Jun 19, 2020

பெண்ணியம்: ஆணாதிக்கத்திற்கு அப்பால்…



ஒடுக்கப்பட்டவர்களை அரசியல்மயப்படுத்துவதென்பது, அவர்களோடு உரையாடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் தமக்கும், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் விடுதலை பெற்றுத்தர தேவைப்படும் அறிவினை வழங்குவது என்பதாகும். இவ்வகையில், ஒடுக்கப்பட்ட இனமான பெண்களுக்கு அவர்களது உரிமைகள் குறித்து அறிவூட்டுவதும், பாலின சமத்துவத்திற்காகப் போராட போதிப்பதும் பெண்ணியம் என்றழைக்கப்படுகிறது. இருப்பினும், தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று உணர்ந்து அதற்கெதிராகப் போராடும் சாதி, இனம், வர்க்கம் போன்ற மற்ற விடுதலை இயக்கங்கள் போல் அல்லாமல், பெண் விடுதலை இயக்கங்கள் நூதனமான ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது: பெண் அடிமைத்தனம் என்பது இயற்கையானது என்று விதைக்கப்பட்டுவிட்ட ஆழமான நம்பிக்கைகளை முதலில் தகர்த்தெரிய வேண்டியுள்ளது.
எதிர்பாலின மற்றும் குடும்ப உறவென்பது மனித வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. இருப்பினும், மாபெரும் சமூக அமைப்பின் அச்சிறிய செயல்பாடானது, ஏற்றத்தாழ்வு நிறைந்ததாகவே உள்ளது. ஆண் பெண் உறவுகளில், பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது, அதனால் பெண்கள்இரட்டை ஒடுக்குமுறைக்குஉள்ளாகிறார்கள். ஒன்று குடும்ப மட்டத்தில், மற்றொன்று சமூக மட்டத்தில். இந்த சவாலானது மற்ற விடுதலை இயக்கங்களைக் காட்டிலும் அதிகளவிலான உள் முரண்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆண் பெண் உறவில் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணாதிக்க மனோபாவத்தின் விளைவாக, பெண்களே கூட ஆணாதிக்கத்தை மறுப்பவர்களாக இருக்கின்றனர். பெண்களுக்குள் காணப்படும் இந்த உள் முரண்பாட்டை நாம்பழகிவிட்ட அடிமைத்தனம் என்று சொல்லலாம். சமூகமயமாக்கலில், ஆண்கள் மேலானவர்களாகவும், பெண்கள் கீழானவர்களாகவும் மாற்றப்பட்ட ஒரு நடைமுறையின் மூலம் அடிபணிதலை பெண்மைத் தன்மை என்று கருதும் விதமாக பெண்கள் பழக்கப்படுகின்றனர்.
பாலின ஒடுக்குமுறையை புரிந்துகொள்வதற்கான ஒரு முறையாக ஆணாத்திக்கம் எனும் சித்தாந்தத்தை பெண்ணிய இயக்கங்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தன. 1980களின் இறுதியில் இச்சித்தாந்தத்தில், ஊடறுக்கும் கருத்தாக்கங்கள் (intersectionality theory) எனும் சித்தாந்தம் கவனம் பெற்றது. க்ரென்ஷாவின் கோட்பாடானது பெண்கள் மீதான அமைப்புரீதியான ஒடுக்குமுறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது என்றும், ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையது என்றும், இனம், பாலினம், வர்க்கம், திறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தாக்கத்திற்கு உட்பட்டது என்றும் முன்வைத்தது. இருப்பினும், பெண் ஒடுக்குமுறை குறித்த இந்த பரந்த அளவிலான ஆய்வுகள் வர்க்க முரண்பாட்டின் பாத்திரத்தை ஒப்புக்கொள்ள பெரும்பாலும் மறுக்கின்றன. ஆனால் வர்க்கப் பார்வையானது இன்றைய அமைப்புச் சூழல் பற்றிய கட்டமைப்பை விளக்குவதுடன் எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயமானது எந்தக் கட்டுமானத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
எந்தவொரு ஒடுக்குமுறை வடிவமும் இரண்டு தளங்களில் நிகழ்கின்றன, ஒன்று கருத்தியல் தளம் மற்றொன்று பொருளாயத தளம். இதனை அடியொட்டி நாம் ஒடுக்குமுறை எனும் பிரச்சினையை ஆய்வு செய்வோமானால்ஆணாதிக்கம், இனம், மதம், சாதி, திறன், குடியுரிமை, பாலியல் தேர்வு, கலாச்சாரம் போன்றவைஒடுக்குமுறைக்கான கருத்தியல் வடிவங்கள் என்பதும், வர்க்க ஒடுக்குமுறை என்பது பொருளாயத அடிப்படையிலானது என்பதும் விளங்கும். இருப்பினும், கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறையிலும் பொருளாயத பின்விளைவுகள் இருக்கும், ஏனென்றால் மேலாதிக்கத்தின் தோற்றுவாயே பொருளாயத அடிப்படையிலானது, அவ்வமைப்பிற்குள் பொதிந்திருக்கும் அதிகார உறவுகளானது மேல்மட்டத்தில் பிரதிபலிக்கின்றது. மேலாதிக்கம், ஆளும் வர்க்கத்தின் பொதுப்படுத்தும் விதிமுறைகளும், அதன் விளைவான ஆளும் வர்க்க அதிகாரத் தொடர்ச்சியும் வாழ்வனுபவத்தின் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது.
