்த நீங்களுமா என்பதில் உள்ள அக்கறையை நான் மதிக்கும் அதேவேளை இதுபோன்ற கேள்விகள் என் மீது ஏற்றி வைக்கும் பிம்பத்தையும் நான் தகர்க்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவும் ஒருவித தூய்மைவாத கண்ணோட்டமாக – ‘மார்க்சியர்’ / ‘பெண்ணியவாதி’ / ‘போராளி’… என்பதற்கு அவர்கள் கொடுத்துக்கொள்ளும் முட்டாள்தனமான புரிதலாக இருக்கிறது.

அத்தகைய பிம்பங்கள் எனது தனிப்பட்ட வாழ்வை பாதிக்கக்கூடியதாகவும் சில நேரங்களில் மாறிவிடுகிறது. அவரவர் என்னை (என் போன்ற பெண்களை) தங்களின் விருப்பம் போல் வடித்துக்கொள்ளும் அவசியமின்றி நான் முன்னமே சொன்னது போல் என் சுயசரிதையை எழுதும் அவசியம் ஏற்படுமெனில், அதை நானே எழுதுவேன்.

தனிப்பட்ட வாழ்வை ஏன் பொதுவெளியில் வைக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழலாம். பொதுவெளியில் இயங்குவதால் என் போன்ற பெண்களின் வாழ்வு மற்றவருக்கு ஏதோ ஒரு வகையில் ’கற்பிக்கவும்’, கற்பிதங்களை முறியடிக்கவும் உதவுகிறது. அதோடு இங்கு ஒரு சில ‘குடிகார மகான்களுக்கு’ கம்யுனிஸ்டுகள் / சமூக மாற்றத்திற்காக இயங்க விரும்பும் ஆர்வலர்கள் பற்றி - கோட்பாட்டு அறிவற்ற காரணத்தால் – ஏற்படும் புரிதலில் (தன்னுணர்வின்றி?!) பல்லிளிக்கும் ஆணாதிக்க எக்காளத்தை காரி உமிழவும் இது தேவைப்படுகிறது.

என்னைப் பற்றிய சுய குறிப்பில் மற்றுமொரு பண்பை சேர்க்கும் தருணம் வந்துவிட்டது:

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்
நான் ஆகச்சிறந்த காதலி, ஆகவே சகியாக் காதலை துறப்பவள்
தனியுடைமையின் உடலரசியல் அறிந்தவள்
ஆகவே ஆணாதிக்க கருத்தாயுத வாளினை
வீசுபவர்களின் அமிலக் குறிகளை நோக்கி திருப்பிவிட்டு
பொருள் போற்றி
வாழ்வைப் பொருளோடு
சமூக மாற்றத்திற்கான சிறிய வினையூக்கியாக செயல்படுவது
என்று எனக்கு நான் கட்டளையிட்டுக்கொண்ட பொருளோடு
அறிவாயுதம் ஏந்தி வாழ்பவள்.

பெண் உடல் என்பது யோனி மட்டுமல்ல….
ஆண் உடல் என்பது குறி மட்டுமல்ல
பெண் உடலும் ஆண் உடலும் கூடுவது புணர்ச்சிக்காக மட்டுமல்ல
இணைதல் என்பது அறிவுச் சேர்க்கை
இணைதல் என்பது மனத்துணை*

இப்படியெல்லாம் தெளிவாகப் பேசும் பெண்கள் குறித்த ‘பொதுக் குறிப்பு’ – திமிர் பிடித்தவள், கேடுகெட்ட பெண்ணியவாதி, தேவடியா… புரட்சிகர வேஷம் போடும் வேசி … இதை சுயக் குறிப்பாக தேர்வு செய்யும் வசதியை முகநூல் APP வழங்காத காரணத்தால் ….

என்னைப் பற்றிய சுய குறிப்பில் இப்போது மற்றுமொரு பண்பை சேர்க்கும் தருணம் வந்துவிட்டது:

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்
அறிவைத் துற உடலாய் இரு
என்னும்
ஆண் சிலந்திகளுக்கு
ஒரு போதும் நான்
ஈயாவதில்லை

(*மனத்துணை - அனுபவத்திலும், கற்றலில் ஈடுபடுவதன் மூலம் ஏற்படும் எண்ண ஓட்டங்கள், விருப்பங்களின் தேக்கம் மற்றும் அசைபோடும் செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள, ஊற்றெடுக்கும் அன்பை இறைக்க, இறைப்புக்கு ஈடாக பன்மடங்காய் திரும்பப் பெற.. இப்படியாக)
ஓவியம் வருணா

