Apr 21, 2023

12மணி_நேர_வேலை_மசோதா: தொழிலாளர் வர்க்கப் பார்வை!

#12மணி_நேர_வேலை_மசோதா: தொழிலாளர் வர்க்கப் பார்வை!

 உழைத்துத்தான் வாழ வேண்டும் - வாழ்வு, உரிமை; உழைப்பு, கடமை! ஆனால் உழைத்தும் வாழ முடியவில்லை என்றால், அது சமூகத்தில் உள்ள கொடுமையைக் காட்டுகிறது. வாழ்வதற்கு உழைக்கிறான், பிறருக்கு வாழ்வு அளிக்கவும் உழைக்கிறான். ஆனால், அந்த உழைப்பே அவனை உருக்குலையச் செய்து, வாழ்வை நுகரவே முடியாதபடி ஆக்கிவிடுமானால், அவன் உழைத்து என்ன பயன்?” - பேரறிஞர் அண்ணா

     தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அப்பட்டமான முதலாளித்துவ அராஜகம்! சமூக நீதி பேசும் திமுக அரசு இதனை மசோதாவாக நிறைவேற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கண்டனத்திற்குரியது. 8 மணி நேர வேலை என்று தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற உரிமைகளை முதலாளித்துவ காட்டேரிகளுக்காக தாரை வார்க்கிறோமே என்கிற ஆபத்து தெரியாமல் முதலமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்தாரா? ‘சமூக நீதி’ பேசக்கூடிய திமுக பொருளாதார அறிஞர்கள் இது பற்றி உழைப்புச் சுரண்டல், உபரி மதிப்பு கோணத்தில் காணவில்லையா?

     விருப்பத்தின் பெயரில் மட்டுமே, சில தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே, கட்டாயப்படுத்தக் கூடாது, வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலையில் மாற்றம் இல்லை” என்று தற்போதைய மசோதா குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்! விருப்பத்தின் பெயரில் மட்டுமல்லாது, வேறு வழியின்றி – அதாவது ‘செலவுக் குறைப்பு’ என்னும் பெயரில் ஏற்கனவே குறைவான ஆட்களை வைத்து - பல்துறை வித்தகராக இருப்பதே சாதிக்கும் வழி என்னும் பெயரிகளில் எல்லாம் மூளைச்சலவை செய்து – கூடுதலாக உழைத்தே ஆக வேண்டிய சூழலை நிறுவனங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. 10 மணி நேரம் என்பது இயல்பாகி விட்டது. பின்னர் ஆள் இல்லை, எடுத்த வேலையை முடித்துவிடு, deadline, target, KRA, Appraisal என்று விதம் விதமான concepts மூலம் தொழிலாளி தானாக கூடுதல் நேரம் வேலை பார்க்கும் சூழல் வந்துவிட்டது. கணினி யுகத்தில் customer service, TAT (Turn around Time) என்கிற பெயரில் 24 மணி நேரமும் email / phone assistance / problem solving / வாடிக்கையாளரை உடனடியாக தொடர்பு கொண்டு குறை தீர்த்தல் என்னும் பெயரிகளில் எல்லாம் தொழிலாளர்கள் (குறிப்பாக Technical support, customer service professionals) அட்டைப் போல் உறிஞ்சப்படுகிறார்கள். அத்தகைய பணிச் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இங்கு பெரிய ஆய்வுகள் இருப்பதாக தெரியவில்லை. மனநலன், உடல் நலன், மனித உற்பத்தித் திறன் (fertility) என்று என்னல்லாமோ பாதிப்புகள் உண்டாகின்றன என்று ஆங்காங்கே சில எச்சரிக்கைகளைக் காண முடிகிறது.

     ஆக, விருப்பமல்லாத விருப்பத்தின் பெயரில் தொழிலாளர்கள் கூடுதலாக பணி புரிந்து வரும் சூழலில், 12 மணி நேர வேலை என்னும் சட்டத் திருத்த மசோதாவின் தேவை என்ன? விருப்பத்தின் பெயரில் நடக்கப் போகிற ஒன்றுக்கு சட்டம் எதற்கு? அதுதான் கட்டாயப்படுத்தாமல் நிறுவனங்கள் வேலை வாங்கிக் கொள்ளலாமே? ஏதாவது logic உள்ளதா?