விடுதலைக்கான பெண்ணிய போராட்டமானது ஒடுக்குமுறையை மையப்படுத்தி இருக்கவேண்டுமே ஒழிய, பாலினத்தை மட்டும் மையப்படுத்தி இருக்கக்கூடாது. ஆகவே அது பாலின ஒடுக்குமுறைக்கு அடித்தளமாய் இருக்கும் பொருளாயத நிலைமைகளை புறக்கணிக்கவியலாது. ஆனால், முதன்மை அல்லது அடிப்படை பிரச்சினை என்று அவரவரின் குறைபட்ட பார்வையினால், நாம் குறுகிய அணுகுமுறைகளையே காண முடிகிறது. இந்த முற்சார்பானது ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒரு தனித்த பிரச்சினையாகக் கருத வழிகோலும், அதன் விளைவாக, பல்வகை ஒடுக்குமுறையினை பிணைக்கும் மூல காரணத்தை அடையாளம் காணத்தவறிவிடும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, தமக்குள்ளாகவும், மற்ற இயக்கங்களோடும் முரண்பாடுகளும், பகைமையும் வளர்ந்து, பெரும்பாலும் அது சுய-விரக்தியில் சென்று முடிகிறது.
பெண் வெறுப்பு குறித்து இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பதால், நான் இந்தக் கேள்வியை கேட்கிறேன்: “தந்தை வழிச் சமூகம், அதாவது ஆணாதிக்க அமைப்பு ஒழிக்கப்பட்டுவிட்டால் இனரீதியான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, மதவாத ஒடுக்குமுறை மற்றும் திறன், பாலியல் தேர்வின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் களையப்பட்டுவிடுமா?”
இல்லை. இல்லவே இல்லை! மேலும், அகவாத கண்ணோட்டத்தினால் சமூகப் பாகுபாட்டின் வேரை நம்மால் அடையாளம் காணவும் முடியாது, அதனால் கருத்தியல்ரீதியான உருமாற்றங்கள் நிகழக் காரணமாய் இருக்கும் அடித்தளத்தை மாற்றியமைக்கும் முயற்சி சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. ஒவ்வொன்றாய் களைவோம் என்று நாம் முடிவெடுத்தால், தன்னளவில் அது பெரும் பின்விளைவுகளையும், முரண்களையும் கொண்டதாகிப் போகும். மேலும், அடித்தளம் மாறாத நிலையில் மேலாதிக்கமானது உருமாறிக்கொண்டே இருக்கும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு அது மேலெழும்.
ஒடுக்குமுறை, மேலாதிக்க அதிகாரமையமென்பது தொன்றுதொட்ட காலம் முதல் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே அதன் வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன. பெண்கள் விஷயத்தில், வரலாற்று ஆய்வுகளின் துணையோடு நாம் பார்க்கையில், மனிதர்கள் குழுக்களாக, கூட்டுச்சமூகமாக வாழ்ந்து வந்தனர் என்பதைக் காணலாம். தந்தையின் இரத்த வம்சா வழி என்பது முக்கியமானதாகக் கருதப்படவில்லை என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “தொன்று தொட்ட காலங்களில்இன்னும் சில புராதன தாய்வழிச் சமூகங்களில்கூடகருத்தரிப்பில் ஆணுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றே கருதப்படுகிறது… ” 
தாய்வழிச் சமூகத்தில் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உயர்நிலையில் இருந்தனர். அவர்களும் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், இனக்குழுவிற்கு தலைமை தாங்குதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். மக்கள் எவ்வித ஒடுக்குமுறைக்கும் உள்ளாகவில்லை. இதனை நாம் புராதன கம்யூனிசம் என்கிறோம். “கம்யூனிச சமூக குடும்ப அமைப்பானது இல்லங்களில் பெண்களின் உயர்நிலையை சுட்டிக்காட்டுகிறது…. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பதை அடையாளம் காண முடியாத நிலையானது பெண்கள் பெற்றிருந்த உயர் மதிப்பை உணர்த்துகிறது…”
கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானதுஅதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானதுசந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போதுசரக்கு’, ‘பணம்குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” 
மனிதர்கள் வாழ்வதற்குபொருள்உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும்ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், அதனால் போதிக்கப்படும் பெண்ணிய சித்தாந்தம் குறித்தும் நாம் விரிவாகக் காண்போம்.
அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான்உபரி மதிப்புஎன்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.
முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:
முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர்தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி (பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள்சரக்குகளாகின்றன; உற்பத்தி சாதனங்கள்2 ‘மூலதனம்’* ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின்எஜமானர்உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.
முதலில், நாம் சமூக உறவுகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு பின்னர் தனிப்பட்ட உறவுகளை, அதாவது குடும்ப அளவிலான தனி நபர் உறவுகளை ஆய்வு செய்வோம், ஏனென்றால் இரண்டு உறவுகளிலும் காணப்படும் பிரதான முரண்பாடு: உழைப்புப் பிரிவினை.
வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்புசார் உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.
ஓர் உற்பத்தி முறையும், அதன் விளைவான சமூக ஒழுங்கும் மேலாதிக்கமும் பொருளாயத அடிப்படியிலானதாகவும் இருக்கும்பொழுது, பெண்ணியப் போராட்டத்தை வெறும் ஆணாதிக்க எதிர்ப்பு என்றோ அல்லது அத்தகைய கருத்தியல் வடிவங்களுக்கு எதிரான போராட்டமாகவோ மட்டும் தொடுப்பதென்பது போதாமை நிறைந்ததாகும். விவாதத்திற்காக, ஆணாதிக்கத்தை ஒழிப்பதன் மூலம், நாம் பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம்,
·         போரையும், பஞ்சத்தையும் நாம் எப்படி போக்குவோம்?
·         ஏழ்மையை எப்படி ஒழிப்போம்?
·         பெண் உடல் பண்டமையமாக்கப்படுவதை எப்படி ஒழிப்போம்?
செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:
1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்)3 என்று வகைப்படுத்துகிறார்.
முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:
“… வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு தோன்றியது; அதே சமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது. ஆகவே, அது பொது விதியாகவே, மிகவும் வலிமையான, பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. அந்த வர்க்கம் அரசன் மூலமாக அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. இவ்வழியிலே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களைப் பெறுகிறது.”4
அரசும் அதன் நிர்வாகக் குழுவான நீதித்துறை மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து அரசு இயந்திரங்களும் ஆளும் வர்க்க நலனுக்காகவே பணி புரியும் என்பதை எங்கல்ஸ் இங்கு தெளிவாக விளக்குகிறார். தொடர் போராட்டங்கள் துண்டு துண்டான சில சீர்திருத்தங்களைப் பெற்று தரலாம். ஆனால், முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நிலவும் வரை நாம் சமத்துவத்தை அடைய முடியாது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தர்க்கமானது பிரித்தாளும் தந்திரத்தை உள்ளடக்கியது, அப்போதுதான் அடிமட்ட கூலி பெறும் கீழ் வர்க்கம் எனும் ஒரு நிரந்தர பின்தங்கிய வர்க்கத்தை அப்படியே வைத்திருக்க முடியும்.
இது பொருளாதார நிர்ணயவாதம் என்றும் ஆணாதிக்கம் மற்றும் ஒடுக்குமுறையின் மற்ற வடிவங்கள் அனைத்தும் வர்க்கப் பகைமை உருவாகும் முன்பே உருவானவை என்றும் வாதிடுவோர் ஏற்றத்தாழ்வில் தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் தொடர்பை நிராகரிக்கின்றனர் என்றே சொல்ல முடியும். பெண்கள், கறுப்பினத்தவர், மாற்றுப் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய அனைவரும் குறைவான (அடிமட்ட) கூலி பெறும் பிரிவினராவர். அதேபோல் கூலி உழைப்பில் ஈடுபடாது வீட்டு உழைப்பில் மட்டுமே முடக்கப்பட்ட இப்பிரிவின் ஒரு பகுதியினர் ஏழ்மையில் மூழ்கி துன்புறுகின்றனர் அல்லது வேலையின்மை காரணமாக பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.