May 11, 2013

அவர்களால் வளர்க்கப்பட்ட அந்த மிருகம்




அவர்கள் மிருகங்களை உற்பத்தி
செய்யும் கூடாரங்களை
செவ்வனே நடத்துகிறார்கள்
அவர்களால் வளர்க்கப்பட்ட
அந்த மிருகம்
அவள்
சிறுமியாய் இருக்கும் பொழுது
சோற்று பருக்கைக்கு கணக்கு எழுதியது
அவள்
பருவம் எய்தியவுடன்
தந்தமை உடை துறந்து
எஜமானருடை அணிந்தது

விலா எலும்பும்
வயிற்றுப் பகுதியும்
கன்னங்களும்
நாளும் சிவக்கத் தவறியதேயில்லை

இளமையை முதலீடாக்க பாடம் நடத்திய
அதன் பேராண்மை மிக்க உதடுகள்
எண்ணிக்கையைத் தவிர வேறெதுவும் உச்சரித்ததில்லை

உறக்கத்தை
கனவுகளில் மட்டும் வருமாறு
உத்தரவிட்டாள்
விழித்திருக்கும் வேளைகளில்
உலக வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
எல்லைக் கோடுகளை
அழிக்கும் ஒரு கருவியை செய்யத் தொடங்கினாள்

திருமண வயது நாற்பது
என்று தீர்மானம் இயற்றியதந்த மிருகம்
இருபது வருடங்களுக்கான
தண்டனையை உறுதி செய்துக் கொண்டாள்
அது மரண தண்டனையாகாமல் போனது

நாடோடி வாழ்க்கை
அச்சுறுத்தியபோது
அவள்
பெண்
என்பதை உறுதி செய்து கொண்டாள்

சரணடைய வைத்தது
எதிரொலிக்கும் குரல்கள்

மிருகம்
குறிகள் கொண்ட மிருகங்களாய் மாறி
குழந்தமையை
சிரிப்பை
சுயமரியாதையை
அறிவுநிலையை
காதலை
வாழ்க்கையை
இறுதியில்
ஆம் இறுதியில்
பரித்துக் கொண்டது
அந்தத் தங்கக் கோதுமையை

பூசியங்களுக்கிடையில்
அரைத்து விழுங்கியது
அவளது தாய்மையை


May 26, 2012

இடமுடியா முத்தங்கள் கடவுள் போன்றது




முத்தங்களை விழுங்கும்
வலி எத்தகையது
என்பதை அறிய மாட்டீர்கள்
நீங்கள்

அந்நியமாகிப் போன கருவறையின்
வழியாக
குருதியென வழிந்தோடுகிறது
அம்முத்தங்கள்

இடமுடியா முத்தங்கள்
கடவுள் போன்றது
புகைப்பட உதடுகள்
உறிஞ்சுகிறது
ஈரமற்ற முத்தங்களை

பாரம் தாளாமல்
மன்றாடுகிறது விழித்திரை

கடந்த கால நினைவுகளும்
அவளது புகைப்படங்களும்
அவ்வப்போது அவளது தொலைபேசி
அழைப்பும்
மரணத்தை தள்ளிப்போடுகின்றன

உயிரறுத்து கிடக்கும் வேளையில்
புதையுங்கள்
என்னை
அவளது கருவறையில்

Apr 12, 2012

அவளை உங்களுக்கு தெரியாது



அவளை உங்களுக்கு தெரியாது
உழுது பயிர் செய்த தூர தேசத்து கோதுமையாய்

புவியின் நரம்புகள் அறுக்கப்பட்ட போதிலும்
கசியாமல் உறைகிறது வெண் குருதி

சொற்களற்ற அகராதி நிறைந்திருக்கும்
வீடு அது
வெற்று பக்கங்களில்
ஆண் சிலந்திகள்
வழ வழப்பான திரவத்தை இட்டு நிரப்பின

யானைகளுக்கு சிறகு வரைந்தாள் அவள்
வீடுகள் பறந்தன அவள் தூரிகையில்
என் முகம் மட்டும் காட்டும்
ண்ணாடி ஒன்றை பரிசளித்தாள்

அகராதிகளை ஒளித்து வைத்து
அக்கண்ணாடியை அணிந்து கொண்டோம்
பிம்பங்கள் பிம்பமானது
குட்டி இளவரசனின்
பறக்கும் தட்டை களவாடினோம்

சிறகு முளைத்த யானையும்
சேர்ந்து கொண்டது எங்களுடன்
அன்று மழை பெய்யவில்லை
சிரிப்பலையால் நிரம்பி வழிந்தது பால் வீதி

சொற்கள் கோர்த்து பனிக்குடம் செய்கிறாள்
அந்த வெம்மைக்குள் என்னை பொதிந்து வைக்கிறாள்

உங்களுக்கு அவளை தெரியாது
உங்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதில்லை அவள்.