     நிலவும் உழைப்பு நேரமே உபரி உழைப்புதான் என்று தொழிலாளர் வர்க்க நல ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. 8 மணி நேர உழைப்பு நேரத்தோடு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு, சில பகுதிகளில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டு, உழைப்பு நேரம் “நியாயமாக” இருந்தால், உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது என்றும் விளைவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன! உலக அளவில் சில நிறுவங்கள் இதனை செயல்படுத்தியும் வருகின்றன. இத்தகைய “முன்னேறும்” சூழலில் 12 மணி நேர வேலை, அதுவும் விருப்பத்தின் பெயரில் மட்டுமே என்று சொல்வது, 8 மணி நேர வேலை என்னும் நிலையை மாற்றி மெல்ல மெல்ல 12 மணி நேர வேலைதான் இயல்பு என்று நிறுவுவதற்கான “சாம்ப்ளிங்” தான் இது.

     நம்ம ஊரில் தேநீர், பீடியெல்லாம் எப்படி வந்தது என்று வாய்மொழிக் கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.இலவச மாதிரி”, (Free Sampling) கொடுத்து கொடுத்து பழக்கப்படுத்தினார்கள்! பின் ‘அது’ இல்லாமல், இருக்க இயலாது என்கிற நிலை வந்தது! குறிப்பாக தேநீர், பீடி போன்ற ‘பண்டங்கள்’ தொழிலாளர்கள் தூங்காமல் விழித்திருந்து வேலை செய்வதற்கு உதவும் என்று சந்தைப்படுத்தப்பட்டதாம்! தூங்காமல் வைத்துக்கொள்ளும் தேவை யாருக்கு? இங்கே ஒவ்வொரு பண்டமும் மக்களுக்கான பயன்மதிப்பைக் காட்டிலும், முதலாளிகளுக்கான லாப வேட்டைக்காகவே உருவாகிறது! தேவையற்றப் பொருள்களாக இருந்தாலும் ஒன்றிற்கு ‘தேவையை’ (demand) எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சந்தைப்படுத்தும் தந்திரம் (marketing strategy).

    எல்லாவற்றையும் பண்டமாகப் பார்க்கும் முதலாளித்துவத்திற்கு மனிதர்களின் உழைப்புச் சக்தியும் ஓர் பண்டம் தான்! அந்த உழைப்புச் சக்தியை எவ்வளவு மலிவாக வாங்க முடியுமோ அவ்வளவு மலிவாக வாங்கினால் மட்டுமே அவர்களால் லாபத்தைப் பெறுக்க முடியும். உற்பத்திகான இதர அம்சங்களில் நிறுவனங்களால் பெரியளவு ‘செலவுக் குறைப்பு’ (cost cutting) செய்ய இயலாது! ஏனென்றால் அதனை இன்னொரு முதலாளி  அனுமதிக்க மாட்டான். எனவே அவர்களால் “பேரம்” பேச முடியக் கூடிய ஒரே ‘பண்டம்’ உழைப்புச் சக்தி! அதுமட்டுமின்றி உழைப்பு தானே அனைத்து செல்வங்களையும் படைக்கிறது! அதை கட்டுக்குள் வைத்திருப்பது முதலாளித்துவத்தின் அதிஅத்தியாவசியத் தேவையும் கூட.

(இதுக்குதான் மார்க்சியம் படிக்கனும்! ஆனால் மார்க்சியம் குறித்து இங்கு தவறான கருத்துகளை பரப்பி வைத்திருக்கிறது முதலாளித்துவம்).

