Dec 24, 2016

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்


என்னுரை

இந்தியா என்றதும் அதன் அடையாளமாகச் சொல்லப்படுவது அதன் பழமை வாய்ந்த பண்பாடு. அரசியல் சாசனத்தின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதாவது இந்தியா ஓர் இந்து நாடாக இருப்பினும், மற்ற மதங்களை ‘அனுமதிக்கக்கூடிய’ ‘சுதந்திர’ நாடு எனப்படுகிறது. ஆனால், இந்து மதம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னர் பல தத்துவங்களையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், பண்பாடுகளையும் கொண்ட மக்கள் குழுக்கள் வாழும் பிரதேசங்களை, திணை வாரியாகப் பிரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட நாகரீகமாக (கண்டமாக) இருந்திருக்கிறது என்றே வரலாறு நமக்குச் சொல்கிறது.

காலப்போக்கில், பன்மைத்துவச் சமூகமாக இருந்த இந்த நாகரீகம், ஓரியல்பான சமூகமாக உருமாற்றம் செய்யப்படுகிறது. பல இனக்குழுக்களின், பிரிவுகளின் தத்துவங்களும், வழிபாட்டு நம்பிக்கைகளும் இணைக்கப்பட்டு ஒற்றை மத வடிவம் பெற்று இந்து மதம் என்றானது. மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு இது தொடர்புடையது. அதாவது, மனிதர்கள் தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஈடுபடும் முக்கியமான நடவடிக்கையான பொருள் உற்பத்தி நடவடிக்கையோடு இந்த சமூக வரலாற்று வளர்ச்சி என்பது தொடர்புடையது. உற்பத்தி நடவடிக்கையின் விளைவாக மனிதர்களுக்குள் ஏற்படும் உறவை நாம் பொருளாதார உறவுகள், உற்பத்தி உறவுகள், உழைப்புசார் உறவுகள், சொத்துறவுகள், சமூக உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியின் விளைவாக சமூகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் தோன்றுகின்றன.  து சமூகக் கட்டமைப்பு எனப்படுகிறது. இக்கண்ணோட்டத்தை நமக்கு வழங்குவது மார்க்சியம். 

இந்த சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாக (அடிக்கட்டுமானமாக) பொருளாதாரமும் (பொருளாயத), அந்த பொருளாதார முறை அல்லது உற்பத்தி நடைமுறைக்கேற்ற ஒழுங்கமைப்புகள் மேற்கட்டுமானமாகவும் இருக்கிறது என்று மார்க்சியம் விளக்குகிறது. உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியில், மனிதர்களிடையே முன்னர் சமத்துவமாக இருந்த உறவுகள் சிதைந்து ஏற்றத்தாழ்வு மிக்க மனித உறவுகள் தோன்றுகின்றன. இதுவே வர்க்க சமுதயாத்தின் தோற்றம். அனைவரும் உழைத்து, பொருட்களை அல்லது உழைப்பின் பலனை சமமாகப் பிரித்து வாழ்ந்த முறை சிதைந்து குறிப்பிட்ட மக்கள் உழைக்க, குறிப்பிட்ட பிரிவு உழைக்காமல் மற்றவரின் உழைப்பைச் சுரண்டி வாழும் முறை உருவானது.

இதுவே தனியுடைமை செல்வத் திரட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை மற்றும் உழைப்புப் பிரிவினையைக் கொண்ட அமைப்பாகும். உழைக்கும் வர்க்கம், உழைக்காமல் வாழும் எஜமானர் வர்க்கம் ஆகியவை அதன் முரண்பட்ட பிரிவுகள். ஏற்றத்தாழ்வு மிக்க இந்த சுரண்டல் முறையினால் இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையில் (அதிலும் உட்பிரிவுகள் உண்டு)  ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக ஒழுங்கமைப்புகளுக்கான தேவை எழுகிறது. அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகிய நிர்வாக இயந்திரங்கள் இதன் விளைவாகவே தோன்றின என்பதையும் நமக்கு மார்க்சியம் விளக்குகிறது.

