Showing posts with label Caste Question. Show all posts
Showing posts with label Caste Question. Show all posts

Jun 19, 2020

அம்பேத்கரின் ஆணாதிக்கம் - பகுதி 1


அம்பேத்கரின் ஆணாதிக்கம்
(புத்தரும் அவரது தம்மமும் நூலை முன்வைத்து ) - #வசுமித்ர 
பகுதி I
அம்பேத்கர் புத்தரது பிறப்பை அதிமானுடப் பிறப்பாக எழுதுகிறார். பிறக்கும்போதே உடலில் 32 இலட்சணக் குறிகளுடன் பிறந்ததாக எழுதுகிறார். அந்த முப்பத்திரண்டு லட்சணங்களாவன,
1.இந்தக் குமாரன் நன்கு நிலை பெற்ற காலை யுடையவன். 2.இவனுடைய திருவடித்தலத்தின் கீழ் ஆயிரம் ஆரக்கால்களும், வட்டங்களும் மையமும் வாய்ந்ததும் நல்வடிவங்கள் அனைத்தும் நிரம்பியதுமான சக்கரம் இருக்கிறது.3.இவனுடைய உள்ளங்கால்கள் நீண்டிருக்கின்றன. 4.விரல்கள் நீண்டவை.5.கைகால்கள் மென்மையும் இளமையும் வாய்ந்தவை.6.அவை வலைகளைப் போல இருக்கின்றன.7.குதிகால்கள் முளையைப் போலவளைந்திருக்கின்றன. 8.துடைகள் பெண்மானின் துடைகளைப் போல் இருக்கின்றன.9.நேரே நின்று வளையாமலே இவன் தன் உள்ளங்கையால் முழங்காலைத் தொட முடிகிறது. அதைத் தடவிக்கொடுக்க முடிகிறது.10.ஆடையினால் மறைக்க வேண்டிய இவன் உறுப்பு உறையினால் மூடப்பட்டுள்ளது.11.இவனுடைய ஒளி பொன்னை நிகர்த்தது.12.சருமம் நுட்பமாக இருப்பதால் இவனுடைய உடலில் தூசு படிவதில்லை.13.இவனுடைய மயிர்க்கால்களில் ஒவ்வொரு மயிரே முளைத்திருக்கிறது. 14.இவனுடைய கேசம் மேல்நோக்கியும் கறுத்து மைவண்ணத்தோடும், சுருள் சுருளாகவும் வலப் பக்கத்தில் வளைந்தும் இருக்கிறது.15.இவனுடைய அங்கங்கள் நேராக இருக்கின்றன.16. இவனுடைய உடலின் ஏழு பகுதிகள் பருத்திருக்கின்றன. 17.இவனுடைய உடலின் முன் பக்கத்திற் பாதி சிங்கத்தின் மோவாயை நிகர்த்திருக்கிறது.18.இவனுடைய தோள்களின் மேற்புறம் பருத்திருக்கிறது.19. ஆலமரத்தைப் போல உருண்டிருப்பதோடு அதன் உயரமும் சுற்றளவும் சமமாக இருக்கின்றன.20.இவனுடைய தோள்கள் ஒரே மாதிரி வளைந்துள்ளன.21.இவனுடைய சுவைப்புலன் சிறந்திருக்கிறது. 22.மோவாய் சிங்கத்தின் மோவாயை நிகர்த்திருக்கிறது. 23.இவனுக்கு நாற்பது பற்கள் இருக்கின்றன. 24.அவை நேராக இருக்கின்றன. 25.அவை நிலையானவை. 26.அவை வெண்மையானவை. 27.இவனுடைய நாக்கு நீண்டுள்ளது. 28.இவன் தெய்வீகக் குரல் வாய்ந்தவன். கரவிகம் என்னும் பறவையின் ஒலிபோல இவன் குரல் இனிமையாக இருக்கிறது. 29.இவனுடைய விழிகள் நீலமாக உள்ளன. 30.இவனுடைய கண்ணிமைகள் பசுவின் இமைகளைப் போல இருக்கின்றன. 31.இவனுடைய புருவங்களில் மென்மையான பருத்தியிழை போன்ற வெள்ளிழைகள் தோன்றியுள்ளன.32.இவனுடைய தலை, பாகைபோல (சிறிது உயர்ந்து) இருக்கிறது.
இத்தகைய அடையாளங்கள் பிறந்த குழந்தைக்கு இருக்குமா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். பிறந்த உடனே நாற்பது பற்கள் கொண்டவராக புத்தர் பிறந்தார் என்று அம்பேத்கர் நம்பி எழுதுவதை நாம் என்னவென்று சொல்வது?
ஒரு மனிதன் மீமனிதன், அல்லது அதிமனிதன் ஆகும் போது, அதுவும் அவன் ஆணாக இருக்கும்போது, ஆணாதிக்கத்தின் உச்சத்தைக் கைக்கொள்வான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவ்வகையில் அம்பேத்கரின் புத்தர் ஆணாத்திக்கத்தையே முன்வைக்கிறார். அம்பேத்கரும் ஆணாதிக்க மனநிலையிலேயே எழுதுகிறார்.
பெண் வீரமாக செயல்படும்போது, அல்லது ஆண் வரையறுப்பின்படி தைரியமாக ஒரு சூழலைக் கைக்கொள்ளும் போது, அல்லது ஆணுக்கு அடங்கி நடக்க மறுக்க நடக்கும் போது, சக ஆண்களால், அழைக்கப்படுவது ஆம்பளை மாதிரி நடந்துகொள்கிறாள் என்பதே. இங்கு பெண்ணைப் பொறுத்தவரை ஆண் என்பவன் அதிமனிதனாகிறான். ஆணாதிக்கமானது அத்தகைய மனநிலையை பெண்களுக்கு தருவதே, உன்னால் ஒருபோதும் தனித்து முடிவு, எடுக்க முடியாது, அதற்கான ஏற்பாட்டையும், ஆண் இனம் தராது என்பதோடு, தனது இருமை நிலையையும் அது முன்வைக்கும். ஆண் மகத்தானவன், வீரம் மிக்கவன், அதே சமயம் பெண் தன் சுந்தந்திரத்தை முன்வைத்தால், ஆணைப் போல் நடக்கிறாள் என்கிற தாழ்வான நிலையை முன்வைத்து உரையாடும். இந்த இருமை நிலைக்கு இடையில்தான் ஒரு பெண் தன்னை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
ஆண்பிள்ளை போன்று நடத்தல், என்ற வார்த்தையில் ஆண் தன்னை மேல் நிலையில் வைக்கும் அடுத்த கணமே, பெண்ணின் பெண் தன்மை என்கிற பதத்தை இழிவு செய்வதோடு அவள் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதையே தீர்மானமாகச் சொல்கிறான். ஆணுக்குக் கீழே கட்டுப்பட்டு இருத்தலே சிறந்த பெண்ணிற்கான அளவுகோல். அதைவிடுத்து ஆண் தன்னைக் கட்டமைக்கும் புள்ளிகளில் எதேனும் ஒன்றைத் தொட்டால் கூட, அவள் ஆணுக்கு சவால் விடுகிற பெண்ணாக மாறிவிடுவதோடு, ஆண்களால் அவமானத்துக்கும் உள்ளாகிறாள்.
அந்த வகையில் அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ ஆணாதிக்க பனுவலே. புத்தரது வாயிலாகவும், அதே சமயம் அந்நூலின் ஆசிரியராகவும் அம்பேத்கர் தனது ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்துகிறார். நூலின் எந்த இடத்திலும் பெண்கள் மதிக்கப்படுவதில்லை என்பதோடு, ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தை பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார். ஆணுக்குப் பெண் அடங்கி இருக்க வேண்டும் என்கிற மனநிலையே அம்பேத்கருக்கும் இருக்கிறது. அந்தப் பெண் பிக்குணியாய் இருந்தாலும் கூட.
உதாரணத்திற்கு புத்தர் தனது வளர்ப்பு அன்னையையும், மனைவியையும் சங்கத்தில் சேர்க்க மறுக்கிறார். ஆனந்தன் விவாதித்ததும் இணைத்துக் கொள்ளச் சொல்கிறார். ஆனால் எட்டு விதிகளுக்கு பெண்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஆணாதிக்க விதிகளை ஆனந்தன் மூலமாகச் சொல்லி அனுப்புகிறார். வளர்ப்பு அன்னையும், யசோதரையும் அதை மகிழ்ச்சியோடு ஏற்கிறார்கள். ஆனால் அந்த எட்டு அட்ட விதிகள் என்ன என்று அம்பேத்கர் எங்கும் சொல்லவில்லை. அந்த எட்டு விதிகள் என்னவென்று பார்ப்போம்.
1.உபஸம்பதா என்னும் உயர்நிலைத் துறவு பூண்டு ஒருநூறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் ஒரு பிக்குணி ஒரு பிக்குவை வணங்க வேண்டும். அவர் முன் எழுந்து நிற்கவேண்டும். மரியாதை செலுத்த வேண்டும். மற்றும் அந்தப் பிக்கு அன்றுதான் உயர்நிலைத் துறவு பூண்டவர் என்றாலும் கூட அவருக்குச் செய்ய வேண்டிய முறையான எல்லாக் கடமைகளையும் செய்ய வேண்டும்.
2.வர்ஷகால வாசம் செய்யும்போது பிக்குகள் யாரும் இல்லாத இடத்தில் ஒரு பிக்குணி தனித்திருந்து தவமியற்றக் கூடாது.
3.இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு பிக்குணியானவர் பிக்குகள் சங்கத்தை அணுகி உபோஸாதா நாளான அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று கூட்டப்படும் கூட்டம் எப்போது என்றும் தங்களுக்கு விதிகளைக் கூறி அறிவுறுத்த ஒரு பிக்கு எப்போது வருவார் என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4.மழைக்கால வாசத்தின் முடிவில் தனிமைத் தவப்பயிற்சிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் பவாரண சங்கை ஒரு பிக்குணி பிக்குகளும் பிக்குணிகளும் அடங்கிய ஒரு கூட்டத்தில் நடத்த வேண்டும். (பார்த்தல் கேட்டல் ஐயுறுதல் இவற்றின் மூலமாகத் தவறு ஏதேனும் நேர்கிறதா என விசாரிக்கும் சடங்கு)
5.ஒரு பெருந் தவறைச் செய்துவிட்ட ஒரு பிக்குணி, பிக்குகள் பிக்குணியாரின் முன்னிலையில் மானத்த என்ற ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டுக்கு உட்படவேண்டும். 6.இரண்டாண்டு காலம் விதிகளைக் கடைப்பிடித்து பயிற்சி பெற்ற மாணக்கர்கள் மட்டுமே பிக்குகள் சங்கம், பிக்குணிகள் சங்கம் இரண்டின் முன்னிலையில் உயர்நிலைத் துறவு பெற்றுக்கொள்ள வேண்டும்.
7.ஒரு பிக்குணி எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு பிக்குவை எதிர்த்துப் பேசவோ கடுஞ்சொல் கூறவோ கூடாது.
8.பிக்குணியர் பிக்குகளுக்கு உத்தரவுகள் கொடுக்கலாகாது. அறிவுரை கூறக்கூடாது. ஆனால் பிக்குகள் பிக்குணியருக்கு உத்தரவுகள் கொடுக்கலாம்.
ஆணாதிக்கத்தின் அட்டவணையாய் இருக்கும், இந்த எட்டுவிதிகள் குறித்து எழுதாது அம்பேத்கர் நழுவுகிறார். பௌத்தத்தில் அறிஞராகக் கருதப்படும் அம்பேத்கருக்கு இந்த எட்டுவிதிகள் தெரிந்திருக்காது என்பதை நம்பும்படி இருக்கிறதா? அதுவும் போக அவ்விதிகளை ஏற்றுக்கொண்டது குறித்து வளர்ப்பு அன்னையான பிரஜாபதி கோதமி,
“ஆனந்தா! ஆணோ பெண்ணோ இளைய சிறிய வயதுகளில், தம்மைத் தாமே அலங்கரித்துக் கொள்ளும் பழக்கமுடையவராய், நீராடி முடித்ததும், எவ்வாறு இரு கரங்களாலும் தாமரை மலர் மாலைகளை அல்லது மல்லிகை மலர்களை அல்லது ஸ்திமுக மலர்களைப் பெற்று, தம் தலைமீது சூடிக்கொள்வார்களே, அவ்வாறே, ஆனந்தரே! நான் இந்த எட்டுத் தலையாய விதிகளையும் என்றென்றும் என் வாழ்நாள் முழுவதும் மீறாமல் தலைமேல் வைத்துப் போற்றுவேன்”
என அவரது வாயாலேயே அம்பேத்கர் சொல்ல வைக்கிறார். அம்பேத்கரின் ஆணாதிக்கத்தை விளக்க இதை விட வேறு சான்றுகள் நமக்கு வேண்டுமா?
அம்பேத்கர் தனது கடவுளான சித்தார்த்தரை மயக்கச் செய்யும் காரியங்களாக எழுதியிருப்பவை முகச்சுளிப்புக்கே நம்மைக் கொண்டு செல்லும்.
சித்தார்த்தர் துறவு நிலைக்குச் செல்லக் கூடாது என்ற சோதிடத்தை நம்பி சுத்தோதனர், தனது குலகுரு உதாயினரோடு ஆலோசித்து அந்தப் புரத்துக்கு பெண்களை அனுப்ப முடிவு செய்கிறார். இதில் எந்த அறிவார்ந்த தர்க்கத்துக்கும் கிஞ்சித்தும் இடமில்லாதவாறு அம்பேத்கரால் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் சித்தார்த்தர் யசோதரையை திருமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றும் இந்த சோதிடம் அவரைத் துன்புறுத்தியிருக்கிறது.
பகுத்தறிவுப் பார்வையின்றி சித்தார்த்தரது அந்தப்புரத்திற்கு அவரை மயக்க பெண்களை அனுப்பும் யோசனைகளை முன்வைக்கும் உதாயினர் என்பவரை கொள்கை கோட்பாடு நெறிமுறைகளில் வல்லவர்! என்றே அம்பேத்கர் போற்றுகிறார். உதாயினர் அனுப்பி வைத்த அந்தப் பெண்கள் சித்தார்த்தரை பாலுறவுக்கு அழைக்கப் படும் பாடுகள் உண்மையிலேயே பகுத்தறிவுடையோர்க்கு கடும் எரிச்சலை ஊட்டக் கூடியத் தன்மையில் இருக்கிறது..
சித்தார்த்தரது நற்குணங்களைக் காட்ட பெண்களை இழிவுபடுத்தும் சொற்றொடர்களாக அவை நம் முன் சாட்சியாக இருக்கிறது. அம்பேத்கர் புத்தர் மீது கொண்டுள்ள பக்தி மனநிலை ஆண்தன்மை கொண்டதாகவே நூல் முழுக்க சுழன்று செல்கிறது.
