Showing posts with label குறளி. Show all posts
Showing posts with label குறளி. Show all posts

Jul 23, 2013

“சாதி குறித்து மார்க்ஸ்” - மொழிபெயர்ப்பு கட்டுரை - சிறு விளக்கம்

தோழர்களே,

 “சாதி குறித்து மார்க்ஸ்” என்று ரங்கநாயக்கம்மா எழுதிய கட்டுரையினை தமிழில் மொழிப்பெயர்த்திருந்தேன். அது குறளி இரண்டாம் இதழில் வெளிவந்துள்ளது.

பக். 62 இல் வலது பத்தியில் பின்வரும் ஆங்கில மேற்கோளுக்கு எனது கீழ் வரும் மொழிபெயர்ப்பு இடம் பெற்றுள்ளது. இதழைப் படித்த தோழர் ஒருவர் மொழிபெயர்ப்பில் குறை உள்ளதாக கருத்து தெரிவித்தார். அவருக்கு எனது நன்றிகள்.

உடனே கார்ல் மார்க்ஸ் எழுத்துக்களின் மொழிபெயர்ப்பைப் புரட்டிப் பார்த்து, மீண்டும் எனது மொழிபெயர்ப்பை படித்துப் பார்த்தேன். உரையாடலின் தொடக்கத்திலேயே “material premises” என்பதை பொருளாதார வளாகங்கள் என்று மொழிபெயர்த்திருப்பது தவறு என்பதை ஒப்புக்கொண்டேன். உண்மையில் அது ஒரு கொச்சையான மொழிபெயர்ப்புத்தான் வருந்துகிறேன். எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன் என்ற வருந்தம் எனக்கு மேலோங்கியது.

பிறகு appropriation எனும் சொல் குறித்த விவாதம் நடந்தது. அதனால் மீண்டும் அந்த பத்தியை மொழிபெயர்த்துப் பார்த்தேன். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு ஓரளவுக்கு நிறைவளிப்பதாகவும் உள்ளது.

ஆனால் அன்புக்குறிய அந்த தோழர் ‘இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ்’ புத்தக மொழிபெயர்ப்பில் உள்ள மொழிபெயர்ப்பு பொருத்தமானதாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். உடனே அதைப் பிரட்டிப் பார்த்தேன். எனக்கென்னவோ அது சரியான மொழிபெயர்ப்பாகப்படவில்லை. ஆகவே எனது இரு  மொழிபெயர்ப்பையும், அந்த மொழிபெயர்ப்பையும் இங்கே கொடுத்துள்ளேன்.

மற்றவர்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் பரிந்துரைகளை, பகிர்ந்தால் எனது மற்ற மொழிபெயர்ப்புகளுக்கும் உதவியாக இருக்கும்.

நன்றி
கொற்றவை

ஆங்கில மேற்கோள்:

“All the English Bourgeoisie may be forced to do will neither emancipate nor materially mend the social condition of the mass of the people, depending not only on the development of the productive powers, but on their appropriation by the people. But what they will not fail to do so is to lay down the material premises for both”  (p.85)


முதல் மொழிபெயர்ப்பு: (சாரம் மாறவில்லை என்றாலும், மோசமான மொழிபெயர்ப்பு)!

“உற்பத்திச் சக்திகளின் முன்னேற்றத்தைச் சார்ந்து மட்டுமல்ல, மக்களால் தங்களுக்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீட்டிற்காக்வும் ஆங்கிலேய பூர்ஷுவாக்கள், கட்டாயப்படுத்தப்பட்டாலும், மக்களின் சமூக நிலையைப் பொருளாதாரபூர்வமாகத் திருத்தவோ, விடுதலை அளிக்கவோ முனைய மாட்டார்கள். ஆனால், இரண்டுக்குமான பொருளாதார வளாகங்களை வரையறுக்க அவர்கள் தவறமாட்டார்கள்”.

விமர்சனத்திற்குப் பின்னர்: (இது நிறைவு தருவதாக இருக்கிறது)

கட்டாயப்படுத்தப்பட்டாலும், அனைத்து ஆங்கில பூர்ஷுவாக்களும் மக்களின் சமூக நிலையை மாற்றவோ அல்லது  அவர்களின் பொருளாயத நிலையிலிருந்தோ (அவர்களை) விடுவிக்கவோ மாட்டார்கள், இது உற்பத்திச் சக்தியின் முன்னேற்றததை மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக அதன் மீதான மக்களின் பயன்பாட்டைச் சார்ந்தும் இருக்கிறது. ஆனால்,  அவர்கள் (பூர்ஷுவாக்கள்) இரண்டுக்குமான பொருளாயத அடிப்படைகளை வரையறுக்க தவறமாட்டார்கள்

இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பகம் 2012 வெளியீட்டில் உள்ள மொழிபெயர்ப்பு (பக். 136):

ஆங்கிலேய முதலாளிகள் நிர்பந்தத்தால் எடுக்கும் நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு விடுதலையைக் கொடுக்காது, அல்லது இந்திய மக்களின் சமூக நிலையில் குறிப்பிடத்தக்க மாறூதலையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்திய மக்களின் விடுதலையும், முன்னேற்றமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் அவைகளைப் பொதுமக்கள் தங்கள் உடைமையாகப் பெறுவதையும் பொறுத்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும் தேவையான பௌதிக அஸ்திவாரத்தைப் போட ஆங்கிலேய முதலாளிகள் தவறமாட்டார்கள்.