நிர்வாகத்தின் தேவை இயல்பானதுதானே என்பதே பொதுபொத்தியின் புரிதலாக இருக்கிறது. ஆனால் வர்க்க முரண்பாடுடைய சமூகத்தில், பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தி ஆதிக்கம் பெற்ற சமூகமானது தனது வர்க்க நலனுக்காகவே இத்தகைய ஒழுங்கமைப்புகளைத் தோற்றுவிக்கிறது. அதனால் இந்த ஒழுங்கமைப்புகளுக்கென்று ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. சுரண்டும் வர்க்கத்தின் பிரிதிநிதியாகி, உழைக்கும் வர்க்கத்தைப் பல்வேறு சித்தாந்தங்களுடன், பல்வேறு சட்டதிட்டங்களுடன் ஒடுக்கி ஆண்டு, உழைப்பு மற்றும் உற்பத்தியின் பலனை எஜமானர் வர்க்கத்திற்கு எந்தத் தொந்தரவுமின்றி கிடைக்குமாறு செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

இந்த சமூக-அரசியல் பொருளாதாரத்தின் வர்க்கப் பண்பை புரிந்துகொள்ளாமல் இருப்பதன் காரணமாகவே நாம் நிலவுகின்ற அனைத்து அமைப்புகளையும், நிர்வாக இயந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் இந்த சுரண்டல்வாத உற்பத்தி முறையையும் இயல்பானது என்று கருதுகிறோம். அதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, அநீதிகளை தனித்தனிப் பிரச்சினைகளாக, நிர்வாக சீர்திருத்தக் கோளாறுகளாக, குறிப்பிட்டதொரு பிரிவின் கருத்தியல்களாக, சில தனிமனிதப் பேராசைகளாகப் புரிந்துகொள்கிறோம்.

ஆனால், அடிப்படையில் நடப்பது என்னவெனில், சுரண்டல்வாத உற்பத்தி நடைமுறையில், அதாவது உற்பத்திச் சாதன உடைமை, உற்பத்திக் கருவிகளின் உடைமை, உழைப்புப் பிரிவினை மற்றும் விநியோக முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தி நடைமுறையில், உழைக்காமல் வாழும் வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே குறிக்கோள் செல்வம் சேர்ப்பதாகும். உழைக்கும் வர்க்கத்திற்கும் அதுதான் வாழ்வின் இலக்கு என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவர்கள் செல்வம் சேர்ப்பதென்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பாட்டாளி வர்க்கத்திற்கு தம் உழைப்புச் சக்தியை விட வேறு உற்பத்திச் சாதனங்கள் இருப்பதில்லை. உற்பத்திச் சாதனங்களில், கருவிகளில் ஏதோ ஒன்றை தம் உடைமையாகப் பெற்ற வர்க்கமும் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்க்க முடியும் (தம் உழைப்பினால்). ஆனால், உழைக்காமல் வாழும் எஜமானர் (முதலாளி) வர்க்கம் மட்டுமே பெரும் செல்வங்களைச் சேர்க்க முடியும்.

இந்தச் செல்வக் குவிப்பு பல்வேறு சுரண்டல் வருவாய்கள் மூலம் திரட்டப்படும். உழைப்புச் சுரண்டல் மூலம், அதாவது உழைப்பாளர்களை இயற்கைக்கு மாறாக கடுமையாக உழைக்கச் செய்து அதிக உற்பத்தியை ஈட்டுவது. அது உபரி மதிப்பு (மிகை மதிப்பு) எனப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அதைப் பங்கிட்டு கொடுப்பதற்குப் பதிலாக, இந்த உழைக்காத வர்க்கமானது அதனை இலாபம், முதலீடு, வட்டி, வாடகை, முதலீட்டாளர்களுக்கான இலாபப் பங்கு, நிர்வகிப்பதற்கான எஜமானர் சம்பளம், அசையாச் சொத்துக்களின் தேய்மானம் இப்படி ஏதேதோ கணக்குகளைக் காட்டி, உழைப்புக்குக் கூலி, முதலீட்டிற்கு இலாபம் (மற்றும் இதர வருவாய்) என்னும் ஒரு அநியாய பொருளாதார முறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