ஒரு ஆணின் பேராண்மையை விளக்க, பெண்களை இப்படி அந்தப்புரத்திற்கு அனுப்புவதை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் இத்தகைய மதப்பனுவலை இங்குள்ளோர் எப்படி எந்த அடிப்படையில் காவியம் என்றழைக்கிறார்கள் என்று பார்த்தால் நூலை முழுதாகப் படிக்காத காரணத்தில்தான். படித்தவர்களும் இதிலுள்ள முரண்பாடுகளைக் கூறாது அம்பேத்கருக்கு வக்கீல் வாதம் செய்யும் மனநிலையிலும், அம்பேத்கர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்கிற முன் அனுமானத்தோடுதான் அணுகியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், அம்பேத்கரை விமர்சித்தால் அடையாள அரசியல் தங்களது சாதியைச் சொல்லித் தூற்றும் என்கிற அடையாள அச்சமின்றி வேறென்ன? தான் நம்பும் ஆணை உத்தமனாகக் காட்ட பெண் உடலும், பெண் அவமதிப்புமே இங்கு அம்பேத்கரின் அளவுகோல்.
அம்பேத்கரின் புத்தர், ஆணாதிக்கம் நிறைந்தவராக மட்டுமே இருக்கிறார் என்பதை நாம் பல இடங்களில் கண்டுகொள்ளலாம். பெண்களை அறிவற்றவர்களாக சமூகம் குறித்த எந்தப் பார்வையுமற்ற பண்டங்களாகவே அம்பேத்கர் தனது நூலில் படைக்கிறார்.
புத்தருக்கென மூன்று மாளிகைகளைக் கட்டியதைக் கதை என்ற அளவிலாவது அம்பேத்கர் விவரித்திருக்கலாம். விமர்சித்திருக்கலாம். மாறாக மதப்பனுவல்கள் சொன்னதை நம்பி, மூன்று அந்தப்புரங்களிலும் பெண்களை சுத்தோதனர் குலகுருவின் யோசனைப்படி அனுப்பி வைத்தார் என்று விவரிக்கிறார். அப்படியெனில் சுத்தோதனர் ஊதாரித்தனமான ஒரு அரசனாகவே இருந்திருக்க வேண்டும். நினைத்த மாத்திரத்தில் மூன்று அரண்மனைகளைக் கட்டிக்கொடுக்க முடிகிறது என்றால் அவரால் எத்தனை அடிமைகள் அல்லது உழைப்பாளிகள் சித்திரவதை அனுபவித்திருக்க வேண்டும் என்பதை இங்கு நாம் நினைத்துப் பார்க்கலாம். ஆனால் அம்பேத்கர் சித்தார்த்தரின் துறவுக்கு எவ்வளவு பெரிய தடைகள் இருந்தது அவற்றை தெய்வப் பிறப்பான சித்தார்த்தர் எப்படி சமாளித்தார் என்று அவதார மகிமையைப் போல் சித்தரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.
எந்த இடத்திலும் சித்தார்த்தருக்கு, நம் தந்தை ஏன் மூன்று அரண்மனைகளையும், அதில் பெண்களையும் நிரப்புகிறார் என்ற கேள்வி கடைசி வரை எழவே இல்லை.அம்பேத்கர் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை.
சித்தார்த்தரை அந்தப் பெண்கள் எப்படி மயக்க முயற்சித்தனர் என்பதை, பகுதிக்கு மேல் அலுப்பூட்டும் சொற்களால் அம்பேத்கர் விவரிக்கிறார். ஓரிரு உதாரணங்களாக,
‘இமவதப் பார்வத வனங்களில் உலவும் யானையைப் போல அடர்ந்த சோலைகளில் பெண்களில் கூட்டத்தோடு இளவசரசை அவர்கள் உலவச் செய்தனர்.'
'தேவ வனத்தில் அப்ஸரஸ்கள் சூழ வீற்றிருக்கும் சூரியனென அந்த மகிழ்வனத்தில் பெண்கள் புடைசூழ அவர் ஒளி படைத்தவராய் வீற்றிருந்தார். மற்றவர்களோ தம்பொன்னுடைகள் மின்மினுக்க, இங்குமங்கும் உலாவி, மெல்லிய உடைக்குள் மிளிரும் தம் உடலழகைக் காட்டி அவரை மயக்க முயன்றனர்.’
சாக்கிய குலத்தில், பிறந்த எந்தப் பெண்ணாவது, ஓர் ஆணை மணக்க ஒரு பெண் செய்யும் தொழிலா இது என்று கேட்டு, தன் சுயமரியாதையை வெளிப்படுத்தவில்லை. அரசரும், குலகுருவும் ஆணையிட்டதும் இளவரசரை காம வயப்படுத்த வண்டுகள் போல் மொய்க்கத் தொடங்கிவிடுகின்றனர். இதன் மூலம் சாக்கிய குலத்து இளம் பெண்கள் மன்னர் ஆணையிட்டதும் அடிமைகள் போல் தங்களது உடலை ஈவதற்கு முன்னே வருகின்றனர்.
சுத்தோதனாரது பண்ணைகளில் ஆண்களான அடிமைகளும், உழைப்பாளர்களும் கொளுத்தும் வெயிலில் வேலை செய்து அரசனின் வருவாயைப் பெறுக்கவேண்டியது. அவர் தம் பெண்கள் இங்கு அந்தப்புரத்தில் இளவரசனை மயக்க வேண்டியது. இதுவே அன்றைய நிலைமை என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? அம்பேத்கர் பகுத்தறிவோடு எதையும் இங்கு விமர்சிக்கவே இல்லை.
இளவரசரின் உறுதியைக் குலைக்க பெண்கள் அந்தப்புரத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்பவர் குலகுரு, அதற்கு கட்டளையிடுபவர் அரசர். அது குறித்து எந்தக் கேள்வியையும் அம்பேத்கர் மறந்தும் கூட முன்வைக்கவே இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் பெண்கள் ஆண்களை மயக்கவே படைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள்.
சித்தார்த்தரது இளம் பருவக் குணநலன்கள் குறித்து
“ஒருமுறை தன் நண்பர்களோடு அவர், தன் தந்தையின் பண்ணைக்குச் சென்றார். அங்கே கொளுத்தும் வெய்யிலில், கந்தல் உடைகளுடன். வேலையாட்கள் ஏர் உழுதல், அண்டை வெட்டுதல், மரங்களை வெட்டுதல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்வதைக் கண்டார்.” “இந்தக் காட்சி அவரை மிகவும் பாதித்தது” “ஒரு மனிதன் மற்றொருவரைச் சுரண்டுவது சரியாகுமா? என்று அவர் தன் நண்பர்களைக் கேட்டார். வேலையாள் கடுமையாக உழைக்கவும், அதன் பயனை எஜமானன் சுகமாய் அனுபவிக்குமாக இருப்பது எப்படி சரியாகும் என்றார்?”
என்று புத்தரின் இளம்பருவ கருணை உள்ளத்தை எழுதிய அம்பேத்கர், அந்தப்புரத்தில் தன்னை படுக்கையில் வீழ்த்த வந்திருக்கும் பெண்களின் மனநிலை குறித்து சிறிதும் கவலைப்பட்டதாக எங்கும் சொல்ல வில்லை.
இதை ஒரு வேலையாக ஏன் தன் தந்தை நினைக்கிறார் என்று இப்பொழுதும் அவரிடம் கேட்கவில்லை. கேட்கவும் தோன்றவில்லை. சிறுவயதில் பண்ணை அடிமைகளின் கோலங்கள் அவர் மனதை உறுத்தி தொந்தரவு செய்தது போல், தான் வளர்ந்து, ஒரு குழந்தைக்கு தகப்பான பின்பும் ஏன் இதுபோன்ற பெண்களை வரவழைத்து தன்னை மயக்கும் காரியங்களைச் ஏன் செய்கிறார் என்ற கேள்விகள் சித்தார்த்தருக்கு எழவிடாது அம்பேத்கர் தடுத்தாட்கொண்டு விடுகிறார். மாறாக பெண்கள் புத்தரை மயக்குவதை ரசனையுடன் செய்ததாக விவரிக்கிறார். அம்பேத்கருடைய சித்தார்த்தரின் குணம் உண்மையில் எத்தகையது. தேர்ந்தெடுத்த விசயங்களில் மட்டும்தான் அவரது கவனம் செல்லுமா? இத்தனைக்கும் இந்த கேளிக்கூத்துக்கள் ஓரிரவில் நடந்தவைகள் அல்ல.
“அவரை (சித்தார்த்தரை) வசீகரீப்பதற்காகப் புகழ்வதும், அவர் இளமையை, அழகைப் பாராட்டுவதுமாகப் பெண்கள் எடுத்த முயற்சி மாதக் கணக்கிலும், ஆண்டுக்கணக்கிலும் நீண்டும் தோல்வியுற்றது.”
என்று தயங்காமல் கூறுகிறார் அம்பேத்கர். இத்தனை மாதங்களில் ஆண்டுகளில் பெண்களே, நீங்கள் அடிமைகளா? உங்களது பிழைப்பு ஒரு பிழைப்பா? என்று சித்தார்த்தர் அப்பெண்களை நோக்கிக் கேட்டிருக்க வேண்டும். அல்லது சுத்தோதனரை அழைத்து, கட்டிய மனைவி இருக்கும் போது இதுபோன்ற களியாட்டங்களில் என்னை ஈடுபடச் சொல்வது ஒரு தந்தைக்கு அழகா? பெண்கள் ஆண்களை மயக்கும் பண்டங்களா,? இது கீழ்த்தரமான காரியங்கள் இல்லையா? என்றாவது கேட்டிருக்க வேண்டும். இதற்கும் மேலாக, இது போன்ற மோசமான காரியங்கள் குறித்து என் மனைவி யசோதாரா என்ன நினைப்பாள். இதெல்லாம் ஒரு முறையா? அடிமைப் பெண்களை, அல்லது உழைக்கும் வர்க்கப் பெண்களை இதுபோன்ற கட்டளைகளுக்கு அடிபணியச் சொல்வது சரியா? என்று கேட்டிருக்க வேண்டும். கேட்கவே இல்லை. குறைந்தபட்சம் இது ஆபாசமான செயல் இதில் நான் ஈடுபடமாட்டேன் என்றாவது சொல்லியிருக்கலாம் சொல்லவில்லை.
ஆனால் ஆண்டுகணக்கில் அந்தப் பெண்கள் தன்னை மயக்கி சுகம் அனுபவிக்க முயல்வதை ஏற்காமல் ஒரு பேராண்மை கொண்ட! மனிதராக அமைதியாக இருந்திருக்கிறார். பெண்கள் ஆண்டுக்கணக்கில் மயக்கும் போது சித்தர்த்தர் அத்தனை ஆண்டுகளிலும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தாரா என்ன? கேள்விகள் மேல் கேள்விகள் நமக்கு வருகிறது.
ஆண்டுக்கணக்கில் அப்பெண்கள் தன்னை மயக்க நினைத்து தழுவுவதும் விளையாடுவதுமாய் இருக்கையில் சித்தார்த்தர் ஒன்றே ஒன்றை நினைத்ததாக அம்பேத்கர் துணிச்சலுடன் எழுதுகிறார்.
"இளமை நிலையற்றது என ஏன் இந்தப் பெண்கள் உணரவேயில்லை? என்ன குறை உள்ளது இவர்களிடம்? இருக்கும் அழகையெல்லாம் அழித்துவிடுமே முதுமை”
இந்த இளமை முதுமைப் பிரச்சினைதான் அவருக்கு ஆண்டுக்கணக்கில் தோன்றிய சிந்தனை! ஆனால் அப்பெண்களின் தன்மான உணர்ச்சி குறித்தோ, ஏழ்மை நிலைகள் குறித்தோ, மன்னருக்குக் கட்டுபடவேண்டிய நிலைமைகள் குறித்தோ, யதோசரையின் மனநிலை குறித்தோ எதுவும் தோன்றவில்லை என்பதையே அம்பேத்கரின் விவரிப்புகள் காட்டுகிறது.
மேலும் உதாயினர் இளவரசரை மயக்குங்கள் என்றதும், அந்தப் பெண்கள் உள்ளக் கிளர்ச்சியுற்று இளவரசரை வெற்றி கொள்வதற்குத் தம்முடைய நிலைக்கு ‘மேம்பட உணர்வு பெற்றனர்’ என அம்பேத்கர் எழுதிச்செல்கிறார். உண்மையிலேயே அம்பேத்கருக்கு இது மேம்பட்ட உணர்வாகத் தெரிகிறது போலும்.
அம்பேத்கரது வர்ணனைகளைக் கவனித்தோமானால் அது மத, புராண வர்ணனைகளை மிஞ்சிக் காணப்படுகிறது. புராண வர்ணனைகளையே அவர் இங்கு பெரிதும் எடுத்தாள்கிறார். அப்சரஸ்கள் சூழ வீற்றிருக்கும் சூரியனைப் போல என்கிறார். மேலும் இதற்கு சித்தார்த்தரும் உடன்பட்டிருக்கிறார் என்பது போல் சில இடங்களில் காணப்படுகிறது.
“தங்கள் வில்லென வளைந்த புருவமும், வசீகரம் மிக்க பார்வையும், காதல் மொழிகளும், கனிச்சுவைப் புன்னகையும், நளின சித்ர நடையும் கூட அந்தப் பெண்களுக்குத் தன்னம்பிக்கையைத் தரவில்லை.” “ஆனாலும் குலகுருவின் போதனைகளும், இளவரசரின் நயமான நடையும், அப்பெண்கள் அருந்தியிருந்த மதுவும், நேசமும் அவர்களுக்குள் உறுதிப்பாட்டை மீட்டன”
என்கிறார் அம்பேத்கர். இளவரசரைப் பெண்கள் உலாவச் செய்தனர் என்றும் கூறுகிறார். இதன் மூலம் சித்தார்த்தர் அவர்களுக்கு நம்பிக்கை வரும் படி நடந்தாரா? என்ன என்ற கேள்வி வருகிறது. அதே சமயம் இளவரசரை மயக்கி படுக்கையில் வீழ்த்துங்கள், காம சுகத்தைத் தாருங்கள் என உதாயினரின் உரையைக் கேட்ட பெண்கள், எப்படியாவது இளவரசரைத் தம்வசப்படுத்த உறுதி மேற்கொண்டர் என்ற ரீதியில் எழுதிய அம்பேத்கர், அடுத்த உரையாடலிலேயே அந்த நம்பிக்கையை அப்பெண்கள் இழந்ததாகக் கூறி பின் குல குருவின் போதனை, மது, மற்றும் இளவரசரின் நயமான நடை என்று கூறுகிறார். இங்கு சாக்கிய குலப் பெண்கள் குடிப்பதை ஒரு தவறாகக் கருதவில்லை என்று கருத்து மேலும் வலுப்பெறுகிறது.
ஒரு நாளில் இது நடந்திருந்தால் கூட அப்படி நடக்க வாய்ப்பில்லை இளவரசர் அவர்களை விரட்டியடித்தார் என்று முடித்து வைத்திருக்கலாம். ஆனால் இளவரசரை மயக்கும் இந்தக் கொடுமையானது மாதக் கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் அல்லவா தொடர்ந்தது என்கிறார் அம்பேத்கர். ஒரு நாளில் கூடவா இது தவறென அவர்கட்கு தெரியவில்லை, அல்லது திருமணம் முடித்துக் குழந்தையும் பெற்ற சித்தார்த்தர் சுட்டிக்காட்டவில்லை? காட்டவேயில்லை! ஒட்டுமொத்தத்தில் சித்தார்த்தருக்கு ஆண்டுக்கணக்கில் பெண்கள் பாலுறவுக்கான அழைப்பையும், தொந்தரவுகளையும் கொடுத்தபடியே இருந்திருக்கின்றனர் என்றே முடிவையே இங்கு வைக்கத் தோன்றுகிறது.
