Jun 22, 2020

சட்டங்களால் சாதி ஆதிக்கத்தை, ஆணவக் கொலைகளை தடுக்க இயலாது!

வழக்கம் போல ஆணவக் கொலைகளைத் தடுக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்னும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன!


தொட்டதற்கெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறதென்று தெரிந்துதானே இங்கே எல்லா குற்றங்களும் நடக்கின்றன!

 

பொதுபுத்திதான் இதை நல்லவர் கெட்டவர், ஊழல், இலஞ்சம், ‘விலைக்கு வாங்கிவிட்டார்கள்’ என்று பார்க்கிறதென்றால் முற்போக்கு அரசியல் சக்திகளும் அப்படி பார்ப்பது வியப்பாக உள்ளது!

 

சட்டங்களால் குற்றங்களைத் தடுக்க இயலும், நீதி கிடைக்கும் என்றால் இந்நேரம் இந்தியா ஒரு பொற்காலத்தை எட்டியிருக்க வேண்டுமல்லவா?

 

"நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டவை. மக்களுக்காக அல்ல" - கார்ல் மார்க்ஸ்.

 

வர்க்க முரண்பாடுகளின் விளைவாக தோன்றியதே அரசு! அதன் பாகங்கள் நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் மற்றும் சிறைச்சாலை என்கிறார் லெனின்…

இதன் பொருள் என்னவென்று கூட விளங்கிக்கொள்ள மனமின்றி, கம்யூனிஸ்டுகள் எப்போதும் வர்க்கத்தையே பேசிக்கொண்டிருப்பார்கள் என்று இன்னமும் எதிர்திசையில் தள்ளப் போகிறீர்களா?

 

ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவும் உற்பத்தி முறைக்கு ஏற்ற சட்டதிட்டங்களும், பண்பாடும் தோன்றும். அது ஆளும் வர்க்க அதாவது சொத்துடைமை வர்க்கத்தின் நலன் காக்கவே என்பதைத்தான் காலம் காலமாக கம்யூனிஸ்டுகள் கத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்ப்பனர்கள் / துரோகிகள் / கற்பனாவாதிகள் என்று சொல்லி சொல்லி சட்டவாதம் பேசி என்ன மாறியுள்ளது? கம்யூனிஸ்டுகள் பேசும் வர்க்க அரசியலில் என்றாவது சாதி எதிர்ப்பை, பார்ப்பனிய எதிர்ப்பைக் கைவிட்டோ, இதர ஆதிக்கங்களை ஆதரித்தோ, தாங்கியோ பேசியுள்ளார்களா என்ன?

 

தயவு செய்து சாதியும் வர்க்கமும் கை கோர்க்கும் இடத்தை உணர முற்படுங்கள். அது சொத்துடைமை, தனியுடைமை, நிலவுடைமை, முதலாளித்துவம் என்னும் அமைப்புமுறையின் அடித்தளம். சாதி ஒருவிதமான படிநிலை அமைப்பு பாலினம், மதம், இனம் உள்ளிட்ட அனைத்து அடையாள அடிப்படையிலான மேலாதிக்கமும், உழைப்புப் பிரிவினையும், ஒதுக்கலும், ஒடுக்குமுறையும் அப்படியே.

ஆனால் அவை தோன்றியது வர்க்க முரண்பாட்டிலிருந்தும், செல்வக் குவிப்பிற்காகவுமே. இதை விளங்கிக்கொள்ள பெரிய சவால் ஏதும் இருக்கிறதா? வர்க்க முரண்பாட்டினால் விளையும் கொந்தளிப்புகளை, புரட்சியை ஒடுக்க தோற்றுவிக்கப்பட்டதே அரசு, காவல்துறை, இராணுவம், மதம் ஆகிய நிறுவனங்கள். பண்பாடும் அதிலிருந்தே.. அதாவது உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்தே உதிக்கிறது… இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை…

 

பெண்கள் அன்றாடம் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகிறார்கள். அதற்காக ஆணாதிக்கத்தை ஒழித்துவிட்டு வர்க்கப் போராட்டம் நடத்துங்கள் என்று எப்படி சொல்ல இயலாதோ அதேபோல் தான் சாதியை ஒழித்துவிட்டு வர்க்கப் போராட்டத்தைப் பேசுங்கள் என்று சொல்வது புரிதலற்ற நிலை.

எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அந்த தொடர்பு புள்ளியை தான் மார்க்சியம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கம்யூனிஸ்டுகளும் புரிய வைக்கப் போராடுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதே சாதி ஒழிப்பில் நிலவும் பின்னடைவுக்கு காரணம் என்பதை இந்த நிலையிலாவது தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள்.

 

சாதி வெறியால் தலித்துகளின் உயிர்கள் இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுகையில், நீதி மறுக்கப்படுகையில், தலித்துகள் மீது வன்முறை ஏவப்படுகையில் “இப்போதாவது இவர்கள் இந்த தனி உடைமை அமைப்பின் குரூரத்தை விளங்கிக் கொள்ள மாட்டார்களா” என்றே நெஞ்சம் பதைபதைக்கிறது.

தலித் மக்களைக் காக்க இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக நீதிக்கான போராட்டங்களோடு நின்றுவிடாமல் சாதியமைப்பின் அடித்தளத்தை தகர்த்திடுவதற்கான பாதை எது என்பதை தலித்திய அறிவுஜீவிகளும், தலித்திய அரசியல் செயல்பாட்டாளர்களும் இனியாவது கண்டுணர்வது அவசியம். பெண்களைக் காக்கவும், சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கவும் கூட அது அவசியமாகிறது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணுக்குத் தெரியாமல் உயிர்களை விழுங்கிக் கொண்டிருக்கும் கொடிய வறுமையை இன்னும் இதர ஒடுக்குமுறைகளை, சுரண்டலை ஒழிக்க சட்டத்தில் வழியில்லை தோழர்களே! இதனால் எல்லாம் பாதிக்கப்படுவது அனைத்து சாதி மக்களும் தான்...

 

இது ஒரு மன்றாடலே! தலித் மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்காகவும்!

 


No comments:

Post a Comment