இதன் ஆங்கிலப் பதிப்பு http://www.marxists.org/archive/marx/works/1853/07/22.htm உள்ளது. (17 ஆம் பத்தி)

Jul 5, 2013

குறளி இரண்டாம் இதழ்


Ø    குறளி இரண்டாம் இதழ் உள்ளடக்கம்:

§  அறிவுஜீவிகளின் பிரதிநிதித்துவம்
-       எட்வர்ட் செய்த் | தமிழில்: எச். பீர் முகம்மது

§  உடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்
§  கொற்றவை

§  இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியம்: சில சவால்களும் எதிர்கொள்ளல்களும்
§  ந. முத்துமோகன்

§  சாதி குறித்து மார்க்ஸ்
§  ரங்கநாயக்கம்மா | தமிழில்: கொற்றவை

§  மோனாவின் கதை
§  ஊர்வசி புட்டாலியா | தமிழில்: துணங்கை

§  சாதியப் போர்வையில் வர்க்கப் போராட்டம்
§  ரங்கநாயக்கம்மா | தமிழில்: கொற்றவை

§  சுயதூய்மை எதிர் சுயமரியாதை: தலித் இயக்கத்தின் வேர்கள் பற்றி
§  டி.ஆர். நாகராஜ்  |  தமிழில்: ராமாநுஜம்

Ø   உரையாடல்

§  தேசிய இயக்க மாயைக்கும் திராவிட இயக்க மாயைக்கும்
   ஊடாகக் கரைய மறுக்கும் தலித் இயக்கத்தின் கதை
-       ஸ்டாலின் ராஜாங்கம்

§  பௌத்தம்: தலித் சாதி அரசியலுக்கான விற்பனைப் பண்டம்
-       பாஸ்கர்

Ø  கதை
§  நிகழ்காலம்  |  ஆதிரன்
§  கறுப்புக் குருவி – கூகி வா தியாங்கோ | தமிழில்: எம். ரிஷான் ஷெரிஃப்

Ø  நாவல் பகுதி
§  ஹோ அன்-னின் ஏழு மறுபிறப்புகள் : தமிழில் அநந்தன்

Ø  கவிதைகள்
§  முவ்வேறு கள் மணங்கள்   |  தமிழச்சி தங்கபாண்டியன்
§  மஹாயோ கமணம் | வசுமித்ர
§  தாலிபன் கவிதைகள் | தமிழில்: பார்த்திபன்
§  கறுத்தடையான் கவிதைகள்





Jul 10, 2012

பழஞ்சொல், அல்லது உதிரபலி, அல்லது பழங்குடி அல்லது பிணங்களின் வெள்ளை அறிக்கை, அல்லது உங்களது சாவுப் பத்திரம், இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமேயில்லை.....




கோமான்களே
கனவான்களே
கைவிடப்பட்ட
எம் மக்களின்
கனவுகளை தோட்டாக்களாக்கும் பேராற்றலில் திளைத்தவர்கள் 
நினைவூட்டத் தவறுவதேயில்லை

எங்கள் மூத்திரம் மரங்களின் வேர்களில் கலந்திருந்தது
பூக்களில் நாற்றம் வீசியதில்லை
மணக்கும் அப்பூக்களை கொன்றறுத்துச் சூடியதில்லை
பசியென்ற சொல் சதையானபிறகே
தோளிலேறும் வில்
எளிய வேட்டை

இப்படியாகத்தான்..........
சில
காலம் முன்பு வரை

இப்போது
நாங்கள் புதிய வாடைகளை நுகர்கிறோம்
உடல்களில் சாம்பல் நிறம் தேமலெனப் பரவுகிறது
நாசி கந்தக வாசத்தில் கருகி எரிகிறது
தொப்புள் துவள்கிறது
எம் வியர்வையில் வாசம் இல்லை

அடர்த்தியான வனங்களின் ஊடே
நிர்வாணமாய் இருந்த பாறைகள்
பிணங்களை உடுத்தத் துவங்கி வெகு காலமாயிற்று
எங்கள் மண் நிறமிழந்து இருக்கிறது
சிதறி விழும் நிழல்கள் சிவப்பைக் கக்குகின்றது

பிள்ளைகள்
மணல்களை, பாறைகளை, மரங்களை
மற்றும்
இதுவரை கேள்விப்பட்டிராத
மரணத்தின் விழிகளை
வரைந்து பார்த்து மகிழ்கின்றனர்
அதில்
அழித்தொழிப்பின் இளிநகை செங்கோடுகளாக நெளிகிறது

சொல்லியிருக்கிறோம்
எங்கள் சிறார்களுக்கு
இயற்கையின் பிதாமகர்கள்...

