Jul 10, 2012

பழஞ்சொல், அல்லது உதிரபலி, அல்லது பழங்குடி அல்லது பிணங்களின் வெள்ளை அறிக்கை, அல்லது உங்களது சாவுப் பத்திரம், இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமேயில்லை.....




கோமான்களே
கனவான்களே
கைவிடப்பட்ட
எம் மக்களின்
கனவுகளை தோட்டாக்களாக்கும் பேராற்றலில் திளைத்தவர்கள் 
நினைவூட்டத் தவறுவதேயில்லை

எங்கள் மூத்திரம் மரங்களின் வேர்களில் கலந்திருந்தது
பூக்களில் நாற்றம் வீசியதில்லை
மணக்கும் அப்பூக்களை கொன்றறுத்துச் சூடியதில்லை
பசியென்ற சொல் சதையானபிறகே
தோளிலேறும் வில்
எளிய வேட்டை

இப்படியாகத்தான்..........
சில
காலம் முன்பு வரை

இப்போது
நாங்கள் புதிய வாடைகளை நுகர்கிறோம்
உடல்களில் சாம்பல் நிறம் தேமலெனப் பரவுகிறது
நாசி கந்தக வாசத்தில் கருகி எரிகிறது
தொப்புள் துவள்கிறது
எம் வியர்வையில் வாசம் இல்லை

அடர்த்தியான வனங்களின் ஊடே
நிர்வாணமாய் இருந்த பாறைகள்
பிணங்களை உடுத்தத் துவங்கி வெகு காலமாயிற்று
எங்கள் மண் நிறமிழந்து இருக்கிறது
சிதறி விழும் நிழல்கள் சிவப்பைக் கக்குகின்றது

பிள்ளைகள்
மணல்களை, பாறைகளை, மரங்களை
மற்றும்
இதுவரை கேள்விப்பட்டிராத
மரணத்தின் விழிகளை
வரைந்து பார்த்து மகிழ்கின்றனர்
அதில்
அழித்தொழிப்பின் இளிநகை செங்கோடுகளாக நெளிகிறது

சொல்லியிருக்கிறோம்
எங்கள் சிறார்களுக்கு
இயற்கையின் பிதாமகர்கள்...

(அப்படித்தான் எக்கணமும் உங்களை எங்கள் முன் உச்சரித்து, அனுபவித்து, எங்கள் உடல் பதறுமளவுக்குச் சொல்வீர்கள். முட்டாள்களே... இவ்வார்த்தைகளை நீங்கள் எமக்கெதிராக உச்சரிக்கையில் எமது பற்கள் இறுகி உதிர்வதை எப்போதும் கண்டதில்லை நீங்கள். )

மாசற்ற ரப்பர் பொம்மைகளை அனுப்பி வைப்பார்களென்று
உறுதி அளித்திருக்கிறோம்

எங்கள் உடல் சூட்டின் உரிமைகள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது

ஒளிக்கற்றைகள் பேராசைமிக்க விழிகளைக் கொண்டு
பதுங்கு குழிகளுக்குள்  இருக்கும்
சிறார்களின்
புன்னகைகளைப் பிடுங்கிச் செல்கிறது
அவை
எம் குடியினருக்கான அருங்காட்சியகத்திற்காக சேர்க்கப்பட்டுவருவதாக 
அரசின் சமாதானத் தூதுவர் புன்னகையுடன்
எம் சிறுமிகளின் இளமுலைகளை கண்டுணர்ந்து
சொல்லிச் செல்கிறார்

தானியங்கிகள் கூட
இரும்புக்குறிகளை ஈணித்தள்ளுகிறது
எம்
பெண் மக்களைக் காணும் பொழுது
திக்கம் தனது கொடிய சங்கை ஊதிப் பிளிறுகிறது
வனம் தனது தூக்கத்தை இழக்கிறது
போர் தொடங்குகிறது
சதை, நிணம், உங்களது அரிய பார்வையில்
ஊளையாகி சீழ் வீசும் எமது மண் மிதக்கும் கைப்பிடி இதயம்
வழியும் குருதி
கைதூக்கிய சொற்கள்
அனைத்தும் களைத்து விழுகிறது