     வேலைவாய்ப்பின்மை பெருகப் போவது 12 மணி நேர வேலையின் இன்னுமொரு ஆபத்து. இருக்கும் ஆட்களை கூடுதலாக உழைக்கச் செய்வதன் மூலம் நியாயமாக தேவைப்படும் உழைப்பாளர் சேனையை குறைப்பதற்கான ஒரு தந்திரமாகவும் இதனை நாம் காணலாம்! மேலும் தற்போது 8 மணி நேர வேலை என்பது சட்டமாக இருப்பது குறைந்தபட்ச பாதுகாப்பாக இருக்கிறது! 8 மணி நேரத்திற்கு மேல் வேலைச் செய்தால் அதற்குரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்று இருப்பதால், உறிஞ்சப்படும் உழைப்புச் சக்திக்கு நிகராக இல்லையெனிலும், ஏதோ ஒரு இழப்பீடு கிடைத்து வருகிறது. அது பணமாக இருக்கலாம், அல்லது ஓய்வு, விடுமுறை, permission என்று தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ள இயலும்! அதுவும் கூட போராடித்தான் கிடைக்கும். கேட்ட உடனே விடுமுறை, அனுமதியெல்லாம் கிடைத்துவிடுகிறதா என்ன?

     12 மணி நேர வேலை என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. அப்படி இல்லை என்று சொல்வார்கள் எனினும், உடல் நலன் சார்ந்து உழைப்பு நேரம் தீர்மானிக்கப்படுவதே அறம்.

    பொருள் உற்பத்திக்கு தேவைப்படும் அவசிய உழைப்பு நேரத்தை விட கூடுதலாக உழைக்கத் செய்து லாபம் ஈட்டுவதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறை! இல்லையெனில் மூலதன திரட்டு நடக்காது! இப்படிப்பட்ட உற்பத்தி முறை குறித்த புரிதல் உள்ள எந்த அரசும் ‘அவுக கேக்குறாக, அதனால நாங்க கொடுக்குறோம்” என்று சொல்லாது! அப்படி சொல்லக் கூடிய அரசானது சமூக நீதிக்கான அரசும் அல்ல, தொழிலாளர் வர்க்க நலன் பேணும் அரசுமல்ல.

    முதலீட்டாளர்கள் flexibility கேட்கிறார்கள்.. எனவே என்கிறார் அமைச்சர்… அதுதான் ஏற்கனவே அந்த நெகிழ்வுத்தன்மை உள்ளதே, பிறகெதற்கு அது சட்டமாக வேண்டும்?

     தொழிலாளர் சட்டத் திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்று பா.ஜ.க முன்வைத்தபோதிருந்தே கம்யூனிஸ்டுகள், ஜனநாயக சக்திகள் எதிர்த்து வந்த நிலையில், அப்போது திரு. ஸ்டாலின் அவர்களும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அவர்களின ஆட்சியின் கீழ் சட்டமாக இயற்ற திருத்தம் செய்வது எத்தகைய நியாயம்?

     இது வெறுமென I.T நிறுவனங்களுக்கு, Overhead expensesஐ கட்டுப்படுத்த உதவும் என்பெதல்லாம் ஒரு வாதமா? முதலாளிகளின் நலனை மட்டுமே பேசுமளவுக்குத்தான் இங்கு மூளை உழைப்பாளர் வர்க்கம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது! அதுதான் முதலாளித்துவத்தின் வெற்றி! தன்னை ஒரு பொருளாதார அடிமையாக்கி, வெறும் உழைக்கும் இயந்திரமாக ஒரு கூட்டம் உறிஞ்சித் தள்ளுகிறது என்னும் உணர்வு (தொழிலாளர் வர்க்க உணர்வு) இன்றி, அவர்கள் லாபம் சம்பாதித்து தானே ஆக வேண்டும். அதுதானே வளர்ச்சி. முதலாளி நல்லா இருந்தாதானே தொழிலாளிங்க நாம நல்லா இருக்க முடியும் என்று வியாக்கியானம் பேச பழக்கப்பட்டுவிட்டார்கள்.

     தொழிலாளர்களே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் “உங்கள் தயவால் தான் முதலாளி வாழ்கிறான்! உங்கள் உழைப்புதான் அவர்களுக்கு செல்வத்தை உண்டாக்கித் தருகிறது! உழைப்புச் சக்தியின் பலம் தெரியாமல் முதலாளித்துவம் கற்பித்துள்ள.. அதாவது உழைப்புச் சுரண்டலாளர்கள் கற்பித்துள்ள ‘நியாயவாதம்’ பேசுவதை விடுத்து, வரலாற்று ரீதியாக இந்த தனியுடைமை உற்பத்தி முறை (அதாவது மனிதர்கள் பிழைத்திருப்பதற்காக தேவைப்படும் உற்பத்திக்கான அனைத்து பொருள்களையும் – மனிதர்களின் உழைப்புச் சக்தி உட்பட – மூலதனம் என்னும் பெயரில் ஒரு சில செலவந்தர்களின் கட்டுப்பாடில் இருப்பது) குறித்து, அதன் உழைப்புச் சுரண்டல் தன்மை குறித்து, லாபம் என்பது உண்மையான தேவையா, அதைத் தவிர மாற்று பொருளாதார அமைப்பு இல்லையா என்றெல்லாம் தொழிலாளர் வர்க்கம் படிக்க வேண்டும்.