மேற்சொன்ன வாதங்களிலிருந்துகூட்டுச் சமூக வாழ்விலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், அதன் பின் முதலாளித்துவம் என்று உருமாறி நிற்கும் சமூகத்தின் வளர்ச்சியானது இலாபம், தனிச் சொத்து வடிவிலான செல்வக் குவிப்பு எனும் இலட்சியத்தை கொண்ட ஒரு நவீன அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த அணுகுமுறையைக் கொண்டு நாம் ஆணாதிக்கத்தின் ஆணி வேரை தேடிச் செல்வோமானால், சரக்கு உற்பத்தியின் விதிகளும், உற்பத்தி சாதன உடைமையாளர்களிடம் குவிந்த செல்வத்தின் விளைவான அதிகாரமும் ஆண் பெண் சமத்துவத்தைக் குலைத்தது என்பது விளங்கும். குடும்பம் என்பது சமூகத்தின் பொருளாதார அலகாகிப் போனது, அதில் உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி முறைகளுக்கு ஏதுவானதொரு உழைப்புப் பிரிவினை உருவானது. பொருளுற்பத்தி மற்றும் புதிய உழைப்புச் சக்தியின் உற்பத்தி இரண்டையும் பிரதான செயல்பாடாகக் கொண்ட அதில் பாலின பேதத்தின் அடிப்படையிலான ஒரு உழைப்புப் பிரிவினை உருவானது. “அன்று குடும்பத்தில் நிலவிய உழைப்புப் பிரிவினையின்படி, உணவையும் அதற்குத் தேவையான கருவிகளையும் பெறுவதும் அதன் விளைவாக, அவற்றின் உடைமையாளராக இருப்பதும் ஆணின் பொறுப்பாக இருந்தது…”5 உற்பத்தி சாதனங்கள் பரிபோன நிலையில், பெண் ஆணைச் சார்ந்து வாழும் நிலை உருவானது.
உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில், உற்பத்தியில் ஈடுபடாத சிலர் உற்பத்தி சாதன அபகரிப்பில் ஈடுபட்டனர், அதன் விளைவாக மூன்றாவது வகையான உழைப்புப் பிரிவினை ஒன்று உருவானது. “இங்கு, இப்போது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு வர்க்கம் முதன் முறையாக உதிக்கிறது, அது உற்பத்தி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதோடு, உற்பத்தியாளரையும் அதன் விதிகளுக்கு கீழ்படியும் நிலைக்குத் தள்ளுகிறதுஇரு தரப்பையும் சுரண்டுகிறது”6. இவ்வாறாக, ஆண்கள், அல்லது உற்பத்தி சாதனங்களின் அப்போதைய உடைமையாளர்கள் உற்பத்தி சாதனங்கள் பரிக்கப்பட்டவர்களாக, நிலப்பிரபுத்துவத்தின் கீழ் அடிமை உழைப்பாளிகளாக மாற்றப்பட்டனர், பின்னர் முதலாளித்துவத்தின் கீழ் அவர்கள் கூலி உழைப்பாளிகளாக்கப்பட்டனர். “இவ்வாறாக, முதலாளித்துவ அமைப்பிற்கான பாதையை வழியமைத்துக் கொடுத்த அந்த நடைமுறையானது, உழைப்பாளியிடமிருந்து அவனது உற்பத்தி சாதனங்களை பரித்த நடைமுறையாக அல்லாமல் வேறாக இருக்க முடியாது; ஒருபுறம், வாழ்வாதாரத்திற்கான சமூக வழிமுறைகளும், உற்பத்தி வழிமுறைகளும் மூலதனமாக மாற்றப்பட்டன, மறுபுறம், அப்போதைய உற்பத்தியாளர்கள் கூலி உழைப்பாளிகளாக மாற்றப்பட்டனர்”8
உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களின் இலாப வெறியானது அபகரிப்பு, அடிமைபடுத்துதல் மற்றும் நிறுவனமயமாக்குதல் மூலம் வீட்டில் முடக்கப்பட்டவர்களான பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்வதையும், ஆண்கள் உற்பத்தி சாதன உடைமையாளர்களைச் சார்ந்து வாழும் நிலைமையையும் உருவாக்கியது, இந்த உறவுமுறையானது மேலாதிக்கம் நிறைந்ததாக நிலைபெற்றது. உற்பத்தி உறவுகளிலிருந்து வேறூன்றிய இந்த மேலாதிக்கமானது அனைத்து மனித உறவுகளிலும் (உ.ம். சாதி) பிரதிபலிக்கின்றது.