இப்படி பல மாதங்கள் ஆண்டுக்கணக்கில் அப்பெண்கள் அடைந்த தோல்வியை உதாயினர் ஒவ்வொரு நாளும் வேவு பார்த்து வந்திருக்கிறார். யதார்த்த மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு நடக்குமோ, நாளைக்கு நடக்குமோவெனக் காத்திருந்தார். நடக்கவில்லை. ஆனால் அடுத்து என்ன செய்கிறார். குலகுரு உதாயினர் இளவரசரிடம் பேசுகிறார். ஆனால் சித்தார்த்தர் பெண்களை அனுப்பி என்ன செய்யச் சொல்கிறீர்கள், இதற்கான நோக்கம் என்ன, இதன் அடிப்படைகள் என்ன? இதற்கான அவசியங்கள் ஏன் ஏற்பட்டது என்று கோபமாவது பட்டிருக்க வேண்டும். இல்லை, சித்தார்த்தர்தான் கருணையாளராயிற்றே. அம்பேத்கரும் இது குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.
உதாயினர் மகாபாரதக் கதைகளில் பெண்களால் மோசம் போன முனிவர்களையும், மதவாதக் கதைகளையும் எடுத்துச்சொல்லி அடுத்தவர் மனைவியைப் புணர்ந்த முனிவர்களின் கதைகள், பக்தையைப் புணர்ந்த சந்திரன் கதைகளையும் சொல்லி, சோமாவின் மனைவி ரோகினிமேல் அகஸ்தியர் ஆசை வைத்தார்; இவ்வாறே லோபமுத்திரைக்கும் சேர்ந்ததாய் சுருதிகள் கூறுகின்றன என்று விளக்குவதாகக் கூறி ஆணாதிக்கத்தின் உச்சத்தோடு சித்தார்த்தரின் குலகுரு உதாயினர்
ஒரு பெண்ணை தந்திரமாகவேனும் கவர்ந்திடுவதே சரி- இதனால் இரண்டு பயன் – ஒன்று அவமானப்படாமல் தப்பிக்கலாம்.- மற்றொன்று பெருமகிழ்ச்சி அடையலாம்”
“இவ்வாறாக மாபெரும் நாயகர்களே இழிவான இன்பங்களைக் கூடவிடாமல் தேடி உழன்றும், புகழ்பெற்றனெரன்றால், அவ்வின்பத்தின் இன்றியமையாமைதானே இதற்கெல்லாம் காரணமாக இருக்கமுடியும்”
“ஆகவே – இளமையும் ஆற்றலும் வனப்பும் மிகுந்த தாங்கள் தங்களுக்கேயுரியதும், உலகமே உவப்பதுமான இன்பத்தை ஏன் மறுத்தலிக்கிறீர்கள்?.”
என்று சொல்வதாக சொல்கிறார். இத்தகைய கேடான காரியத்தை பாத்திரத்தின் வார்த்தைகள் என்று எடுத்துக்கொண்டாலும், இத்தகைய மோசமான எண்ணங்களைக் கொண்ட உதாயினரை, “கொள்கை கோட்பாட்டு வழிமுறைகளில் வல்லவரான உதாயினர்” என்றே புகழ்கிறார் அம்பேத்கர் அதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குலகுரு உதாயினரின் இத்தகைய புனித மரபுக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட போலியான வார்த்தைகளைக் கேட்ட 'இளவரசர் இடிமுழக்கக்குரலில் தன் மறுப்பை வெளிப்படுத்தினார் என்று அம்பேத்கர் கூறுகிறார். சித்தார்த்தர் தனது இடிமுழக்கக் குரலில், பெண்களை இவ்வளவு தரக்குறைவாக பேசும் மத நூல்களை ஆதாரமாகக் கொண்டு எனக்கும் அந்த அயோக்கியத்தனத்தைச் செய்யத் துணிந்தீரா? என்று கேட்கப் போகிறார் என்று நாம் நினைக்கலாம் (அப்படிக் கேட்டால் முதல் நாளிலேயே இது உனக்குத்தெரியவில்லை ஏன் மாதக் கணக்கில் ஆண்டுகணக்கில் அமைதியாய் இருந்தீர் என்று உதாயினர் கேட்கக் கூடும்!) ஆனால் சித்தார்த்தர் தன் ஆண்மைத் தனத்தையே முன்னிருத்துகிறார். அம்பேத்கர் அதையே தொடர்ந்து எழுதுகிறார். குலகுரு தன்னை தவறாக எடைபோட்டுவிட்டார் என்று சித்தார்த்தர் பேச்சைத் தொடங்குகிறார். தனது மதவாத உரையை முற்றும் துறந்த முனிவர் போல் பெண்கள், உணர்ச்சிகள் இவற்றை அடக்குவது, பற்றி குலகுருவுக்குப் போதிக்கிறார். ஆண்டுக்கணக்கில் தன்னை பாலியல் தொந்தரவு செய்த பெண்களிடமாவது சித்தார்த்தர் இவற்றை விளக்கியிருக்கலாம். அம்பேத்கர் எந்த இடத்திலும் இத்தகைய வாதங்களை வைப்பதில்லை.
உதாயினர் பெண்களிடம் கூறும்போது
‘எனவே, மன்னரின் குலமரபு இவரோடு முடிவு பெற்றுவிடாமல் இருப்பதற்காக உங்களுடைய கைவரிசையெல்லாம் துணிவோடு காட்டுங்கள் என்று கூறுவதாக அம்பேத்கர் கூறுகிறார்’
அப்படியெனில் சுத்தோதனரின் குலமரபு இப்படித்தான் பல பெண்களிடம் கைவரிசையைக் காட்டியிருக்கிறது என்று பொருள் கொள்ளலாமா.மேலும்
'சாதரண பெண்கள் சாதாரண ஆண்களையே வசப்படுத்துவார்கள், ஆனால் இயல்பிலேயே உயர்ந்தவர்களும் வசப்படுத்துவதற்குக் கடினமானவர்களுமான ஆண்களை வசப்படுத்துவோரே உண்மையான பெண்களாவர்'
என்று கூறுவதிலிருந்து உதாயினரின் ஆண் மனம் எத்தகையப் போக்கு கொண்டது என்று நாம் அறியலாம். அதே சமயம் இவ்வகையான மோசமான அறிவுரைகளைச் சொல்லும் உதாயினரை அம்பேத்கர் கொள்கை கோட்பாட்டு நெறிகளில் வல்லவரான உதாயிணர் என ஏன் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை.
அம்பேத்கரின் பார்வையில் இங்கு புத்தர் மட்டுமே கதைநாயகன். அவர் மட்டுமே ஒழுக்கவான். எனவே அவரது துக்கமே பெருந்துக்கம். மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை. மேலும் இந்த அந்தப்புர விவகாரங்களில் யசோதரா என்ன நினைத்தார், இதை எப்படி எதிர்கொண்டார் என்ற யதார்த்த ரீதியான காரணங்கள் எதையும் அம்பேத்கர் சொல்லவில்லை.இயல்பாக பெண்கள் அவரை மயக்க முயன்றார்கள் என்று நம்பி எழுதுகிறார். அனைத்து இடங்களிலும் அவர் பெண்கள் ஆண்களை மயக்கும் பண்டமாகவே சித்தரிக்கிறார்.
புத்தரின் அறிவுரை கேட்டு வாயடைத்துப் போன உதாயினர் நடந்த சேதியை சுத்தோதனருக்கும் தெரிவித்துவிட்டார். சுத்தோதனருக்கு உறக்கம் போய்விட்டது. சுத்தோதனரின் மூடத்தனத்தை எண்ணி நம்மால் இங்கு வியக்காமல் இருக்க முடியாது. குழந்தை பிறந்ததுமே அசித்தர் புத்தரது உடலைப் பார்த்து அதில் உள்ள குறிகள் கண்டு சோதிடம் சொல்லிவிட்டார். ஒன்று புத்தர் பேரரசர் ஆகவேண்டும், இல்லையேல் துறவியாக வேண்டும். தனது மகன் குறித்த விசயங்கள் இப்படி இருக்கும்போது சித்தார்த்தர் இளைமையாக இருக்கும்போதே அவர் பெண்களை வைத்து மயக்கியிருக்க வேண்டும். ஆனால் அசித்தர் சொன்னது திடீரென ஞாபகம் வந்ததுபோல், திருமணம் ஆகி குழந்தை பெற்றுத் தகப்பனானதும் வந்திருக்கிறது. இதிலும் தர்க்கமற்ற பார்வை என்னவென்றால். திருமணம் முடிந்த பின்பு பல பெண்களை அந்தப்புரத்துக்கு ஏன் அனுப்ப வேண்டும் என்பதுதான்.
சித்தார்த்தர் மணம் முடித்து ஒரு குழந்தை பெற்ற பிறகும், பல பெண்களை அனுப்பி அவரை வசமிழக்கச் செய்வதுதான் வழி என சுத்தோதனர் மட்டுமல்ல அவரது அமைச்சர்களும் கூட இதே மனநிலையில்தான் இருந்திருக்கிறார்கள் என்றால் சாக்கிய குலத்தின் பெருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம். சுத்தோதனரின் எண்ணமும் அவருக்கு யோசனை சொல்லும் அமைச்சர்களின் கீழும் வாழ்ந்த மக்கள் எப்பேர்ப்பட்ட துர்பாக்கியசாலிகள்.
அதோடு சித்தார்த்தரை உடலின்ப வாழ்வின்பால் ஈடுபடவைத்து அதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படப் போவதாகத் தோன்றும் திருப்பத்திலிருந்து அவரை திசை திருப்புவதற்கு ஏதாவது வழி வகை காண அவரும் அவருடைய அமைச்சர்களும் நெடுநேரம் கலந்தாலோசித்தனர், எனினும் அதுவரையில் கையாண்டு பார்த்ததைத் தவிர வேறு வழிகளெதுவும் அவர்களுக்கும் புலப்படவில்லை என்கிறார் அம்பேத்கர். இதை விவாதிக்க கலந்து ஆலோசனையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!
மேலும் சித்தார்த்தரை மயக்கச் சென்ற பெண்கள் அவர் மயங்காததால்
"தாம் அணிந்திருந்த மாலைகள் வாடவும், அணிகலன்கள் ஒளியிழக்கவும், தம் நளினக்கலைகளாலும், நயத்தகு முயற்சிகளாலும் பயனேதும் விளையாமற் போகவே, ஆரணங்குகளின் தொகுப்பு, தம் நேசத்தை நெஞ்சின் ஆழத்தில் புதைத்தபடி கலைந்து போயிற்று”
என்று சர்வ சாதாரணமாக அம்பேத்கர் முடிக்கிறார். இதனடிப்படையில் பார்த்தால் சுத்தோதனர் ஏற்பாடு செய்த அனைத்து பெண்களும் அவர்களாகவே விருப்பப்பட்டு சித்தார்த்தரை மயக்க வந்ததாகவே தெரிகிறது. இதை முன்வைத்து நாம் கேள்வி எழுப்பும் போது, இவர்கள் எந்த வர்க்கத்துப் பெண்கள். இளவரசரை மயக்க இவர்களை எங்கிருந்து சுத்தோதனர் வரவழைத்தார். இவர்களின் அடுத்த பணி என்ன? இதோடு முடிந்ததா? இல்லை கபில வஸ்துவில் இருக்கும் பல அரசர்களுக்கும் இத்தகைய பணிகளைச் செய்வார்களா? இவர்களது குலத்தொழிலே இதுதானா? என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அவர்கள் கலைந்து போயினர் என்பதுடன் முடித்துக்கொள்கிறார்.
மேலும் சித்தார்த்தரின் உடல் அழகு சதா சர்வ காலமும் பெண்களை மயக்கிக்கொண்டெ இருந்தது என்று வேறு சில இடங்களிலும் முன்வைக்கிறார் அம்பேத்கர். அதாவது பெண்கள் மயக்கம் கொள்ளும் வகையில் இருந்தால்தான் அது ஆணின் பேரழகு என்பது அம்பேத்கரின் அழகு பற்றிய கோட்பாடு.
இத்தோடு, புத்தரின் அழகை அம்பேத்கர் முடித்துக் கொள்ளவில்லை. இதுவரை சொல்லியது போதாதென்று, அதற்கென “அவருடைய (புத்தருடைய) தனிப்பெருந் தோற்றத்தின் சிறப்பு” என்று ஒரு தனி அத்தியாயம் கொடுத்தே விளக்கியிருக்கிறார்.
சில பௌத்த இலக்கிய நூல்களின் கருத்துக்களை வைத்து புத்தரை, புனிதர், அழகு மிக வாய்ந்தவர் என்று தொடங்கும் அம்பேத்கர்,
‘பொன்மலைச் சிகரம் போன்ற வடிவம், உயரம், வலுமிக்கவர், மகிழ்ச்சி ததும்பும் தோற்றம், நெடிய தோள்கள், சிங்க நடை, வேழ நோக்கு, அவர் தம் அழகும், பொன்னென ஒளிரும் பரந்த நல் மார்பு,அவர் புருவம், நெற்றி, வாயிதழ்கள், உடலை, கரங்களை, நடையை, அவரது குரல் தனிச்சிறப்பான இனிமையுடையதாய், பேரிகையின் நாதமென ஈர்த்ததாய், வசீகரம் மிக்கதாய் துள்ளலும், தொய்வின்மையும் உடையதாய், அவர் குரலினிமை கேட்போரை பிணித்தது, அவர் தம் பார்வை வியந்து பணியத் தூண்டியது, அவர் யாது கூறுகிறார் என்பது கூட அத்துணை முக்கியமானதாயில்லை அவருரை கேட்டோர் எவரையும் தம் விருப்பிற்கீத்து உணர்வினை உந்துபவராயிருந்தார் அவர்’
என்று புத்தரின் அழகை சலிக்க சலிக்க, கூறியது கூறியே வர்ணித்துச் செல்கிறார். பகுத்தறிவை தள்ளிவைத்து ஒரு பக்தராய் மட்டுமே அம்பேத்கர் தன்னை முன்வைக்கிறார் என்பதை இங்கு நாம் மறுக்க முடியாது. அம்பேத்கர் இதோடு நிற்கவில்லை தொடர்ந்து தனது ஆணாதிக்க மனநிலையை நூல் முழுக்க புத்தரின் வாயிலாக வைத்துக்கொண்டே செல்கிறார்.
திருமணமாகப்போகும் பெண்களுக்கு புத்தர் சொல்லுவதாக அம்பேத்கர் வைக்கும் வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.
நம்முடைய நல்வாழ்வை விழைந்து, நம் இன்பத்தை நாடி, கருணையுடன் எவ்வகையான கணவர்க்கு நம்மை நம் பெற்றோர் மணமுடித்துக் கொடுப்பினும், அவர்பால் அன்புடைமையின் விளைவாய், முன் எழுந்து, பின் உறங்குவோராய், விரும்பி உழைப்போராய், கோருபவற்றை இன்சொற்களால் இனிமையாய் கோருபவராய் இருத்தல் வேண்டும். குழந்தைகளே! இவ்வாறு உம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வார்த்தைகளை புத்தர் எங்கும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் இதிலுள்ள கருத்துக்கள் எவ்வாறு ஆணாதிக்கத்தன்மை கொண்டவையென அம்பேத்கர் விவாதித்திருக்கலாம். ஆனால் அவர் எந்த இடத்திலும் இத்தகைய விவாதங்களை மேற்கொள்வதே இல்லை. வழிபடும் மனநிலையில் புத்தரின் வாயிலாக தனது ஆணாதிக்கப் பார்வையையே முன்வைக்கிறார்.
தொடரும்....