உடல்களுக்கு  தாக்குதல் ஓரிருமுறை
யோனிகளின் சிதைவு எண்ணிக்கைக்குள் அடங்குவதில்லை

(எப்பொழுதும் பேரழிவுக்கு முன்னும் பின்னும் யோனிகள் கருகி எரிவது ஏனென்று தெரியவில்லை. கற்பழிப்புக்கு முன்னும் பின்னும் அன்னையின் முகமும் தெரிவதில்லை. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் ஆண்களே)

உங்களது வரைபடத்தில் சுழல்கிறது புவி
உங்களின் கரங்களுக்கு
சிலுவைகளில் இடமில்லை

ஆதிக்கம் அவ்வாறே என்பதற்கு எங்களிடம்
பிணத்தை
பிணச்சூட்டை
கருகிய மரத்தை
கந்தக நிலத்தை

இப்படியாக....
கிழிக்கப்பட்ட
நைய்யப்பட்ட
குருதியோடிய

இன்னும்......
துப்பாக்கிகள் நுழைக்கப்பட்ட
பார்த்து மகிழ்ந்த
வெந்து தணிந்த
சிதைந்த
சிறிய
பெரிய
முதிர்ந்த
விழிகள்
கரங்கள்
சதைகள்

மற்றும் இறுதியின் இறுதியாக
எல்லாச் சிதைவுகளுக்கும் சாட்சியாக இருக்கும்
மரத்த யோனிகளைத் தவிர
யெது வுமில்லை
எங்களுக்கு

எதுவுமில்லை
எதுவுமே........................யில்லை.

கற்களையெரித்து சாம்பலாக்கும் ஆற்றலை
மின் தகனங்கள் கொண்டிருக்கவில்லை

துரதிருஷ்டம்
சாபத்திற்கு உண்டந்த பலம்

தங்களது மேன்மை பொருந்திய
இருதய அளவிலும் சிறிதாய்ப் போனது
எம்மக்கள் வயிறு

குடல்கள் தின்னத் துவங்கிய எங்கள் வயிற்றின் தசை நார்களில் 
வெளிப்படுகிறது உறைந்துபோன
எங்கள் கவுகள்
கண்ணீர்
இழந்த எமது
இளமை

வரலாற்றின் பக்கங்கள்
நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது

இயற்கை எல்லாவற்றையும்
எப்பொழுதும்
சகித்துக்கொள்வதில்லை
அது
கணிக்கும்
கண்காணிக்கும்
அழிவின் தும்மலை அறிவித்து
வாரிக்குடிக்கும்

எம்மக்களின் கையில் திணிக்கப்பட்ட
உங்களது
ரப்பர் பொம்மைகளும்
வாசலில் சிரிக்கும்
சுத்தமான நறுமணம் கமழும் உங்களின் பிணங்களின் இளித்த 
புன்னகை கண்டு
நிறையட்டும்
உங்கள் வயிறு
இயற்கையைச் செரிக்க
இம்மண்ணில் பெருவயிறு
எவருக்கும்
இல்லை
இல்லை
இல்லை


இனி இடம்பெயர
யெதுவுமே
இப்படி எதுவுமே
இனி
எப்பொழுதுமே
எதுவுமே
இருக்கப்போவதில்லை.


(குறளி இதழில் வெளிவந்துள்ள கவிதை)

3 comments:

  1. அருமையான கவிதை. படித்து மெய் சிலிர்த்துப் போனேன். எழுதிய கைகளுக்கு முத்தங்கள்!

    ReplyDelete
  2. நன்றி தோழர். கவிதை எழுதுபவருக்கு சொற்கள் பல் வேறு பொருளைக் கொடுக்கும் என்கிற புரிதலோடு, முத்தங்கள் எனும் அந்த சொல்லை வாழ்த்துக்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. நீங்கள் கவிதை எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டது போல் இருக்கிறது கொற்றவை. அப்பப்போ, உங்கள் பக்கத்திற்கு வந்து பார்க்கிறேன். நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

    ReplyDelete