இதன் அடிப்படையில் நாம் பெண் அடிமைத்தனத்தையும், அதனைப் பிணைக்கும் சமூக கருத்தியல் வகைப்படுத்துதலையும் ஆய்வு செய்வோமெனில் பொருளாதார சூழ்நிலைமைகளும், அதன் தொடர்ச்சியான சமூக ஒழுங்குமே அடிமைபடுத்துதலுக்கான மூலகாரணமாக இருக்கின்றது என்பது மீண்டும் தெளிவாகிறது. இந்த வகைப்படுத்தலானதுஉழைப்புச் சக்திகளை பல்வேறு வகைகளில் மதிப்பீடு மற்றும் மதிப்பிறக்கம் செய்வதானதுஉழைப்புச் சகதியை மலிவாகக் கைப்பற்றவும், அதன் மூலம் செல்வக் குவிப்பை மேற்கொள்ளவும் வகை செய்கிறதுமேலும், ஆணாதிக்கம் மற்றும் முதலாளித்துவம் என்று வெளிப்படும் அதிகார உறவுகளின் கீழ்பெண்ணானவள், அவளது உற்பத்தி சக்தியோடு உழைப்புக்கான ஒரு பண்டமாக மதிப்பிறக்கம் செய்யப்படுகிறாள்; அவள் ஒரு உற்பத்தி அலகாகஉழைப்பாளரை பராமரிப்பதன் மூலம் உழைப்புச் சக்தியை புனரமைக்கும் பொறுப்புடைய, குழைந்தைப் பேறு மூலம் புதிய உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்யும் பொறுப்புடையஉறபத்தி அலகாக மாற்றப்படுகிறாள்.
இவ்வாறாக, மூல காரணத்தை, குறைந்தது ஆணாதிக்கத்தின் வினையூக்கியை நாம் இப்போது ஆய்வு செய்துவிட்டபடியால், “மலிவான கூலிக்காகவும், அவளது மறு உற்பத்தி சக்திக்காகவும் பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தும் அத்தகையதொரு மேலாதிக்கத்தை ஒழித்துக்கட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?”
பதில்: முதலாளித்தும் – உற்பத்தி சாதனங்களை அபகரித்த, செல்வப் பசியோடு நம்மையெல்லாம் அடிமைப்படுத்திய, உற்பத்தி சாதனங்களற்று சார்ந்து வாழும் நிலையை உருவாக்கிய, உழைப்பை அந்நியப்படுத்திய, பாலினம், இனம், தேசம், பாலினத் தேர்வு, மதம் என்று எவ்வித விலக்குமின்றி நம்மையெல்லாம் சுரண்டுகின்ற அந்த பொருளாதார அமைப்பு – தூக்கியெறியப்பட வேண்டும். உற்பத்தி சாதனங்கள் பொதுவுடைமையாக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி முறை உருவாக்கப்பட வேண்டும்.
பெண்ணியத்திற்கு மாற்றாக  மார்க்சியத்தை முன்வைப்பதல்ல எமது நோக்கம், இருப்பினும், ஆணாதிக்கத்தை மட்டுமே ஒழித்துக்கட்ட விரும்பும் பூர்ஷுவா பெண்ணியத்தைக் காட்டிலும், மார்க்சிய அணுகுமுறையானது பெற்றுத்தரக் கூடிய விடுதலையானது அனைத்து வர்க்கப் பெண்களையும் உள்ளடக்கியதாகும். பூர்ஷுவா பெண்ணியமானது ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டி, பெண்களின் தலைமையில் தனியுடமை செல்வக் குவிப்பை நிறுவ முனைகிறது. அதனால் அதில் சமத்துவம் கிடையாது. நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில்,
பெண்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்குவதால் மட்டும் அதிகார சமன்பாடு ஏற்பட்டுவிடாது. பாட்டாளி வர்க்கப் பெண் பாட்டாளி முகாமிலும், பூர்ஷுவா பெண் பூர்ஷுவா முகாமிலும் நிலைகொள்கிறாள். பூர்ஷுவா பெண்கள் இயக்கங்களின் இந்த சோஷலிசப் போக்கினால் நாம் ஏமாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது, பூர்ஷுவா பெண்கள் விடுதலை பெறும் வரையே அவ்வியக்கம் நிலைத்திருக்கும்”9
இருப்பினும், பூர்ஷுவா என்றால் முதலாளித்துவ வர்க்கம்10 என்றாலும், பூர்ஷுவா பெண்ணிய கருத்தியலானது, அதாவது ஆளும் வர்க்கக் கருத்தியலானது பெரும்பாலும் அனைத்து வர்க்கப் பெண்களையும் அரவணைக்கின்றது. அதனுடைய சுயநல அரசியலை அறியாத தொழிலாளர் வர்க்கப் பெண்கள் அதன் கருத்தியல்களில் மயங்கி தாராளவாத சிந்தனைகளுக்கு இரையாகின்றனர்.