(அப்படித்தான் எக்கணமும் உங்களை எங்கள் முன் உச்சரித்து, அனுபவித்து, எங்கள் உடல் பதறுமளவுக்குச் சொல்வீர்கள். முட்டாள்களே... இவ்வார்த்தைகளை நீங்கள் எமக்கெதிராக உச்சரிக்கையில் எமது பற்கள் இறுகி உதிர்வதை எப்போதும் கண்டதில்லை நீங்கள். )

மாசற்ற ரப்பர் பொம்மைகளை அனுப்பி வைப்பார்களென்று
உறுதி அளித்திருக்கிறோம்

எங்கள் உடல் சூட்டின் உரிமைகள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது

ஒளிக்கற்றைகள் பேராசைமிக்க விழிகளைக் கொண்டு
பதுங்கு குழிகளுக்குள்  இருக்கும்
சிறார்களின்
புன்னகைகளைப் பிடுங்கிச் செல்கிறது
அவை
எம் குடியினருக்கான அருங்காட்சியகத்திற்காக சேர்க்கப்பட்டுவருவதாக 
அரசின் சமாதானத் தூதுவர் புன்னகையுடன்
எம் சிறுமிகளின் இளமுலைகளை கண்டுணர்ந்து
சொல்லிச் செல்கிறார்

தானியங்கிகள் கூட
இரும்புக்குறிகளை ஈணித்தள்ளுகிறது
எம்
பெண் மக்களைக் காணும் பொழுது
ஆதிக்கம் தனது கொடிய சங்கை ஊதிப் பிளிறுகிறது
வனம் தனது தூக்கத்தை இழக்கிறது
போர் தொடங்குகிறது
சதை, நிணம், உங்களது அரிய பார்வையில்
ஊளையாகி சீழ் வீசும் எமது மண் மிதக்கும் கைப்பிடி இதயம்
வழியும் குருதி
கைதூக்கிய சொற்கள்
அனைத்தும் களைத்து விழுகிறது

உடல்களுக்கு  தாக்குதல் ஓரிருமுறை
யோனிகளின் சிதைவு எண்ணிக்கைக்குள் அடங்குவதில்லை

(எப்பொழுதும் பேரழிவுக்கு முன்னும் பின்னும் யோனிகள் கருகி எரிவது ஏனென்று தெரியவில்லை. கற்பழிப்புக்கு முன்னும் பின்னும் அன்னையின் முகமும் தெரிவதில்லை. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் ஆண்களே)

உங்களது வரைபடத்தில் சுழல்கிறது புவி
உங்களின் கரங்களுக்கு
சிலுவைகளில் இடமில்லை

ஆதிக்கம் அவ்வாறே என்பதற்கு எங்களிடம்
பிணத்தை
பிணச்சூட்டை
கருகிய மரத்தை
கந்தக நிலத்தை

இப்படியாக....
கிழிக்கப்பட்ட
நைய்யப்பட்ட
குருதியோடிய

இன்னும்......
துப்பாக்கிகள் நுழைக்கப்பட்ட
பார்த்து மகிழ்ந்த
வெந்து தணிந்த
சிதைந்த
சிறிய
பெரிய
முதிர்ந்த
விழிகள்
கரங்கள்
சதைகள்

மற்றும் இறுதியின் இறுதியாக
எல்லாச் சிதைவுகளுக்கும் சாட்சியாக இருக்கும்
மரத்த யோனிகளைத் தவிர
யெது வுமில்லை
எங்களுக்கு

எதுவுமில்லை
எதுவுமே........................யில்லை.

கற்களையெரித்து சாம்பலாக்கும் ஆற்றலை
மின் தகனங்கள் கொண்டிருக்கவில்லை

துரதிருஷ்டம்
சாபத்திற்கு உண்டந்த பலம்

தங்களது மேன்மை பொருந்திய
இருதய அளவிலும் சிறிதாய்ப் போனது
எம்மக்கள் வயிறு

குடல்கள் தின்னத் துவங்கிய எங்கள் வயிற்றின் தசை நார்களில் 
வெளிப்படுகிறது உறைந்துபோன
எங்கள் கனவுகள்
கண்ணீர்
இழந்த எமது
இளமை

வரலாற்றின் பக்கங்கள்
நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது

இயற்கை எல்லாவற்றையும்
எப்பொழுதும்
சகித்துக்கொள்வதில்லை
அது
கணிக்கும்
கண்காணிக்கும்
அழிவின் தும்மலை அறிவித்து
வாரிக்குடிக்கும்

எம்மக்களின் கையில் திணிக்கப்பட்ட
உங்களது
ரப்பர் பொம்மைகளும்
வாசலில் சிரிக்கும்
சுத்தமான நறுமணம் கமழும் உங்களின் பிணங்களின் இளித்த 
புன்னகை கண்டு
நிறையட்டும்
உங்கள் வயிறு
இயற்கையைச் செரிக்க
இம்மண்ணில் பெருவயிறு
எவருக்கும்
இல்லை
இல்லை
இல்லை


இனி இடம்பெயர
யெதுவுமே
இப்படி எதுவுமே
இனி
எப்பொழுதுமே
எதுவுமே
இருக்கப்போவதில்லை.


(குறளி இதழில் வெளிவந்துள்ள கவிதை)