மேற்சொன்ன அந்த செல்வக் குவிப்பிற்காக, உழைக்காத வர்க்கத்திற்கு என்றென்றைக்கும் தேவைப்படும் முக்கியச் சக்தி அது உழைப்புச் சக்தியாகும். அந்த உழைப்புச் சக்தியை மிகவும் மலிவாகக் கைப்பற்றுவதற்கும், மற்றும் நிரந்தரமாக அந்த உழைக்கும் வர்க்கம் தமது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், உழைக்கும் அடிமைகளாகவும் இருப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை இந்த தனியுடைமை அமைப்பு தோற்றுவித்தது, தோற்றுவிக்கிறது, பழையதைப் புதுப்பித்து நீட்டித்துப் பயன்படுத்திக்கொள்கிறது. மனித சமூகமும், மனித உறவுகளும் அதற்கேற்ற வகையில் கட்டமைக்கப்படுகிறது. அதைத்தான் நாம் சமூக மதிப்பீடுகள், பண்பாடு, மத நம்பிக்கை, ’நல்லதொரு’ சமூக அமைப்பு என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

மனித வாழ்வில் பிரதானப் பங்கு வகிக்கும் இந்தப் பொருளாதாரச் செயல்பாட்டை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனென்றால் நிலவுகின்ற சமூக அமைப்பை இயல்பானதென்றோ, இதுவே சாஸ்வதமென்றோ கருதுவதன் மூலம் நாம் அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்பதோடு, நம்மைப் போன்ற உழைக்கும் வர்க்கத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கி, சுரண்டி வாழும் ஒரு பிரிவின் செல்வக் குவிப்பிற்கு உழைத்துக் கொட்டும் பொருளாதார அடிமைகளாகவே வாழ்ந்து மடிவோம், நம் பிள்ளைகளை, அடுத்து வரும் தலைமுறைகளை உழைக்கும் அடிமைகளாகவே பிழைத்திருக்க விட்டுச் செல்வோம் என்றாகும்.

மனித சமூகத்தை, மனித உறவுகளை இந்தப் பொருளாதார அமைப்போடு (உற்பத்தி நடைமுறை) புரிந்துகொள்ளும்போது, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கான காரணங்கள் நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். எந்த ஒரு பிரச்சினையும் தனித்ததல்ல, ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகவே நிலவும் இந்த தனியுடைமை செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட சுரண்டல்வாத சமூக அமைப்பை ஒழிப்பதன் மூலமே நாம் உண்மையான சுதந்திரம் பெற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும்  புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் பொது எதிரியை அடையாளம் கண்டு, சரியான செயல்திட்டத்தை வகுத்து முன்னேற முடியும்.

அந்தவகையில், உழைக்கும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த பலவித ஏற்பாடுகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கமைப்புகள் தோன்றியது என்று பார்த்தோம். அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகியவை அந்த ஏற்பாடுகள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நான்கில், அரசு, இராணுவம், நீதித்துறை என்பது வெளிப்படையாகத் தெரியக்கூடிய நிர்வாக இயந்திரமாக இருக்கிறது. மதம் என்னும் அந்த நிறுவனம் மட்டும் ஏதோ இயல்பிலேயே தோன்றிய ஒன்றாகவும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் ஆசீர்வாதம் பெற்ற புனிதர்கள் வகுத்துக்கொடுத்த நன்னெறி என்றும் நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கிலும் இதுவே நிலைமை.

இதில், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள், சடங்கு, சம்பிரதாயம், போன்ற பழக்க வழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் பொதுவாக இருப்பினும், இந்தியாவில் மட்டும் மதத்தின் ஒரு கோட்பாடாக சாதி என்னும் பிறப்பின் அடிப்படையிலான தகுதியை வரையறுக்கும் படிநிலை ஏற்பாடு ஒன்று நிலவுகிறது. பல்வேறு தத்துவங்களோடு, இந்த சாதி என்னும் கோட்பாட்டையும் உள்ளடக்கியதே இந்தியாவின் மதம் என்று சொல்லப்படும் இந்து மதமாகும்.