இந்தப் புரிதலிலிருந்தும், மனிதாபிமான அடிப்படையிலான ஒற்றுமை எனும் நிலைப்பாட்டிலிருந்துமே, மார்க்சியர்கள் அனைத்து பெண்ணிய இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்த இயக்கத்திலும் ஆழமான ஆன்மீக மற்றும் தார்மீக அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. தனது சொந்த பொருளாயத தேவைக் கோருவதோடு மட்டுமன்றி, பூர்ஷுவாப் பெண்கள் ஆன்மீக ஊட்டமளிப்பையும் கோருகின்றனர். தமது தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்…. பூர்ஷுவாப் பெண்கள் மேற்கொள்ளும் பொருளாதார, அறிவார்ந்த மற்றும் தார்மீக முயற்சிகள் முற்றிலும் நியாயமானதே”11
மேலும், கார்ல் மார்க்ஸ் சொல்கிறார்,
சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் நிலவரங்களது அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதிரிப்பவர்கள் ஆவர். இந்த இயக்கங்கள் யாவற்றிலும் அவர்கள் சொத்துடைமைப் பிரச்சினையை, இதுவரை அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தலைமையான பிரச்சினையாய் முன்னிலைக்குக் கொண்டுவருகிறார்கள்.” 12
முடிவாக, ஆணாதிக்கமானது, பூர்ஷுவாக்கள் வாதம் செய்வதுபோல் பகுதியளவில் சுயாதீனமானது எனினும், இன்றைய வரலாற்று சூழலில், அது முதலாளித்துவத்தால் உட்செறிக்கப்பட்டுவிட்டது. ஒடுக்குமுறை என்பது ஒரு சுரண்டல்வாத இயங்குமுறையாகும், அதனடிப்படையில், பாலினரீதியான ஒடுக்குமுறை முதலாளித்துவத்திலும் காணப்படுகிறது. மலிவான உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதும் மற்றும் அதிக லாபம் ஈட்டுவதுமே அதன் குறிக்கோள். இந்தியச் சூழலில் அது சாதியத்தால்உழைப்புப் பிரிவினையின் மற்றுமொரு வடிவம்மேலும் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறாக ஆணாதிக்கமானது முதலாளித்துவதின் முக்கிய அங்கமாகிவிட்டது. எனவே, தனியுடமையின் அடிப்படையிலான உழைப்புச் சுரண்டல் ஒழிக்கப்பட்டு, சோஷலிச முறையிலான உழைப்புப் பிரிவினை நிறுவப்பட்டுவிட்டால் அரசு உதிர்வது போலவே ஆணாதிக்கமும் உலர்ந்து உதிர்ந்து போகும்13. ஏனென்றால், அத்தகையதொரு சமத்துவ நிலைமையில், ஆண் பெண் உறவானது இயல்பானதாக அமையும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திமுறைக்காக குடும்பமானது ஓர் பொருளாதார அலகாக இருக்கும் நிலை அப்போது இருக்காது.
முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாத்திரங்களாலும், ‘இயல்பானதுஅல்லதுஇயல்பல்லாததுஎனும் கருத்தாக்கங்களால் ஆணும் பெண்ணும் இனியும் பிணைக்கப்பட மாட்டார்கள். மாறாக, அவரவரின் தனிப்பட்ட உணர்வுத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு உறவுமுறையை அமைத்துக்கொள்ள அவர்கள் சுதந்திரம் பெற்றவராகத் திகழ்வர்”14
 இந்தப் பின்னணியில்தான் மார்க்சியப் பெண்ணியவாதிகள்,  ஆணாதிக்க எதிர்ப்பு என்னும் பென்ணியப் போராட்டம்  வர்க்கப் போராட்டப் பாதையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அத்தகைய புரட்சிகர போராட்டங்கள் பின் வரும் போராட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: 1) குடும்பத்திற்குள் சமமான உழைப்புப் பிரிவினை 2) சொத்துரிமை 3) முடிவெடுக்கும் உரிமை 4) உடல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகள் மற்றும் 5) அனைவருக்குமான, சமத்துவ முறையிலான சமூக உழைப்புப் பிரிவினை மற்றும் தனியுடைமை ஒழிப்பு.
