Feb 10, 2023

தீட்டுக் கருத்தியலும், தொடை அறுப்பும்!

 


நான் 9ஆவது படிக்கும் போது வயதுக்கு வந்தேன்! 14-15 வயசு! 1990ஆ இருக்கும்.

எல்லா வீட்லையும் சொல்ற மாதிரி “தீட்டு”ன்னு தான் எங்க வீட்லையும் சொன்னாங்க! சடங்கெல்லாம் வச்சுக்கல! தனியா பால்கெனில படுக்க சொல்வாங்க! பாய், தலையனை எல்லாம் தனியா! (என் தோழிகளுக்கும் இதே நிலைமைதான்!)

 மேல பட்றாத, சாமி முன்னாடி வந்துடாத, சமையல்கட்டுக்கு வந்துடாத! சாமிக்கு மாலை போட்டவங்க முன்னாடி வந்துடாத… தலைக்கு தண்ணிய ஊத்து.. குளிக்கும் போது துணியெல்லாம் நனைச்சுடு! தீட்டு தீட்டு தீட்டு!

இதையெல்லாம் விடக் கொடுமை! உதிரப்போக்கை உறிஞ்சப் பயன்படுத்தும் துணி! ஆம்! தூமைத் துணி! எங்க காலத்துல துணிதாங்க! ஸ்டேஃப்ரீன்னு ஒண்ணு இருந்துச்சு.. விஸ்பர் அப்புறம் தான் வந்துச்சு! ஆனா அதெல்லாம் வாங்கித்தர அளவுக்கு விழிப்புணர்வும் இல்ல! செலவு பண்ன மனசில்ல! பிற்காலத்தில் அதற்கு மாறினேன்!

 அயலில ப்ராவால வர காயத்தை இயக்குனர் பதிவு பண்ணி இருந்தார். அதேமாதிரி தூமைத் துணியால பட்ட அவஸ்தைகளை இப்ப நினைச்சாலும் கண்ணுல ரத்தம் வருது!

 தூமைத் துணியை துவைச்சு துவைச்சு பயன்படுத்திக்கனும்.. வெளில தெரியுற மாதிரி காயப்போடக் கூடாது (அயலியில் இதும் உள்ளது)! அந்தத் துணி ரத்தம் உறிஞ்சு உறிஞ்சி எப்படி இருக்கும்! கரடுமுரடா… கத்தி மாதிரி தொடைகளை அறுக்கும்! மாசா மாசம் இப்படித்தான்! மாதவிடாய்னாலே பயம் தான் வரும்.. ஐயோ தொடையை அறுக்கப் போகுதே! நடக்க முடியாதே! இன்னொரு பக்கம் இடுப்பு வலி!

 தொடக்ககால மாதவிடாயில் உதிரம் கெட்டி கெட்டியாகவும் போகும்! அந்த துணி எப்படித் தாங்கும்? அதுலையும் பத்தாம் வகுப்புக்கு தயாராகுற பரீட்சை நேரத்துல… ப்பா இப்ப நினைச்சாலும் ரணமா இருக்கு!

 துணி எம்புட்டு ரத்தம் தாங்கும்.. பரீட்சை எழுதிட்டு இருக்கும் போது முழுசா ஈரமாகிடும்.. எந்திரிச்சு பேப்பர் வேற கேக்கனும். நான் படிச்சது Co-Ed! ரத்தக் கறை uniform ல படிஞ்சிருச்சுன்னு தெரியும்.. என்ன செய்றதுன்னு அழுகையா வரும். வேற வழியில்லாம எந்திரிச்சு பேப்பர் கேக்குறதும், துணியை மாத்திட்டு வரேன்னு போறதுமா இருந்திருக்கேன். அதுலையும் எங்க பள்ளிக்கூட கழிப்பறை இருக்கே… உள்ள போய்ட்டு உசுரோட வெளிய வரதே அதிர்ஷ்டம்.

இதுல துணி தொடை இடுக்குகளை அறுத்து அறுத்து.. தடிச்சு.. நடக்க முடியாம நடந்து! தேங்காய் எண்ணெயா தடவி… ஒரு வழியா பொறவு நாப்கினுக்கு மாற முடிஞ்சுது.