வர்க்க சமுதாய தோற்றத்தில் ஒடுக்கும் வர்க்கமானது ஒடுக்கப்படும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த மதத்தை மிக முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தியது, அது இன்றைக்கும் தொடர்கிறது.

உற்பத்தி நடைமுறையின் வளர்ச்சியில் உற்பத்திச் சாதனங்களை (கருவிகளையும்) தனி உடைமையாகக் கொண்ட எஜமானர் வர்க்கம், அதற்கு உழைத்துக் கொடுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு இடைப்பட்ட வர்க்கமாக ‘மேய்க்கும்’ (மூளை உழைப்பு மூலம் நிர்வாகம் செய்யும்) கூட்டம், வணிகத் தொழில் செய்யும் கூட்டம், தரகுத் தொழில் செய்யும் கூட்டம், பகுதியளவு உற்பத்தி சாதனம் கொண்டு சிறு, குறு உற்பத்தியாளர்களாக இருக்கும் கூட்டம் என்று பலவேறு பிரிவுகள் உருவானது. இப்படி பல்வேறு தொழில்கள், வர்க்கக் குழுக்கள் உருவானதோடு, கலப்புகளும் நிகழ்ந்தன. பண்பாட்டு கலப்புகள், நம்பிக்கைக் கலப்புகளும் இதில் நிகழ்வது யதார்த்தமே.

இப்போக்கில், அரசும், மதமும் உருவாகும்போது, ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற ஒழுங்கமைப்பிற்காகவும், உற்பத்திப் பெருக்கத்திற்காகவும் சில நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மதத்தின் பெயரால் உருவாக்கப்படும்/இணைக்கப்படும் போது குறிப்பிட்ட பிரிவொன்று அதற்கு மூளையாக இருந்து அரசு-சமூக-மதக் கொள்கைகளை வகுக்கவும், அதற்குத் தலைமை தாங்கவும், வழிகாட்டவும், சில சட்டதிட்டங்களைப் படைக்கும் பொறுப்பைப் பெறுகிறது. அரசு நிர்வாகம் மற்றும் சமூக ஒழுங்கிற்காக இந்தியாவில் அத்தகைய கொள்கைகளை வகுப்போராக/தொகுப்போராக புரோகிதர் கூட்டம் என்று அறியப்படும் பிராமணக் கூட்டம் இருந்ததாக வரலாறு நமக்குச் சொல்கிறது.

நிலவிய சமூக-அரசியல்-பொருளாதார அமைப்புக்கு ஏற்ற வகையில் அரசுடன் இணைந்து இந்தப் பிராமணியக் கூட்டம் தொகுத்தும், படைத்தும் கொடுத்த மதச் சித்தாந்தங்களே இன்றைக்கு இந்து மதமாக அறியப்படுகிறது. அந்த சித்தாந்தமானது சமூக-அரசியல்-பொருளாதார மட்டத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதே இன்றைக்கும் தொடரும் வரலாறு.

பிராமணிய இந்து மத சித்தாந்தத்தின்படி ‘இந்திய மனிதர்கள்’ (மட்டும்) ஆன் பெண் உறவின் காரணமாகப் பிறக்காமல் ஒரு ஆண் கடவுளின் நெற்றியிலிருந்தும் (பிராமணர்கள்), தோளிலிருந்தும் (சத்திரியர்கள்), தொடையிலிருந்தும் (வைசியர்கள்), பாதத்திலிருந்தும் (சூத்திரர்கள்) பிறந்தார்கள். (பின் எப்போது அவர்கள் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் மனிதர்கள் ஆனார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்). ஆகவே, அப்பிறப்பின் அடிப்படையில் அவரவருக்கென்று ஒரு தகுதி இருக்கிறது. ஒரு மரபு இருக்கிறது - அது நால் வர்ணக் கோட்பாடு என்று தோன்றி இன்று அது சாதியாக இறுகி நிற்கிறது.