Jan 31, 2018

நமது உடனடி நடவடிக்கைகள்




- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்

சோஷலிச சகாப்தத்தில் சாதி எப்படி ஒழிக்கப்படும் என்பதை இதுவரை விவாதித்தோம், ஆனால் அதற்காக முதலில் சோஷலிசத்திற்காகப் போராடுவோம், பின்னர் சாதியமைப்பு தானாக மறைந்துவிடும் என்பதல்ல எங்களது வாதம். சோஷலிசத்திற்கான போராட்ட நடைமுறையின் தொடக்கத்திலிருந்தே சாதியப் பிரச்சினை நமது செயல்திட்டத்திலோ அல்லது அதற்கான உடனடி நடவடிக்கைகளோ இல்லாது போனால், புரட்சியை வழிநடத்தும் வர்க்கமானது, சாதியப் பாகுபாடு மற்றும் பூர்ஷுவா சாதிய தேர்தல்முறை மற்றும் சீர்திருத்தவாத தலைவர்கள், ஆதரவாளர்களின் பரப்புரைக்கு பலியாவது தொடரும்.  தலித் மக்களின் பெருவாரியான மக்கள் கூட்டமானது அரைத் தூக்கத்திலிருப்பது தொடரும், ஏதோவொரு சாதித் தலைவரை குறிக்கோளின்றி பின்தொடர்வது தொடரும். பாட்டாளிகளின் துணை வர்க்கங்களிலும் இதே நிலைத் தொடரும். இவ்வாறாக, சோஷலிச சகாப்தத்தில் இறுதியான சாதி ஒழிப்பு நிகழும் என்றாலும், வர்க்கப் போராட்டத்திற்கான தயாரிப்பின்போதும், அதன் வளர்ச்சியின் போதும் சாதியின் செல்வாக்கைக் குறைக்கும் நனவுபூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் (அப்போது வர்க்கப் போராட்ட எழுச்சிக்கு அதன் சொந்த புறநிலை அழுத்தங்கள் கூடும், வர்க்க அணிதிரட்டலானது, சாதிய அணிதிரட்டலை பின்னுக்குத் தள்ளும்).

முதல் நடவடிக்கை, சோஷலிசத்தின் மூலம் சாதியமைப்பிற்கான தீர்வை, சாதி ஒழிப்பிற்கான சோஷலிச வேலைத் திட்டத்தை தொடர்ந்து, தீவிரமாகப், பரவலானப் பரப்புரைகள் மூலம் பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பலவீனத்தாலும், திருத்தல்வாத தவறுகளாலும் (குறிப்பிட்ட அளவு தெளிவின்மையும் அதற்குக் காரணம்) உழைக்கும் மக்கள் கூட்டம், குறிப்பாக தலித் மக்களுக்கு சாதி ஒழிப்பிற்காக கம்யூனிஸ்டுகள் பரிந்துரைக்கும் பாதையென்ன என்பது சுத்தமாக தெரியாது. இந்தப் பணிக்காக,  பாட்டாளிவர்க்கக் கட்சிக்கு, கூர்மையான, செயலூக்கமுடைய கம்யூனிஸ்ட் பிரச்சாரகர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் தேவைப்படுவார்கள், துண்டறிக்கைகள்-கையேடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், சிறிய கல்விக் குழுக்கள் ஆகியவைத் தேவைப்படும். ஆனால், இப்போதைக்கு இந்தியளவிலான ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவதேக் கூட தொலைதூரக் கனவாகத் தெரிகிறது. முடிவற்ற முயற்சிகள் மூலம் அதனை முதலில் அருகில் கொண்டு வரவேண்டும். ஆனால், ஒருவேளை கம்யூனிஸ்டுகள் ஒரு குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ தனித்தனியாகத் திரண்டிருந்தாலும், இந்தப் பணியை முதலில் கையிலெடுக்க வேண்டும்.  சில நடவடிக்கைகளை இன்றே கூட எடுக்க முடியும். இன்றைய நிலையிலேயே பிரச்சார அளவிலும், ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்க அளவிலும் வைக்கக்கூடிய சில கோரிக்கைகளும் உள்ளன.

புரட்சிகர அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இயக்கும் புரட்சிகர சங்கங்கள், மாணவர்-இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், கிராமப்புற தொழிலாளர் அமைப்புகள் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகள் அனைத்தும் தங்களின் வேலைத் திட்டத்தில் சாதியப் பிரச்சினையைச் சேர்க்க வேண்டும், சடங்கு முறையாக இன்றி, இந்தப் பிரச்சினையை முன் வைத்து தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜாட்-பாண்ட் டோடக் போஜ் (சாதியை உடைப்பதற்கான உணவுத் திருவிழாக்கள்) நடத்த வேண்டும்,  தொழிலாளர் இயக்கங்களில், தலித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், தலித் தொழிலாளர்கள் இயக்கத்தில் (துப்புரவு தொழிலாளர் இயக்கம் போன்று) உற்சாகத்துடன் பங்கெடுக்க வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிலாளர்களைக் கொண்டுவர விடா முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புறத் தொழிலாளர்களை ஒருங்கமைக்கும்போது, அவர்களுக்கிடையிலான சாதி அடிப்பிடையிலானப் பிரிவினைகளை உடைப்பதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கலாச்சார அமைப்புகள், தங்களுடைய பரப்புரை நடவடிக்கைகளில் சாதி ஒழிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  ஜனநாயக உரிமை இயக்கமானது, சாதிய ஒடுக்குமுறை மற்று கப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான சட்டபூர்வ போராட்டங்களுகு அப்பால் உன்மை கண்டறியும் குழு, கையெழுத்து இயக்க, எதிர்ப்பு கடிதங்கள் எழுதுவது என்னும் சடங்குபூர்வ அறிவார்ந்த வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து, பரந்த அளவில் இயக்கங்கள் மூலம் இடையீடு செய்யத்தக்க வகையில் தன்னை ஒருங்மைத்துக் கொள்ள வேண்டும். 

உலகளாவிய, சமச்சீரான, இலவசக் கல்வி மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது நீண்ட காலத்திற்கான கோரிக்கை. ஆனால், இந்த முழக்கத்தின் அடிப்படையில் மாணவர்கள், அனைத்து சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக ஒருங்கமைக்கப்பட வேண்டும், தலித் இளைஞர்களை இணைக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில், சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பிரச்சினைக்குரியதாக்கி எதிர்க்க வேண்டும். இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, கடந்த 60 ஆண்டுகளின் உண்மையை, புள்ளிவிவரங்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன் வைத்து நமது நிலைப்பாட்டைப் பேச வேண்டும். கடந்தகாலத்தில் பெறப்பட்ட இந்த ஜனநாயக உரிமையை நாங்கள் எதிர்க்கவில்லை, அதை நீக்க வேண்டும் என்றும் கோரவில்லை, அதன் நடைமுறையில் நடக்கும் ஊழலை எதிர்க்கிறோம். அதேபோல், இந்த கோரிக்கையானது பூர்ஷுவா ஜனநாயக மாயை உருவாக்கவே பயன்படுகிறது, பரந்த ஏழை தலித் மக்களுக்கு இது எந்த விதத்திலும் பொருளுள்ளதாக இல்லை; மேலும், பொது மக்கள் மட்டுமின்றி, தலித் சாதிகளிடையேகூட மோதலும், பிரிவினையும் ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்த வேண்டும். அனைத்து சாயல்களிலும் வரக்கூடிய பூர்ஷுவா தலித் அரசியல் மற்றும் பூர்ஷுவா தலித் அறிவுஜீவிகளின் வாதங்களுக்கு தர்க்கப்பூர்வமாகவும், பொறுமையாகவும் பதிலளித்து நமது பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நாளிதழ்களில் சாதியடிப்படையிலான வரன் தேடும் விளம்பரங்கள் பிரசுரிப்பதற்குத் தடை கோர வேண்டும். கலப்பு மணம் மற்றும் காதல் திருமணத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்க வேண்டும்; குடும்பத்தின் பாதிச் சொத்தை பெண்களுக்கு வழங்குவதற்கு சட்டபூர்வமான கோரிக்கை  வைக்க வேண்டும்.

சாதி அமைப்புகள், சாதிக் கூட்டங்கள், கப் மற்றும் சாதி பஞ்சாயத்து மற்றும் அவர்களின் தீர்ப்புகள் இவற்றின் மீது சட்டபூர்வமான தடை கோரி இயக்கங்களை ஒருங்கமைக்க வேண்டும்.

பொது சமகம்களுக்கு (மதக் கூட்டங்கள்) தடை கோர வேண்டும், ஆசிரமங்கள், கோவில்களின் பாரம்பரிய கண்காட்சிகளுக்கு, திருவிழாக்களுக்கு சிறப்பு வரி விதிக்கக் கோர வேண்டும், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் மதச் சடங்குகளை நடத்த தடை கோர வேண்டும்.

தலித் சாதிகளுக்கென தனியான அமைப்பை உருவாக்குவதை நாங்கள் முறையற்றதாகவே கருதுகிறோம், ஆனால் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு போதிய பலம் இருப்பின், சாதி ஒழிப்பு மன்றங்களை அமைத்து, தலித்துகள் மட்டுமின்றி, ஜனநாயக உணர்வுள்ள மற்ற சாதி மக்களையும் அதில் இணைக்க வேண்டும். இந்த மன்றமானது, சாதி மறுப்பு பரப்புரைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும், புத்தகங்கள், கையேடுகள் போடுவது, கலப்பு மணம் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தலித்துகள் மீதான அட்டூழியங்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

இறுதியாக, ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. சமூகத்திலிருந்து தனித்து விடப்படுவோம் என்று சொல்லி, தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் மதச் சடங்குகளில் (திருமணங்கள், பிறப்பு, இறப்பு, யக்ஞோபவீதம், உபநயனம் போன்ற) கலந்துகொள்ளும் பல கம்யூனிஸ்டுகள் இருக்கின்றனர். இந்தச் சடங்குகள் சாதியின் வரம்பிற்குள்ளேயே வருகிறது, வெவ்வேறு சாதிக்கு வெவ்வேறு சடங்குகள். மேற்சொன்ன சாக்குகளைச் சொல்லியே, பல கம்யூனிஸ்டுகள் மத சின்னங்களை அணிவது, தங்களின் உரைகளில் கடந்தகால மதத் தலைவர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது ஒரு சமூக கோழைத்தனம் மற்றும் கொள்கையற்ற ஜனரஞ்சகவாதமும் ஆகும். முரணாக, பொதுமக்கள் மனதில் கம்யூனிஸ்டுகள் பாசாங்குவாதிகள் எனும் எண்ணத்தை வேறு அது ஏற்படுத்துகிறது. மதச் சடங்குகளிலிருந்து பணிவுடன் ஒதுங்கியிருப்பது, திருமணங்களை எந்த சடங்குகளுமின்றி நடத்துவது, மரணத்தின்போது கூட மதச் சடங்குகள் ஏதும் செய்யக்கூடாது என்று உயில் எழுதி வைப்பது போன்ற கம்யூனிஸ்ட் நடத்தைகளால் எந்தவகையிலும் நாம் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதில்லை. மாறாக, கம்யூனிஸ்டுகள் மதிப்பு கூடவே செய்கிறது.