 அதேமாதிரி ஒரு கட்டத்துக்கு மேல! கல்லூரி படிக்க ஆரம்பிச்சப்புறம்.. அப்ப நான் பகுதி நேர வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டேன்… ”என்னா இது நம்ம உடம்பை தீட்டு தீட்டுன்னு சொல்றாங்கன்னு ஒரு கோவம் வந்துச்சு! பெரியார்லாம் அப்ப தெரியாதுங்க! நான் தனியால்லாம் படுக்க முடியாது. என் படுக்கைல தான் படுப்பேன்னு “உள்ள வர ஆரம்பிச்சேன்”! ஆரம்பத்துல தனியா பாய்ல படுத்துக்கன்னு விட்டாங்க.. அப்புறம் அவங்களும் மொத்தமா விட்டுட்டாங்க! பாவம்! வீட்டாளுங்கள சொல்லி என்ன இருக்கு! அவங்களை அப்படித்தான மிரட்டி வச்சுருக்காங்க..

 பொம்பளைங்க உடம்பாலையும், மனசாலையும் எத்தனை வலியையும், அவமானங்களையும், கட்டுப்பாடுகளையும், பாகுபாட்டையும் தாங்கிக்கிட்டு இருக்கோம்! அதை உணர்ந்தப்புறம் வெளிய வந்து பேசுனா... முட்டாள் கூட்டமும், ஆணாதிக்கம், சாதி, மத வெறி புடிச்ச கூட்டமும் “நீ ஊர் பொறுக்கத்தான இப்படி பேசிட்டு திரியுறன்னும்”! அதுக்கும் ஆப்பு வைக்குற அளவுக்கு நம்ம தலைவருங்க நமக்கு கத்துக்கொடுத்திருக்காங்க!

 பார்ப்பன வெறுப்பு, கடவுள் மறுப்பு, ஆணாதிக்க சமூகம் ஒழியனுங்குற கோவம்லாம் இந்த மாதிரி “ஒதுக்கல்ல.. அவமானத்தால.. பாகுபாட்டுல” இருந்துதான் வந்துச்சு.. என் உடம்பை தீட்டு, அழுக்கு.. நீ வேறன்னு சொல்லி சொல்லி… உள்ள தேங்கிக் கிடந்த கோவம், கேள்விகளுக்கும், சமூகம் ஏன் இப்படி இருக்குங்குற காரணம் என்னங்குறதையும் பின்னாடி தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு நான் வசுமித்ரவுக்கு தான் நன்றி சொல்லனும்…

 பொம்பளையும், தலித்தும் ஒண்ணுதான்.. அதுலையும் உழைக்குற கூட்டம்தான் எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்குதுங்குற புரிதல் மார்க்சியம் படிச்சு வந்துச்சு.. அந்த புரிதல்ல நாம இயங்குனாலும் இங்க ஒரு சிலர் தங்களோட பிழைப்புக்காக நமக்கு பல முத்திரைகளை குத்துவாங்க! இன்னார் வலி இன்னாருக்கு தான் தெரியும்னு! ஆனா பாருங்க பொம்பளைங்க வலிய பெருசா பேசுனவங்கல்லாம் (பெரும்பாலும்) ஆம்பிளைங்க! அதே மாதிரி தான் எந்த ஒடுக்குமுறை குறித்தும் யாரும் உணர்ந்து empathize செய்ய முடியும்… உழைக்குற வர்க்கமா இருக்குறதால! இதுலையும் கூட வர்க்க உணர்வும் தானா வந்துடுறதுல்ல! அதுக்கும் இங்க அரசியல்மயப்படுத்த வேண்டி இருக்கு!

 கேள்விகளும்.. விழிப்புணர்வும் தான் ஒருத்தருக்கு அடையாளமா இருக்குமே ஒழிய.. (தங்களுக்கு புடிச்சவங்கள விமர்சனம் பண்றதாலையே) பொறப்பை வச்சு ஒருத்தரை ஓரம் கட்ட நினைக்குறதும் பார்ப்பனியம்தேன்!

 அயலி பலவிதமான உரையாடல்களை நிகழ்த்த வைக்கிறது!

 இணையத் தொடர்கள் வரிசையில் #அயலி நிச்சயம் ஒரு மைல்கல்!

 #ayaliwebseries #Ayali effect on society is hopeful ❤️

 

No comments:

Post a Comment