பிராமணிய இந்து மதச் சாதியமைப்பின்படி பிராமணர்கள் உயர்ந்தவர்கள், அவர்களுக்குக் கீழ் சத்திரியர்கள், பின் வைசியர்கள், பின் சூத்திரர்கள். ஆனால் இந்த நால் வர்ணத்தார்க்கும் கீழாக ஒரு சாதி அல்லது பிரிவாக இருப்பவர்கள் பஞ்சமர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் பிறப்பிலேயே மிகவும் ‘கீழானவர்கள்’ என்றும், ‘தீண்டப்படாதவர்கள்’ என்றும் வரையறுக்கப்பட்டு, கடுமையான கொடுமைகளுக்கு உள்ளானார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. 

இந்துமத சாதியமைப்பின்படி, இந்த படிநிலை அமைப்பின் கீழ் பிறப்பின் அடிப்படையில் இன்னார்க்கு இன்ன தொழில் எனும் உழைப்புப் பிரிவினை வகுக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு ‘சுத்தமான’ உழைப்பும் (உடல் மற்றும் மூளை உழைப்பு), கீழ் அடுக்கில் உள்ளவர்களுக்கு ’அசுத்த’ உழைப்பும் (கடுமையான மற்றும் அசுத்த உழைப்பு) பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வர்க்கப் பிளவின் முக்கியக் கூறாக இருக்கும் இந்த உழைப்புப் பிரிவினையை திட்டவட்டமாக நடைமுறைப்படுத்த உதவுவது சாதியமைப்பாகும். ஆனால் இந்து மதம் என்னும் அச்சாரத்தோடு இயங்குவதால், இதில் நிலவும் உழைப்புப் பிரிவினை எனும் ஏற்பாடு புரிந்துகொள்ளப்படாமல், ஒடுக்குமுறை வடிவங்களான தீண்டாமை, சமூக விலக்கு, இன்ன பிற சமூகக் கொடுமைகள் மட்டுமே சாதி என்றும், அது தனித்ததொரு பிரச்சினை என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதம் மற்றும் இன்னபிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் தனியுடைமை பொருளாதாரத்திற்கு ஏற்ற சமூக-அரசியல் கட்டமைப்புகளே காரணமாக இருக்கின்றன.

அதாவது உழைப்புச் சுரண்டல் மூலம் பெருத்த இலாபம் ஈட்டி செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு என்று பொருள். ஆகவே, சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதச் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் என அனைத்துப் போராட்டங்களும், நீண்டகாலப் போக்கில் வர்க்கப் போராட்டப் பாதையில் இணைந்து - நிரந்தரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த – தனியுடைமையை ஒழித்து பொதுவுடைமையை நிறுவுவதாக இருக்க வேண்டும் என்பதே மார்க்சிய வழிகாட்டுதல்.

இவ்வாறாக, கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும். இது ஆளும் வர்க்கத்திற்கே சாதகமாக அமையும். இந்தப் புரிதல் இன்றியே முற்போக்குத் தலைவர்களில் பலரும் தங்களின் அடையாளம் சார்ந்த பிரிவினரின் விடுதலையைப் பற்றி மட்டுமே கவலை கொண்டு அதற்கான போராட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பிரிவினைவாத மனநிலைக்குள்ளாகி பாதை மாறிப் போய்விடுகிறார்கள். தலித்தியம் என்பது அத்தகையதொரு அடையாள அரசியல் போக்காகும். அம்பேத்கரை முன்வைத்து இந்த பிரிவினைவாத பூர்ஷுவா அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.   ஆகவே, அம்பேத்கரின் சிந்தனைகளை பகுத்தாய்வது அவசியமாகிறது. அம்பேத்கரின் சீர்திருத்தவாதம், பௌத்த மதமாற்றம் மற்றும் அரசியல்-பொருளாதார பரிந்துரைகள் ஆகியவை உண்மையிலேயே தலித் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரக்கூடியதா என்பதை கேள்விக்குள்ளாக்குவதென்பது, தலித்தியத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாத பூர்ஷுவா அரசியலை அம்பலப்படுத்துவதென்பதாகும். 