நாம் நமது கருத்தியல்களை எவர் மீதும் திணிக்க வேண்டியதில்லை; ஆனால் நம் சொந்த வாழ்வில் அதைக் கடைபிடிக்கலாம். பூர்ஷுவா ஜனநாயகமும், இந்நாட்டின் அரசமைப்பும்கூட அதைத்தான் சொல்கிறது.  நாங்கள் ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், மத நடத்தை என்பது சாதியோடு தொடர்புடையது. கம்யூனிஸ்டுகளின் தனிப்பட்ட வாழ்க்கை முறையும் மதமற்றதாக இருப்பின், இந்த மனிதர் மனதார சாதியில் நம்பிக்கையற்றவர் எனும் நம்பிக்கை தலித்துகளுக்கு வரும்.

சாதியப் பிரச்சினை என்பது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதற்கு உடனடியான ஒற்றை மருந்து கிடையாது. நீண்டகால, கடினமான நடைமுறை தேவை. முதலாளித்துவ அழிவோடு இந்தப் பிரச்சினை தொடர்புடையது.  இன்றைய நிலையில், சாதி ஒழிப்பிற்கு எதிரான எந்தத் திட்டமும் துணிவுமிக்கதே. ஆனால், ஒவ்வொரு கடினமானப் பணியும் துணிவைக் கோருவதே. சாதி ஒழிப்பு இன்றைக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம், ஆனால் ஒரு கனவுக்கு அறிவியல் அடிப்படை இருக்குமெனில், அதை மெய்யாக்க முடியும். அத்தகையதொரு கனவை ஒவ்வொரு உண்மையான புரட்சியாளரும் கொண்டிருக்க வேண்டும்.

‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.  

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.


சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத் திட்டம்



- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்.


பாட்டாளி வர்க்க அரசானது அனைத்துவிதமான பூர்ஷுவா அரசாங்கப் பண்ணைகள், பழைய ஜாகிர்களின் மாபெருமளவிலான விவசாய நிலங்கள், நகர்புற தொழிலதிபர்கள்-வணிகர்கள்-அதிகாரத்துவத்தினரின் நிலச்சொத்துகள், பெரு விவசாயிகளின் பண்ணைகள் மற்றும் தோட்ட-பண்ணைகள் அனைத்தையும் (எந்தவித நஷ்டஈடுமின்றி) தேசியமயப்படுத்தும்; மக்கள் அங்கு அரசு தொழிற்சாலையில் பணிபுரிவது போல் பணிபுரிவார்கள், கட்சியின் தலைமையில் பணிபுரியும் அனைவரும் சேர்ந்து தேர்தெடுக்கும் கமிட்டிகள் நிர்வாகப் பொறுப்பைக் கொண்டிருக்கும். குலாக்குகள்-நிலக்கிழார்கள்-விவசாயிகளின் நிலச்சொத்துகள் எவ்வித நஷ்ட ஈடுமின்றி எடுத்துக்கொள்ளப்பட்டு, கூட்டுப் பண்ணைகளாக மாற்றப்படும். அரசு மற்றும் கூட்டுப்ப பண்ணைகளில், நிலமற்ற மக்கள் அனைவரும் பணிபுரிவர், சம அந்தஸ்துடன் கூட்டு நிர்வாக நடவடிக்கையிலும் ஈடுபடுவர்.  கூட்டுறவு வேளாணில் இணைந்துகொள்ளத் தயாராக இருக்காத சிறு உடைமை விவசாயிகள் கூட்டுறவுமயமாக்கலுக்காக ஊக்குவிக்கப்படுவர். சில இடங்களில், கூட்டுறவு வேளாணுக்குத் தயாராக இல்லாத நபர்கள், தங்களுடைய தனியார் பண்ணைகளில் உழைப்பாளரை கூலிக்கமர்த்த தடை விதிக்கப்படும். உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவது தடுக்கப்படும். அதேபோல், தனியார் வேளாணில் ஈடுபடுபவர்களுக்கு, கூட்டுறவுப் பண்ணைக்கு அளிக்கப்படும் விதைகள், தண்ணீர், மின்சாரம், உரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட மாட்டாது. மெல்ல மெல்ல, பொருளாதார பாதுகாப்புக்கான உத்திரவாதத்தைக் கண்டு, அரசு மற்றும் கூட்டுப் பண்ணைத் தொழிலாளர்களின் வளர்ச்சியைக் கண்டு ஏற்படக்கூடிய சோஷலிசத்தின் மீதான நம்பிக்கையினால், தனியார் மற்றும் கூட்டுறவு வேளாணில் ஈடுபடுபவர்கள் கூட கூட்டுப் பண்ணை முறையினால் ஈர்க்கப்படுவர். இந்நடைமுறையின் இறுதி கட்டம் என்பது ஒட்டுமொத்த விவசாயத்தையும் தேசியமயமாக்குவதாகும். இவ்வாறாக, தனியார் நிலவுடைமை மற்றும் ஆண்டாண்டு காலமாக நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகளின் பிரச்சினைக்கும் முடிவு கட்டப்படும், சாதியமைப்பின் முக்கிய கிராமப்புறத் தூணை சோஷலிசம் தகர்த்தெறியும்.

பூர்ஷுவா அரசை அழித்த உடன், பாட்டாளி வர்க்க அரசானது சிறு மற்றும் பெரிய, தேசிய மற்றும் அந்நிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி தேசியமயமாக்கும், கட்சியின் தலைமையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி நிர்வாகப் பொறுப்பை வகிக்கும். தொழிற்சாலைகளில், பன்முகத் திறமைக்கான பயிற்சிகள் மூலம், உழைப்புப் பிரிவினை என்பது நெகிழ்வுத் தன்மையுடனும், நகரும் தன்மையுடனும் இருக்கும். இதில் எல்லோரும் அனைத்து விதமான வேலைகளையும் (தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் பணிகள் தவிர) செய்ய வேண்டும். இவ்வாறாக, “உயர்வான” மற்றும் “தாழ்வான” வேலைகள் என்னும் வேறுபாடுகள் மற்றும் “சுத்தமான” மற்றும் “அசுத்தமான” பணிகள் என்னும் வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறையும்.  கழிவுநீர்-வடிகால் சுத்திகரிப்புக்கான ஆலைகளில், இயந்திரமயமாக்கலும், திட்டமிட்ட அரசாங்க ஏற்பாடுகளும் கொண்டுவருவதன் மூலம், “அசுத்தமான” பணிகளின் வகைப்பாடு மாற்றப்படும். அதன்பிறகு, சோஷலிச உணர்வுநிலை அதிகரிகரித்து வரும்போது, மக்களிடையே இருக்கக்கூடிய பண்பாட்டு வேறுபாடுகளுக்கு முடிவு கட்டும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையில்கூட பலவந்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய அவசியத்தை அது குறைக்கும். ஒருவேளை சிலர் மீது பலவந்தம் தேவைப்பட்டால் அது நியாயத்தின் பொருட்டு பிரயோகிக்கப்படும்.

பங்குச் சந்தைகள் உடனடியாக மூடப்படும். வணிகத் துறையும் தேசியமயப்படுத்தப்படும் என்பதால், பரிவத்தனையில் மக்களின் கட்டுப்பாடு நிறுவப்படும். அதன் மூலம் பதுக்கல்-லாபமீட்டும்-இடைத்தரகுக்கு (ஹோர்டிங்-புராஃபிட்டீரிங்-புரோக்கிங்) முடிவு கட்டப்படும். மேலும், இறுக்கமான பாரம்பரியக் குடும்பத் தொழில் அமைப்பும் உடைக்கப்படுவதானது, சாதிய அமைப்பில் தாக்கம் செலுத்தும். தனியார் கந்துவட்டி தடை செய்யப்பட்டு, கடுமையான சிறைத் தண்டனைக்குரியதாக்கப்படும். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவருக்கு அரசின் நிர்வாகக் கமிட்டி மற்றும் கூட்டு நிறுவனங்களின் உதவி வழங்கப்படும்.

பொருளாதாரப் பாகுபாடு தவிர்த்து, கல்வி நிறுவனங்கள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் முக்கிய மையங்களாக இருக்கின்றன. சோஷலிச அரசு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை என்னவெனில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் தேசியமயப்படுத்துதல், பயிற்சி நிறுவனங்களுக்குத் தடை செய்வது. மேலும், இலவச, சமச்சீர் கல்வியை அறிவிப்பது சோஷலிச அரசின் முக்கியப் பொறுப்பாகும். விஞ்ஞானபூர்வ கல்வி அமைப்பில், நாட்டம் மற்றும் இயற்கைத் திறன் அடிப்படையில் வெவ்வேறு துறைக் கல்வி அளிக்கப்படும், பல திறன்கள் உண்டாக்கப்படும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையானது, பல வேலைகளை, வெவ்வேறு தொழில்களில்  மாறி மாறி செய்ய வகை செய்யும். படிப்படியான  சமச்சீரான சம்பளம், சமச்சீரான வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பு, மூளை உழைப்புக்கு இடையிலான வேறுபாடு குறைவது ஆகியவற்றின் மூலம், சமூக அந்தஸ்துடன் தொழிலை இணைந்துப் பார்க்கும் போலி கவுரவும் முடிவுக்கு வரும். சோஷலிசக் கல்வியானது உழைப்புப் பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல், அனைத்து இளைஞர்களின் பண்பாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும். பொருளாதார மட்டத்தில் ஏற்றத்தாழ்வைக் குறைக்கையில், கல்வியில், பண்பாட்டு நிலையில் வேறுபாடுகள் மறைந்து போகும், இப்போது சாதியப் பாகுபாட்டை தகர்ப்பது மேலும் சுலபமாகி விடும்.

அடுத்து, மருத்துவம். தனியாக பயிற்சி செய்வது, தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கண்டிப்புடன் தடை செய்யப்படும். ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். சோஷலிசமானது ஏகாதிபத்தியக் காப்புரிமைகளில் நம்பிக்கைக் கொண்டிருக்காது. அனைத்து மருந்துகளையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும். அனைத்து மக்களுக்கும் மருத்துவம் இலவசமாக்கப்படும். சோஷலிச மருத்துவக் கொள்கையை ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால், சோவியத் ஒன்றியம், சோஷலிச சீனா மற்றும் கியூபாவில் இத்துறையில் மேற்கொண்டுள்ள அற்புதமானப் பணியைப் பற்றி படித்தறியலாம்.  இலவச மருத்துவக் கல்வி மற்றும் இலவச, சமச்சீர் மருத்துவ அமைப்பு மூலம் தலித்துகளின் சமூக அந்தஸ்தில் ஏற்றம் ஏற்படும். 

சோஷலிச வீட்டுவசதி கொள்கையானது சாதி பாகுபாட்டை ஒழிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். வீடு கட்டும் பணிகள் அனைத்தையும் சோஷலிச அரசே கையில் எடுத்துக்கொள்ளும். கட்டுமானக் காண்டிராக்டர்கள் சாதாரண தொழிலாளர்களாவார்கள். வீடற்ற மக்கள் அனைவருக்கும், சேரியில் வசிப்பவர்களுக்கும் வீட்டு வசதியை செய்துகொடுப்பதே பாட்டாளி வர்க்க அரசின் முதல் பணி. பழைய அரண்மணைகள், பல வீடுகள் வைத்திருக்கும் உடைமையாளர்களின் கூடுதல் வீடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் இதர பகட்டான மாளிகைகளை, பெரிய பங்களாக்களைக் கைப்பற்றி குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். அதேவேளை குடியிருப்புக் காலனிகள் பெரியளவில் உருவாக்கப்படும்.

தொடக்கத்தில், சோஷலிசக் கல்வியைப் பெற்ற முதல் தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், நிபுணர்கள் உருவாகும் வரை, இந்தத் துறை வல்லுனர்களுக்கு சம்பளத்தில் மட்டுமல்லாது, வீட்டு வசதியிலும் சில சலுகைகள் அளிக்கப்பட வேண்டும், அப்போதுதான் உற்பத்தி அமைப்பை சுமூகமாக இயக்க முடியும். பிந்தையக் கட்டத்தில் அது தேவைப்படாது. இந்தத் தொடக்கக் கட்டங்களைக் கடந்தபின்னர், சோஷலிச அரசானது எல்லா வீடுகளையும் அரசுடைமையாக்கும், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும்  உத்திரவாதமளிக்கும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு, வீடுகளை சமச்சீரான முறையில் வசதியுள்ளதாகக் கட்டிட, பழைய குடியிருப்புகளை மறுவடிவமைக்கவும், உழைப்பு சக்தியை அணிதிரட்டி புதிய காலனிகளை உருவாக்கவும் பெரியளவிலான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏடாகூடமான முறையில்  அமைந்திருக்கும் கிராமப்புறங்கள் அனைத்து வசதிகளும் உடைய நவீன காலனிகளாக மாற்றப்படும். கூடுதல் நிலம் மற்றப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். அரசிற்கு சொந்தமான சமச்சீரான  வீடுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டால் (தனிக்குடும்பத்தின் அடிப்படையில்),  சமூகப் பாகுபாட்டின் முக்கியக் காரணமாக இருக்கும் தலித்துகள்  (மற்றும் இதரப் பணியாளர்கள்) ஒதுக்கப்படுவது தீர்ந்துவிடும்.  தேசியமயமான விவசாயம், தொழிற்சாலை மற்றும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் சமச்சீரான வசதி கொண்ட வீடு (மற்றும் போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள்) ஆகியவற்றால் தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்கு இடையிலான வேறுபாடு மற்றும் நகரங்கள் கிராமங்களுக்கு இடையிலான வேறுபாடு மறையத் தொடங்கும். அதே நடைமுறையில், உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்புக்கு இடையிலான இடைவெளியும் குறையத் தொடங்கும். ஒரு சோஷலிச சமூகத்தில்,  இந்த மூன்று ஏற்றத்தாழ்வுகளும் தனிமனிதருக்கிடையிலான உறவில் பூர்ஷுவா சிறப்புரிமையின்  பொருளாயத அடிப்படையாக திகழும். இம்முன்று ஏற்றத்தாழ்வும் மறைகையில் பூர்ஷுவா சிறப்புரிமைகளும் மறையும்.  அதனைத் தொடர்ந்து பூர்ஷுவா சாதியமைப்பும் முழுஅழிவை நோக்கி நகரும்.