     குறைந்தபட்சம் படித்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தாம் யார், தம்மின் பலம் என்ன, தம் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல் என்ன என்கிற தெளிவைப் பெற வேண்டும். கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும், படிப்பறிவு பெற முடியாத உழைப்பாளர் பட்டாளத்திற்கு இந்த வாய்ப்பு குறைவு, மூளை உழைப்பாளர்களுக்கு தான் இங்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது, எனவே தொழிலாளர் வக்கத்தின் பக்கம் நிற்க வேண்டிய அதிக பொறுப்பும் உள்ளது.

    அதான் எதுமே மாறலையே 48 மணி நேரம் தான இருக்கு என்றும், இதுதான் சாக்கு என்று கம்யூனிஸ்ட் மற்றும் யூனியன் வெறுப்பை கக்கிக் கொண்டும் இருப்பவர்களுக்கு கட்சி, சாதி, மதம், இன்னபிற அடையாளங்களால் சிந்தனையும் உணர்வும் மழுங்கிப் போய் இருப்பின், மார்க்சியம் படித்து சற்று கூர் தீட்டிக்கொள்ளலாம்! கூடுதலாக தலைவர் பாசம், கட்சிப் பாசம் கடந்து, பா.ஜ.க வந்துடும் என்கிற பூச்சாண்டிக் கதைகளை விட்டுவிட்டு எந்த ஒரு சூழலிலும் எளியோர் பக்கம், பாதிக்கப்படுவோர் பக்கம், ‘கீழ் நிலையில்’ தள்ளப்பட்டவர்கள் பக்கம் ஏன் நிற்க வேண்டும் என்கிற நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும்.

     தனியுடைமை ஒழிப்பில் தான் உண்மையான சமூக நீதி உள்ளது! இங்கே பொருளாதார அமைப்புதான் மனிதர்களின் வாழ்நிலைகளை, உணர்வுநிலைகளை தீர்மானிக்கிறது. இதனை அறிவியல்பூர்வமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை வழியொட்டி நடந்து ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் படைப்பதே கம்யூனிஸ்ட்-வர்க்க அரசியல்.

     ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்த 1% மூலதன கூட்டத்தின் நச்சுப் பிரச்சாரங்களாலும், பண்பாடு-சாதி-மதம்-இனம்-மொழி-ஊரு,தெரு, எங்காளு, உங்காளு, intersectionality, postmoderninsm என்று பல்வேறு பெயர்களால் இங்கே தொழிலாளர் வர்க்க அரசியல், மனிதர்களின் வாழ்நிலைமையை தீர்மானிக்கும் அடித்தளம் குறித்தும் பேசியும், இயங்கியும் வந்த கம்யூனிஸ்ட் அரசியல் குறித்து எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிவிட்டனர்.

    கம்யூனிஸ்டுகளையும், வர்க்கப் போராட்ட அரசியலையும் நக்கல் அடித்துக்கொண்டும், மார்க்ஸ் செர்மானில பொறந்தாரு, ‘மார்க்சியம்’ இங்க உதவாது என்று ‘தலைவர்’ பாச அரசியல் பேசிக்கொண்டு - தொழிலாளர் வர்க்க விரோத அரசியலில் ஈடுபடும் அடையாள அரசியல் எழுச்சியே முதலாளித்துவ தந்திரம் தான். அதற்கு வால் பிடிக்கும் அரசியல் கொடுக்கும் பலத்திலிருந்தே இத்தகைய தொழிலாளர் வர்க்க விரோத சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கு சாதகமான அரசுகள் ஆட்சியப் பிடிக்கின்றன. சில அரசுகள் நேரடியாக தெரிகின்றன. சில முதலாளித்துவ அரசுகள் போகப் போக வெளிப்படுகின்றன. அவ்வளவே! இந்துத்துவ எதிர்ப்போடு, முதலாளித்துவ எதிர்ப்பையும் மேற்கொள்ளாத சமூக நீதி அரசியல் என்பதன் ஆபத்து இது!