சுதந்திர போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி கொண்டதன் காரணமாகவும், ஜான் டூயி போன்ற ஃபேபியன் சோஷலிசப் பொருளாதார வல்லுனர்களின் தாக்கத்திற்கு உள்ளானதாலும் அம்பேத்கர் மார்க்சியம் பற்றிய தவறான புரிதல்களை வளர்த்துக் கொண்டார் எனலாம். அதன் விளைவாக, மார்க்சியம் தலித் மக்களுக்கு எதிரானது என்று எதிர்மறையாக சித்தரிக்கும் அளவுக்கு சென்றார். இந்த மரபின் தொடர்ச்சியாக தலித் அரசியல் என்னும் அடையாள அரசியல் உருவாகி, இன்றைக்கு தலித் பூர்ஷுவா அரசியலாக உருமாறி நிற்கிறது. தலித் மக்களுக்கு சில சலுகைகளை, நிவாரணங்களைப் பெற்றுத் தருவது, பூர்ஷுவா பாராளுமன்ற அரசியலில் பங்குபெறுவது, சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமைக்கு எதிராக ஆங்காங்கே சிலப் போராட்டங்களை நடத்துவது என்பதைத் தாண்டி இந்த அரசியல் தலைமைகளிடம் சாதி ஒழிப்பிற்காக எந்த செயல்திட்டமும் இல்லை.

அம்பேத்கரியம் என்னும் கோட்பாட்டின்படி சாதி ஒழிப்பு மற்றும் தலித் விடுதலை என்று சொல்லும் இத்தலைவர்கள் மற்றும் தலித் பூர்ஷுவா அறிவுஜீவிகள் அதன்படி சாதி ஒழிப்பு எப்படி சாத்தியம் என்று விளக்குவதில்லை. ஆனால், சாதியப் பிரச்சினைக்கான தீர்வு அம்பேத்கரிடம் உள்ளது, சாதி ஒழிப்பு உள்ளிட்ட நூலில் உள்ளது என்று இவர்கள் கூறிவந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பு கருத்துகளை பரப்பி, உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் வேலையில் தீவிரமாக செயல்பட்டுவந்தனர். ஒருகட்டம்வரை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நேரடியாக வெறுப்பு பாராட்டி வந்த இந்த தலித் அடையாள அரசியலானது பின்னர் சூழ்நிலைக்கேற்ப கம்யூனிஸ்டுகளோடு இணைந்தும், தனித்தும் செயல்பட்டு வருகின்றது. ஆனால், அடிப்படையில் இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது, சாதி ஒழிப்பிற்கு மார்க்சியத்தில் தீர்வில்லை, அம்பேத்கரிடம் மட்டுமே தீர்வு இருக்கிறது என்பதே தலித் அரசியல் கோட்பாடாகும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய அறிவுஜீவிகள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளனர். மார்க்சியத்தை முன்வைத்து அம்பேத்கரின் சிந்தனைகளை, அவரது போராட்ட வழிமுறைகளை விமர்சித்து பல நூறு விமர்சனங்கள் வந்துள்ளன. அந்தப் பின்னணியில் வெளிவந்ததே ரங்கநாயகம்மா எழுதிய சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூல்.

ஆனால், மற்ற எந்த நூல்களும், விமர்சனங்களும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை இந்த நூல் எதிர்கொண்டுள்ளது. ரங்கநாயகம்மா நூலுக்கு தொடர்ச்சியாக சில விவாதங்களை பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்நூல் தொகுப்பு. வாசிப்பு வசதி கருதி பெரிய பாராக்களை உடைத்திருக்கிறேன்.

கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்து ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அர்விந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன். நேரம் கிடைப்பதைப் பொறுத்து மற்றக் கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம், அல்லது வேறு யாரேனும் மொழிபெயர்த்துக் கொடுத்தால், அடுத்தப் பதிப்பில் அதை சேர்த்து வெளியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

                                                                                                      - கொற்றவை

No comments:

Post a Comment