பூர்ஷுவா சமூகத்தில் மதமும் பூர்ஷுவா சமூகத்திற்கு ஏற்ற வகையில் தகவமைக்கப்பட்டு, பூர்ஷுவா சாதியமைப்பின் ஒரு தூணாகி விட்டது. சோஷலிச சமூகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியானது, மத எதிர்ப்பு மற்றும் அறிவியல்சார் பகுத்தறிவு பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்ளும், அதேவேளை சிவில் உரிமையின் அடிப்படையில், சோஷலிச அரசானது, ஒவ்வொரு குடிமகரின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டுக்கான உரிமையையும் மதிக்கும். ஆனால் சமூக-அரசியல் வாழ்வில் மதத்தின் தலையீடு தடைசெய்யப்பட்டிருக்கும். தொடக்க விழாக்களில் மதச் சடங்குகளை நடத்துவது, பள்ளிகளில் பிரார்த்தனை செய்வது, ஒலிபெருக்கிகள் வைத்து கீர்த்தனைகள் பாடுவது, திருமணம் மற்றும் மதப் பேரணிகள் நடத்தி பொதுமக்கள் வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்துவது, மதப் பள்ளிகள்,  பொது இடங்களை வாடகைக்கு எடுத்து சமகம் (சீக்கிய ஆன்மீகக் கூட்டங்கள் – மொ.ர்) போன்ற நிகழ்ச்சிகளில் சமூக செல்வத்தை வீணடிப்பது ஆகியவை தடை செய்யப்படும். மக்களின் மத உணர்வுகளைக் கணக்கில்கொண்டு, பழைய மதத் தலங்கள் விட்டு வைக்கப்படும், ஆனால் அதன் தர்மகர்த்தாக்கள் மற்றும் மடாதிபதிகளிடமிருந்து அரசே நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும்.  ஆசிரமங்கள்-கோயில்கள்-வக்ஃபுகள்-குருத்வாராக்கள்-சர்ச்சுகள்  போன்ற மத நிறுவனங்களிடம் உள்ள நிலம் மற்றும் பணம் அனைத்தையும், அரசு கையகப்படுத்தும் (இந்த அளவற்ற சொல்வதத்திலிருந்தும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்தும்,  சோதனைக்குப் பின்பு செல்வந்தர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்படும் தங்கம் மற்றும் கறுப்பு பணம் கையகப்படுத்தப்படும். சோஷலிச புராதன மூலதனத் திரட்டிலிருந்து  ஒரு பகுதி இப்படி வசூலிக்கப்படும்). 

மத நிறுவனங்களை அமைத்தல், அல்லது மதத்தின் அடிப்படையில் எந்தவிதமான சமூக-அரசியல் அணிதிரட்டலில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். மதச் சடங்குகள் நடத்தி திருமணம் செய்துகொள்ள ஒருவருக்கு சுதந்திரம் இருக்கும், ஆனால் பதிவுக்குப் பின்பே அத்திருமணம் அங்கீகரிக்கப்படும்.  பெண்ணின் ஒப்புதல் இன்றி ஒரு திருமணம் அங்கீகரிக்கப்படாது. விவாகரத்துக்கான சட்ட நடைமுறை எளிமையானதாக இருக்கும். வரதட்சனை என்பது  கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். இவ்வாறாக, சமூக வாழ்வில், மதத்தின் தலையீட்டைக் குறைப்பதின் மூலம் சாதி ஒழிப்பு நடைமுறைத் துரிதப்படுத்தப்படும்.

பூர்ஷுவா குடும்ப அமைப்பு மற்றும் அகமண முறை ஆகியவை பெண் ஒடுக்குமுறைக்கு  அடித்தளமாக இருக்கின்றன. உலகளாவிய மற்றும் கட்டாய சமச்சீர் இலவசக் கல்வியோடு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்திரவாதம் ஆகியவற்றோடு, குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி, பெரியளவிலான கூட்டு சமையல்கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பெண்கள் கொடுமையான வீட்டு உழைப்பு என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவர். இதன் விளைவாக, சமூக வாழ்வில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். தந்தையை (மற்றும் கணவர்) சார்ந்திருக்கும் நிலை இருக்காது, எந்த அழுத்தங்களும் இன்றி தங்களது வாழ்க்கை பற்றிய முடிவுகளை அவர்களே சொந்தமாக எடுக்க முடியும். இந்த நிலை மாற்றங்கள் மூலம், காதல் திருமணங்கள் மற்றும் கலப்புத் திருமணங்கள் பெருகும், சாதியின் சுவர், சரிந்து விழத் தொடங்கும்.

சோசலிச அரசானது, அனைத்து சாதி பஞ்சாயத்துகள், கப் பஞ்சாயத்துகள், சாதி சங்கங்கள், சாதிக் கூட்டங்கள் ஆகியவற்றை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கும், அத்தகைய முயற்சிகள் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். கல்வி அமைப்புக்கு அப்பால், அனைத்து பண்பாட்டு ஊடகங்கள் மற்றும் இதர ஊடகங்களை, சோஷலிச மதிப்பீடுகளைப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்துவதோடு, சாதியமைப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்காகவும் சோஷலிச அரசு பயன்படுத்தும். இதன் மூலம் புதிய சமூகத்தின் புதிய குடிமகர்களின் மனங்களில் இதுபோன்ற கொடுமையான பழக்கவழக்கங்களுக்கு இடமில்லாமல் போகும்.

இவ்வாறாக, சோஷலிசமானது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் உற்பத்தி உறவுகளில் தொடர் மாற்றங்கள் மூலமாகவும், அதேவேளை மேற்கட்டுமானத்திலும்,  முழுவீச்சுடன் கூடிய முடிவற்ற வகையிலான கலாச்சார புரட்சியின் மூலமாகவும் சாதியமைப்பை அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானத்திலிருந்து ஒழிக்கும். சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுவதற்கானப் பயணம் மிக நீளமானதே, ஆனால் சாதி ஒழிப்பு என்பது சிலப் பத்தாண்டுகள் மட்டுமே பிடிப்பதாக  இருக்கும்.

‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.  

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.



Mar 9, 2017

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்......

 
“மார்க்சியம் பற்றிய அவரது (அம்பேத்கர்) எழுத்துக்களைப் படிக்கும்போது, பூர்ஷுவா சமூகவியலாளர்களின் மேம்போக்கான விமர்சனங்கள் மற்றும் மேற்கோள்களைத் தாண்டி மார்க்சிய மூல நூல்கள் ஒன்றைக் கூட அவர் படித்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் விளக்கியது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் அல்ல. சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் இடையிலான வேறுபாடுகளைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை. அரசின் வர்க்க குணாம்சத்தைப் புரிந்துகொள்ளத் தவறியதால், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டாலும், அரசின் வர்க்கப் பண்பு பூர்ஷுவா பண்பாக இருக்கும் பட்சத்தில், அது சோஷலிசமாக இருக்க முடியாது, அது அரச ஏகபோக முதலாளித்துவமாகவே இருக்கும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு வர்க்கத்தின் அரசை பலவந்தமாக தூக்கி எறிவதன் மூலமே மற்றொரு வர்க்க ஆட்சியை நிறுவ முடியும் என்பதையும் அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. 
 
வரலாற்றில், எந்த ஒரு வர்க்கமும் அமைதியான முறையில் தம் அதிகாரத்தை தாரை வார்த்துக் கொடுத்ததில்லை. வர்க்கப் போராட்டத்தில் வன்முறை என்பது இன்றியமையாததே அன்றி, எவருடைய விருப்பமும் அல்ல. கம்யூனிஸ்டுகள் வன்முறை குறித்து பேசும்போது அவர்கள் தனிநபர் வன்முறையைக் குறிப்பதில்லை, மாறாக, அது வர்க்க வன்முறை, பலவந்த முறைகளைக் கைகொண்டு அதிகாரத்தில் இருக்கும், பலவந்த முறையில் இயங்கும், பலவந்த முறையில் பரமாரிக்கப்படும் அரசை பலவந்தமாக தகர்ப்பது என்று பொருளாகும். (ஆனால், இந்த நடைமுறையில் வன்முறைக்கு அவசியமில்லாமல் போனால், வன்முறை என்பது தத்துவார்த்த அளவோடு நின்று விடும்). அதேபோல், அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞராக இருந்தும், சரக்கு உற்பத்தி முறை, உபரியை அபகரித்தல் அல்லது மூலதனத் திரட்டல் பற்றிய மார்க்சிய விளக்கங்களைக் குறித்து ஏதும் அறிந்திருக்கவில்லை. பொருளாதார அடித்தளம் (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்) மற்றும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான இயங்கியல் தொடர்பு பற்றியோ, உற்பத்திச் சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இடையிலான தொடர் போராட்டத்தின் காரணமாக ஏற்படும் அளவுரீதியான பாய்ச்சல் பற்றியோ, உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளை தகர்ப்பதன் விளைவாக புதியதொரு உற்பத்தி முறை நிறுவப்படுவதே சமூகப் புரட்சி என்னும் விளக்கத்தையும் அவர் சுத்தமாக அறிந்திருக்கவில்லை. 
 
ஒரு சாமானிய எழுத்தரைப் போல், மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் - உண்மையில், இயந்திரத்தனமான பொருள்முதல்வாததின் விளைவான பொருளாதார நிர்ணயவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தோன்றிய மார்க்சியத்தை - என குற்றம் சாட்டுகிறார்; மார்க்சியர்கள் மனிதர்களை வெறும் பொருளாதார விலங்குகளாகவே கருதுகின்றனர் என்கிறார். மார்க்சியம் சொல்வது இதுதான்: உற்பத்தி நடவடிக்கைகள் என்பது மனித நடவடிக்கைகளின் அடிப்படையாகும், அதனால் அவர்கள் உற்பத்தி உறவுகளாக பிணைப்புக்குள்ளாகிறார்கள். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கும், அதன் மேல் அரசியல்-கருத்தியல்-கலாச்சார-சமூக நிறுவனங்கள் ஆகிய மாபெரும் தூண்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. கட்டியெழுப்பப்பட்டதும், அந்த மேற்கட்டுமானமானது சுதந்திர நகர்ச்சியைப் பெற்றுவிடும். சுழற்சியில், அது அடிக்கட்டுமானத்திலும் செல்வாக்கு செலுத்தும், புதிய அடித்தளத்திற்கும், புதிய மேற்கட்டுமானத்துக்கும் இடையிலான மோதல் தொடரும். சோஷலிசத்திற்கு மாறும் கட்டம் முழுவதிலும், பல்வேறு வகையான முதலாளித்துவ அடிக்கட்டுமானங்கள் எஞ்சியிருக்கும், மாற்றத்திற்கான தொடர் முறையிலான நீடித்த நடைமுறையுடன், பழைய மேற்கட்டுமானத்தோடு தொடர்ந்து போராட்டங்களும் நிகழும். இந்த திட்டங்கள் பற்றி ஏதுமறியாததால், அம்பேத்கர் 1938இல் ஜனதாவில் எழுதிய ஒரு கட்டுரையில், கலாச்சாரம் மற்றும் மதமெனும் தூண்கள் பொருளாதார அடித்தளத்தின் மேல் நிலவுகிறது என்றால், அடித்தளத்தைத் தகர்கக வேண்டுமெனில், முதலில் தூண்களைத் தகர்க்க வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்தையும் ஏதும் புரியாமலேயே தெரிவித்திருக்கிறார்.
 
கம்யூனிசமும், பொருளாதார அடித்தளத்தைத் தகர்க்க - மக்களின் வர்க்க உணர்வை தட்டி எழுப்பி, அரசை தகர்ப்பதற்காக அணிதிரட்டப்படும் வரை - அரசியல் பொருளாதார பரப்புரையுடன் - முதலில், மேற்கட்டுமானத்தின் மைய அரசியல் நிறுவனமான அரசை தகர்க்க வேண்டும், மதச்-சட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் எதிராகப் போராட்டம் தொடுக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறது.
 
பொருளாதார அடிக்கட்டுமானத்தை தகர்த்தால் மட்டுமே மேற்கட்டுமானத்தை முழுமையாக, முற்றிலுமாக தகர்க்க முடியும் என்றுதான் மார்க்சியம் சொல்கிறது. அடிக்கட்டுமானமே தீர்மானமகரமான சக்தி என்று மட்டுமே மாக்சியம் சொல்கிறது. இந்த விவாதத்திற்கு பின்னர் திரும்புவோம்.
மார்க்சியம் மனிதர்களை வெறும் “பொருளாதார விலங்குகளாகக்” கருதுவதாகச் சொல்லி, அதனை மறுக்கும்விதமாக எந்தவொரு சிவில் சமூகத்திலும் மதம் என்பது அவசியம் என்றார். அம்பேத்கரின் இந்த “சிவில் சமூகம்” என்பது, ஹெகலின் சிவில் சமூக கருத்துருவுக்கு மட்டுமின்றி, சமூக-அரசியல் மட்டத்தில் மதத்தின் இருப்பை முற்றிலுமாக நிராகரித்த கருத்தியல் வடிவிலான பகுத்தறிவு மனநிலையினைக் கொண்டிருந்த லோக்கே, ரூசோ போன்றவர்களின் சிவில் சமூக கருத்துருவுக்கும் கூட நெருக்கத்தில் இல்லை. உண்மையில், மதத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்தோ, திட்டவட்டமான சூழ்நிலைகளில் மதத்தின் உருவாக்கம் குறித்த மார்க்ஸுக்கு முந்தைய, புரட்சிகர பொருள்முதல்வாத பூர்ஷுவா சிந்தனையாளர்களின் சிந்தனைகளைப் பற்றி கூட அம்பேத்கர் அறிந்திருக்கவில்லை.
 