     அடையாளம் சார்ந்த எதிர்ப்புகளை விட நம் வாழ்வின் அத்தனை துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும் தனியுடைமைப் பொருளாதார அமைப்பை தகர்த்து எரியும் எதிர்ப்பு இன்னும் வீரியம் அடைய வேண்டும்.

     தொழிலாளர்_வர்க்கம்_ஒன்றுபட்டால்_நமக்குண்டு_வாழ்வு! ’எங்க ஆளு, எங்க கட்சி, எங்க தலைவரு’ என்கிற உணர்ச்சிகர அரசியலில் மட்டுமே இருப்போமெனில் முதலாளிகளுக்கு மட்டுமே உண்டு வாழ்வு!

பி.கு.

 8 மணி நேர வேலை என்று ஏன் எப்படி உருவானது என்பதற்கு உடல் நலன் ரீதியாக வலுவான காரணங்கள் உள்ளன. தேவைப்படும் ஓய்வு, உறக்கம் எத்தனை மணி நேர இடைவெளியில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஏதோ நகைச்சுவையான விசயமல்ல.

பேரறிஞர் அண்ணாவே சொல்கிறாரே!

 உழைத்ததால் செலவானது போக, ஓய்வினை அனுப விக்கத்தக்க அளவுக்கு வலிவு மிச்சம் கைவசம் இருக்க வேண்டும். வாழ வழி தேடுவதிலேயே கால முழுவதும், வலிவு முழுவதும் செலவாகிப் போய்விடுமானால், உருக்குலைவு ஏற்பட்டு விடுமானால், தோகை விரித்ததும் செத்துவிடும் மயிலாவான்; அரும்பு மலர்ந்ததும் அறுந்துபடும் கொடியாவான்; பயன் காணான், பயனளித்திடவும் மாட்டான்.”...

 ஆகவே பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று; அடிப்படை நீதி.” - பேரறிஞர் அண்ணா http://www.annavinpadaippugal.info/.../engu_sendralum_2.htm

 #ஓய்வு_நேரம்_என்பது_முதலாளி_தீர்மானிப்பதாக_இருக்கக்_கூடாது!_தொழிலாளர்_வர்க்கம்_தீர்மானிப்பதாக_இருக்க_வேண்டும்.

 முதலாளிக்கும் சேர்த்து உழைத்துக் கொடுக்கும் பாட்டாளி சேனைதானே இதுகுறித்த முடிவை எடுக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தை, அதன் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் திமுக அரசு இப்படி ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பது பா.ஜ.கவின் பாசிசத்திற்கு நிகரானது! (நெகிழ்வுத் தன்மையுடன்!) திமுக அரசு இதனை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்.

 ஓய்வு நேரம் - ஒய்வின் தன்மை ஆகியவற்றினைக் கொண்டு, ஒரு சமூகத்தின் நிலையை மதிப்பிடுகிறார்கள், அறிவாளர். பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கும் "ஓய்வு' இருக்கிறதே, அதனை நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள், நல்லறிவாளர். – பேரறிஞர் அண்ணா.

 #திராவிட_மாடலின்_நாகரிக_அளவுகோல்_என்ன?_உழைப்புச்_சுரண்டலுக்குத்_துணை நிற்பதா?

 Ref what Chief Minister Stalin said before:

https://minnambalam.com/.../12-hour-work-mk-stalin.../

முத்தமிழறிஞர் கலைஞர் கோவையில் நடைபெற்ற மே தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய போது தொழிலாளர்களின் நலனுக்காக அறிவித்த 6 முழக்கங்களில் ‘இனி பணி நேரம் 6 மணிதான் எனக் கோரிக்கை வைப்போம் என்ற முத்தான முழக்கத்தை முன் வைத்தார்!

 ????????

  

No comments:

Post a Comment