பெண்ணின் சுயமும், பெண்ணிய அரசியலும் வெடித்துக் கிளம்பும்போது அது வர்க்க அரசியலால் நங்கூரமிடப்படாமல் போனால், சோஷலிச வர்க்கப் போராட்டத்தோடு உரையாடல் நிகழ்த்தாமல் போனால், பாட்டாளி வர்க்கப் பெண்களின் விடுதலை கேள்விக்குறியாகிப் போகும். அதனால், அனைவரையும் உள்ளடக்கியதாக பெண்ணியம் இருக்க வேண்டுமானால், சோஷலிசமே15 அதன் கலங்கரை விளக்கமாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து உருவாகும் புதியதொரு சோஷலிச சமூகமானது பாலின சமத்துவம் கொண்டதாக மட்டுமின்றி, உழைப்பு சுரண்டலற்ற சமூகமாகவும் இருக்கும். இவ்வாறாக இரட்டை உழைப்பினால் ஏற்படும் முரண்பாடுகளையும் சுமையையும் அது ஒழித்திடும். அத்தகையதொரு வாழ்வானது நிச்சயமாக மேலானதொரு16 வாழ்வாக அமையும்.
____________________
. சிமோன் தே பொவ்வா, செக்கண்ட் செக்ஸ், விண்டேஜ், 1997, பக். 39
, . எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், பக். 49
1.       கட்டுரைக்காக சுருக்கப்பட்டுள்ளது, இயற்கையில் கிடைக்கும் கச்சாப் பொருள்களும், உழைப்பும் அதில் அடக்கம், ஆனால் உழைப்பு என்பது சுதந்திரமானது.
2.      மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் இதை விரிவாக விளக்குகிறார்.
4.      5, 6, எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், முன்னேற்றப் பதிப்பகம் (பக். 55, 162)
1.       கார்ல் மார்க்ஸ், மூலதனம், தொகுதி 1, பக். 668
2.       
1.       கிளாரா ஜெட்கின், https://www.marxists.org/archive/zetkin/1896/10/women.htm
2.      எங்கல்ஸின் விளக்கப்படி: பூர்ஷுவாக்கள் என்போர் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆவர். அனைத்து வளர்ந்த நாடுகளிலும், தங்கள் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உற்பத்தி சாதனங்கள், கச்சாப் பொருள்கள் மற்றும் அனைத்து கருவிகளையும் (இயந்திரங்கள், ஆலைகள்) தங்களின் தனியுடமையாகக் கொண்டிருப்பவர்கள்; ‘நவீன வர்க்க முதலாளிகளாக, சமூக உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள் மற்றும் கூலி உழைப்பாளிகளை அமர்த்தி உழைப்பை விலைக்கு வாங்குபவர்கள்…. இந்தப் பொருளில், பூர்ஷுவாக்கள் என்போர் பொருளாதார ரீதியாக ஆதிக்க வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், அவர்களே அரசு இயந்திரத்தையும், பண்பாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துபவர்கள், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானவர்களாகவும், முரண்பட்டவர்களாகவும் இருப்பவர்கள்…”, டாம் பாட்டம்மோர், மார்க்சியச் சிந்தனை அகராதி, மாயா பிளாக்வெல் பதிப்பு, பக். 36
3.       
1.       கிளாரா ஜெட்கின் https://www.marxists.org/archive/zetkin/1896/10/women.htm
2.      கார்ல்ஸ் மார்க்ஸ், எங்கல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் பொருளாதார, தத்துவ குறிப்புக்களின் கையெழுத்துப்படிகள், பிரமோத்தியஸ் வெளியீடு, பக். 243
4.      எங்கல்ஸ், குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், முன்னேற்றப் பதிப்பகம், பக். 16
1.       கார்ல்ஸ் மார்க்ஸின் விளக்கத்தின்படி, சோஷலிசம் என்பது கம்யூனிசத்திற்கான பாதையில் ஓர் இடைக்காலக் கட்டம்
2.      இடைக்காலக் கட்டமாக இருப்பதால், மார்க்ஸின் விளக்கப்படி அது, ‘கம்யூனிச சமூகத்தின் ஒரு மேலானதொரு கட்டமாக’, அரசு உதிர்ந்து, உழைப்பு பற்றிய ஒரு முற்றிலும் புதிய அனுகுமுறை நிலவும் ஒரு சமூகமாக, ‘உழைப்புக்கேற்ற கூலி என்பதிலிருந்து தேவைக்கேற்ற கூலிஎனும் பொன்மொழியை பொன்னேட்டில் பொறித்துக்கொள்ள ஏதுவானதொரு சமூகம். டாம் பாட்டம்மோர், மார்க்சிய சிந்தனை அகராதி, மாயா பிளாக்வெல் பதிப்பகம், பக். 500,501.