மதம் என்பது ஏதோ, மனிதர்களுக்கும் மேலானதாக, வழிகாட்டும் நெறியாகக் கருதினார், அதன் சமூகத் தோற்றம் குறித்த அறியாமையில் இருந்தார். இந்த விஷயத்தில் அம்பேத்கரும் காந்தியைப் போல் ஒரு பழைமைவாதியே. இந்துமதத்தை விட மேலான ஒரு மதம்தான் அவருக்குத் தேவைப்பட்டது, அதைத்தேடி இறுதியில் 2000 வருடம் பழமை வாய்ந்த புராதன பௌத்த மதத்தைக் கண்டடைந்தார். பிராமணிய எதிர்ப்புடைய பண்டைய பொருளாயத தத்துவங்களான ஆசீவகம், லோகாயதம் அல்லது சாங்கிய மதங்களைத் தேடி அவர் செல்லவில்லை. ஏனென்றால் அவை ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் இல்லை. அம்பேத்கரின் ஆன்மீக வெறுமையே, மதம் ஒன்று மட்டுமே ஆன்மீக செல்வம் எனக் கருதக் காரணம். மனிதர்களை வெறும் “பொருளாதார விலங்கு” என்று கருத்துவதற்கெல்லாம் அப்பால், மார்க்சியமானது ஆன்மீக செல்வமற்ற மனிதரை மனிதர் எனும் தகுதியைப் பூர்த்தி செய்யாத ஒருவராகவே கருதுகிறது; பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்காகக் கூட கடுமையாக உழைத்து துன்புறும் நிலையில், ஆன்மீக செல்வம் மறுக்கப்பட்டு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒட்டுண்ணி வர்க்கங்களோ உழைப்பெனும் இயற்கையான மனிதப் பண்பற்றவர்களாக, ஆன்மீக செல்வத்தின் பேரால் காமம் மற்றும் போகத்தில் திளைக்கும் சீரழிந்த கலாச்சாரத்தை கடைபிடித்து வாழும் ஒரு நிலையை அனுமதிக்கும் சமூக அமைப்பை ஒழிக்க வேண்டும் என்பதே அதன் கொள்கை.
 
கலாச்சாரம், கலை-இலக்கியம், இசை, தத்துவம் இவையனைத்தையும் ஆன்மீக செல்வங்கள், மனித சாரம் என்றே மார்க்சியம் கருதுகிறது. “1844 ஆண்டின் பொருளாதார மெய்யியல் கையேடு”, “புனிதக் குடும்பம்”, ‘ஜெர்மன் தத்துவம்’, ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ (’க்ருண்ட்ரிஷே’ அவரது வாழ்நாளில் பதிப்பிக்கப்படவில்லை) போன்ற மார்க்ஸ், எங்கெல்ஸின் நூல்களை அவர் படித்திருந்தால், ‘மூலதனத்தில்’ அங்கிங்கு வரும் குறிப்புகளை அவர் படித்திருந்தால், 1950 வரை வெளிவந்த லெனின், ஸ்டாலின், மாவோ, கார்க்கி, லுனாச்சார்ஸ்கி, ப்ரெக்ட், லூக்காஸ், வோரோவ்ஸ்கி, வொரொன்ஸ்கி போன்ற டஜன் கணக்கானவர்களால் இயற்றப்பட்ட மொழியியல் கோட்பாடு பற்றிய படைப்புகள், இலக்கியம், கலை, இசை மற்றும் சோஷலிச கலை இலக்கிய, இசை, சினிமாத் துறையில் நடந்த பரிசோதனை முயற்சிகள் எல்லாம் பற்றி நூற்றில் ஒரு பங்காவது அறிந்திருந்தால் மார்க்சியத்தின் ஆன்மீக செல்வம் பற்றிய அவரது பார்வை இத்தனை மேலோட்டமாக இருந்திருக்காது...”
 
 
மேலும் வாசிக்க...
 
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்.
தொடரும் விவாதம்...
தேர்வும் தொகுப்பும்
கொற்றவை.

Dec 24, 2016

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்


என்னுரை

இந்தியா என்றதும் அதன் அடையாளமாகச் சொல்லப்படுவது அதன் பழமை வாய்ந்த பண்பாடு. அரசியல் சாசனத்தின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதாவது இந்தியா ஓர் இந்து நாடாக இருப்பினும், மற்ற மதங்களை ‘அனுமதிக்கக்கூடிய’ ‘சுதந்திர’ நாடு எனப்படுகிறது. ஆனால், இந்து மதம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னர் பல தத்துவங்களையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், பண்பாடுகளையும் கொண்ட மக்கள் குழுக்கள் வாழும் பிரதேசங்களை, திணை வாரியாகப் பிரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட நாகரீகமாக (கண்டமாக) இருந்திருக்கிறது என்றே வரலாறு நமக்குச் சொல்கிறது.

காலப்போக்கில், பன்மைத்துவச் சமூகமாக இருந்த இந்த நாகரீகம், ஓரியல்பான சமூகமாக உருமாற்றம் செய்யப்படுகிறது. பல இனக்குழுக்களின், பிரிவுகளின் தத்துவங்களும், வழிபாட்டு நம்பிக்கைகளும் இணைக்கப்பட்டு ஒற்றை மத வடிவம் பெற்று இந்து மதம் என்றானது. மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு இது தொடர்புடையது. அதாவது, மனிதர்கள் தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஈடுபடும் முக்கியமான நடவடிக்கையான பொருள் உற்பத்தி நடவடிக்கையோடு இந்த சமூக வரலாற்று வளர்ச்சி என்பது தொடர்புடையது. உற்பத்தி நடவடிக்கையின் விளைவாக மனிதர்களுக்குள் ஏற்படும் உறவை நாம் பொருளாதார உறவுகள், உற்பத்தி உறவுகள், உழைப்புசார் உறவுகள், சொத்துறவுகள், சமூக உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியின் விளைவாக சமூகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் தோன்றுகின்றன.  து சமூகக் கட்டமைப்பு எனப்படுகிறது. இக்கண்ணோட்டத்தை நமக்கு வழங்குவது மார்க்சியம். 

இந்த சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாக (அடிக்கட்டுமானமாக) பொருளாதாரமும் (பொருளாயத), அந்த பொருளாதார முறை அல்லது உற்பத்தி நடைமுறைக்கேற்ற ஒழுங்கமைப்புகள் மேற்கட்டுமானமாகவும் இருக்கிறது என்று மார்க்சியம் விளக்குகிறது. உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியில், மனிதர்களிடையே முன்னர் சமத்துவமாக இருந்த உறவுகள் சிதைந்து ஏற்றத்தாழ்வு மிக்க மனித உறவுகள் தோன்றுகின்றன. இதுவே வர்க்க சமுதயாத்தின் தோற்றம். அனைவரும் உழைத்து, பொருட்களை அல்லது உழைப்பின் பலனை சமமாகப் பிரித்து வாழ்ந்த முறை சிதைந்து குறிப்பிட்ட மக்கள் உழைக்க, குறிப்பிட்ட பிரிவு உழைக்காமல் மற்றவரின் உழைப்பைச் சுரண்டி வாழும் முறை உருவானது.

இதுவே தனியுடைமை செல்வத் திரட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை மற்றும் உழைப்புப் பிரிவினையைக் கொண்ட அமைப்பாகும். உழைக்கும் வர்க்கம், உழைக்காமல் வாழும் எஜமானர் வர்க்கம் ஆகியவை அதன் முரண்பட்ட பிரிவுகள். ஏற்றத்தாழ்வு மிக்க இந்த சுரண்டல் முறையினால் இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையில் (அதிலும் உட்பிரிவுகள் உண்டு)  ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக ஒழுங்கமைப்புகளுக்கான தேவை எழுகிறது. அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகிய நிர்வாக இயந்திரங்கள் இதன் விளைவாகவே தோன்றின என்பதையும் நமக்கு மார்க்சியம் விளக்குகிறது.

நிர்வாகத்தின் தேவை இயல்பானதுதானே என்பதே பொதுபொத்தியின் புரிதலாக இருக்கிறது. ஆனால் வர்க்க முரண்பாடுடைய சமூகத்தில், பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தி ஆதிக்கம் பெற்ற சமூகமானது தனது வர்க்க நலனுக்காகவே இத்தகைய ஒழுங்கமைப்புகளைத் தோற்றுவிக்கிறது. அதனால் இந்த ஒழுங்கமைப்புகளுக்கென்று ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. சுரண்டும் வர்க்கத்தின் பிரிதிநிதியாகி, உழைக்கும் வர்க்கத்தைப் பல்வேறு சித்தாந்தங்களுடன், பல்வேறு சட்டதிட்டங்களுடன் ஒடுக்கி ஆண்டு, உழைப்பு மற்றும் உற்பத்தியின் பலனை எஜமானர் வர்க்கத்திற்கு எந்தத் தொந்தரவுமின்றி கிடைக்குமாறு செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

இந்த சமூக-அரசியல் பொருளாதாரத்தின் வர்க்கப் பண்பை புரிந்துகொள்ளாமல் இருப்பதன் காரணமாகவே நாம் நிலவுகின்ற அனைத்து அமைப்புகளையும், நிர்வாக இயந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் இந்த சுரண்டல்வாத உற்பத்தி முறையையும் இயல்பானது என்று கருதுகிறோம். அதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, அநீதிகளை தனித்தனிப் பிரச்சினைகளாக, நிர்வாக சீர்திருத்தக் கோளாறுகளாக, குறிப்பிட்டதொரு பிரிவின் கருத்தியல்களாக, சில தனிமனிதப் பேராசைகளாகப் புரிந்துகொள்கிறோம்.

ஆனால், அடிப்படையில் நடப்பது என்னவெனில், சுரண்டல்வாத உற்பத்தி நடைமுறையில், அதாவது உற்பத்திச் சாதன உடைமை, உற்பத்திக் கருவிகளின் உடைமை, உழைப்புப் பிரிவினை மற்றும் விநியோக முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தி நடைமுறையில், உழைக்காமல் வாழும் வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே குறிக்கோள் செல்வம் சேர்ப்பதாகும். உழைக்கும் வர்க்கத்திற்கும் அதுதான் வாழ்வின் இலக்கு என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவர்கள் செல்வம் சேர்ப்பதென்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பாட்டாளி வர்க்கத்திற்கு தம் உழைப்புச் சக்தியை விட வேறு உற்பத்திச் சாதனங்கள் இருப்பதில்லை. உற்பத்திச் சாதனங்களில், கருவிகளில் ஏதோ ஒன்றை தம் உடைமையாகப் பெற்ற வர்க்கமும் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்க்க முடியும் (தம் உழைப்பினால்). ஆனால், உழைக்காமல் வாழும் எஜமானர் (முதலாளி) வர்க்கம் மட்டுமே பெரும் செல்வங்களைச் சேர்க்க முடியும்.

இந்தச் செல்வக் குவிப்பு பல்வேறு சுரண்டல் வருவாய்கள் மூலம் திரட்டப்படும். உழைப்புச் சுரண்டல் மூலம், அதாவது உழைப்பாளர்களை இயற்கைக்கு மாறாக கடுமையாக உழைக்கச் செய்து அதிக உற்பத்தியை ஈட்டுவது. அது உபரி மதிப்பு (மிகை மதிப்பு) எனப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அதைப் பங்கிட்டு கொடுப்பதற்குப் பதிலாக, இந்த உழைக்காத வர்க்கமானது அதனை இலாபம், முதலீடு, வட்டி, வாடகை, முதலீட்டாளர்களுக்கான இலாபப் பங்கு, நிர்வகிப்பதற்கான எஜமானர் சம்பளம், அசையாச் சொத்துக்களின் தேய்மானம் இப்படி ஏதேதோ கணக்குகளைக் காட்டி, உழைப்புக்குக் கூலி, முதலீட்டிற்கு இலாபம் (மற்றும் இதர வருவாய்) என்னும் ஒரு அநியாய பொருளாதார முறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

மேற்சொன்ன அந்த செல்வக் குவிப்பிற்காக, உழைக்காத வர்க்கத்திற்கு என்றென்றைக்கும் தேவைப்படும் முக்கியச் சக்தி அது உழைப்புச் சக்தியாகும். அந்த உழைப்புச் சக்தியை மிகவும் மலிவாகக் கைப்பற்றுவதற்கும், மற்றும் நிரந்தரமாக அந்த உழைக்கும் வர்க்கம் தமது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், உழைக்கும் அடிமைகளாகவும் இருப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை இந்த தனியுடைமை அமைப்பு தோற்றுவித்தது, தோற்றுவிக்கிறது, பழையதைப் புதுப்பித்து நீட்டித்துப் பயன்படுத்திக்கொள்கிறது. மனித சமூகமும், மனித உறவுகளும் அதற்கேற்ற வகையில் கட்டமைக்கப்படுகிறது. அதைத்தான் நாம் சமூக மதிப்பீடுகள், பண்பாடு, மத நம்பிக்கை, ’நல்லதொரு’ சமூக அமைப்பு என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

மனித வாழ்வில் பிரதானப் பங்கு வகிக்கும் இந்தப் பொருளாதாரச் செயல்பாட்டை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனென்றால் நிலவுகின்ற சமூக அமைப்பை இயல்பானதென்றோ, இதுவே சாஸ்வதமென்றோ கருதுவதன் மூலம் நாம் அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்பதோடு, நம்மைப் போன்ற உழைக்கும் வர்க்கத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கி, சுரண்டி வாழும் ஒரு பிரிவின் செல்வக் குவிப்பிற்கு உழைத்துக் கொட்டும் பொருளாதார அடிமைகளாகவே வாழ்ந்து மடிவோம், நம் பிள்ளைகளை, அடுத்து வரும் தலைமுறைகளை உழைக்கும் அடிமைகளாகவே பிழைத்திருக்க விட்டுச் செல்வோம் என்றாகும்.