Sep 27, 2011

சாம்பல் நிற உறவுகள்



அவளது புகைப்படத்தை அணைத்துக் கொண்டிருக்கிறேன்

அம்மா
இது நீயென
அவள் செய்து கொடுத்த
காகித பொம்மையாக

புகைப்படம்
ஓவியம்
காகித பொருட்கள்
சிறு சிறு பொம்மைகள்
இப்படி எல்லாமாக பிம்பம் நிறைந்திருக்கும்
வீட்டில்
உறைந்து நிற்கிறது
நீராவியாகிப் போன கண்ணீர்

கவிதையும்
அவனும் மட்டுமே
துக்கத்தை சுமந்து நிற்கும் சாபம் பெற்றிருக்கின்றனர்

அவன்
அவள்
நான்
அறிவோம்
காலம்
அக்னியாய் மாறி எரித்து
கரிய சாம்பலாக்கும் உறவுகளை

பிரிவின் முட்களை இப்படி
கவிதையில் ஏற்றிப் பதிந்து வைக்கிறேன்
என்பதை அறியக்கூட மாட்டாள்
மகள்

குழந்தைகளின் உலகில் ஆண்
தந்தை
தமையன்
நண்பன்
இப்படியாக
இருக்கின்றனர்

கோப்பை நிறைய தனிமையை நிரப்பி
பருகத் தரும்
கணவர்கள் இருப்பதில்லை

துர் மணம் வீசும் குற்றங்கள்
பிரசவக் கோடுகளின்
நிழலில்
மன்னிக்கப்படுகின்றன


Mar 21, 2011

கருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர்



1
அந்தத் தெருவைக் கடக்கையில்
முத்தத்தின் ஈரம் காயத் துவங்கியிருந்தது
அக்கம்
நாசிக்கருகே கன்னம் இருப்பதை ஆசீர்வாதமாக கருதினேன்
பிரார்த்தனையின் ஈரத்திலிருந்து
அவளது எச்சில் மணத்தை நாசிக்குள் செலுத்தி
பாதுகாத்துக் கொண்டேன்.

பசி கொண்டெறியும் வயிற்றுக்கு
கனவுகள் இல்லாத நாளில்
சுவாசக் காற்றிலிருந்து பிரிதெடுக்கப்பட
அவளது வாசம் மீட்டுத்தர
காத்திருக்கிறேன்

வெற்றிடம் விழிப்பந்துகளை ஓங்கி உதைக்கிறது.

2
மாதிரிகளைச் செய்வதில் கைதேர்ந்தவள் மகள்
உடலற்ற பொருள்களுக்கு
உயிரும்
ஸ்பரிசமும்
எண்ணிக்கையிலடங்கா முத்தங்களையும்
வாரி வழங்கும்
அவளது விரல்கள்
என்
பித்தேறிய வரிகளை எச்சில் தொட்டு அழிக்கிறது
காலம்
கருவறைகளுக்கு
தூர வித்தியாசங்களை
பிரிவின் வன்மத்தைக் கற்றுக்கொடுத்துவிடுகிறது

காலம் குறிகளால் ஆனது
மைதுனம் செய்யத் தவறுவதில்லை
உறவுகள் அடிமைகளையே வணங்குகிறது
கூன்
வளைவுகளை மட்டுமே அனுமதிக்கும்

கண்களுக்கு
புவி ஈர்ப்பைக் காவலாய் வைத்துச் செல்லும்
விழிகள்
மண்ணில் நிலைக்கொண்டிருத்தல்
குறிகளுக்கு
சாதகமாய் இருக்கிறது
சாதகமானவைகளைத்தான் குறி அணைத்துக்கொள்கிறது

3
கேள்விக் குறி
முற்றுப்புள்ளியாய் குறுகும்போது
அக்கணத்தை திமிரியழுத்தியபடி
குறிகள் திரித்து விடுகின்றன
மகளின் சொற்களை


அந்தகக்கண்ணீர்
அமிலத் தன்மைக் கொண்டது
மழலைகள்
ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை

4
கருவறையைச்  சொற்கள் கொண்டு நிரப்பினர்
நீரூற்றி கழுவமுடியா கழிப்பிடம்
வாழ்தல் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தினர்
அச்சம் எண்ணற்ற குறிகளைக் கொண்டது

பொம்மைகளின் முன்
தோற்று
தளர்ந்து
தலைகவிழ்ந்து நின்றது முலைகள்
இதைச் சித்திரமாய் தீட்ட என் விரல்களை
இறைவனுக்குப் பிச்சையிடுகிறேன்
அது
எதிர்காலம் எனும் பிசாசை வரைந்து வைக்கிறது

ஓவியம் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது
கண்ணாடிகள் நொறுங்கக் காத்திருக்கிறேன்.