ஹிஸ்டீரியா என்னும் இதழில் அக்டோபர் 2016இல் வெளியிடப்பட்டது.
****** 

நான் பெண்ணியவாதி அல்ல மார்க்சியவாதி என்று அறிவித்தபோதோ, பெண்ணியம்: ஆணாதிக்கத்திற்கு அப்பால் என்று வாதிட்ட போதோ நான் பெண் வெறுப்பாளர் என்றோ ஆணாதிக்கவாதி என்றோ, வெறும் வர்க்க வரட்டுவாதி என்றோ தூற்றப்படவில்லை! என் சாதியும் கேள்விக்கு உள்ளாகவில்லை! ஆனால் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு அம்பேத்கர் போதாது என்னும் போது மட்டும் எப்படி சாதி தோண்டப்படுகிறது?

அம்பேத்கரின் போதாமையை ஏன் பேசுகிறீர்கள் என்று இன்று கேட்பவர்கள் பெண்ணியத்தின் போதாமையை ஏன் பேசுகிறீர்கள் என்று அப்போது கேட்கவில்லை! உழைக்கும் மகளிர் நூலுக்கான அவசியம் என்ன என்றும் கேட்கவில்லை!

தோழர்களே, நான் எப்படி பெண்ணிலைவாதத்தை அடையாள அரசியலாக மார்க்சிய நோக்கிலிருந்து வர்க்கப் பார்வையுடன் விமர்சிக்கிறேனோ அப்படித்தான் தலித்தியம் என்னும் அடையாள வாதத்தையும் விமர்சிக்கிறேன். வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உற்பத்தி முறை வளர்ச்சி மற்றும் உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றத்தினால் விரிவடையும் கல்வி-அரசியல்-பொருளாதார வாய்ப்புகளால் வர்க்கங்களில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குறிப்பிட்ட படிநிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் (ஆண், பெண், சாதி, மதம் உள்ளிட்ட) இருந்து நடுத்தர/பணக்கார வர்க்கம் தோன்றும்.

அப்போதெல்லாம் சாதி/வர்க்க/பாலின உறவுகளில் அல்லது அவ்வமைப்புகளில் தகர்வு, நெகிழ்வு, இணைவு எல்லாம் ஏற்படும். தமக்குக் கிடைத்த வளர்ச்சியை முழுமுற்றானதென்று நம்பி அந்த நடுத்தர வர்க்கம் அடிபப்டை மாற்றத்தைக் கோரும் சோசலிச சித்தாந்தத்தை அறியாமையில் எதிர்க்கும். அந்த எதிர்ப்பென்பது உன்மையில் அவர்கள் கோரும் சமத்துவத்திற்கு எதிரானதே ஒழிய மார்க்சியத்தை அது எந்த வகையிலும் தகர்க்க இயலாது! எங்களைப் போன்ற மார்க்சியவாதிகளையும் அந்த நடுத்தர வர்க்கத்தல் முடக்க இயலாது!

இக்கட்டுரையில் எங்கெல்லாம் பெண் என்று வருகிறதோ அங்கெல்லாம் தலித் என்று பொருத்திப் பார்த்து விளங்கிக்கொள்ள முற்படலாம்!

மேலும் சாதியப் பிரச்சினை குறித்த பல பதிவுகளை பல முறை தொகுத்து கொடுத்த பின்பும் மார்க்சியத்தில் என்ன உள்ளது என்று கேட்பவர்களுக்காக மீண்டும் தொகுத்து தருகிறேன். அல்லது ஏற்கனவே வந்திருக்கிற மார்க்சிய ஆய்வுகளையேனும் படிக்க முயற்சி செய்யுங்கள். எதையும் படிக்காமலேயே காற்று வாக்கில் கேள்விப்பட்டதை வைத்து வாதிட வந்தால் நான் எவ்வகையிலும் பதில் அளிக்க கடைமைப்பட்டவள் அல்ல!

http://saavinudhadugal.blogspot.com/2020/…/blog-post_19.html

https://www.facebook.com/Kotravai.N/posts/10157887005795575

No comments:

Post a Comment