மனித சமூகத்தை, மனித உறவுகளை இந்தப் பொருளாதார அமைப்போடு (உற்பத்தி நடைமுறை) புரிந்துகொள்ளும்போது, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கான காரணங்கள் நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். எந்த ஒரு பிரச்சினையும் தனித்ததல்ல, ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகவே நிலவும் இந்த தனியுடைமை செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட சுரண்டல்வாத சமூக அமைப்பை ஒழிப்பதன் மூலமே நாம் உண்மையான சுதந்திரம் பெற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும்  புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் பொது எதிரியை அடையாளம் கண்டு, சரியான செயல்திட்டத்தை வகுத்து முன்னேற முடியும்.

அந்தவகையில், உழைக்கும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த பலவித ஏற்பாடுகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கமைப்புகள் தோன்றியது என்று பார்த்தோம். அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகியவை அந்த ஏற்பாடுகள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நான்கில், அரசு, இராணுவம், நீதித்துறை என்பது வெளிப்படையாகத் தெரியக்கூடிய நிர்வாக இயந்திரமாக இருக்கிறது. மதம் என்னும் அந்த நிறுவனம் மட்டும் ஏதோ இயல்பிலேயே தோன்றிய ஒன்றாகவும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் ஆசீர்வாதம் பெற்ற புனிதர்கள் வகுத்துக்கொடுத்த நன்னெறி என்றும் நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கிலும் இதுவே நிலைமை.

இதில், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள், சடங்கு, சம்பிரதாயம், போன்ற பழக்க வழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் பொதுவாக இருப்பினும், இந்தியாவில் மட்டும் மதத்தின் ஒரு கோட்பாடாக சாதி என்னும் பிறப்பின் அடிப்படையிலான தகுதியை வரையறுக்கும் படிநிலை ஏற்பாடு ஒன்று நிலவுகிறது. பல்வேறு தத்துவங்களோடு, இந்த சாதி என்னும் கோட்பாட்டையும் உள்ளடக்கியதே இந்தியாவின் மதம் என்று சொல்லப்படும் இந்து மதமாகும்.

வர்க்க சமுதாய தோற்றத்தில் ஒடுக்கும் வர்க்கமானது ஒடுக்கப்படும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த மதத்தை மிக முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தியது, அது இன்றைக்கும் தொடர்கிறது.

உற்பத்தி நடைமுறையின் வளர்ச்சியில் உற்பத்திச் சாதனங்களை (கருவிகளையும்) தனி உடைமையாகக் கொண்ட எஜமானர் வர்க்கம், அதற்கு உழைத்துக் கொடுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு இடைப்பட்ட வர்க்கமாக ‘மேய்க்கும்’ (மூளை உழைப்பு மூலம் நிர்வாகம் செய்யும்) கூட்டம், வணிகத் தொழில் செய்யும் கூட்டம், தரகுத் தொழில் செய்யும் கூட்டம், பகுதியளவு உற்பத்தி சாதனம் கொண்டு சிறு, குறு உற்பத்தியாளர்களாக இருக்கும் கூட்டம் என்று பலவேறு பிரிவுகள் உருவானது. இப்படி பல்வேறு தொழில்கள், வர்க்கக் குழுக்கள் உருவானதோடு, கலப்புகளும் நிகழ்ந்தன. பண்பாட்டு கலப்புகள், நம்பிக்கைக் கலப்புகளும் இதில் நிகழ்வது யதார்த்தமே.

இப்போக்கில், அரசும், மதமும் உருவாகும்போது, ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற ஒழுங்கமைப்பிற்காகவும், உற்பத்திப் பெருக்கத்திற்காகவும் சில நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மதத்தின் பெயரால் உருவாக்கப்படும்/இணைக்கப்படும் போது குறிப்பிட்ட பிரிவொன்று அதற்கு மூளையாக இருந்து அரசு-சமூக-மதக் கொள்கைகளை வகுக்கவும், அதற்குத் தலைமை தாங்கவும், வழிகாட்டவும், சில சட்டதிட்டங்களைப் படைக்கும் பொறுப்பைப் பெறுகிறது. அரசு நிர்வாகம் மற்றும் சமூக ஒழுங்கிற்காக இந்தியாவில் அத்தகைய கொள்கைகளை வகுப்போராக/தொகுப்போராக புரோகிதர் கூட்டம் என்று அறியப்படும் பிராமணக் கூட்டம் இருந்ததாக வரலாறு நமக்குச் சொல்கிறது.

நிலவிய சமூக-அரசியல்-பொருளாதார அமைப்புக்கு ஏற்ற வகையில் அரசுடன் இணைந்து இந்தப் பிராமணியக் கூட்டம் தொகுத்தும், படைத்தும் கொடுத்த மதச் சித்தாந்தங்களே இன்றைக்கு இந்து மதமாக அறியப்படுகிறது. அந்த சித்தாந்தமானது சமூக-அரசியல்-பொருளாதார மட்டத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதே இன்றைக்கும் தொடரும் வரலாறு.

பிராமணிய இந்து மத சித்தாந்தத்தின்படி ‘இந்திய மனிதர்கள்’ (மட்டும்) ஆன் பெண் உறவின் காரணமாகப் பிறக்காமல் ஒரு ஆண் கடவுளின் நெற்றியிலிருந்தும் (பிராமணர்கள்), தோளிலிருந்தும் (சத்திரியர்கள்), தொடையிலிருந்தும் (வைசியர்கள்), பாதத்திலிருந்தும் (சூத்திரர்கள்) பிறந்தார்கள். (பின் எப்போது அவர்கள் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் மனிதர்கள் ஆனார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்). ஆகவே, அப்பிறப்பின் அடிப்படையில் அவரவருக்கென்று ஒரு தகுதி இருக்கிறது. ஒரு மரபு இருக்கிறது - அது நால் வர்ணக் கோட்பாடு என்று தோன்றி இன்று அது சாதியாக இறுகி நிற்கிறது.

பிராமணிய இந்து மதச் சாதியமைப்பின்படி பிராமணர்கள் உயர்ந்தவர்கள், அவர்களுக்குக் கீழ் சத்திரியர்கள், பின் வைசியர்கள், பின் சூத்திரர்கள். ஆனால் இந்த நால் வர்ணத்தார்க்கும் கீழாக ஒரு சாதி அல்லது பிரிவாக இருப்பவர்கள் பஞ்சமர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் பிறப்பிலேயே மிகவும் ‘கீழானவர்கள்’ என்றும், ‘தீண்டப்படாதவர்கள்’ என்றும் வரையறுக்கப்பட்டு, கடுமையான கொடுமைகளுக்கு உள்ளானார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. 

இந்துமத சாதியமைப்பின்படி, இந்த படிநிலை அமைப்பின் கீழ் பிறப்பின் அடிப்படையில் இன்னார்க்கு இன்ன தொழில் எனும் உழைப்புப் பிரிவினை வகுக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு ‘சுத்தமான’ உழைப்பும் (உடல் மற்றும் மூளை உழைப்பு), கீழ் அடுக்கில் உள்ளவர்களுக்கு ’அசுத்த’ உழைப்பும் (கடுமையான மற்றும் அசுத்த உழைப்பு) பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வர்க்கப் பிளவின் முக்கியக் கூறாக இருக்கும் இந்த உழைப்புப் பிரிவினையை திட்டவட்டமாக நடைமுறைப்படுத்த உதவுவது சாதியமைப்பாகும். ஆனால் இந்து மதம் என்னும் அச்சாரத்தோடு இயங்குவதால், இதில் நிலவும் உழைப்புப் பிரிவினை எனும் ஏற்பாடு புரிந்துகொள்ளப்படாமல், ஒடுக்குமுறை வடிவங்களான தீண்டாமை, சமூக விலக்கு, இன்ன பிற சமூகக் கொடுமைகள் மட்டுமே சாதி என்றும், அது தனித்ததொரு பிரச்சினை என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதம் மற்றும் இன்னபிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் தனியுடைமை பொருளாதாரத்திற்கு ஏற்ற சமூக-அரசியல் கட்டமைப்புகளே காரணமாக இருக்கின்றன.

அதாவது உழைப்புச் சுரண்டல் மூலம் பெருத்த இலாபம் ஈட்டி செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு என்று பொருள். ஆகவே, சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதச் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் என அனைத்துப் போராட்டங்களும், நீண்டகாலப் போக்கில் வர்க்கப் போராட்டப் பாதையில் இணைந்து - நிரந்தரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த – தனியுடைமையை ஒழித்து பொதுவுடைமையை நிறுவுவதாக இருக்க வேண்டும் என்பதே மார்க்சிய வழிகாட்டுதல்.

இவ்வாறாக, கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும். இது ஆளும் வர்க்கத்திற்கே சாதகமாக அமையும். இந்தப் புரிதல் இன்றியே முற்போக்குத் தலைவர்களில் பலரும் தங்களின் அடையாளம் சார்ந்த பிரிவினரின் விடுதலையைப் பற்றி மட்டுமே கவலை கொண்டு அதற்கான போராட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பிரிவினைவாத மனநிலைக்குள்ளாகி பாதை மாறிப் போய்விடுகிறார்கள். தலித்தியம் என்பது அத்தகையதொரு அடையாள அரசியல் போக்காகும். அம்பேத்கரை முன்வைத்து இந்த பிரிவினைவாத பூர்ஷுவா அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.   ஆகவே, அம்பேத்கரின் சிந்தனைகளை பகுத்தாய்வது அவசியமாகிறது. அம்பேத்கரின் சீர்திருத்தவாதம், பௌத்த மதமாற்றம் மற்றும் அரசியல்-பொருளாதார பரிந்துரைகள் ஆகியவை உண்மையிலேயே தலித் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரக்கூடியதா என்பதை கேள்விக்குள்ளாக்குவதென்பது, தலித்தியத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாத பூர்ஷுவா அரசியலை அம்பலப்படுத்துவதென்பதாகும். 

சுதந்திர போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி கொண்டதன் காரணமாகவும், ஜான் டூயி போன்ற ஃபேபியன் சோஷலிசப் பொருளாதார வல்லுனர்களின் தாக்கத்திற்கு உள்ளானதாலும் அம்பேத்கர் மார்க்சியம் பற்றிய தவறான புரிதல்களை வளர்த்துக் கொண்டார் எனலாம். அதன் விளைவாக, மார்க்சியம் தலித் மக்களுக்கு எதிரானது என்று எதிர்மறையாக சித்தரிக்கும் அளவுக்கு சென்றார். இந்த மரபின் தொடர்ச்சியாக தலித் அரசியல் என்னும் அடையாள அரசியல் உருவாகி, இன்றைக்கு தலித் பூர்ஷுவா அரசியலாக உருமாறி நிற்கிறது. தலித் மக்களுக்கு சில சலுகைகளை, நிவாரணங்களைப் பெற்றுத் தருவது, பூர்ஷுவா பாராளுமன்ற அரசியலில் பங்குபெறுவது, சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமைக்கு எதிராக ஆங்காங்கே சிலப் போராட்டங்களை நடத்துவது என்பதைத் தாண்டி இந்த அரசியல் தலைமைகளிடம் சாதி ஒழிப்பிற்காக எந்த செயல்திட்டமும் இல்லை.

அம்பேத்கரியம் என்னும் கோட்பாட்டின்படி சாதி ஒழிப்பு மற்றும் தலித் விடுதலை என்று சொல்லும் இத்தலைவர்கள் மற்றும் தலித் பூர்ஷுவா அறிவுஜீவிகள் அதன்படி சாதி ஒழிப்பு எப்படி சாத்தியம் என்று விளக்குவதில்லை. ஆனால், சாதியப் பிரச்சினைக்கான தீர்வு அம்பேத்கரிடம் உள்ளது, சாதி ஒழிப்பு உள்ளிட்ட நூலில் உள்ளது என்று இவர்கள் கூறிவந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பு கருத்துகளை பரப்பி, உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் வேலையில் தீவிரமாக செயல்பட்டுவந்தனர். ஒருகட்டம்வரை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நேரடியாக வெறுப்பு பாராட்டி வந்த இந்த தலித் அடையாள அரசியலானது பின்னர் சூழ்நிலைக்கேற்ப கம்யூனிஸ்டுகளோடு இணைந்தும், தனித்தும் செயல்பட்டு வருகின்றது. ஆனால், அடிப்படையில் இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது, சாதி ஒழிப்பிற்கு மார்க்சியத்தில் தீர்வில்லை, அம்பேத்கரிடம் மட்டுமே தீர்வு இருக்கிறது என்பதே தலித் அரசியல் கோட்பாடாகும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய அறிவுஜீவிகள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளனர். மார்க்சியத்தை முன்வைத்து அம்பேத்கரின் சிந்தனைகளை, அவரது போராட்ட வழிமுறைகளை விமர்சித்து பல நூறு விமர்சனங்கள் வந்துள்ளன. அந்தப் பின்னணியில் வெளிவந்ததே ரங்கநாயகம்மா எழுதிய சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூல்.

ஆனால், மற்ற எந்த நூல்களும், விமர்சனங்களும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை இந்த நூல் எதிர்கொண்டுள்ளது. ரங்கநாயகம்மா நூலுக்கு தொடர்ச்சியாக சில விவாதங்களை பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்நூல் தொகுப்பு. வாசிப்பு வசதி கருதி பெரிய பாராக்களை உடைத்திருக்கிறேன்.

கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்து ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அர்விந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன். நேரம் கிடைப்பதைப் பொறுத்து மற்றக் கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம், அல்லது வேறு யாரேனும் மொழிபெயர்த்துக் கொடுத்தால், அடுத்தப் பதிப்பில் அதை சேர்த்து வெளியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

                                                                                                      - கொற்றவை